திங்கள், ஆகஸ்ட் 29, 2016

குஜராத் – அழுகி நாறும் ‘இந்துத்துவா மாடல்’ - 2






உனாவில் தலித்துக்கள் மீது நடந்த தாக்குதல் திடீரென்று நடந்த ஒன்றோ எப்போதாவது நடக்கின்ற ஒன்றோ அல்ல.

இவ்வருடம் (2016) தொடங்கி ஏப்ரல் வரை மட்டுமே தலித்துக்கள் மீது 406 வன்முறைகள் ஏவப்பட்டுள்ளன. 2001 தொடங்கி தொடர்ச்சியாக 14,500 வழக்குகள் அம்மாநிலத்தில் பதிவாகி உள்ளன. அதாவது சராசரியாக வருசத்துக்கு 1,000, தினசரி 3. 2006-15 காலகட்டத்தில் வருசத்துக்கு 20 தலித்துக்கள் கொலை, 45 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளானார்கள். 

இவ்வருடம் மே 22 அன்று ராஜுலா என்ற ஊரில் உள்ள தலித் காலனிக்கு ‘பசுப்பாதுகாவலர்கள்அதாவது இந்துத்துவா தீவிரவாதிகள் வந்தார்கள். பெரிய கார்களிலும் பைக்குகளிலும் வந்தவர்கள் கையில் வாள், கத்தி, இரும்புக்கம்பி, கட்டை போன்ற ஆயுதங்கள்; தலித்துக்களின் கை கால்களை அடித்து உடைத்தார்கள், செல்போனில் வீடியோ எடுத்து ‘மற்றவர்களுக்கும் இதே கதிதான்என்று அச்சுறுத்தினார்கள் (உனாவிலும் இதுவே நடந்தது). அப்பகுதியின் தலித் உரிமைப்போராளியான ரமேஷ்பாய் பபாரியா என்பவர் இவ்வன்முறை நிகழ்வை வீடியோவுடன் காவல்நிலையத்துக்கு கொண்டு சென்றார், எப்போதும்போலவே காவல்துறை அலட்சியம் செய்தது. நீங்கள் கொண்டுவந்த வீடியோவை நம்ப நாங்கள் என்ன முட்டாள்களா?என்று கேலி செய்தார்கள். மறுநாள் 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்தார்கள், ஆனால் வன்முறையில் ஈடுபட்டவர்கள் இன்னும் பலபேர் மீது வழக்குப்பதியவில்லை. இதற்குப்பிறகு ஒரு நடவடிக்கையும் இல்லை.எனவே மே 31 அன்று மீண்டும் காவல்நிலையம் சென்றார்கள். 

தலித் உரிமைப்போராளியான பிரேமபாய் ராத்தோட் “நாங்கள் காவல்துறைமீது நம்பிக்கை இழந்தோம்; இதன்பின் போலீஸ் இருக்கும்போதே அதே கும்பல் தலித்துக்களை மீண்டும் தாக்கியது. எனவே ஜுலை 7 என்று குற்றவாளிகளைக் கைதுசெய்யக்கோரி அம்ரேலி தொடங்கி ராஜுலா வரையிலான 70 கி.மீ. தூரத்திற்கு மோட்டர்சைக்கிள் பேரணி நடத்தினோம். ஆனால் ஜூலை 11 உனா தாக்குதல் பெரிய பிரச்னையானதால் மே மாத வழக்கில் ஆறு பேரை போலீஸ் கைது செய்ததுஎன்று சொல்கின்றார்.

2012இல் (மோடி முதலமைச்சர்) இதே உனாவில் ஒரு தலித்தை வீட்டிலேயே எரித்துக்கொன்றார்கள், இக்கொலையை ‘கவுரவக்கொலைஎன போலீஸ் மூடிமறைக்க முயற்சிக்கின்றது; உண்மை என்னவெனில் அத்தலித் குடும்பத்தாருக்குச் சொந்தமான நிலத்தை அபகரிக்கும் சாதி இந்துக்களின் சதி இக்கொலையின் பின்னணியில் உள்ளது என அவரது குடும்பத்தார் குற்றம்சாட்டுகின்றார்கள்.

ஜுலை 11 உனா தாக்குதலுக்கு முன்பாக ராஜுலாவில் ஒரு தலித்தும் அவரது தலித் அல்லாத மனைவியும் கொல்லப்பட்டார்கள், மற்றொரு கிராமத்தில் ஒரு தலித் இளைஞர் எரிக்கப்பட்டார். ஜுலை 11 தாக்குதலுக்குப்பிறகு மனம் உடைந்த பாதுகாப்புணர்வை முற்றிலும் இழந்த 30 தலித்துக்கள் தற்கொலை முயற்சியில் இறங்கினார்கள், சிலர் மரணமுற்றனர்.

உண்மையில் ஜூலை 11 தாக்குதலின் பின்னாலும் தலித்துக்களின் வீடு-நில அபகரிப்பு சதியே உள்ளதாக தலித்துக்கள் சரியாகவே குற்றம் சாட்டுகின்றனர். தாக்குதலுக்கு உள்ளான விஷ்ரம்பாய், ரமேஷ்பாய் ஆகியோரின் தந்தையான பாபுபாய் வீராஸ்பாய் சரோவ்யா “கிராமத்தலைவரான பிரபுல்லாபாய் கொராட் என்பவர் சாதி இந்துக்களாகிய ‘பசுப்பாதுகாவலர்களோடு சேர்ந்துகொண்டு எங்களது இரண்டு ஏக்கர் நிலத்தை அபகரிக்கத்திட்டமிட்டுள்ளார். இந்த இட்த்தை நாங்கள் மாடுகளின் தோலை உரிக்கப் பயன்படுத்துகின்றோம்என்று சொல்கின்றார். ஜுலை 11 ‘பசுப்பாதுகாவலர்கள்இரண்டு பெரிய கார்களில் வந்தார்கள்; ஒரு காரில் கிர் சோமநாத் சிவசேனா தலைவர்என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. அகமதாபாத்தில் உள்ள ‘தலித் ஹக் ரக்‌ஷக் மஞ்ச்அமைப்பின் நிர்வாகியான ராஜு சோலங்கி என்பவர் “பாபுபாய் கூறுவதில் வியப்பில்லை; தலித்துக்கள் மீதான தாக்குதலுக்கு எப்போதும் மையமாக இருப்பது நிலமே. நிலஅபகரிப்பை நோக்கமாகக் கொண்டுதான் உயர்சாதி இந்துக்கள் போலீசுடனும் மாநில அரசின் நிர்வாகத்துடனும் கூட்டணி வைக்கின்றார்கள்என்று அம்பலப்படுத்துகின்றார்.

குஜராத்தின் கிர் காடுகள் சிங்கங்களுக்கு புகழ் பெற்றவை. கிர் காடு மூன்று மாவட்டங்களில் பரவியுள்ளது. இந்த மூன்று மாவட்டங்களில் மாடுகளின் எண்ணிக்கை மிகமிக அதிகம். சாலைகளின் நிலைமையோ படுகேவலம் என்பதும் சாலைகளில் அடிபட்டு சாகின்ற மாடுகள், சிங்கங்களால் தாக்கப்பட்டு உயிரிழக்கும் மாடுகள் என மாடுகள் சாவதும் சர்வசாதாரணம்; இறந்த மாடுகளை அப்புறப்படுத்தி தோலை உரித்து பொருளாதாரத்தை அமைத்துக்கொள்வதே இப்பகுதி தலித் மக்களின் பாரம்பரியமான தொழிலாக உள்ளது; உயிருடன் இருக்கும் மாடுகளை யாரும் கொல்வதில்லை என்பதே உண்மை.
ஜூலை 11 தாக்குதல் தேசமெங்கும் பெரும் கண்டனத்திற்கு உள்ளானது என்பது ஒருபுறம்; ஆனால்  ‘இந்துக்களே ஒன்றுபடுங்கள்’ ‘வைப்ரண்ட் குஜராத்’ ‘க்ளோரிஃபையிங் குஜராத்’ ‘விகாஸ் குஜராத்’ ‘விகாஸ் புருஷ்’ (வளர்ச்சிநாயகன் மோடி) ‘அச்சே தின் போன்ற வலதுசாரி தீவிரவாத ஆர் எஸ் எஸ் கும்பலின் இருபத்தைந்து வருட போலி கோசங்களும் உள்ளீடற்ற வெற்றுவிளம்பரங்களும்தான் உண்மையில் தேசமெங்கும் அம்பலமானது  என்பது ஆர் எஸ் எஸ் இந்துத்துவா கும்பலுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது என்பதுதான் கவனிக்கப்பட வேண்டியது.

இதன் பின் ஜுலை 31 அன்று மாநிலத்தின் தலைநகரான அகமதாபாத்தில் பல்லாயிரம் தலித் மக்கள் திரண்ட மாபெரும் மாநாட்டில் தங்களது எதிர்ப்புக்குரலை அழுத்தமாகப்பதிவு செய்தார்கள்; தலித் அத்யாச்சர் லடத் சமிதி (தலித்துக்கள் மீதான அடக்குமுறைக்கு எதிரான இயக்கம்) என்ற அமைப்பை உருவாக்கினார்கள். இதன் ஒருங்கிணைப்பாளராக ஜிக்னேஷ் மேவானி என்பவர் தேர்வுசெய்யப்பட்டார்; மேவானி வழக்கறிஞர், பத்திரிக்கையாளர், மனித உரிமைப்போராளி. தாங்கள் சமூகத்தில் மதிப்புடன் வாழ்வதன் பொருட்டு குடும்பத்திற்கு ஐந்து ஏக்கர் நிலம் வேண்டும், நாகரிகமான வேலைகள் வேண்டும் என குஜராத் மாநில அரசிடம் கோரிக்கை வைத்தார்கள். முக்கியமாக ‘இனிமேல் மலம் அள்ள மாட்டோம், சாக்கடை வார மாட்டோம், செத்தமாடுகளை அப்புறப்படுத்துவது தோலை உரிப்பது போன்ற வேலைகளைச் செய்ய மாட்டோம்என உறுதியேற்றார்கள். ‘மாடுகளை தமது தாய் என்று சொல்பவர்கள்தான் தமது தாய் இறந்துபோகும்போது அப்புறப்படுத்தும் கடமையைச் செய்ய வேண்டியவர்கள், இனிமேல் அந்த வேலையை அவர்களே செய்துகொள்ளட்டும்என்று பிரகடனம் செய்து சங்பரிவாருக்கும் உயர்சாதி இந்துக்களுக்கும் அதிர்ச்சிவைத்தியம் செய்துள்ளார்கள். செத்த மாடுகளை அள்ளி மாவட்ட ஆட்சியர்களின் அலுவலகங்களில் வீசி எறிந்தார்கள்; கிர் சோம்நாத் மாவட்டமும் குஜராத்தின் பல பகுதிகளும் செத்த மாடுகளால் நாற்றம் எடுத்து அழுகி வீசின. இந்துத்துவாவின் உண்மையான அழுகிய சாதீயஅரசியல் குஜராத்தின் வீதிகளில் புழுத்து நாறி அம்பலமானது.

ஆகஸ்ட் 5 அன்று அகமதாபாத்தில் இருந்து புறப்பட்ட பெரும் பாதயாத்திரை ஆகஸ்ட் 15 அன்று 400 கி.மீ. தொலைவில் உள்ள உனா நகரை வந்து அடைந்த்து. வழியெங்கும் உள்ள கிராமங்களின் தலித் மக்கள் மேலே உறுதிமொழிகளை ஏற்றார்கள். யாத்திரையில் தலித் சமூகத்தின் பல நூறு பெண்களும் குழந்தைகளும் பங்கேற்றது எழுச்சியான ஒன்று.  பேரணி சென்ற வழி நெடுகிலும் முற்போக்கு இயக்கத்தவர்கள், சாதிமத மறுப்பாளர்கள், தொழிற்சங்கத்தினர், எழுத்தாளர்கள், சமூகப்போராளிகள், பெண்கள், இளைஞர்கள் இணைந்து கொண்டார்கள். இஸ்லாமியமக்களும் இணைந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 2002 கலவரங்களின்போது ‘இஸ்லாமியர்களே உங்கள் எதிரிகள், அவர்களை துரத்தியடித்தால் உங்களுக்கு வீடுகளும் நிலமும் கிடைக்கும்என்று தலித் மக்களை இஸ்லாமியர்களுக்கு எதிராக சங்பரிவார் கும்பல் தூண்டிவிட்டதையும் தங்கள் சமூகம் அதற்கு இரையானதையும் ஏமாந்துபோனதையும் இப்போது வேதனையுடன் குறிப்பிடுகின்றார்கள். பஞ்சாப், பிஹார், மஹாராஷ்ட்ரா, தெலுங்கானா, ஆந்திரா, மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்தும் சமூகப்போராளிகள் தாங்களாகவே முன்வந்து இந்த யாத்திரையில் இணைந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தன் காலத்தின் பதிவு செய்யப்பட வேண்டிய முக்கியமான சமூக இழிவுகள், எழுச்சிகளை பதிவு செய்து வருகின்ற ஆவணப்பட இயக்குநர் ஆனந்த் பட்வர்த்தன் பாதயாத்திரையில் கலந்துகொண்டு பதிவுசெய்துள்ளார்.

ஆகஸ்ட் 15 அன்று உனாவில் நடந்த தேசியக்கொடியேற்றத்தில் ‘ஐந்து ஏக்கர் வேண்டும்என்ற கோரிக்கை முக்கியத்துவம் வாய்ந்தது. இந்திய சாதியக்கட்டமைப்பில் இருந்து வெளியே வரவும் தமக்கான சமூக அந்தஸ்தை நிலைநிறுத்துவதன் பொருட்டும் ஆன அடிப்படை உரிமையான கோரிக்கை இது. ஆகஸ்ட் 15 அன்று உனாவில் முடிவுற்ற பேரணியில் தேசியக்கொடியேற்றி ‘இன்றுதான் எங்களுக்கு உண்மையான சுதந்திரதினம்என்று அவர்கள் பிரகடனம் செய்ததில் ஆழ்ந்த பொருள் உள்ளது.

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி பிறந்த குஜராத்தில் தலித் இயக்கங்கள் அவரது கொள்கைகளோடு முரண்படுகின்றார்கள்; தெய்வத்தின் பிள்ளைகள் எனப்பொருள்படும் அரிஜன் என்ற சொல்லை உருவாக்கியவர் காந்தி. இந்துமதத்தை அதன் சாதியக்கட்டமைப்புக் குலையாமல் பாதுகாப்பதில் காந்தி மிகக்கவனமாக இருந்தார் என்பது வெளிப்படை; அவரது ‘ராமராஜ்யத்தில்தலித்துக்களுக்கு (அல்லது அரிஜன் மக்களுக்கு) எத்தகைய வாழ்க்கை வாய்க்கும் என்பதற்கு தெளிவான உதாரணமே குஜராத். இயல்பாகவே இடதுசாரி இயக்கங்கள் பலஹீனமாக இருக்கின்ற குஜராத்தில் தலித் மக்களை இடதுசாரிகளின் பின்னால் அணிதிரட்டுவது என்பது இப்போதைக்கு சாத்தியமில்லை. ஆர் எஸ் எஸ், சிவசேனா, விஷ்வ இந்து பரிஷத், பிஜேபி ஆகிய வலதுசாரி இந்துத்துவா தீவிரவாத இயக்கங்கள் ‘இந்துக்களே ஒன்றுபடுங்கள்என தெருத்தெருவாக நின்று கூவினாலும் தலித் உள்ளிட்ட ஆயிரம் சாதிகளைக் கொண்ட இந்துமத மக்களை அடுத்த பத்தாயிரம் வருடங்கள் கழித்தாலும் ‘ஒன்றுபடுத்த முடியாது என்ற உண்மையை சாதி மறுப்பாளர்களை விடவும் வலதுசாரி ஆர் எஸ் எஸ் அமைப்பும் அதன் கொடுக்கு அமைப்புக்களும் தெளிவாகவே புரிந்துகொண்டுள்ளார்கள். ஆயிரம் சாமிகளை வைத்திருக்கும் இந்துமதம் தலித்துக்களையும் தலித்துக்களின் சாமிகளையும் தள்ளியேதான் வைத்திருக்கின்றது. உயர்சாதி சாமிகள் உயர்சாதி இந்துக்களைப் போலவே பொன்வேய்ந்த வானுயர்ந்த கோவில்களில் ‘அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆனால் உயர்சாதியினர்க்கு சொந்தமானஅரசாங்க சாமிகளாக இருப்பதையும் தலித்துக்களின் சாமிகள் தலித்துக்களைப் போலவே ஊருக்குவெளியே வெட்டவெளிகளில் வெயிலில் காய்ந்தும் மழையில் நனைந்தபடியும் இருப்பதையும் பார்க்க முடிகின்றது. உயர்சாதி கார்ப்பொரேட் சாமியார்களைப் போலவே உயர்சாதி சாமிகளும் கார்ப்பொரேட் சாமிகளாக பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளன.

இத்தகைய பின்னணியில் ‘ஐந்து ஏக்கர் நிலம்என்ற கோரிக்கை மிக முக்கியத்துவம் வாய்ந்தது. “நாங்கள் அரசுக்கு 30 நாட்கள் கெடு விதிக்கின்றோம்; போர்ர்களத்திலிருந்து நாங்கள் விடுக்கும் செய்தியாகும் இது. எமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிடில் நாங்கள் ரயில் மறியல் செய்வோம். பட்டிதார் சாதியினரால் (ஹர்திக் படேல்) ஒன்பது மாதங்கள் சிறையில் இருக்க முடியும் எனில் என்னால் இருபத்தேழு மாதங்கள் இருக்க முடியும்என்று சொல்கின்றார் ஜிக்னேஷ் மேவானி. படேல் சமூகத்துக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையோடு ஹர்திக்படேல் என்ற இளைஞனை தூண்டிவிட்டதன் பின்னணியில் ஆர் எஸ் எஸ் அமைப்பு இருந்தது. எங்களுக்கு இட ஒதுக்கீடு இல்லையெனில் யாருக்குமே இட ஒதுக்கீடு கூடாதுஎன்பது ஹர்திக்படேலின் குரல் அல்ல, ஆர் எஸ் எஸ்சின் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான குரலாகும். பெருமளவு படேல் சமூகத்தவரின் வாக்குகளை குறிவைத்து குஜராத்தின் ஆன்ந்திபென் படேல் அரசு படேல் சமூகத்துக்கு இட ஒதுக்கீடு ஆணை பிறப்பித்தது, ஆனால் உச்சநீதிமன்றம் இந்த ஒதுக்கீடு செல்லாது என்று அறிவித்தது சங்பரிவார் எதிர்பாராத இடியாகும்.

குஜராத்தின் உண்மை முகம் அம்பலமானதில் பதட்டம் அடைந்த  (அடல்பிஹார் வாஜ்பேயி, அத்வானி போன்ற ‘இளைஞர்களைஆட்சியில் அமர்த்தி வேடிக்கை காட்டிய) சங்பரிவார், ஆனந்திபென் படேலுக்கு ‘வயசாகிவிட்டதாக சாக்குச்சொல்லி அவரை முதல்வர் பதவியில் இருந்து நீக்கியது. ஒபாமாவுடனும் அம்பானி அதானியுடனும் பேசுவதற்கும் சாப்பிடுவதற்கும் மட்டுமே வாயைத் திறக்கும் நரேந்திரமோடி வேறு வழியின்றி செங்கோட்டையில் நின்றுகொண்டு தலித்துக்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கினார். உனா தாக்குதலில் ஈடுபட்ட தான் சார்ந்த சங்பரிவார் கூட்டத்தை நேரடியாக குறிப்பிட வக்கற்ற பிரதமர் ‘சுடுவதாக இருந்தால் என்னைச் சுடுங்கள்என்று முகம் தெரியாத எதிரியை சவாலுக்கு அழைத்ததுபோல் நாடகம் போட்டார்.
(தொடரும்)


குஜராத் – அழுகி நாறும் ‘இந்துத்துவா மாடல்’ - 1




குஜராத்தில் இயங்கும் மதச்சார்பற்ற ஜனநாயகத்துக்கான இயக்கம் (Movement for Secular Democracy) என்னும் அமைப்பு 14.7.2016 அன்று அம்மாநில ஆளுநருக்கு சமர்ப்பித்துள்ள மனுவில் இவ்வாறு சொல்கின்றது: இத்தேசம் டாக்டர் பாபாசாஹேப் அம்பேத்கரின் 125ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் நேரத்தில் தலித்துக்கள் மீதான தாக்குதல்களுக்கு முன்னுதாரணத்தை குஜராத் மாநிலம்உருவாக்கியுள்ளதைக் கண்டு வேதனையுறுகின்றோம்.  கிர் சோமநாத் மாவட்டத்தில் உனா நகரில் நான்கு தலித் இளைஞர்கள் மீது நிகழ்த்தப்பட்ட கோரமான தாக்குதலை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.  இந்நிகழ்வு குறித்து முழுமையாக விசாரிக்க நீதிவிசாரணைக்கமிசன் அமைக்க வலியுறுத்துகின்றோம்.  தலித்துக்கள் மீதான தொடர்தாக்குதல்கள் குஜராத்தில் சுட்டிக்காட்டும் புள்ளிவிவரத்தைப் பாருங்கள்:
பனஸ்கந்தா மாவட்டம் – 1133
ஜுனாகத் -830
சுரேந்திரநகர் -756   
அகமதாபாத் – 693
இவையன்றி ஒவ்வொருவருடமும் 20 தலித்துக்கள் கொல்லப்படுகின்றார்கள், 50 தலித் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகின்றார்கள். எனவே தலித்துக்கள் மீதான தாக்குதல்கள் நட்த்தப்பட்ட மாவட்டங்களின் காவல்துறைத்தலைமை, நிர்வாகத்தலைமையில் உள்ளவர்களை தண்டிக்க வேண்டும்; காவல்துறை நிர்வாகத்தில் தலித்துக்கள் மீதான வேற்றுமை பாராட்டுதல், வஞ்சகங்களைக் களைய வேண்டும்; நம் சமுதாயத்தில் சமூகரீதியாக ஒடுக்கப்பட்ட  மக்களைக்குறித்து காவல்துறைக்கும் அரசு நிர்வாகத்துக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்”.

இவ்வியக்கத்தின் நிர்வாகிகள் மட்டுமின்றி முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜி, நடனக்கலைஞரும் சமூகப்போராளியும் ஆன மல்லிகா சாராபாய் உள்ளிட்ட சமூகத்தில் நன்கு அறியப்பட்ட பல்வேறு துறையினரும் இம்மனுவில் கையழுத்திட்டு உள்ளனர்.

குஜராத்தின் உனா என்னும் ஊரில் 2016 ஜூலை 11 அன்று செத்தமாட்டின் தோலை உரித்தார்கள் என்று குற்றம் சாட்டப்பட்ட நான்கு தலித் இளைஞர்களை காரில் கட்டிவைத்து இரும்புக்கம்பிகளால் கட்டைகளால் தாக்கியவர்கள் இஸ்லாமியர்களோ கிறித்துவர்களோ அல்லர்; இந்துமதத்தை சேர்ந்த ‘பசுப்பாதுகாவலர்கள்என்ற போர்வையில் வந்த வலதுசாரி இந்துத்துவா தீவிரவாதிகளே அவர்கள். 

“1986இல் எனது நண்பர் ஒருவர் குஜராத்தின் கோலானா கிராமத்தில் தலித் உழைக்கும் மக்களின் இயக்கம் ஒன்றைக்கட்ட முயன்றார். அக்கிராமத்தில் தலித் மக்களுக்கு எதிரான உழைப்புச்சுரண்டலை எதிர்த்தும் நிலங்களின் மீதான தலித்துக்களின் உரிமைக்காகவும் போராடினார். அவரை சுட்டுக்கொன்றார்கள். எனவே குஜராத்தில் தலித்துக்கள் ஒடுக்கப்படுவதும் தாக்கப்படுவதும் நீண்ட நெடுங்காலமாகவே நடக்கின்ற ஒன்றுதான்என்று சொல்பவர் மார்ட்டின் மக்வான். 1988இல் நவ்சர்ஜன் ட்ரஸ்ட் என்னும் அமைப்பை நிறுவி தலித்துக்களின் உரிமைகளுக்காக போராடி வருகின்றார். உனாவில் நடந்த தாக்குதல் புதியதல்ல என்பதையே இவ்வாறு சொல்கின்றார்.

2012இல் முதலமச்சராக இருந்தவர் நரேந்திரமோடி. அப்போது சுரேந்திரநகர் மாவட்டம் தங்கத் என்னும் ஊரில் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் நான்கு தலித்துக்கள் இறந்தார்கள். தார்னேதார் எனும் திருவிழாவில் கடைகள் போடுவதில் தலித்துக்களுக்கும் பார்வாத் சாதியினருக்கும் இடையே தகராறு எழுந்ததை தொடர்ந்து வெடித்த கலகத்தில்தான் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டடது. ‘இச்சம்பவத்தில் தடயங்கள், சாட்கள் தெளிவாக இல்லை என்று அரசாங்கமே சொல்கின்றது. எனவே நீதிமன்றமும் இவ்வழக்கை ‘சிவகுப்பு வழக்கு நிலுவையில் வைத்துள்ளது. எனவே உண்மையான குற்றவாளிகள் இன்னும் தண்டிக்கப்படாமல் இருக்கின்றார்கள். அரசு நிர்வாகத்தின் அலட்சியப்போக்கே தலித்துக்கள் மீதான தாக்குதல்களை தொடர்ந்து நடத்த ஆதிக்கசாதியினர்க்கு துணிச்சலைத் தருகின்றதுஎன்கின்றார் மக்வான். தங்கத் கலகத்தில் ஏகே47 எந்திரத்துப்பாக்கிகளால் போலீஸ் சுட்டதாக தெரிகின்றது. ஆனால் குற்றப்பத்திரிக்கையே இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை. மூன்று நபர் விசாரணைக்குழு ஒன்ற அமைத்தார் மோடி. ஆனால் நான்கு வருடங்களுக்குப்பின்னும் கமிட்டி அறிக்கையை குஜராத் அரசு வெளியிடவில்லை என்றால் யாரைக்காப்பாற்ற? இப்போதும் பிஜேபிதான் ஆட்சியில் உள்ளது.

“குஜராத்தில் மக்கள்தொகையில் தலித்துக்களின் எண்ணிக்கை 7.5%. இந்தியாவில் உள்ள தலித்துக்களின் எண்ணிக்கையில் இது 2.33%. ஆனால் தலித்துக்களின் மீதான தாக்குதல்கள் என்றால் தேசியப்பட்டியலில் குஜராத்தே முதல் பாதியில் உள்ளது. தேசிய செட்யூல்ட்சாதி ஆணையம், தேசியக்குற்றப்பதிவேடுகள் அலுவலகம் ஆகியவற்றின் புள்ளிவிவரங்கள் சொல்வது இதுதான். தங்கத் துப்பாக்கிச்சூட்டில் தலித்துக்கள் உடலில் துப்பாக்கிக்குண்டுக்காயம் இருப்பதாக போஸ்ட்மார்டம் அறிக்கை சொல்கின்றது. நாங்கள் உயர்நீதிமன்றத்தை அணுகினோம், ஆனால் மாநில அரசு அலட்சியம் செய்வதால் அரசாஙத்தின் மீது நாங்கள் நம்பிக்கை இழந்தவர்களாக இருக்கின்றோம்என்கின்றார் மக்வான். 

நாங்கள் இயக்கத்தை தொடங்கிய காலத்தில் குஜராத்தில் தலித்துக்களின் மீதான தாக்குதல்கள், கொலைகள் தொடர்பான வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது மொத்தவழக்கில் 4% மட்டுமே; நாங்கள் தொடர்ந்து போராடி வருவதன் விளைவாக இப்போது இது 28-29% ஆக உயர்ந்துள்ளது. ‘தீண்டாமையைப் புரிந்துகொள்வது’ (Understanding Untouchability) என்ற தலைப்பில் 2010இல் குஜராத்தில் நாங்கள் ஒரு ஆய்வு நடத்தினோம்.  1,569 கிராமங்களில் 98,000 மக்களிடம் ஆய்வு நட்த்தினோம். 98 வடிவங்களில் தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதை அறிந்தோம். பள்ளிகளில், மதிய உணவுத்திட்டத்தில், தேநீர்க்கடைகளில், கோவிகளில், பொது இடங்களில், பொதுக்கிணறுகளில் என எல்லா இடங்களிலும் தீண்டாமை ஒவ்வொரு விதத்தில் பரவி உள்ளது. எமது ஆய்வை அரசிடம் அளித்தோம். ஆனால் எமது ஆய்வின் முடிவுகளை மறுப்பதற்காகவே அன்றைய முதல்வர் மோடி அரசுத்தரப்பில் ஒரு ஆய்வை மேற்கொண்டார்; பெயரளவில் ஐந்து கிராமங்களில் ஒரு ‘ஆய்வைசெய்து தீண்டாமை குறித்து மவுனம் சாதிக்கும் ஒரு அறிக்கையை சமர்ப்பிக்கச்செய்தார். குஜராத்தில் இப்போதும்  பொதுக்கிணறுகளில் தலித்துக்கள் நீர் எடுக்க முடியாது; தேநீர்க்கடைகளில் இரண்டு தம்ளர்கள்தான், 90%  கோவில்களில் தலித்துக்கள் நுழைய முடியாது. 54% பள்ளிகளில் தலித் மாணவர்களை தனியே பிரித்துவைத்துள்ளார்கள்; தலித்துக்கள் தமக்கான சுடுகாடுகளை தனியே வைத்துக்கொண்டுள்ளார்கள், சாதி இந்துக்கள் தமது சுடுகாடுகளில் தலித்துக்களை அனுமதிப்பதில்லை.
தலித்துக்களுக்கு கல்வி அளித்து நாகரிகமான வேலைவாய்ப்புக்களை அளிக்க அரசு மறுக்கின்றது. மாநில அரசு வேலைகளில் செட்யூல்ட் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள 64,000 காலியிடங்களை அரசு இன்னும் நிரப்பவே இல்லை என்னும் உண்மை சொல்வதென்ன? ஆனால் மலம் அள்ளுவது, செத்தமாடுகளை அப்புறப்படுத்துவது, தோலுரிப்பது போன்ற தலித்துக்களுக்கான ‘பாரம்பரியவேலைகளை செய்யவே நிர்ப்பந்தப்படுத்துகின்றார்கள். கல்வியும் பிற நாகரிகமான வேலைகளும்  இல்லாத சூழலில் சாதிய அடிப்படையிலான பலநூறு ஆண்டுகள் பழமையான இழிவான வேலைகளை செய்யவே திட்டமிட்ட வகையில் தலித்துக்கள் குஜராத்தில்  தள்ளப்பட்டுள்ளார்கள் என்பது அப்பட்டமான உண்மை.

“பள்ளிகளில் தலித் சமூகமாணவர்களை கழிப்பறைகளைச் சுத்தம் செய்ய ஆசிரியர்கள் கட்டாயப்படுத்துகின்றார்கள். 2010இல் நாங்கள் நடத்திய ஆய்வில் சவ்ராஷ்ட்ரா பகுதியில் 1,500 மாண்வர்கள் நேரடியாக எங்களிடம் சொன்னதே இது. பொதுஇடத்தில் மக்களிடம் நேரடியாக நட்த்தப்பட்ட விசாரணையில் குஜராத் உயர்நீதிமன்றநீதிபதியிடம் மாணவர்களின் பெயர்கள், கிராமங்கள் உள்ளிட்ட விவரங்களை நேரடியாகவே கொடுத்து முறையிட்டோம். ஆனால் அரசாங்கம் இதுவரையிலும் ஒன்றும் செய்யவில்லைஎன்கின்றார் மக்வான்.

குஜராத்தில் தலித்துக்கள் சமூகத்தின் எல்லாத்தளங்களிலும் ஒதுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டுள்ளார்கள். நிலச்சீர்திருத்தம் குஜராத்தில் தலித்துக்களுக்கு ஒன்றுச்செய்திடவில்லை. “1996-2000 காலத்தில் நவ்சர்ஜன் அமைப்பு, 6,000 ஏக்கர் நிலம் தலித்துக்களுக்கு கொடுக்கப்பட்டிருப்பதாக அரசுப்பதிவேட்டில் இருந்ததையும் உண்மையில் இவ்வாறு கொடுக்கப்படவே இல்லை என்பதையும் கண்டுபிடித்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தோம்; ஆனால் குஜராத் அரசு இவ்விசயத்தில் இன்றுவரை ஒன்றுமே செய்யவில்லை. குஜராத்தில் தலித்துக்கள் வாழும் 12,500 கிராமங்களில் 250 கிராமங்களில் மட்டுமே இந்த 6,000 ஏக்கர் நிலமோசடி நடந்துள்ளது எனில் ஒட்டுமொத்த மாநிலம் எங்கும் நிலைமை எப்படி இருக்கும் என்பதைப் புரிந்துகொள்வது சிரம்மான ஒன்றல்ல; குஜராத்தில் தலித்துக்களின் வாழ்க்கை மிகமோசமாக இருப்பதற்கு நிலப்பகிர்வில் அலட்சியம்-மோசடி என்பது முக்கியமான காரணம்என்கின்றார். 

‘நூறு வருடங்களுக்கு முன்னர் படேல் சமூகத்தினர் சூத்திரர் எனப்படும் கீழ்சாதியினராகத்தான் இருந்தார்கள். யு.என்.தேபர் 1948-54 காலக்கட்டத்தில் சவ்ராஷ்ட்ரா முதல்வராக இருந்தபோது நிலச்சீர்திருத்தத்தை செம்மையாக அமல்படுத்தினார், படேல் சமூகத்துக்கு நிலப்பகிர்வு செய்தார். பலனாக இன்று படேல் சமுகம் குஜராத்தில் பொருளாதார மட்டத்திலும் சமூக அந்தஸ்து மட்டத்திலும் செல்வாக்கு மிக்கவர்களாக இருப்பதைப் பார்க்கின்றோம்.  ஆக நிலச்சீர்திருத்தமும் நிலப்பகிர்வும் மட்டுமே தலித்துக்களின் வாழ்க்கைத்தரத்தில் சமூக அந்தஸ்தில் மாற்றத்தைக் கொண்டுவரும் என்பது உறுதிஎன்கின்றார் மக்வான்.

அகமதாபாத்தின் முன்னணி தலித் உரிமைப்போராளியான அசோக் ஸ்ரீமாலி என்பவர் “நீண்ட நெடுங்காலமாக குஜராத்தில் தலித்சமூகத்தின் நிலைமையை ஊடகங்கள் வெளியிடாமல் மறைத்தே வந்துள்ளன; 1985ஆம் வருடம் குஜராத்தில் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக அப்போது மாநிலத்தில் தலித்துக்கள் நீண்ட நாட்கள் போராட்டம் நட்த்தினார்கள். உனாவில் நடந்த சம்பவத்தை சமூக ஊடகங்கள் இப்போது வெளிஉலகுக்குக் கொண்டுவந்துள்ளதால் குஜராத்தின் உண்மை நிலைமை அம்பலமாகி உள்ளதுஎன்று சொல்கின்றார்.
(தொடரும்)

சனி, ஏப்ரல் 16, 2016

ஜங்கிள் புக்-4

திரும்பி வந்தபோதான பயணத்தில்தான் காட்டின் விளிம்பில் அந்தப் பெண்ணைப் பார்க்க நேர்ந்தது; தன் பருவ வயதில் இருந்தாள் அவள்; அருகில் அமர்ந்திருந்தவர் அவளது தந்தையாக இருக்கலாம்; எங்கள் கார் நெருங்கும்போது அவள் தன் மார்பகங்களை தன் இரு கைகளால் மூடினாள்; பேரதிர்ச்சியாக இருந்தது எனக்கு! 
ஜார்வாக்களின் வரலாற்றைப் படித்திருந்ததால், மார்பகங்களை மூடி மறைக்க வேண்டும் என்பது அவர்கள் அறியாத ஒன்று என்பதை நான் அறிந்திருந்தேன்; அவ்வாறெனில் அது மூடி மறைக்க வேண்டிய ஒரு உறுப்பு என்று அந்த வாலிபப்பெண்ணுக்கு கற்றுத்தந்தது யாராக இருக்கும்? காட்டுக்கு வெளியே இருக்கின்ற நவீனர்கள்தான் காரணமாக இருக்கலாம்; யாராவது அப்பெண்ணை உற்றோ வெறித்தோ பார்த்திருக்கக்கூடிய கெடுவாய்ப்போ நவீனர்களின் பாலியல் சீண்டலுக்கு உள்ளான கேடுகெட்ட வாய்ப்போ அப்பெண்ணுக்கு நேர்ந்திருக்கலாம்.வேறு எப்படியும் என்னால் சிந்திக்க முடியவில்லை. காரணம், அடுத்த சம்பவம்.

ஒரு திருப்பத்தில்தான் அந்தக் காவியக்காட்சியைக் கண்டேன்; உயர்ந்த ஒரு ஜார்வா இளைஞன்; தோள்களில் இறந்துவிட்ட பருத்த ஒரு மான் அநாயசமாக கிடக்க வலது கையில் நீண்ட வில்; அவனுடன் இளம் யுவதி; மார்பகங்களை அவள் மூடியிருக்கவில்லை. அற்புதமான ஒரு அழகனும் ஒரு பேரழகியும்! எங்கள் கார் நெருங்கும்போதும் அவனும் கண்டுகொள்ளவில்லை,  அவளும் கண்டுகொள்ளவில்லை, மறைக்கவும் முயற்சிசெய்யவில்லை. ஏதோ பேசியபடி மிகச்சாதாரணமாக எங்களைக் கண்டுகொள்ளாமல் அவர்கள் கடந்து சென்ற அச்செவ்வியல் காட்சிக்கு வயது சத்தியமாக 60,000 வருடங்கள்! 
அந்த இளைஞன் மட்டும் தன் நீண்ட வில்லை எங்கள் காரின் கண்ணாடியைக் குறிவைத்து ஏதோ சொல்லி எங்களை அலட்சியப்படுத்தினான். ’இது எங்கள் காடு, உங்களுக்கு இங்கு என்ன வேலை? வெளியேறுங்கள்’ என எச்சரித்திருக்கக்கூடும். அதன்றி எங்களுடன் உரையாடுதற்கு அவர்களிடம் ஏதும் இல்லை (நம் நவீனர்களுக்கோ அவர்களிடம் பல்வேறு ‘காரியங்களை’ நிறைவேற்றிகொள்ளும் பொருட்டு உரையாடுதல் தேவைப்படுகின்றது).

அந்தமான் பயணத்தின் அடர்காட்டில் நான் சந்திக்க நேர்ந்த அந்த பதினொரு ஜார்வாக்களும் என் மூதாதையர்கள்; என் பாட்டனின் பாட்டன் வழியே எனக்குச்சொந்தமானவர்கள் என்றே என் உணர்வுகள் என்னிடம் பேசின.அவர்களுக்கும் எனக்கும் இடையேயான உறவுக்கு அடையாளமாக அவர்களுக்கும் எனக்கும் பொதுவான பாட்டைப்பாடிக் கொண்டிருந்த அக்காட்டின் குயிலொன்று உதிர்த்த சிறகை நான் திரும்பும்போது என்னோடு எடுத்து வந்தேன்.

இப்போதும் அந்தக்குயில் அக்காட்டின் நெடிதுயர்ந்த ஒரு மரத்தின் மீதமர்ந்தபடி அவர்களுக்கும் எனக்கும் இடையே ஆன ஆதிஉறவைக்குறிக்கும் ஒரு காட்டின்பாடலைப்பாடியபடியே இருக்கின்றது என்று நம்புகின்றேன். யார் அறிவார், ஒரு வேளை மோக்லி விளையாடுவதற்காக அந்தக்குயில் உதிர்த்த, மோக்லி விட்டுச்சென்ற சிறகாகவும் கூட இருக்கலாம்.
இதோ அந்தக்குயிலின் சிறகு...
(முற்றும்)

ஜங்கிள் புக்-3


2014ஆம் ஆண்டு மேகாலயா மாநிலத்தின் தலைநகரான ஷில்லாங்குக்கு சுற்றுலா சென்றிருந்தோம்; வடகிழக்கு மாநிலங்களுக்கே உரித்தான அமைதியும் மக்கள்தொகை நெரிசல் இல்லாத ஊர்களும் வெட்டவெளிகள் வனங்கள் நீர்நிலைகள் என்று இருந்தது ஷில்லாங். மாலை நான்கு மணிக்கெல்லாம் நம் ஊரின் 10 மணி இருட்டு வந்து விடுகின்றது. இயற்கை வஞ்சகம் இல்லாமல் கொட்டிக்கொடுத்திருக்கின்றது தன் அழகை அங்கு! அல்லது அங்குதான் வாழ்ந்துகொண்டிருக்கின்றது என்றும் தோன்றுகின்றது! ஜங்கிள் லைஃப்!

டவுன் என்று சொல்லத்தக்க இடங்கள் தவிர மற்றவை எல்லாம் ஆள் அரவமற்ற இடங்களாகவே இருக்கின்றன; இங்கே ஒரு வீடென்றால் வெகுதொலைவில் மற்றொரு வீடு; நம் ’சகல அதிநவீன தொழினுட்ப’ வாழ்வோடு ஒப்பிடும்போது அம்மக்களின் நவீனவசதியற்ற எளிய வாழ்க்கை நிம்மதியானதாக இருப்பதாக எனக்குத் தோன்றியது; கார்களின் எண்ணிக்கை குறைவென்பதால் இரைச்சல் இல்லை; சுத்தமாக இருந்தது காற்று; மக்கள் நடக்கின்றார்கள்; அதிசயமாக அரசுப்பேருந்து ஒன்றைக்காண நேரிட்டது. குறைந்தபட்ச வசதிகளுடன் நிம்மதியாக வாழ்கின்றார்கள்.

ஷில்லாங் விமான நிலையத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் ஒரு சந்தை நடந்துகொண்டிருந்தது; பழங்கள் வாங்கலாம் எனப்போனோம்; நம் ஊர்களின் பெரிய மார்க்கெட்டுக்களில் வீதிகளில் சிறுவியாபாரிகள் போடும் கடைகளும் பொருட்களும்தான் அங்கே பெரிய சந்தையாக விசேசமான பொருட்களாக இருந்தது! மக்கள் தங்கள் குறைந்த வருமானத்தில் திருப்தியுடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்!

சகல சம்பத்துக்களுடன் வாகனாதிவசதிகளுடன் colourful and unaffordable (or affordable to some section) மால்களுடன் வாழ்ந்துகொண்டிருக்கும் நாம் என்ன வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் என்று இன்றுவரையிலும் யோசித்துக்கொண்டேதான் இருக்கின்றேன்! இப்போது இதே வடகிழக்கு மாநில இளைஞர்களை சென்னையிலும் தென்மாவட்டங்களும் கூட மால்களிலும் ஹோட்டல்களிலும் ‘பிரமாண்டமாய்’ ஸ்டோர்களிலும் அப்பார்ட்மெண்ட் கட்டுமான வேலைகள், சென்னை மெட்ரொ ரயில்கட்டுமான வேலையாட்களாகப் பார்க்க முடிகின்றது; உழைப்புச்சுரண்டல்!

சென்ற வருடம் இதே ஏப்ரல் மாதம் அந்தமான் தீவுகளுக்கு சென்றிருந்தோம். 300க்கும் அதிகமான தீவுகள் இருந்தாலும் அத்தனை தீவுகளிலும் குடியேற்றம் இல்லை என்பதை அறிந்தேன். ஒரு வருடம் ஓடிய பின்னும் இன்னும் என் மனதில் நிற்பது, அந்தமானின் பரந்துவிரிந்த மகாசமுத்திரத்தை விடவும் உலகின் மிக அழகிய கடற்கரைகளில் ஒன்றான ராதாநகர் கடற்கரையைவிடவும், அடர்காட்டின் நடுவே நான் கண்ட அந்த 11 மனிதர்கள்தான்! நம் மூதாதையர்கள் அவர்கள்!

அந்தமானில் ஆறு பழங்குடி மக்கள் இருக்கின்றார்கள்: க்ரேட் அந்தமானீஸ், நிகோபாரீஸ், ஜாரவா, செண்டினெல்ஸ், சோம்பென்ஸ், ஓங்கி. ஜாரவா பழங்குடிகள் 60,000 வருடங்களுக்கு முன் ஆப்பிரிக்காவில் இருந்து கடல் வழியே இங்கு வந்து குடியேறியவர்கள் என வரலாறு சொல்கின்றது. இவர்கள் வசிக்கும் காட்டின் ஊடாக தேசிய நெடுஞ்சாலை great andaman trunk road ஒன்றை இந்திய அரசு 1970இல் அமைத்தது; போர்ட்ப்ளேயரையும் டிக்லிபூரையும் இணைக்கும் 360 கிமீ சாலை: தங்கள் காட்டை ஆக்கிரமிக்கும் ஒரு செயலாக இதைப்பார்த்த ஜாரவாக்கள் சாலை அமைத்த சில பணி்யாளர்களை அம்பு எய்து கொன்றும் விட்டார்கள்; இப்பாதை 'சுற்றுலாப்பயணிகளை தீவின் மற்றொரு முனைக்கு கொண்டு செல்லும் பாதை’யாக பயன்படுத்தப்படுவதாக இந்திய அரசு சொன்னாலும் உண்மையில் ஜாரவா மக்களை காட்சிப்பொருளாக்கும் சுற்றுலாவே அதன் நோக்கமாகும்; கொல்கத்தா உயர்நீதிமன்றம் இச்சாலையை மூட உத்தரவிட்டது 2002 என்றால் 14 வருடங்களாக இந்திய அரசு கண்டுகொள்ளாமல் இருக்கின்றதெனப்பொருள்.

ஜார்வாக்களை புகைப்படம் எடுப்பது தடைசெய்யப்பட்டுள்ளது; நான் புகைப்படும் எடுக்கவில்லை; (இண்டெர்னெட்டில் அவர்களது படங்கள் கிடைக்கின்றன). எனவே காட்டின் ஒரு முனையில் உள்ள ஜார்வா ப்ரொடெக்சன் போஸ்ட்டை படம் எடுத்தேன், அதனை இங்கே பதிகின்றேன்.
நிற்க.

காரில் என்னுடன் பயணித்தவர்கள் மட்டுமல்லர், பொதுவாகவே பழங்குடி மக்களை காட்டுவாசிகள் என்று விளிப்பதே நாட்டுவாசிகளான நமது வழக்கம்.
உண்மையில் அவர்களே இந்த உலகின் ஆதிக்குடிமக்கள் என்பதை புரியாத நவீன அறிவிலிகளாகவே நாம் இருக்கின்றோம். தேசியநெடுஞ்சாலை எண் 223, 300 கிமீக்கும் அதிகமானது; முழுக்கவும் பல்லாயிரம் வருடங்கள் பழைமையான அடர்காட்டின் ஊடே செல்வது; இருமருங்கிலும் பல நூறு வருசங்கள் வயதான மரங்கள்,சில நாம் அறிந்தவை, பல நாம் அறியாதவை.
ஆழ்ந்த அமைதி எங்கிலும் சூழ்ந்திருக்க,அவ்வப்போது நம்மை வந்தடையும் விதவிதமான பெயர் அறியாப்பறவைகளின் கூவல்களுடன், இடை இடையே மான்களின் குறுக்கீடுகளுடன் நம் பயணம் தொடர்கின்றது;

எப்போது ஒரு ‘காட்டுவாசி’ தென்படுவான் என்ற பெரும் ‘த்ரில்’காருக்குள் இருந்த நாட்டுவாசிகளுக்குள் சூழ்ந்திருக்கின்றபடியால் அவ்வப்போது எழும்பும் மெல்லிய குரலிலான உரையாடல்கள் சுருக்கமாகவே முடிகின்றன; கண்கள் காருக்கு வெளியேதான்.

யாரும் எதிர்பாராத ஒரு திருப்பத்தில்தான் அந்த நால்வரும் காரை வழிமறித்தார்கள்; கறுப்பு என்றால் அப்படி ஒரு மினுமினுப்பான கறுப்பு; நம் ஹீரோக்களின் ஆறுகட்டு பில்டப் எல்லாம் தோற்றுவிடும் உடற்கட்டு; காரின் வேகத்தை குறைத்தபடியே வழியுண்டாக்கினார் காரோட்டி; அவர்கள் காரின் ஜன்னல்களை தட்டினார்கள்; ஏதாவது கொடுக்கும்படி இருந்தது அவர்களின் சைகையும் குரலும். வழிகிடைத்தவுடன் காரோட்டி வேகம் பிடித்தார்.

இதன் பிறகு சில பெண்களையும் குழந்தைகளையும் பார்த்தேன். ஆண்களும் பெண்களும் இடுப்பில் சிவப்பான ஒன்றை அணிந்து இருந்தார்கள்; பெண்கள் மார்பில் எதையும் அணியவில்லை.

காரை நிறுத்தக்கூடாது, திறக்கக்கூடாது, ஜார்வாக்களுடன் பேசக்கூடாது, உணவுப்பொருட்கள் உள்ளிட்ட எதையும் கொடுக்கக்கூடாது, புகைப்படம் எடுக்கக்கூடாது என்பது நிபந்தனைகள்.ஆனாலும் நவீன உலகைச்சார்ந்த அறிவாளிகளான நம்மவர்கள் ஜார்வாக்களுக்கு மது கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துக்களை கொடுத்து கெடுக்கின்றார்கள் என்பதும் ஜார்வா பெண்களை பாலியல்வல்லுறவு செய்கின்றார்கள் என்பதும் இணையத்தில் கிடைக்கும் செய்தி; தவிர நம்மவர்கள் அவர்களுக்குக் கொடுத்த வியாதிகளால் கூட்டம் கூட்டமாக ஜார்வா பழங்குடிகள் செத்து மடிந்தார்கள் என்பதும் செய்தி.

போர்ட்ப்ளேயரில் உள்ள anthropological museumஇல் ஜார்வா உள்ளிட்ட பழங்குடிகளின் வாழ்க்கை வரலாறு, இன வரலாறு, அவர்கள் பயன்படுத்தும் வேட்டைக்கருவிகள், சாதனங்கள் மாதிரிகள் உள்ளன; micro precision என்று மெச்சத்தக்க அளவில் அவர்களின் வேட்டை சாதனங்கள் கச்சிதமாக இருக்கின்றன; 60,000 வருடங்களுக்கு முன் ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து கடல்வழியே பயணித்து இத்தீவை அவர்கள் வந்தடைந்தார்கள் எனில் அவர்களின் கடல்சார் அறிவை என்ன சொல்ல! கடல் பயணத்துக்கான படகுகள், கருவிகள், வேட்டையாடும் அறிவு என அவர்களின் அறிவு நம்மை விடவும் 60,000 வயது மூத்தது; அவர்களை காட்சிப்பொருளாகப் பார்க்கும் நம் அறிவை என்னென்பது?!

திரும்புதல் பயணத்தின்போதுதான் அந்த அற்புதக்காட்சியைக் காணக்கொடுத்துவைத்தது!

தொடரும்

வியாழன், ஏப்ரல் 14, 2016

ஜங்கிள் புக்-2



மிக நுட்பமான உணர்வுகளை விட்டுவிடாமல் போகின்றபோக்கில் பதியவைப்பதே சிறப்பான திரைப்படம்; பெரும் யானைக்கூட்டத்தின் அருகின் மோக்லி சென்றுவிட அதிரவைக்கும் பிளிறலோடு வானுயர யானைகள் கடந்துசெல்ல, அந்தக்குட்டியானை மட்டும் தன் அகலக்கண்கள் விரித்து ‘யார் இது, புதுசா இருக்கே?’ என்றபடி மோக்லியை வியப்பாகப் பார்த்தபடியே நகரும் அந்தக்காட்சி, க்ளாசிக்!

படத்தின் பிற்பாதியில் அகிரா அறியாமல் அதன் குட்டிகளை தன்பக்கம் இழுத்துக்கொண்டு கதை சொல்லும் ஷேர்கான்; அகிரா வந்து ‘குட்டிகளா வாங்க’ என அழைக்க, இரண்டு குட்டிகள் ஷேர்கானின் கால்களில் இருந்து விடுபட, மூன்றாவது குட்டி கால் எடுத்து வைக்குபோது தனது வலதுகாலால் குட்டியை லேசாகத்தடுக்கும் ஷேர்கான்; என்னா ஒரு வில்லத்தனம் என்று வியக்கவைக்கும் நுட்பமான காட்சி! குட்டியின் தாயோடு நாமு்ம் ஒரு விநாடி ‘இது என்ன ப்ளாக்மெய்லா’ என பதறிவிடுகின்றோம்; கைதேர்ந்த ஒரு வில்லனைப்போல அதன்பின் கதையின் முடிவை ஒரு எச்சரிக்கையாக அகிராவுக்கு சொல்லியபடியே அநாயசமாக மூன்றாவது குட்டியையும் போகவிடும் ஷேர்கான்! நுட்பமான வில்லத்தனமான காட்சி! ஷேர்கானின் அங்க அசைவுகள் மிக அற்புதம்!

காலங்காலமாக கதைகேட்டே வளர்ந்த பாரம்பரியக்காரர்கள் அல்லவா நாம்! கதைகளை விரும்புகின்றது நம் மனசு! கதைகளின் ஊடாகப்பயணித்து உண்மைகளையும் பொய்களையும் பிரித்துப்பார்த்து வளர்ந்தவர்கள் நாம்!



பாதாள உலகில் பறக்கும் பாப்பா, விக்கிரமாதித்தன் வேதாளம், தெனாலிராமன், அக்பர் பீர்பல், முல்லா நசுருதீன், 1001 இரவுகள் என்ற அராபியக்கதைகள் (அதன் பகுதியான அலிபாபாவும் நாற்பது திருடர்களும்), அம்புலிமாமா, முயல், வாண்டுமாமா போன்ற சிறுவர் பத்திரிக்கைகள், பின்னர் இரும்புக்கை மாயாவி, லாரன்ஸ் டேவிட் ஸ்டெல்லா, மந்திரவாதி மாண்ட்ரெக், வேதாளன் என்ற Phantom, இதன் தொடர்ச்சியாக சாண்டில்யன் கதைகள், வியாசர் விருந்து (மகாபாரதம், ராஜாஜி எழுதியது), ஆங்கிலக்கதைகளுக்கு ‘இணை’யாக தமிழ்வாணன் (மாஸ்டர் ஆஃப் ஆல் சப்ஜெக்ட்ஸ்) எழுதிய சங்கர்லால் துப்பறியும் கதைகள், ஙே என விழிக்கும் ராஜேந்திரகுமார் கதைகள், ’....என மிகக் கச்சிதமாக இருந்தாள்’ எனும் புஷ்பாதங்கதுரை கதைகள் (அவரேதான் திருவரங்கன் உலா எழுதினார், ஸ்ரீவேணுகோபாலன் என்ற பெயரில்), அனிதா இளம் மனைவி போன்ற சுஜாதாவின் கதைகள், பாலகுமாரன்...என கதை வாசித்ததும் வாசிப்பதும் தொடர்கின்றது.

ஒரு கட்டத்தில் எதை விட வேண்டும், எதை வாசிக்க வேண்டும் என்பது புரியும்போது சில எழுத்தாளர்கள் நம்மை விட்டுப் பிரிகின்றார்கள்; சிலர் நம்மோடு வந்து சேர்கின்றார்கள், சேர்ந்தவர்கள் காலத்துக்கும் நம்மை விட்டுப் பிரிவதில்லை; ஜெயகாந்தன், கண்ணதாசன் வனவாசம், புதுமைப்பித்தன், கநாசு, அசோகமித்ரன், பிரபஞ்சன், ச.தமிழ்ச்செல்வன், தனுஷ்கோடி ராமசாமி (தோழர், சேதாரம், நாரணம்மா...), மீரா, சு.சமுத்திரம், மேலாண்மை பொன்னுச்சாமி, செ.யோகநாதன், சி.சு.செல்லப்பா, கி.ராஜநாராயணன், சிங்கிஸ் அய்த்மாதவ், பரீஸ் வசிலியேவ், செகாவ், புஷ்கின், தோல்ஸ்தோய், தோல்ஸ்தயேவ்ஸ்கி, கோர்க்கி, கோகொல், இவான் துர்கனேவ், மாயகோவ்ஸ்கி, மிகயில் சோலொகோவ், சுந்தரராமசாமி, தோப்பில் முகம்மதுமீரான், வேல ராமமூர்த்தி, கே.முத்தையா, கோமல் சுவாமிநாதன், ஷாஜகான், குறைந்த எண்ணிக்கையில் சிறந்த கதைகள் எழுதிய தோழர் காஷ்யபன் (தேன் கலந்த நீர்), யாரும் யோசித்திட முடியாத நுட்பங்களின் ஊடே பயணிக்கும் சுப்பாராவ், தேனி சீருடையான், இதயகீதன், உதயசங்கர், எஸ்.காமராஜ், பவா செல்லத்துரை, ஆதவன் தீட்சண்யா, ஜாகிர்ராஜா, பா.ராமச்சந்திரன், எஸ்.ராமகிருஷ்ணன்,....இன்னும் இப்போது எழுதத்தொடங்கி எழுதுபவர்கள் என எப்போதும் கூடவே பயணிக்கின்றவர்களாக இருக்கின்றார்கள்.

எதை வாசித்தாலும் வாசிக்காது போனாலும் ஏகாந்தமான ஆள் அரவமற்ற காடுகளையும் மலைகளையும் அருவிகளையும் சிற்றாறுகளையும் வனாந்திரங்களையும் வயல்களையும் மனசு நாடியபடியேதான் இருக்கின்றது; யாரையும் தொந்தரவு செய்யாத யார் தொந்தரவையும் விரும்பாத ஒரு காட்டுவாசியாக இருக்கவே மனசு விரும்புகின்றது, அதன் நீட்சியாகவே வண்டலூர் மிருகக்காட்சி சாலைக்கு செல்வதும், பழைய குற்றாலம், ஐந்தருவி, புலியருவியை சும்மாவேனும் சுற்றித்திரிய விரும்புவதும், தென்காசியில் இருந்து கொல்லம் செல்லும் மலைப்பாதை ரயிலில் 10 ருபாய் டிக்கெட்டில் ஜன்னல் இருக்கையை விரும்பி வைத்த கண் வாங்காமல் வெளியே பார்த்துக்கொண்டே வருவதும் ஜங்கிள் புக்குமாக இருக்கின்றது.

கதை சொல்லியவர்களும் கேட்டவர்களும் பாக்கியவான்கள்! ஆம், சொல்லியவர்களும்தான்! நமது குழந்தைகளுக்கு கதை சொல்லி வளர்ப்போம்!

தொடரும்

ஜங்கிள் புக்-1

ஜங்கிள் புக்-1

1980களில் தூர்தர்ஷனில் ஞாயிறு காலை மோக்லியின் வருகைக்காக காத்திருப்போம்; அடர்காடு, புலி, கருஞ்சிறுத்தை, ஓநாய்கள் குட்டிகள், மலைப்பாம்பு, யானைகள், குரங்குகள், கழுகுகள், குருவிகள், கரடி, மரங்கொத்தி...அத்தனைக்கும் மனிதர்கள் போல் பெயர் உண்டு, நம்மைப்போல் பேசவும் செய்யும், நம்மைப்போல் மோசடி பித்தலாட்டம் மட்டும் செய்யத்தெரியாது.

நேற்று ஜங்கிள் புக் 3டி படத்துக்கு குடும்பத்துடன் செல்வது என நண்பர் டக்ளஸ் அழைக்க, திட்டமிட்டேன்; ஒரு நண்பரிடம் சொன்னபோது ‘பழைய படமாச்சே’ என்றார்; ஒரு நிமிசம் அப்படியே ஸ்தம்பித்தேன்; பாட்டி சொன்ன கதைகள், தூர்தர்ஷன், ப்ளாக் அண்ட் வைட் டிவி மோக்லி...என்று சொல்லியும் ‘பழைய’திலேயே நின்றார்;


நாட்டார் கதைகளும் புராணக்கதைகளும் செவிவழிக்கதைகளும் பேய்பிசாசுதேவதைக்கதைகளும் என்றைக்குமே புதுசுதான், அவை பழையதாவதில்லை என்று அவர் கேட்ட கதைகள் பற்றிச்சொல்லியே புரியவைத்தேன்;

உலகின் முதல் ஆதிக்கதையான கில்காமெஷ் இப்போதும் புதுசாகத்தான் இருக்கின்றது; சின்ன வயதில் அம்புலிமாமாவில் வாசித்த ’தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் முருங்கை மரத்தின் மீது ஏறி அங்கு தொங்கும் வேதாளத்தின் உடலை வெட்டி வீழ்த்தினான்; அப்போது அதனுள்ளிருந்த வேதாளம் விக்கிரமனைப்பார்த்து எள்ளி நகையாடியது’ இப்போதும் புதுசாகத்தான் இருக்கு; ஆனால் அப்போது வாசித்த கதாபாத்திரங்கள் பால்ய மனதின் உருவாக்கத்துக்கு ஒப்ப மாயாஜால பிம்பங்களாக மயக்கின; அதே கதாபாத்திரங்கள் நம்மைச் ‘சுற்றியும்’ இருப்பதை இப்போது வயதுவந்த மனசு புரிந்துகொள்கின்றது; மனிதர்களை விடவும் வேதாளத்தின் நட்பு பரிசுத்தமானது என்பது தெரிகின்றது; என்ன, தலைகீழாக என்னால் தொங்க முடியாது, அவ்வளவுதான். ‘தலைகீழாக’ மாத்தி யோசிப்பதால்தான் வேதாளம் இத்தனை புத்திசாலியாக இருக்குதோ என்றும் யோசனையாகவும் இருக்கின்றது. அறிந்தவர்கள் சொல்லலாம், என்னிடம் இருக்கும் பறக்கும் கம்பளத்தை இலவசமாக தருவேன்.

நிற்க.


அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவில் பம்பாய் மாகாணத்தில் பிறந்தவர் ருட்யார்ட் கிப்ளிங் (Rudyard Kipling); 1865. தனது செல்ல மகளான ஜோசஃபினுக்காக அவர் சொன்ன கதையே இந்த ஜங்கிள் புக் கதைகளுக்கான தொடக்கம் என்பதை அறிகின்றோம்; ஜோசஃபின் ஆறு வயதில் இறந்து விடுகின்றாள். 1894இல் ஜங்கிள்புக் கதைகள் வெளியாகின்றன;

மனிதர்களைப்போல் பேசும் பாகிரா என்ற கருஞ்சிறுத்தை, பலூ கரடி, ஷேர்கான் என்ற புலி, க்கா என்ற மலைப்பாம்பு, இவர்களுடன் காட்டில் தொலைந்து போன மோக்லியை குழந்தயாக வளர்க்கும் அகிரா என்ற ஓநாயின் குடும்பம். கறுப்பு வெள்ளையில் 1980களில் பார்த்தது இப்போது கலரில் 3டியில் பார்க்கும்போது நாமும் குழந்தைகள் ஆகின்றோம்!

அடர்காட்டின் முதிர்ந்த உயர்ந்த மரக்கிளைகள் நம்மைத்தொடுகின்றன! ஆழ்பள்ளத்தாக்குகள் நம்மைப்பயமுறுத்துகின்றன; அடர் இருட்டு நம்மை பத்திரமாக இருக்கச்சொல்கின்றது; மிகமிக உயர்ந்த அதிஅகலமான ஆர்ப்பரித்துக்கொட்டும் அருவிநீரில் நாம் நனைகின்றோம்; மோக்லி வானத்தைதொடும் மரங்களில் முதிர்கிளைகளில் அநாயசமாக ஓடும்போது அய்யோ விழுந்திடுவானோ என நாம் பதட்டப்படுகின்றோம்; விழுந்தாலும் பாகிராவோ பலுவோ எங்கிருந்தாலும் பறந்துவந்து மோக்லியைத்தாங்கிகொள்வார்கள் என கொஞ்சம் நிதானப்படுகின்றோம்; தங்கபுஷ்பம் ஆன பெருந்தீ பெரும் ஓலமிட்டு ஆங்காரத்துடன் அடர்காட்டை எரித்து ஆர்ப்பரிக்கும்போது வீசும் காற்றில் பரவி நம்மை நோக்கி வரும்போது நெருப்பின் இதழ்கள் நம்மைத்தீண்டிவிடாமல் இருக்க கைகள் கொண்டு தடுக்கின்றோம்.

எல்லாவற்றுக்கும் மேலாக ஷேர்கானின் அதிவலிமையான முன்கால்கள் எந்த நிமிசத்திலும் நம் முகத்தில் அறைந்துவிடக்கூடும் என படம் முழுவதுமே எச்சரிக்கையாக இருக்கின்றோம்.
(தொடரும்)