திரும்பி வந்தபோதான பயணத்தில்தான் காட்டின் விளிம்பில் அந்தப் பெண்ணைப் பார்க்க நேர்ந்தது; தன் பருவ வயதில் இருந்தாள் அவள்; அருகில் அமர்ந்திருந்தவர் அவளது தந்தையாக இருக்கலாம்; எங்கள் கார் நெருங்கும்போது அவள் தன் மார்பகங்களை தன் இரு கைகளால் மூடினாள்; பேரதிர்ச்சியாக இருந்தது எனக்கு!
ஜார்வாக்களின் வரலாற்றைப் படித்திருந்ததால், மார்பகங்களை மூடி மறைக்க வேண்டும் என்பது அவர்கள் அறியாத ஒன்று என்பதை நான் அறிந்திருந்தேன்; அவ்வாறெனில் அது மூடி மறைக்க வேண்டிய ஒரு உறுப்பு என்று அந்த வாலிபப்பெண்ணுக்கு கற்றுத்தந்தது யாராக இருக்கும்? காட்டுக்கு வெளியே இருக்கின்ற நவீனர்கள்தான் காரணமாக இருக்கலாம்; யாராவது அப்பெண்ணை உற்றோ வெறித்தோ பார்த்திருக்கக்கூடிய கெடுவாய்ப்போ நவீனர்களின் பாலியல் சீண்டலுக்கு உள்ளான கேடுகெட்ட வாய்ப்போ அப்பெண்ணுக்கு நேர்ந்திருக்கலாம்.வேறு எப்படியும் என்னால் சிந்திக்க முடியவில்லை. காரணம், அடுத்த சம்பவம்.
ஒரு திருப்பத்தில்தான் அந்தக் காவியக்காட்சியைக் கண்டேன்; உயர்ந்த ஒரு ஜார்வா இளைஞன்; தோள்களில் இறந்துவிட்ட பருத்த ஒரு மான் அநாயசமாக கிடக்க வலது கையில் நீண்ட வில்; அவனுடன் இளம் யுவதி; மார்பகங்களை அவள் மூடியிருக்கவில்லை. அற்புதமான ஒரு அழகனும் ஒரு பேரழகியும்! எங்கள் கார் நெருங்கும்போதும் அவனும் கண்டுகொள்ளவில்லை, அவளும் கண்டுகொள்ளவில்லை, மறைக்கவும் முயற்சிசெய்யவில்லை. ஏதோ பேசியபடி மிகச்சாதாரணமாக எங்களைக் கண்டுகொள்ளாமல் அவர்கள் கடந்து சென்ற அச்செவ்வியல் காட்சிக்கு வயது சத்தியமாக 60,000 வருடங்கள்!
அந்த இளைஞன் மட்டும் தன் நீண்ட வில்லை எங்கள் காரின் கண்ணாடியைக் குறிவைத்து ஏதோ சொல்லி எங்களை அலட்சியப்படுத்தினான். ’இது எங்கள் காடு, உங்களுக்கு இங்கு என்ன வேலை? வெளியேறுங்கள்’ என எச்சரித்திருக்கக்கூடும். அதன்றி எங்களுடன் உரையாடுதற்கு அவர்களிடம் ஏதும் இல்லை (நம் நவீனர்களுக்கோ அவர்களிடம் பல்வேறு ‘காரியங்களை’ நிறைவேற்றிகொள்ளும் பொருட்டு உரையாடுதல் தேவைப்படுகின்றது).
அந்தமான் பயணத்தின் அடர்காட்டில் நான் சந்திக்க நேர்ந்த அந்த பதினொரு ஜார்வாக்களும் என் மூதாதையர்கள்; என் பாட்டனின் பாட்டன் வழியே எனக்குச்சொந்தமானவர்கள் என்றே என் உணர்வுகள் என்னிடம் பேசின.அவர்களுக்கும் எனக்கும் இடையேயான உறவுக்கு அடையாளமாக அவர்களுக்கும் எனக்கும் பொதுவான பாட்டைப்பாடிக் கொண்டிருந்த அக்காட்டின் குயிலொன்று உதிர்த்த சிறகை நான் திரும்பும்போது என்னோடு எடுத்து வந்தேன்.
இப்போதும் அந்தக்குயில் அக்காட்டின் நெடிதுயர்ந்த ஒரு மரத்தின் மீதமர்ந்தபடி அவர்களுக்கும் எனக்கும் இடையே ஆன ஆதிஉறவைக்குறிக்கும் ஒரு காட்டின்பாடலைப்பாடியபடியே இருக்கின்றது என்று நம்புகின்றேன். யார் அறிவார், ஒரு வேளை மோக்லி விளையாடுவதற்காக அந்தக்குயில் உதிர்த்த, மோக்லி விட்டுச்சென்ற சிறகாகவும் கூட இருக்கலாம்.
இப்போதும் அந்தக்குயில் அக்காட்டின் நெடிதுயர்ந்த ஒரு மரத்தின் மீதமர்ந்தபடி அவர்களுக்கும் எனக்கும் இடையே ஆன ஆதிஉறவைக்குறிக்கும் ஒரு காட்டின்பாடலைப்பாடியபடியே இருக்கின்றது என்று நம்புகின்றேன். யார் அறிவார், ஒரு வேளை மோக்லி விளையாடுவதற்காக அந்தக்குயில் உதிர்த்த, மோக்லி விட்டுச்சென்ற சிறகாகவும் கூட இருக்கலாம்.
இதோ அந்தக்குயிலின் சிறகு...
(முற்றும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக