சனி, ஜனவரி 02, 2021

என்ன சொல்லி உங்களை வாழ்த்துவது?


என்ன சொல்லி உங்களை வாழ்த்துவது?


சம்பிரதாய சடங்கின் எச்சம் தோய்ந்த சொற்கள்

என் காதுகளில் இறங்கி இதயத்தை கூசச்செய்யாவண்ணம்

ஒதுங்கியும் ஓரமாயும் 

தனித்தும் செல்லவே விரும்புகின்றது மனம்

எனில் 

என்ன சொற்களால் நான் உங்களை வாழ்த்திவிட முடியும்?


பொய்யும் புரட்டும் நாளொரு ஏமாற்றுவித்தையும்

கோட்டைகளின் புகைப்போக்கிகள் வழியே 

உணவென்ற பேரில் வெளியேறி

பசிக்கும் நம் வயிறுகளில் சாம்பலாய் நிறைந்துவிட

என்ன சொல்லி வாழ்த்திவிட முடியும் உங்களை?


தாய் மண்ணில் இருந்து வேருடன் அறுத்தெரியப்பட்டவன்

தலைநகர் வீதிகளில் கொடும்பனியெனப் பொழியும்

பொய்களில் உறைந்து கருகும் இந்த நடுநிசியில்

நான் உங்களை என்ன சொல்லி ஏமாற்றிவிட முடியும்?


ஒற்றைச்சொல்லும் கைவரவில்லை

அச்சமுடன் நகர்கின்றது இந்த நள்ளிரவு

உறங்குகின்றார்கள் மனைவியும் பிள்ளைகளும்

நம்பிக்கையெனும் போர்வையைப் போர்த்தியபடி

நாளை மற்றொரு பொழுது விடியும் என்று


இத்தனை விழுதல்களுக்குப் பின்னும்

இத்தனை தாக்குதல்களுக்குப் பின்னும்

இத்தனை இழத்தல்களுக்குப் பின்னும்

என்னையும் உங்களையும்

முன்னே உந்தித்தள்ளிக்கொண்டே செல்வது வேறேன்ன?


ஆயிரம் முறை  அடிபட்டு மிதிபட்டாலும்

தன்னைத்தானே உறுதியாக்கிக்கொண்டும்

தன்னையே வரலாற்றின் பாதையாக சமைத்துக்கொண்டும்

என் பொழுதையும் உங்கள் பொழுதையும் விடியச்செய்யும்

அந்த இரண்டு சொற்களை மட்டும் 

உங்கள் தோட்டத்தில் விதைத்து விடுகின்றேன், என் வாழ்த்தென,

போராட்டமும் நம்பிக்கையும்.

கருத்துகள் இல்லை: