வியாழன், அக்டோபர் 06, 2022

பாண்டியர்கள், சோழர்கள் -பார்ப்பனிய வளர்ப்பு-பெளத்த சமண அழிப்பு

(1)

திருவங்காடு கிருஷ்ண குறுப்பு எழுதுகின்றார்:

சோழமண்டலத்தைச் சேர்ந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சீர்காழி என்ற இடத்தில் சம்பந்தமூர்த்தி என்ற பேச்சாற்றலும் திறமையும் வாய்ந்த வைதீக பார்ப்பனர், கி.பி.640 இல் பாண்டியநாட்டின் தலைநகரான மதுரை வந்தார். பாண்டிய மன்னரின் அமைச்சரை அவர் முதலாவதாக வசீகரித்தார். அமைச்சர் மூலமாக பட்டத்து ராணியையும் இவர்கள் இருவர் மூலமாக மன்னரையும் விரைவிலேயே கவர்ந்தார். ...
மதுரையின் மேற்குப் பாகத்தில் இருந்த எட்டு மலைகளிலும் வாழ்ந்துவந்த எட்டாயிரம் சமணத்துறவிகளையும் பாண்டிய படைவீரர்களை அனுப்பி மதுரைக்கு அழைத்து வரச்செய்தார். பட்டத்து அரசியும் அமைச்சரும் சம்பந்தனும் சேர்ந்து மன்னரைத் தூண்டியதன்படி மன்னர் இந்த சமணத்துறவிகளை சம்பந்தருடன் மதவிவாதத்தில் ஈடுபடச்செய்தார். விவாதத்தில் தோல்வியுறும் கட்சியினர் கொல்லப்படுவர் என்பது ஒப்பந்தம். வாதத்தில் சம்பந்தன் தோற்றான். ஆனால் சில செப்படி வித்தைகளைக் காட்டியதன் விளைவாக சமணத்துறவிகள் தோற்றதாக தீர்ப்புக்கப்பட்டது. சம்பந்தனின் தலைமையில் எவ்வித தயக்கமும் இன்றி மதுரை வைகை நதிக்கரையில் சூலங்களை நட்டு, 8,000 சமணத்துறவிகளையும் உயிரோடு ஏற்றிக் கொன்றனர். தேவாரத்தில் சம்பந்தன் எழுதிய 'ஆலவாய் பதிகம்' இந்நிகழ்ச்சியைத் தான் பாடுகின்றது. மிகக்கொடிய இந்தச் சித்ரவதையின் நினைவாக, வைதிக பார்ப்பனர்கள் ஒன்று சேர்ந்து ஆண்டுதோறும் மதுரையில் 'கழுவேற்றித் திருவிழா' என்று இதனைக் கொண்டாடி வருகின்றனர்.
... .... ....
அடுத்தது வரலாற்றறிஞர் ரொமிலா தாப்பரின் பதிவு:
"சமுதாய, பொருளாதார வாழ்க்கையின் மய்யம் - குறிப்பாக கிராமங்களில் கோயில் தான். கோவில்கள் பெரும்பாலும் மன்னர்களால் அளிக்கப்பட்ட கொடைகளே. எனவே அவை பெரும்பாலும் தலைநகரில் அமைந்தவை, அரண்மனையுடன் தொடர்பு கொண்டவை. தஞ்சாவூரில் உள்ள ராஜராஜேஸ்வரம் கோயில் அப்படிப்பட்டதே. இவை கிராம வாழ்வின் மய்யமாக விளங்கின. கிராமக் கூட்டங்கள் கூடுகின்ற இடமும் கிராமப் பாடசாலையும் அதனுடன் இணைந்திருந்தன.
பெரியகோவில்கள் கட்ட பல்லாண்டுகள் தேவைப்பட்டன. பிற்காலத்திய பெரிய நிறுவனங்களுக்கான ஒப்பானவருவாயைக் கொண்டிருந்தன இந்தக் கோயில்கள். ஒருவேளை மிகப்பெரிய கோவில் தஞ்சாவூரில் உள்ளதாகவே இருந்திருக்கலாம். 500 ராத்தலுக்கும் அதிகமான கற்களும், 600 ராத்தல் வெள்ளியும் இக்கோயிலின் வருமானம் நன்கொடைகள், வசூல் ஆகியவற்றின் வழியாகவே அவை கிடைத்தன. நூற்றுக்கணக்கான கிராமங்களிலிருந்து கிடைத்த வருமானத்திற்குமேல் இவை கிடைத்தன. போக போக்கியங்களுக்காக 400 பெண்(தேவதாசி )களையும் 212 ஊழியர்களையும் 57 பாட்டுக்காரர்களையும் நியமித்திருந்தனர்.
தேவதாசிகள் (கடவுளுடைய அடிமைப்பெண்கள்) சோழ காலகட்டத்தில் எல்லாக் கோயில்களிலும் காணப்பட்டனர். பிறந்தவுடனோ குழந்தைப்பருவத்திலோ கடவுளுக்காக அர்ப்பணிக்கப்பட்டனர். அதிக திறமையுள்ளவர்களை பரதநாட்டிய ஆய்வுக்கு தேர்ந்தெடுத்தனர். ஆனால் இதன் பிறகு பெரும்பாலான கோயில்களிலும் தேவதாசிகள் வஞ்சிக்கப்பட்ட வேசிகளாக தரம்தாழ்ந்தனர்.""
நூல் : பிராமண மதம், ஜோசப் இடமருகு, அலைகள் வெளியீட்டகம், 1995
... .... ....

(2)
"சோழர் காலத்தில் நிலவுடைமை முறைகளில் செய்த மாறுதல்களின் தன்மைகள்...
வெள்ளான் வகையில் சிறு நிலச் சொந்தக்காரர்களின் உடைமையைப் பறித்து கோவில் தேவதானமாகவும் இறையிலி நிலமாகவும் மாற்றினார்கள். உழவர்கள் தம் உரிமையை இழந்தார்கள். உழுதுண்போரின் நிலங்களின் பலவற்றைப் பிரமதேயம் (பிராமணர்களின் உடைமை) ஆக மாற்றினார்கள். ஆகவே நிலவுடைமை கோவிலுக்கோ கோவில் நிர்வாகத்தில் ஆதித்தம் செலுத்திய மேல்வர்க்கங்களுக்கே மாற்றப்பட்டது. இதனால் உழுதுண்போர் நிலை தாழ்ந்தது. இது மட்டுமல்ல, போர்களுக்கும் கோவில் செலவுகளுக்கும் அரசனது அரண்மனை ஆடம்பரச் செலவுகளுக்கும் சாதாரண மக்கள் மீது வரிகள் விதிக்கப்பட்டன. வரி கொடுக்க முடியாத ஏழைகளைக் கொடுமைப்படுத்தினார்கள். வரி கோவிலுக்கென்று வசூலிக்கப்பட்டதால் வரிகொடாதவர்களுக்கு 'சிவதுரோகி' என்று முத்திரை குத்தி நிலங்களைப் பறிமுதல் செய்தார்கள். அல்லது நிலத்தின் ஒரு பகுதியை விற்று 'தண்டம்' என்ற பெயரால் கோவிலுக்கு எடுத்துக்கெண்டார்கள். இத்தகைய சுரண்டல் முறையை படைகளின் பாதுகாப்போடும் மதக்கொள்கைகளின் அனுசரணையுடனும் சோழ மன்னர்கள் பாதுகாத்தனர்.
இச்சுரண்டல் முறையை மக்கள் எப்போதும் சகித்துக்கொண்டிருந்தனர் என்று சொல்ல முடியாது. துயரங்களும் கொடுமைகளும் அளவு மீறும்போது அவர்கள் போராடினர். அவை வர்க்கப் போராட்டங்களே.
தஞ்சாவூரில் புஞ்சை என்ற கிராமத்தில் கிடைத்த கல்வெட்டு கூறுவது:அக்கோவிலில் பணியாட்கள் சிலர் இருந்தனர். அவர்களுக்கு ஜீவிதமாக அளிக்கப்பட்டநிலத்தை ஊர்ச்சபையார் கைக்கொண்டு வேலையாட்களை வெளியேற்றினர். அவர்கள் அதிகாரியிடம் முறையிட்டுப்பார்த்தனர். பயனில்லை. அவ்வநீதியை எதிர்க்க அவர்கள் கோயில் முன் தீ வளர்த்து தீயில் இறங்கி உயிர்த்தியாகம் செய்தனர்.
.......
தேவரடியார்களில் இருவகையினர் உண்டு. அரச குடும்பம், வணிகர் குடும்பம், அதிகாரிகள் குடும்பத்தினரை சேர்ந்த பெண்கள் பெருஞ்செல்வத்தோடு கோயில் பணிக்குத் தங்களை அர்ப்பணித்துக்கொண்டனர். இவர்களது பெயர்களுடன் அதிகாரிகளின் பட்டங்களும் சேர்த்து வழங்கப்படும்.
இன்னொரு வகையினர் ஏழைப்பெண்கள். பஞ்சக் காலத்தில் நிலம் இழந்தவர்களும் வெள்ளக்காலத்தில் நிலம் இழந்தவர்களும் தங்களுடைய பெண்களைக் கோவில்களுக்கு விற்றுவிடுவார்கள். அவர்களுக்கான விலையை நிலமாக அவர்களுக்கே ஜீவிதமாகக் கொடுப்பார்கள். இப்பெண்களின் தந்தையோ தமையனோ உறவினனோ அதனைக்காணியாக அனுபவிப்பர். இவர்களுடைய எண்ணிக்கை அதிகமாகும்போது கோவில் செலவு அதிகமாகும். அதனைக்குறைக்க சபையாரும் அரசனும் முயற்சி செய்வார்கள்.அவர்களுடைய ஜீவிதங்களைப் பறித்து கோயில் செலவில் உணவு மட்டும் அளிக்க முற்படுவர். அச்சமயங்களில் உழவர்களான தேவரடியாரின் உறவினர்கள் நிலமிழப்பார்கள்.
இக்கொடுமையை எதிர்த்து நடந்த ஒரு நிகழ்வை கல்வெட்டு ஒன்று குறிப்பிடுகின்றது: தேவரடியாரது ஜீவித நிலங்களைக் கைப்பற்றிக்கொள்ளும்படி நாடாளும் சோழ மன்னனின் அதிகாரி கட்டளை அனுப்ப, சபையாரும் கட்டளையை நிறைவேற்றினர். இதனை எதிர்த்து உழவர்கள் போராட்டம் தொடங்கினர். இவர்களை ஆதரித்து ஏழைத் தேவரடியார் ஆன 'திருவீதிப்பணி செய்வாரும் 'திரண்டனர். தமது போராட்டத்துக்கு மக்கள் ஆதரவைத்திரட்ட சதுரிமாணிக்கம் என்ற தேவரடியாள் முன்வந்தாள். தனது வர்க்கத்தாரின் உரிமையை நிலைநாட்ட கோவில் கோபுரத்தின் மேல் ஏறி விழுந்து உயிர்விட்டாள்.
......
ஆட்சியின் அநீதியையும் நில உடைமையாளரின் கொடுமையையும் எதிர்க்க மக்கள் ஆயுதம் தாங்கிப் போராடியும் இருக்கிறார்கள். அரசனது ஆணைகளும் சபையாரின் முடிவுகளும் கோவில் சுவர்களில் எழுதிவைக்கப்பட்டு இருந்ததால் இந்த முடிவுகளை எதிர்ப்பதற்கு அடையாளமாக சில நேரங்களில் மக்கள் கோவில் சுவர்களை இடித்து கல்வெட்டுக்களை அழித்திருக்கிறார்கள்.
நூல்: தமிழர் வரலாறும் பண்பாடும், நா.வானமாமலை, என்.சி.பி.எச்., 1996

செவ்வாய், ஜூலை 05, 2022

தீக்கதிரும் என் எழுத்தும்

பள்ளிப் பருவத்திலேயே மூத்த அண்ணன் சோவியத் நாடு, ஸ்புட்னிக், தீக்கதிர், சிகரம், செம்மலர், கல்பனா M என்று அறிமுகம் செய்து வைத்தார். தீக்கதிர் வாரப்பத்திரிக்கையாக வெளிவந்தது நினைவில் உள்ளது. மதுரையின் தெருவோர வாசகசாலைகள், செல்லூர் கலைவாணர் என்.எஸ்.கே படிப்பகம், செல்லூர் கிளை நூலகம், மதுரை மத்திய நூலகம், வாத்தியார் சுந்தரராஜன், பின்னர் சிஐடியூ கைத்தறி நெசவாளர்சங்கம் இப்படி பலரும் பல சூழல்களும் என் வாசிப்புப் பழக்கம் மேம்பட பெரிதும் காரணமாக இருந்தார்கள். 


இன்றைய இணையதள காலம் இல்லை அது. தினசரி பத்திரிக்கைகள், வார, மாத இதழ்களும் நூலகங்களும் தெருவோர தேநீர்க் கடைகளும்தான் நமக்கான வாசிப்புக்கு தளம் அமைத்துக் கொடுத்தன. இப்படித்தான் தமிழின் புகழ்பெற்ற அல்லது பெறாத எழுத்தாளர்கள் பலரை நான் அறிந்துகொண்டேன்.

வேலைக்காக சென்னை வந்தபின் நூல்களை வாங்குவது, சேகரிப்பது என அடுத்த கட்டம். பபாசி நடத்தும் ஜனவரி மாத புத்தகக் கண்காட்சி வாசிப்பின் எல்லையை விரிவாக்கியது எனில் சார்ந்திருந்த இடதுசாரி இயக்கம் புரிதலுக்கான வழியைக் காட்டியது. ஒரு கட்டத்தில் அதுவரை என்னுடன் ஒட்டிக்கொண்டு இருந்த மிகப்பல எழுத்தாளர்களின் எழுத்துக்கள் அந்நியமாகப் படவே என்னிடம் இருந்து விலகத் தொடங்க, பல புதிய எழுத்தாளர்களின் எழுத்துக்களை மனசுக்கு நெருக்கமாக உணர்ந்தேன்.

மாநகராட்சிப் பள்ளியில் தமிழ்வழியில் படித்தவன் நான், ஆங்கில மொழி அறிவை வளர்த்துக்கொள்ள விரும்பினேன். The Hindu தொடர்ந்து வாங்கி வாசிக்கத் தொடங்கினேன். Frontline வெளியானது, முதல் இதழில் இருந்து வாசித்தேன். 

இப்படி போய்க்கொண்டு இருந்தது.  வாசிப்பிலும் எழுத்திலும் ஆர்வமிக்க நண்பர்கள் சேர்ந்து அலுவலகத்தில் தமிழ்ச்சங்கம் தொடங்கி, 'முல்லை' என்ற கையெழுத்து ஏடு ஒன்றையும் நடத்தினோம். நானும் எழுதிக்கொண்டு இருந்தேன்.

இயக்கம் என்னை நான் பணிபுரிந்த நிறுவனத்தின் தொழிற்சங்கத்தில் நிர்வாகியாக ஆக்குவதென முடிவு செய்தது. துணைச் செயலாளர், அமைப்புச் செயலாளர் என 13 ஆண்டுகள் வேலை செய்தேன். தீக்கதிர் சந்தா கட்டினேன்.
தி ஹிந்து'வில் வந்த சிறு செய்தி ஒன்றை வாசித்து மனம் வெதும்பி அதை தமிழில் மொழிபெயர்த்து தீக்கதிருக்கு அனுப்பி வெளியிட வேண்டினேன். குவைத்தில் வேலை செய்த வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மீது அரபு ஷேக்குகள் நடத்தும் சாட்டையடி தண்டனை பற்றிய செய்தி அது. நான்கு நாட்கள் கழித்து வீட்டுக்கு தீக்கதிர் தபாலில் வந்தது. பிரித்து வாசிக்கும்போது பார்த்தேன், நான் அனுப்பிய செய்தி அச்சில் வந்திருந்தது. நாள் 16.11.1991. அளவற்ற மகிழ்ச்சி அடைந்தேன். அப்போது தீக்கதிர் மதுரையில் இருந்து வந்து கொண்டிருந்தது. 1993 இல்தான் சென்னைப் பதிப்பு தொடங்கப்பட்டது. 1991 டிசம்பரில் மதுரை தீக்கதிர் அலுவலகத்துக்கு சென்றேன், இரண்டு கட்டுரைகளுடன். ஆசிரியர் குழுத்தோழர்கள் அழைத்துக்கொண்டு மாடியில் இருந்த மூத்த தோழர் கே.முத்தையா முன்நிறுத்தினார்கள். அறிமுகம் செய்த பின், 'நல்லா எழுதுறீங்க, தொடர்ந்து எழுதுங்க' என்று முகம் நிறைந்த புன்னகையுடன் வாழ்த்தினார். அதன் பின் பிற ஆங்கில பத்திரிக்கைகளில் இருந்து கட்டுரைகளை மொழி பெயர்த்ததுடன், நானே கட்டுரைகளையும் எழுதினேன். திருத்தல், நீக்குதல் போன்ற தணிக்கைகள் ஏதும் இன்றி அனைத்தும் வெளிவந்தன.

1993 இல் தீக்கதிர் சென்னைப் பதிப்பு தொடங்கப்பட்டது. (வட)சென்னை தமுஎசவில் இயங்கிக்கொண்டு இருக்கவே, தமுஎச மாநில மையப்பொறுப்பிலும் தீக்கதிர் ஆசிரியர் குழு விலும் இருந்த தோழர்  அ.குமரேசன் அறிமுகம் ஆனார். கட்டுரைகள், மொழிபெயர்ப்புக்கள் என எழுதி அவரிடம் கொடுக்கத் தொடங்கினேன். அவை வண்ணக்கதிரில் வெளியாகும். வண்ணக்கதிர் அவர் பொறுப்பில் இருந்தது. நன்றி சொன்னால் அவர் 'உங்க நன்றியை இன்னொரு கட்டுரை மூலம் சொல்லுங்கள்' என்பார். அடுத்த கட்டமாக நடுப்பக்க அரசியல் கட்டுரைகள் எழுதினேன். இப்படித்தான் என் எழுத்தினை மேம்படுத்திக்கொள்ளவும் அரசியல் பார்வையை கூர்மைப்படுத்திக்கொள்ளவும் தீக்கதிரும் தோழர் அ.கு.வும் காரணமாக அமைந்தார்கள். நான் பொறுப்பில் இருந்த ஆவடி தமுஎசவின் பல நிகழ்வுகளில் அ.கு. பங்குபெற்று சிறப்பித்தார். இயக்கம், எழுத்து ஆகியவற்றைக் கடந்த அன்பும் பிரியமும் அவரிடம் இப்போதும் எனக்கு உண்டு.

2001 தேர்தல்காலத்தில் சிந்தாதிரிப்பேட்டை தீக்கதிர் அலுவலத்திலேயே நேரடியாக பகுதிநேரம் பணியாற்றும் பெருவாய்ப்பு கிடைத்தது. அன்றைய தீக்கதிர் ஆசிரியர்  தோழர் வே. மீனாட்சிசுந்தரம். அரசியல் கட்டுரைகள் நிறைய எழுதினேன், மொழிப்பெயர்ப்பு வேலைகள் செய்தேன். மகிழ்ச்சியான நாட்கள் அவை.  மாலை ஆறு மணி அளவில் ஒரு இடைவெளியில் வெளியே சென்று அ.கு.வும் நானும் அவரது வாடிக்கையான கடையில் தேநீர் அருந்துவோம். பணி முடித்த பின் இருவரும் சென்ட்ரல் வந்து மின்சார ரயில் பிடிப்போம், நான் ஆவடியில் இறங்குவேன், அவர் செவ்வாப்பேட்டை. சில நேரங்களில் தோழ சு.பொ.அகத்தியலிங்கம் கூட வருவார். அவர் வீடும் செவ்வாப்பேட்டையில்தான். தீக்கதிரில் எழுத்துப்பணி செய்த அந்த நாட்களில் இரவு தூக்கம் பிடிக்க வெகுநேரம் ஆகும், அன்று எழுதிய எழுத்துக்கள் அச்சில் வெளியாகும், மறுநாள்  தமிழகம்  எங்கும் என் எழுத்து வாசிக்கப்படும், பேசப்படும் என்ற மகிழ்ச்சியான நினைவுகள் தூக்கத்தை துரத்தி விடாதா!

தோழர் மயிலை பாலுவின் அறிமுகத்தால் அலைகள் சிவம் அவர்களை சந்தித்தேன். கான்ராட் உட் எழுதிய ஆங்கில நூலை தமிழில் மொழி பெயர்க்கும் வாய்ப்பை சிவம் எனக்கு அளித்தார்.  மாப்ளா கிளர்ச்சியும் அதன் தோற்றுவாயும் என்ற மொழிபெயர்ப்பு நூல் 2006 இல் வெளியானது. தொடர்ந்து விடியல் - அலைகள் இணைந்து மாவோ படைப்புக்களை வெளியிட்டனர், தொகுதிகள் 5, 9 இரண்டையும் மொழிபெயர்த்தேன். ஸ்டாலின் படைப்புக்களில் ஏழாவது தொகுதியை மொழிபெயர்த்தேன். 'வேலிகளுக்கு அப்பால்' என்ற என் வலைப்பூவில் 2011 இல் இருந்து எழுதி வருகின்றேன். எனது சொந்த கட்டுரைகள் 'வள்ளியப்பன் மெஸ்ஸும் மார்கரிட்டா பிஸ்ஸாவும்' என்னும் நூலாக 2022 பிப்ரவரியில் வெளியானது. 

அயோத்தி, ஆர்எஸ் எஸ், BCCI வங்கி மோசடி, பங்குச் சந்தை மோசடி, போபால் விசவாயு கசிவு, அமெரிக்க அரசியல், CIA, சார்லி சாப்ளின் திரைப்படங்கள், போர்க்கப்பல் போடம்கின்,  2001 செப்டம்பர் 11, ஈராக் மக்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல், ஜோதிபாசு, புத்ததேவ் ஆகியோருடன் பேரா.முசிருல் ஹசன் நடத்திய டயில் நேர்காணலின் தமிழாக்கம், ஆர்.கே.நாராயணின் நான்கு ரூபாய், குற்றமும் தண்டனையும் ஆகிய கதைகள் (தமிழாக்கம்), வண்ணக்கதிரில் எழுதிய அரசியல் நையாண்டிக் கட்டுரைகள், நடுப்பக்க அரசியல் கட்டுரைகள் என நான் எழுதியவற்றை தீக்கதிர் வெளியிட்டு என்னைப் பெருமைப்படுத்தியது என நன்றியுடன் குறிப்பிடுகின்றேன். என் பள்ளித்தோழன் ப முருகன் தீக்கதிர் ஆசிரியர் குழுவில் உள்ளார் என்பதில் தனிப்பட்ட மகிழ்ச்சி எனக்கு.

பொலிவியாவில் கொச்சபம்பாவில் குடிநீர் எடுப்பதும் விற்பதும் அமெரிக்க தனியார் கம்பெனிகளின் கையில் கொடுத்தது அரசு. வீட்டின் கூரையில் விழும் மழைத்தண்ணீரைக்கூட சேமிக்க கூடாது என்றும் வீட்டுக் கிணற்றில் தண்ணீர் எடுக்கக்கூடாது என்றும் கெடுபிடி செய்தார்கள். கொடுமையின் உச்சத்தில் பொதுமக்களும் ராணுவமும் தெருவில் நேருக்கு நேர் மோதிக்கொள்ள பெரும் கலவரங்கள் வெடித்தன. விந்திய இமாசல யமுனா கங்கா என்ற என் கட்டுரை 29.1.2012 வண்ணக்கதிரில் வெளிவந்தது, இந்தியாவில் அது போன்ற முடிவுகளை அரசு செய்யும் என்று எச்சரிக்கை செய்திருந்தேன். இப்போது மோடி அரசின் ஜல்சக்தி அமைச்சகம் அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இனிமேல் நம் வீட்டு கிணற்றில் நாம் தண்ணீர் எடுக்க அரசுக்கு பல ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

தீக்கதிரின் அரசியல்ஞானச்செவ்வொளி விரிந்து பரவட்டும்!

வெள்ளி, மே 27, 2022

கொரோனா பெருந்தொற்றால் கல்லாவை நிரப்பியவர்கள் யார்?

அதிர்ச்சி ஊட்டும் ஆக்ஸ்பாம் அறிக்கை: கொரோனா பெருந்தொற்றால் கல்லாவை நிரப்பியவர்கள் யார்?
 
கோவிட் தொற்று காலத்தில் ஒவ்வொரு 30 மணி நேரத்திற்கும் ஒரு புதிய நிகற்புதாதிபதி* உருவானார் (*நிகற்புதம்= 100 கோடி, அதாவது 1 பில்லியன்).
 
கொரோனா காலம் இந்த உலகில் ஒவ்வொரு 30 மணி நேரத்திற்கும் ஒரு புதிய நிகற்புதாதிபதியை உருவாக்கி உள்ளதாக ஆக்ஸ்பாமின் அறிக்கை அம்பலப்படுத்தி உள்ளது. 
 
டாவோசில் நடக்கவுள்ள உலக பொருளாதார அமைப்பின் வருடாந்திர கூட்டத்துக்கு முன் ஆக்ஸ்பாம் வெளியிட்டுள்ள Profiting from pain என்ற குறிப்பில் பல அதிர்ச்சி ஊட்டும் புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளன.
மிக முக்கியமானது: தொற்று காலத்தில் புதிதாக 40 புதிய நிகற்புதாதிபதிகள் உருவானார்கள். மாடெர்ணா, ஃபைசர் போன்ற பகாசூர மருந்து கம்பெனிகள் ஈட்டிய லாபம் மட்டும் ஒவ்வொரு வினாடிக்கும் 1000 டாலர்கள், அதாவது 77000 ரூபாய், ஒரு நிமிடத்துக்கும் ரூ.46,20,000, ஒரு மணி நேரத்தில் ரூ.27 கோடியே 72 லட்சம் லாபம் மட்டும். வருமானம் தனி.
 
கோவிட் தொற்று காலத்தில் ஒவ்வொரு 30 மணி நேரத்திற்கும் ஒரு புதிய நிகற்புதாதிபதி உருவானார், மொத்தம் 573 புதிய நிகற்புதாதிபதிகள் இப்படி உருவானார்கள். எதிர்முனையில் இந்த 2022இல் ஒவ்வொரு 33 மணி நேரத்திற்கும் 26.30 கோடி மக்கள் கொடும் வறுமையில் வீழ்வார்கள் என்று ஆக்ஸ்பாம் எச்சரிக்கின்றது.
 
தொற்று கண்டறியப்பட்ட 2019 டிசம்பருக்கு முந்தைய23 ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, 2019 டிசம்பருக்கு பின் இந்த நிகற்புதாதிபதிகளின் சொத்து பல மடங்கு அதிகரித்துள்ளது. உலகின் ஒட்டுமொத்த நிகற்புதாதிபதிகளின் சொத்து மதிப்பு, உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 13.9%! அதாவது 2000ஆவது ஆண்டில் இவர்களின் சொத்து மதிப்பு 4.4%, எனில் இப்போது மூன்று மடங்கு.
 
2020க்கு பிறகு 2668 நிகற்புதாதிபதிகள் தோன்றியுள்ளார்கள், இவர்களின் சொத்து மதிப்பு அமெரிக்க டாலர்கள் மதிப்பில் 12.7 கற்பம் (1 கற்பம்=1 லட்சம் கோடி, ஒரு ட்ரில்லியன்). அதே நேரத்தில் உலகின் முதல் 10 பணக்காரர்களின் சொத்து மதிப்பு, உலகின் அடிமட்ட சாமான்ய மக்களின் 40% பேரின் சொத்தை விடவும் அதிகமாம். 
 
மருந்து கம்பெனிகள் தமது கொரோனா தடுப்பூசி வாக்சின் மருந்தின் அதிகபட்ச விலையை விடவும் 24 மடங்கு விலைக்கு உலக நாடுகளின் அரசுகளுக்கு விற்றுள்ளார்கள், ஆனால் பொருளாதாரத்தில் அடிமட்ட நிலையில் உள்ள நாடுகளில் உள்ள 87% மக்கள் இன்னும் முழுமையாக தடுப்பூசி பெறவில்லை என்றும் ஆக்ஸ்பாம் சொல்கின்றது. 
 
இந்த கொடூர கொள்ளையில் மருந்துகம்பெனிகள் மட்டுமே ஈடுபட்டன என்பதும் இல்லை. எரிசக்தி, உணவு கம்பெனிகளும் கொடூர வருமானம், லாபம் அடித்துள்ளன. பிரிட்டிஷ் பெட்ரோலியம், ஷெல், டோட்டல் எனெர்ஜீஸ், எக்ஸான், செவ்ரோன் ஆகிய பெரிய எரிசக்தி கம்பெனிகள் மொத்தமாக அடித்த லாபம் மட்டும் ஒவ்வொரு விநாடிக்கும் 2600 டாலர்கள், அதாவது ஒவ்வொரு மணிக்கும் ரூ.72 கோடிக்கும் மேல். வாசிக்கும் நீங்கள் கணக்கு போட்டுப்பாருங்கள், இரண்டு வருடங்களில், அதாவது 17520 மணி நேரத்தில் அவர்கள் அடித்த கொள்ளை எவ்வளவு? சுமார் ரூ.12,61,440 கோடி. இதே காலகட்டத்தில் உணவு உற்பத்தி துறையில் புதிதாக 62 புதிய நிகற்புதாதிபதிகள் உருவெடுத்து உள்ளனர். 
 
கார்கில் கம்பெனிக்கு சொந்தமாக மேலும் 3 கம்பெனிகள் உள்ளன. இந்த காலகட்டத்தில் கார்கில் கம்பெனி உலகின் விவசாய துறையில் 70% மார்க்கெட்டை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு முன் கார்கில் குடும்பத்தில் 8 நிகற்புதாதிபதிகள் இருந்தார்கள், கொரோனா தொற்றுக்கு பின் அக்குடும்பத்தில் 4 புதிய நிகற்புதாதிபதிகள் பிறந்தார்கள்.
 
கொரோனா காலத்துக்கு பின், இலங்கை, சூடான் போன்ற நாடுகளில் வரலாறு கண்டிடாத அளவுக்கு விலைவாசி அதிகரிப்பும் அரசியல் குழப்பமும் நிலவுகின்றன. உலகின் குறைந்த வருவாய் ஈட்டும் நாடுகளில் 60% நாடுகள் வறுமையின் பிடியில் தள்ளப்பட்டு விட்டன.

இசையும் வாழ்வும்: டி எம் சௌந்தரராஜன்

டி எம் சௌந்தரராஜன்
24.3.1922 - 25.5.2013
 
திரைப்படங்களின் வசனமும் இடம் பெற்ற பாடல்களும் இலங்கை வானொலியும்தான் எனக்கு தமிழ் அறிவை ஏற்படுத்த காரணமாக இருந்தன.
 
இலங்கை வானொலியில் அதிகாலை பக்தி பாடல்கள்தான் எனக்கு இசை மீதான ஈர்ப்பை ஏற்படுத்தின. அதன் பிறகு தொடரும் 'நினைவில் நின்றவை' கால் மணி நேர ஒலிபரப்பில் எம் கே டி, பி யு சின்னப்பா, கே பி சுந்தராம்பாள், தண்டபாணி தேசிகர், பெரியநாயகி, கண்டசாலா, மோத்தி, கலைவாணர், துரைராஜ் என மிகப்பெரிய கலைஞர்களின் பாடல்கள் அந்த வயதிலேயே (11 வயது) இசையை நோக்கி ஈர்த்தன.
 
முதன் முதலில் ஒரு பாடகர் என்ற பெயரில் எனக்கு அறிமுகம் ஆனவர் ஹனிஃபா அவர்கள்தான். தென்காசியில் இஸ்லாமிய மக்களின் பண்பாடு, பாட்டு, திருவிழா என்று வளர்ந்த சூழலில் இது அதிசயம் இல்லை. மதுரைக்கு வந்தபின் வேறு ஒரு திறப்பு. உழைப்பாளி இந்து மத மக்கள் மத்தியில் வாழ்க்கை. ஆனால் இந்த அடையாளமோ வேறுபாடுகளோ உணரப்படும் வகையில் வாழ்க்கை இருக்கவில்லை. ஆனையூர் வெங்கடாஜலபதி டூரிங் தியேட்டரில் விநாயகனே வினை தீர்ப்பவனே ஒலித்தால் அடுத்து படம் போடப்போறான் என்று அர்த்தம். சீர்காழி இப்படித்தான் எனக்கு விநாயகரை அறிமுகம் செய்தார். மற்றப்படி தெருவில் உள்ள எல்லா வீடுகளிலும் எப்போதும் நுழைந்து சாப்பிடும் உறவும் உரிமையும் இருந்தது. பிள்ளையார் சதுர்த்திக்கு பொங்கல் சுண்டல் என்ற அளவுக்கே பிள்ளையாருடன் ஆன உறவு. விநாயகர்ல்லாம் தெரியாது.
 
இப்படியான வேறுபாடுகளும் அடையாளங்களும் சென்னையில் வேலைக்கு வந்த பின், குறிப்பாக மண்டைக்காடு கலவரங்களுக்கு பின்னர்தான் உணரத்தக்க வகையில் வெளிப்பட்டன. மண்டைக்காடு கலவரம் இந்து முன்னணியின் நீண்ட நாள் திட்டமிட்ட விளைவு. சோ ராமசாமி, ராம கோபாலன், இல கணேசன் போன்றோர் முக்கியமான சூத்திரதாரிகள். தொடர்ந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலம், திருவல்லிக்கேணி கலவரம் ஆகியவை. 
 
மதுரையில் வீட்டு விசேஷங்கள் தொடங்கி அரசியல் கூட்டங்கள், மாநாடுகள் எங்கும் நீக்கமற நிறைந்து காணப்படுவது சினிமா பாடல்கள், ஒலிச்சித்திர வடிவங்களின் கூம்பு ஸ்பீக்கர் ஒலிபரப்பே. மதுரை வீரன், வீரபாண்டிய கட்டபொம்மன், நாடோடி மன்னன், சரஸ்வதி சபதம், திருவிளையாடல், தங்கப்பதக்கம், 16 வயதினிலே ஒலிச்சித்திரம் ரொம்ப பிரபலம். "இன்று வெள்ளிக்கிழமை, கத்தியை கையாலும் தொடேன்" என்ற டி எஸ் பாலையாவின் வசனத்துக்கு காத்திருப்போம்.
 
டி எம் எஸ்ஸின் பாடல்களில் அவர் உச்சரிப்பும் வீச்சும் தமிழை எப்படி உச்சரிக்க வேண்டும், பேச வேண்டும் என்று சொல்லிக்கொடுத்தன. அழகென்ற சொல்லுக்கு முருகா, கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் நற்கதி அருள்வாய் அம்மா என அவர் பக்திப்பாடல்கள் வழியேதான் இலங்கை வானொலி என்னை உள்ளே அழைத்துச்சென்றது. சிவாஜியின் குரலுக்கும் உடல் மொழிக்கும் ஒத்து வரும் அவர் குரலும் பாவமும் கடுமையும் இழைவும்... எம் ஜி ஆரின் வீச்சுக்கும் குதித்து ஓடும் வேகத்துக்கும் ஏற்ற விரைவும் அவரது குரல் வெளிப்பாட்டில் காணமுடியும். 
 
தனியாக அவர் பாடிய கர்நாடக சங்கீத ஒலிபரப்புகளையும் சென்னை, மதுரை வானொலியில் கேட்டுள்ளேன், கொஞ்ச நேரம்தான், அதற்கு மேல் முடியாது. டி எம் எஸ் மட்டுமல்ல, எந்த ஒரு பிரபலமான மக்கள் பாடகருக்கும் இந்த நிலைதான், மக்களிடம் இருந்து விலகி இருக்கும் எந்த ஒரு கலைக்கும் இந்த கதிதான், இதில் தனிப்பட்ட கலைஞர்களை சொல்லி குற்றமில்லை. 
 
சென்னைக்கு வந்தபின்தான் அந்த கனவு சாத்தியம் ஆனது. மெனக்கிட்டு உட்கார்ந்து கவனமாக அவரது பாடல்களை தேர்வு செய்து காசெட்டில் பதிவு செய்தேன். உற்சாகம் மேலிடும் புதிய வானம் புதிய பூமி, ஒளிமயமான எதிர்காலம், அதோ அந்த பறவை போல, இரவுக்கான பாடல்கள் மடி மீது தலை வைத்து, அமைதியான நதியினிலே, நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள், எங்கே நிம்மதி... இப்படி வகைபிரித்து. வேதாவின் இசையில் அவர் பாடிய பாடல்கள் தனி ரகம். இன்னும் பார்த்துக்கொண்டிருந்தால், நான் மலரோடு, மனம் என்னும் மேடை மேலே, ஆசையா கோபமா...
 
சம்பூரண ராமாயணத்தில் ராவணன் பாடுவதற்கு அமைக்கப்பட்ட பாட்டுத்தான் பாட்டும் நானே பாவமும் நானே. திருவிளையாடலில் பயன்படுத்தப்பட்டது, சிவனுக்காக! எழுதியவர் கா மு ஷெரீப். ஷெரீப்பிடம் பயன்படுத்திக்கொள்ள அனுமதி கேட்கப்பட்டபோது எடுத்துக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டார். ஆனால் படத்தில் டைட்டிலில் அவர் பெயர் இருக்காது. பெருந்தன்மை. 
 
பாதை தெரியுது பாருக்கு வாலி எழுதிய பாடல்தான் கொடுத்ததெல்லாம் கொடுத்தார். பின் அது படகோட்டியில் பயன்படுத்தப்பட்டது. அதே படத்தில் எம் பி எஸ்ஸின் மெல்லிசையில் பாடிய சின்ன சின்ன மூக்குத்தியாம் பாடலை எழுதியவர் தோழர் கே சி எஸ் அருணாசலம். 1995ஆம் ஆண்டு சென்னை கிறித்துவ இலக்கிய சங்கம் நடத்திய கருத்தரங்கில் கே சி எஸ் அவர்களே அப்பாடலைப் பாடினார், கேட்கும் பெரும்பேறு பெற்றேன்.
 
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் பாடியவர், அன்னையைப்போல் ஒரு தெய்வம், தந்தையைப்போல் என்றும் தனித்தனியாக பாடினார். ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும் என்று அண்ணன் தம்பி கூட்டுறவின் மேன்மையை பாடியவர், வெறுப்பில் அண்ணன் என்னடா தம்பி என்னடாவும், காசேதான் கடவுளடாவும் பாடினார். அட போங்கடா என்று 'கடைசி வரை யாரோ' என்று கொண்டு வந்தும் நிறுத்தினார்.
 
சித்ராங்கி படத்தில் நெஞ்சினிலே நினைவு முகம், தில்லையம்பல நடராசா (இது பட்டுக்கோட்டை பாடல்!), கோபியர் கொஞ்சும் ரமணா, ஏரிக்கரையின் மேலே, மூடுபனி குளிரெடுத்து, பார்வை யுவராணி போன்றவை தனி ரகம். 
 
யார் அந்த நிலவு, மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், புத்தன் ஏசு காந்தி, எங்கிருந்தோ ஆசைகள், உனது விழியில், மல்லிகை முல்லை, சந்த்ரோதயம் ஒரு பெண்ணானதோ, குங்குமப்பொட்டின், தாயில்லாமல் நானில்லை, ஒளிமயமான எதிர்காலம், பரமசிவன் கழுத்தில் இருந்து, ஆகாயப்பந்தலிலே, வரதப்பா வரதப்பா, இதோ எந்தன் தெய்வம், காற்று வாங்கப்போனேன், நான் பாடும் பாடல், எல்லோரும் நலம் வாழ, என்னை யாரென்று, ஆறு மனமே ஆறு ஆகியவற்றை இப்போது கரோகியில் பாடி முயற்சித்து பார்க்கின்றேன். 
 
அன்று கேட்பவன் அரசன் மறந்தால் பாடலை மகனும் மனைவியும் பாடச்சொல்லி கேட்கின்றார்கள். இதை பக்திப்பாடல்கள் பட்டியலில் சேர்த்து விட்டார்கள். பாடுவதற்கு இனிமையாக உள்ளது மட்டுமின்றி இது ஒரு தத்துவ விசாரணைப்பாடலாக தோன்றுவதால் பாடப்பிடித்துள்ளது, கரோகியில் பாடுகின்றேன். கேட்டுப்பாருங்கள். ஆறு மனமே ஆறு, கடவுள் ஏன் கல்லானான், கண் போன போக்கிலே, சட்டி சுட்டதடா, மாறாதய்யா மாறாது, காசேதான் கடவுளடா, உள்ளத்தின் கதவுகள் கண்களாடா... இவற்றில் வெளிப்படும் குறைந்தபட்ச அடிப்படை நியாயங்கள், காசு பணமே பிரதானம் என்ற கோட்பாட்டை கேள்விக்கு உள்ளாக்குவது, மனித, குடும்ப உறவுகள் குறித்த விசாரணைகள், கேள்விகளை ஒதுக்கி விட முடியாது. 

சென்னைக்கு வந்தபின் ஆவடியில் ஒரு வருடம் வயலின் வகுப்புக்கும் சென்றேன். அப்போது தி நகரில் வாங்கியது 650 ரூபாய்க்கு. பாடும்போது மாஸ்டர் சுரேந்திரன் 'சாரீரம் நல்லாருக்கே' என்றார், சந்தோசமாக இருந்தது. கீர்த்தனைகள்கள் எல்லாம் தெலுங்கில் அல்லது வேறு மொழியில் இருந்ததால் மனதில் ஒட்டவில்லை. நின்றுவிட்டேன். இப்போதும்கூட கரோகியில் இந்திப்பாடல்களைப் பாடும் முன் அவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்பை நன்றாக புரிந்துகொண்டுதான் பாடுகின்றேன். இல்லையேல் மனதில் ஒட்டாது, பாட முடியாது. சாரீரம், சரீரம் இரண்டையும் பேண வேண்டும்.
 
அலுவலகத்தில் நடக்கும் விழாக்களில் பாடினேன். பாதுகாப்பு வார விழாவுக்கு மூத்த தோழர் சரணா எழுதி இயக்கிய ஒரு மணி நேர கதாகாலட்சேபத்திலும் பக்கா காஸ்ட்யும், மேக் அப் சகிதம் உடன் நான்கு நண்பர்களுடன் பாடினேன். எல்லாவற்றுக்கும் அடிப்படை அறிவைக் கற்றுக்கொடுத்தது இலங்கை வானொலியும் டி எம் எஸ், சீர்காழி கோவிந்தராஜன், நாகூர் ஹனிஃபா, எம் கே டி, சுந்தராம்பாள், சிவாஜி போன்றோர் கற்றுக்கொடுத்த தமிழ்தான்.
 
அவர் இறந்தபோது கூட்டம் கூட்டமாக கூடி நின்று கலைக்குழுக்கள் பாடி ஆடியதும் இப்போதும் மனம் மகிழும் அல்லது சோர்வு நிறையும் நேரங்களில் அவர் பாடலை பாடுவதும் கேட்பதும், ஒரே காரணம்தான், அவரை நம் அன்றாடவாழ்வின் பகுதியாக அடையாளம் கண்டதுதான்.
டி எம் எஸ்! உன் மடி மீது தலை வைத்து....

ஞாயிறு, ஏப்ரல் 10, 2022

வானமெங்கும் பரிதியின் சோதி....

மக்களிசைக் கலைஞர் M B சீனிவாசன் அவர்களின் மற்றுமொரு இசை ஓவியம்

தாகம் என்கிற திரைப்படம்,  பாபு நந்தன்கோடு இயக்கினார். அதில் இடம் பெற்ற உருகிடும் வேளையிலும் ... என்ற பாடல் என் சிறுவயதில் இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பாகும். பாடலின் விருத்தம் கே ஜே யேசுதாஸ் பாடியிருப்பார். மறந்து போயிருந்தது, ஆனால் பாடலின் மெட்டு மனதின் மூலையில் உறைந்து கிடந்தது, சித்திரப்பூ சேலை போல.

மிகபல வருடங்கள் கழிந்தபின் தற்செயலாக யூடியூப்பில் அப்பாடலை காணவும் கேட்கவும் நேர்ந்தது. இப்போது தெரிகின்றது, விருத்தம் மகாகவி பாரதியாருடையது! ஒளியும் இருளும் என்ற பாரதியின் கவிதையில் இருந்து:

வானமெங்கும் பரிதியின் சோதி

மலைகள் மீதும் பரிதியின் சோதி

தானை நீர்க்கடல் மீதிலும் ஆங்கே

கானகத்திலும் பற்பல ஆற்றின்

கரைகள் மீதும் பரிதியின் சோதி

மானவன் தன் உளத்தினில் மட்டும்

வந்து நிற்கும் இருளிதுவென்னே!


கதிரவன் உதிக்கும் புலர்காலைப் பொழுதை பாரதி வர்ணிக்கின்றான். பாரதியின் சொற்சித்திரத்தை இசையால் காட்சிப்படுத்தி விடுகின்றார் எம் பி எஸ்! 

நெடிதுயர்ந்த மலைகளின் பின்னே மறைந்து மெல்ல மேலெழும் கதிரவனின் காலைப்பச்சிளம் ஒளி. யேசுதாஸின் குரல் செய்யும் மாயத்தால் பளீரென்று ஒரு நொடியில் வானமண்டலம் முழுதும் இளஞ்சிவப்பால் சோதி மயமாகின்றது, மலைகளும் நீள்கடலின் பெருநீர்ப்பரப்பும் இன்னும் புல்வெளிகளும் மரங்களும் அடர்வனங்களும் ஆற்றின் கரைகளும் ஓடும் நதிவெள்ளமும் எல்லாமும் ஒரே சோதிமயம்! உலகமே பரிதியின் சோதியால் ஜொலிக்க, ஆனால், என்ன இது, இந்த பாழும் மானிடன் உள்ளத்தில் மட்டும் பேயிருள், எதற்கு? பாரதியின் கவலை நமக்கும் ஒட்டிக்கொள்ள, இங்கே பூவை செங்குட்டுவன் வந்து இணைந்து கொள்கின்றார்.

உலகமே ஒளிமயமானபோதில், மானிட, உன் உள்ளத்தில் மட்டும் ஏன் இருள் கவ்வி மருளுகின்றாய்? செங்குட்டுவன் மானிடனின் தலையில் குட்டுகின்றார், எஸ் ஜானகி இணைகின்றார்:

உருகிடும் வேளையிலும் 

நல்ல ஒளித்தரும் மெழுகு திரி

ஒளித்தரும் வேளையிலும் 

தியாக உணர்வினைத் தூண்டிவிடும்

இருளில் உலாவும் இதயம் யாவும்

வெளியே வர வேண்டும்

ஆயிரம் இதயம் ஒன்றாய் சேர்ந்து

ஒளியைத்தர வேண்டும்

சேர்ந்திசையின் நுட்பம், மனிதக்குரல்களின் ஒத்திசைவு ஆகியவற்றை நன்கு அறிந்த எம் பி எஸ் விருத்தத்தில் நம்மை வான வெளியில் பறக்க வைத்துவிடுகின்றார். வானம், மலைகள், கடல், தரை, கானகம், ஆறு என அனைத்தையும் குரல்களின் மூலம் இசைஓவியமாக தீட்டி நம்மை எங்கோ கொண்டு சென்று விடுகின்றார். பாரதியின் கவிதை வரிகளுக்கு நியாயம் செய்கின்றார்.

யேசுதாஸின் குரலில் பிரமாண்டமான கதிரவனின் ஒளியையும் ஜானகியின் குரலில்  சிறு மெழுகுவர்த்தியின் ஒளியையும் இரு வேறு பரிமாணங்களாக காட்டும் நுட்பத்தை என்ன சொல்ல! எம் பி எஸ்....

பாடலை யூடியூப்பில் கொடுத்த ஸ்ரீனிவாசன் பாலகுமார் என்ற அந்த நண்பருக்கு நன்றி!

பாடலின் லிங்க் https://youtu.be/KoDvbskQozg

நீங்களும் கேளுங்கள், வானத்தில் பறக்கலாம்!

புதன், ஏப்ரல் 06, 2022

அவர்கள் தூக்கில் உயிரிழக்கவில்லை, சுடப்பட்டார்கள்

1931, மார்ச் 23

பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் மூவரும் லாஹூர் மத்திய சிறையில் மார்ச் 24 அன்று காலையில் தூக்கில் இடப்பட்டு கொல்லப்பட வேண்டும் என்பதுதான் தீர்ப்பு.
தீர்ப்பு சொல்லப்பட்ட நாள் 7 அக்டோபர் 1930. குற்றம்சாட்டப்பட்ட15 பேரில் 12 பேருக்கு தண்டனை அளிக்கப்பட்டது. அஜாய் குமார் கோஷ், சசீந்திரா நாத் சன்யால், தேஸ் ராஜ் மூவரும் விடுவிக்கப்பட்டனர். பிரேம் தத்துக்கு 5 ஆண்டுகள், குந்தன் லாலுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை. ஏழு பேருக்கு ஆயுள் தண்டனை: கிஷோரிலால், மஹாபீர் சிங், பிஜோய் குமார் சின்கா, சிவ வர்மா, கயா பிரசாத், ஜெய்தேவ், கம்வால் நாத் திவாரி. மூவருக்கு தூக்கு தண்டனை.
வழக்கம் என்ன? காலையில் தூக்கில் இடப்படுவதே. ஆனால் வெளியே அறிவிக்கப்பட்ட நாளுக்கு முதல் நாள் மார்ச் 23 இரவு அவர்களை தூக்கில் இட்டது பிரிட்டிஷ் நிர்வாகம். அவர்கள் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை, பிரிட்டிஷ் அரசு உடல்களை எரித்தது. சட்டப்படி தூக்கில் இறந்தவர்களின் உடல் பிரேத கூறாய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும், அதுவும் செய்யப்படவில்லை. ஏன்? அவர்கள் எரிக்கப்பட்ட இடம் எது? என்ன மாதிரியான 'இறுதிச்சடங்கு' செய்யப்பட்டது?
இந்த விவரங்களை வெளியுலகுக்கு சொன்னவர் பிரிட்டிஷ் ரகசிய போலீஸ் துறை ஏஜென்ட் ஆக இருந்த டாலிப் சிங் அலஹாபாதி Dalip Singh Allahabadi. அலஹாபாத்தில் இருந்த ஆனந்தபவனில் தோட்ட பராமரிப்பாளர் பணியில் இருந்தவர். சைமன் கமிஷனுக்கு எதிராக ஒரு போராட்டத்தை முன்னின்று நடத்திக்கொண்டு இருந்த ஜவஹர்லால் நேருவை கன்னத்தில் அறைந்த 'பெருமைக்கு' உரியவர்.
Some hidden facts : Martyrdom of Shaheed Bhagat Singh என்ற நூலின் ஆசிரியர்கள் இருவர். ஒருவர் குல்வந்த் சிங் கூனர், மற்றவர்G S சிந்த்ரா. டாலிப் சிங் அலஹாபாதியின் தத்து மகனே குல்வந்த் சிங். அலஹாபாதி 1986இல் காலமானார்.
1975, எமர்ஜென்சி காலம். பகத் சிங் உள்ளிட்ட மூன்று பெரும்தியாகிகளின் சிறை வரலாற்றை குல்வந்த் தொகுத்து வைத்து இருந்துள்ளார். நூலாக வெளியிடவும் எண்ணியுள்ளார். அவரது சொந்த தந்தையோ நூலாக வெளியிடுவதில் ஆபத்து நேரும் என்று கருதி ஒரு நாடகம் ஆடியுள்ளார். அதாவது யாரோ ஒரு பதிப்பாளர் இவற்றை நூலாக வெளியிட விரும்புவதாகவும் கையெழுத்துப்பிரதியை பார்க்கவிரும்புவதாகவும் சொல்லி குல்வந்த்திடம் இருந்து பிரதியை வாங்கி அழித்துவிட்டாராம்.
சொந்த தந்தை 1992இல் காலமாகிவிட, அழிக்கப் பட்ட பிரதியின் தகவல்களை தன் நினைவில் இருந்து மீட்டு தொகுக்க எண்ணியுள்ளார் குலவந்த். மேலும் அலஹாபாதியின் கருத்தாக்கத்தின் அடிப்படையில் ஒரு திரைப்படத்தை தயாரிக்கவும் கூட திட்டமிட்டாராம். ஆனால் அவர் கூறியதை யாரும் பொருட்படுத்தவில்லை. ஹோமியோபதி மருத்துவர் ஆன ஜி எஸ் சிந்த்ராவை சந்தித்து இது பற்றி உரையாடிய பின், லண்டன் பிரிட்டிஷ் நூலகத்தில் அலஹாபாதி கூறியதன் அடிப்படையில் மேலதிக தகவல்களை திரட்டியுள்ளார் சிந்த்ரா.
இருவரது ஆய்வும் அலஹாபாதி கூறியவற்றை உறுதி செய்தன. மூவரின் மரணமும் ஆபரேஷன் ட்ரோஜன் ஹார்ஸ் Operation Trojan Horse என்று பெயரிடப்பட்ட ரகசிய சதித்திட்டத்தால் நிறைவேற்றப்பட்டது. சிறையில் மூவரையும் தூக்கில் இட்ட பின் கழுத்து எலும்பு உடைப்பட்ட நிலையில் அரைகுறை மயக்க நிலையில் இருந்தபோதே தூக்கில் இருந்து உடல்களை இறக்கி விறகுகள் ஏற்றப்பட்ட ஒரு லாரியில் ஏற்றி லாஹூர் கண்டோன்மென்டுக்கு கொண்டு சென்று, அங்கே காத்திருந்த சாண்டர்சின் குடும்பத்தினரின் துப்பாக்கியால் சுடப்பட்டுத்தான் கொல்லப்பட்டனர்.
1928 சைமன் கமிஷன் வரவுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தின் போது முதுபெரும் தலைவர் லாலா லஜபதி ராயின் தலையிலும் உடம்பிலும் தடியால் தாக்கியவன் போலீஸ் சூப்பிரண்டெண்ட் ஜே ஏ ஸ்காட் என்பவன். தாக்குதலினால் ஆன காயங்கள் காரணமாக நவம்பர் 17 அன்று மரணமடைந்தார் ராய். கோபமுற்ற பகத்சிங்கும் தோழர்களும் பலி தீர்க்க எண்ணினர். பின்னர் நடத்திய தாக்குதலில் ஸ்காட் என்று எண்ணி ஜே பி சாண்டர்ஸ் என்ற பிரிட்டிஷ் அதிகாரியை(பஞ்சாப் கவர்னரின் தனி உதவியாளர்) தவறுதலாக சுட்டு கொன்றார் பகத்சிங். இதுவே லாஹூர் சதிவழக்கு. ஏப்ரல் 8 1929 அன்று பகத்சிங் கைது செய்யப்பட்டார். 26 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
மூவரின் கொலை சதிக்கு ஒப்புதல் அளித்தவர் வைஸ்ராய் இர்வின் பிரபு.
பகல் நேரத்தில் இந்த தூக்கு தண்டனை சதித்திட்டம் நிறைவேற்றப்படும் எனில் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்படும். எனவே 24 அன்று காலை நிறைவேற்ற பட இருந்த தண்டனையை முதல் நாள் இரவு 7.30 மணிக்கே செய்தனர்.
சாண்டர்ஸ் குடும்பத்தினர் சுட்டுக்கொன்ற பின், லாகூரில் இருந்து ஆறு மைல் தொலைவில் பியாஸ் நதியின் வலது கரையில் சட்லெஜ் நதி சந்திக்கும் இடத்தில் ஒரு மண்சாலையில் மூவரின் உடல்களும் எரிக்கப்பட்டன. மக்களை திசை திருப்பும் வண்ணம் சிறிது உடலின் சதையும் எலும்புகளும் எடுத்துச்செல்லப்பட்டு ஹுசேனிவாலா அருகே சட்லெஜ் நதியின் மேற்கு கரையில் எரிக்கப்பட்டன.
இவ்வளவும் நடந்தபின், திட்டமிட்டபடி பிரிட்டிஷ் அதிகாரிகள் இரண்டு இந்திய உளவாளிகளை லாஹூர் காங்கிரஸ் கட்சியினரை சந்தித்து உரையாட அனுப்பினார்கள். அதாவது கண்டா சிங் வாலாவில் Ganda Singh wala யாரோ சிலரின் ஈமச்சடங்கை தொலைவில் இருந்து பார்த்ததாகவும் பெரிய அளவில் தீ எரிந்ததாகவும் காங்கிரஸ் கட்சிக்காரர்களிடம் கூறினார்கள்.
இவர்கள் சொன்னதை உண்மை என்று நம்பி ஒரு கூட்டம் அந்த இடத்துக்கு சென்றது. அவர்களில் பகத்சிங்கின் சகோதரி பீபி அமர் கவுரும் ஒருவர். அங்கே புதைக்கப்பட்டு இருந்த சதை, பாதி எரிந்த நிலையில் இருந்த எலும்புகளை கண்டு எடுக்கின்றனர். இவற்றில் எரியாத நிலையில் இருந்த நீண்ட எலும்பு ஒன்றும் இருந்தது, மூவரில் உயரமானவர் ஆன பகத்சிங்கின் எலும்பாக இருக்கலாம் என்று அவர்கள் நம்பினார்கள். மிச்சமான உடல் பாகங்களை எடுத்துக்கொண்டு லாஹூரின் ராவி நதிக்கரையில் பெரும் மரியாதையுடன் கண்ணீர் மல்க புரட்சி முழக்கங்களுடன் நல்லடக்கம் செய்தார்கள்.
மற்றொரு தகவல் படி, தூக்கில் இருந்து இறக்கப்பட்ட பகத்சிங்குக்கு சற்றே நினைவு திரும்புகின்றது. சாண்டர்சின் மாமனார் துப்பாக்கியால் மூவரின் தலையிலும் மார்பிலும் சுடுவதற்கு அனுமதிக்கப்பட்டார்.
அன்றைய பிரிட்டிஷ் அரசியல் துறை சி ஐ டி போலீஸ் சூப்பிரண்டெண்ட் ஆக இருந்த V N Smith என்பவர் எழுதிய the Saunders murder case என்ற குறிப்பேடு
லண்டன் பிரிட்டிஷ் நூலகத்தில் மைக்ரோ பிலிம் ஆக பாதுகாக்கப்பட்டு வருகின்றது. ஸ்மித் எழுதுகிறார்:".....இரவு 7 மணிக்கெல்லாம் சிறையினுள் இன்குலாப் ஜிந்தாபாத் என்ற முழக்கம் வெளிப்பட்டது, அதாவது மூவரையும் தூக்கிலிடும் நேரம் வந்துவிட்டது என உணர்த்தும் அடையாளமாக அது இருந்தது.... இவர்களை தூக்கில் இட்டவரையும் உடனடியாக போலீஸ் கொன்றது. தூக்கில் இறந்தவர்களின் உடல்கள் அடையாளம் காண்பதற்காக கிடத்தி வைக்கப்படும் அறையில்தான் அவரை கொன்றார்கள். மயக்க நிலையில் இருந்த மூவரும் கொண்டு செல்லப்பட்ட லாரியில்தான் அவரது உடலும் கொண்டுசெல்லப்பட்டது.
ஆதாரம்: Some hidden facts : Martyrdom of Shaheed Bhagat Singh, K S Kooner, Dr.G S Sindhra, Unistar Books, Chandigarh.

(தோழர் ஆதவன் தீட்சண்யாவின் நேர்காணல் ஒன்றை வாசித்தபின் தேடி கிடைத்த நூல் இது. அவருக்கு நன்றி. பகத்சிங் குறித்த பல நூல்களை Unistar வெளியிட்டுள்ளார்கள்).
... ... ...

பகத்சிங்கையும் தோழர்களையும் தவறாக வழிநடத்தப்பட்ட தேச பக்தர்கள் என்பார் காந்தி. உண்மையோ பொய்யோ, பகத்சிங் அதுவரை தேசம் கண்டிடாத ஒரு புதிய தத்துவார்த்த பாதையை வடிவமைத்தார் என்பது முற்றிலும் உண்மை. அதுகாலம் வரையிலும், இந்தியபுரட்சியாளர்கள் முதலாளித்துவம், காலனியவாதம் ஆகிய இரட்டை தீங்குகளை மற்றுமே நிராகரித்து வந்த நிலையில், மற்றுமொரு மோசமான அடக்குமுறை வடிவத்தையும் சேர்த்து நிராகரித்தார் பகத்சிங், அதுதான் சாதியம். முதலாளித்துவத்துடன் சாதியத்தை இணைத்து அடையாளம் கண்டதில்தான் இதர புரட்சியாளர்களில் இருந்து பகத்சிங் தனியாக தெரிகின்றார். பலருக்கு அவரது இந்த வாதம் புரிபடாமல் போயிருக்கலாம்.
பல தத்துவங்களை பயின்றவர் அவர். தன் செயல்பாடுகளில் அவற்றை ஒன்றிணைத்து பரிசோதித்து பார்த்தவர். பல நேரங்களில் மார்க்சியம், பல நேரங்களில் அரசு மறுப்பியவாதம் Anarchism.
லாஹூரின் நேஷனல் காலேஜில் இருந்து வெளியேறி அரசியல் நடவடிக்கைகளில் இறங்க முடிவு செய்த போது அவரது வயது 17. மற்றவர்கள் வெற்றி பெற இயலாதபோது, 23 வயதில் அவரால் (அரசியல் தெளிவு என்ற நிலையில்) எப்படி வெற்றி பெற முடிந்தது? வாசிப்பு! அவரது அரசியல் தெளிவு, சிறையினுள் தொடர்ந்த வாசிப்பின் மூலம் சாத்தியம் ஆனது. ஆகவேதான் அந்த இளம் வயதில் இந்திய புரட்சியாளர்களில் அவர் பெரிய அறிவாளியாக ஒளிர்ந்தார்.
அவருடன் லாஹூர் மத்திய சிறைச்சாலையில் இருந்த சகதோழர் சிவ வர்மா சொல்வார்: "சிறைக்குள் புகுந்த முதல் நாளில் இருந்தே வாசிப்பதற்கு எங்களுக்கு நூல்கள் எளிதில் கிடைத்தன, வாசிப்பதற்கும் விவாதிப்பதற்கும் ஏற்ற சாதகமான சூழலும் அங்கே நிலவியது. தத்துவார்த்த, சமூகவியல் விவாதங்களில் நாங்கள் ஏற்கனவே ஈடுப்பட்டுக்கொண்டிருந்தோம் என்றாலும் பகத்சிங் வந்து சேர்ந்த பின் சூழல் மேலும் உயிர்ப்பு அடைந்தது. ஆக, எந்த ஒரு விவாதமும் இல்லாமல், எந்த ஒரு விடயத்தையும் ஆழமாக விவாதிக்காமல் ஒரு நாளும் கடந்ததில்லை. பலதரப்பட்ட நூல்களை நாங்கள் வாசிப்போம், மார்க்சியம், சோவியத் ரஷ்யாவில் காணப்படும் முன்னேற்றம், ஆப்கானிஸ்தான் கிளர்ச்சி, சீன ஜப்பான் பிரச்சினை, சர்வதேச ஒருங்கமைப்பு League of Nations கண்ட தோல்வி, மீரட் சதிவழக்கு, தொழிலாளர்கள் போராட்டம், இந்திய முதலாளித்துவத்தின் பாத்திரம், காங்கிரஸ் கட்சியின் கொள்கை, லாஹூர் காங்கிரஸ் மாநாட்டில் அதன் அரசியல் லட்சியம் குறித்த கேள்வியில் ஏதேனும் மாற்றம் வருவதற்கான சாத்தியம் உண்டா ....இப்படி."
ஆக, தன் அறிவின் அகலத்தையும் ஆழத்தையும் விசாலமாக்குவதற்கான சாத்தியங்களை முனைந்து உருவாக்கியதில் காந்தி தன் வாழ்நாளில் செய்ததை விடவும் அவர் அதிகமாகவே செய்தார். வாஷிங்டன், கரிபால்டி, லஃபாயத், லெனின் போன்ற புரட்சியாளர்களின் செயற்பாடுகளை தொடர்ந்து கவனித்து வந்தார். இந்தியப்புரட்சி வரலாற்றில் அவர்தான் உச்சத்தில் இருந்த பகுத்தறிவு சிந்தனையாளர். விடுதலைபோராட்ட களத்தின் கொதிகலன்களாக விளங்கிய லியால்பூர் Lyallpur, லாஹூர் ஆகிய நகரங்களில் தன் இளமைக்காலத்தை தொடங்கிய பகத்சிங்கின் அரசியல் புரிதலானது அவர் தொடர்ந்து வாசித்த மிகப்பரந்த சர்வதேச புரட்சிகர இலக்கியங்களால் மெருகேறியது, செம்மை அடைந்தது. அவர் அவற்றுள் தம்மை மூழ்கடித்துக்கொண்டார்.
மார்க்ஸ், எங்கெல்ஸ், ட்ராட்ஸ்கி ஆகியோரை மட்டுமல்ல, தாமஸ் பெயின், அப்டான் சிங்க்ளேர், மோரிஸ் ஹில்கிட் Morris Hillquit, ஜாக் லண்டன், விக்டர் ஹுயூகோ, தொஸ்தொயெவ்ஸ்கி, ஸ்பிநோசா Spinoza, பெர்ட்ரான்ட் ரசல் ஆகியோரையும் வாசித்தார். ஜான் ஸ்டூவர்ட் மில், தாமஸ் ஜெபர்சன், காவுட்ஸ்கி, புகாரின், Burke, லெனின், Thomas d'Aquin, டாண்டன், ஒமர் கயாம், தாகூர், N A Morozov, Herbert Spencer, Henry Maine, ரூஸோ ஆகியோரின் செவ்வியல் படைப்புகளையும் அவர் விட்டுவைக்கவில்லை. ஏழு வருடங்களில் 130 ஆவணங்களுக்கு மேல் அவர் எழுதினார், அவை 400 பக்கங்களுக்கு மேல் இருக்கும். 50 கடிதங்கள், நீதிமன்றம் சார்ந்த அறிக்கைகள், பிரசுரங்கள், கட்டுரைகள், ஓவியங்கள் என அவர் எழுதியது நிறைய. பலவற்றை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் 716 நாட்கள் சிறையில் இருந்தார் என்பதும் அவற்றில் 167 நாட்கள் மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதியாக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆயினும் அவர் தன் வாசிப்பை கைவிடவில்லை, இறுதிநாள் வரையிலும் வாசித்தார். அவரது வழக்கறிஞர் பிரேம் நாத் மேத்தா இறுதியாக அவரை சந்திக்க சென்றபோது தான் வாசிக்க கேட்டிருந்த the revolutionary Lenin என்கிற நூலை கொண்டு வந்துள்ளீர்களா என்று கேட்கின்றார். கையோடு கொண்டு சென்ற அந்த நூலை மேத்தா அவரிடம் கொடுத்த உடனேயே அதை வாசிக்க தொடங்கி விட்டார் பகத்சிங், இந்த உலகத்தில் தான் வாழப்போவது இன்னும் சில மணி நேரமே அல்லவா?
இந்த மாபெரும் புரட்சியாளர்களை அவர்களது அரசியல் நடவடிக்கைகளின் பொருட்டு கொன்றும் தூக்கில் இட்டும் உயிரைப்போக்காமல் வாழ்வதற்கு அனுமதிக்கப்பட்டு இருந்திருந்தால், தம்மை தாமே செதுக்கிக்கொண்டு வாழ்ந்த இந்த சுயம்புகளும் அறிவாளிகளும் மைய அரசின் அதிகாரத்தில் தமக்கான இடத்தில் அமர்ந்து இருந்திருந்தால் இந்தியா என்ற நாடு இப்போது எப்படி இருந்திருக்கும் என்று ஒருவர் ஏக்கத்துடன் எண்ணிப்பார்ப்பதை தவிர்க்க இயலாது. பகத்சிங் மறைந்து 90 வருடங்கள் ஆன இன்றைய நிலையில் முன் எப்போதையும் விட இந்த கேள்வி வலிமையாகவே எழுகின்றது.
....
The execution of Bhagat Singh - Legal heresies of the Raj என்ற நூலில் ஆசிரியர்
Satvinder Singh Juss தன் முன்னுரையில் குறிப்பிடுவது.

தமிழில்: மு இக்பால் அகமது

சனி, மார்ச் 05, 2022

உலகின் தேவை உயிர்நேயம்


"கவிதை ஒரு தொழில்" - பாப்லோ நெரூடா.

...

1934இல் சிலியின் தூதுவராக ஸ்பெயின் நாட்டுக்கு நியமிக்கப்பட்டார் நெரூடா. ஸ்பெயினின் ஆட்சியை கைப்பற்றிய தளபதி ஃப்ராங்கோவுக்கு எதிராக புரட்சிகர சக்திகள் கிளர்ந்து எழுகின்றன. உள்நாட்டுப் போர் வெடிக்க, பல்லாயிரம் மக்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்றார்கள். அழகு, பிரபஞ்சம் பற்றி கவிதைகள் எழுதிக்கொண்டு இருந்த நெரூடா அப்போது மக்களை நோக்கிப் பாடத் தொடங்குகின்றான். தூதுவராக இருந்த ஒருவர் உள்ளூர் மக்களுடன் சேர்ந்து உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட விந்தை நிகழ்ந்தது. பிறகு என்ன? அவர் தூதுவர் பதவியை இழக்கின்றார்.

கியூபாவின் அமைச்சர்களில் ஒருவர், மத்திய வங்கியின் தலைவர் ஆகிய உயர்ந்த பொறுப்புகளில் இருந்த சே, அனைத்தையும் துறந்து பொலிவிய நாட்டின் விடுதலைக்காக போராடப் போவதாகவும் தன்னை தேட வேண்டாம் என்றும் தன் தோழன் காஸ்ட்ரோவுக்கு ஒரு துண்டுத்தாளில் எழுதி வைத்துவிட்டு செல்கின்றான். பொலிவிய மக்களின் விடுதலையின் பொருட்டு பொலிவியக் காடு ஒன்றில் உயிரை தத்தம் செயகின்றான். அவன் பிறந்ததோ அர்ஜன்டினாவில். அர்ஜென்டினா கியூபா பொலிவியா!

இருவருக்கும் ஆன பொதுவான உணர்வாக நான் புரிந்துகொண்டது இதுதான் - மானிட சமூகத்தின் விடுதலை உணர்வும் சக மனிதனின் மீதான பேரன்பும். இந்த உணர்வு சர்வதேச எல்லைகளை உடைக்கின்றது, இனம், மதம், மொழி, நாடு ஆகிய கற்பிதங்களை கலைத்து அழிக்கின்றது. 

உலகின் தேவை உயிர்நேயம் என்று முரசு கொட்டும் இ. தனுஷ்கோடியின் கவிதைகளில் ஒளிர்வதும் இந்த உயரிய கோட்பாடுகளே.

...

இக்கவிதைகள் உண்மையை உரக்கப் பேசுகின்றன, அன்பையும் மனித நேயத்தையும் அடுத்தவர் பசிப்பிணி போக்கும் அணையா பெரும்அடுப்பைப் பற்றியும் பேசுகின்றன. ஆரியர் படையெடுப்பையும் சூழ்ச்சியையும் தயக்கமின்றி பேசுகின்றன. காதலைப் பற்றிப் பேசும்போது சாதி மறுப்பை பேசுகின்றன. மொழி, தமிழ், தமிழர்களின் உயரிய நாகரிகம், ஆரியத்தின் தலையீட்டால் நாம் இழந்தவை என்ன என்பதை சொல்லும்போது நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் சொல்கின்றன.

ஆரியம் என்னவெல்லாம் செய்யும்? ஆரியம் சாதி செய்யும், பிரிவினை செய்யும், மனிதர்களை பிரிக்கும், தீண்டாமையை போற்றும், மனிதர்களுக்கு அப்பாற்பட்ட சமஸ்கிருதத்தை உயர்த்தும், பிற மொழிகளை, குறிப்பாக திராவிட மொழிகளை அழிக்கும், எல்லாவற்றுக்கும் மேலாக ஆண்டான் அடிமை சமூகத்தை நிலப்பிரபுத்துவ அமைப்பை பாதுகாக்க எல்லாவிதமான முயற்சிகளையும் செய்யும். கொல்லாமையை போதித்துக்கொண்டே வீதியெங்கும் ரத்த ஆற்றை ஓடவிடும். இவற்றை அப்பட்டமாக காட்டும் கவிதைகள் இவை.

பசியால் வாடும் வறியோரின் துன்பம் நீக்கிட சாதி மத பொருளாதார பேதமற்ற எல்லோருக்கும் ஓருணவு, எல்லோரும் ஓர் நிறை என்ற வள்ளலாரின் பாதையை உண்மையில் பொதுவுடைமை தத்துவத்தின் ஆன்மிக வடிவமாக பார்க்கின்றேன். சக மனிதனை தொடவும் நெருங்கவும் அனுமதிக்காத ஆரியத்துக்கு நேர் எதிரானஅவரது தத்துவமும் பொதுவுடைமை தத்துவமும் சந்திக்கும் புள்ளி இதுதான். 

ஒரு காலத்தில் யாகம் என்ற பெயரால் விலங்குகளை பலியிட்டு தீயில் வாட்டி தின்று கொழுத்த ஆரியம்தான் இப்போது புலால் உண்ணுவதை மறுக்கின்றது, ஆனால் கொல்லாமையை போதிக்கும், அணையா பெரும் அடுப்பை ஏற்றி பசிப்பிணி போக்கும் வள்ளலாரை ஏற்க மறுக்கின்றது எனில், அதில் பட்டவர்த்தனமாக தெரிவது சாதி என்னும் பிரிவினைதானே? வள்ளலாரின்அடுப்பில் ஜொலிப்பது கருணையும் பேரன்பும், ஆரியம் தன் கைகளில் ஏந்தியிருப்பது அடுத்தவர் உயிர் பறிக்கும் கொடுங்கொள்ளி.

ஆரியத்தால் முயன்றும் வீழாத தமிழைக்காக்க தமிழ்மக்கள் திரள வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை கவிஞர் எழுப்புகின்றார். தமிழ் மண்ணில் சிதம்பரம் கோவிலில் தமிழில் தேவாரமும் திருவாசகமும் பாட முடியவில்லை, அறுநூறு தீட்சிதர்கள் ஆறு கோடி தமிழ் மக்களுக்கு சவால் விடுக்கின்றார்கள்! உண்மைதானே?

உழைப்பையும் விவசாயத்தையும் மதிக்காத ஆரியம்தான் விவசாய மறுசீரமைப்பு என்ற பெயரில் விவசாயத்தையும் லாபம் கொழிக்கும் தொழிலாக மாற்றி ஆரியப்பெருமுதலாளிகளின் கஜானாவை நிரப்ப சட்டங்களை இயற்றுகின்றது. டெல்லியின் எல்லைகளில் தீயெனப் பற்றிய விவசாயிகள் போரை பெரும் புரட்சி எனப்பாடும் கவிஞர், இறைவன்தான் விவசாயி என்று சங்கநாதம் செய்வதை மறுப்பதற்கில்லை. 

மரங்களை அழிப்பதும் மலைகளை மாய்ப்பதும் வளர்ச்சி என்ற பெயரால் வனம் அழிக்கும் சட்டங்களை இயற்றுவதும் யாருடைய நலன் பொருட்டு? அம்பானி, மிட்டல், அதானி போன்ற ஆரிய கும்பல்களின் நலன் பொருட்டே என்பது உண்மைதானே? அழகும் அமைதியும் உயர் நாகரிகமும் பொருந்திய இலட்சத்தீவுகளை அழிப்பது குஜராத்தை சேர்ந்த மேல்சாதி பெருமுதலாளிகளின் நலன் பொருட்டே என்பதும் உண்மைதானே? பூமிதான் சாமி என்று கவிஞர் சொல்வது முற்றிலும் உண்மை. ஆரியமோ கடவுளை காவு வாங்குகின்றது.

நம் வீட்டு அனிதாக்கள் உள்நாட்டில் மருத்துவம் படிக்கும் அனைத்து வாய்ப்புகளையும் மூடுகின்ற, அரசுப்பள்ளிகளை மூடுகின்ற, அரசு நிறுவனங்களை, தொழிற்சாலைகளை மூடுகின்ற, நிரந்தர தொழிலாளர்கள் என்ற கோடிக்கால் பூதத்தின் விரல்களை முறிக்கின்ற ஒன்றிய அரசுதான் கடல் கடந்து மருத்துவம் படிக்க செல்வோரைப் பார்த்து ஏகடியம் செய்கின்றது, ஒற்றை மனிதன் ஒருவன் பயணிக்க எட்டாயிரம் கோடி ரூபாய் செலவில் விமானம் வாங்கும் அரசுதான் பூஜ்ஜியதுக்கும் குறைவான பனிவெளியில் நடந்து செல்லுங்கள் என்று உக்ரெய்னில் உயிருக்கு போராடும் இந்திய மாணவர்களுக்கு கட்டளை இடுகின்றது.

...

உழைத்துக்கிடைக்கும் ஓரிரண்டு ரூபாய்களும் மதுக்கடை என்னும் மலவாய் வழியே அரசு கஜானாவில் போய் விழும் கொடுமையை, குடிப்பழக்கத்தால் தந்தையை இழந்த பின் அரசுப்பள்ளியில் படித்து பின் அரசுப்பணியில் சேர்ந்தவரின் நியாயமான கோபத்தை தனுஷ்கோடி கவிதை ஆக்குகின்றார்.

கொரோனா பெருந்தொற்றின் பெயரால் மருந்து கம்பெனி மாஃபியா கூட்டம், அரசுகள் என்ற கூட்டணி அடிக்கும் கொள்ளையை கவலையுடன் பதிவு செய்கின்றார். 

மானுடம் பேணும் மான்பினில் வாழ்தல்

ஊனுடம்பெடுத்ததன் உரிமை பெற்றுணர்க என்று சொல்லும் கவிதையில் கொரோனாவுக்கு மட்டுமல்ல, சமூக ஏற்றத்தாழ்வு எனும் பெரும்பிணிக்கான அருமருந்தையும் கண்டறியும் திறன் உழைக்கும் வர்க்கத்துக்கே உண்டு உண்மையையும் சேர்த்தே சொல்வதை புரிந்துகொள்ள முடிகின்றது.

பெற்ற தாயே தாயில்லை,

பேணும் தாயும் பேரிறைவி என்று சொல்லும்போது பால்பேதத்தை உடைக்கின்றார். 

ஏற்றம் பெண்ணால் ஊற்றெடுக்கும், பெண்ணே வாழ்வின் ஆதாரம் என்றும் பெண்ணே தலைவியாவாள் என்றும் வலியுறுத்தும் கவிதையில், ஆதிப்பொதுவுடைமை சமூகத்தில் குலத்தின் தலைமை பெண்ணிடம் இருந்தது என்ற மானுடவியல் விஞ்ஞானம் மிளிர்கின்றது.

வெள்ளிகளோடு விழித்ததுண்டா என்று நம்மைப்பார்த்து கேள்வி கேட்கும் கவிஞர், ஆரியம் வகுத்த சோதிட மூடத்தனத்தை இகழ்கின்றார்.

இயற்கையை மதித்து செயற்கையை துரத்து என்று சொல்லும் கவிதை. இயற்கை முறை விவசாயம், வாழ்வு ஆகியவற்றை வலியுறுத்தி பேசுவதை, இயற்கைக்கும் விஞ்ஞான வளர்ச்சி, அதன் பயன்பாடு ஆகியவற்றுக்கும் இடையே ஒரு சமநிலையும் முரண்பாடு அற்ற வளர்ச்சியும் வேண்டும் என்று சொல்வதாகவே புரிந்துகொள்கின்றேன்.

...

வாழ்வே கவிதை, கவிதையாய் வாழ் என்று புதுமை பேசி அழைக்கின்றார். 

வேறு எந்த மொழிக்கும் இல்லா பெருஞ்சிறப்பு மூத்த மொழியாம் தமிழுக்கு உண்டு, இயல் இசை நாடகம் என மொழியே மூன்று அடிப்படை வடிவங்களாய் இருப்பது வேறென்ன? 

காடெல்லாம் பூ மணம் என்பது போல இந்த நூல் எல்லாம் தமிழ் மணம்! சொல்நயமும் சந்தநயமும் ஓசை நயமும் அளவோடு கச்சிதமாக பொருந்த, வாசிப்போருக்கு தடையற்ற வாசிப்பு இன்பத்தை தரும் இந்த மரபுக்கவிதைகள் கவிஞரின் ஆழ்ந்த தமிழ்ப்புலமையையும் வாழ்வியல் அனுபவத்தையும் தெள்ளென பறை சாற்றுகின்றன. எளிய சொற்களால் கட்டப்பட்ட, எளிதில் பிரித்து உணர்ந்து கொள்ளத்தக்க சொற்கோவை கொண்ட கவிதைகள் என்பதை நான் குறிப்பிட விரும்புகின்றேன்.

"எது நல்ல கவிதை என்பதை எவரும் தெளிவாக விளக்கிவிடவில்லை, அப்படி எளிதில் விளக்க முடியாதது கவிதை.... வெறும் உணர்ச்சிப்பெருக்கு மட்டுமே கவிதை ஆகி விடாது. படிப்பவரின் அறிவையும் தர்க்க புத்தியையும் கூடத் தொட வேண்டும். தான் வாழும் காலத்தைப்பற்றியும் சமூகத்தைப் பற்றியும் நாட்டைப் பற்றியும் கவிஞன் கொள்கின்ற பார்வையை கவிதை எடுத்துக்காட்டுகின்றது. சமூகத்தில் நிகழும் முக்கிய நிகழ்ச்சிகளிடையே மனச்சாட்சியின் குரலாக ஒரு கவிஞனின் வார்த்தைகளே ஒலிக்க முடியும்" என்கிறார் வல்லிக்கண்ணன் (கவி, காலாண்டிதழ், நவம்பர் 14, 1991). 

இந்த அளவுகோலை ஒப்புக்கொண்டால் தனுஷ்கோடி அவர்களின் இந்தக் கவிதைகள் வெற்றி பெறுகின்றன என்று உறுதியாக சொல்ல முடியும்.

புத்தகம் இல்லா வீடு

புதுமைகள் காண்பதில்லை

புத்தகம் துணையாய் கொள்க

புரிந்திடும் அகிலம் யாவும்

புத்தகம் ஒன்றே போதிமரம்...

இதுவும் இக்கவிதைகளில் ஒன்றே.

"பேசு,

இருக்கும் நேரம் குறைவு

குறைவுதான் எனினும் போதுமானது

உடல் அழிந்துபோகுமுன்

நாக்கு மரத்துப்போகுமுன்

பேசு

உண்மை இப்போதும் உயிருடன்தான் உள்ளது

சொல்

நீ சொல்லவேண்டியதைச் சொல்" 

தெளிவாக சொல்லிவிட்டான் பெய்ஸ் அகமது பெய்ஸ்.

உலகின் தேவை உயிர் நேயம் என்ற இக்கவிதைத் தொகுப்பு உண்மையை சொல்கின்றது என்பதால் இது ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய போதிமரம்.

தனுஷ்கோடி அவர்களுக்கு என் அன்பும் வாழ்த்துக்களும்!

மு. இக்பால் அகமது,

5.3.2022

...

(உலகின் தேவை உயிர்நேயம், இ தனுஷ்கோடி அவர்களின் கவிதைத்தொகுப்பு நூலுக்கு எழுதிய அணிந்துரை)








செவ்வாய், பிப்ரவரி 22, 2022

வள்ளியப்பன் மெஸ்ஸும் மார்கரீட்டா பிஸ்ஸாவும் 











எனது கட்டுரைகள் தொகுப்பு நூல் வெளிவந்துள்ளது. 

வெளியீடு: நோஷன் பிரஸ்.

செவ்வாய், பிப்ரவரி 01, 2022

காந்தி படுகொலை: திகாம்பர் பாட்கேயின் ஒப்புதல் வாக்குமூலம்

ஜனவரி 30, 1948 அன்று இந்துத்துவா தீவிரவாதியான நாதுராம் விநாயக் கோட்ஸே டெல்லி பிர்லா மாளிகையில் தன் கைத்துப்பாக்கியால் காந்தியை சுட்டுக்கொன்றான். அவனுடன் குற்றம்சாட்டப்பட்டவர்கள் கோபால் விநாயக் கோட்ஸே, நாராயண் தத்தாத்ரேய ஆப்தே, சங்கர் கிஷ்டய்யா, தத்தாத்ரேய சதாசிவ பராச்சுரே, விஷ்ணு ராமகிருஷ்ண கார்கரே, மதன்லால் காஷ்மீரிலால் பாவா, திகாம்பர் ராமச்சந்திர பட்கே, விநாயக் தாமோதர் சாவர்க்கர் ஆகியோர். கங்காதர் சகாராம் தண்டவதே, கங்காதர் ஜாதவ், சூர்யதேவ் ஷர்மா ஆகிய மூவர் தலைமறைவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. 

கோட்ஸேயின் குடும்பம், கோபால் கோட்ஸே உட்பட ஒத்துக்கொண்ட உண்மை என்னவெனில், நாதுராம் கோட்ஸே எப்போதும் ஆர் எஸ் எஸ்சில் இருந்து விலகியது இல்லை என்பதே. பிரண்ட்லைன் 1994 இதழில் கோபால் கோட்ஸே பதிவு செய்தது: ஆர் எஸ் எஸ்சில் இருந்து விலகியதாக நாதுராம் கோட்ஸே நீதிமன்றத்தில் சொன்னான். ஏனெனில் காந்தி கொலைக்கு பின் கோல்வாக்கருக்கும் ஆர் எஸ் எஸ்ஸுக்கும் பெரிய அளவில் நெருக்கடி ஏற்பட்டது. ஆனால் அவன் என்றும் ஆர் எஸ் எஸ்சில் இருந்து விலகியது இல்லை. நாங்கள் எல்லா சகோதரர்களும் ஆர் எஸ் எஸ்சில் இருந்தோம். எங்கள் வீட்டில் நாங்கள் வளர்ந்தோம் என்பதை விட ஆர் எஸ் எஸ்சில் நாங்கள் வளர்ந்தோம் என்பதே உண்மை. அதுவே எங்கள் குடும்பம்". தன் சொந்த உறுப்பினர்களை கைகழுவிய ஆர் எஸ் எஸ்ஸை கோபால் கோட்சே கண்டித்துள்ளார். (ஆதாரம்: தி கேரவான், ஜனவரி 2020, திரேந்தர கே ஜா கட்டுரை). ஹிந்து மகாசபையின் மஹாராஷ்டிரா செயற்குழு, குற்றவாளிகளுக்கு உதவி செய்வதற்காக சட்ட உதவிக்குழு அமைத்து வழக்கு நிதிதிரட்டும் குழுவையும் அமைத்தது குறிப்பிடத்தக்கது.

காந்தி படுகொலை குறித்து விசாரணை செய்ய , கான்பூர் மாவட்ட மாஜிஸ்திரேட் ஆத்மசரண் ஐ.சி.எஸ். நியமிக்கப் பட்டார். டெல்லி செங்கோட்டையில் முதல் விசாரணை 27.5.1948 அன்று நடத்தப்பட்டது. தீர்ப்பு 1949 பிப்ரவரி 10 அன்று வழங்கப்பட்டது. குற்றவாளிகளில் திகாம்பர் பட்கே அப்ரூவர் ஆகி அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் முக்கிய பகுதி இது.

..... ........

இனி பாட்கேயின் வாக்குமூலம்:

"பூனாவில் சாஸ்திர பந்தார் என்ற கடையை நடத்தி வந்தேன். ஆயுதங்கள், வெடி பொருட்கள் விற்பனை செய்தேன். 1940இல் ஹிந்து மகாசபை தலைமை நிர்வாகிகளுடன் எனக்கு தொடர்பு ஏற்பட்டது. அந்த அமைப்பின் கூட்டங்களில் பங்கு பெற்று வந்தேன். அங்கே புத்தகங்கள், ஆயுதங்களை விற்பேன். சாவர்க்கரை 1944-45இல் சந்தித்தேன். கோட்ஸேவையும் ஆப்தேவையும் 1940-41 முதல் அறிவேன். கடந்த இரண்டு, மூன்று வருடங்களாக கார்க்கரேவை அறிவேன்.

ஆப்தேவுக்கு பல முறை நான் ஆயுதங்கள் சப்ளை செய்துள்ளேன். 1947 ஜூலை ஆக்ஸ்ட்டில் ஆயுதங்கள், வெடிபொருட்கள் வாங்க என்னை முதல்முறையாக ஆப்தே சந்தித்தான். அப்போது கார்க்கரேயும் உடன் வந்தான். சில முக்கியமான நபர்களுக்கு ஆயுதங்கள், வெடிபொருட்கள் தேவைப்படுகிறது என்று சொன்னான். குருதயாள் சிங்கிடம் இருந்து  ஸ்டென் துப்பாக்கி ஒன்று வாங்கி ஆப்தே, கார்க்கரேஇருவரிடமும் கொடுத்தேன். .... 1948 ஜனவரி 9 மாலை 6.30 மணிக்கு ஆப்தே என் கடைக்கு வந்தான். சரக்கை (ஆயுதங்கள், வெடிபொருட்களுக்கான சங்கேதச் சொல்) தயாராக வைத்து இருக்குமாறும், விரைவில் கார்க்கரே தன் சகாக்களுடன் வந்து சரக்கை சோதித்து பார்ப்பான் என்றும் சொன்னான். 8.30 மணி அளவில் கார்க்கரேயும் மூவரும் வந்தார்கள். அவர்கள் மதன்லால், ஓம் பிரகாஷ், சோப்ரா ஆகியோர். 

துணியால் சுற்றப்பட்ட வெடிகுண்டுகள் (கன் காட்டன்), கையெறி குண்டுகள், துப்பாக்கி ரவைகள், கைத்துப்பாக்கிகள், பியூஸ் போன்றவை அவை. அவற்றை சோதனை செய்தபின் சென்று விட்டார்கள். 10ஆம் தேதி ஹிந்து ராஷ்டிர தல் அலுவலகத்துக்கு ஆப்தே என்னை அழைத்து சென்றான். அலுவலகத்தில் நாதுராம் கோட்ஸே இருந்தான். இரண்டு கன் காட்டன், இரண்டு சுழல் துப்பாக்கிகள், ஐந்து கையெறி குண்டுகளை கொடுக்குமாறு ஆப்தே கூறினான். பாம்பேயில் இந்த சரக்குகளை தருவது என முடிவு செய்யப்பட்டது.

ஜனவரி 14 அன்று தாதரில் இருந்த ஹிந்து மகாசபை அலுவலகத்துக்கு என் பணியாளர் சங்கருடன் சென்றேன். அரை மணி நேரம் காத்திருந்த பின் மாடியில் இருந்து இறங்கும்போது ஆப்தே அங்கு வந்தான். "நல்லது, சரக்குகளை பத்திரமாக வைக்க இடம் வேண்டும், என்னுடன் வா" என்று என்று கூறியபடியே இறங்கும்போது மேலே ஏறி வந்து கொண்டு இருந்த கோட்ஸே மேல் மோதினோம்.

அனைவரும் வெளியே வந்து சிவாஜி பார்க்கில் இருந்த சாவர்க்கரின் வீட்டுக்கு சென்றோம். சரக்குகள் இருந்த பையை எடுத்துக்கொண்டு ஆப்தே உள்ளே சென்றான், என்னை வெளியே காத்திருக்குமாறு சொன்னான். கோட்ஸேயும் உள்ளே சென்றான். பத்து நிமிடங்களுக்கு பின் வெளியே வந்தார்கள். நாங்கள் மூவரும் மீண்டும் ஹிந்து மகாசபை அலுவலகம் சென்றோம். சங்கரையும் சேர்த்துக்கொண்டோம். வாடகை காரில் புலேஸ்வரில் இருந்த தீக்சித் மஹாராஜ் வீட்டுக்கு சென்றோம். அவர் தூங்கிக்கொண்டு இருந்ததால் அவரது வேலையாள் இடம் சரக்கை கொடுத்து பத்திரமாக வைத்துகொள்ள வேண்டும் என்றும்  மறுநாள் காலையில் நாங்கள் அதை வாங்கிக் கொள்வதாகவும் சொல்லிவிட்டு திரும்பினோம்.

ஜனவரி 15 அன்று சிவாஜி அச்சகத்துக்கு கோட்ஸே, ஆப்தே, நான், சங்கர் நால்வரும் சென்றோம். வெளியே கார்கரேயை சந்தித்தோம். சங்கரை வெளியே நிறுத்திவிட்டு நால்வரும் உள்ளே சென்றோம். உரிமையாளர் ஜோஷியை சந்திப்பது திட்டம். வெளி அறையில் என்னை உட்கார சொல்லிவிட்டு கோட்ஸே, கார்க்கரே, ஆப்தே மூவரும் ஜோஷியுடன் உள்ளே சென்றார்கள். ஒரு மணி நேரம் கழித்து வெளியே வந்தார்கள். விடைபெற்று மீண்டும் ஹிந்து மகாசபை அலுவலகம் திரும்பினோம். மீண்டும் தீக்சித் மஹாராஜ் வீட்டுக்கு சென்று சரக்குகளை திரும்பி வாங்கினோம். சரக்குகளை ஆப்தேவுக்கு காட்டியபின் பை கார்கரேயிடம் ஒப்படைக்கப்பட்டது. ப்ராண்டியர் அல்லது பஞ்சாப் மெயில் ரயிலை பிடித்து மதன்லாலும் தானும் டெல்லி செல்வதாக ஆப்தே என்னிடம் சொன்னான். 

கார்க்கரேயும் மதன்லாலும் புறப்பட்டு சென்றபின் நாங்கள் மஹாராஜுடன் பேசிக்கொண்டு இருந்தோம். முக்கியமான ஒரு காரியத்தை நிறைவேற்ற டெல்லி செல்ல இருப்பதாகவும் ஓரிரண்டு சுழல் துப்பாக்கிகளை தருமாறும் மஹாராஜிடம் ஆப்தே வேண்டினான். ஒரு துப்பாக்கி கிடைத்தது. வெளியே வந்தோம். தன்னுடன் டெல்லிக்கு வர முடியுமா என்று ஆப்தே என்னிடம் கேட்டான். என்ன காரியம் என்று நான் கேட்டேன். காந்திஜி, பண்டிட் ஜவஹர்லால் நேரு, ஹசன் சுஹ்ரவர்த்தி ஆகியோரை தீர்த்துக்கட்ட சாவர்க்கர் முடிவு செய்து இருப்பதாகவும் இந்த வேலையை முடிக்கும் பொறுப்பை அவர் ஆப்தே, கோட்ஸே இருவருக்கும் கொடுத்து இருப்பதாகவும் சொன்னான். புனாவில் எனக்கு சில வேலைகள் உள்ளதால் புனா சென்று அங்கிருந்து நான் டெல்லிக்கு வருவேன் என்று சொன்னேன். தன் சகோதரர் கோபால் ஒரு துப்பாக்கி தருவதாக சொல்லி இருப்பதால் தானும் புனாவுக்கு போக உள்ளதாக கோட்ஸே கூறினான். 

ஜனவரி 16 அன்று புனாவில் சிறிய கைத்துப்பாக்கி ஒன்றை என்னிடம் தந்து அதற்குப் பதிலாக பெரிய சுழல் துப்பாக்கி ஒன்றை தரும்படி கேட்டான். நான்கு ரவைகள் அடங்கிய சுழல் துப்பாக்கி ஒன்றை கோட்ஸேவிடம் கொடுத்தேன்.

ஜனவரி 17 அன்று மாலை ஹிந்து மகாசபை அலுவலகத்தின் முன் மதன்லாலை சந்தித்தேன். ரயிலை தவற விட்டுவிட்டதால் திட்டமிட்டபடி டெல்லிக்கு செல்ல முடியவில்லை என்றான். அவனும் மதன்லாலும் இரவு ரயிலில் டெல்லி செல்வதாக சொன்னான்.

17ஆம் தேதி அதிகாலையில் விக்ட்டோரியா ரயில் நிலையத்தில் ஆப்தே, நாதுராம் கோட்ஸே இருவரையும் சந்தித்தேன். டெல்லி செல்லும் முன் கொஞ்சம் பணம் சேகரிக்கும் பொருட்டு, பாம்பே டையிங் தொழிற்சாலை முதலாளி சந்த்ரதாஸ் மேக்ஜி மதுரதாஸ் என்பவரை சந்தித்தோம். அங்கிருந்து புறப்பட்டு ஹிந்து மகா சபை அலுவலகம் சென்றோம். டெல்லிக்கு புறப்படும் முன் சாவர்க்கரை சந்தித்து அவரது இறுதி ஆசிகளை பெற வேண்டும் என கோட்ஸே கூறினான். சாவர்க்கர் சதனுக்கு சென்றோம். தரைத்தளத்தில் என்னை காத்திருக்க வைத்துவிட்டு இருவரும் மாடிக்கு சென்றனர். சுமார் பத்து நிமிடங்களுக்கு பிறகு சாவர்க்கருடன் வெளியே வந்தனர்." "வெற்றியுடன் திரும்ப வருக" என்று கோட்ஸேயை சாவர்க்கர் ஆசிர்வதித்தார்.

"காந்தியின் நூறு வருடங்கள் முடிந்து விட்டது என்பதை தாத்யராவ் (சாவர்க்கர்) உணர்ந்து விட்டார். நம் திட்டம் வெற்றிகரமாக முடியும் என்பதில் ஐயமில்லை" என்று ஆப்தே கூறினான்.

இதன் பின் நாங்கள் மீண்டும் தீக்சித் மஹாராஜை சந்தித்தோம். சிறிய ரக கைத்துப்பாக்கி ஒன்றை அவர் காட்டினார், ஆனால் பணம் கொடுத்துவிட்டு அதை வாங்கிக்கொள்ளுமாறு அவர் பிடிவாதமாக இருந்ததால் நாங்கள் வெறும் கையுடன் திரும்பினோம்.

18ஆம் தேதி இரவு பஞ்சாப் மெயிலில் மறுநாள் டெல்லி வந்து சேர்ந்தோம். 19ஆம் தேதி காலை டெல்லி ஹிந்து மகாசபை அலுவலகத்துக்கு வந்தோம். அங்கே மதன்லால், கோபால் கோட்ஸே, ஆப்தே, காக்ர்கரே, நாதுராம் கோட்ஸே எல்லோரும் இருந்தோம். 

20ஆம் தேதி காலை ஆப்தே, நான், சங்கர் மூவரும் பிர்லா மாளிகைக்கு சென்றோம். காவலர் எங்களை நிறுத்தினார். காந்தியின் செயலாளரை சந்திக்க வந்துள்ளோம் என்று ஆப்தே கூறினான். ஒரு தாளில் எங்கள் பெயர், வந்த நோக்கம் ஆகியவற்றை எழுதி தருமாறு காவலர் கூறினார். அதன் பின் பிர்லா மாளிகையின் உள்ளே சென்றோம். வீட்டின் பின்புறம் இருந்த புல்வெளிக்கு சென்றோம். வழக்கமாக பிரார்த்தனை நடக்கும் இடத்திற்கு சென்றோம். காந்தியும் சுஹ்ரவர்த்தியும் உட்காரும் இடம் இதுதான் என்று ஒரு இடத்தை காட்டினான் ஆப்தே. அங்கே பார்வையில் பட்ட சிறிய ஜன்னல் வழியே சுட்டால் காந்தியையும் சுஹ்ரவர்த்தியையும் ஒரே தாக்குதலில் கொல்ல முடியும், குறைந்த பட்சம் ஒருவராவது சாக வேண்டும் என்று ஆப்தே கூறினான்.

மேடையின் மறுபக்கத்திற்கு சென்று இரண்டு இடங்களை சுட்டிக்காட்டி, இந்த இரண்டு இடங்களிலும் கன் காட்டன்களை வெடிப்போம், அப்போது ஏற்படும் குழப்பத்தை பயன்படுத்தி காந்தியை நாம் கொல்வோம் என்றான் ஆப்தே. பின்னர் சிறிய ஜன்னல் இருந்த அறையை காட்டி, ஒரு புகைப்பட செய்தியாளர் போல நடித்து நான் அந்த அறைக்குள் சென்று, துப்பாக்கியால் சுட வேண்டும், கூடவே கையெறி குண்டு ஒன்றை வீச வேண்டும் என்று அறிவுறுத்தினான். அறைக்குள் நாங்கள் செல்லவில்லை.

11.30 மணிக்கு ஹிந்து மகாசபை அலுவலகத்திற்கு திரும்பினோம். மகாசபையின் பின்னால் இருந்த காட்டில் எங்கள் ஆயுதங்களை சோதித்துப் பார்த்தோம். கோபால் கொண்டு வந்த துப்பாக்கி கோளாறு செய்ததால் சங்கரின் துப்பாக்கியில் நான்கு தோட்டாக்கள்கள் ஏற்றப்பட்டு பத்து கஜ தூரத்தில் இருந்த ஒரு மரத்தின் மீது சுட்டுப்பரர்க்க, தோட்டா மரத்தின் அருகே கூட செல்லவில்லை. எனவே தன் துப்பாக்கியை பயன்படுத்த கோட்ஸே முடிவு செய்தான். மூன்று வனக்காவலர்கள் வந்து எங்களை விசாரித்தார்கள். அவர்கள் அருகில் வரும்முன் ஆயுதங்கள், வெடிபொருட்களை போர்வைக்கு அடியில் மறைத்து வைத்தோம். கோபால் அவர்களுடன் பஞ்சாபி மொழியில் உரையாடி சமாளித்து அனுப்பினான்.

இதற்கு மேல் அங்கே இருப்பது ஆபத்து என்பதால், மகாசபை அலுவலகம் திரும்பினோம். அங்கிருந்து மெரினா ஹோட்டலுக்கு சென்றோம். ஹோட்டலின் குளியலறையில் எங்களது துப்பாக்கி, வெடி குண்டுகள் அனைத்தையும் தயார் செய்தோம். "பாட்கே, இதுதான் நம் கடைசி வாய்ப்பு இன்று எல்லாவற்றையும் முடித்து விட வேண்டும். அனைத்தும் திட்டமிட்டபடி உள்ளதை உறுதி செய்" என்று கோட்ஸே கூறினான்.

இறுதியாக ஆப்தே கட்டளைகளை பிறப்பித்தான்: "மதன்லால், நீ பிரார்த்தனை மேடையை ஒட்டியுள்ள பின் சுவரில் கன் காட்டன் குண்டை வெடிக்க வேண்டும். இந்த குண்டு வெடித்த உடன், பணியாளர்கள் குடியிருப்பின் பின் பக்க அறைக்குள் புகைப்படக்காரர் ஆக நடிக்கும் பாட்கே நுழைந்து பின் பக்கம் இருந்து காந்தியை சுட வேண்டும், கூடவே சிறிய ஜன்னல் வழியே ஒரு குண்டையும் காந்தி மீது வீச வேண்டும். மதன்லாலுக்கு நான் சமிக்ஞை செய்வேன், எனக்கு நாதுராம் சமிக்ஞை செய்வான். மற்றவர்கள் கூட்டத்துக்குள் மக்களுடன் கலந்து விடுவார்கள்."

எங்கள் அனைவருக்கும் தனித்தனி பெயர்கள் கொடுக்கப்பட்டன. நாங்கள் எங்கள் தோற்றங்களையும் உடைகளையும் மாற்றிக்கொண்டோம். 

என்னுடைய சுழல் துப்பாக்கி, கையெறி குண்டு ஆகியவற்றை ஒரு கைப்பையில் வைத்தேன். ஹோட்டலில் இருந்து ஹிந்துமகாசபை சென்று அங்கிருந்து பிர்லா மாளிகை சென்றோம். மாளிகையின் பின்புறம் எங்கள் காரை நிறுத்தி இறங்கினோம். சற்று தூரத்தில் மதன்லால் வந்தான். நீ தயாரா என்று ஆப்தே மதன்லாலிடம் கேட்க, 'நான் தயார். கன் காட்டன் குண்டை சுவரின் மீது வைத்துள்ளேன், திரியை பற்ற வைக்க வேண்டியதுதான் பாக்கி' என்கிறான் மதன்லால்.

அப்போது அங்கே வந்த கார்க்கரே, "நீங்கள் தாமதிக்கின்றீர்கள். காந்தி ஏற்கனவே தன் இருக்கையில் அமர்ந்து விட்டார்" என்று ஆப்தேவிடம் சொல்கின்றான்.(காந்தி தன் பிரார்த்தனையில் குர் ஆன் வசனங்களை சொல்ல தொடங்கும்போது குண்டை வெடித்தால்தான் குர் ஆன் வாசிப்புக்கு எதிரான ஒரு செயலாக குண்டு வெடிப்பை மாற்ற முடியம், நீங்கள் ஏற்கனவே தாமதிக்கின்றீர்கள்" என்று கார்க்கரே திட்டமிட்டது இங்கே தெளிவாகின்றது). 

அறையின் முன்னால் இரண்டு மூன்று பேர் உட்கார்ந்து இருப்பதை நான் பார்த்தேன். எனில் சுட்ட பின் அந்த அறையில் இருந்து தப்ப முடியாது என்பதை உணர்ந்த உடன் எனக்குள் பயம் வந்துவிட்டது. "அட, பயப்படாதே. நாம் எல்லோரும் தப்பிக்க வழி செய்துள்ளோம்"என்றான் கோட்சே. நாதுராம், ஆப்தே, கார்க்கரே மூவரும் என்னை அறைக்குள் தள்ளி காரியத்தை முடிக்க தூண்டினார்கள். "இந்த அறையினுள் இருந்து சுடுவதை விட நான் நேருக்குநேராக சுடுவது சரியாக இருக்கும், அவர் கொல்லப்படுவது உறுதியாகும்" என்றேன். ஆப்தேயும் கோட்ஸேயும் சம்மதித்தனர். (அதாவது, காந்தியை சுட்ட கொலையாளியாக பாட்கே பிடிபடுவான், குண்டு வீசிய பின் மதன்லால் பிடிபடுவான் அல்லது தப்பிக்க கூடும், ஆக மூளைச்சலவை செய்யப்பட்ட அகதியும் (மதன்லால், தேசப்பிரிவினைக்குபின் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாபில் இருந்து அன்று இந்தியாவுக்குள் வந்த அகதி)  கொலைகாரனும் ஆன பாட்கேயும் முக்கிய சதிகாரர்களுக்காக பழியை தங்கள் தலை மீது சுமப்பார்கள், மற்றவர்கள் தப்பித்து விடுவார்கள்). சங்கரை அழைத்துக்கொண்டு காரின் அருகே சென்றேன். பிறர் பின்கட்டில் இருந்தார்கள். 

என்னுடையதும் சங்கருடையதும் ஆன துப்பாக்கிகளையம் கையெறி குண்டுகளையும் எடுத்துக்கொண்டு ஒரு துண்டில் சுற்றி கைப்பையில் வைத்து காரின் பின்னிருக்கையின் அடியில் வைத்தேன். நான் சைகை செய்யும்வரை ஒன்றும் செய்ய வேண்டாம் என்று சங்கரை எச்சரித்தேன். மீண்டும் இவர்களிடம் வந்தேன். என் சட்டையின் இருபக்கப்பைகளில் கை விட்டுக்கொண்டே வந்தேன், நான் துப்பாக்கியையும் குண்டையும் உள்ளே வைத்து இருப்பதாக அவர்கள் நம்புவதற்காக அவ்வாறு செய்தேன். நான் தயாராக இருப்பதாக ஆப்தேவிடமும் கோட்ஸேயிடமும் சொன்னேன். நீ தயாரா என்று மீண்டும் என்னை ஆப்தே கேட்டான். ஆம் என்று பதில் சொல்லிவிட்டு, சங்கரையும் அழைத்துக்கொண்டு பார்வையாளர்களுடன் முன் வரிசையில் அமர புறப்பட்டேன்.

ஆப்தே மதன்லாலின் முதுகில் கை வைத்து வா என்றான். சுவரில் குண்டு வைக்கப்பட்டு இருந்த இடத்தை நோக்கி மதன்லால் சென்றான். சங்கரும் நானும் பிரார்த்தனை மன்றத்துக்கு சென்றோம். கார்கரே.  எங்கள் பின்னால் இருந்தான். காந்தியின் முன்னால் பெண்களும் குழந்தைகளுமாக சுமார் முப்பது பேர் இருப்பதை கண்டேன். காந்தியின் வலதுபக்கம் பதினைந்து அடி தூரத்தில் நான் இருந்தேன். என் வலதுபக்கம் சற்று தொலைவில் சங்கரும் கார்க்கரேயும் இருந்தார்கள். சுமார் மூன்று நிமிடங்கள் ஆன பின் பலத்த வெடிகுண்டு சத்தம் கேட்டது. புகை கிளம்பியது. வெடித்த இடத்தை நோக்கி நான்கைந்து பேர் ஓடி வந்தனர். காந்திஜி கரங்களை கூப்பியவாறு கூட்டத்தை அமைதிப்படுத்தினார். சில நிமிடங்கள் கழித்து மதன்லால் பிடிப்பட்டதை பார்த்தேன். கூட்டமோ அமைதியாக உட்கார்ந்து இருந்தது. பிர்லா மாளிகையின் வெளியே இருந்த போலீஸ் முகாமுக்கு மதன்லால் கொண்டு செல்லப்பட்டதை பார்த்தேன். முகாமில் இருந்து நான்கைந்து பேர், அவர்கள் போலீசார் என்று நினைக்கிறேன், என்னை நோக்கி வந்தார்கள். மதன்லாலை அழைத்து வந்து கூட்டாளிகளை காட்டிக்கொடுக்குமாறு சொல்வார்கள் என்று பயந்தேன். முகத்தை மூடிக்கொண்டு திரும்பினேன். சிறிது நேரம் கழித்து நான் நிமிர்ந்து பார்க்கும்போது மக்கள் கலைந்து செல்வதை பார்த்தேன். சங்கரும் நானும் கூட்டத்தில் கலந்து வெளியேறினோம்.

நேராக ஹிந்துமகாசபைக்கு வந்தோம். கோட்ஸே, ஆப்தே, கோபால் எவரையும் நான் பிரார்த்தனை மண்டபத்தில் பார்க்கவில்லை. காட்டுக்குள் சென்று கையெறி குண்டுகளை வீசி விடுமாறு சங்கரிடம் சொன்னேன். என் உடைமைகளை அடுக்கி டெல்லியை விட்டு வெளியேற ஆயத்தமானேன். ஆப்தேயும் இரு கோட்ஸேக்களும் அப்போதுதான் மகாசபைக்குள் வந்தார்கள். 'நண்பா, என்ன நடந்தது?' என்று ஆப்தே என்னிடம் கேட்க நான் கோபத்தின் உச்சிக்கு சென்றேன். அவர்களின் திட்டம் எனக்கு புரிந்துவிட்டது, புகை கக்கும் துப்பாக்கியை ஏந்தியபடி நான் போலீசில் பிடிபட வேண்டும், அவர்கள் தப்பிக்க வேண்டும்! கட்டுப்பாட்டை இழந்தேன், இனிமேல் என் முகத்தில் விழிக்காதீர்கள், இங்கிருந்து உடனே போய் விடுங்கள் என்று கத்தினேன்.

சங்கரும் நானும் புது டில்லி ரயில்நிலையம் வந்தோம், போலீசார் சோதனை போட்டுகொண்டு இருந்தார்கள். எனவே பழைய டெல்லி ரயில் நிலையம் வந்து இரவு சுமார் 10.30 மணிக்கு பாம்பே செல்லும் ரயிலில் புறப்பட்டோம். 22ஆம் தேதி கல்யாணில் இறங்கி அங்கிருந்து புனாவுக்கு ரயிலில் வந்து சேர்ந்தோம்.

புனாவில் என் வீட்டில் 31 ஜனவரி 1948 அதிகாலை என்னை கைது செய்தார்கள்."

.... ......

கைது செய்யப்பட்ட பாட்கே, டெல்லி ஹிந்துமகாசபையின் பின்னால் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள், வெடிபொருட்களையும் மதன்லாலிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கையெறி குண்டையும் அடையாளம் கண்டு வாக்குமூலம் அளித்துள்ளான்.

ஜனவரி 20 முயற்சி தோல்வி கண்ட பின் 30ஆம் நாள் கோட்ஸே தன் இலட்சியத்தை நிறைவேற்றினான், காந்தியை கொன்றான். உண்மையில் 1934 ஜூன் 25, 1944 ஜூலை, 1944 செப்டம்பர், 1946 ஜூன் 26,    கும்பல் நடத்திய தாக்குதல்கள், திட்டங்கள் குறித்து முறையான போலீஸ் பதிவுகள் இல்லாததால் அவை குறித்த ஆவணங்கள் இல்லை என்பதுதான் உண்மை.

அன்றைய பிரதமர் நேருவும் மிகச்சில காங்கிரஸ் தலைவர்களும் மட்டுமே உண்மையில் காந்தி கொலையானது குறித்து வருந்தினார்கள் என்பதும் படுகொலை விசாரணை கூட காந்தி படுகொலையில் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கு பதிலாக குற்றவாளிகளை தப்பிக்க வைக்க அரசுத்தரப்பு முயல்கின்றதோ  என்று சந்தேகப்படும் அளவுக்குத்தான் இருந்தது என்பதும் உண்மை.

ஜனவரி 20க்கும் 30க்கும் இடைப்பட்ட பத்து நாட்களில் அரசு நிர்வாகம், போலீஸ், உளவுத்துறை ஆகியவற்றின் நடவடிக்கைகளும் அன்றைய அமைச்சர்கள் சர்தார் வல்லபாய் படேல், பாரதீய ஜனசங்கத்தை (இந்த அமைப்புதான் 1980இல் பாரதீய ஜனதா கட்சியானது என்பதை நினைவில் கொள்க) சேர்ந்த ஸ்யாம பிரசாத் முகர்ஜி ஆகியோருக்கும் நேருவுக்கும் இடையே நடந்த கடிதப் பரிவர்த்தனைகளும் சொல்வது என்னவென்றால் காந்தியை காப்பாற்றி இருக்க முடியும் என்பதே. ஒரு கட்டத்தில் இவர்களுக்குக்குள் மோதல் முற்றி காந்தியிடமே பஞ்சாயத்துக்கு சென்றுள்ளார்கள்.

..... .....

உதவிய நூல்: Let's kill Gandhi, ஆசிரியர் துஷார் காந்தி (காந்தியின் கொள்ளுப்பேரன்), வெளியீடு ரூபா பப்ளிகேஷன்ஸ், புது டில்லி.