பள்ளிப் பருவத்திலேயே மூத்த அண்ணன் சோவியத் நாடு, ஸ்புட்னிக், தீக்கதிர், சிகரம், செம்மலர், கல்பனா M என்று அறிமுகம் செய்து வைத்தார். தீக்கதிர் வாரப்பத்திரிக்கையாக வெளிவந்தது நினைவில் உள்ளது. மதுரையின் தெருவோர வாசகசாலைகள், செல்லூர் கலைவாணர் என்.எஸ்.கே படிப்பகம், செல்லூர் கிளை நூலகம், மதுரை மத்திய நூலகம், வாத்தியார் சுந்தரராஜன், பின்னர் சிஐடியூ கைத்தறி நெசவாளர்சங்கம் இப்படி பலரும் பல சூழல்களும் என் வாசிப்புப் பழக்கம் மேம்பட பெரிதும் காரணமாக இருந்தார்கள்.
இன்றைய இணையதள காலம் இல்லை அது. தினசரி பத்திரிக்கைகள், வார, மாத இதழ்களும் நூலகங்களும் தெருவோர தேநீர்க் கடைகளும்தான் நமக்கான வாசிப்புக்கு தளம் அமைத்துக் கொடுத்தன. இப்படித்தான் தமிழின் புகழ்பெற்ற அல்லது பெறாத எழுத்தாளர்கள் பலரை நான் அறிந்துகொண்டேன்.
வேலைக்காக சென்னை வந்தபின் நூல்களை வாங்குவது, சேகரிப்பது என அடுத்த கட்டம். பபாசி நடத்தும் ஜனவரி மாத புத்தகக் கண்காட்சி வாசிப்பின் எல்லையை விரிவாக்கியது எனில் சார்ந்திருந்த இடதுசாரி இயக்கம் புரிதலுக்கான வழியைக் காட்டியது. ஒரு கட்டத்தில் அதுவரை என்னுடன் ஒட்டிக்கொண்டு இருந்த மிகப்பல எழுத்தாளர்களின் எழுத்துக்கள் அந்நியமாகப் படவே என்னிடம் இருந்து விலகத் தொடங்க, பல புதிய எழுத்தாளர்களின் எழுத்துக்களை மனசுக்கு நெருக்கமாக உணர்ந்தேன்.
மாநகராட்சிப் பள்ளியில் தமிழ்வழியில் படித்தவன் நான், ஆங்கில மொழி அறிவை வளர்த்துக்கொள்ள விரும்பினேன். The Hindu தொடர்ந்து வாங்கி வாசிக்கத் தொடங்கினேன். Frontline வெளியானது, முதல் இதழில் இருந்து வாசித்தேன்.
இப்படி போய்க்கொண்டு இருந்தது. வாசிப்பிலும் எழுத்திலும் ஆர்வமிக்க நண்பர்கள் சேர்ந்து அலுவலகத்தில் தமிழ்ச்சங்கம் தொடங்கி, 'முல்லை' என்ற கையெழுத்து ஏடு ஒன்றையும் நடத்தினோம். நானும் எழுதிக்கொண்டு இருந்தேன்.
இயக்கம் என்னை நான் பணிபுரிந்த நிறுவனத்தின் தொழிற்சங்கத்தில் நிர்வாகியாக ஆக்குவதென முடிவு செய்தது. துணைச் செயலாளர், அமைப்புச் செயலாளர் என 13 ஆண்டுகள் வேலை செய்தேன். தீக்கதிர் சந்தா கட்டினேன்.
தி ஹிந்து'வில் வந்த சிறு செய்தி ஒன்றை வாசித்து மனம் வெதும்பி அதை தமிழில் மொழிபெயர்த்து தீக்கதிருக்கு அனுப்பி வெளியிட வேண்டினேன். குவைத்தில் வேலை செய்த வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மீது அரபு ஷேக்குகள் நடத்தும் சாட்டையடி தண்டனை பற்றிய செய்தி அது. நான்கு நாட்கள் கழித்து வீட்டுக்கு தீக்கதிர் தபாலில் வந்தது. பிரித்து வாசிக்கும்போது பார்த்தேன், நான் அனுப்பிய செய்தி அச்சில் வந்திருந்தது. நாள் 16.11.1991. அளவற்ற மகிழ்ச்சி அடைந்தேன். அப்போது தீக்கதிர் மதுரையில் இருந்து வந்து கொண்டிருந்தது. 1993 இல்தான் சென்னைப் பதிப்பு தொடங்கப்பட்டது. 1991 டிசம்பரில் மதுரை தீக்கதிர் அலுவலகத்துக்கு சென்றேன், இரண்டு கட்டுரைகளுடன். ஆசிரியர் குழுத்தோழர்கள் அழைத்துக்கொண்டு மாடியில் இருந்த மூத்த தோழர் கே.முத்தையா முன்நிறுத்தினார்கள். அறிமுகம் செய்த பின், 'நல்லா எழுதுறீங்க, தொடர்ந்து எழுதுங்க' என்று முகம் நிறைந்த புன்னகையுடன் வாழ்த்தினார். அதன் பின் பிற ஆங்கில பத்திரிக்கைகளில் இருந்து கட்டுரைகளை மொழி பெயர்த்ததுடன், நானே கட்டுரைகளையும் எழுதினேன். திருத்தல், நீக்குதல் போன்ற தணிக்கைகள் ஏதும் இன்றி அனைத்தும் வெளிவந்தன.
1993 இல் தீக்கதிர் சென்னைப் பதிப்பு தொடங்கப்பட்டது. (வட)சென்னை தமுஎசவில் இயங்கிக்கொண்டு இருக்கவே, தமுஎச மாநில மையப்பொறுப்பிலும் தீக்கதிர் ஆசிரியர் குழு விலும் இருந்த தோழர் அ.குமரேசன் அறிமுகம் ஆனார். கட்டுரைகள், மொழிபெயர்ப்புக்கள் என எழுதி அவரிடம் கொடுக்கத் தொடங்கினேன். அவை வண்ணக்கதிரில் வெளியாகும். வண்ணக்கதிர் அவர் பொறுப்பில் இருந்தது. நன்றி சொன்னால் அவர் 'உங்க நன்றியை இன்னொரு கட்டுரை மூலம் சொல்லுங்கள்' என்பார். அடுத்த கட்டமாக நடுப்பக்க அரசியல் கட்டுரைகள் எழுதினேன். இப்படித்தான் என் எழுத்தினை மேம்படுத்திக்கொள்ளவும் அரசியல் பார்வையை கூர்மைப்படுத்திக்கொள்ளவும் தீக்கதிரும் தோழர் அ.கு.வும் காரணமாக அமைந்தார்கள். நான் பொறுப்பில் இருந்த ஆவடி தமுஎசவின் பல நிகழ்வுகளில் அ.கு. பங்குபெற்று சிறப்பித்தார். இயக்கம், எழுத்து ஆகியவற்றைக் கடந்த அன்பும் பிரியமும் அவரிடம் இப்போதும் எனக்கு உண்டு.
2001 தேர்தல்காலத்தில் சிந்தாதிரிப்பேட்டை தீக்கதிர் அலுவலத்திலேயே நேரடியாக பகுதிநேரம் பணியாற்றும் பெருவாய்ப்பு கிடைத்தது. அன்றைய தீக்கதிர் ஆசிரியர் தோழர் வே. மீனாட்சிசுந்தரம். அரசியல் கட்டுரைகள் நிறைய எழுதினேன், மொழிப்பெயர்ப்பு வேலைகள் செய்தேன். மகிழ்ச்சியான நாட்கள் அவை. மாலை ஆறு மணி அளவில் ஒரு இடைவெளியில் வெளியே சென்று அ.கு.வும் நானும் அவரது வாடிக்கையான கடையில் தேநீர் அருந்துவோம். பணி முடித்த பின் இருவரும் சென்ட்ரல் வந்து மின்சார ரயில் பிடிப்போம், நான் ஆவடியில் இறங்குவேன், அவர் செவ்வாப்பேட்டை. சில நேரங்களில் தோழ சு.பொ.அகத்தியலிங்கம் கூட வருவார். அவர் வீடும் செவ்வாப்பேட்டையில்தான். தீக்கதிரில் எழுத்துப்பணி செய்த அந்த நாட்களில் இரவு தூக்கம் பிடிக்க வெகுநேரம் ஆகும், அன்று எழுதிய எழுத்துக்கள் அச்சில் வெளியாகும், மறுநாள் தமிழகம் எங்கும் என் எழுத்து வாசிக்கப்படும், பேசப்படும் என்ற மகிழ்ச்சியான நினைவுகள் தூக்கத்தை துரத்தி விடாதா!
தோழர் மயிலை பாலுவின் அறிமுகத்தால் அலைகள் சிவம் அவர்களை சந்தித்தேன். கான்ராட் உட் எழுதிய ஆங்கில நூலை தமிழில் மொழி பெயர்க்கும் வாய்ப்பை சிவம் எனக்கு அளித்தார். மாப்ளா கிளர்ச்சியும் அதன் தோற்றுவாயும் என்ற மொழிபெயர்ப்பு நூல் 2006 இல் வெளியானது. தொடர்ந்து விடியல் - அலைகள் இணைந்து மாவோ படைப்புக்களை வெளியிட்டனர், தொகுதிகள் 5, 9 இரண்டையும் மொழிபெயர்த்தேன். ஸ்டாலின் படைப்புக்களில் ஏழாவது தொகுதியை மொழிபெயர்த்தேன். 'வேலிகளுக்கு அப்பால்' என்ற என் வலைப்பூவில் 2011 இல் இருந்து எழுதி வருகின்றேன். எனது சொந்த கட்டுரைகள் 'வள்ளியப்பன் மெஸ்ஸும் மார்கரிட்டா பிஸ்ஸாவும்' என்னும் நூலாக 2022 பிப்ரவரியில் வெளியானது.
அயோத்தி, ஆர்எஸ் எஸ், BCCI வங்கி மோசடி, பங்குச் சந்தை மோசடி, போபால் விசவாயு கசிவு, அமெரிக்க அரசியல், CIA, சார்லி சாப்ளின் திரைப்படங்கள், போர்க்கப்பல் போடம்கின், 2001 செப்டம்பர் 11, ஈராக் மக்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல், ஜோதிபாசு, புத்ததேவ் ஆகியோருடன் பேரா.முசிருல் ஹசன் நடத்திய டயில் நேர்காணலின் தமிழாக்கம், ஆர்.கே.நாராயணின் நான்கு ரூபாய், குற்றமும் தண்டனையும் ஆகிய கதைகள் (தமிழாக்கம்), வண்ணக்கதிரில் எழுதிய அரசியல் நையாண்டிக் கட்டுரைகள், நடுப்பக்க அரசியல் கட்டுரைகள் என நான் எழுதியவற்றை தீக்கதிர் வெளியிட்டு என்னைப் பெருமைப்படுத்தியது என நன்றியுடன் குறிப்பிடுகின்றேன். என் பள்ளித்தோழன் ப முருகன் தீக்கதிர் ஆசிரியர் குழுவில் உள்ளார் என்பதில் தனிப்பட்ட மகிழ்ச்சி எனக்கு.
பொலிவியாவில் கொச்சபம்பாவில் குடிநீர் எடுப்பதும் விற்பதும் அமெரிக்க தனியார் கம்பெனிகளின் கையில் கொடுத்தது அரசு. வீட்டின் கூரையில் விழும் மழைத்தண்ணீரைக்கூட சேமிக்க கூடாது என்றும் வீட்டுக் கிணற்றில் தண்ணீர் எடுக்கக்கூடாது என்றும் கெடுபிடி செய்தார்கள். கொடுமையின் உச்சத்தில் பொதுமக்களும் ராணுவமும் தெருவில் நேருக்கு நேர் மோதிக்கொள்ள பெரும் கலவரங்கள் வெடித்தன. விந்திய இமாசல யமுனா கங்கா என்ற என் கட்டுரை 29.1.2012 வண்ணக்கதிரில் வெளிவந்தது, இந்தியாவில் அது போன்ற முடிவுகளை அரசு செய்யும் என்று எச்சரிக்கை செய்திருந்தேன். இப்போது மோடி அரசின் ஜல்சக்தி அமைச்சகம் அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இனிமேல் நம் வீட்டு கிணற்றில் நாம் தண்ணீர் எடுக்க அரசுக்கு பல ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
தீக்கதிரின் அரசியல்ஞானச்செவ்வொளி விரிந்து பரவட்டும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக