வியாழன், ஏப்ரல் 14, 2016

ஜங்கிள் புக்-1

ஜங்கிள் புக்-1

1980களில் தூர்தர்ஷனில் ஞாயிறு காலை மோக்லியின் வருகைக்காக காத்திருப்போம்; அடர்காடு, புலி, கருஞ்சிறுத்தை, ஓநாய்கள் குட்டிகள், மலைப்பாம்பு, யானைகள், குரங்குகள், கழுகுகள், குருவிகள், கரடி, மரங்கொத்தி...அத்தனைக்கும் மனிதர்கள் போல் பெயர் உண்டு, நம்மைப்போல் பேசவும் செய்யும், நம்மைப்போல் மோசடி பித்தலாட்டம் மட்டும் செய்யத்தெரியாது.

நேற்று ஜங்கிள் புக் 3டி படத்துக்கு குடும்பத்துடன் செல்வது என நண்பர் டக்ளஸ் அழைக்க, திட்டமிட்டேன்; ஒரு நண்பரிடம் சொன்னபோது ‘பழைய படமாச்சே’ என்றார்; ஒரு நிமிசம் அப்படியே ஸ்தம்பித்தேன்; பாட்டி சொன்ன கதைகள், தூர்தர்ஷன், ப்ளாக் அண்ட் வைட் டிவி மோக்லி...என்று சொல்லியும் ‘பழைய’திலேயே நின்றார்;


நாட்டார் கதைகளும் புராணக்கதைகளும் செவிவழிக்கதைகளும் பேய்பிசாசுதேவதைக்கதைகளும் என்றைக்குமே புதுசுதான், அவை பழையதாவதில்லை என்று அவர் கேட்ட கதைகள் பற்றிச்சொல்லியே புரியவைத்தேன்;

உலகின் முதல் ஆதிக்கதையான கில்காமெஷ் இப்போதும் புதுசாகத்தான் இருக்கின்றது; சின்ன வயதில் அம்புலிமாமாவில் வாசித்த ’தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் முருங்கை மரத்தின் மீது ஏறி அங்கு தொங்கும் வேதாளத்தின் உடலை வெட்டி வீழ்த்தினான்; அப்போது அதனுள்ளிருந்த வேதாளம் விக்கிரமனைப்பார்த்து எள்ளி நகையாடியது’ இப்போதும் புதுசாகத்தான் இருக்கு; ஆனால் அப்போது வாசித்த கதாபாத்திரங்கள் பால்ய மனதின் உருவாக்கத்துக்கு ஒப்ப மாயாஜால பிம்பங்களாக மயக்கின; அதே கதாபாத்திரங்கள் நம்மைச் ‘சுற்றியும்’ இருப்பதை இப்போது வயதுவந்த மனசு புரிந்துகொள்கின்றது; மனிதர்களை விடவும் வேதாளத்தின் நட்பு பரிசுத்தமானது என்பது தெரிகின்றது; என்ன, தலைகீழாக என்னால் தொங்க முடியாது, அவ்வளவுதான். ‘தலைகீழாக’ மாத்தி யோசிப்பதால்தான் வேதாளம் இத்தனை புத்திசாலியாக இருக்குதோ என்றும் யோசனையாகவும் இருக்கின்றது. அறிந்தவர்கள் சொல்லலாம், என்னிடம் இருக்கும் பறக்கும் கம்பளத்தை இலவசமாக தருவேன்.

நிற்க.


அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவில் பம்பாய் மாகாணத்தில் பிறந்தவர் ருட்யார்ட் கிப்ளிங் (Rudyard Kipling); 1865. தனது செல்ல மகளான ஜோசஃபினுக்காக அவர் சொன்ன கதையே இந்த ஜங்கிள் புக் கதைகளுக்கான தொடக்கம் என்பதை அறிகின்றோம்; ஜோசஃபின் ஆறு வயதில் இறந்து விடுகின்றாள். 1894இல் ஜங்கிள்புக் கதைகள் வெளியாகின்றன;

மனிதர்களைப்போல் பேசும் பாகிரா என்ற கருஞ்சிறுத்தை, பலூ கரடி, ஷேர்கான் என்ற புலி, க்கா என்ற மலைப்பாம்பு, இவர்களுடன் காட்டில் தொலைந்து போன மோக்லியை குழந்தயாக வளர்க்கும் அகிரா என்ற ஓநாயின் குடும்பம். கறுப்பு வெள்ளையில் 1980களில் பார்த்தது இப்போது கலரில் 3டியில் பார்க்கும்போது நாமும் குழந்தைகள் ஆகின்றோம்!

அடர்காட்டின் முதிர்ந்த உயர்ந்த மரக்கிளைகள் நம்மைத்தொடுகின்றன! ஆழ்பள்ளத்தாக்குகள் நம்மைப்பயமுறுத்துகின்றன; அடர் இருட்டு நம்மை பத்திரமாக இருக்கச்சொல்கின்றது; மிகமிக உயர்ந்த அதிஅகலமான ஆர்ப்பரித்துக்கொட்டும் அருவிநீரில் நாம் நனைகின்றோம்; மோக்லி வானத்தைதொடும் மரங்களில் முதிர்கிளைகளில் அநாயசமாக ஓடும்போது அய்யோ விழுந்திடுவானோ என நாம் பதட்டப்படுகின்றோம்; விழுந்தாலும் பாகிராவோ பலுவோ எங்கிருந்தாலும் பறந்துவந்து மோக்லியைத்தாங்கிகொள்வார்கள் என கொஞ்சம் நிதானப்படுகின்றோம்; தங்கபுஷ்பம் ஆன பெருந்தீ பெரும் ஓலமிட்டு ஆங்காரத்துடன் அடர்காட்டை எரித்து ஆர்ப்பரிக்கும்போது வீசும் காற்றில் பரவி நம்மை நோக்கி வரும்போது நெருப்பின் இதழ்கள் நம்மைத்தீண்டிவிடாமல் இருக்க கைகள் கொண்டு தடுக்கின்றோம்.

எல்லாவற்றுக்கும் மேலாக ஷேர்கானின் அதிவலிமையான முன்கால்கள் எந்த நிமிசத்திலும் நம் முகத்தில் அறைந்துவிடக்கூடும் என படம் முழுவதுமே எச்சரிக்கையாக இருக்கின்றோம்.
(தொடரும்)

கருத்துகள் இல்லை: