1
1904ஆம் ஆண்டு. ஈ வெ ராமசாமி நாயக்கர் என்பதுதான் அப்போது அவர் பெயர், கடவுள் பக்தி உண்டு. காசிக்கு செல்கின்றார். பிராமணர்
அல்லாதோர் நடத்திய உணவு விடுதியில் உணவருந்த நுழையும்போது வாயிற்காப்போன் அவரை உள்ளே விட மறுத்தார், அங்கே பிராமணர்கள் மட்டுமே சாப்பிட அனுமதிக்கப்பட்டார்கள். ஒரு பூணூலை மாட்டிக்கொண்டு நானும் பிராமணன்தான் என்று ஏமாற்றி உள்ளே நுழைய முயற்சித்த ராமசாமியின் அடர்மீசை அவர் பிராமணர் இல்லை என்று காட்டிக்கொடுத்தது, கீழே தள்ளப்பட்டார். பசியால் வாடிய அவர் எச்சில் தொட்டியில் வீசப்பட்டதை உண்டார். அங்கிருந்து திரும்பும்போது கடவுள் மீதான நம்பிக்கையை கைவிட்டவர் ஆக இருந்தார்.
பிற்காலத்தில் அவரே காங்கிரஸில் இணைந்தபோதும் காங்கிரஸ் மாநாடுகளில் பிராமணர்கள், பிராமணர்கள் அல்லாதோர் என தனித்தனியே பந்தி பரிமாறப்பட்டதையும் கண்டு கொதித்தார். காங்கிரஸ் மாநாடுகளில், 'பிராமணர்களுக்கு தனி இடம், தனி சாப்பாடு உண்டு' என்று விளம்பரமே செய்யப்பட்டது. காங்கிரஸ் கட்சி நடத்திய சேரன்மாதேவி குருகுலத்தில் சாதிப்பாகுபாடு இருந்தது. இதனை எதிர்த்து பெரியாரும் ஜீவானந்தமும் வரதராஜுலுவும் போராட்டம் நடத்த வேண்டி இருந்தது. 1901 காங்கிரஸ் மாநாட்டில், தமிழ்நாட்டில் இருந்து சென்ற பிரதிநிதிகள் வர்ண தர்மத்தின் அடிப்படையில் தீண்டாமையை பின்பற்றியதாக காந்தி தன் தன்வரலாற்றில் வேதனையுடன் இப்படிக் குறிப்பிடுகிறார்: தமிழர்களின் சமையல் கூடம், மற்றவர்களின் சமையல் கூடத்துக்கு தொலைவில் இருந்தது. தாங்கள் சாப்பிடுவதை பிறர் பார்த்தால் தோஷம் என்று தமிழ்பிரதிநிதிகள் கருதினார்கள். இது வர்ணாசிரமத்தின் சீர்கேடாகவே எனக்கு தோன்றுகிறது.
காங்கிரஸில் பெரியாரால் ஐந்து வருடங்களுக்கு மேல் ஏன் நீடிக்க முடியவில்லை என்பதை புரிந்து கொள்ள முடிகின்றது.
2
உணவு என்பது அடிப்படை மனித உரிமை என்ற நிலை மாறி, பணம் படைத்தவனுக்கு உணவு கிடைக்கும், மற்றவன் பிச்சை எடுக்கலாம் அல்லது பட்டினியால் சாகலாம் என்ற நிலைக்கு உலகம் வந்துள்ளது அல்லது உலகளாவிய கார்பொரேட்டுகளால் அவ்வாறு மாற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் உலகில் 35,000 பேர் இந்த விஞ்ஞானம் முன்னேறிய நவீன காலத்தில்தான் பட்டினியால் சாகின்றார்கள். அதே நேரத்தில் உலகம் எங்கும் ஒரு நாளில் மட்டும் ராணுவங்களுக்கும் ஆயுதங்கள் வாங்குவதற்கும் அரசுகள் பல நூறு கோடி டாலர்களை செலவு செய்துகொண்டே இருக்கின்றன, அதாவது மக்களின் வரிப்பணம் கமிஷன்களுக்கு செலவு செய்யப்படுகின்றது. இந்தியாவில் மட்டும் தினமும் சுமார் 30 கோடி மக்கள் இரவில் உணவின்றி பட்டினியுடன் உறங்க செல்கின்றனர். சுமார் 22.5 கோடி இந்திய மக்கள் சத்துணவுக் குறைபாட்டினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளார்கள். மறுபுறம் உணவுப்பொருட்களின் விலையோ அரசே நிர்ணயித்துள்ள குறைந்த பட்ச ஊதியம் பெரும் மக்களாலும் வாங்க முடியாத அளவுக்கு ஏறிக்கொண்டே இருக்கின்றது. இப்போது மத்திய அரசு தன்னிச்சையாக கொண்டு வந்துள்ள மூன்று சட்டங்களும், அம்பானி, அதானி போன்ற பெரும் கார்பொரேட் நிறுவனங்கள் மட்டுமே கொழுத்து செழிக்க வழி செய்யும். விவசாயம், விவசாயிகள் நலன், விளைபொருள் விலை நிர்ணயம், மக்களுக்கு உணவுப்பொருட்கள் கிடைப்பதற்கான உத்தரவாதம் ஆகிய அடிப்படை கடமையில் இருந்து தன்னை முற்றாக விலக்கிக்கொள்வதில் மிகப் பிடிவாதமாக இருக்கும் ஒரு அரசை இந்திய மக்கள் இப்போது பார்க்கின்றனர்.
3
இந்தியா, பல பஞ்சங்களை கண்டுள்ளது, இப்பஞ்சாங்களில் உணவு கிடைக்காமல் செத்தவர்கள் பல கோடி மக்கள். 1865-67 ஒரிசா பஞ்சத்தில் 10 லட்சம் மக்கள், 1868-70 ராஜஸ்தான் பஞ்சத்தில் 15 லட்சம் மக்கள், 1876-78 சென்னைப் பஞ்சத்தில் 1.08 கோடி மக்கள், 1896-97 இந்திய பஞ்சத்தில் 50 லட்சம் மக்கள், 1899 வங்கப் பஞ்சத்தில் 10 லட்சம் மக்கள், 1943 பஞ்சத்தில் 30 லட்சம் மக்கள் செத்து மடிந்துள்ளனர். இதில் பிரிட்டிஷ் அரசு காலத்தின் 1943 பஞ்சம், செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒன்று. அன்று பிரிட்டிஷ் பிரதமர் ஆக இருந்த சர்ச்சில், இரண்டாம் உலகப்போரின் பாதிப்பில் இருந்து இங்கிலாந்தை காப்பாற்றவும் ராணுவத்துக்கான இருப்பை வைக்கவும் பர்மாவில் இருந்து இந்தியாவுக்கு வழக்கமாக வந்து கொண்டு இருந்த அரிசி வரத்தை தடை செய்து இங்கிலாந்துக்கு கொண்டு சென்று இந்திய மக்களை சாகடித்தார்.
இவ்வாறான பஞ்ச காலங்களில், பொருளாதார வசதி படைத்தோர் இரக்கம் கொண்டு மக்களுக்கு கஞ்சித்தொட்டி திறந்து அரிசிக்கஞ்சியும் துவையலும் இலவசமாக கொடுத்து காப்பாற்றிய வரலாறும் இருக்கின்றது. இதுவன்றி, 1925இல், பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில், Labour Advisory Board உறுப்பினர் எம் சி ராஜா அவர்களின் பரிந்துரையின் பேரில், பெண் குழந்தைகள், ஆதிவாசிகள், தலித் மக்கள் உள்ளிட்ட சமூகத்தில் பின்தங்கிய மக்களை பள்ளிக்கூடங்களுக்கு வர வைக்கும் முயற்சியாக, சென்னை மாநகராட்சி நிர்வாகம் பள்ளிகளில் மதிய உணவுதிட்டத்தை கொண்டு வந்துள்ளது. பிரெஞ்ச் நிர்வாகத்தின் கீழ் இருந்த புதுச்சேரியில் இதே போன்ற மதிய உணவுதிட்டம் 1930இல் கொண்டுவரப்பட்டது. காமராஜர் ஆட்சியில் அவரது மதிய உணவுத்திட்டத்துக்கும், பின்னர் எம் ஜி ஆரின் காலத்தில் அவர் கொண்டு வந்த சத்துணவுத் திட்டத்துக்கும் இதுவே முன்னோடி.
ஆனால் இந்த இலவச உணவுக்குள் வெவ்வேறு வடிவங்களில் சாதி வந்தது. இப்போதும் இருக்கின்றது. பட்டியல் இன மாணவர்களுக்கு தனியே உணவு பரிமாறுவது, உணவின் அளவைக் குறைப்பது, பட்டியல் இன மாணவர்களுடன் பிற சாதி மாணவர்கள் உணவு உண்ண மறுப்பது அல்லது பிற சாதிகளை சேர்ந்த பெற்றோர் தம் குழந்தைகளை உணவு உண்ண அனுமதிக்க மறுப்பது. தலித் சமூக மாணவர்களுக்கு தனி இடம், தட்டு என பாகுபாடு காட்டுவது, பிற சாதி மாணவர்களின் தட்டுகளை எடுத்தாலோ தொட்டாலோ அடி உதைக்கு உள்ளாவது. இன்னொரு வடிவம், தலித் சமூக சமையல் தொழிலாளர்கள் சமைக்கும் உணவை பிற சாதி மாணவர்கள் உண்ண மறுப்பது.
4
1569ஆம் ஆண்டு பேரரசர் அக்பர், சீக்கியர்களின் மூன்றாவது குருவான குரு அமர்தாஸை சந்திக்க விரும்பி பஞ்சாபுக்கு வருகின்றார். பேரரசரை மிக விமர்சையாக வரவேற்க சீக்கிய மக்கள் ஏற்பாடுகளை செய்ய முனையும்போது, குரு சொல்கின்றார், "நம் அனைவரையும் போலவே அக்பரும் ஒரு மனிதரே. குருவின் வசிப்பிடம் எல்லோருக்கும் கதவை திறந்து வைத்துள்ளது. அரசரும் அவர் குடிகளும், இந்துக்களும் இஸ்லாமியரும், ஏழைகளும் பணம் படைத்தோரும் இங்கே சமம். எனவே அக்பரை வரவேற்க தனி மரியாதை எதுவும் தேவையில்லை, எல்லோருக்கும் என்ன மரியாதையோ அதுவே அவருக்கும்."
பேரரசர் அக்பர், ஹரிப்பூர் ராஜாவுடன், கோவிந்த்வாலுக்கு வருகின்றார். குருவும் மற்றோரும் அவரை வரவேற்று எல்லா இடங்களையும் காட்டுகின்றனர். லாங்கர் எனப்படும் இலவச உணவுச்சாலையில், வழிப்போக்கர்கள், பிச்சை எடுப்போர், ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடுகள் இன்றி மட்டுமல்ல, சாதி மதம் கடந்து எல்லோரும் வரிசையில் அமர்ந்து ஒரே விதமான எளிமையான உணவை உண்டுகொண்டு இருப்பதை கண்டு அக்பர் வியப்படைகின்றார். பகல் இரவு என மூடப்படாமல் உணவு பரிமாறப்பட்டுக்கொண்டே இருக்கின்றது. மீதியாகும் உணவு கால்நடைகளுக்கும் பறவைகளுக்கும் இரையாகின்றது, எனவே உணவு வீணாவதில்லை. அக்பரும் ஹரிப்பூர் ராஜாவும் அதே மக்களுடன் வரிசையில் உட்கார்ந்து உணவை உண்கின்றனர். அதன் பின் நடந்த உரையாடல் மிக முக்கியமானது.
இதன் பின்னர், குருவுக்கு மிகப்பெரிய அளவுக்கு நிலம் தானமாக தர அக்பர் முன்வருகின்றார். குரு அமர்தாஸ் நன்றி தெரிவித்து கூறுகிறார், "அரசரே! தானமாக எதையும் நான் பெறுவதில்லை. மக்கள் உழைக்க வேண்டும், சம்பாதிக்க வேண்டும், அதில் பிறருக்கு உதவ வேண்டும், இந்த லாங்கருக்கு அவ்வாறு உதவினால் போதும்". நிலத்தை வாங்க மறுக்கின்றார். பிற்காலத்தில், குருவின் மகள் Bhaniயின் திருமணப் பரிசாக அந்த நிலத்தை அக்பர் வழங்கியதாக வரலாறு சொல்கின்றது.
5
வாடிய பயிரைக் கண்டா போதெல்லாம் நானும் வாடினேன் என்பார் ராமலிங்க வள்ளலார். முற்றும் துறந்த முனிவர்கள் என்று நாம் அறிந்தவர்கள் ஒருவர் கூட அடுத்த மனிதனின் பசி குறித்தோ பசியைப் போக்குவது குறித்தோ பேசியது இல்லை, அவர்கள் அறிந்தது எல்லாம் இறைவன் திருவடியை எப்படியாவது பற்றி சொர்க்கம் போகும் வழியை காண்பதுதான். ஆனால், பசியின் கொடுமையை வள்ளலாரைப்போல் இத்தனை நுட்பமாக சொன்னவரும் இலர், பசியை ஆற்றிக்கொண்ட ஒருவனின் உடலும் உள்ளமும் அடையும் பேரானந்தத்தையும் அவரைப்போல் விவரித்தவரும் இலர். அந்த வகையில் அவரது அணுகுமுறை ஒரு பொருள்முதல்வாதியின் அணுகுமுறை. அவர் ஏற்றி வைத்த விளக்கிலும் தீ, அவர் மூட்டிய அணையாப்பெரும் அடுப்பிலும் தீ. 1867 மே 23 வைகாசி 11 அன்று அவர் சத்திய தர்ம சாலையில் அணையா அடுப்பை ஏற்றுகின்றார், 150 வருடங்கள்! அணையாத அடுப்பு, அடுத்தவன் பசி தீர்க்கும் அடுப்பு! "உலகில் தர்மம் உள்ளமட்டும் இந்த அடுப்பு அணையாது; இந்த அடுப்பு உள்ளவரை தர்மம் அணையாது" என்று சொல்லித்தான் அவர் அந்த அடுப்பை பற்ற வைத்துள்ளார். எவரிடமும் கை நீட்டி தானமாக பெறாமல் மக்களிடம் இருந்து பெறப்படும் கொடைகளால் அங்கு வரும் மக்களுக்கு மூன்று வேளையும் உணவு அளிக்கப்படுகின்றது, ஒரே வரிசை, சாதி, மதம், இனம் பாராது ஒரே வரிசை, ஒரே உணவு.
பெண் விடுதலையை வீட்டுக்குள் இருந்து தொடங்க வேண்டும் என்று பெரியார் சொன்னதில் பொருள் உள்ளது. அதில் மிக முக்கியமானது, பெண்களை சமையல் அறையில் இருந்து விடுதலை செய்வது. அதற்கு மாற்றாக பெரியார் முன் வைப்பது சமுதாய பொது சமையலறை Community kitchen. ஆனால் இது அத்தனை எளிதல்ல! காரணம் சாதிதான்! ஆயிரம் சாதியையும் தீண்டாமையையும் தன் அஸ்திவாரமாக வைத்துள்ள இந்திய சமூகத்தில், ஒரு பொது அடுப்பில் ஒரு சாதிக்காரன் சமைக்கும் உணவை மறு சாதிக்காரன் உண்ணும் நாளில்தான் அது சாத்தியப்படும்.
6
நிற்க. பொதுவெளியில், பேருந்துகளில், ரயில்களில், ஹோட்டல்களில், பள்ளிகளில், கல்லூரிகளில் சாதி எங்கே சார் இருக்கின்றது என சிலர் கேட்கலாம். தனித்தனி சாதிகளுக்காக தனித்தனி matrimonial விளம்பரங்களில் பார்க்கின்ற பல மணமகனும் மணமகளும், பெரும் பட்டப்படிப்பு படித்துவிட்டு அமெரிக்காவிலும் லண்டனிலும் மாட்டுக்கறியின், பன்றியின் கொழுப்பு தோய்ந்த டாலர்களையும் பவுண்ட் ஸ்டெர்லிங்குகளையும் சம்பாதித்து ஸ்டேட்ஸில் இருப்பதாக இங்கிலீஸில் பீற்றிக்கொண்டு திரிந்தாலும் தன் சாதியில் வரன் தேடுவதில் மட்டும் மிக கவனமாக இருக்கின்றார்கள். இதில் சைவ சாப்பாடு என்று ஒரு வகை. கருப்பு அன்பரசன் , தன் உணவுப்பழக்கத்துக்கு தன் குடியிருப்பு பகுதியில் உள்ளவர்களால் ஏற்பட்ட மிக மோசமான சாதிய அடிப்படையில் ஆன இடைஞ்சல்களை சொல்லி இருந்தார். என் நண்பர்களில் பலர் எஸ் சி. சார், என் நண்பர்களில் பலர் முஸ்லீம் சார், கிறிஸ்டியன் சார் என்று பல்லை இளிப்பவர்களை விடவும் மோசமான சாதி வெறியர்களை நாம் பார்க்க முடியாது, இவர்கள் எப்போதும் கத்தியை மறைத்து வைத்துக்கொண்டு நம்முடன் திரியும் பேர்வழிகள். இது வெறும் உணவுப்பழக்கம் சார்ந்த விஷம்தானே, இதற்குள் சாதி எங்கே இருக்கின்றது என சிலர் கேட்கக்கூடும். உண்மையில் இது வெறும் உணவுப்பழக்கம் மட்டுமே எனில், இந்து மதத்துக்கு உள்ளேயே புலால் உணவு அருந்தாத இடை சாதியினர் இருக்கின்றார்களே, அவர்களுடன் மேல்சாதி வெஜிடேரியன்கள் திருமண உறவு உள்ளிட்ட கொடுக்கல் வாங்கல்களை வைத்துக்கொள்வார்களா என்ற நியாயமான கேள்வியை எழுப்ப வேண்டியிருக்கும். அந்தக் கேள்விக்கு மவுனமே பதில் எனில், இந்த Only for vegetariansக்குள் மறைந்து இருப்பது சாதி வெறி அன்றி வேறில்லை. Friendship 'பெருந்தன்மை'க்குள் துருத்திக்கொண்டு தெரிவது மேல்சாதி ஆணவம் அன்றி வேறென்ன? குரு அமர் தாஸுக்கும் வள்ளலாருக்கும் இவர்களுக்கும் ஒருபோதும் ஒட்டுமில்லை, உறவும் இல்லை.
சமீபத்தில் பெரம்பூர் பகுதியில் ஒரு வீட்டின் கதவில் நான் கண்டது: To Let - Vegetarians Only. குடியிருக்கும் வீடு மட்டும்தான் வெஜிடேரியனாக இருக்க வேண்டும் என்று அவசியமா என்ன? பலப்பல வருடங்களுக்கு முன், கலைவாணர் என் எஸ் கே, நல்லதம்பி என்ற படத்தில் ரயிலை சாதியப்பார்வையில் உணர்ந்து கிந்தன் கதை என ஒரு கதாகாலட்சேபம் செய்து இருப்பார். இப்போதும் ரயில்களில் ஒரே டாய்லெட்த்தான், வெஜிடேரியன், நான் வெஜிடேரியன் இருவருக்கும். எனவே Vegetarians only அன்பர்கள் ரயில்வே நிர்வாகத்துக்கு பிராது எழுதி, வெஜிட்டேரியன் டாய்லெட் வேண்டும் என்று கேட்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக