திங்கள், ஆகஸ்ட் 29, 2016

குஜராத் – அழுகி நாறும் ‘இந்துத்துவா மாடல்’ - 1




குஜராத்தில் இயங்கும் மதச்சார்பற்ற ஜனநாயகத்துக்கான இயக்கம் (Movement for Secular Democracy) என்னும் அமைப்பு 14.7.2016 அன்று அம்மாநில ஆளுநருக்கு சமர்ப்பித்துள்ள மனுவில் இவ்வாறு சொல்கின்றது: இத்தேசம் டாக்டர் பாபாசாஹேப் அம்பேத்கரின் 125ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் நேரத்தில் தலித்துக்கள் மீதான தாக்குதல்களுக்கு முன்னுதாரணத்தை குஜராத் மாநிலம்உருவாக்கியுள்ளதைக் கண்டு வேதனையுறுகின்றோம்.  கிர் சோமநாத் மாவட்டத்தில் உனா நகரில் நான்கு தலித் இளைஞர்கள் மீது நிகழ்த்தப்பட்ட கோரமான தாக்குதலை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.  இந்நிகழ்வு குறித்து முழுமையாக விசாரிக்க நீதிவிசாரணைக்கமிசன் அமைக்க வலியுறுத்துகின்றோம்.  தலித்துக்கள் மீதான தொடர்தாக்குதல்கள் குஜராத்தில் சுட்டிக்காட்டும் புள்ளிவிவரத்தைப் பாருங்கள்:
பனஸ்கந்தா மாவட்டம் – 1133
ஜுனாகத் -830
சுரேந்திரநகர் -756   
அகமதாபாத் – 693
இவையன்றி ஒவ்வொருவருடமும் 20 தலித்துக்கள் கொல்லப்படுகின்றார்கள், 50 தலித் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகின்றார்கள். எனவே தலித்துக்கள் மீதான தாக்குதல்கள் நட்த்தப்பட்ட மாவட்டங்களின் காவல்துறைத்தலைமை, நிர்வாகத்தலைமையில் உள்ளவர்களை தண்டிக்க வேண்டும்; காவல்துறை நிர்வாகத்தில் தலித்துக்கள் மீதான வேற்றுமை பாராட்டுதல், வஞ்சகங்களைக் களைய வேண்டும்; நம் சமுதாயத்தில் சமூகரீதியாக ஒடுக்கப்பட்ட  மக்களைக்குறித்து காவல்துறைக்கும் அரசு நிர்வாகத்துக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்”.

இவ்வியக்கத்தின் நிர்வாகிகள் மட்டுமின்றி முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜி, நடனக்கலைஞரும் சமூகப்போராளியும் ஆன மல்லிகா சாராபாய் உள்ளிட்ட சமூகத்தில் நன்கு அறியப்பட்ட பல்வேறு துறையினரும் இம்மனுவில் கையழுத்திட்டு உள்ளனர்.

குஜராத்தின் உனா என்னும் ஊரில் 2016 ஜூலை 11 அன்று செத்தமாட்டின் தோலை உரித்தார்கள் என்று குற்றம் சாட்டப்பட்ட நான்கு தலித் இளைஞர்களை காரில் கட்டிவைத்து இரும்புக்கம்பிகளால் கட்டைகளால் தாக்கியவர்கள் இஸ்லாமியர்களோ கிறித்துவர்களோ அல்லர்; இந்துமதத்தை சேர்ந்த ‘பசுப்பாதுகாவலர்கள்என்ற போர்வையில் வந்த வலதுசாரி இந்துத்துவா தீவிரவாதிகளே அவர்கள். 

“1986இல் எனது நண்பர் ஒருவர் குஜராத்தின் கோலானா கிராமத்தில் தலித் உழைக்கும் மக்களின் இயக்கம் ஒன்றைக்கட்ட முயன்றார். அக்கிராமத்தில் தலித் மக்களுக்கு எதிரான உழைப்புச்சுரண்டலை எதிர்த்தும் நிலங்களின் மீதான தலித்துக்களின் உரிமைக்காகவும் போராடினார். அவரை சுட்டுக்கொன்றார்கள். எனவே குஜராத்தில் தலித்துக்கள் ஒடுக்கப்படுவதும் தாக்கப்படுவதும் நீண்ட நெடுங்காலமாகவே நடக்கின்ற ஒன்றுதான்என்று சொல்பவர் மார்ட்டின் மக்வான். 1988இல் நவ்சர்ஜன் ட்ரஸ்ட் என்னும் அமைப்பை நிறுவி தலித்துக்களின் உரிமைகளுக்காக போராடி வருகின்றார். உனாவில் நடந்த தாக்குதல் புதியதல்ல என்பதையே இவ்வாறு சொல்கின்றார்.

2012இல் முதலமச்சராக இருந்தவர் நரேந்திரமோடி. அப்போது சுரேந்திரநகர் மாவட்டம் தங்கத் என்னும் ஊரில் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் நான்கு தலித்துக்கள் இறந்தார்கள். தார்னேதார் எனும் திருவிழாவில் கடைகள் போடுவதில் தலித்துக்களுக்கும் பார்வாத் சாதியினருக்கும் இடையே தகராறு எழுந்ததை தொடர்ந்து வெடித்த கலகத்தில்தான் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டடது. ‘இச்சம்பவத்தில் தடயங்கள், சாட்கள் தெளிவாக இல்லை என்று அரசாங்கமே சொல்கின்றது. எனவே நீதிமன்றமும் இவ்வழக்கை ‘சிவகுப்பு வழக்கு நிலுவையில் வைத்துள்ளது. எனவே உண்மையான குற்றவாளிகள் இன்னும் தண்டிக்கப்படாமல் இருக்கின்றார்கள். அரசு நிர்வாகத்தின் அலட்சியப்போக்கே தலித்துக்கள் மீதான தாக்குதல்களை தொடர்ந்து நடத்த ஆதிக்கசாதியினர்க்கு துணிச்சலைத் தருகின்றதுஎன்கின்றார் மக்வான். தங்கத் கலகத்தில் ஏகே47 எந்திரத்துப்பாக்கிகளால் போலீஸ் சுட்டதாக தெரிகின்றது. ஆனால் குற்றப்பத்திரிக்கையே இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை. மூன்று நபர் விசாரணைக்குழு ஒன்ற அமைத்தார் மோடி. ஆனால் நான்கு வருடங்களுக்குப்பின்னும் கமிட்டி அறிக்கையை குஜராத் அரசு வெளியிடவில்லை என்றால் யாரைக்காப்பாற்ற? இப்போதும் பிஜேபிதான் ஆட்சியில் உள்ளது.

“குஜராத்தில் மக்கள்தொகையில் தலித்துக்களின் எண்ணிக்கை 7.5%. இந்தியாவில் உள்ள தலித்துக்களின் எண்ணிக்கையில் இது 2.33%. ஆனால் தலித்துக்களின் மீதான தாக்குதல்கள் என்றால் தேசியப்பட்டியலில் குஜராத்தே முதல் பாதியில் உள்ளது. தேசிய செட்யூல்ட்சாதி ஆணையம், தேசியக்குற்றப்பதிவேடுகள் அலுவலகம் ஆகியவற்றின் புள்ளிவிவரங்கள் சொல்வது இதுதான். தங்கத் துப்பாக்கிச்சூட்டில் தலித்துக்கள் உடலில் துப்பாக்கிக்குண்டுக்காயம் இருப்பதாக போஸ்ட்மார்டம் அறிக்கை சொல்கின்றது. நாங்கள் உயர்நீதிமன்றத்தை அணுகினோம், ஆனால் மாநில அரசு அலட்சியம் செய்வதால் அரசாஙத்தின் மீது நாங்கள் நம்பிக்கை இழந்தவர்களாக இருக்கின்றோம்என்கின்றார் மக்வான். 

நாங்கள் இயக்கத்தை தொடங்கிய காலத்தில் குஜராத்தில் தலித்துக்களின் மீதான தாக்குதல்கள், கொலைகள் தொடர்பான வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது மொத்தவழக்கில் 4% மட்டுமே; நாங்கள் தொடர்ந்து போராடி வருவதன் விளைவாக இப்போது இது 28-29% ஆக உயர்ந்துள்ளது. ‘தீண்டாமையைப் புரிந்துகொள்வது’ (Understanding Untouchability) என்ற தலைப்பில் 2010இல் குஜராத்தில் நாங்கள் ஒரு ஆய்வு நடத்தினோம்.  1,569 கிராமங்களில் 98,000 மக்களிடம் ஆய்வு நட்த்தினோம். 98 வடிவங்களில் தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதை அறிந்தோம். பள்ளிகளில், மதிய உணவுத்திட்டத்தில், தேநீர்க்கடைகளில், கோவிகளில், பொது இடங்களில், பொதுக்கிணறுகளில் என எல்லா இடங்களிலும் தீண்டாமை ஒவ்வொரு விதத்தில் பரவி உள்ளது. எமது ஆய்வை அரசிடம் அளித்தோம். ஆனால் எமது ஆய்வின் முடிவுகளை மறுப்பதற்காகவே அன்றைய முதல்வர் மோடி அரசுத்தரப்பில் ஒரு ஆய்வை மேற்கொண்டார்; பெயரளவில் ஐந்து கிராமங்களில் ஒரு ‘ஆய்வைசெய்து தீண்டாமை குறித்து மவுனம் சாதிக்கும் ஒரு அறிக்கையை சமர்ப்பிக்கச்செய்தார். குஜராத்தில் இப்போதும்  பொதுக்கிணறுகளில் தலித்துக்கள் நீர் எடுக்க முடியாது; தேநீர்க்கடைகளில் இரண்டு தம்ளர்கள்தான், 90%  கோவில்களில் தலித்துக்கள் நுழைய முடியாது. 54% பள்ளிகளில் தலித் மாணவர்களை தனியே பிரித்துவைத்துள்ளார்கள்; தலித்துக்கள் தமக்கான சுடுகாடுகளை தனியே வைத்துக்கொண்டுள்ளார்கள், சாதி இந்துக்கள் தமது சுடுகாடுகளில் தலித்துக்களை அனுமதிப்பதில்லை.
தலித்துக்களுக்கு கல்வி அளித்து நாகரிகமான வேலைவாய்ப்புக்களை அளிக்க அரசு மறுக்கின்றது. மாநில அரசு வேலைகளில் செட்யூல்ட் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள 64,000 காலியிடங்களை அரசு இன்னும் நிரப்பவே இல்லை என்னும் உண்மை சொல்வதென்ன? ஆனால் மலம் அள்ளுவது, செத்தமாடுகளை அப்புறப்படுத்துவது, தோலுரிப்பது போன்ற தலித்துக்களுக்கான ‘பாரம்பரியவேலைகளை செய்யவே நிர்ப்பந்தப்படுத்துகின்றார்கள். கல்வியும் பிற நாகரிகமான வேலைகளும்  இல்லாத சூழலில் சாதிய அடிப்படையிலான பலநூறு ஆண்டுகள் பழமையான இழிவான வேலைகளை செய்யவே திட்டமிட்ட வகையில் தலித்துக்கள் குஜராத்தில்  தள்ளப்பட்டுள்ளார்கள் என்பது அப்பட்டமான உண்மை.

“பள்ளிகளில் தலித் சமூகமாணவர்களை கழிப்பறைகளைச் சுத்தம் செய்ய ஆசிரியர்கள் கட்டாயப்படுத்துகின்றார்கள். 2010இல் நாங்கள் நடத்திய ஆய்வில் சவ்ராஷ்ட்ரா பகுதியில் 1,500 மாண்வர்கள் நேரடியாக எங்களிடம் சொன்னதே இது. பொதுஇடத்தில் மக்களிடம் நேரடியாக நட்த்தப்பட்ட விசாரணையில் குஜராத் உயர்நீதிமன்றநீதிபதியிடம் மாணவர்களின் பெயர்கள், கிராமங்கள் உள்ளிட்ட விவரங்களை நேரடியாகவே கொடுத்து முறையிட்டோம். ஆனால் அரசாங்கம் இதுவரையிலும் ஒன்றும் செய்யவில்லைஎன்கின்றார் மக்வான்.

குஜராத்தில் தலித்துக்கள் சமூகத்தின் எல்லாத்தளங்களிலும் ஒதுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டுள்ளார்கள். நிலச்சீர்திருத்தம் குஜராத்தில் தலித்துக்களுக்கு ஒன்றுச்செய்திடவில்லை. “1996-2000 காலத்தில் நவ்சர்ஜன் அமைப்பு, 6,000 ஏக்கர் நிலம் தலித்துக்களுக்கு கொடுக்கப்பட்டிருப்பதாக அரசுப்பதிவேட்டில் இருந்ததையும் உண்மையில் இவ்வாறு கொடுக்கப்படவே இல்லை என்பதையும் கண்டுபிடித்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தோம்; ஆனால் குஜராத் அரசு இவ்விசயத்தில் இன்றுவரை ஒன்றுமே செய்யவில்லை. குஜராத்தில் தலித்துக்கள் வாழும் 12,500 கிராமங்களில் 250 கிராமங்களில் மட்டுமே இந்த 6,000 ஏக்கர் நிலமோசடி நடந்துள்ளது எனில் ஒட்டுமொத்த மாநிலம் எங்கும் நிலைமை எப்படி இருக்கும் என்பதைப் புரிந்துகொள்வது சிரம்மான ஒன்றல்ல; குஜராத்தில் தலித்துக்களின் வாழ்க்கை மிகமோசமாக இருப்பதற்கு நிலப்பகிர்வில் அலட்சியம்-மோசடி என்பது முக்கியமான காரணம்என்கின்றார். 

‘நூறு வருடங்களுக்கு முன்னர் படேல் சமூகத்தினர் சூத்திரர் எனப்படும் கீழ்சாதியினராகத்தான் இருந்தார்கள். யு.என்.தேபர் 1948-54 காலக்கட்டத்தில் சவ்ராஷ்ட்ரா முதல்வராக இருந்தபோது நிலச்சீர்திருத்தத்தை செம்மையாக அமல்படுத்தினார், படேல் சமூகத்துக்கு நிலப்பகிர்வு செய்தார். பலனாக இன்று படேல் சமுகம் குஜராத்தில் பொருளாதார மட்டத்திலும் சமூக அந்தஸ்து மட்டத்திலும் செல்வாக்கு மிக்கவர்களாக இருப்பதைப் பார்க்கின்றோம்.  ஆக நிலச்சீர்திருத்தமும் நிலப்பகிர்வும் மட்டுமே தலித்துக்களின் வாழ்க்கைத்தரத்தில் சமூக அந்தஸ்தில் மாற்றத்தைக் கொண்டுவரும் என்பது உறுதிஎன்கின்றார் மக்வான்.

அகமதாபாத்தின் முன்னணி தலித் உரிமைப்போராளியான அசோக் ஸ்ரீமாலி என்பவர் “நீண்ட நெடுங்காலமாக குஜராத்தில் தலித்சமூகத்தின் நிலைமையை ஊடகங்கள் வெளியிடாமல் மறைத்தே வந்துள்ளன; 1985ஆம் வருடம் குஜராத்தில் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக அப்போது மாநிலத்தில் தலித்துக்கள் நீண்ட நாட்கள் போராட்டம் நட்த்தினார்கள். உனாவில் நடந்த சம்பவத்தை சமூக ஊடகங்கள் இப்போது வெளிஉலகுக்குக் கொண்டுவந்துள்ளதால் குஜராத்தின் உண்மை நிலைமை அம்பலமாகி உள்ளதுஎன்று சொல்கின்றார்.
(தொடரும்)

கருத்துகள் இல்லை: