சனி, ஜனவரி 02, 2021

அன்புத்தோழர் எஸ் வி ஆர்


2008இல் மும்பையில் தாக்குதல் நடந்தது. 2009 ஜனவரி புதுவிசையில் 'கலயத்தில் உறங்கும் சாம்பலும் ஒரு ஜோடி காலணிகளும்' என்ற கட்டுரையை எழுதினேன். அதே இதழில் அருமைத்தோழர் எஸ் வி ஆரின் கட்டுரை ஒன்று வெளியாகி இருந்தது. மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருந்தது எனில், தோழர் ஆதவன் தீட்சண்யா என்னை அழைத்து 'உங்கள் கட்டுரையை எஸ் வி ஆர் பாராட்டினார்' என்று சொன்னபோது நான் எப்படி இருந்திருப்பேன்? ஆனால் வழக்கமான என் குணத்தின் காரணமாக அமைதியாக இருந்தேன். நான் நேசிக்கும் எழுத்தாளர், கலைஞர்களை தொடர்பு கொண்டு பேச ஆசைப்பட மாட்டேன், பக்கத்தில் இருந்தாலும் மரியாதையுடனும் நெகிழ்வுடனும் பார்த்துக்கொண்டு நகர்ந்து விடுவேன்.

2016இல் 'இந்தியத் தொழிற்சங்க-இடதுசாரி இயக்கங்களின் முன்னுள்ள சவால்' என்று ஒரு கட்டுரையை எழுதினேன். புதுவிசையில்தான், 2016 டிசம்பர் விசை வீட்டுக்கு வந்தது. அதே விசையில், எஸ் வி ஆர்  இந்தோனேசிய படைப்பாளியான ப்ரமூதியா ஆனந்த தூர் பற்றி எழுதிய தீவுச்சிறையும் விடுதலை இலக்கியமும் என்ற 41 பக்க கட்டுரை வெளியானது. சுஹார்த்தோவின் இராணுவ ஆட்சியால் கைது செய்யப்பட்டு, விசாரணை இன்றி ஆண்டுக்கணக்கில் சிறையில் அடைக்கப்பட்ட கம்யூனிஸ்ட் ஆதரவாளர்களில் ப்ரமும் ஒருவர். சித்ரவதைக்கு உள்ளானார் என்பதை சொல்ல வேண்டியது இல்லை.

கட்டுரையின் இறுதியில் எஸ் வி ஆர் தந்து இருந்த குறிப்பு என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தி தூங்காவிடாமல் செய்தது. நாம் என்னத்த எழுதிட்டோம் என்று குறுக வைத்தது. அந்தக் குறிப்பு:

"ப்ரமூதியா ஆனந்த தூரின் படைப்புக்களை படிக்க வேண்டும் என்னும் ஆவல் எனக்குக் கடந்த 16 ஆண்டுகளாகவே இருந்தன. எனினும் சென்ற ஆண்டில்தான் புரு நாவல்களில் முதல் மூன்று நாவல்கள் கிடைத்தன. நான்காவது நாவலின்(கண்ணாடி வீடு house of glass) பிரதி ஒன்றை வாங்கி எனக்கு அனுப்பி வைத்தவர் இலண்டன் நண்பர் மு நித்தியானந்தன். .... நான்கு மாதங்களுக்கு முன் இந்தக் கட்டுரையை எழுத தொடங்கி ஏறத்தாழ 80 பக்கங்கள் தட்டச்சு செய்யப்பட்ட பின், கண்பார்வைக் கோளாறின் காரணமாக அவை அழிக்கப் பட்டு விட்டன....."


மீண்டும் தட்டச்சு செய்துள்ளார், கண் பார்வையை கிட்டத்தட்ட இழந்த நிலையில்தான் உள்ளார். மிகுந்த உணர்ச்சிவசப்பட்டு  அதன் பின் தோழர் ஆதவனிடம் எஸ் வி ஆரின் எண்ணைப் பெற்று அவரிடம் பேசினேன். அன்புடன் பேசினார். அத்தனை பெரிய உடல் நலக்குறைவை அவர் பெரிதாக காட்டிக்கொள்ளவில்லை, தொடர்ந்து எழுதவும் பேசவும் முடியவில்லையே என்ற வருத்தமே அவரிடம் மேலோங்கி இருந்தது. நேர்மையான படைப்பாளியின் கவலையும் மனநிலையும் அது.

2019இல் எங்கள் அலுவலகத்தின் நூலகத்தில் இருந்த பழைய நூல்கள் ஒவ்வொன்றும் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டன.  280 நூல்கள் வாங்கினேன். நூலகத்துக்கு நூல்கள் தேர்வு செய்யும் குழுவில் நானும் இருந்தவன் என்பதால் அந்த நூல்கள் பற்றி நான் அறிந்து இருந்தேன். அத்தனையும் 70, 80களில் வெளியானவை என்பதுடன் பலப்பல நூல்கள் மறுபதிப்பு காணாதவை. அவற்றில் ஒன்று ரஷ்யபுரட்சி -இலக்கிய சாட்சியம் என்ற நூல், எஸ் வி ஆர் எழுதியது. வாசித்தேன்,  ரஷ்ய வரலாற்றையும் புரட்சியையும் நேசிக்கின்ற  எவர் ஒருவரும் அந்த நூலை வாசிக்கும்போது மிகுந்த மன சஞ்சலத்துக்கு ஆளாவார்கள், தொடர்ந்து நூலை வாசிக்க மாட்டார்கள், நூலுடன் ஒத்துப்போவது சிரமம்! ஆனால் உண்மையான வரலாற்றுப்பதிவுதான். 

தற்செயலாக 12.5.2018 the hindu வில் ஒரு கட்டுரையும் வெளியாகி இருந்தது, the weird and wonderful world of Soviet bone music, aditya aiyer  எழுதியது. ஸ்டாலின்  ஆட்சியின்போது எழுத்தாளர் இசைக்கலைஞர்கள் தமது கருத்துக்களை வெளிப்படையாக எழுதவோ பேசவோ முடிந்ததா என்று பேசும் கட்டுரை அது.  2020 ஜனவரியில் எஸ் வி ஆர் அவர்களுடன் பேசினேன். அவர் நூலை வாசித்தேன் என்று சொன்னேன், அடடா, என்னிடமே அந்த நூல் இல்லையே என்றார்! நான் நூலை பிரதி எடுத்துக்கொண்டு, மூல நூலை அவருக்கு அனுப்பிவிட முயற்சி செய்தேன். அப்போது தட்பவெப்பநிலை கோத்தகிரியில் அவருக்கு உகந்ததாக இல்லை என்றும்,  கண் பார்வைக்கோளாறு ஒரு பக்கம், முகத்தில் தோலில் அரிப்பு போன்ற தொந்தரவால் அவதிப்படுபவதாகவும் கோவையில் இருப்பதாகவும் மீண்டும் கோத்தகிரி வீட்டுக்கு வந்த பின் சொல்கின்றேன் என்றும் சொன்னார். 

அதன் பின் சமீபத்தில்தான் வாட்ஸப்பில் அவருடன் உரையாடத் தொடங்கினேன். மிக எளிமையான ஒரு நண்பனைப்போல் அவர் அணுகுமுறையும் உரையாடலும், எள்ளலும் நகைச்சுவையும் ஆக அவருடன் ஆன உரையாடல்கள். இத்தனை உடல்நலக்குறைவுக்கு இடையிலும் கிரேக்கப் பொருளியலாளர் யானிஸ் வருஃபாகிஷின் நூலை கொரோனா காலத்தில் மொழியாக்கம் செய்தார், அவருடைய இளமைக்கால நண்பர் க்ரியா ராமகிருஷ்ணன் வெளியீட்டில் 2020இல் வந்தும் விட்டது.  

2021க்கு என் குடும்பத்தாரின் புது வருட வாழ்த்துச்சொன்னேன் அவருக்கு. அவரும் அவருடைய அன்புத்துணைவியார் சகுவும் இருக்கின்ற மகிழ்ச்சி சூழ்ந்த ஒரு புகைப்படத்தை எனக்கு அனுப்பினார். மனைவி மகனுடன் மகிழ்ந்தேன்.

சிகிச்சைக்காக வெளியூர் செல்கின்றேன், ஊர் திரும்பிய பின் நூலை அனுப்புங்கள் என்றும் சொன்னார்.  இந்த உடலில் கடைசியாக ஒரு அணு உயிருடன் இருப்பது வரை வாசிப்பதற்கும் எழுதுவதற்கும் கவலைப்பட்டு உட்கார வேண்டிய அவசியம் இல்லை என மெய்ப்பித்து வருகின்றீர்கள் தோழர் எஸ் வி ஆர்! என் போன்றவர்கள் வெகு தொலைவில் நிற்கின்றோம், உங்களை நெருங்க அல்ல, பின் தொடரவாவது முயற்சி செய்கின்றோம்! நீங்கள் நெடுங்காலம் வாழ வேண்டும்!

கருத்துகள் இல்லை: