ஞாயிறு, ஏப்ரல் 10, 2022

வானமெங்கும் பரிதியின் சோதி....

மக்களிசைக் கலைஞர் M B சீனிவாசன் அவர்களின் மற்றுமொரு இசை ஓவியம்

தாகம் என்கிற திரைப்படம்,  பாபு நந்தன்கோடு இயக்கினார். அதில் இடம் பெற்ற உருகிடும் வேளையிலும் ... என்ற பாடல் என் சிறுவயதில் இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பாகும். பாடலின் விருத்தம் கே ஜே யேசுதாஸ் பாடியிருப்பார். மறந்து போயிருந்தது, ஆனால் பாடலின் மெட்டு மனதின் மூலையில் உறைந்து கிடந்தது, சித்திரப்பூ சேலை போல.

மிகபல வருடங்கள் கழிந்தபின் தற்செயலாக யூடியூப்பில் அப்பாடலை காணவும் கேட்கவும் நேர்ந்தது. இப்போது தெரிகின்றது, விருத்தம் மகாகவி பாரதியாருடையது! ஒளியும் இருளும் என்ற பாரதியின் கவிதையில் இருந்து:

வானமெங்கும் பரிதியின் சோதி

மலைகள் மீதும் பரிதியின் சோதி

தானை நீர்க்கடல் மீதிலும் ஆங்கே

கானகத்திலும் பற்பல ஆற்றின்

கரைகள் மீதும் பரிதியின் சோதி

மானவன் தன் உளத்தினில் மட்டும்

வந்து நிற்கும் இருளிதுவென்னே!


கதிரவன் உதிக்கும் புலர்காலைப் பொழுதை பாரதி வர்ணிக்கின்றான். பாரதியின் சொற்சித்திரத்தை இசையால் காட்சிப்படுத்தி விடுகின்றார் எம் பி எஸ்! 

நெடிதுயர்ந்த மலைகளின் பின்னே மறைந்து மெல்ல மேலெழும் கதிரவனின் காலைப்பச்சிளம் ஒளி. யேசுதாஸின் குரல் செய்யும் மாயத்தால் பளீரென்று ஒரு நொடியில் வானமண்டலம் முழுதும் இளஞ்சிவப்பால் சோதி மயமாகின்றது, மலைகளும் நீள்கடலின் பெருநீர்ப்பரப்பும் இன்னும் புல்வெளிகளும் மரங்களும் அடர்வனங்களும் ஆற்றின் கரைகளும் ஓடும் நதிவெள்ளமும் எல்லாமும் ஒரே சோதிமயம்! உலகமே பரிதியின் சோதியால் ஜொலிக்க, ஆனால், என்ன இது, இந்த பாழும் மானிடன் உள்ளத்தில் மட்டும் பேயிருள், எதற்கு? பாரதியின் கவலை நமக்கும் ஒட்டிக்கொள்ள, இங்கே பூவை செங்குட்டுவன் வந்து இணைந்து கொள்கின்றார்.

உலகமே ஒளிமயமானபோதில், மானிட, உன் உள்ளத்தில் மட்டும் ஏன் இருள் கவ்வி மருளுகின்றாய்? செங்குட்டுவன் மானிடனின் தலையில் குட்டுகின்றார், எஸ் ஜானகி இணைகின்றார்:

உருகிடும் வேளையிலும் 

நல்ல ஒளித்தரும் மெழுகு திரி

ஒளித்தரும் வேளையிலும் 

தியாக உணர்வினைத் தூண்டிவிடும்

இருளில் உலாவும் இதயம் யாவும்

வெளியே வர வேண்டும்

ஆயிரம் இதயம் ஒன்றாய் சேர்ந்து

ஒளியைத்தர வேண்டும்

சேர்ந்திசையின் நுட்பம், மனிதக்குரல்களின் ஒத்திசைவு ஆகியவற்றை நன்கு அறிந்த எம் பி எஸ் விருத்தத்தில் நம்மை வான வெளியில் பறக்க வைத்துவிடுகின்றார். வானம், மலைகள், கடல், தரை, கானகம், ஆறு என அனைத்தையும் குரல்களின் மூலம் இசைஓவியமாக தீட்டி நம்மை எங்கோ கொண்டு சென்று விடுகின்றார். பாரதியின் கவிதை வரிகளுக்கு நியாயம் செய்கின்றார்.

யேசுதாஸின் குரலில் பிரமாண்டமான கதிரவனின் ஒளியையும் ஜானகியின் குரலில்  சிறு மெழுகுவர்த்தியின் ஒளியையும் இரு வேறு பரிமாணங்களாக காட்டும் நுட்பத்தை என்ன சொல்ல! எம் பி எஸ்....

பாடலை யூடியூப்பில் கொடுத்த ஸ்ரீனிவாசன் பாலகுமார் என்ற அந்த நண்பருக்கு நன்றி!

பாடலின் லிங்க் https://youtu.be/KoDvbskQozg

நீங்களும் கேளுங்கள், வானத்தில் பறக்கலாம்!

கருத்துகள் இல்லை: