உனாவில் தலித்துக்கள் மீது நடந்த தாக்குதல் திடீரென்று நடந்த ஒன்றோ எப்போதாவது
நடக்கின்ற ஒன்றோ அல்ல.
இவ்வருடம் (2016) தொடங்கி ஏப்ரல் வரை மட்டுமே தலித்துக்கள் மீது 406
வன்முறைகள் ஏவப்பட்டுள்ளன. 2001 தொடங்கி தொடர்ச்சியாக 14,500 வழக்குகள்
அம்மாநிலத்தில் பதிவாகி உள்ளன. அதாவது சராசரியாக வருசத்துக்கு 1,000, தினசரி 3. 2006-15
காலகட்டத்தில் வருசத்துக்கு 20 தலித்துக்கள் கொலை, 45 பெண்கள் பாலியல்
வல்லுறவுக்கு ஆளானார்கள்.
இவ்வருடம் மே 22 அன்று ராஜுலா என்ற ஊரில் உள்ள தலித் காலனிக்கு
‘பசுப்பாதுகாவலர்கள்’ அதாவது இந்துத்துவா தீவிரவாதிகள் வந்தார்கள். பெரிய கார்களிலும்
பைக்குகளிலும் வந்தவர்கள் கையில் வாள், கத்தி, இரும்புக்கம்பி, கட்டை போன்ற
ஆயுதங்கள்; தலித்துக்களின் கை கால்களை அடித்து உடைத்தார்கள், செல்போனில் வீடியோ
எடுத்து ‘மற்றவர்களுக்கும் இதே கதிதான்’ என்று அச்சுறுத்தினார்கள் (உனாவிலும் இதுவே நடந்தது).
அப்பகுதியின் தலித் உரிமைப்போராளியான ரமேஷ்பாய் பபாரியா என்பவர் இவ்வன்முறை
நிகழ்வை வீடியோவுடன் காவல்நிலையத்துக்கு கொண்டு சென்றார், எப்போதும்போலவே
காவல்துறை அலட்சியம் செய்தது. ”நீங்கள் கொண்டுவந்த
வீடியோவை நம்ப நாங்கள் என்ன முட்டாள்களா?” என்று கேலி செய்தார்கள். மறுநாள் 19 பேர் மீது
வழக்குப்பதிவு செய்தார்கள், ஆனால் வன்முறையில் ஈடுபட்டவர்கள் இன்னும் பலபேர் மீது
வழக்குப்பதியவில்லை. இதற்குப்பிறகு ஒரு நடவடிக்கையும் இல்லை.எனவே மே 31 அன்று
மீண்டும் காவல்நிலையம் சென்றார்கள்.
தலித் உரிமைப்போராளியான பிரேமபாய் ராத்தோட் “நாங்கள் காவல்துறைமீது நம்பிக்கை இழந்தோம்; இதன்பின் போலீஸ் இருக்கும்போதே அதே கும்பல் தலித்துக்களை மீண்டும் தாக்கியது. எனவே ஜுலை 7 என்று குற்றவாளிகளைக் கைதுசெய்யக்கோரி அம்ரேலி தொடங்கி ராஜுலா வரையிலான 70 கி.மீ. தூரத்திற்கு மோட்டர்சைக்கிள் பேரணி நடத்தினோம். ஆனால் ஜூலை 11 உனா தாக்குதல் பெரிய பிரச்னையானதால் மே மாத வழக்கில் ஆறு பேரை போலீஸ் கைது செய்தது” என்று சொல்கின்றார்.
தலித் உரிமைப்போராளியான பிரேமபாய் ராத்தோட் “நாங்கள் காவல்துறைமீது நம்பிக்கை இழந்தோம்; இதன்பின் போலீஸ் இருக்கும்போதே அதே கும்பல் தலித்துக்களை மீண்டும் தாக்கியது. எனவே ஜுலை 7 என்று குற்றவாளிகளைக் கைதுசெய்யக்கோரி அம்ரேலி தொடங்கி ராஜுலா வரையிலான 70 கி.மீ. தூரத்திற்கு மோட்டர்சைக்கிள் பேரணி நடத்தினோம். ஆனால் ஜூலை 11 உனா தாக்குதல் பெரிய பிரச்னையானதால் மே மாத வழக்கில் ஆறு பேரை போலீஸ் கைது செய்தது” என்று சொல்கின்றார்.
2012இல் (மோடி முதலமைச்சர்) இதே உனாவில் ஒரு தலித்தை
வீட்டிலேயே எரித்துக்கொன்றார்கள், இக்கொலையை ‘கவுரவக்கொலை’ என போலீஸ் மூடிமறைக்க முயற்சிக்கின்றது; உண்மை
என்னவெனில் அத்தலித் குடும்பத்தாருக்குச் சொந்தமான நிலத்தை அபகரிக்கும் சாதி
இந்துக்களின் சதி இக்கொலையின் பின்னணியில் உள்ளது என அவரது குடும்பத்தார்
குற்றம்சாட்டுகின்றார்கள்.
ஜுலை 11 உனா தாக்குதலுக்கு முன்பாக ராஜுலாவில் ஒரு
தலித்தும் அவரது தலித் அல்லாத மனைவியும் கொல்லப்பட்டார்கள், மற்றொரு கிராமத்தில்
ஒரு தலித் இளைஞர் எரிக்கப்பட்டார். ஜுலை 11 தாக்குதலுக்குப்பிறகு மனம் உடைந்த
பாதுகாப்புணர்வை முற்றிலும் இழந்த 30 தலித்துக்கள் தற்கொலை முயற்சியில்
இறங்கினார்கள், சிலர் மரணமுற்றனர்.
உண்மையில் ஜூலை 11 தாக்குதலின் பின்னாலும்
தலித்துக்களின் வீடு-நில அபகரிப்பு சதியே உள்ளதாக தலித்துக்கள் சரியாகவே குற்றம்
சாட்டுகின்றனர். தாக்குதலுக்கு உள்ளான விஷ்ரம்பாய், ரமேஷ்பாய் ஆகியோரின் தந்தையான
பாபுபாய் வீராஸ்பாய் சரோவ்யா “கிராமத்தலைவரான பிரபுல்லாபாய் கொராட் என்பவர் சாதி
இந்துக்களாகிய ‘பசுப்பாதுகாவலர்’களோடு சேர்ந்துகொண்டு
எங்களது இரண்டு ஏக்கர் நிலத்தை அபகரிக்கத்திட்டமிட்டுள்ளார். இந்த இட்த்தை நாங்கள்
மாடுகளின் தோலை உரிக்கப் பயன்படுத்துகின்றோம்” என்று சொல்கின்றார். ஜுலை 11 ‘பசுப்பாதுகாவலர்கள்’ இரண்டு பெரிய கார்களில்
வந்தார்கள்; ஒரு காரில் ’கிர் சோமநாத் சிவசேனா
தலைவர்’ என்ற ஸ்டிக்கர்
ஒட்டப்பட்டிருந்தது. அகமதாபாத்தில் உள்ள ‘தலித் ஹக் ரக்ஷக் மஞ்ச்’ அமைப்பின் நிர்வாகியான ராஜு
சோலங்கி என்பவர் “பாபுபாய் கூறுவதில் வியப்பில்லை; தலித்துக்கள் மீதான
தாக்குதலுக்கு எப்போதும் மையமாக இருப்பது நிலமே. நிலஅபகரிப்பை நோக்கமாகக்
கொண்டுதான் உயர்சாதி இந்துக்கள் போலீசுடனும் மாநில அரசின் நிர்வாகத்துடனும் கூட்டணி
வைக்கின்றார்கள்” என்று
அம்பலப்படுத்துகின்றார்.
குஜராத்தின் கிர் காடுகள் சிங்கங்களுக்கு புகழ் பெற்றவை.
கிர் காடு மூன்று மாவட்டங்களில் பரவியுள்ளது. இந்த மூன்று மாவட்டங்களில் மாடுகளின்
எண்ணிக்கை மிகமிக அதிகம். சாலைகளின் நிலைமையோ படுகேவலம் என்பதும் சாலைகளில்
அடிபட்டு சாகின்ற மாடுகள், சிங்கங்களால் தாக்கப்பட்டு உயிரிழக்கும் மாடுகள் என
மாடுகள் சாவதும் சர்வசாதாரணம்; இறந்த மாடுகளை அப்புறப்படுத்தி தோலை உரித்து
பொருளாதாரத்தை அமைத்துக்கொள்வதே இப்பகுதி தலித் மக்களின் பாரம்பரியமான தொழிலாக
உள்ளது; உயிருடன் இருக்கும் மாடுகளை யாரும் கொல்வதில்லை என்பதே உண்மை.
ஜூலை 11 தாக்குதல் தேசமெங்கும் பெரும் கண்டனத்திற்கு
உள்ளானது என்பது ஒருபுறம்; ஆனால்
‘இந்துக்களே ஒன்றுபடுங்கள்’ ‘வைப்ரண்ட் குஜராத்’ ‘க்ளோரிஃபையிங் குஜராத்’ ‘விகாஸ் குஜராத்’ ‘விகாஸ் புருஷ்’ (வளர்ச்சிநாயகன் மோடி) ‘அச்சே தின்’ போன்ற வலதுசாரி தீவிரவாத ஆர் எஸ்
எஸ் கும்பலின் இருபத்தைந்து வருட போலி கோசங்களும் உள்ளீடற்ற வெற்றுவிளம்பரங்களும்தான் உண்மையில் தேசமெங்கும் அம்பலமானது என்பது ஆர் எஸ் எஸ்
இந்துத்துவா கும்பலுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது என்பதுதான் கவனிக்கப்பட
வேண்டியது.
இதன் பின் ஜுலை 31 அன்று மாநிலத்தின் தலைநகரான
அகமதாபாத்தில் பல்லாயிரம் தலித் மக்கள் திரண்ட மாபெரும் மாநாட்டில் தங்களது
எதிர்ப்புக்குரலை அழுத்தமாகப்பதிவு செய்தார்கள்; தலித் அத்யாச்சர் லடத் சமிதி
(தலித்துக்கள் மீதான அடக்குமுறைக்கு எதிரான இயக்கம்) என்ற அமைப்பை
உருவாக்கினார்கள். இதன் ஒருங்கிணைப்பாளராக ஜிக்னேஷ் மேவானி என்பவர் தேர்வுசெய்யப்பட்டார்;
மேவானி வழக்கறிஞர், பத்திரிக்கையாளர், மனித உரிமைப்போராளி. தாங்கள் சமூகத்தில்
மதிப்புடன் வாழ்வதன் பொருட்டு குடும்பத்திற்கு ஐந்து ஏக்கர் நிலம் வேண்டும்,
நாகரிகமான வேலைகள் வேண்டும் என குஜராத் மாநில அரசிடம் கோரிக்கை வைத்தார்கள். முக்கியமாக
‘இனிமேல் மலம் அள்ள மாட்டோம், சாக்கடை வார மாட்டோம், செத்தமாடுகளை
அப்புறப்படுத்துவது தோலை உரிப்பது போன்ற வேலைகளைச் செய்ய மாட்டோம்’ என உறுதியேற்றார்கள். ‘மாடுகளை
தமது தாய் என்று சொல்பவர்கள்தான் தமது தாய் இறந்துபோகும்போது அப்புறப்படுத்தும்
கடமையைச் செய்ய வேண்டியவர்கள், இனிமேல் அந்த வேலையை அவர்களே செய்துகொள்ளட்டும்’ என்று பிரகடனம் செய்து
சங்பரிவாருக்கும் உயர்சாதி இந்துக்களுக்கும் அதிர்ச்சிவைத்தியம் செய்துள்ளார்கள்.
செத்த மாடுகளை அள்ளி மாவட்ட ஆட்சியர்களின் அலுவலகங்களில் வீசி எறிந்தார்கள்; கிர்
சோம்நாத் மாவட்டமும் குஜராத்தின் பல பகுதிகளும் செத்த மாடுகளால் நாற்றம் எடுத்து
அழுகி வீசின. இந்துத்துவாவின் உண்மையான அழுகிய சாதீயஅரசியல் குஜராத்தின் வீதிகளில்
புழுத்து நாறி அம்பலமானது.
ஆகஸ்ட் 5 அன்று அகமதாபாத்தில் இருந்து புறப்பட்ட
பெரும் பாதயாத்திரை ஆகஸ்ட் 15 அன்று 400 கி.மீ. தொலைவில் உள்ள உனா நகரை வந்து
அடைந்த்து. வழியெங்கும் உள்ள கிராமங்களின் தலித் மக்கள் மேலே உறுதிமொழிகளை
ஏற்றார்கள். யாத்திரையில் தலித் சமூகத்தின் பல நூறு பெண்களும் குழந்தைகளும்
பங்கேற்றது எழுச்சியான ஒன்று. பேரணி சென்ற
வழி நெடுகிலும் முற்போக்கு இயக்கத்தவர்கள், சாதிமத மறுப்பாளர்கள்,
தொழிற்சங்கத்தினர், எழுத்தாளர்கள், சமூகப்போராளிகள், பெண்கள், இளைஞர்கள் இணைந்து
கொண்டார்கள். இஸ்லாமியமக்களும் இணைந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
2002 கலவரங்களின்போது ‘இஸ்லாமியர்களே உங்கள் எதிரிகள், அவர்களை துரத்தியடித்தால்
உங்களுக்கு வீடுகளும் நிலமும் கிடைக்கும்’ என்று தலித் மக்களை இஸ்லாமியர்களுக்கு எதிராக சங்பரிவார்
கும்பல் தூண்டிவிட்டதையும் தங்கள் சமூகம் அதற்கு இரையானதையும் ஏமாந்துபோனதையும் இப்போது
வேதனையுடன் குறிப்பிடுகின்றார்கள். பஞ்சாப், பிஹார், மஹாராஷ்ட்ரா, தெலுங்கானா,
ஆந்திரா, மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்தும் சமூகப்போராளிகள்
தாங்களாகவே முன்வந்து இந்த யாத்திரையில் இணைந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தன் காலத்தின் பதிவு செய்யப்பட வேண்டிய முக்கியமான சமூக இழிவுகள், எழுச்சிகளை
பதிவு செய்து வருகின்ற ஆவணப்பட இயக்குநர் ஆனந்த் பட்வர்த்தன் பாதயாத்திரையில்
கலந்துகொண்டு பதிவுசெய்துள்ளார்.
ஆகஸ்ட் 15 அன்று உனாவில் நடந்த தேசியக்கொடியேற்றத்தில்
‘ஐந்து ஏக்கர் வேண்டும்’ என்ற கோரிக்கை
முக்கியத்துவம் வாய்ந்தது. இந்திய சாதியக்கட்டமைப்பில் இருந்து வெளியே வரவும்
தமக்கான சமூக அந்தஸ்தை நிலைநிறுத்துவதன் பொருட்டும் ஆன அடிப்படை உரிமையான கோரிக்கை
இது. ஆகஸ்ட் 15 அன்று உனாவில் முடிவுற்ற பேரணியில் தேசியக்கொடியேற்றி ‘இன்றுதான்
எங்களுக்கு உண்மையான சுதந்திரதினம்’ என்று அவர்கள் பிரகடனம்
செய்ததில் ஆழ்ந்த பொருள் உள்ளது.
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி பிறந்த குஜராத்தில் தலித்
இயக்கங்கள் அவரது கொள்கைகளோடு முரண்படுகின்றார்கள்; தெய்வத்தின் பிள்ளைகள்
எனப்பொருள்படும் அரிஜன் என்ற சொல்லை உருவாக்கியவர் காந்தி. இந்துமதத்தை அதன்
சாதியக்கட்டமைப்புக் குலையாமல் பாதுகாப்பதில் காந்தி மிகக்கவனமாக இருந்தார் என்பது
வெளிப்படை; அவரது ‘ராமராஜ்யத்தில்’ தலித்துக்களுக்கு (அல்லது
அரிஜன் மக்களுக்கு) எத்தகைய வாழ்க்கை வாய்க்கும் என்பதற்கு தெளிவான உதாரணமே
குஜராத். இயல்பாகவே இடதுசாரி இயக்கங்கள் பலஹீனமாக இருக்கின்ற குஜராத்தில் தலித்
மக்களை இடதுசாரிகளின் பின்னால் அணிதிரட்டுவது என்பது இப்போதைக்கு சாத்தியமில்லை.
ஆர் எஸ் எஸ், சிவசேனா, விஷ்வ இந்து பரிஷத், பிஜேபி ஆகிய வலதுசாரி இந்துத்துவா
தீவிரவாத இயக்கங்கள் ‘இந்துக்களே ஒன்றுபடுங்கள்’ என தெருத்தெருவாக நின்று கூவினாலும் தலித் உள்ளிட்ட
ஆயிரம் சாதிகளைக் கொண்ட இந்துமத மக்களை அடுத்த பத்தாயிரம் வருடங்கள் கழித்தாலும்
‘ஒன்று’ படுத்த முடியாது என்ற
உண்மையை சாதி மறுப்பாளர்களை விடவும் வலதுசாரி ஆர் எஸ் எஸ் அமைப்பும் அதன் கொடுக்கு
அமைப்புக்களும் தெளிவாகவே புரிந்துகொண்டுள்ளார்கள். ஆயிரம் சாமிகளை வைத்திருக்கும்
இந்துமதம் தலித்துக்களையும் தலித்துக்களின் சாமிகளையும் தள்ளியேதான்
வைத்திருக்கின்றது. உயர்சாதி சாமிகள் உயர்சாதி இந்துக்களைப் போலவே பொன்வேய்ந்த
வானுயர்ந்த கோவில்களில் ‘அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆனால் உயர்சாதியினர்க்கு
சொந்தமான’ அரசாங்க சாமிகளாக
இருப்பதையும் தலித்துக்களின் சாமிகள் தலித்துக்களைப் போலவே ஊருக்குவெளியே
வெட்டவெளிகளில் வெயிலில் காய்ந்தும் மழையில் நனைந்தபடியும் இருப்பதையும் பார்க்க
முடிகின்றது. உயர்சாதி கார்ப்பொரேட் சாமியார்களைப் போலவே உயர்சாதி சாமிகளும்
கார்ப்பொரேட் சாமிகளாக பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளன.
இத்தகைய பின்னணியில் ‘ஐந்து ஏக்கர் நிலம்’ என்ற கோரிக்கை மிக முக்கியத்துவம்
வாய்ந்தது. “நாங்கள் அரசுக்கு 30 நாட்கள் கெடு விதிக்கின்றோம்; போர்ர்களத்திலிருந்து நாங்கள்
விடுக்கும் செய்தியாகும் இது. எமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிடில் நாங்கள்
ரயில் மறியல் செய்வோம். பட்டிதார் சாதியினரால் (ஹர்திக் படேல்) ஒன்பது மாதங்கள்
சிறையில் இருக்க முடியும் எனில் என்னால் இருபத்தேழு மாதங்கள் இருக்க முடியும்” என்று சொல்கின்றார் ஜிக்னேஷ்
மேவானி. படேல் சமூகத்துக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையோடு ஹர்திக்படேல்
என்ற இளைஞனை தூண்டிவிட்டதன் பின்னணியில் ஆர் எஸ் எஸ் அமைப்பு இருந்தது. ’எங்களுக்கு இட ஒதுக்கீடு
இல்லையெனில் யாருக்குமே இட ஒதுக்கீடு கூடாது’ என்பது ஹர்திக்படேலின் குரல் அல்ல, ஆர் எஸ் எஸ்சின்
இட ஒதுக்கீட்டுக்கு எதிரான குரலாகும். பெருமளவு படேல் சமூகத்தவரின் வாக்குகளை
குறிவைத்து குஜராத்தின் ஆன்ந்திபென் படேல் அரசு படேல் சமூகத்துக்கு இட ஒதுக்கீடு
ஆணை பிறப்பித்தது, ஆனால் உச்சநீதிமன்றம் இந்த ஒதுக்கீடு செல்லாது என்று
அறிவித்தது சங்பரிவார் எதிர்பாராத இடியாகும்.
குஜராத்தின் உண்மை முகம் அம்பலமானதில் பதட்டம் அடைந்த
(அடல்பிஹார் வாஜ்பேயி, அத்வானி போன்ற
‘இளைஞர்களை’ ஆட்சியில் அமர்த்தி
வேடிக்கை காட்டிய) சங்பரிவார், ஆனந்திபென் படேலுக்கு ‘வயசாகி’விட்டதாக சாக்குச்சொல்லி அவரை முதல்வர் பதவியில்
இருந்து நீக்கியது. ஒபாமாவுடனும் அம்பானி அதானியுடனும் பேசுவதற்கும்
சாப்பிடுவதற்கும் மட்டுமே வாயைத் திறக்கும் நரேந்திரமோடி வேறு வழியின்றி செங்கோட்டையில்
நின்றுகொண்டு தலித்துக்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கினார். உனா
தாக்குதலில் ஈடுபட்ட தான் சார்ந்த சங்பரிவார் கூட்டத்தை நேரடியாக குறிப்பிட
வக்கற்ற பிரதமர் ‘சுடுவதாக இருந்தால் என்னைச் சுடுங்கள்’ என்று முகம் தெரியாத எதிரியை சவாலுக்கு அழைத்ததுபோல்
நாடகம் போட்டார்.
(தொடரும்)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக