விவசாயிகள் போராட்டத்தின் பின்னணியில் Janam Mukherjee எழுதிய Hungry Bengal என்ற நூலையும், Madhusree Mukherjee எழுதிய Churchill's secret war என்ற நூலுக்கான விமர்சனத்தையும் நான் வாசித்தபின் எழுதியது.
"பட்டினியால் செத்துக்கொண்டே இருக்கும் தம் குழந்தைகளை, ஆறுகளிலும் கிணறுகளிலும் பெற்றோர் வீசினார்கள். பலர் ஓடும் ரயில்கள் முன் பாய்ந்து தங்களை மாய்த்துக் கொண்டார்கள். வெறும் கஞ்சிக்கு தெருத்தெருவாக அலைந்தார்கள். குழந்தைகள் புல், இலை தழைகள், வேர், செடிகொடிகள், கிழங்குகளை தின்றார்கள். இறந்துபோன உறவினர்களை அடக்கம் செய்யக்கூட இயலாத படி மக்கள் இருந்தார்கள். பஞ்சத்தால் செத்து மடிந்தோரின் உடல்களை நாய்கள், கழுகுகள், நரிகள் தின்றன. ...தங்கள் குழந்தைகளின் பசி தீர்க்கும் பொருட்டு பெண்கள் விபச்சாரத்துக்கு இசைந்தார்கள். இயலாதவர்கள் தங்கள் குழந்தைகளை கொன்றார்கள், தகப்பன்களோ தம் பெண் குழந்தைகளை விற்றார்கள்" - Madhusree Mukherjee.
... .... ...
1943 வங்கப்பஞ்சம், வறட்சியால் ஏற்பட்டது அல்ல, அது (பிரிட்டிஷ் அரசின்) தவறான கொள்கையால் உருவாக்கப்பட்டது- IIT காந்திநகர் ஆய்வாளர்கள்.
ஹிட்லர், முசோலினி ஆகியோரின் அச்சு நாடுகள் கூட்டணியில் இருந்த ஜப்பான், 1942இல் கிழக்கில் பர்மாவை கைப்பற்றியது. இந்தியாவுக்கு பெரும் அளவில் அரிசியை கொடுத்து வந்தது பர்மா. இப்போது ஜப்பானின் கைக்கு போனதும், தொடர்ந்து கிழக்கில் வங்கமும் கைப்பற்றப்படும் என்ற அச்சத்தில், பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், மக்களிடம் இருந்த வண்டிகள், படகுகள், கார் லாரி போன்ற வாகனங்கள், யானைகள், மாடுகள் அனைத்தையும் கைப்பற்றினார்கள். முக்கியமாக மக்களிடம் இருந்த அரிசி இருப்பு அனைத்தையும் அரசின் வசம் கொண்டுவந்தார்கள்.
வணிகர்களும் முதலாளிகளும் உடனடியாக அரிசி, காய்கறி உள்ளிட்ட உணவுப்பொருட்களை பதுக்கினார்கள். சந்தையில் உணவுப்பொருட்கள் காணாமல் போயின. அரசு என்ன செய்தது? பிரிட்டிஷ் வணிகர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோருக்கு மட்டும் உணவுப்பொருட்களை வழங்கியது, சாமானிய மக்கள் பட்டினியில் விடப்பட்டனர்.
முக்கியமாக, இந்தியாவில் மக்கள் செதுக்கிக்கொண்டு இருக்கும்போது, இங்கே இருந்து உணவு தானியங்கள் மிகப்பெரிய அளவுக்கு பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. பஞ்ச காலமான ஜனவரி-ஜூலை 1943 காலத்தில் மட்டும்70,000 டன் அரிசி பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. 4 லட்சம் இந்திய மக்களுக்கு ஒரு வருஷத்துக்கு போதுமான உணவு இது. 1943 இலையுதிர்காலத்தில், 4 கோடியே 70 லட்சம் பிரிட்டிஷ் மக்களுக்கு ஆன 1 கோடியே 85 லட்சம் டன் உணவுப்பொருட்கள் இருப்பை கையில் வைத்து இருந்தது பிரிட்டிஷ் அரசு.
