திரைப்படங்களின் வசனமும் இடம் பெற்ற பாடல்களும் இலங்கை வானொலியும்தான் எனக்கு தமிழ் அறிவை ஏற்படுத்த காரணமாக இருந்தன.
இலங்கை வானொலியில் அதிகாலை பக்தி பாடல்கள்தான் எனக்கு இசை மீதான ஈர்ப்பை ஏற்படுத்தின. அதன் பிறகு தொடரும் 'நினைவில் நின்றவை' கால் மணி நேர ஒலிபரப்பில் எம் கே டி, பி யு சின்னப்பா, கே பி சுந்தராம்பாள், தண்டபாணி தேசிகர், பெரியநாயகி, கண்டசாலா, மோத்தி, கலைவாணர், துரைராஜ் என மிகப்பெரிய கலைஞர்களின் பாடல்கள் அந்த வயதிலேயே (11 வயது) இசையை நோக்கி ஈர்த்தன.
முதன் முதலில் ஒரு பாடகர் என்ற பெயரில் எனக்கு அறிமுகம் ஆனவர் ஹனிஃபா அவர்கள்தான். தென்காசியில் இஸ்லாமிய மக்களின் பண்பாடு, பாட்டு, திருவிழா என்று வளர்ந்த சூழலில் இது அதிசயம் இல்லை. மதுரைக்கு வந்தபின் வேறு ஒரு திறப்பு. உழைப்பாளி இந்து மத மக்கள் மத்தியில் வாழ்க்கை. ஆனால் இந்த அடையாளமோ வேறுபாடுகளோ உணரப்படும் வகையில் வாழ்க்கை இருக்கவில்லை. ஆனையூர் வெங்கடாஜலபதி டூரிங் தியேட்டரில் விநாயகனே வினை தீர்ப்பவனே ஒலித்தால் அடுத்து படம் போடப்போறான் என்று அர்த்தம். சீர்காழி இப்படித்தான் எனக்கு விநாயகரை அறிமுகம் செய்தார். மற்றப்படி தெருவில் உள்ள எல்லா வீடுகளிலும் எப்போதும் நுழைந்து சாப்பிடும் உறவும் உரிமையும் இருந்தது. பிள்ளையார் சதுர்த்திக்கு பொங்கல் சுண்டல் என்ற அளவுக்கே பிள்ளையாருடன் ஆன உறவு. விநாயகர்ல்லாம் தெரியாது.
இப்படியான வேறுபாடுகளும் அடையாளங்களும் சென்னையில் வேலைக்கு வந்த பின், குறிப்பாக மண்டைக்காடு கலவரங்களுக்கு பின்னர்தான் உணரத்தக்க வகையில் வெளிப்பட்டன. மண்டைக்காடு கலவரம் இந்து முன்னணியின் நீண்ட நாள் திட்டமிட்ட விளைவு. சோ ராமசாமி, ராம கோபாலன், இல கணேசன் போன்றோர் முக்கியமான சூத்திரதாரிகள். தொடர்ந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலம், திருவல்லிக்கேணி கலவரம் ஆகியவை.
மதுரையில் வீட்டு விசேஷங்கள் தொடங்கி அரசியல் கூட்டங்கள், மாநாடுகள் எங்கும் நீக்கமற நிறைந்து காணப்படுவது சினிமா பாடல்கள், ஒலிச்சித்திர வடிவங்களின் கூம்பு ஸ்பீக்கர் ஒலிபரப்பே. மதுரை வீரன், வீரபாண்டிய கட்டபொம்மன், நாடோடி மன்னன், சரஸ்வதி சபதம், திருவிளையாடல், தங்கப்பதக்கம், 16 வயதினிலே ஒலிச்சித்திரம் ரொம்ப பிரபலம். "இன்று வெள்ளிக்கிழமை, கத்தியை கையாலும் தொடேன்" என்ற டி எஸ் பாலையாவின் வசனத்துக்கு காத்திருப்போம்.
டி எம் எஸ்ஸின் பாடல்களில் அவர் உச்சரிப்பும் வீச்சும் தமிழை எப்படி உச்சரிக்க வேண்டும், பேச வேண்டும் என்று சொல்லிக்கொடுத்தன. அழகென்ற சொல்லுக்கு முருகா, கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் நற்கதி அருள்வாய் அம்மா என அவர் பக்திப்பாடல்கள் வழியேதான் இலங்கை வானொலி என்னை உள்ளே அழைத்துச்சென்றது. சிவாஜியின் குரலுக்கும் உடல் மொழிக்கும் ஒத்து வரும் அவர் குரலும் பாவமும் கடுமையும் இழைவும்... எம் ஜி ஆரின் வீச்சுக்கும் குதித்து ஓடும் வேகத்துக்கும் ஏற்ற விரைவும் அவரது குரல் வெளிப்பாட்டில் காணமுடியும்.
தனியாக அவர் பாடிய கர்நாடக சங்கீத ஒலிபரப்புகளையும் சென்னை, மதுரை வானொலியில் கேட்டுள்ளேன், கொஞ்ச நேரம்தான், அதற்கு மேல் முடியாது. டி எம் எஸ் மட்டுமல்ல, எந்த ஒரு பிரபலமான மக்கள் பாடகருக்கும் இந்த நிலைதான், மக்களிடம் இருந்து விலகி இருக்கும் எந்த ஒரு கலைக்கும் இந்த கதிதான், இதில் தனிப்பட்ட கலைஞர்களை சொல்லி குற்றமில்லை.
சென்னைக்கு வந்தபின்தான் அந்த கனவு சாத்தியம் ஆனது. மெனக்கிட்டு உட்கார்ந்து கவனமாக அவரது பாடல்களை தேர்வு செய்து காசெட்டில் பதிவு செய்தேன். உற்சாகம் மேலிடும் புதிய வானம் புதிய பூமி, ஒளிமயமான எதிர்காலம், அதோ அந்த பறவை போல, இரவுக்கான பாடல்கள் மடி மீது தலை வைத்து, அமைதியான நதியினிலே, நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள், எங்கே நிம்மதி... இப்படி வகைபிரித்து. வேதாவின் இசையில் அவர் பாடிய பாடல்கள் தனி ரகம். இன்னும் பார்த்துக்கொண்டிருந்தால், நான் மலரோடு, மனம் என்னும் மேடை மேலே, ஆசையா கோபமா...
சம்பூரண ராமாயணத்தில் ராவணன் பாடுவதற்கு அமைக்கப்பட்ட பாட்டுத்தான் பாட்டும் நானே பாவமும் நானே. திருவிளையாடலில் பயன்படுத்தப்பட்டது, சிவனுக்காக! எழுதியவர் கா மு ஷெரீப். ஷெரீப்பிடம் பயன்படுத்திக்கொள்ள அனுமதி கேட்கப்பட்டபோது எடுத்துக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டார். ஆனால் படத்தில் டைட்டிலில் அவர் பெயர் இருக்காது. பெருந்தன்மை.
பாதை தெரியுது பாருக்கு வாலி எழுதிய பாடல்தான் கொடுத்ததெல்லாம் கொடுத்தார். பின் அது படகோட்டியில் பயன்படுத்தப்பட்டது. அதே படத்தில் எம் பி எஸ்ஸின் மெல்லிசையில் பாடிய சின்ன சின்ன மூக்குத்தியாம் பாடலை எழுதியவர் தோழர் கே சி எஸ் அருணாசலம். 1995ஆம் ஆண்டு சென்னை கிறித்துவ இலக்கிய சங்கம் நடத்திய கருத்தரங்கில் கே சி எஸ் அவர்களே அப்பாடலைப் பாடினார், கேட்கும் பெரும்பேறு பெற்றேன்.
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் பாடியவர், அன்னையைப்போல் ஒரு தெய்வம், தந்தையைப்போல் என்றும் தனித்தனியாக பாடினார். ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும் என்று அண்ணன் தம்பி கூட்டுறவின் மேன்மையை பாடியவர், வெறுப்பில் அண்ணன் என்னடா தம்பி என்னடாவும், காசேதான் கடவுளடாவும் பாடினார். அட போங்கடா என்று 'கடைசி வரை யாரோ' என்று கொண்டு வந்தும் நிறுத்தினார்.
சித்ராங்கி
படத்தில் நெஞ்சினிலே நினைவு முகம், தில்லையம்பல நடராசா (இது பட்டுக்கோட்டை
பாடல்!), கோபியர் கொஞ்சும் ரமணா, ஏரிக்கரையின் மேலே, மூடுபனி
குளிரெடுத்து, பார்வை யுவராணி போன்றவை தனி ரகம்.
யார் அந்த நிலவு, மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், புத்தன் ஏசு காந்தி, எங்கிருந்தோ ஆசைகள், உனது விழியில், மல்லிகை முல்லை, சந்த்ரோதயம் ஒரு பெண்ணானதோ, குங்குமப்பொட்டின், தாயில்லாமல் நானில்லை, ஒளிமயமான எதிர்காலம், பரமசிவன் கழுத்தில் இருந்து, ஆகாயப்பந்தலிலே, வரதப்பா வரதப்பா, இதோ எந்தன் தெய்வம், காற்று வாங்கப்போனேன், நான் பாடும் பாடல், எல்லோரும் நலம் வாழ, என்னை யாரென்று, ஆறு மனமே ஆறு ஆகியவற்றை இப்போது கரோகியில் பாடி முயற்சித்து பார்க்கின்றேன்.
அன்று கேட்பவன் அரசன் மறந்தால் பாடலை மகனும் மனைவியும் பாடச்சொல்லி கேட்கின்றார்கள். இதை பக்திப்பாடல்கள் பட்டியலில் சேர்த்து விட்டார்கள். பாடுவதற்கு இனிமையாக உள்ளது மட்டுமின்றி இது ஒரு தத்துவ விசாரணைப்பாடலாக தோன்றுவதால் பாடப்பிடித்துள்ளது, கரோகியில் பாடுகின்றேன். கேட்டுப்பாருங்கள். ஆறு மனமே ஆறு, கடவுள் ஏன் கல்லானான், கண் போன போக்கிலே, சட்டி சுட்டதடா, மாறாதய்யா மாறாது, காசேதான் கடவுளடா, உள்ளத்தின் கதவுகள் கண்களாடா... இவற்றில் வெளிப்படும் குறைந்தபட்ச அடிப்படை நியாயங்கள், காசு பணமே பிரதானம் என்ற கோட்பாட்டை கேள்விக்கு உள்ளாக்குவது, மனித, குடும்ப உறவுகள் குறித்த விசாரணைகள், கேள்விகளை ஒதுக்கி விட முடியாது.
சென்னைக்கு வந்தபின் ஆவடியில் ஒரு வருடம் வயலின் வகுப்புக்கும் சென்றேன். அப்போது தி நகரில் வாங்கியது 650 ரூபாய்க்கு. பாடும்போது மாஸ்டர் சுரேந்திரன் 'சாரீரம் நல்லாருக்கே' என்றார், சந்தோசமாக இருந்தது. கீர்த்தனைகள்கள் எல்லாம் தெலுங்கில் அல்லது வேறு மொழியில் இருந்ததால் மனதில் ஒட்டவில்லை. நின்றுவிட்டேன். இப்போதும்கூட கரோகியில் இந்திப்பாடல்களைப் பாடும் முன் அவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்பை நன்றாக புரிந்துகொண்டுதான் பாடுகின்றேன். இல்லையேல் மனதில் ஒட்டாது, பாட முடியாது. சாரீரம், சரீரம் இரண்டையும் பேண வேண்டும்.
அலுவலகத்தில் நடக்கும் விழாக்களில் பாடினேன். பாதுகாப்பு வார விழாவுக்கு மூத்த தோழர் சரணா எழுதி இயக்கிய ஒரு மணி நேர கதாகாலட்சேபத்திலும் பக்கா காஸ்ட்யும், மேக் அப் சகிதம் உடன் நான்கு நண்பர்களுடன் பாடினேன். எல்லாவற்றுக்கும் அடிப்படை அறிவைக் கற்றுக்கொடுத்தது இலங்கை வானொலியும் டி எம் எஸ், சீர்காழி கோவிந்தராஜன், நாகூர் ஹனிஃபா, எம் கே டி, சுந்தராம்பாள், சிவாஜி போன்றோர் கற்றுக்கொடுத்த தமிழ்தான்.
அவர் இறந்தபோது கூட்டம் கூட்டமாக கூடி நின்று கலைக்குழுக்கள் பாடி ஆடியதும் இப்போதும் மனம் மகிழும் அல்லது சோர்வு நிறையும் நேரங்களில் அவர் பாடலை பாடுவதும் கேட்பதும், ஒரே காரணம்தான், அவரை நம் அன்றாடவாழ்வின் பகுதியாக அடையாளம் கண்டதுதான்.
டி எம் எஸ்! உன் மடி மீது தலை வைத்து....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக