புதன், ஜூலை 11, 2012

உழுதுண்டு வாழ்வாரே....வாழ்வார்? - 3











உழைப்பாளிகள் இடம்பெயர்வதும் கிராமப்புறங்களில் ஏற்படும் பிரச்னைகளும்:

2001-2011 மக்கட்தொகை கணக்கெடுப்பில் காணப்பட்ட பெரும் அபாயம் இடப்பெயர்ச்சிதான், இந்தப்பத்தாண்டுகளில்தான் கடந்த 90 வருடங்களில் இல்லாத அளவுக்கு கிராமப்புற மக்கள் நகரங்களை நோக்கி பெரும் அளவில் இடம்பெயர்ந்தார்கள். நகரங்களில் கட்டிட வேலைகளில் பிரதானமாக ஈடுபடுகின்றார்கள். ஆனால் ஒழுங்கான குடியிருப்பு, கழிப்பிட வசதி இல்லை, அவர்களது குழந்தைகளின் படிப்பு பற்றி சொல்லவேண்டிய அவசியம் இல்லை.்ரதானமாக ஈடுபடுகின்றார்கள்.
் இடப்பெயர்ச்சிதான்,்பவர்களின் எண்ணிக்கை க்டந்த 20 ஆண்டுகளில் இரு மடங்

ஒரிசாவின் கஞ்சம் மாவட்ட்த்தில் இருந்து இடம்பெயர்ந்த 4 லட்சம்  தொழிலாளிகள் இப்போது குஜராத்தில் விசைத்தறி வேலைகளில் அடிமாட்டு கூலிக்கு தினமும் 12 மணி நேர வேலை செய்கின்றார்கள். புதிய பொருளாதாரக்கொள்கையின் விளைவாக விசைத்தறி உள்ளிட்ட தொழில்கள் அழிவை நோக்கிசெல்லும்போது இத்தொழிலாளிகளுக்கு லே-ஆஃப் விடப்படும்போது ஊதியம் கிடைக்காது, சொந்த ஊரில் உள்ள குடும்பத்துக்கு பணம் அனுப்ப இயலாமல் போகும்போது அங்கே அக்குடும்பம் சிக்கலை சந்திக்கும்.

கேரளாவின் வயனாடு மாவட்ட்த்தில் மிகப்பலர் வளைகுடா நாடுகளில் வேலைக்குப்போனவர்கள். விவசாயத்தில் நெருக்கடி, தற்கொலைகள் காரணாமாக இங்கே இருந்த பல்லாயிரம் விவசாயிகளும் தினக்கூலித்தொழிலாளிகளும் அருகில் உள்ள கர்னாடகாவுக்கு ஏதோ ஒரு வேலைக்காக இடம்பெயர்ந்தார்கள்.

நவதாராளக்கொள்கைகள் அமலாக்கப்பட்ட இந்த இருபது வருடங்களில் உச்சகட்ட  உலகமயமாக்கப்பட்ட மாநிலம் கேரளாதான். இது குறிப்பிடத்தக்க விசயமாகும்.  ஏனெனில் கேரளாவின் விளைபொருட்களில் பெரும்பாலானவை பணப்பயிர்களே, இவற்றின் விலையை தீர்மானிப்பவர்கள் சர்வதேச ஸ்டாக் மார்க்கெட் வியாபாரிகளும் பெருமுதலாளிகளும்தான். முக்கியமான விசயம் என்னவெனில் கேரளாவில் விளைகின்ற பொருட்களில் ஆகப்பெரும்பாலானவற்றை உள்ளூர் மக்கள் பயன்படுத்துவதில்லை, எல்லாம் ஏற்றுமதிதான்.  ஆக சர்வதேச அல்லது உள்நாட்டுப்பொருளாதாரத்தில் ஒரு  மோசமான சரிவு நேர்ந்தால் கேரளாவின் இத்தளம் மிக மோசமாகப்பாதிக்கப்படும், சுற்றுலா உள்ளிட்ட உள்ளூர் பொருளாதாரம் அனைத்தும் பாதிக்கப்படும்.

மஹாராஷ்ட்ராவில் ஒரே ஒரு குடும்பத்துக்கு ஒரு வீடு கட்டப்பட்டுள்ளது. அந்த வீடு 27 அடுக்குகள் கொண்டது. அமெரிக்க கட்டுமான நிறுவனமான பெர்க்கின்ஸ்&வில் என்பவர்களால் வாஸ்து முறைப்படி கட்டப்பட்டதாம். 4 லட்சம் சதுர அடி, 168 கார்கள் நிறுத்தக்கூடிய வசதி, 9 லிஃப்டுக்கள், மூன்று ஹெலிகாப்டர் தளங்கள்,நீச்சல்குளம்,பொழுதுபோக்கு தளங்கள், திரையரங்கம்...என நீளும் வசதிகள் கொண்ட சிறு வீடு. இந்த வீட்டின் சொந்தக்காரர் பெயர் முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் என்ற கம்பெனிக்கு சொந்தக்காரர். நமது பக்கத்து வீட்டில் ஒருவர் இறந்துவிட்டால் அந்த உடல் எடுத்துச்செல்லப்படும் வரை நமது வீட்டிலும்  ஒழுங்கான சமையல் இருக்காது, ஆனால் துக்கவீட்டுக்கு வருபவர்களுக்கு நம்மால் இயன்ற தேநீர்,குடிநீர், முடிந்தால் உணவும் கூட கொடுத்து உபசரிப்பது என்பது அந்த வீட்டின் துக்கத்தில் பங்கு பெறும் ஒரு அடையாளமாகும். ஆயிரக்கணக்கில் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்ட, ஆசியாவின் மிகப்பெரும் மோசமான சேரிப்பகுதியான தாராவியும் இருக்கின்ற, உலகின் 5 வயதுக்கு உட்பட்ட எடைகுறைந்த குழந்தைகளில் 42 சதம் குழந்தைகளும் இருக்கின்ற இதே மாநிலத்தில்தான் தனது பகட்டையும் பணத்திமிரையும் வெளிச்சம்போட்டு காட்டும் மனிதாபிமானம் அற்ற ஒரு மிருகமும்  இருக்கின்றானாம். இவன் தான் உழைப்பால் உயர்ந்தவனாம், வளரும் இளம் தொழில்முனைவோருக்கு முன்மாதிரியாம்!

இது ஏதோ ஒரு தனிமனிதனின் குணாம்சம் அல்ல, இது உலகமயத்தின்  தாராளமயத்தின் பெருமுதலாளித்துவத்தின் விழுமியம், அதன் பகட்டுக்குப்பின்னால் ஒளிந்துள்ள ராட்சசமுகம் என்பதே உண்மை.




சனி, ஜூலை 07, 2012

உழுதுண்டு வாழ்வாரே....வாழ்வார்? (2)


 (2012 பிப்ரவரி 22 அன்று கேரளா திருச்சூரில் விப்கியார் திரைப்பட விழாவில் ‘உயிர்களும் உயிர்வாழ்தல் பொருட்டும்’ (Lives and Livelihood’) என்ற மையக்கருத்தின்  மீது நடந்த திரைப்படத்திருவிழாவில், விவசாயிகளின்பால் மிகுந்த கவனம் செலுத்தும் திரு. சாய்நாத் அவர்கள் சமத்துவமின்மை, வாழ்தலின்பொருட்டு, விவசாயத்துறை சந்திக்கும் பேரழிவுஎன்ற தலைப்பில் ஆற்றிய உரையைத் தழுவி எழுதப்பட்ட கட்டுரை) 
 
ஒருபுறம் கோடிக்கணக்கான இந்தியக்குடிமக்கள் ஒருவேளை உணவுக்கும் வழியின்றி செத்து மடிந்து கொண்டிருக்க, இந்திய அரசு மறுபுறம் எந்த ‘ஏழையைக் காப்பாற்ற அனைத்து முயற்சிகளையும் செய்துகொண்டிருக்கின்றது? விஜய்மல்லையா என்ற தனிமனிதன் – ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை பட்டியல் இட்டுள்ள 55 இந்தியக்கோடீசுவரர்களில் ஒருவர், கிங்ஃபிஷெர் என்ற விமானக்கம்பெனியை நட்த்தி நஷ்டப்பட்டுப்போனார், எனவே மன்மோஹன் அரசும் அதன் அதிகாரிகளும் எப்படியாவது தில்லுமுல்லு செய்து அரசு கஜானவில் இருந்து பணத்தை எடுத்து விஜய்மல்லையா என்ற தனிமனிதனைக் காப்பாற்ற குட்டிக்கரணம் அடிக்கின்றார்கள்.  கிரிக்கெட் மைதான்ங்களில் அரைகுறை ஆடை அணிந்துள்ள பெண்களை கட்டிப்பிடித்தும் சினிமா நடிகைகளுக்கு முத்தம் கொடுத்து போஸ் கொடுப்பவரும்  இந்த ஏழை மல்லையாதான், பாவம்.  ஒரு புள்ளிவிவரப்படி தனது மதுபானக்கம்பெனியின் காலண்டர்களுக்கு அழகிகளைப்போட்டு படம் எடுக்கவே இந்த மல்லையா பல கோடி ரூபாய்களை செலவு செய்கின்றாரம், அவ்வளவு ஏழையாம் இவர். மல்லையா கண்ணில் நீர் வழிந்தால் மனுமோஹன் சிதம்பரம் பிரணாப் அலுவாலியா கும்பலுக்கு நெஞ்சில் உதிரம் கொட்டுமாம்.

பிப்ரவரிக்கு முன்னால் நடந்த நாடாளுமன்றக்கூட்ட்த்தொடர் 38 நாட்கள் நடந்த்து.  ஒரே ஒரு மசோதாவை (லோக்பால் மசோதா) மட்டும் இந்த 38 நாட்களும் பேசிக்கொண்டே இருந்த்தார்கள். இந்த 38 நாட்களில் 1786 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருப்பார்கள், அதாவது 38 நிமிசங்களுக்கு ஒருவர். 78000 விவசாயிகள் தாங்கள் பரம்பரை பரம்பரையாக செய்து வந்த விவசாயத்தை கை கழுவுவிட்டு வேறு கூலி வேலைகளுக்கு சென்றிருப்பார்கள்.

இந்த 38 நாட்களில் 3000 முதல் 4000 குழந்தைகள் பட்டினியாலும் சத்துக்குறைவினாலும் செத்துப்போயிருப்பார்கள்; இந்த சாவுகளுக்கு நேரடிக்காரணம் பஞ்சமோ வெள்ளமோ அல்ல, அரசு பிடிவாதமாக கடைப்பிடிக்கின்ற பொருளாதாரக்கொள்கைகளே. மாந்தர் வளர்ச்சி அறிக்கையில் இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது: ஆப்பிரிக்காவின் சஹாராவின் சுற்றுப்பிரதேச நாடுகளில் போதிய சத்துணவு இன்றி இறந்துபோகும் குழந்தைகளின் எண்ணிக்கையைப்போல் இது இரண்டு மடங்கு.  ஆனால் ஒரு நாளைக்கு 25 ரூபாய் சம்பாத்தியத்துக்கு உட்பட்டவர்கள் அரசு அறிவித்துள்ள வறுமைக்கோட்டுக்குள் வருவார்கள் என மத்திய அரசு உச்சநீதி மன்றத்தில் பிரமாணம் தாக்குதல் செய்துள்ளது (அதாவது ஒரு நாளைக்கு 25 ரூபாய்க்கும் மேல் சம்பாதிப்பவர்கள் அரசு அறிவித்துள்ள வறுமைக்கோட்டை தாண்டிவிடுவார்கள்!).

ஆனால் அதே சமயத்தில் ஒவ்வொரு மத்திய பட்ஜெட்டிலும் பெருமுதலாளிகளின் நலனை மட்டுமே குறிகோளாக கொண்டு 88000 கோடி ரூபாய் மதிப்பிலான அவர்களுக்கான நேரடி வரிகளை மன்மோஹன் அரசு தள்ளுபடி செய்கின்றது. இத்தொகை பொதுவினியோக (ரேஷன்) முறைக்கு அரசு செய்யும் செலவுக்கு ஈடானது. ஒவ்வொரு வருசமும் பெருமுதலாளிகளுக்கு அரசு தரும் மானியம் 5 லட்சம் கோடி ரூபாய்; அரசு மனது வைத்தால் ஒட்டுமொத்தமாக சுகாதாரம்,கல்வி உள்ளிட்ட அனைத்து சமூக நலத்திட்டங்களுக்கும் இந்தப்பணம் போதுமானதாகும்.

இந்த 38 நாட்களில் இந்தியாவின் கோடீசுவர்ர்கள் எத்தனை கோடிகள் சம்பாதித்திருப்பார்கள்? உதாரணமாக முன்னாள் விமானப்போக்குவரத்து மந்திரியும் பெரும் முதலாளியும் ஆன பிரஃபுல்படேல் ஒருகோடியே தொண்ணூறு லட்சம் ரூபாய் (ஒரு நாளைக்கு 5 லட்சம்) சம்பாதித்திருப்பார். ஆனால் தேசிய விமானக்கம்பெனியான ஏர் இந்தியா விமானிகளுக்கு பல மாதங்களாக சம்பளமே தரப்படவில்லை.

கடந்த இருபது வருடங்களில் காங்கிரஸ் அரசால் மிக வலுவாக இந்திய மண்ணில் புகுத்தப்பட்ட நவதாராளமயக்கொள்கைகளால் உலகின் டாலர் கோடீசுவர்ர்களின் பட்டியலில் இந்தியா இந்த இருபது வருடங்களில் நான்காவது இட்த்தைப் பிடித்துள்ளது எனில் யாரைப் பலிகொடுத்து?  பலகோடி தொழிலாளிகளையும்  விவசாயிகளயும்  சிறுவியாபாரிகளையும்  சாமானியமக்களையும் பலிகொடுத்தே அம்பானிகளும் மிட்டல்களும் மல்லையாக்களும் கோடீசுவர்ர் ஆனார்கள்.


மறுபுறமோ பொருளாதார ஆய்வறிக்கையின்படி, கடந்த 20 வருடங்களில் உணவுற்பத்தி படுவேகமாக வீழ்ச்சியடைந்துள்ளது. பெருகும் மக்கட்தொகைக்கு ஏற்ப உணவுற்பத்தி இல்லை. விளைவு, மக்களின் உடல்நலனுக்குத் தேவையான கலோரி கிடைப்பதில்லை.  கேவலமான உண்மை என்ன? சஹாராவை சுற்றியுள்ள ஆப்பிரிக்க நாடுகளின் (ருவாண்டா போன்ற நாடுகளின்) மக்களை விடவும் உணவுப்பாதுகாப்பு விசயத்தில் இந்தியா மோசமாகப் பின்னடைந்துள்ளது. உலகின் பிற நாடுகளை விடவும் இந்தியாவில்தான் பட்டினி கிடக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகம்! 2020இல் இந்தியா வல்லரசாகிவிடும் என்று உடுக்கை அடித்துக் குறிசொல்லும் விஞ்ஞானிகள் ‘வல்லரசுன்னா என்ன என்று பதவுரை பொழிப்புரை சொல்ல வேண்டும். வலுத்தவன் அரசா? அப்போ இளைத்த இளிச்சவாய இந்தியனெல்லாம் எங்கே போய் சாவது?

அரசின் இத்தகைய கொள்கைகளின் விளைவாகவே பாரம்பரியமான விவசாயத்தை தொடர முடியாமல், அதாவது இடுபொருட்கள்,உரம்,மருந்து,கூலி போன்ற செலவுகளை தாங்க முடியாமலும், அல்லது இந்த செலவுகளுக்காக தண்டல் வட்டிக்கு கடன் வாங்கி விவசாயம் செய்து பின்னால் கடனை அடைக்கமுடியாமல் தற்கொலை செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை லட்சங்களைத் தாண்டுகின்றது.  இந்தப்புள்ளிவிவரங்களிலும் அரசு மோசடி செய்கின்றது: பெண்கள் விவசாயிகளாக்க் கருதப்பட மாட்டார்கள், எனவே பெண் விவசாயிகள் தற்கொலை செய்தால் அது இந்தக்கணக்கில் வராது; அல்லது தற்கொலை செய்துகொள்ளத் தேவையான பணம் (!) இல்லாமல் செத்துப்போகும் விவசாயிகள், இந்தியாவின் மாண்புமிகு ஜனாதிபதி அவர்களுக்கும் மரியாதைக்குரிய பிரதமர் அவர்களுக்கும் தமது கஷ்டங்களை கடிதமாக எழுதிவிட்டு தற்கொலை செய்பவர்கள்; அல்லது விதர்ப்பாவின் பாஞ்சரா பழங்குடிமக்களின் தலைவர் ஒருவர் தனது குடும்பத்தின் திருமண நாளன்று தற்கொலை செய்துகொண்ட சம்பவம்...ஆக இவையெல்லாம் தற்கொலை பட்டியலில் வராது என்று அரசு சொல்கின்றது!

நமது தொலைத்தொடர்புத்துறை அமைச்சரோ இந்திய மக்கள் 70% பேருக்கு மொபைல் தொலைபேசி கிடைத்திட திட்டமிடுவதாக பறைசாற்றுகின்றார், ஆனால் அதே அளவு மக்கள் ஒரு வங்கிக்கணக்கு கூட இல்லாமல் இதே தேசத்தில் இருக்கின்றார்கள், தண்டல்கார்ர்களிடம் வட்டிக்கு கடன் வாங்குகின்றார்கள்.  இந்தியா ஒரு விவசாய நாடு என்று பெருமை பீற்றிக்கொள்கின்ற இந்த தேசத்தில், கார் கடனுக்கு 7% வட்டி மட்டுமே வசூலிக்கின்ற அரசு வங்கிகள், விவசாயத்துக்கான ட்ராக்டர் கடனுக்கு 14% வட்டியும், அரசுசாரா தொண்டு நிறுவன்ங்கள் என்ற போர்வையில் சுயநலமிகளால் நட்த்த்ப்படும் சுய உதவிக்குழுக்களிடம் உழைக்கும்பெண்கள் பெறும் கடனுக்கு 36% வட்டியும் வசூலிப்பது கொடுமையன்றி வேறென்ன?

தமது குறைந்தபட்ச வாழ்க்கையை நடத்தவே பெரும் கடனில் சிக்கிக்கொள்ளும் விவசாயிகளை பெரும் நோய்கள் தாக்கிவிட்டால் மருத்துவ செலவுகளை சரிக்கட்ட தம் நிலங்களை அடகு வைக்கின்றார்கள்.  மருத்துவம் ஒரு சேவை என்ற காலம் மலைஏறி அதுவும் ஒரு லாபம் கொழிக்கும் தொழில் என்ற நிலைமையை உலகமயமும் தாராளமயமும் உருவாக்கியபின் பெரும் தொழில்முதலைகள் கோடிகளைக்கொட்டி மருத்துவ்மனைகளை கட்டுகின்றார்கள், அரசு மருத்துவமனைகள் மூடப்படுகின்றன, மக்களுக்கான சுகாதாரத்தை வழங்குவது என்ற அடிப்படைக்கடமையை அரசு கை கழுவுகின்றது.  (இதுபோன்ற கார்பொரேட் மருத்துவமனைகளில் பணிபுரிபவர்களுக்கு குறைந்த ஊதியம் மட்டுமே வழங்கப்படும், கொத்தடிமைகளாக நட்த்தப்படுவார்கள் என்பது மற்றுமொரு விசயம்). மருத்துவசெலவுகளைத் தாங்க முடியாத காரணத்தால் மருத்துவமனைகளுக்கே செல்லாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை கடந்த 20 ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரித்துள்ளது.

தொடரும்...3.
 


ஆனந்தவிகடனுக்கு நன்றி!

’குறைவாக எழுதினாலும் நிறைவான படைப்புக்கள் அலங்கரிக்கும் வலைதளம்...உபயோகமான வாசிப்பு அனுபவம் அளிக்கும் தளம்!’ எனப் பாராட்டி சாம்பல்தேசத்தை விகடன் வரவேற்பறையில் அறிமுகம் செய்து வைத்துள்ளது ஆனந்தவிகடன்  (11.7.12 இதழில்).  ஆனந்தவிகடனுக்கு என் நன்றிகள் பல!...


அன்புடன்
சாம்பல்தேசம்
06.07.2012

வியாழன், ஜூலை 05, 2012

உழுதுண்டு வாழ்வாரே....வாழ்வார்? - 1


தேசிய குற்றப்பதிவு அமைப்பு (National Crime Records Bureau) புள்ளிவிவரப்படி 2011ஆம் ஆண்டில் மட்டும் 14027 விவசாயிகள் இந்தியாவில் தற்கொலை செய்துள்ளார்கள். 1995ஆம் ஆண்டு தொடங்கி 2011 வரை தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 270940. இதில் உச்சத்தில் நிறபது மஹாராஷ்ட்ரா மாநிலம். இக்காலகட்ட்த்தில் இங்கு மட்டும் உயிரை மாய்த்துக்கொண்டோர் 53818.  2011இல் மஹாராஷ்ட்ராவில் தற்கொலை செய்துகொண்டவர்கள் 3337. அதிகபட்சமாக இம்மாநிலத்தில் 2006இல் 4453 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டார்கள்.  உண்மையான எண்ணிக்கை இதைவிடவும் அதிகமாகவே இருக்கும், ஏனெனில் அரசும் தனியார் பெருமுதலாளிகளின் விதைக்கம்பெனிகளும் ஒன்றுசேர்ந்து பெரும் செலவு செய்து தற்கொலை எண்ணிக்கையை ஊடகங்களில் குறைத்துக்காட்ட பெரும் பிரயத்தனம் செய்வது தொடர்கின்றது.
ஒரு புறம் விவசாயம் செய்வோரின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வர, தற்கொலை எண்ணிக்கையோ மறுபுறம் அதிகரித்துக்கொண்டே வருவது விசித்திரமாக உள்ளது.  குறிப்பாக மஹாராஷ்ட்ராவில் கிராமங்கள் அழிக்கப்பட்டு நகரமயமாதல் அசுரத்தனமான வேகத்தில் நடக்கும்போதும் தற்கொலை தொடர்ந்து அதிகரிப்பதற்கு, விவசாய சமூகத்தின் மீது அரசும் இந்த சமூகமும் தொடர்ந்து கொடுத்துவரும் அழுத்தமும் மன உளைச்சலுமே காரணமாகும்.
விவசாயிகள் தற்கொலை எண்ணிக்கையில் (1995ஆம் ஆண்டு தொடங்கி 2011 வரை) உச்சத்தில் இருக்கும் ஐந்து மாநிலங்கள் (என்ன ஒரு பெருமை!): 
மஹாராஷ்ட்ரா – 53818
ஆந்திரா – 33326
கர்நாடகா – 37153
மத்தியப்பிரதேசம்+சத்தீஷ்கர் – 42388, மொத்தம் 166685.
1995-2011 காலகட்டத்தில் இந்தியாவில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகள் 270940 எனில் ஆனால் மேற்கண்ட 5 மாநிலங்களில் மட்டும் இதில் 61.52% தற்கொலைகள் நடந்துள்ளன.  உண்மையில் இந்தப்புள்ளிவிவரங்கள் எல்லாம் குறைத்துக்காட்டப்பட்டவை; மேலும் பல விவசாயிகளின் தற்கொலைகள் வேறு காரணங்களைகாட்டி காவல்துறையாலும் அரசாலும் இந்தப்பட்டியலில் மறைக்கப்பட்டிருக்கும் (numbers massage) என்பது தெளிவு. விவசாயிகள் தற்கொலைகளில் முதலிடம் பெறும் மஹாராஷ்ட்ராவின் விதர்ப்பாவிற்கு பிரதமர் மன்மோஹன் சிங் கருணை கூர்ந்து விஜயம் செய்த பின்னர் அரசு அதிகாரிகள் ராஜாவை விஞ்சிய மந்திரிகளாய் தற்கொலைகளின் எண்ணிக்கையை தொடர்ந்து குறைத்தே காட்டி வருகின்றார்கள்.  மத்தியில் விவசாயத்துறை மந்திரியாய் இருக்கின்ற, அதே மஹாராஷ்ட்ராவை சேர்ந்தவரான சரத்பவாரோ அரசின் புள்ளி விவரங்களை (தில்லுமுல்லானவை என்றாலும்) நாடாளுமன்றத்தில் சொல்வதை தவிர்த்தே வருகின்றார். அவருக்கு இதை விட முக்கியமான வேலைகள் இருக்கின்றன – கிரிக்கெட் வாரியத்துக்கு யார் தலைவராக இருப்பது, கிரிக்கெட் வாரியத்துக்கு தான் போட்டி போடலாமா அல்லது எதிர்த்துப் போட்டியிடுபவரை எப்படி கவிழ்த்து இந்தியத்தாயை வாழ வைப்பது போன்ற தலைபோகிற விசயங்கள்.  
சரி, நீங்கள் நெடுநேரமாய் கேட்க ஆவலாய் உள்ள கேள்விக்கு பதில் இதோ: தமிழகத்தில் 2011இல் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 82. காங்கிரசின் புதிய நவதாராளவாத-உலகமயக் கொள்கைகளை அப்படியே தமிழகத்தில் அமலாக்கும், உலகப்பெருமுதலாளிகளின் உள்ளூர் ஏஜெண்டுகளான இனமானத்தளபதிக்கும் புரட்சித்தலைவிக்கும் இந்தப்புள்ளிவிவரம் சமர்ப்பணம்.
(ஹிந்து நாளிதழில் வெளிவந்த பி.சாய்நாத் அவர்களின் கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது)
தொடரும்....2

ஞாயிறு, ஜூலை 01, 2012

மேற்கத்திய உலகத்தின் வளர்ச்சி: திருட்டும் கொள்ளையும் - கென் சாரோ-விவா (பாகம் 3)


நீண்டகால பாதிப்புக்கள்:

1) மக்கள் உடல்நலம் பாதிப்பு: சுவாசக்கோளாறு, இருமலில் ரத்தம், தோல்வியாது, கட்டிகள், வயிற்றுப்பிரச்னை, புற்றுநோய்கள், சத்தற்ற உணவு...
2) உலகின் மூன்றாவது பெரிய சதுப்பு நிலக்காடு; ஆப்பிரிக்கக்கண்டத்தின் மிகப்பெரியது; இயற்கை வளங்களும், ஏராளமான வன, நீர்வாழ் உயிரினங்களும் நிரம்பி வழிந்த பூமி என்ற பெருமைக்கு உரிய நைஜர் டெல்டா. எண்ணெய்க்கம்பெனிகளின் கட்டுமானம், குழாய் பதிப்பு, தொழிற்சாலைக் கழிவுகளைக் கொட்டுவதற்கான குழி தோண்டுவது என காசு மட்டுமே குறியாக சர்வதேச முதலாளிகள் செய்த அனைத்து விதமான நாசவேலைகளால் கிடைத்தற்கு அரிய இயற்கைவளங்களை இழந்து நாசமானது நைஜர் டெல்டா.

சமூக, பொருளாதார பாதிப்புக்கள்:

எண்ணெய்க்கம்பெனிகளின் தொழில்கள் எங்கெல்லாம் நடக்கின்றதோ அப்பகுதியின் இயற்கை வளங்களை நம்பியும் சார்ந்தும்தான் அப்பகுதி மக்கள் கடந்தகாலத்தில் வாழ்ந்து வந்தார்கள். எண்ணெய்க்கம்பெனிகளின் நுழைவுக்குப்பின்...

1) நில இழப்பும் அடிப்படை ஆதாரவள இழப்பும்:

தமது கூட்டாளிகளான சர்வதேச எண்ணெய் முதலாளிகளுக்கு சாதகமான ஒரு சட்டத்தை நைஜீரிய அரசே இயற்றியது: "மக்கள் நலன் கருதி" எந்த ஒரு நிலத்தையும், கவர்னர் ஒரே ஒரு கையெழுத்தின் மூலம் கைப்பற்றி எண்ணெய் முதலாளிகளுக்கு கொடுத்து விடலாம். அப்பட்டமான அரசு பயங்கரவாதம்! இதனால் வாழ்வின் அடிப்படை ஆதாரமான நிலத்தை டெல்டா மக்கள் இழந்தார்கள். எண்ணெய்க்கழிவு, கசிவால் நீர்நிலைகள் நாசமானதால் மீன்கள் அழிப்பு, எனவே உணவுத்தட்டுப்பாடு; காடுகள் அழிப்பால் வீடு கட்டத்தேவையான மரம், விறகு ஆகியனவற்றிலும் இடி விழுந்தது.

2) பாரம்பரிய வாழ்க்கை அழிப்பும் வாங்கும் சக்தி இழப்பும்:

பாரம்பரியமாக காடு, ஆறு, கடல் என இயற்கை சார்ந்த வாழ்க்கை நடத்திக்கொண்டு, முக்கியமாக உணவுத்தேவைகளை நிறைவேற்றிக்கொண்டிருந்த மக்கள், எண்ணெய்க்கம்பெனிகளின் ஆக்கிரமிப்பால் காடுகளை இழந்ததால் 'வேலை' தேடும் நிர்ப்பந்தத்துக்கு ஆளானார்கள். மாத வருவாய், கடைக்குச்சென்று உணவு வாங்குதல் போன்ற வார்த்தைகளையே கேட்டறியாத டெல்டா மக்கள், நிலமும் காடும் பறிபோன பின் தமது நிலத்தில் அமைந்த எண்ணெய்க்கம்பெனிகளில் கூலி வேலைக்கு சென்றார்கள்! கிடைக்கின்ற கூலியால் வாழ்க்கை நடத்த முடியாது. மாத ஊதியம் பெறும் எண்ணெய்க்கம்பெனி ஊழியர்களின் வருமானத்தோடும் தரத்தோடும் ஒப்பிடும்போது பாரம்பரிய ஓகோனி மக்களால் வாழ்க்கை நடத்த முடியாது.

3) பெண்கள் மீது சுமத்தப்பட்ட வாழ்க்கைச்சுமைகள்:

முன்பே கூறியபடி, இயற்கையோடு இசைந்த பாரம்பரியத்தொழில்களைச் செய்து வாழ்க்கை நடத்திய டெல்டா மக்களில் பெண்களின் பங்கு முக்கியமானது. விவசாயம், மீன்பிடித்தல், விறகு சேகா¢த்தல், காய், கனி, கிழங்கு உள்ளிட்ட உணவு சேகா¢த்தல் ஆகிய வேலைகள் மூலம் குடும்பப்பொருளாதாரத்தின் முக்கிய பங்கை பெண்கள் நிறைவு செய்தனர்; இதன் மூலம் இயற்கையாகவே டெல்டாப்பகுதியின் காடு, நீர்நிலைகளின் பராமா¢ப்பு, பாதுகாப்பு போன்றவற்றையும் பெண்களே செய்தார்கள். ஆனால் காடு, நிலம் ஆகிய அனைத்தும் ஆக்கிரமிப்புக்கும் சீர்கேட்டுக்கும் உள்ளானதால் பெண்களின் தொழில் கேள்விக்குறியானது; இதனால் குழந்தைகளின் கல்வியும் பராமா¢ப்பும் கூடவே கேள்விக்குறியானது.

4) பாலியல் தொழிலும் அநாதைக்குழந்தைகளும்:

தமது வாழ்வாதாரம் பறிபோன நிலையில் பெண்கள் பாலியல் தொழிலுக்குத் தள்ளப்பட்டார்கள். இவர்களது வாடிக்கையாளர்கள் எண்ணெய்க்கம்பெனித் தொழிலாளர்களே என்பதைச் சொல்ல அவசியம் இல்லை. ஆக எண்ணெய்க்கம்பெனிகளால் ஓகோனிப்பெண்களின் சுயமா¢யாதையையும் பறி போனது. முறை தவறிப் பிறந்த குழந்தைகள் ஏராளமாக அநாதைகளாக தெருவில் விடப்பட்டனர்.
இதன்றி குழந்தை இறப்பு விகிதம் அதிகமானது. டெல்டாப்பெண்கள் இயற்கையாகவே ஆண்களை விடவும் கடுமையான உழைப்பாளிகள். எனவே முன்பு குழந்தை இறப்பு என்பது அநேகமாக அங்கே இருந்தது இல்லை. ஆனால் நீர்நிலைகள் மாசு அடைந்ததால் இந்நீரைக் குடிக்கின்ற கருவுற்ற பெண்களுக்கு நோயுள்ள, ஊனமுள்ள குழந்தைகள் பிறப்பதும், இறந்தே பிறப்பதும் சாதாரமானது.
மொத்தத்தில் ஓகோனி பாரம்பரிய மக்களின் மண்ணும் வாழ்க்கையும் பறி போனது; சமூகச்சீரழிவு தலைவிரித்து ஆடியது.

...4

வெள்ளி, ஜூன் 29, 2012

மேற்கத்திய உலகத்தின் வளர்ச்சி: திருட்டும் கொள்ளையும் - கென் சாரோ-விவா (பாகம் 2)

ஷெல்தான் நைஜீரிய எண்ணெயில் பாதியை உறிஞ்சி விற்கின்றது. மோபில், செவ்ரான், எல்•ப், ஆகிப், டெக்சாசோ...என மேலும் பல கம்பெனிகள் உண்டு.
ஷெல் கம்பெனி கடந்த 2008ஆம் வருடத்தில், ஒரு நொடிக்கு 700 பவுண்டு (சுமார் ஐம்பதாயிரம் ரூபாய்) சம்பாதித்ததாக அதன் கணக்கே சொல்கின்றது. அதே நேரத்தில் எழுபது விழுக்காடு நைஜீரிய மக்களின் ஒருநாள் வருமானம் வெறும் நூறு ரூபாய்க்கு சமானம்! இதையே நாம் இப்படியும் சொல்லலாம்: நைஜீரிய மக்களின் ரத்தத்தை உறிஞ்சி விற்றால் ஒரு நொடிக்கு 700 பவுண்டு சம்பாதிக்கலாம். 1997 கணக்குப்படி மட்டும் ஒருநாளைக்கு 20 லட்சம் பேரல் கச்சாஎண்ணெய் நைஜீரியாவின் மடியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டது.
ஷெல் உட்பட்ட பன்னாட்டு எண்ணெய் சுரண்டல் கம்பெனிகள், பெட்ரோலை உறிஞ்சி எடுத்து விற்று சம்பாதித்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நைஜீரிய மக்களுக்கு செய்த 'நன்மைகள்' வருமாறு: எண்ணெய்க்கசிவு, கழிவுகளால் மண்வளம், நீர்வளம் வீழ்ச்சி, மீனினம் அழிப்பு, சாயம், மீன்பிடித்தொழில் அழிப்பு, மண்ணா¢ப்பு, காடு அழிப்பு, அழியும் நிலையில் உள்ள உயிரினங்களின் வீழ்ச்சி, நச்சுப்பொருட்கள் வெளியேற்றம், சுற்றுச்சூழல் அழிப்பு, நீர், நிலம், காற்று என அனைத்து வாழ்வாதாரங்களும் அழிப்பு, எனவே மக்களின் வாழ்க்கை சீரழிவு, வேலையின்மை, வருமான இழப்பு, வறுமை, நோய், விபச்சாரம், மக்கள்தொகைப்பெருக்கம், கூடவே அநாதைக்குழந்தைகள் அதிகா¢ப்பு, அரசுநிர்வாக சீரழிவு, லஞ்சலாவண்யம்...என நீள்கின்றது.


எண்ணெய்க்கம்பெனிகளின் இந்த சூறையாடல் ஏதோ ஒருநாள் திடீர் என தொடங்கியது அல்ல; உலகப்போக்கிரியான அமெரிக்கா, அதன் ஏவல் நாயான இஸ்ரேல், ஜப்பான், ஐரோப்பியப் பொருளாதாரக் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகள் என கடல்கடந்த கொள்ளையர்களின் ஏவல் நாயாக தொடர்ந்து இருந்த நைஜீரிய அரசுகள், வெறும் பொம்மை அரசுகளாக மட்டுமே இருந்ததும், அரசும் சர்வதேச முதலாளிகளும் சர்வதேச முதலாளித்துவம் விதித்த புனிதமான கோட்பாட்டை - "கூட்டுச்சேர்; தேச எல்லை, மொழி, இனம் பாராமல் கொள்ளை அடி" - அப்படியே பின்பற்றியதும்தான் நைஜீரியா சீரழிந்துபோனதற்கு காரணம். அதே சர்வதேச விதிகளின் அடுத்த விதியான "ஈவு இரக்கம் அனைத்தையும் குழிதோண்டிப்புதை: எதிர்க்குரல்களை ஒடுக்கு, அடிப்படை மனித உரிமைகளை மீறு, அரசுபயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விடு, ராணுவத்தையும் போலிசையும் மக்களுக்கு எதிராகப் பயன்படுத்து, தேவைப்பட்டால் உயிரை எடுத்துவிடு" போன்ற அனைத்தையும் ஒன்றுவிடாமல் நைஜீரிய அரசும் சர்வதேச முதலாளிகளும் திட்டமிட்டு நடத்தினார்கள்.


ஷெல் உள்ளிட்ட அந்நிய எண்ணெய்க்கம்பெனிகளின் புண்ணியத்தில் நைஜர் டெல்டாவின் மக்களும் இயற்கை வளங்களும் நாசமாகிக்கொண்டு வந்ததை பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கங்களும் மனித உரிமை ஆர்வலர்களும் கடந்த பல பத்தாண்டுகளாக அம்பலப்படுத்தி வந்தார்கள். பல புத்தகங்களாகவும் அறிக்கைகளாகவும் இணையதளங்களில் ஏராளமான தகவல்கள் கிடைக்கின்றன, அவற்றில் ஒரு சில மட்டும் கீழே:
1) எண்ணெய் தோண்டி எடுக்கும்போது நிலத்திலிருந்து வெளிப்படும் இயற்கை எரிவாயுவை அப்படியே 24 மணிநேரமும் எரிப்பது. இதனால் 24 மணி நேரமும் அப்பகுதி தாங்கமுடியாத வெப்பத்துடன் தகித்தால் மனிதர்கள் எவ்வாறு வாழ்வது? கூடவே இந்த வாயு, சூறாவளி போன்ற பெரும்சத்தத்துடன் கெட்டநாற்றத்தையும் வெளிவிடுகின்றது. இப்போதுள்ள தொழினுட்பத்தின்படி இந்த வாயுவை வெளியேற்றாமல் வேறு வகையில் பயன்படுத்தலாம்; சேமித்து வேறு பல தொழில்களுக்கும், உள்ளூர் மக்களின் பயன்பாட்டுக்கும் பயன்படுத்தலாம்; இல்லையேல் மீண்டும் பூமிக்குள் செலுத்த வேண்டும், இந்த முறையை பல நாடுகள் பின்பற்றி வருகின்றன. ஆனால் இவ்வாறு செய்வதற்கு ஆகும் செலவை விடவும் இப்படி எரிப்பதால் அரசுக்கு தரப்படும் அபராதத்தொகை குறைவு என்பதால் கம்பெனிகள் எரிக்கின்றன. விவேக் ஒரு படத்தில் சொல்வதுபோல் "ஏண்டா, அட்வான்சா அபராதம் கட்டிட்டு ரேப் பண்றீங்களாடா?". 2008 டிசம்பர் வரை இதுபோன்ற நூற்றுக்கும் மேற்பட்ட எர்¢க்கும் இடங்கள் இருந்ததாக தகவல் உள்ளது. உள்ளூர் மக்களின் வாழ்க்கை நாசமாகி விட்டது. 24 மணிநேரமும் வெளியாகும் கார்பன்-டை-ஆக்சைடு, மீத்தேன் போன்றவற்றால் தட்பவெப்பநிலை நாசமாகி விட்டது. குறைந்த பட்சம் மனிதன் அனுபவிக்கின்ற இயற்கையான இருள் சூழ்ந்த இரவு என்ற உரிமையைக்கூட நைஜா£ய மக்கள் இழந்துவிட்டார்கள்.


2) அமிலமழைப்பொழிவால் குடிநீர் கெட்டுவிட்டது; விவசாயம் நாசமாகி விட்டது. துத்தநாகத்தால் ஆன வீட்டுக்கூரைகள் 7 முதல் 10 வருடங்கள் உழைக்கும், ஆனால் இப்போது அமிலமழையால் இரண்டுவருடங்களில் நாசமாகிவிடுகின்றன.


3) எண்ணெய்க்குழாய்க்கசிவுதான் நைஜர் டெல்டாவின் மிகப்பெரும் சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கு காரணம். மக்கள் வசிக்கும் வீடுகளின் முன்னால், தெருக்கள் நடுவே, வயல்களின் நடுவே என்று திரும்பிய திசை தோறும் எண்ணெய்க்குழாய்களே என்றால் மனிதன் எப்படி வாழ்வது? பல குழாய்கள் நாற்பது வருடங்களுக்கும் மேற்பட்டவை. இதனால் எண்ணெய்க்கசிவு மிக சாதாரணமான ஒன்று... உதாரணமாக 1998 ஜூன் மாதம் ஊட்டிகுவே1 பகுதியில் ஷெல்லின் 16 அங்குலக்குழாயில் இருந்து மாதக்கணக்கில் கசிந்த கச்சாஎண்ணெய் மட்டும் எட்டு லட்சம் பேரல்கள். அதே 1998 அக்டோபரில் ஜெஸ்சி கிராமத்தின் ஊடாக ஓடும் குழாய் வெடித்ததில் எழுநூறு பேருக்கும் அதிகமானோர், பெரும்பாலோர் பெண்கள், குழந்தைகள், செத்து மடிந்தனர். கடந்த ஐம்பது வருடங்களில் 15 லட்சம் பேரல் எண்ணெய் இதுபோல் நைஜர் டெல்டா எங்கும் கசிந்து ஓடி நாசம் செய்ததாக தகவல் கூறுகின்றது.


...3

வியாழன், ஜூன் 28, 2012

மேற்கத்திய உலகத்தின் வளர்ச்சி: திருட்டும் கொள்ளையும் - கென் சாரோ-விவா (பாகம் 1)


(2009 ஜூலை 'புதுவிசை'யில் வெளியானது, இப்போது பொதுவில்...)



ஷெல் (Shell) பெட்ரோலிய எண்ணெய்க் கம்பெனி. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இதன் தலமையகம் உள்ளது. உலகின் மிகப்பெரிய எண்ணெய்க்கம்பெனிகளில் ஒன்று. 2008ஆம் ஆண்டில் மட்டும் இதன் வருமானம் 21,475 லட்சம் அமெரிக்க டாலர் என்று இக்கம்பெனியின் கணக்கு சொல்கின்றது (சுமாராக 10,300 கோடி ரூபாய்). எண்ணெய்க்கிணறு தோண்டுவது, எண்ணெய் எடுப்பது, இயற்கை எரிவாயு தோண்டுவது, இவற்றை விற்பது, பெட்ரோலிய வேதிப்பொருட்கள் உற்பத்தி, விற்பனை என இதன் தொழில் பெட்ரோலியம் சார்ந்துள்ள பரந்த தொழில். இந்தியாவில் ஷெல், எஸ்ஓ போன்ற தனியார் கம்பெனிகள் எண்ணெய்க்கம்பெனிகள் இருந்ததும் பின் எண்ணெய்க்கம்பெனிகள் யாவும் நாட்டுடைமை ஆக்கப்பட்டதும் பழைய வரலாறு. நரசிம்மராவ், ம.சி, ப.சி, மான்டேக் சிங், காங்கிரஸ், பாரதீய ஜனதா கூட்டணி கூடிப்பேசி பொதுத்துறையாகிய மக்கள்சொத்தை மீண்டும் தனியார் முதலாளிகளுக்கு ஏலம் போட்டு விற்பது புதிய வரலாறு.

(ராயல் டச்சு) ஷெல் கம்பெனி ஆப்பிரிக்கக்கண்டத்தின் நைஜீரிய நாட்டில் நைஜர் டெல்டாப்பகுதியில் 1956ஆம் ஆண்டு எண்ணெய் தோண்டி எடுத்து, 1958இல் விற்பனையைத் தொடங்கியது. அப்போதும் அதன் பின்னும் தொடர்ந்து இருந்த அரசுகளின் துணையுடன்தான் தனது கொள்ளை லாப வேட்டையை தொடர்ந்தது. ஷெல் கம்பெனி, பெட்ரோலை விற்று சம்பாத்தித்தை விடவும் (சர்வதேச முதலாளிகளின் கல்லாப்பெட்டி பொருளாதார விதிகளின் படி) நைஜீரிய மக்களின் ரத்தத்தை விற்று சம்பாதித்ததுதான் அதிகம் என்பதை வரலாறு கூறுகின்றது.
நைஜீரியாவின் தெற்குப்பகுதியில் அமைந்துள்ள நைஜர் டெல்டாப்பகுதி ஓகோனி (Ogoni) எனப்படுகின்றது. இந்த மக்களும் ஓகோனி என்றே அழைக்கப்படுகின்றனர். ஓகோனி பிரதேசம் இயற்கையிலேயே மிக வளமான பூமியாகும். இருபதாயிரம் சதுர கிலோமீட்டர் பரப்புள்ள டெல்டாவில் ஆறாயிரம் ச.கி.மீ. பரப்புக்கு சதுப்புநிலக்காடு மட்டும் உள்ளது. உலகின் மூன்றாவது பெரிய சதுப்பு நிலக்காடு இதுதான். மேலும், நைஜீரியாவின் (எஞ்சியுள்ள) மிகப்பெரிய மழைக்காடுகளில் ஒன்றும் ஓகோனியில்தான் உள்ளது. ஓகோனி மக்கள் பாரம்பரியமாகவே இந்தக்காடுகளை நம்பித்தான் வாழ்ந்து வருகின்றார்கள். காடும் காடு சார்ந்த தொழில்களுமாக அவர்கள் வாழ்க்கை இருந்தது. சதுப்புநிலக்காடுகள் உயிரோடு இருப்பது மிக முக்கியம்- மண்வளம், தாவரவளம், மீன் பெருக்கம், காட்டு மரங்கள், வீடு கட்டுவதற்கான மரம், விறகு, மருந்துப்பொருட்கள், இயற்கைச்சாயம், பல்வேறு வனவிலங்குகள் ( யானை, வெண்மார்புக்குரங்கு, ஆற்று நீர்யானை, முதலை போன்ற அழியும் நிலையில் உள்ள உயிர்கள் உட்பட) பல்வேறு இயற்கை வளங்களின் நீடிப்புக்கும் உயிர்ப்புக்கும் நைஜர் சதுப்புநிலக்காடுகள் தொட்டிலாக இருந்தன. விஞ்ஞானிகளின் கணிப்புப்படி, "உலகின் தலையாய பத்து ஈரநிலங்களின் வரிசையிலும், கடல்சார் சுற்றுச்சூழல் மையங்களின் வரிசையிலும்" நைஜர் டெல்டா இருந்தது.

நைஜர் பகுதியின் ஓகோனி மக்களின் வாழ்க்கை மட்டும் இன்றி, (மேற்கு ஆப்பிரிக்காவின்) மோசமான ஏழைநாடுகளின் மக்களின் வாழ்க்கையும் இந்த டெல்டாவை நம்பியே இருந்தது. நைஜர் டெல்டாவிலிருந்து இனப்பெருக்கத்துக்கான இடப்பெயர்ச்சி செய்யும் மீன்கள் இம்மக்களுக்கு வாழ்க்கை தருகின்றன. சுருக்கமாக, டெல்டாவின் 2.7 கோடி மக்களில் 75 விழுக்காடு மக்களின் விவசாயம், மீன்பிடித்தொழில், அவை சார்ந்த துணைத்தொழில்களை, வாழ்க்கையை இந்த டெல்டாதான் தீர்மானிக்கின்றது. எல்லாவற்றிற்கும் மேலாக, ஆப்பிரிக்கக் கண்டத்தின் மிகப்பெரும் எண்ணெய் வள பூமி நைஜர் டெல்டாதான் என்பதை ஷெல் போன்ற சர்வதேச முதலாளிகள் தெரிந்துகொள்வதற்கு முன்னர் வரை ஓகோனி மக்களின் வாழ்க்கை ஒருகாலத்தில் பிரச்னை இல்லாமல் ஓடிக்கொண்டுதான் இருந்தது...

ஆப்பிரிக்கக் கண்டத்தின் மிகப்பெரும் எண்ணெய் வள பூமி என்ற பெருமையோடு இப்போதும் நைஜீரியா ஜொலிக்கின்றது. பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் கூட்டமைப்பின் (OPEC) ஐந்தாவது பெரிய உறுப்பு நாடாகவும் நைஜீரியா இருந்தது. எனவே நைஜீரியாவின் அரசியல்-பொருளாதாரக் கூறுகளைத் தீர்மானித்ததில் பெட்ரோல் கண்டுபிடிப்பு முக்கிய சக்தியாக விளங்கியதில் வியப்பில்லை. நாட்டின் அந்நியச்செலாவணியில் 90 விழுக்காடும், அரசு வருமானத்தில் 80 விழுக்காடும் பெட்ரோலிய ஏற்றுமதியால் கிடைத்தது. எனவே, நைஜீரியாவின் ஒவ்வொரு குடும்பமும் அடுக்கு மாளிகையில் வசிக்கின்றது, தெருக்களில் சொகுசு கார்களை நிறுத்த இடம் கிடைக்காது, கடைவீதிகள், ஓட்டல்கள் என எப்போதும் மக்கள் காசை 'பெட்ரோலாக' செலவு செய்வார்கள், ஒரே பொழுதுபோக்குகள், கச்சேரி, குடி, கூத்தியா, கும்மாளம்தான்...என்று நீங்கள் நினைத்தால், மன்னிக்கணும்...உலகின் மிக மோசமான ஏழைநாடுகளில் ஒன்றாக நைஜீரியாவும் உள்ளது என்பது கசப்பான உண்மை. கடல்கடந்து வந்து நைஜீரியாவின் பெட்ரோலியவளத்தை சுரண்டி சாப்பிடும் ஷெல் போன்ற எண்ணெய்க் கம்பெனி முதலாளிகள்தான் டாலர்களில் படுத்துப் புரண்டுகொண்டு மேற்படி குடி, கும்மாள, கூத்தியா கேளிக்கைகளில் பொழுதைப்போக்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்தக்கொள்ளையில் முதல் இடம் ஷெல்லுக்கு....

...2.



செவ்வாய், ஜூன் 26, 2012

போஸ்கோ முதல் கூடங்குளம் வரை...’பெருமுதலாளிகளின் படையெடுப்புக்கு’ (corporate invasion) எதிராக...





பெருமுதலாளிகளின் படையெடுப்புக்கு’ (corporate invasion) எதிராக...

ஒரிசாவில் கடந்த ஏழு வருடங்களாக தென் கொரிய கம்பெனியான போஸ்கோவுக்கு எதிராக நடந்து வரும் போராட்டம் ஜூன் 22 அன்று எட்டாவது வருடத்தை தொடுகின்றது. ஒரிசா அரசு இந்த தென்கொரிய கம்பெனியுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி
-          ஒரிசா மக்களுக்கு சொந்தமான 4000 ஏக்கர் நிலம் பறிக்கப்பட்டு போஸ்கோ எஃகு கம்பெனி தொடங்க கொடுக்கப்படும்; இந்த நிலம் அனைத்தும் விவசாய நிலம் ஆகும்
-          எஃகு ஆலைக்கான இரும்புத்தாது தோண்டியெடுக்க இந்திய மக்களின் சுரங்கங்கள் 30 வருசத்துக்கு குத்தகைக்கு விடப்படும், குத்தைகையை மேலும் 20 வருசத்துக்கு நீட்டிக்கலாம்
-          தலைநகர் புவனேஸ்வரில் தலைமை அலுவலகம் அமைக்க சுமார் 25 ஏக்கர் நிலம் தரப்படும் 
-          ஒரிசா மக்கள் இப்போது குடியிருக்கும்  2000 ஏக்கர் நிலம் பறிமுதல் செய்யப்படும், அங்கே போஸ்கோ குடியிருப்பு கட்டப்படும்
-          போஸ்கோ கம்பெனி வருசத்துக்கு 120 லட்சம் டன் எஃகு உற்பத்தி செய்யும்
-          தொழிற்சாலை, சுரங்கம், குடியிருப்பு ஆகியவற்றைக்கட்டவும் ஒட்டுமொத்த பயன்பாட்டுக்கும் இந்தியாவின் மஹாநதியில் இருந்து தென்கொரிய நிறுவனம் தண்ணீர் எடுத்துக்கொள்ளலாம்
-          ரயில் பாதைகள், சாலைகள், துறைமுகம் ஆகியவற்றைக் கட்டிக்கொள்ள போஸ்கோவுக்கு அனுமதி தரப்படும்
-          இப்பகுதி சிறப்பு பொருளாதார மண்டலமாக அறிவிக்கப்படும்.

இதுவரை இந்தியாவில் முதலீடு செய்யப்பட்ட அந்நிய முதலீடுகளில் இதுவே மிகப்பெரியது என்றும் சொல்லப்படுகின்றது. 90-களின் தொடக்கத்தில் மத்தியில் இருந்த நரசிம்மராவ்,மன்மோஹன், ப.சிதம்பரம்,மாண்டேக்சிங் அலுவாலியா கூட்டணி அமெரிக்க-ஐரோப்பிய பெருமுதலாளிகளின் நலன் காக்க உள்நாட்டில் திணித்த தனியார்மய-தாராளமயக்கொள்கைகள் கொண்டுவந்த ஆகப்பெரும் கேடுகளில் ஒன்றுதான் வெளிநாட்டுக்கம்பெனிகள் இந்தியாவுக்குள் தடைஏதும் இன்றி நுழைந்து இந்தியாவின் இயற்கை வளங்களை சூறையாடுவது.  காங்கிரசும் பாரதீய ஜனதாவும் தெருவில் கட்டிப்புரண்டு சண்டை போடுவது போலத்தெரிந்தாலும் கொல்லைப்புறத்தில் கமிசனில் சரிபங்கு பிரித்துக்கொள்கின்றார்கள்; இடை இடையே மத்தியில் ஆள வந்த பாஜக என்ன செய்கின்றது?  மன்மோஹன், அலுவாலியாவின் கொள்கைகளை எழுத்து மாறாமல் அப்படியே அமல்படுத்துகின்றது.

ஆனால் தம் வாழ்வின் ஆதாரமான மண் பறிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்காத பழங்குடியின மக்கள் போஸ்கோ பிரதிரோத் சங்ராம் சமிதி (PPSS) என்ற அமைப்பைத் தொடங்கினார்கள்; தம் மண்ணிலிருந்து போஸ்கோ வெளியேற வேண்டும் என்ற முழக்கத்துடன் ஏழு வருடங்களுக்கு முன் தொடங்கிய போராட்டம் இந்த வாரம் எட்டாவது ஆண்டுக்குள் அடியெடுத்து வைக்கின்றது. மண்ணை இழந்தவர்கள், தொழிலாளிகள்,மீனவர்கள், தலித் மக்கள், மனித உரிமை ஆர்வலர்கள், உள்ளூர் மண்ணின் மைந்தர்கள் என அனைவரும் ஒன்று திரண்டு போஸ்கோ கம்பெனி ஜகத்சிங்புரில் தொடங்க உத்தேசித்துள்ள இடத்தில் பெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள்.

இடதுசாரிகள் போஸ்கோ திட்ட்த்தைக் கைவிட வேண்டும் என தொடர்ந்து மாநில அரசை வற்புறுத்தி வருகின்றார்கள். ஆனால் மாநில தலைமைச்செயலாளர் பிஜய் பட்னாய்க் வேறு மாதிரி பேசுகின்றார்: “2005இல் போஸ்கோவுடன் செய்யப்பட்ட ஒப்பந்தம் காலாவதி ஆகிவிட்டதால் புதிய ஒப்பந்தம் போடப்படும்; ஏற்கனவே 2000 ஏக்கர் நிலம் கைப்பற்றப்பட்டுள்ளது, இன்னும் 600 ஏக்கர் நிலத்தை அமைதியான(?) வழியில் கைப்பற்றுவோம்.

ஏழு வருடங்களாக தொடரும் போராட்டத்தில் மோதல்களில் பலர் இறந்துள்ளார்கள்; திங்கியா,நுவாகான்,கடாக்குஜங் ஆகிய மூன்று கிராமப்பஞ்சாயத்துக்களும் போஸ்கோவுக்கும் மாநில அரசுக்கும் எதிரான போராட்ட்த்தில் மிகத்தீவிரமாக ஈடுபட்டள்ளதால் கிராமத்தின் ஒவ்வொருவர் மீதும் ஒன்றுக்கும் மேற்பட்ட பொய்வழக்குகள் உள்ளன, வழக்குகள் இல்லாத நபரே கிராமத்தில் இல்லை.

65 வயது சத்யாபதி ஸ்வைன் என்பவர் போராளி ரஞ்சன் ஸ்வைனின் தாயார். இக்காரணத்தினாலேயே சத்யாபதி ‘சட்டவிரோதமாக்க் கூடியகுற்றத்திற்காக போலீஸ் காவலில் வைக்கப்பட்டார்.  PPSS-ஐ முன்னின்று நடத்துகின்ற அபய் சாஹூ, நாராயண் ரெட்டி இருவர் மீதும் போடப்பட்டுள்ள பொய் வழக்குகளுக்கு கணக்கே இல்லை. அபய் 2008இல் கைது செய்யப்பட்டார், பெயிலில் விடுவிக்கப்பட்டார். ‘ஒரு வரதட்சணை வழக்கில் சாட்சியங்களை அழித்தார்என 2011-இல் புது வழக்கு ஜோடிகப்பட்டது.

திங்கியா கிராமத்தை சேர்ந்த மனோரமா என்ற இளம்பெண் போராட்டத்தில் குதித்தார், கடந்த ஜனவரி மாதம் முதல் டைபாய்டு நோயில் விழுந்த இவர் மீது 48 வழக்குகள் உள்ளன.

ரமேஷ் பொசாயத் என்பவர் தன் குழந்தையை மருத்துவரிடம் அழைத்து சென்றபோது வழியில் போலீஸ் அவரைக் கைது செய்தது, காரணம் தெரியாது.

விவசாயம் சார்ந்த பொருளாதார வளர்ச்சி செழித்து ஓங்கக்கூடிய ஒரு பகுதியில் எஃகுத்தொழிற்சாலை தொடங்கியே தீர்வது என மாநில அரசு ஏன் பிடிவாதமாக உள்ளது என்ற கேள்வியை 28 வயதான பிரகாஷ் ஜேனா எழுப்பியதால் 2009இல் கைது செய்யப்பட்டார், எட்டரை மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மேல் 28 வழக்குகள் உள்ளன, ஆனால் என்னென்ன பிரிவுகளின் கீழ் என்று இதுவரை அவருக்கு தெரியாது.

திங்கியா கிராமத்தின் முன்னாள் கிராமத்தலைவரின் மகன் ஜோதிரஞ்சன் மஹாபத்ரா “1400 பேருக்கு எதிராக வழக்கு உள்ளதுஎன்கின்றார்.

கைலாஷ் சந்திரா பிஸ்வாஸ் தனது மாமனாரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள கிராமத்தை விட்டுச்செல்லும்போது கைது செய்யப்பட்டார். சூறையாடல், வெடிகுண்டு வீசல், வல்லாங்கு செய்தல் ஆகிய குற்றங்களுக்காக வழக்கு ஜோடிக்கப்பட்டுள்ளது. வழக்கில் இருந்து பெயிலில் வந்த அவர் தான் பணி புரியும் பள்ளிக்கூடத்துக்கு சென்றார், ஆனால் அவரது வேலை பறி போனது.

பாபாஜி சரண் சமன்தாரா திங்கியா கிராமத்தில் போஸ்ட்மாஸ்டராக 28 ஆண்டுகள் பணியாற்றியவர். 2007இல் போலீஸ் இவரை கைது செய்தது, 21 பொய் வழக்குகளை ஜோடித்தது. எனவே அரசுப்பணியில் இருந்து தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்டார். அவர் நீதிமன்றத்தை நாடினார். பின் தேதியிட்டு அவருக்கு ஊதியம் வழங்கவும் ஓய்வூதியம் வழங்கவும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது, ஆனாலும் அவருக்கு சேர வேண்டிய நிலுவைத்தொகை இன்னும் வரவில்லை.

“இது என் நிலம். இதைப்பாதுகாக்கும் உரிமை எனக்கு உள்ளது, அதைத்தான் செய்தேன். ஆனால் என்னை ஒரு கிரிமினல் போல் நடத்துகின்றார்கள்”  எனக் குமுறுகின்றார் ஒரு பெண்மணி.

“ஒரு ஜனநாயக நாட்டில் மக்களின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும். ஆனால் அரசு துப்பாக்கி முனையில் வளர்ச்சியை காண நினைக்கின்றது;  மக்களின் அதிருப்தியை வெளிப்படுத்துவதற்கோ வளர்ச்சி என்ற சொல்லுக்கு அரசு தரும் வியாக்ஞானத்தை விமர்சிப்பதற்கோ இங்கு இடமில்லை. ஒரிசா மாநிலமானது மிகப்பல பழங்குடியினர் போராட்டத்தின் தாயகமாக விளங்கும் ஒரு மாநிலம், இப்போதோ தமது நிலங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட வெகுமக்களின் போராட்டக்களமாக மாறிவிட்ட்துஎன்கின்றார் லோக்சக்தி அபியான் அமைப்பின் தலைவர் பிரஃபுல்ல சமாந்தாரா.

அடக்குமுறையைக் கையில் எடுக்கும் அரசுகள் என்ன செய்யுமோ (கூடங்குளத்தில் என்ன நடக்கின்றதோ) அதையே ஒரிசா அரசும் செய்கின்றது.  மாநிலத்தின் சில பகுதிகளை மாவோயிஸ்ட்டுக்கள் நிறைந்த பகுதி என்று அரசு அறிவித்துள்ளது, அப்பகுதிகளில் மக்கள் போராடும்போது வெகு எளிதாக அந்த மக்கள் இயக்கங்களை  மாவோயிஸ்டு இயக்கம் என்று அரசு முத்திரை குத்துகின்றது. டாங்கிரியா தலைவர் டோதி சிகோகா ‘தம் வாழ்வுரிமைக்காகப் போராடுகின்ற பழங்குடி மக்களை மாவோயிஸ்ட்டுக்களை ஒடுக்குகின்றேன் என்ற பெயரில் அரசு அடக்கி நசுக்கி சிறையில் அடைக்கின்றதுஎன்கின்றார்.

2011 ஜனவரி முதல் தேதியன்று ஜாஜ்பூர் மாவட்டத்தில் ஐந்து மாவோயிஸ்டுக்கள் கொல்லப்பட்டதாக போலீஸ் சொன்னது.  இதில் 14 வயது இளம்பெண்ணும் அடக்கம்.  இதேபோல் காசிப்பூர் மாவட்டம் கோரப்புட்டில் ஜனவரி 9 அன்று மாவோயிஸ்ட்டுக்கள் என்ற பெயரில் சாமானிய மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.  இவர்கள் சுரங்கம் வெட்டுவதை எதிர்த்த கிராம மக்களே என்பதை மனித உரிமை ஆர்வலர் குழுக்கள் ஆய்வு செய்து அறிவித்தனர்.

உள்நாட்டு வெளிநாட்டு ஏகபோகப்பெருமுதலாளிகளுக்கு இந்தியாவின் இயற்கை வளங்களை திருடுவதற்கு மட்டும் அல்ல; அமெரிக்க-ஐரோப்பிய நாடுகளில் காலாவதியாகி உள்ளூர்களில் பயன்படுத்துவதற்கு உள்ளூர் மக்களால் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்ட (கூடங்குளம்,ஜெய்தாப்பூர் போன்ற) தொழினுட்பங்களை இந்தியாவில் இறக்குமதி செய்வதற்கும் மத்தியில் இருக்கின்ற காங்கிரஸ் அரசும் அவ்வப்போது இருக்கின்ற பாரதீய ஜனதாக் கட்சியும் இந்தியாவின் கதவுகளை அகலத்திறந்து விடுகின்றார்கள்; இவர்களது கூட்டணிக்கட்சிகளோ (திமுக, அ இ அதிமுக, பாமக போன்றவை அல்லது அவற்றின் தலைவர்கள்) மத்தியில் கிடைக்கின்ற சில மந்திரி பதவிகளுக்காக கட்டியிருக்கின்ற வேட்டி, தாம் சார்ந்திருக்கின்றா மாநிலமக்களின் நலன் உட்பட எல்லாவற்றையும் அடகு வைக்கின்றார்கள்; தம் குடும்பத்தாரின் சொத்து கோடிகோடியாக வளரவும், இது போன்று இந்தியாவில் முதல்போடும் பன்னாட்டு தொழில் நிறுவன்ங்களில் தம் குடும்பங்களை முக்கிய பங்குதாரர்களாக ஆக்கவும் மட்டுமே கட்சியை (அல்லது கம்பெனியை) நடத்துகின்றார்கள்.  இவற்றுக்கு எதிராகப் போராடுகின்ற மக்களை தேசத்துரோகிகள், மாவோயிஸ்டுக்கள் என்றும் எளிதில் முத்திரை குத்துகின்றார்கள், பொய்வழக்குகளை ஜோடிக்கின்றார்கள்.

போஸ்கோவுக்கு எதிராகவும், வேதாந்தாவுக்கு எதிராகவும், மஹாராஷ்ட்ராவில் ஜெய்தாப்பூரிலும், தமிழகத்தில் கூடங்குளத்திலும் அணு உலைகளுக்கு எதிராக மக்கள் நடத்திக் கொண்டிருப்பதும், கேரளாவின் பிளாச்சிமடாவில் பெப்சிக்கு எதிராக உள்ளுர் மக்கள் நட்த்தியதும் ஏதோ அந்தந்த உள்ளூர் பிரச்னைகள் அல்ல; ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக அமெரிக்க-ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள்  ஆப்பிரிக்க, ஆசிய, லத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகளின் மக்கள் மீது தொடர்ந்து தொடுத்து வரும் சமூக-பொருளாதார முற்றுகைக்கும், பெருமுதலாளிகளின் படையெடுப்புக்கு’ (corporate invasion) எதிராகவும் ஆன மக்கள்போராட்டங்கள் இவை என்பதைப்புரிந்துகொள்வோம்.  இந்தியாவின் ஆளும் வர்க்கங்களுக்கு  எதிரான உடனடிப்போராட்டங்களாக இவை இருப்பினும் இப்போராட்டங்களின் மைய இலக்கு அமெரிக்க-ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களும் சர்வதேச கார்ப்பொரேட்டுக்களும்தான். இவற்றை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

(தி ஹிந்து ஆங்கில நாளிதழில் வந்த ஒரு கட்டுரையையும் பிற தகவல்களையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது)







வெள்ளி, மே 11, 2012

ஆசியாவின் மிகச்சிறந்த கதை சொல்லி



இன்றைக்கு சரியாக நூறு வருடங்களுக்கு முன் ஆசியாவின் மிகச்சிறந்த கதை சொல்லியான சாதத் ஹசன் மான்டோ இந்தியாவில் பிறந்தார். 43 வருடங்கள் மட்டுமே வாழ்ந்து ஒரு நாலாயிரம் வருடங்கள் மானுட இனம் வெட்கித்தலைகுனியத்தக்க யதார்த்தங்களை நம் முன் கதைகளாக விரித்துவைத்து விட்டு பிளவுபட்ட இந்தியாவின் மேற்குப்பகுதியில் (பாகிஸ்தான் என்று சொல்கின்றார்கள்) மறைந்தான். அவன் எழுத்தில் முஸ்லிம்களின் இந்துக்களின் சீக்கியர்களின் பார்சிகளின் குருதி வழிந்து வாசிப்பவனின் மடியையும் கண்களையும் நனைக்கின்றது.  தேசப்பிரிவினையின்போது நிகழ்ந்த கொடுமைகளை நமக்கு பதிந்துகொடுத்து சென்ற மான்டோ, டெல்லி, பம்பாய்,கோவை,கோத்ரா... நிகழ்வுகளின் போது அரூபமாக எட்ட நின்று நம்மைப்பார்த்து கைகொட்டி சிரிக்கின்றான், காறி உமிழ்கின்றான், அவன் கேலிச்சிரிப்பில் நாம் தோற்றுப்போகின்றோம். அவனது சிலவரிக் கதைகளில் மூன்று இங்கே...


1.       முன்னேற்பாடாக...

முதல் சம்பவம் அங்கே சாலைத்தடுப்பு அருகே நிகழ்ந்த்து. உடனடியாக அங்கே ஒரு போலீஸ்காரன் நிறுத்தப்பட்டான்.
அடுத்த நாளே பண்டகசாலை முன் மீண்டும் ஒரு சம்பவம் நடந்தது, உடனடியாக அந்த போலீஸ்காரன் அங்கே நிறுத்தப்பட்டான்.
மூன்றாவது சம்பவம் நள்ளிரவில் துணிவெளுக்கும் கடை அருகே நடந்தது.  இன்ஸ்பெக்டர் அதே போலீஸ்காரனை அங்கே காவலுக்கு செல்லுமாறு உத்தரவிட்டான்.  அவனோ சில நிமிடங்கள் யோசித்து இப்படி வேண்டினான்: “ஐயா, அடுத்த சம்பவம் எங்கே நடக்கப்போகின்றதோ அங்கே என்னை அனுப்புங்களேன்”.

2.       சலுகை

தயவுசெய்து என் இளம் மகளை என் கண் முன் கொல்லாதீர்கள்

“சரி, அவ்வாறே செய்வோம்! அவள் துணிகளை உருவிவிட்டு அவளை அந்தப்பக்கம் தள்ளிவிடுவோம்”.

3.       பரிதாபம்

கத்தி தொப்புளுக்கு கீழே இறங்கி அப்படியே வயிற்றை கிழித்தது, பெல்ட் அறுந்தது. குத்திக்கிழித்தவன் திடீரென கவலையுடன் கத்தினான், “ஐயோ! தப்புப்பண்ணிட்டேனே”.



செவ்வாய், பிப்ரவரி 14, 2012

காதல்

காதல்




ஆதாமோ ஏவாளோ
அவாளோ இவாளோ


கத்திரி வெயில் நடுநடுக்கும்
டிசம்பர் குளிர் சூடெடுக்கும்

குளிர்பானம் கதகதக்கும்
வெந்நீரோ குளிரடிக்கும்

நேற்று ஒதுக்கிய நிறமெல்லாம்
இன்றைக்குப் பிடித்துப்போகும்

ரசம் போன கண்ணாடியும்
நம் முகத்தை அழகாய் காட்டும்

கடைசி இருக்கையும் பல்லக்கு ஆகும்
கண்டக்டர் அண்ணனாவார்
வேகமாய் போய் சேர்ந்தால்
ஓட்டுநரோ எதிரியாவார்
எதிரியெல்லாம் நண்பனாவான்
அப்பனெல்லாம் எதிரியாவான்

திரையரங்கம் கோவிலாக
செல்போன் தெய்வமாகும்

அப்பன் பாட்டன் பூட்டனும்
சாத்திர சூத்திரங்களும்
காலங்காலமாய் கட்டி வைத்த
சாதிமத பேதமெல்லாம்
ஆவியாகி கரைந்துபோகும்

இதயம் + இதயம் மட்டுமே
இணைகின்ற ரசவாதம்
பூப்பந்தை புதுசாய் செய்யும்
காதலென்ற கெமிஸ்ட்ரியில்
மட்டுமே சாத்தியமாகும்!

ஆதலால், இளைஞர்களே,
காதலிப்பீர், காதலிப்பீர்!
........................................