(2009 ஜூலை 'புதுவிசை'யில் வெளியானது, இப்போது பொதுவில்...)
ஷெல் (Shell) பெட்ரோலிய எண்ணெய்க் கம்பெனி. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இதன் தலமையகம் உள்ளது. உலகின் மிகப்பெரிய எண்ணெய்க்கம்பெனிகளில் ஒன்று. 2008ஆம் ஆண்டில் மட்டும் இதன் வருமானம் 21,475 லட்சம் அமெரிக்க டாலர் என்று இக்கம்பெனியின் கணக்கு சொல்கின்றது (சுமாராக 10,300 கோடி ரூபாய்). எண்ணெய்க்கிணறு தோண்டுவது, எண்ணெய் எடுப்பது, இயற்கை எரிவாயு தோண்டுவது, இவற்றை விற்பது, பெட்ரோலிய வேதிப்பொருட்கள் உற்பத்தி, விற்பனை என இதன் தொழில் பெட்ரோலியம் சார்ந்துள்ள பரந்த தொழில். இந்தியாவில் ஷெல், எஸ்ஓ போன்ற தனியார் கம்பெனிகள் எண்ணெய்க்கம்பெனிகள் இருந்ததும் பின் எண்ணெய்க்கம்பெனிகள் யாவும் நாட்டுடைமை ஆக்கப்பட்டதும் பழைய வரலாறு. நரசிம்மராவ், ம.சி, ப.சி, மான்டேக் சிங், காங்கிரஸ், பாரதீய ஜனதா கூட்டணி கூடிப்பேசி பொதுத்துறையாகிய மக்கள்சொத்தை மீண்டும் தனியார் முதலாளிகளுக்கு ஏலம் போட்டு விற்பது புதிய வரலாறு.
(ராயல் டச்சு) ஷெல் கம்பெனி ஆப்பிரிக்கக்கண்டத்தின் நைஜீரிய நாட்டில் நைஜர் டெல்டாப்பகுதியில் 1956ஆம் ஆண்டு எண்ணெய் தோண்டி எடுத்து, 1958இல் விற்பனையைத் தொடங்கியது. அப்போதும் அதன் பின்னும் தொடர்ந்து இருந்த அரசுகளின் துணையுடன்தான் தனது கொள்ளை லாப வேட்டையை தொடர்ந்தது. ஷெல் கம்பெனி, பெட்ரோலை விற்று சம்பாத்தித்தை விடவும் (சர்வதேச முதலாளிகளின் கல்லாப்பெட்டி பொருளாதார விதிகளின் படி) நைஜீரிய மக்களின் ரத்தத்தை விற்று சம்பாதித்ததுதான் அதிகம் என்பதை வரலாறு கூறுகின்றது.
நைஜீரியாவின் தெற்குப்பகுதியில் அமைந்துள்ள நைஜர் டெல்டாப்பகுதி ஓகோனி (Ogoni) எனப்படுகின்றது. இந்த மக்களும் ஓகோனி என்றே அழைக்கப்படுகின்றனர். ஓகோனி பிரதேசம் இயற்கையிலேயே மிக வளமான பூமியாகும். இருபதாயிரம் சதுர கிலோமீட்டர் பரப்புள்ள டெல்டாவில் ஆறாயிரம் ச.கி.மீ. பரப்புக்கு சதுப்புநிலக்காடு மட்டும் உள்ளது. உலகின் மூன்றாவது பெரிய சதுப்பு நிலக்காடு இதுதான். மேலும், நைஜீரியாவின் (எஞ்சியுள்ள) மிகப்பெரிய மழைக்காடுகளில் ஒன்றும் ஓகோனியில்தான் உள்ளது. ஓகோனி மக்கள் பாரம்பரியமாகவே இந்தக்காடுகளை நம்பித்தான் வாழ்ந்து வருகின்றார்கள். காடும் காடு சார்ந்த தொழில்களுமாக அவர்கள் வாழ்க்கை இருந்தது. சதுப்புநிலக்காடுகள் உயிரோடு இருப்பது மிக முக்கியம்- மண்வளம், தாவரவளம், மீன் பெருக்கம், காட்டு மரங்கள், வீடு கட்டுவதற்கான மரம், விறகு, மருந்துப்பொருட்கள், இயற்கைச்சாயம், பல்வேறு வனவிலங்குகள் ( யானை, வெண்மார்புக்குரங்கு, ஆற்று நீர்யானை, முதலை போன்ற அழியும் நிலையில் உள்ள உயிர்கள் உட்பட) பல்வேறு இயற்கை வளங்களின் நீடிப்புக்கும் உயிர்ப்புக்கும் நைஜர் சதுப்புநிலக்காடுகள் தொட்டிலாக இருந்தன. விஞ்ஞானிகளின் கணிப்புப்படி, "உலகின் தலையாய பத்து ஈரநிலங்களின் வரிசையிலும், கடல்சார் சுற்றுச்சூழல் மையங்களின் வரிசையிலும்" நைஜர் டெல்டா இருந்தது.
நைஜர் பகுதியின் ஓகோனி மக்களின் வாழ்க்கை மட்டும் இன்றி, (மேற்கு ஆப்பிரிக்காவின்) மோசமான ஏழைநாடுகளின் மக்களின் வாழ்க்கையும் இந்த டெல்டாவை நம்பியே இருந்தது. நைஜர் டெல்டாவிலிருந்து இனப்பெருக்கத்துக்கான இடப்பெயர்ச்சி செய்யும் மீன்கள் இம்மக்களுக்கு வாழ்க்கை தருகின்றன. சுருக்கமாக, டெல்டாவின் 2.7 கோடி மக்களில் 75 விழுக்காடு மக்களின் விவசாயம், மீன்பிடித்தொழில், அவை சார்ந்த துணைத்தொழில்களை, வாழ்க்கையை இந்த டெல்டாதான் தீர்மானிக்கின்றது. எல்லாவற்றிற்கும் மேலாக, ஆப்பிரிக்கக் கண்டத்தின் மிகப்பெரும் எண்ணெய் வள பூமி நைஜர் டெல்டாதான் என்பதை ஷெல் போன்ற சர்வதேச முதலாளிகள் தெரிந்துகொள்வதற்கு முன்னர் வரை ஓகோனி மக்களின் வாழ்க்கை ஒருகாலத்தில் பிரச்னை இல்லாமல் ஓடிக்கொண்டுதான் இருந்தது...
ஆப்பிரிக்கக் கண்டத்தின் மிகப்பெரும் எண்ணெய் வள பூமி என்ற பெருமையோடு இப்போதும் நைஜீரியா ஜொலிக்கின்றது. பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் கூட்டமைப்பின் (OPEC) ஐந்தாவது பெரிய உறுப்பு நாடாகவும் நைஜீரியா இருந்தது. எனவே நைஜீரியாவின் அரசியல்-பொருளாதாரக் கூறுகளைத் தீர்மானித்ததில் பெட்ரோல் கண்டுபிடிப்பு முக்கிய சக்தியாக விளங்கியதில் வியப்பில்லை. நாட்டின் அந்நியச்செலாவணியில் 90 விழுக்காடும், அரசு வருமானத்தில் 80 விழுக்காடும் பெட்ரோலிய ஏற்றுமதியால் கிடைத்தது. எனவே, நைஜீரியாவின் ஒவ்வொரு குடும்பமும் அடுக்கு மாளிகையில் வசிக்கின்றது, தெருக்களில் சொகுசு கார்களை நிறுத்த இடம் கிடைக்காது, கடைவீதிகள், ஓட்டல்கள் என எப்போதும் மக்கள் காசை 'பெட்ரோலாக' செலவு செய்வார்கள், ஒரே பொழுதுபோக்குகள், கச்சேரி, குடி, கூத்தியா, கும்மாளம்தான்...என்று நீங்கள் நினைத்தால், மன்னிக்கணும்...உலகின் மிக மோசமான ஏழைநாடுகளில் ஒன்றாக நைஜீரியாவும் உள்ளது என்பது கசப்பான உண்மை. கடல்கடந்து வந்து நைஜீரியாவின் பெட்ரோலியவளத்தை சுரண்டி சாப்பிடும் ஷெல் போன்ற எண்ணெய்க் கம்பெனி முதலாளிகள்தான் டாலர்களில் படுத்துப் புரண்டுகொண்டு மேற்படி குடி, கும்மாள, கூத்தியா கேளிக்கைகளில் பொழுதைப்போக்கிக் கொண்டிருக்கின்றார்கள்.
இந்தக்கொள்ளையில் முதல் இடம் ஷெல்லுக்கு....
...2.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக