’பெருமுதலாளிகளின்
படையெடுப்புக்கு’ (corporate invasion) எதிராக...
ஒரிசாவில் கடந்த ஏழு
வருடங்களாக தென் கொரிய கம்பெனியான போஸ்கோவுக்கு எதிராக நடந்து வரும் போராட்டம்
ஜூன் 22 அன்று எட்டாவது வருடத்தை தொடுகின்றது. ஒரிசா அரசு இந்த தென்கொரிய
கம்பெனியுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி
-
ஒரிசா மக்களுக்கு சொந்தமான 4000 ஏக்கர் நிலம் பறிக்கப்பட்டு போஸ்கோ எஃகு
கம்பெனி தொடங்க கொடுக்கப்படும்; இந்த நிலம் அனைத்தும் விவசாய நிலம் ஆகும்
-
எஃகு ஆலைக்கான இரும்புத்தாது தோண்டியெடுக்க இந்திய மக்களின் சுரங்கங்கள் 30
வருசத்துக்கு குத்தகைக்கு விடப்படும், குத்தைகையை மேலும் 20 வருசத்துக்கு
நீட்டிக்கலாம்
-
தலைநகர் புவனேஸ்வரில் தலைமை அலுவலகம் அமைக்க சுமார் 25 ஏக்கர் நிலம் தரப்படும்
-
ஒரிசா மக்கள் இப்போது குடியிருக்கும் 2000 ஏக்கர் நிலம் பறிமுதல்
செய்யப்படும், அங்கே போஸ்கோ குடியிருப்பு கட்டப்படும்
-
போஸ்கோ கம்பெனி வருசத்துக்கு 120 லட்சம் டன் எஃகு உற்பத்தி செய்யும்
-
தொழிற்சாலை, சுரங்கம், குடியிருப்பு ஆகியவற்றைக்கட்டவும் ஒட்டுமொத்த
பயன்பாட்டுக்கும் இந்தியாவின் மஹாநதியில் இருந்து தென்கொரிய நிறுவனம் தண்ணீர்
எடுத்துக்கொள்ளலாம்
-
ரயில் பாதைகள், சாலைகள், துறைமுகம் ஆகியவற்றைக் கட்டிக்கொள்ள போஸ்கோவுக்கு
அனுமதி தரப்படும்
-
இப்பகுதி சிறப்பு பொருளாதார மண்டலமாக அறிவிக்கப்படும்.
இதுவரை இந்தியாவில் முதலீடு செய்யப்பட்ட அந்நிய முதலீடுகளில் இதுவே
மிகப்பெரியது என்றும் சொல்லப்படுகின்றது. 90-களின் தொடக்கத்தில் மத்தியில் இருந்த
நரசிம்மராவ்,மன்மோஹன், ப.சிதம்பரம்,மாண்டேக்சிங் அலுவாலியா கூட்டணி
அமெரிக்க-ஐரோப்பிய பெருமுதலாளிகளின் நலன் காக்க உள்நாட்டில் திணித்த
தனியார்மய-தாராளமயக்கொள்கைகள் கொண்டுவந்த ஆகப்பெரும் கேடுகளில் ஒன்றுதான்
வெளிநாட்டுக்கம்பெனிகள் இந்தியாவுக்குள் தடைஏதும் இன்றி நுழைந்து இந்தியாவின்
இயற்கை வளங்களை சூறையாடுவது. காங்கிரசும்
பாரதீய ஜனதாவும் தெருவில் கட்டிப்புரண்டு சண்டை போடுவது போலத்தெரிந்தாலும்
கொல்லைப்புறத்தில் கமிசனில் சரிபங்கு பிரித்துக்கொள்கின்றார்கள்; இடை இடையே
மத்தியில் ஆள வந்த பாஜக என்ன செய்கின்றது? மன்மோஹன், அலுவாலியாவின் கொள்கைகளை எழுத்து
மாறாமல் அப்படியே அமல்படுத்துகின்றது.
ஆனால் தம் வாழ்வின் ஆதாரமான மண் பறிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்காத பழங்குடியின
மக்கள் போஸ்கோ பிரதிரோத் சங்ராம் சமிதி (PPSS) என்ற அமைப்பைத்
தொடங்கினார்கள்; தம் மண்ணிலிருந்து போஸ்கோ வெளியேற வேண்டும் என்ற முழக்கத்துடன்
ஏழு வருடங்களுக்கு முன் தொடங்கிய போராட்டம் இந்த வாரம் எட்டாவது ஆண்டுக்குள் அடியெடுத்து
வைக்கின்றது. மண்ணை இழந்தவர்கள், தொழிலாளிகள்,மீனவர்கள், தலித் மக்கள், மனித உரிமை ஆர்வலர்கள், உள்ளூர் மண்ணின் மைந்தர்கள் என அனைவரும்
ஒன்று திரண்டு போஸ்கோ கம்பெனி ஜகத்சிங்புரில் தொடங்க உத்தேசித்துள்ள இடத்தில்
பெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள்.
இடதுசாரிகள் போஸ்கோ திட்ட்த்தைக் கைவிட வேண்டும் என தொடர்ந்து மாநில அரசை
வற்புறுத்தி வருகின்றார்கள். ஆனால் மாநில தலைமைச்செயலாளர் பிஜய் பட்னாய்க் வேறு
மாதிரி பேசுகின்றார்: “2005இல் போஸ்கோவுடன் செய்யப்பட்ட ஒப்பந்தம் காலாவதி ஆகிவிட்டதால்
புதிய ஒப்பந்தம் போடப்படும்; ஏற்கனவே 2000 ஏக்கர் நிலம் கைப்பற்றப்பட்டுள்ளது,
இன்னும் 600 ஏக்கர் நிலத்தை அமைதியான(?) வழியில் கைப்பற்றுவோம்.”
ஏழு வருடங்களாக தொடரும் போராட்டத்தில் மோதல்களில் பலர் இறந்துள்ளார்கள்; திங்கியா,நுவாகான்,கடாக்குஜங்
ஆகிய மூன்று கிராமப்பஞ்சாயத்துக்களும் போஸ்கோவுக்கும் மாநில அரசுக்கும் எதிரான
போராட்ட்த்தில் மிகத்தீவிரமாக ஈடுபட்டள்ளதால் கிராமத்தின் ஒவ்வொருவர் மீதும்
ஒன்றுக்கும் மேற்பட்ட பொய்வழக்குகள் உள்ளன, வழக்குகள் இல்லாத நபரே கிராமத்தில் இல்லை.
65 வயது சத்யாபதி ஸ்வைன் என்பவர் போராளி ரஞ்சன் ஸ்வைனின் தாயார்.
இக்காரணத்தினாலேயே சத்யாபதி ‘சட்டவிரோதமாக்க் கூடிய’ குற்றத்திற்காக போலீஸ் காவலில் வைக்கப்பட்டார். PPSS-ஐ முன்னின்று நடத்துகின்ற அபய் சாஹூ, நாராயண் ரெட்டி இருவர்
மீதும் போடப்பட்டுள்ள பொய் வழக்குகளுக்கு கணக்கே இல்லை. அபய் 2008இல் கைது
செய்யப்பட்டார், பெயிலில் விடுவிக்கப்பட்டார். ‘ஒரு வரதட்சணை வழக்கில்
சாட்சியங்களை அழித்தார்’ என 2011-இல் புது வழக்கு ஜோடிகப்பட்டது.
திங்கியா கிராமத்தை சேர்ந்த மனோரமா என்ற இளம்பெண் போராட்டத்தில்
குதித்தார், கடந்த ஜனவரி மாதம் முதல் டைபாய்டு நோயில் விழுந்த இவர் மீது 48
வழக்குகள் உள்ளன.
ரமேஷ் பொசாயத் என்பவர் தன் குழந்தையை மருத்துவரிடம் அழைத்து
சென்றபோது வழியில் போலீஸ் அவரைக் கைது செய்தது, காரணம் தெரியாது.
விவசாயம் சார்ந்த பொருளாதார வளர்ச்சி செழித்து ஓங்கக்கூடிய
ஒரு பகுதியில் எஃகுத்தொழிற்சாலை தொடங்கியே தீர்வது என மாநில அரசு ஏன் பிடிவாதமாக
உள்ளது என்ற கேள்வியை 28 வயதான பிரகாஷ் ஜேனா எழுப்பியதால் 2009இல் கைது
செய்யப்பட்டார், எட்டரை மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மேல் 28
வழக்குகள் உள்ளன, ஆனால் என்னென்ன பிரிவுகளின் கீழ் என்று இதுவரை அவருக்கு
தெரியாது.
திங்கியா கிராமத்தின் முன்னாள் கிராமத்தலைவரின் மகன்
ஜோதிரஞ்சன் மஹாபத்ரா “1400 பேருக்கு எதிராக வழக்கு உள்ளது” என்கின்றார்.
கைலாஷ் சந்திரா பிஸ்வாஸ் தனது மாமனாரின் இறுதிச்சடங்கில்
கலந்து கொள்ள கிராமத்தை விட்டுச்செல்லும்போது கைது செய்யப்பட்டார். சூறையாடல்,
வெடிகுண்டு வீசல், வல்லாங்கு செய்தல் ஆகிய குற்றங்களுக்காக வழக்கு
ஜோடிக்கப்பட்டுள்ளது. வழக்கில் இருந்து பெயிலில் வந்த அவர் தான் பணி புரியும் பள்ளிக்கூடத்துக்கு
சென்றார், ஆனால் அவரது வேலை பறி போனது.
பாபாஜி சரண் சமன்தாரா திங்கியா கிராமத்தில் போஸ்ட்மாஸ்டராக
28 ஆண்டுகள் பணியாற்றியவர். 2007இல் போலீஸ் இவரை கைது செய்தது, 21 பொய் வழக்குகளை
ஜோடித்தது. எனவே அரசுப்பணியில் இருந்து தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்டார்.
அவர் நீதிமன்றத்தை நாடினார். பின் தேதியிட்டு அவருக்கு ஊதியம் வழங்கவும்
ஓய்வூதியம் வழங்கவும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது, ஆனாலும் அவருக்கு சேர வேண்டிய
நிலுவைத்தொகை இன்னும் வரவில்லை.
“இது என் நிலம். இதைப்பாதுகாக்கும் உரிமை எனக்கு உள்ளது,
அதைத்தான் செய்தேன். ஆனால் என்னை ஒரு கிரிமினல் போல் நடத்துகின்றார்கள்” எனக் குமுறுகின்றார் ஒரு பெண்மணி.
“ஒரு ஜனநாயக நாட்டில் மக்களின் உணர்வுகள் மதிக்கப்பட
வேண்டும். ஆனால் அரசு துப்பாக்கி முனையில் வளர்ச்சியை காண நினைக்கின்றது; மக்களின் அதிருப்தியை வெளிப்படுத்துவதற்கோ
வளர்ச்சி என்ற சொல்லுக்கு அரசு தரும் வியாக்ஞானத்தை விமர்சிப்பதற்கோ இங்கு
இடமில்லை. ஒரிசா மாநிலமானது மிகப்பல பழங்குடியினர் போராட்டத்தின் தாயகமாக
விளங்கும் ஒரு மாநிலம், இப்போதோ தமது நிலங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட
வெகுமக்களின் போராட்டக்களமாக மாறிவிட்ட்து” என்கின்றார் லோக்சக்தி அபியான் அமைப்பின் தலைவர் பிரஃபுல்ல
சமாந்தாரா.
அடக்குமுறையைக் கையில் எடுக்கும் அரசுகள் என்ன செய்யுமோ (கூடங்குளத்தில்
என்ன நடக்கின்றதோ) அதையே ஒரிசா அரசும் செய்கின்றது. மாநிலத்தின் சில பகுதிகளை மாவோயிஸ்ட்டுக்கள் நிறைந்த
பகுதி என்று அரசு அறிவித்துள்ளது, அப்பகுதிகளில் மக்கள் போராடும்போது வெகு எளிதாக
அந்த மக்கள் இயக்கங்களை மாவோயிஸ்டு
இயக்கம் என்று அரசு முத்திரை குத்துகின்றது. டாங்கிரியா தலைவர் டோதி சிகோகா ‘தம்
வாழ்வுரிமைக்காகப் போராடுகின்ற பழங்குடி மக்களை மாவோயிஸ்ட்டுக்களை ஒடுக்குகின்றேன்
என்ற பெயரில் அரசு அடக்கி நசுக்கி சிறையில் அடைக்கின்றது” என்கின்றார்.
2011 ஜனவரி முதல் தேதியன்று ஜாஜ்பூர் மாவட்டத்தில் ஐந்து
மாவோயிஸ்டுக்கள் கொல்லப்பட்டதாக போலீஸ் சொன்னது.
இதில் 14 வயது இளம்பெண்ணும் அடக்கம்.
இதேபோல் காசிப்பூர் மாவட்டம் கோரப்புட்டில் ஜனவரி 9 அன்று
மாவோயிஸ்ட்டுக்கள் என்ற பெயரில் சாமானிய மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். இவர்கள் சுரங்கம் வெட்டுவதை எதிர்த்த கிராம
மக்களே என்பதை மனித உரிமை ஆர்வலர் குழுக்கள் ஆய்வு செய்து அறிவித்தனர்.
உள்நாட்டு வெளிநாட்டு ஏகபோகப்பெருமுதலாளிகளுக்கு
இந்தியாவின் இயற்கை வளங்களை திருடுவதற்கு மட்டும் அல்ல; அமெரிக்க-ஐரோப்பிய
நாடுகளில் காலாவதியாகி உள்ளூர்களில் பயன்படுத்துவதற்கு உள்ளூர் மக்களால்
எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்ட (கூடங்குளம்,ஜெய்தாப்பூர் போன்ற) தொழினுட்பங்களை
இந்தியாவில் இறக்குமதி செய்வதற்கும் மத்தியில் இருக்கின்ற காங்கிரஸ் அரசும்
அவ்வப்போது இருக்கின்ற பாரதீய ஜனதாக் கட்சியும் இந்தியாவின் கதவுகளை அகலத்திறந்து
விடுகின்றார்கள்; இவர்களது கூட்டணிக்கட்சிகளோ (திமுக, அ இ அதிமுக, பாமக போன்றவை
அல்லது அவற்றின் தலைவர்கள்) மத்தியில் கிடைக்கின்ற சில மந்திரி பதவிகளுக்காக
கட்டியிருக்கின்ற வேட்டி, தாம் சார்ந்திருக்கின்றா மாநிலமக்களின் நலன் உட்பட எல்லாவற்றையும்
அடகு வைக்கின்றார்கள்; தம் குடும்பத்தாரின் சொத்து கோடிகோடியாக வளரவும், இது
போன்று இந்தியாவில் முதல்போடும் பன்னாட்டு தொழில் நிறுவன்ங்களில் தம் குடும்பங்களை
முக்கிய பங்குதாரர்களாக ஆக்கவும் மட்டுமே கட்சியை (அல்லது கம்பெனியை) நடத்துகின்றார்கள். இவற்றுக்கு எதிராகப் போராடுகின்ற மக்களை
தேசத்துரோகிகள், மாவோயிஸ்டுக்கள் என்றும் எளிதில் முத்திரை குத்துகின்றார்கள்,
பொய்வழக்குகளை ஜோடிக்கின்றார்கள்.
போஸ்கோவுக்கு எதிராகவும், வேதாந்தாவுக்கு எதிராகவும்,
மஹாராஷ்ட்ராவில் ஜெய்தாப்பூரிலும், தமிழகத்தில் கூடங்குளத்திலும் அணு உலைகளுக்கு
எதிராக மக்கள் நடத்திக் கொண்டிருப்பதும், கேரளாவின் பிளாச்சிமடாவில் பெப்சிக்கு
எதிராக உள்ளுர் மக்கள் நட்த்தியதும் ஏதோ அந்தந்த உள்ளூர் பிரச்னைகள் அல்ல; ஒரு
நூற்றாண்டுக்கும் மேலாக அமெரிக்க-ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள் ஆப்பிரிக்க, ஆசிய, லத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட
மூன்றாம் உலக நாடுகளின் மக்கள் மீது தொடர்ந்து தொடுத்து வரும் சமூக-பொருளாதார
முற்றுகைக்கும், ’பெருமுதலாளிகளின் படையெடுப்புக்கு’ (corporate invasion) எதிராகவும் ஆன மக்கள்போராட்டங்கள்
இவை என்பதைப்புரிந்துகொள்வோம்.
இந்தியாவின் ஆளும் வர்க்கங்களுக்கு
எதிரான உடனடிப்போராட்டங்களாக இவை இருப்பினும் இப்போராட்டங்களின் மைய இலக்கு
அமெரிக்க-ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களும் சர்வதேச கார்ப்பொரேட்டுக்களும்தான். இவற்றை
தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
(தி ஹிந்து ஆங்கில நாளிதழில் வந்த ஒரு கட்டுரையையும் பிற
தகவல்களையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது)
2 கருத்துகள்:
துப்பாக்கி முனையில் வளர்ச்சி அல்ல; ஒரு சிலரின் வளர்ச்சிக்காக என்று குறிப்பிடவேண்டும்.
உலகில் அநியாங்கள் எப்படியெல்லாம் முகம் காட்டுகின்றன பார்த்தீர்களா?
இவை உள்ளூர் பிரச்சினை அல்ல;ஆசிய, லத்தின் அமெரிக்காவுக்கு எதிராக ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக அமெரிக்க ஐரோப்பிய பிளஸ் சர்வதேச பெருநிறுவனங்களின் கூட்டு சதி என்று கச்சிதமாக விஷயங்களை விளக்கி இருக்கிறீர்கள்.
அருமையான கட்டுரை. வாழ்த்துகள்.
நா வே அருள்
Arumaiyana katturai
கருத்துரையிடுக