இந்த இருப்பையும் கூட வேறு ஒரு காரணத்துக்காக வைத்து இருந்தார் அன்றைய பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சில்- முசோலினியின் இத்தாலி ஒரு வேளை நேச நாடுகளிடம் வீழ்ந்தால் அங்கே அனுப்பி வைப்பதற்கு. ஆஸ்திரேலியாவும் கனடாவும் வங்க மக்களுக்கு கோதுமை தர முன் வந்தன. ஆனால் அன்று இந்தியப்பெருங்கடலில் உணவுப்பொருட்களுடன் பயணித்துக் கொண்டு இருந்த அனைத்து கப்பல்களையும் அட்லாண்டிக் கடலுக்கு திருப்புமாறு உத்தரவு இட்டார் சர்ச்சில், அதாவது அனைத்து கப்பல்களும் பிரிட்டனை நோக்கி பயணித்தன. ஏற்கனவே பிரிட்டனில் தேவைக்கு அதிகமான இருப்பு கையில் இருந்தது. அன்று அச்சு நாடுகளுக்கு ஆதரவாக இருந்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், தன்னால் பர்மாவில் இருந்து வங்கத்துக்கு அரிசியை பெற்றுத்தர முடியும் என்று உதவ முன்வந்த செய்தியை கூட பிரிட்டிஷ் அரசு வெளியில் வராமல் தணிக்கை செய்தது.
உண்ணாவிரதம் இருந்த காந்தி ஏன் சாகவில்லை எனில், தான் அருந்தும் நீரில் அவர் ரகசியமாக குளுக்கோஸ் கலந்து குடிப்பதால்தான் உயிரோடு இருக்கின்றார் என்று சொன்ன சர்ச்சில், "நான் இந்தியர்களை வெறுக்கின்றேன். அவர்கள் காட்டுமிராண்டித்தனமான மதத்தை பின்பற்றும் காட்டுமிராண்டித்தனமான பிறவிகள். முயல்கள் போல் பிள்ளை பெற்று தள்ளுகின்றனர், அதுவே பஞ்சத்துக்கு காரணம்" என்றும், உணவுப்பொருட்கள் இல்லையென்றால் மஹாத்மா காந்தி எப்படி உயிரோடு இருப்பார் என்றும் கேலி பேசினார்.
1757 பிளாஷி போரில் வென்ற பின் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி சில வருடங்களிலேயே மிகப்பெரிய பஞ்சத்தை சந்திக்க நேர்ந்தது. 1770 வங்கப்பஞ்சத்தில் குறைந்தது 20 லட்சம் மக்கள் செத்து மடிந்தனர் என்று சொல்லப்பட்டாலும் உண்மையான கணக்கு தெரியவில்லை.
அதன் பின்னர் ஏற்பட்ட 1873-74, 1876, 1877, 1896-97, 1899, 1943 ஆகிய ஆறு பெரும் பஞ்சங்களில் முதல் ஐந்தும் இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டன என்றும் 1943 பஞ்சமோ பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால், குறிப்பாக இரண்டாம் உலகப்போரின் பின்னணியில் அன்று பிரதமர் ஆக இருந்த வின்ஸ்டன் சர்ச்சிலின் கொடுங்கோன்மை நிர்வாகத்தால் உருவாக்கப்பட்ட பஞ்சம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த சர்ச்சிலைதான் மிகப்பெரிய ஜனநாயகவாதி, அறிவாளி என்று இந்தியாவிலும் பலர் இப்போதும் சொல்லிக்கொண்டு இருக்கின்றனர்.
... ... ....
இப்போது மத்திய அரசு சட்டமாக அறிவித்துள்ளவை, பெரிய கார்பொரேட் நிறுவனங்கள் இந்திய விவசாயத்தையும் நிலத்தையும் விவசாயிகளையும் வேளாண் பொருள் விற்பனையையும் கைப்பற்றி தங்கள் பிடியில் வைத்துக்கொள்ள வழி செய்யும் சட்டங்கள். இந்த சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்போது, இந்திய வேளாண்மைதுறையில் மத்திய மாநில அரசுகளுக்கு இருக்கும் கட்டுப்பாடுகள் அனைத்தும் அம்பானி, அதானி, டாடா போன்ற கார்பொரேட் முதலாளிகளின் கையில் சென்றுவிடும். விளைவாக, தங்களுக்கு எங்கிருந்து அல்லது எந்த நாட்டில் விற்றால் லாபம் கிடைக்குமோ அந்த நாடுகளுக்கு இந்தியாவில் விளைந்த உணவுப்பொருட்களை ஏற்றுமதி செய்யவும் இந்திய மக்களை பட்டினி போடவும் இந்திய கார்பொரேட் வர்க்கம் தயங்காது. லாபம், மேலும் லாபம், மேலும் மேலும் லாபம் ஒன்றே உலக கார்பொரேட்களின் ஒரே கொள்கை. மத்திய அரசு கார்பொரேட்டுகளின் அப்பட்டமான ஏஜெண்ட் ஆக இருக்கிறது என்பதிலும் இந்த சட்டங்கள் ஒழிக்கப்படாவிட்டால் 130 கோடி மக்கள் கொண்ட இந்திய சமூகம் எந்த நேரத்திலும் ஒரு வங்கப்பஞ்சத்தை சந்திக்கும் என்பதிலும் ஐயமில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக