சனி, ஜூலை 07, 2012

உழுதுண்டு வாழ்வாரே....வாழ்வார்? (2)


 (2012 பிப்ரவரி 22 அன்று கேரளா திருச்சூரில் விப்கியார் திரைப்பட விழாவில் ‘உயிர்களும் உயிர்வாழ்தல் பொருட்டும்’ (Lives and Livelihood’) என்ற மையக்கருத்தின்  மீது நடந்த திரைப்படத்திருவிழாவில், விவசாயிகளின்பால் மிகுந்த கவனம் செலுத்தும் திரு. சாய்நாத் அவர்கள் சமத்துவமின்மை, வாழ்தலின்பொருட்டு, விவசாயத்துறை சந்திக்கும் பேரழிவுஎன்ற தலைப்பில் ஆற்றிய உரையைத் தழுவி எழுதப்பட்ட கட்டுரை) 
 
ஒருபுறம் கோடிக்கணக்கான இந்தியக்குடிமக்கள் ஒருவேளை உணவுக்கும் வழியின்றி செத்து மடிந்து கொண்டிருக்க, இந்திய அரசு மறுபுறம் எந்த ‘ஏழையைக் காப்பாற்ற அனைத்து முயற்சிகளையும் செய்துகொண்டிருக்கின்றது? விஜய்மல்லையா என்ற தனிமனிதன் – ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை பட்டியல் இட்டுள்ள 55 இந்தியக்கோடீசுவரர்களில் ஒருவர், கிங்ஃபிஷெர் என்ற விமானக்கம்பெனியை நட்த்தி நஷ்டப்பட்டுப்போனார், எனவே மன்மோஹன் அரசும் அதன் அதிகாரிகளும் எப்படியாவது தில்லுமுல்லு செய்து அரசு கஜானவில் இருந்து பணத்தை எடுத்து விஜய்மல்லையா என்ற தனிமனிதனைக் காப்பாற்ற குட்டிக்கரணம் அடிக்கின்றார்கள்.  கிரிக்கெட் மைதான்ங்களில் அரைகுறை ஆடை அணிந்துள்ள பெண்களை கட்டிப்பிடித்தும் சினிமா நடிகைகளுக்கு முத்தம் கொடுத்து போஸ் கொடுப்பவரும்  இந்த ஏழை மல்லையாதான், பாவம்.  ஒரு புள்ளிவிவரப்படி தனது மதுபானக்கம்பெனியின் காலண்டர்களுக்கு அழகிகளைப்போட்டு படம் எடுக்கவே இந்த மல்லையா பல கோடி ரூபாய்களை செலவு செய்கின்றாரம், அவ்வளவு ஏழையாம் இவர். மல்லையா கண்ணில் நீர் வழிந்தால் மனுமோஹன் சிதம்பரம் பிரணாப் அலுவாலியா கும்பலுக்கு நெஞ்சில் உதிரம் கொட்டுமாம்.

பிப்ரவரிக்கு முன்னால் நடந்த நாடாளுமன்றக்கூட்ட்த்தொடர் 38 நாட்கள் நடந்த்து.  ஒரே ஒரு மசோதாவை (லோக்பால் மசோதா) மட்டும் இந்த 38 நாட்களும் பேசிக்கொண்டே இருந்த்தார்கள். இந்த 38 நாட்களில் 1786 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருப்பார்கள், அதாவது 38 நிமிசங்களுக்கு ஒருவர். 78000 விவசாயிகள் தாங்கள் பரம்பரை பரம்பரையாக செய்து வந்த விவசாயத்தை கை கழுவுவிட்டு வேறு கூலி வேலைகளுக்கு சென்றிருப்பார்கள்.

இந்த 38 நாட்களில் 3000 முதல் 4000 குழந்தைகள் பட்டினியாலும் சத்துக்குறைவினாலும் செத்துப்போயிருப்பார்கள்; இந்த சாவுகளுக்கு நேரடிக்காரணம் பஞ்சமோ வெள்ளமோ அல்ல, அரசு பிடிவாதமாக கடைப்பிடிக்கின்ற பொருளாதாரக்கொள்கைகளே. மாந்தர் வளர்ச்சி அறிக்கையில் இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது: ஆப்பிரிக்காவின் சஹாராவின் சுற்றுப்பிரதேச நாடுகளில் போதிய சத்துணவு இன்றி இறந்துபோகும் குழந்தைகளின் எண்ணிக்கையைப்போல் இது இரண்டு மடங்கு.  ஆனால் ஒரு நாளைக்கு 25 ரூபாய் சம்பாத்தியத்துக்கு உட்பட்டவர்கள் அரசு அறிவித்துள்ள வறுமைக்கோட்டுக்குள் வருவார்கள் என மத்திய அரசு உச்சநீதி மன்றத்தில் பிரமாணம் தாக்குதல் செய்துள்ளது (அதாவது ஒரு நாளைக்கு 25 ரூபாய்க்கும் மேல் சம்பாதிப்பவர்கள் அரசு அறிவித்துள்ள வறுமைக்கோட்டை தாண்டிவிடுவார்கள்!).

ஆனால் அதே சமயத்தில் ஒவ்வொரு மத்திய பட்ஜெட்டிலும் பெருமுதலாளிகளின் நலனை மட்டுமே குறிகோளாக கொண்டு 88000 கோடி ரூபாய் மதிப்பிலான அவர்களுக்கான நேரடி வரிகளை மன்மோஹன் அரசு தள்ளுபடி செய்கின்றது. இத்தொகை பொதுவினியோக (ரேஷன்) முறைக்கு அரசு செய்யும் செலவுக்கு ஈடானது. ஒவ்வொரு வருசமும் பெருமுதலாளிகளுக்கு அரசு தரும் மானியம் 5 லட்சம் கோடி ரூபாய்; அரசு மனது வைத்தால் ஒட்டுமொத்தமாக சுகாதாரம்,கல்வி உள்ளிட்ட அனைத்து சமூக நலத்திட்டங்களுக்கும் இந்தப்பணம் போதுமானதாகும்.

இந்த 38 நாட்களில் இந்தியாவின் கோடீசுவர்ர்கள் எத்தனை கோடிகள் சம்பாதித்திருப்பார்கள்? உதாரணமாக முன்னாள் விமானப்போக்குவரத்து மந்திரியும் பெரும் முதலாளியும் ஆன பிரஃபுல்படேல் ஒருகோடியே தொண்ணூறு லட்சம் ரூபாய் (ஒரு நாளைக்கு 5 லட்சம்) சம்பாதித்திருப்பார். ஆனால் தேசிய விமானக்கம்பெனியான ஏர் இந்தியா விமானிகளுக்கு பல மாதங்களாக சம்பளமே தரப்படவில்லை.

கடந்த இருபது வருடங்களில் காங்கிரஸ் அரசால் மிக வலுவாக இந்திய மண்ணில் புகுத்தப்பட்ட நவதாராளமயக்கொள்கைகளால் உலகின் டாலர் கோடீசுவர்ர்களின் பட்டியலில் இந்தியா இந்த இருபது வருடங்களில் நான்காவது இட்த்தைப் பிடித்துள்ளது எனில் யாரைப் பலிகொடுத்து?  பலகோடி தொழிலாளிகளையும்  விவசாயிகளயும்  சிறுவியாபாரிகளையும்  சாமானியமக்களையும் பலிகொடுத்தே அம்பானிகளும் மிட்டல்களும் மல்லையாக்களும் கோடீசுவர்ர் ஆனார்கள்.


மறுபுறமோ பொருளாதார ஆய்வறிக்கையின்படி, கடந்த 20 வருடங்களில் உணவுற்பத்தி படுவேகமாக வீழ்ச்சியடைந்துள்ளது. பெருகும் மக்கட்தொகைக்கு ஏற்ப உணவுற்பத்தி இல்லை. விளைவு, மக்களின் உடல்நலனுக்குத் தேவையான கலோரி கிடைப்பதில்லை.  கேவலமான உண்மை என்ன? சஹாராவை சுற்றியுள்ள ஆப்பிரிக்க நாடுகளின் (ருவாண்டா போன்ற நாடுகளின்) மக்களை விடவும் உணவுப்பாதுகாப்பு விசயத்தில் இந்தியா மோசமாகப் பின்னடைந்துள்ளது. உலகின் பிற நாடுகளை விடவும் இந்தியாவில்தான் பட்டினி கிடக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகம்! 2020இல் இந்தியா வல்லரசாகிவிடும் என்று உடுக்கை அடித்துக் குறிசொல்லும் விஞ்ஞானிகள் ‘வல்லரசுன்னா என்ன என்று பதவுரை பொழிப்புரை சொல்ல வேண்டும். வலுத்தவன் அரசா? அப்போ இளைத்த இளிச்சவாய இந்தியனெல்லாம் எங்கே போய் சாவது?

அரசின் இத்தகைய கொள்கைகளின் விளைவாகவே பாரம்பரியமான விவசாயத்தை தொடர முடியாமல், அதாவது இடுபொருட்கள்,உரம்,மருந்து,கூலி போன்ற செலவுகளை தாங்க முடியாமலும், அல்லது இந்த செலவுகளுக்காக தண்டல் வட்டிக்கு கடன் வாங்கி விவசாயம் செய்து பின்னால் கடனை அடைக்கமுடியாமல் தற்கொலை செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை லட்சங்களைத் தாண்டுகின்றது.  இந்தப்புள்ளிவிவரங்களிலும் அரசு மோசடி செய்கின்றது: பெண்கள் விவசாயிகளாக்க் கருதப்பட மாட்டார்கள், எனவே பெண் விவசாயிகள் தற்கொலை செய்தால் அது இந்தக்கணக்கில் வராது; அல்லது தற்கொலை செய்துகொள்ளத் தேவையான பணம் (!) இல்லாமல் செத்துப்போகும் விவசாயிகள், இந்தியாவின் மாண்புமிகு ஜனாதிபதி அவர்களுக்கும் மரியாதைக்குரிய பிரதமர் அவர்களுக்கும் தமது கஷ்டங்களை கடிதமாக எழுதிவிட்டு தற்கொலை செய்பவர்கள்; அல்லது விதர்ப்பாவின் பாஞ்சரா பழங்குடிமக்களின் தலைவர் ஒருவர் தனது குடும்பத்தின் திருமண நாளன்று தற்கொலை செய்துகொண்ட சம்பவம்...ஆக இவையெல்லாம் தற்கொலை பட்டியலில் வராது என்று அரசு சொல்கின்றது!

நமது தொலைத்தொடர்புத்துறை அமைச்சரோ இந்திய மக்கள் 70% பேருக்கு மொபைல் தொலைபேசி கிடைத்திட திட்டமிடுவதாக பறைசாற்றுகின்றார், ஆனால் அதே அளவு மக்கள் ஒரு வங்கிக்கணக்கு கூட இல்லாமல் இதே தேசத்தில் இருக்கின்றார்கள், தண்டல்கார்ர்களிடம் வட்டிக்கு கடன் வாங்குகின்றார்கள்.  இந்தியா ஒரு விவசாய நாடு என்று பெருமை பீற்றிக்கொள்கின்ற இந்த தேசத்தில், கார் கடனுக்கு 7% வட்டி மட்டுமே வசூலிக்கின்ற அரசு வங்கிகள், விவசாயத்துக்கான ட்ராக்டர் கடனுக்கு 14% வட்டியும், அரசுசாரா தொண்டு நிறுவன்ங்கள் என்ற போர்வையில் சுயநலமிகளால் நட்த்த்ப்படும் சுய உதவிக்குழுக்களிடம் உழைக்கும்பெண்கள் பெறும் கடனுக்கு 36% வட்டியும் வசூலிப்பது கொடுமையன்றி வேறென்ன?

தமது குறைந்தபட்ச வாழ்க்கையை நடத்தவே பெரும் கடனில் சிக்கிக்கொள்ளும் விவசாயிகளை பெரும் நோய்கள் தாக்கிவிட்டால் மருத்துவ செலவுகளை சரிக்கட்ட தம் நிலங்களை அடகு வைக்கின்றார்கள்.  மருத்துவம் ஒரு சேவை என்ற காலம் மலைஏறி அதுவும் ஒரு லாபம் கொழிக்கும் தொழில் என்ற நிலைமையை உலகமயமும் தாராளமயமும் உருவாக்கியபின் பெரும் தொழில்முதலைகள் கோடிகளைக்கொட்டி மருத்துவ்மனைகளை கட்டுகின்றார்கள், அரசு மருத்துவமனைகள் மூடப்படுகின்றன, மக்களுக்கான சுகாதாரத்தை வழங்குவது என்ற அடிப்படைக்கடமையை அரசு கை கழுவுகின்றது.  (இதுபோன்ற கார்பொரேட் மருத்துவமனைகளில் பணிபுரிபவர்களுக்கு குறைந்த ஊதியம் மட்டுமே வழங்கப்படும், கொத்தடிமைகளாக நட்த்தப்படுவார்கள் என்பது மற்றுமொரு விசயம்). மருத்துவசெலவுகளைத் தாங்க முடியாத காரணத்தால் மருத்துவமனைகளுக்கே செல்லாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை கடந்த 20 ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரித்துள்ளது.

தொடரும்...3.
 


கருத்துகள் இல்லை: