2014ஆம் ஆண்டு மேகாலயா மாநிலத்தின் தலைநகரான ஷில்லாங்குக்கு சுற்றுலா சென்றிருந்தோம்; வடகிழக்கு மாநிலங்களுக்கே உரித்தான அமைதியும் மக்கள்தொகை நெரிசல் இல்லாத ஊர்களும் வெட்டவெளிகள் வனங்கள் நீர்நிலைகள் என்று இருந்தது ஷில்லாங். மாலை நான்கு மணிக்கெல்லாம் நம் ஊரின் 10 மணி இருட்டு வந்து விடுகின்றது. இயற்கை வஞ்சகம் இல்லாமல் கொட்டிக்கொடுத்திருக்கின்றது தன் அழகை அங்கு! அல்லது அங்குதான் வாழ்ந்துகொண்டிருக்கின்றது என்றும் தோன்றுகின்றது! ஜங்கிள் லைஃப்!
டவுன் என்று சொல்லத்தக்க இடங்கள் தவிர மற்றவை எல்லாம் ஆள் அரவமற்ற இடங்களாகவே இருக்கின்றன; இங்கே ஒரு வீடென்றால் வெகுதொலைவில் மற்றொரு வீடு; நம் ’சகல அதிநவீன தொழினுட்ப’ வாழ்வோடு ஒப்பிடும்போது அம்மக்களின் நவீனவசதியற்ற எளிய வாழ்க்கை நிம்மதியானதாக இருப்பதாக எனக்குத் தோன்றியது; கார்களின் எண்ணிக்கை குறைவென்பதால் இரைச்சல் இல்லை; சுத்தமாக இருந்தது காற்று; மக்கள் நடக்கின்றார்கள்; அதிசயமாக அரசுப்பேருந்து ஒன்றைக்காண நேரிட்டது. குறைந்தபட்ச வசதிகளுடன் நிம்மதியாக வாழ்கின்றார்கள்.
ஷில்லாங் விமான நிலையத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் ஒரு சந்தை நடந்துகொண்டிருந்தது; பழங்கள் வாங்கலாம் எனப்போனோம்; நம் ஊர்களின் பெரிய மார்க்கெட்டுக்களில் வீதிகளில் சிறுவியாபாரிகள் போடும் கடைகளும் பொருட்களும்தான் அங்கே பெரிய சந்தையாக விசேசமான பொருட்களாக இருந்தது! மக்கள் தங்கள் குறைந்த வருமானத்தில் திருப்தியுடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்!
சகல சம்பத்துக்களுடன் வாகனாதிவசதிகளுடன் colourful and unaffordable (or affordable to some section) மால்களுடன் வாழ்ந்துகொண்டிருக்கும் நாம் என்ன வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் என்று இன்றுவரையிலும் யோசித்துக்கொண்டேதான் இருக்கின்றேன்! இப்போது இதே வடகிழக்கு மாநில இளைஞர்களை சென்னையிலும் தென்மாவட்டங்களும் கூட மால்களிலும் ஹோட்டல்களிலும் ‘பிரமாண்டமாய்’ ஸ்டோர்களிலும் அப்பார்ட்மெண்ட் கட்டுமான வேலைகள், சென்னை மெட்ரொ ரயில்கட்டுமான வேலையாட்களாகப் பார்க்க முடிகின்றது; உழைப்புச்சுரண்டல்!
சென்ற வருடம் இதே ஏப்ரல் மாதம் அந்தமான் தீவுகளுக்கு சென்றிருந்தோம். 300க்கும் அதிகமான தீவுகள் இருந்தாலும் அத்தனை தீவுகளிலும் குடியேற்றம் இல்லை என்பதை அறிந்தேன். ஒரு வருடம் ஓடிய பின்னும் இன்னும் என் மனதில் நிற்பது, அந்தமானின் பரந்துவிரிந்த மகாசமுத்திரத்தை விடவும் உலகின் மிக அழகிய கடற்கரைகளில் ஒன்றான ராதாநகர் கடற்கரையைவிடவும், அடர்காட்டின் நடுவே நான் கண்ட அந்த 11 மனிதர்கள்தான்! நம் மூதாதையர்கள் அவர்கள்!
அந்தமானில் ஆறு பழங்குடி மக்கள் இருக்கின்றார்கள்: க்ரேட் அந்தமானீஸ், நிகோபாரீஸ், ஜாரவா, செண்டினெல்ஸ், சோம்பென்ஸ், ஓங்கி. ஜாரவா பழங்குடிகள் 60,000 வருடங்களுக்கு முன் ஆப்பிரிக்காவில் இருந்து கடல் வழியே இங்கு வந்து குடியேறியவர்கள் என வரலாறு சொல்கின்றது. இவர்கள் வசிக்கும் காட்டின் ஊடாக தேசிய நெடுஞ்சாலை great andaman trunk road ஒன்றை இந்திய அரசு 1970இல் அமைத்தது; போர்ட்ப்ளேயரையும் டிக்லிபூரையும் இணைக்கும் 360 கிமீ சாலை: தங்கள் காட்டை ஆக்கிரமிக்கும் ஒரு செயலாக இதைப்பார்த்த ஜாரவாக்கள் சாலை அமைத்த சில பணி்யாளர்களை அம்பு எய்து கொன்றும் விட்டார்கள்; இப்பாதை 'சுற்றுலாப்பயணிகளை தீவின் மற்றொரு முனைக்கு கொண்டு செல்லும் பாதை’யாக பயன்படுத்தப்படுவதாக இந்திய அரசு சொன்னாலும் உண்மையில் ஜாரவா மக்களை காட்சிப்பொருளாக்கும் சுற்றுலாவே அதன் நோக்கமாகும்; கொல்கத்தா உயர்நீதிமன்றம் இச்சாலையை மூட உத்தரவிட்டது 2002 என்றால் 14 வருடங்களாக இந்திய அரசு கண்டுகொள்ளாமல் இருக்கின்றதெனப்பொருள்.
ஜார்வாக்களை புகைப்படம் எடுப்பது தடைசெய்யப்பட்டுள்ளது; நான் புகைப்படும் எடுக்கவில்லை; (இண்டெர்னெட்டில் அவர்களது படங்கள் கிடைக்கின்றன). எனவே காட்டின் ஒரு முனையில் உள்ள ஜார்வா ப்ரொடெக்சன் போஸ்ட்டை படம் எடுத்தேன், அதனை இங்கே பதிகின்றேன்.
நிற்க.
காரில் என்னுடன் பயணித்தவர்கள் மட்டுமல்லர், பொதுவாகவே பழங்குடி மக்களை காட்டுவாசிகள் என்று விளிப்பதே நாட்டுவாசிகளான நமது வழக்கம்.
உண்மையில் அவர்களே இந்த உலகின் ஆதிக்குடிமக்கள் என்பதை புரியாத நவீன அறிவிலிகளாகவே நாம் இருக்கின்றோம். தேசியநெடுஞ்சாலை எண் 223, 300 கிமீக்கும் அதிகமானது; முழுக்கவும் பல்லாயிரம் வருடங்கள் பழைமையான அடர்காட்டின் ஊடே செல்வது; இருமருங்கிலும் பல நூறு வருசங்கள் வயதான மரங்கள்,சில நாம் அறிந்தவை, பல நாம் அறியாதவை.
ஆழ்ந்த அமைதி எங்கிலும் சூழ்ந்திருக்க,அவ்வப்போது நம்மை வந்தடையும் விதவிதமான பெயர் அறியாப்பறவைகளின் கூவல்களுடன், இடை இடையே மான்களின் குறுக்கீடுகளுடன் நம் பயணம் தொடர்கின்றது;
எப்போது ஒரு ‘காட்டுவாசி’ தென்படுவான் என்ற பெரும் ‘த்ரில்’காருக்குள் இருந்த நாட்டுவாசிகளுக்குள் சூழ்ந்திருக்கின்றபடியால் அவ்வப்போது எழும்பும் மெல்லிய குரலிலான உரையாடல்கள் சுருக்கமாகவே முடிகின்றன; கண்கள் காருக்கு வெளியேதான்.
யாரும் எதிர்பாராத ஒரு திருப்பத்தில்தான் அந்த நால்வரும் காரை வழிமறித்தார்கள்; கறுப்பு என்றால் அப்படி ஒரு மினுமினுப்பான கறுப்பு; நம் ஹீரோக்களின் ஆறுகட்டு பில்டப் எல்லாம் தோற்றுவிடும் உடற்கட்டு; காரின் வேகத்தை குறைத்தபடியே வழியுண்டாக்கினார் காரோட்டி; அவர்கள் காரின் ஜன்னல்களை தட்டினார்கள்; ஏதாவது கொடுக்கும்படி இருந்தது அவர்களின் சைகையும் குரலும். வழிகிடைத்தவுடன் காரோட்டி வேகம் பிடித்தார்.
இதன் பிறகு சில பெண்களையும் குழந்தைகளையும் பார்த்தேன். ஆண்களும் பெண்களும் இடுப்பில் சிவப்பான ஒன்றை அணிந்து இருந்தார்கள்; பெண்கள் மார்பில் எதையும் அணியவில்லை.
காரை நிறுத்தக்கூடாது, திறக்கக்கூடாது, ஜார்வாக்களுடன் பேசக்கூடாது, உணவுப்பொருட்கள் உள்ளிட்ட எதையும் கொடுக்கக்கூடாது, புகைப்படம் எடுக்கக்கூடாது என்பது நிபந்தனைகள்.ஆனாலும் நவீன உலகைச்சார்ந்த அறிவாளிகளான நம்மவர்கள் ஜார்வாக்களுக்கு மது கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துக்களை கொடுத்து கெடுக்கின்றார்கள் என்பதும் ஜார்வா பெண்களை பாலியல்வல்லுறவு செய்கின்றார்கள் என்பதும் இணையத்தில் கிடைக்கும் செய்தி; தவிர நம்மவர்கள் அவர்களுக்குக் கொடுத்த வியாதிகளால் கூட்டம் கூட்டமாக ஜார்வா பழங்குடிகள் செத்து மடிந்தார்கள் என்பதும் செய்தி.
போர்ட்ப்ளேயரில் உள்ள anthropological museumஇல் ஜார்வா உள்ளிட்ட பழங்குடிகளின் வாழ்க்கை வரலாறு, இன வரலாறு, அவர்கள் பயன்படுத்தும் வேட்டைக்கருவிகள், சாதனங்கள் மாதிரிகள் உள்ளன; micro precision என்று மெச்சத்தக்க அளவில் அவர்களின் வேட்டை சாதனங்கள் கச்சிதமாக இருக்கின்றன; 60,000 வருடங்களுக்கு முன் ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து கடல்வழியே பயணித்து இத்தீவை அவர்கள் வந்தடைந்தார்கள் எனில் அவர்களின் கடல்சார் அறிவை என்ன சொல்ல! கடல் பயணத்துக்கான படகுகள், கருவிகள், வேட்டையாடும் அறிவு என அவர்களின் அறிவு நம்மை விடவும் 60,000 வயது மூத்தது; அவர்களை காட்சிப்பொருளாகப் பார்க்கும் நம் அறிவை என்னென்பது?!
திரும்புதல் பயணத்தின்போதுதான் அந்த அற்புதக்காட்சியைக் காணக்கொடுத்துவைத்தது!
தொடரும்
தொடரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக