திங்கள், ஆகஸ்ட் 29, 2016

குஜராத் - அழுகி நாறும் ’இந்துத்துவா மாடல்’ - 3




2015 செப்டம்பரில் உத்தரப்பிரதேசம் தாத்ரியில் மாட்டு மாமிசம் வைத்திருந்ததாக ‘குற்றம்சாட்டி முகமது அக்லக் என்ற இஸ்லாமியரை வீடு புகுந்து இந்துத்துவா கும்பல் அடித்தே கொன்றது. அதற்கு முன்பாக அப்பகுதியில் இருந்த கோவில் ஒலிபெருக்கியில் இதுகுறித்து வெறிப்பிரச்சாரம் செய்து அப்பகுதி மக்களை திரட்டியது குறிப்பிடத்தக்கது. அக்லக்கின் மகன் குற்றுயிராக்கப்பட்டார்; ‘அந்த வீட்டில் இருந்த பெண்களை சும்மா விட்டு வந்தது எங்கள் பெருந்தன்மையைக் காட்டுகின்றதுஎன்று வெறிப்பேச்சுப்பேசிய இந்துத்துவா கும்பலை வளர்ச்சி நாயகன் மோடி கண்டுகொள்ளவில்லை; அடிப்பதாய் இருந்தால் என்னை அடியுங்கள்என்று அன்றைக்கு வசனம் பேசவில்லை. உனா எழுச்சி உத்தரப்பிரதேசத்துக்குள் நகர்ந்துள்ள நிலையில் உத்தரபிரதேசத்தில் வருகின்ற சட்டமன்றத்தேர்தலையும் அடுத்த வருடம் 2017இல் நடக்கவுள்ள குஜராத் தேர்தலையும் மனதில் கொண்டு தலித்துக்களின் வாக்குகளை குறிவைத்து இப்போது ‘சுடுங்கள்என வசனம் பேசுகின்றார். ஹரியானா, மஹாராஷ்ட்ரா, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் ஆகிய பிஜேபி ஆளும் மாநிலங்களில் இஸ்லாமியருக்கு எதிரான சங்பரிவாரின் பிரச்சாரம் (தலித்துக்களும் உள்ளிட்ட) இந்துமத மக்களின் வாக்குகளைத்திரட்ட முன்பு உதவியது. 


உனா தாக்குதல் தேச எல்லைகளைத்தாண்டி அகில உலகமெங்கும் பரவி இந்தியாவில் மனித உரிமைகள் மீறப்படுவது குறித்த சர்வதேச சர்ச்சையில் மீண்டும் ஒரு முறை நரேந்திரமோடி அரசை தள்ளிவிட்டுள்ளது என்பது சங்பரிவாருக்கு எரிச்சலூட்டும் உண்மையாகும். ஆனால் சங்பரிவாரின் உண்மையான கவலை என்பது சிவசேனா, விஷ்வ ஹிந்துபரிஷத், பிஜேபி, கவ் ரக்‌ஷக், கவ் சேனா உள்ளிட்ட ஆர் எஸ் எஸ்சின் கொடுக்குகளுக்கு எதிராக இப்போது இந்துமதத்திற்கு உள்ளேயே இருக்கின்ற தலித்துக்கள் எழுச்சியடைந்திருப்பது இந்துக்களின் வாக்குகளை சிதறடிப்பது என்பது மட்டுமின்றி இவ்வெழுச்சி இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும் பரவுகின்ற ‘அபாயமேஆகும்.


ஜெய்பீம், பாபா சாஹேப் அம்பேத்கரின் கனவுகளை நனவாக்குவோம் போன்ற முழக்கங்கள் உனா பேரணியின் முக்கிய முழக்கங்கள் என்பதையும் சங்பரிவார் கவனிக்கின்றது. சாதியைக் கொல்ல வேண்டும், பிராமணீயத்தை ஒழிக்க வேண்டும் என்ற டாக்டர் அம்பேத்கரின் கொள்கைகள் சங்பரிவாரின் கொள்கைகளுக்கு எதிர்முனையில் உள்ளவை; ஆனால் அம்பேத்கருக்கு விழா எடுப்பதன் மூலமும் அவரப் புகழ்ந்து பேசுவதன் மூலமும் தலித் மக்களுக்கு நெருக்கமாகத் தன்னைக்கட்டிக்கொள்ள நரேந்திரமோடி பெரும் முயற்சி செய்கின்றார். அவரது மிக அசிங்கமான இந்தத் தந்திரம் உனாவில் முற்றுப்பெற்றுள்ளது. 


உனா தலித் அஸ்மிடா யாத்திரையில் நேரடியாகச் சென்று பங்கேற்றுத்திரும்பிய எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் செயலாளரும் ஆவார். குஜராத் வளர்ச்சி என்பதும் குஜராத் மாடல் என்பதும் பிஜேபியின் ஆதரவு கார்ப்பொரேட் ஊடகங்கள் ஊதிப்பெருக்கிய மாயை என்பதை நேரில் கண்டு சொல்கின்றார்: ”சாலைகள் எங்கும் குப்பைகள் மலைபோல் குவிந்துள்ளன; சாலைகள் குண்டும்குழியும் நிறைந்தவை, பயணிக்க தகுதியற்றவை. பத்துக்கிலோமீட்டர் பயணத்துக்குள் பல நூறு மாடுகளை சாலையில் பார்த்தோம், இதுதான் அங்கே அன்றாட வாழ்க்கை. நாங்கள் அம்புஜா சிமெண்ட் தொழிற்சாலையைத் தாண்டும்போது மட்டுமே குப்பைகள் இல்லாத ஒரு நல்ல சாலையைப் பார்க்க முடிந்தது. மிக மோசமான பேருந்துகளைப் பார்த்தோம், பேருந்துகளின் போக்குவரத்தும் அவ்வளவாக இல்லை. புல்லட் பைக்கின் பின்புறம் கூண்டுபோன்ற ஒரு அமைப்பை உருவாக்கி மக்கள் அதில் தொற்றிக்கொண்டு போவதே சாதாரணமான போக்குவரத்து வாகனம். ஆட்டோவில் பயணிப்பது என்பது  மிக ஆடம்பரமான ஒன்றாக மக்கள் பார்க்கின்றார்கள்.” 



யாத்திரையில் நேரடியாகப் பங்குபெற்றுத்திரும்பிய அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் இணைச்செயலாளர் விஜூ கிருஷ்ணன் சொல்கின்றார்: “குஜராத் மாடல் என்பது உண்மையில் மோதானி மாடல். டாடா, அதானி, அம்பானி போன்ற பெருமுதலாளிகளின் சொர்க்கபூமிதான் குஜராத். நாங்கள் அகமதாபாத்தில் இருந்து உனா வரை சென்ற வழி நெடுகிலும் கொடிய வறுமையைப் பார்த்தோம். சமூக-பொருளாதாரத் தளத்தில் இருந்து சுத்தமாக ஒதுக்கப்படுள்ள தலித் சமூக இளைஞர்கள் வாழ்க்கையை நட்த்தும்பொருட்டு கேரளா, மும்பை, தொலைதூர லட்சத்தீவு போன்ற இடங்களுக்கு செல்கின்றார்கள். ஆனால் பல லட்சம் ஏக்கர் நிலங்கள் கார்ப்பொரேட் முதலாளிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளதைக் கண்டோம். இதுவே ‘உலகத்தரம்வாய்ந்த ‘குஜராத் மாடல்’. மோடி மத்தியில் ஆட்சிக்கு வந்தபின் குஜராத்தில் தலித்துக்கள், இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. பொது இடத்தில் சாட்டையால் அடிப்பது, மாட்டுச்சாணத்தை தின்ன வைப்பது, ஆடைகளைக்களைந்து நிர்வாணமாக ஊர்வலம் நடத்துவது போன்ற கொடுமைகள் அதிகரித்துள்ளன”.



உனா யாத்திரையில் கலந்துகொண்டு திரும்பிய தலித்துக்களையும் பிறரையும் சாதி இந்துக்களும் இந்துத்துவா தீவிரவாதிகளும் திட்டமிட்டு வழிமறித்து கொடூரமாகத் தாக்கியுள்ளனர். உனா சம்பவம் நடந்த அதே சம்தேர் கிராமத்தில், ஜுனாகத்தில், அம்ரேலியில் இன்னும் பல இடங்களில் தாக்குதல்கள் நடந்துள்ளன. ‘நீ தலித்தா? ‘ஜெய் மாதா தி’ ‘காய் மாதா கி ஜே!’ (பசு மாதா வாழ்க) என்று கோசமிடுஎன்று சொல்லி அடித்துள்ளார்கள். ‘ஜெய் பீம்என முழக்கமிட்டவர்களை கடுமையாக அடித்துள்ளார்கள். அம்பேத்கர் படம் பொறித்த வாகனங்களை அடித்து நொறுக்கியுள்ளார்கள். இதற்கு முன் காவல்துறை எப்படி நடந்துகொண்டதோ அப்படியே இப்போதும் நடந்து கொண்ட்து, அதாவது கை கட்டி வேடிக்கை பார்த்தது. உனா எழுச்சியை கார்ப்பொரேட் மீடியாக்கள் கண்டுகொள்ளாமல் திட்டமிட்டு மறைத்த்து போலவே இத்தாக்குதல்களையும் மறைக்கின்றன. குஜராத் சொர்க்கபுரி என்றும் இந்தியாவுக்கான எதிர்கால மாடலே குஜராத்துதான் என கடந்த இருபது வருடங்களாக பேசிவந்த பொய்யை திடீரென ஒப்புக்கொள்வது மெயின்ஸ்ட்ரீம் கார்ப்பொரேட் மீடியாவால் ஆகின்ற காரியம் அல்லவே?


சாதி இந்துக்களுக்கு நிலம் ஒரு பொருளீட்டும் கருவி எனில் தலித் சமூக மக்களுக்கு அது சமூகத்தில் மனிதனாக வாழும் உரிமையை அந்தஸ்தை நிறுவுவதற்கான அடிப்படையான ஒன்றாக இருக்கின்றது. எனவே இது வெறும் நிலப்பகிர்வுக்கான போராட்டமாக மட்டும் இல்லை, தாங்கள் சார்ந்திருக்கின்ற இந்து மதத்தின் சாதீயக்கொடுக்குகளில் இருந்து விடுபடுவதற்கான, இந்து மதத்தின் சாதியப்பிரமீட்டின் கீழடுக்குக்கல்லை அசைக்கின்ற உருவுகின்ற தத்துவார்த்தப்போராட்டமாக இருப்பதால் இது நாளையோ நாளை மறுநாளோ முடிந்து விடுகின்ற போராட்டமாக இருக்கப்போவதில்லை என்பது உறுதி. சாதி ஒழிப்பும் நிலமீட்பும் முதலாளித்துவ நிலப்பிரபுத்துவத்துக்கு எதிரான போராட்டத்துடன் இணைந்து செல்வதே இயல்பானதும் கோட்பாடு ரீதியாக சரியானதும் ஆகும். ஒன்றில் இருந்து மற்றது பிரிக்கப்பட முடியாதது.


தலித் சமூகம் இன்று தன்னெழுச்சியான போராட்டத்தை தொடங்கியுள்ளது; இப்போராட்டத்திற்கு இடதுசாரி அமைப்புக்களும் முற்போக்கு-ஜனநாயக அமைப்புக்களும் இஸ்லாமிய, கிறித்துவ சிறுபான்மை சமூக மக்களும் இந்துத்துவா அரசியலுக்கும் அனைத்துவிதமான பிரிவினைவாத அரசியலுக்கும் எதிரான அனைத்துப்பகுதி மக்களும் ஆதரவு அளிப்பதும் இணைந்து செல்வதும் காலத்தின் கட்டாயம்.

(முற்றும்)

(’சமரசம்’ (செப்.16-30) இதழில் இக்கட்டுரை வெளிவந்துள்ளது, link: http://samarasam.net/issue/16-30_Sep_16/#12 )


கருத்துகள் இல்லை: