1
1942-45க்கு இடையில், பிரிட்டிஷ் இந்திய கடற்படையில் ஒன்பது கிளர்ச்சிகள் நிகழ்ந்ததாக பதிவுகள் உள்ளன. காரணங்கள் பல. மோசமான உணவு, பிரிட்டிஷ் அதிகாரிகளின் கொடூரமான நடத்தை, கேவலமான வசவுகள், மத உணர்வுகளை பாதிக்கும் இழிவான வசவுகள், சிறிய தவறுகளுக்கும் கொடுமையான தண்டனைகள் என பல காரணங்கள். 9 கிளர்ச்சிகள் எவை?
3 மார்ச் 1942, Mechanical Training Establishment, Bombay
22 ஜூன் 1942, HMIS Konkan, Tobermory, UK
செப் 1942, HMIS Orissa, New London, South Africa
செப் 1942, HMIS Khyber, UK
27,28 ஜூன் 1944, HMIS Akbar, Bombay
30 ஜூலை 1944, HMIS Hamlawar
29-31 ஜூலை 1944, HMIS Shivaji
16 மார்ச் 1945, HMIS Himalaya, Karachi
17 ஏப்ரல் 1945, HMIS Shivaji.
1939இல், அதாவது இரண்டாம் உலகப்போரின் தொடக்கத்தில் கடற்படையின் அதிகாரிகள் எண்ணிக்கை 212, 20% இந்தியர்கள், 80% பிரிட்டிஷ் வெள்ளையர்கள். 1945இல் அதிகாரிகள் எண்ணிக்கை 2852 ஆக உயர்ந்தது. 1377 பேர் பிரிட்டிஷ் வெள்ளையர்கள், 949 இந்தியர்கள், 249 ஆங்கிலோ இந்தியர்கள், 70 பேர் பிற நாட்டவர்கள்.
அதிகாரிகள் அல்லாத வீரர்கள் 1939இல் 1475, அதுவே 1945இல் 21193. போர் நெடுகிலும் பிரிட்டிஷ் வெள்ளையர் மட்டுமே அதிகாரிகளாக இருந்தனர்.
2
கப்பலில் வாழ்க்கை எப்படி இருந்தது? இட நெருக்கடி, மோசமான உணவு, குடிநீர் பற்றாக்குறை, தொடர்ச்சியான வேலைப்பளுவால் நோய்கள், கடல் பயணத்தால் ஆன நோய்கள், மருத்துவம் இன்மை, சிறு முணுமுணுப்புக்கும் கடுமையான தண்டனைகள், குறைபாடுகளை விதிகளுக்கு உட்பட்டு தெரிவித்தாலும் கண்டுகொள்ளாமல் விடுவது மட்டும் அன்றி மனு அளித்தவருக்கு கொடுமையான தண்டனை, விடுமுறை மறுப்பு என தொடர்கின்றன.
சுபாஷ் சந்திர போஸ் தலைமையில் ஆன INA ஜப்பானுடன் சேர்ந்து பிரிட்டனை எதிர்த்துப் போராடியது. போர் முடிவில் ஐ என் ஏ வீரர்களை பிரிட்டிஷ் அரசு கைது செய்தது. டெல்லி செங்கோட்டையில் விசாரணை நடந்தது. ஜவஹர்லால் நேரு ஐ என் ஏ வீரர்களுக்கு ஆதரவாக வாதிட்டார். பிரிட்டிஷ் அரசின் போக்கை எதிர்த்து நாடெங்கும் மக்கள் கண்டனம் முழங்கினர். இந்த எதிர்ப்புணர்வு படை வீரர்கள் மத்தியிலும் பெரும் அதிருப்தியையும் குமுறலையும் உருவாக்கியது.
மேற்கண்ட காரணங்கள் ஒருபுறம் எனில்,இரண்டாம் உலகப்போர் முடிந்த நிலையில், தங்களை படையில் இருந்து விடுவித்து ஊர்களுக்கு அனுப்ப வேண்டும் என்ற மனக்கொந்தளிப்பும் வீரர்கள் இடையே கடுமையான அதிருப்தியை உருவாக்கியது.
3
HMIS தல்வாரில் கிளர்ச்சியின் தொடக்கம்
வீரர்களுக்கு மாமிச உணவு, காய்கறி உணவு என இரண்டு வகை வழங்கப்பட்டது. பொதுவாக காலையில் எப்போதும் தரப்படும் உணவு ரொட்டி, பருப்புக்குழம்பு. மதியம் இதே குழம்பில் தண்ணீரை ஊற்றி சோறுடன் கொடுப்பார்கள். 1946 பிப்ரவரி 17 அன்று 29 வீரர்கள் காலை உணவை உண்ண மறுத்தார்கள். மிக மோசமான, நாற்றம் அடிக்கும் உணவை தங்களால் உண்ண முடியாது என மேல் அதிகாரியிடம் புகார் அளித்தார்கள். உணவு பற்றி இப்படியான புகார்கள் மிக மிக சாதாரணம் என்பதால் உயர்மட்ட அதிகாரிக்கு இந்த நிகழ்வு சொல்லப்படாமல் மறைக்கப்பட்டது.
கமாண்டர் கிங் என்பவர் அப்போது உயர் அதிகாரி. மிக மோசமான சொற்களால் வீரர்களை வசைப்பாடும் அதிகாரி. இவரது இந்த நடத்தை குறித்து புகார் செய்த 14 வீரர்களை, மறுநாள் பிப்ரவரி 18 அன்று கிங் விசாரணைக்கு சம்மன் செய்தார். தற்செயலாக அன்று காலை உணவை மறுத்து மிகபல வீரர்கள் உணவு அறையில் இருந்து வெளியேறி முழக்கங்களை எழுப்பினர். காலை 8.45 மணிக்கு அணிவகுப்புக்கு வருமாறு அழைக்கப்பட்ட போது ஒரு வீரர் கூட வரவில்லை என்பது நிலைமை மோசம் என்பதை உணர்த்தியது. 9.15 மணிக்கு அங்கு வந்த கிங், நிலைமையை தெரிந்துகொண்டு ஒரு வார்த்தையும் பேசாமல் காலை உணவுக்கு வீட்டுக்கு சென்றார். திரும்பி வரும்போது வீரர்கள் ஜெய் ஹிந்த் முழக்கம் எழுப்பிக்கொண்டு இருந்தார்கள்.
பேச வந்த அதிகாரிகளை சத்தம்போட்டு திருப்பி அனுப்பினார்கள். சமிக்ஞை பிரிவில் signal centre இருந்த வீரர்களும் சேர்ந்துகொண்டபோது கிளர்ச்சியின் மையப்பொறி பற்ற வைக்கப்பட்டது.
இதற்கு முன்பாகவே பிப்ரவரி 1 அன்று இரவில், முகாமின் சுவரில் ஜெய் ஹிந்த், வெள்ளையனே வெளியேறு ஆகிய முழக்கங்கள் பெயின்டில் எழுதப்பட்டன. கடற்படை கொண்டாட்ட தினம் ஆன பிப்ரவரி 1 அன்று அவ்வாறு முகத்தில் அறைந்தது போல் எழுதப்பட்டு இருந்தது என்பது பெருத்த அவமானத்துக்கு உரியது. 2ஆம் நாள் நள்ளிரவில் தந்தி அனுப்பும் வீரர் Balai Chandra Dutt கைகளில் பெயிண்ட் கறைகளுடன் நடமாடியதை கண்ட உயர் அதிகாரி, தத்தை கைது செய்தான். தத்தின் லாக்கர் திறக்கப்பட்டது. பல கடிதங்களும் Speeches of Pandit Jawaharlal Nehru, The Communist answer to the Congress charges ஆகிய இரு நூல்களும் கண்டுபிடிக்கப்பட்டன. கூடவே கண்டுபிடிக்கபட்ட ஒரு துண்டறிக்கை, இந்தியாவின் முழுமையான விடுதலையை வலியுறுத்தியது மட்டும் இன்றி வெள்ளையர்களை இந்தியாவில் இருந்து வெளியேற்ற ஒரே வழி மீண்டும் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை நடத்துவது மட்டுமே என்றும் இதற்காக ஆசாத் ஹிந்துஸ்தான் என்ற அமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் சொன்னது.
கிளர்ச்சியின் மூலகர்த்தாவை பிடித்துவிட்டோம் என உயர் அதிகாரிகள் கும்மாளம் போட்டனர். ஆனால் தல்வாரின் தலைமை அதிகாரி கிங்கின் காரில், பிப்ரவரி 6 நள்ளிரவில் வெள்ளையனே வெளியேறு என்று எழுதப்பட்டது மட்டும் இன்றி டயர்களில் காற்றும் வெளியேற்றப்பட்டு இருந்தது. கூடவே கிங்குக்கு மிரட்டல் கடிதங்களும் வந்தன. 8ஆம் நாள் காலையில் தல்வாரில் முன்னறிவிப்பு இன்றி பார்வையிட வந்த கிங் பெண் வீரர்கள் பகுதியில் நுழைந்தபோது, சிலர் பூனை போல ஒலியெழுப்பி அவமானப் படுத்தினர். கிங் மிக மோசமான சொற்களால் வசை பாடினான். வேசை மகன்கள், காட்டுமிராண்டிகள், கூலிகாரப்பயல்கள் போன்ற சொற்கள்.
கிங்கின் வசைபாடுதல் குறித்து புகார் செய்த 14 வீரர்களை விசாரிக்க 18 பிப்ரவரி அன்று நீதிமன்றம் கூடியது. "நான் முகாமுக்கு சென்றபோது வீரர்கள் யாரும் என்னை கண்டுகொள்ளவில்லை, எழுந்து நில்லுங்கள் என்று நான் உத்தரவு இட்டேன், அப்போதும் அவர்கள் நிற்கவில்லை" என்று விசாரணையின்போது கிங் வாக்குமூலம் அளித்துள்ளார்.
4
தல்வாரில் கிளர்ச்சியின் சங்கொலி
18 பிப்ரவரி காலை 0730: காலை உணவை வீரர்கள் புறக்கணித்தனர்.
0905: கமாண்டர் கிங் வருகை, ஒரு வார்த்தையும் பேசாமல் திரும்பி சென்றார்
0945: அணிவகுப்புக்கு உத்தரவு இடப்பட்டது, ஆனால் ஜூனியர் வீரர்கள் வர மறுப்பு
1045: நிலைமையை பாம்பேயில் இருந்த Flag Officer க்கு கிங் தெரிவிக்கின்றார். பெண் வீரர்கள் வெளியேற்றப் பட்டனர்.
1130: வெடிபொருட்கள், ஆயுதங்களை Castle Barracks க்கு வீரர்கள் எடுத்துக்கொண்டு சென்றார்கள், கிளர்ச்சி அங்கும் பரவும் என்பதை அதிகாரிகள் எதிர்பார்க்கவில்லை.
1200: Flag Officer பேச்சுவார்த்தை நடத்த வருகின்றார். அதற்கு முன் வீரர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று கட்டளை இடுகின்றார். 1220க்கு அங்கிருந்து திரும்புகின்றார்.
1700: கிங் நீக்கப்பட்டு Inigo James என்ற அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார் என்று Flag Officer அறிவித்ததுடன், 19ஆம் தேதி காலை 0930 மணிக்கு வீரர்கள் தம் புகார் மனுவை அளிக்கலாம், ஆனால் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் வீரர்களின் பிரதிநிதிகள் பழிவாங்கப்பட மாட்டார்கள் என்றும் கூறுகிறார்.
இதன் பின் Leading Signalman கான் என்பவர் தலைமையில் 14 பேர் கொண்ட போராட்டக்குழு அமைக்கப்பட்டது. Free Press Journal அலுவலகத்துக்கு சென்ற ஒரு வீரர், வேலை நிறுத்தம் செய்யும் செய்தியை கொடுக்கின்றார்.
... .... ...
நூலில் கம்யூனிஸ்டுகள் இப்போராட்டத்தில் எந்த வகையிலும் உதவவில்லை என்று நூலாசிரியர் ஒரு வரியில் சொல்லிவிட்டு போகின்றார். 1948இல் இந்திய கடற்படையில் சேர்ந்த அவருக்கு, கம்யூனிஸ்ட்டுக்களின் மகத்தான பங்களிப்பை பதிவிடுவதிலும், காங்கிரசின், காந்தியின் துரோக நிலையை வெளிச்சம் ஆக்குவதிலும் ஒரு ராணுவ அதிகாரி என்ற முறையில் சங்கடங்கள் இருந்து இருக்கலாம்.
நூல் வெளியீடு:Vij Books India Pvt Ltd, New Delhi
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக