மிக நுட்பமான உணர்வுகளை விட்டுவிடாமல் போகின்றபோக்கில் பதியவைப்பதே சிறப்பான திரைப்படம்; பெரும் யானைக்கூட்டத்தின் அருகின் மோக்லி சென்றுவிட அதிரவைக்கும் பிளிறலோடு வானுயர யானைகள் கடந்துசெல்ல, அந்தக்குட்டியானை மட்டும் தன் அகலக்கண்கள் விரித்து ‘யார் இது, புதுசா இருக்கே?’ என்றபடி மோக்லியை வியப்பாகப் பார்த்தபடியே நகரும் அந்தக்காட்சி, க்ளாசிக்!
படத்தின் பிற்பாதியில் அகிரா அறியாமல் அதன் குட்டிகளை தன்பக்கம் இழுத்துக்கொண்டு கதை சொல்லும் ஷேர்கான்; அகிரா வந்து ‘குட்டிகளா வாங்க’ என அழைக்க, இரண்டு குட்டிகள் ஷேர்கானின் கால்களில் இருந்து விடுபட, மூன்றாவது குட்டி கால் எடுத்து வைக்குபோது தனது வலதுகாலால் குட்டியை லேசாகத்தடுக்கும் ஷேர்கான்; என்னா ஒரு வில்லத்தனம் என்று வியக்கவைக்கும் நுட்பமான காட்சி! குட்டியின் தாயோடு நாமு்ம் ஒரு விநாடி ‘இது என்ன ப்ளாக்மெய்லா’ என பதறிவிடுகின்றோம்; கைதேர்ந்த ஒரு வில்லனைப்போல அதன்பின் கதையின் முடிவை ஒரு எச்சரிக்கையாக அகிராவுக்கு சொல்லியபடியே அநாயசமாக மூன்றாவது குட்டியையும் போகவிடும் ஷேர்கான்! நுட்பமான வில்லத்தனமான காட்சி! ஷேர்கானின் அங்க அசைவுகள் மிக அற்புதம்!
காலங்காலமாக கதைகேட்டே வளர்ந்த பாரம்பரியக்காரர்கள் அல்லவா நாம்! கதைகளை விரும்புகின்றது நம் மனசு! கதைகளின் ஊடாகப்பயணித்து உண்மைகளையும் பொய்களையும் பிரித்துப்பார்த்து வளர்ந்தவர்கள் நாம்!
பாதாள உலகில் பறக்கும் பாப்பா, விக்கிரமாதித்தன் வேதாளம், தெனாலிராமன், அக்பர் பீர்பல், முல்லா நசுருதீன், 1001 இரவுகள் என்ற அராபியக்கதைகள் (அதன் பகுதியான அலிபாபாவும் நாற்பது திருடர்களும்), அம்புலிமாமா, முயல், வாண்டுமாமா போன்ற சிறுவர் பத்திரிக்கைகள், பின்னர் இரும்புக்கை மாயாவி, லாரன்ஸ் டேவிட் ஸ்டெல்லா, மந்திரவாதி மாண்ட்ரெக், வேதாளன் என்ற Phantom, இதன் தொடர்ச்சியாக சாண்டில்யன் கதைகள், வியாசர் விருந்து (மகாபாரதம், ராஜாஜி எழுதியது), ஆங்கிலக்கதைகளுக்கு ‘இணை’யாக தமிழ்வாணன் (மாஸ்டர் ஆஃப் ஆல் சப்ஜெக்ட்ஸ்) எழுதிய சங்கர்லால் துப்பறியும் கதைகள், ஙே என விழிக்கும் ராஜேந்திரகுமார் கதைகள், ’....என மிகக் கச்சிதமாக இருந்தாள்’ எனும் புஷ்பாதங்கதுரை கதைகள் (அவரேதான் திருவரங்கன் உலா எழுதினார், ஸ்ரீவேணுகோபாலன் என்ற பெயரில்), அனிதா இளம் மனைவி போன்ற சுஜாதாவின் கதைகள், பாலகுமாரன்...என கதை வாசித்ததும் வாசிப்பதும் தொடர்கின்றது.
ஒரு கட்டத்தில் எதை விட வேண்டும், எதை வாசிக்க வேண்டும் என்பது புரியும்போது சில எழுத்தாளர்கள் நம்மை விட்டுப் பிரிகின்றார்கள்; சிலர் நம்மோடு வந்து சேர்கின்றார்கள், சேர்ந்தவர்கள் காலத்துக்கும் நம்மை விட்டுப் பிரிவதில்லை; ஜெயகாந்தன், கண்ணதாசன் வனவாசம், புதுமைப்பித்தன், கநாசு, அசோகமித்ரன், பிரபஞ்சன், ச.தமிழ்ச்செல்வன், தனுஷ்கோடி ராமசாமி (தோழர், சேதாரம், நாரணம்மா...), மீரா, சு.சமுத்திரம், மேலாண்மை பொன்னுச்சாமி, செ.யோகநாதன், சி.சு.செல்லப்பா, கி.ராஜநாராயணன், சிங்கிஸ் அய்த்மாதவ், பரீஸ் வசிலியேவ், செகாவ், புஷ்கின், தோல்ஸ்தோய், தோல்ஸ்தயேவ்ஸ்கி, கோர்க்கி, கோகொல், இவான் துர்கனேவ், மாயகோவ்ஸ்கி, மிகயில் சோலொகோவ், சுந்தரராமசாமி, தோப்பில் முகம்மதுமீரான், வேல ராமமூர்த்தி, கே.முத்தையா, கோமல் சுவாமிநாதன், ஷாஜகான், குறைந்த எண்ணிக்கையில் சிறந்த கதைகள் எழுதிய தோழர் காஷ்யபன் (தேன் கலந்த நீர்), யாரும் யோசித்திட முடியாத நுட்பங்களின் ஊடே பயணிக்கும் சுப்பாராவ், தேனி சீருடையான், இதயகீதன், உதயசங்கர், எஸ்.காமராஜ், பவா செல்லத்துரை, ஆதவன் தீட்சண்யா, ஜாகிர்ராஜா, பா.ராமச்சந்திரன், எஸ்.ராமகிருஷ்ணன்,....இன்னும் இப்போது எழுதத்தொடங்கி எழுதுபவர்கள் என எப்போதும் கூடவே பயணிக்கின்றவர்களாக இருக்கின்றார்கள்.
எதை வாசித்தாலும் வாசிக்காது போனாலும் ஏகாந்தமான ஆள் அரவமற்ற காடுகளையும் மலைகளையும் அருவிகளையும் சிற்றாறுகளையும் வனாந்திரங்களையும் வயல்களையும் மனசு நாடியபடியேதான் இருக்கின்றது; யாரையும் தொந்தரவு செய்யாத யார் தொந்தரவையும் விரும்பாத ஒரு காட்டுவாசியாக இருக்கவே மனசு விரும்புகின்றது, அதன் நீட்சியாகவே வண்டலூர் மிருகக்காட்சி சாலைக்கு செல்வதும், பழைய குற்றாலம், ஐந்தருவி, புலியருவியை சும்மாவேனும் சுற்றித்திரிய விரும்புவதும், தென்காசியில் இருந்து கொல்லம் செல்லும் மலைப்பாதை ரயிலில் 10 ருபாய் டிக்கெட்டில் ஜன்னல் இருக்கையை விரும்பி வைத்த கண் வாங்காமல் வெளியே பார்த்துக்கொண்டே வருவதும் ஜங்கிள் புக்குமாக இருக்கின்றது.
கதை சொல்லியவர்களும் கேட்டவர்களும் பாக்கியவான்கள்! ஆம், சொல்லியவர்களும்தான்! நமது குழந்தைகளுக்கு கதை சொல்லி வளர்ப்போம்!
தொடரும்
2 கருத்துகள்:
ஒம்பது வயசுலெருந்து ஆழ்வார்குறிச்சி,சிவசைலம்,தென்காசி குத்தாலம் நுகோடைல சுத்தியிருக்கேன் .காத்துக்காலத்துல குத்தாலம், இலஞ்சி , நு இருந்திருக்கென் இன்னிக்கும் மனசுல நிக்கிது. அண்ணே ! பங்களுரிலெருந்து மலை வழியா சிருங்கெரி வரை போகணூம் ஐயா ! காட்டுபகுதி-மல எற்றம்-விதவிதமான தவரங்கள்-பூவரசு ,மருத மரம்.தேக்கு, எலுமிச்சை , மிளகு,காபி,தேயிலை மலை ஏற ஏற மாறி மாறீவரும் தாவரங்கள், உலகத்திலேயே (சிரபுஞ்சியைவிட) அதிக மழி பெய்யும் ஹுகும்பே கண்கொள்ளாககாட்சி ! போங்க போய்பாருங்க ,
---காஸ்யபன்.
அருமை தோழர்!எங்கே சுத்தி எங்கே போனாலும் மனசெல்லாம் நம்ம ஊர்தான்! ஹுகும்பே! நிச்சயம் செல்வோம் குடும்பத்துடன்! போகிற போக்கில் அண்ணேன்னு நீங்கள் விளித்தாலும் நாங்கள்ளாம் வயசுலயும் அனுபவத்துலயும் ரொம்ப சின்னவங்க! உங்கள் அனுபவங்களும் அவற்றின் சிறு பதிவுகளையும் கூட நீங்கள் நினைவில் வைத்திருந்து மீள்பதிவு செய்வது என் போன்றவர்களை வியக்கவைக்கும் அற்புதம்! வாழ்க நீங்கள்! அன்புடன் இக்பால்
கருத்துரையிடுக