ஞாயிறு, ஜூலை 22, 2012

மேற்கத்திய உலகத்தின் வளர்ச்சி: திருட்டும் கொள்ளையும் - கென் சாரோ-விவா (பாகம்-5)



இதற்கு சரியாக ஒரு மாதத்திற்குப் பிறகு, ஷெல் நானூறு கோடி டாலர் மதிப்பிலான திரவ இயற்கை வாயு தொழிற்சாலையை நைஜீரியாவில் நிறுவுவதற்கான ஒப்பந்தத்தை நைஜீரிய அரசுடன் செய்து கொண்டது.

சிறையில் இருந்தபோது சாரோ விவா இப்படி கூறியிருந்தார்: "எந்தவிதமான சலசலப்பும் இன்றி 'அமைதியாக' தமது எழுத்துப்பணிகளைச் செய்து கொண்டிருக்கும் நேற்கத்திய எழுத்தாளர்களைப் பார்த்து நான் ஆச்சரியப்படுகின்றேன். ஒரு எழுத்தாளன் சும்மா ஒரு கதைசொல்லியாக மட்டுமே இருந்துவிட முடியாது; சமூகத்தின் பலஹீனங்கள், கேடுகள், துயரங்களை அப்படியே எக்ஸ்-ரே எடுத்துக்காட்டுவதோடும் ஒரு எழுத்தாளனின் பணி முடிந்துவிடுவதில்லை. ஒரு எழுத்தாளன், ஆணோ பெண்ணோ, இன்றைய சமூகத்தை மட்டுமல்ல, நாளைய சமூகத்தையும் சீர்படுத்தும் பணியில் களத்தில் நின்று போராடுபவனாக இருக வேண்டும்".

சாரோ உள்ளிட்ட ஒன்பது ஓகோனியர்களைக் கொன்றதுடன் தனக்கு எதிரான குரல்களை அடக்கிவிட்டதாக ஷெல் நினைத்தது, ஆனால் வரலாறு கார்ப்பொரேட்டுக்களால் மட்டுமே எழுதப்படுவதில்லையே! அடிப்படை உரிமைகளுக்கான மையம் (Centre for Constitutional Rights - CCR), புவிக்கான சர்வதேச உரிமைகள் கழகம் (Earth Rights International-ERI) போன்ற அமைப்புக்களும் மனித உரிமைகளுக்கான பிற அமைப்புக்கள், ஆர்வலர்களும், 1996 தொடங்கி ஷெல்லுக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து சர்வதேச அளவில் நடத்தி பிரச்சாரம் செய்துவந்தார்கள். கொல்லப்பட்ட சாரோவின் இரண்டு மகன்களும் இந்த அமைப்புக்களுடன் சேர்ந்து ஷெல்லின் சதிகள், ஓகோனி மக்களின் வாழ்க்கை பறிப்பு என அனைத்தையும் தொடர்ந்து பிரச்சாரம் செய்துவந்தார்கள். கடந்த மே மாதம் PEN என்ற சர்வதேச எழுத்தாளர் அமைப்பு நடத்திய கூட்டத்தில், சாரோவின் மகன் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்: "ஷெல் கம்பெனியின் கைரேகைகள் (தந்தையின்) விசாரணை எங்கிலும் படிந்திருந்தன; வழக்கு விசாரணைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் லஞ்சலாவண்யம் உட்பட, ஷெல் கம்பெனி செய்தது என்பது உறுதி."

பதினான்கு ஆண்டுகள் நீண்ட போராட்டங்களுக்கும் பிரச்சாரங்களுக்கும் பிறகு, அமெரிக்காவின் நியூயார்க் மாவட்ட நீதிமன்றத்தில் ராயல் டச்சு ஷெல் கம்பெனிக்கு எதிரான, கென் சாரோ உள்ளிட்ட கொல்லப்பட்ட ஒன்பது பேர், மற்றும் பாதிக்கப்பட்ட ஓகோனி மக்கள் அனைவர் சார்பாகவும் தொடுக்கப்பட்ட வழக்கு, 2009 மே 26 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த விசாரணையை எப்படியாகிலும் நிறுத்திவிட வேண்டும் என ஷெல் வழக்கம் போல தலைகீ£ழாக நின்றது என்பதை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இறுதியாக, இணையதளங்களின் தகவல்படி, ஒரு கோடியே ஐம்பத்து ஐந்து லட்சம் டாலர் (சுமார் எழுபத்தொரு கோடி ரூபாய்) இழப்பீட்டுதொகை அளிப்பதாக ஷெல் ஒத்துக்கொண்டுள்ளது. ஷெல்+நைஜீரிய ராணுவக் கூட்டணியின் கொலைபாதக தாக்குதல்களால் உயிரையும் உடல் உறுப்புக்களையும் இழந்த ஓகோனிய மக்களுக்கு இழப்பீடாக மட்டுமின்றி, சர்வதேச கம்பெனியான ஷெல், நைஜீரியாவின் இயற்கைவளங்களை அழித்து சுடுகாடாக ஆக்கி, சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரும் கேட்டை விளைவித்து அடிப்படை மனித உரிமைகளை மீறியதற்காகவும் இந்த அபராதத்தொகையை ஷெல் செலுத்துகின்றது என்பது முக்கியமானதாகும்.

1996இல் இந்த வழக்கைத்தொடுத்த அடிப்படை மனித உரிமைகளுக்கான மையத்தின் வழக்கறிஞர் ஜெனீ க்¡£ன், "தாங்கள் நினைத்தபடியெல்லாம் நாடுகடந்து கொள்ளையடிக்கலாம், கண்ணை மூடிக்கொண்டு சுற்றுச்சூழலை நாசமாக்கலாம், அடிப்படை மனித உரிமைகளை மீறலாம், எவனும் கேட்கமாட்டான் என்ற சர்வதேச பகாசூரக் கம்பெனிகளின் அலட்சிய நடத்தைகளுக்கும் அநியாயங்களுக்கும் இந்த வழக்கும் இழப்பீடும் ஒரு பாடமாக, ஒரு அடியாக அமைந்ததால் இந்த வழக்கு உண்மையில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது" என்கின்றார். ஷெல் போன்ற எல்லைகடந்த கொள்ளை முதலாளிகளுக்கு எதிராக வழக்குத்தொடுத்து வெற்றி பெறவும் முடியும் என்பதையும் சொல்ல வேண்டும். அது மந்திரத்தால் நடக்காது, சாமானிய ஓகோனி மக்களும் அறிவுஜீவிகளும் ஒன்றிணைந்து மனம் தளராமல் முன்னெடுத்துச் சென்ற போராட்டம்தான் இறுதி வெற்றியைத் தந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது.
இழப்பீட்டுத்தொகையில் 50 லட்சம் டாலர் தொகையில் கிஷி (kissi) (முன்னேற்றம்) என்ற அறக்கட்டளையைத் தொடங்கி நைஜர் டெல்டாவில் கல்வி போன்ற அடிப்படைத் தேவைகளுக்கு செலவு செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.
இன்றைய தேதியில் ஓகோனியில் தனது எண்ணெய் ஆலைப் பணிகளை ஷெல் நிறுத்தி வைத்துள்ளது; ஆனால் தென்கிழக்கு நைஜீரியாவில் தனது எண்ணெய் எடுக்கும் வேலைகளை பரந்த அளவில் செய்துகொண்டுதான் இருக்கின்றது.




ஷெல் என்ற சர்வதேச பகல்கொள்ளையனுக்கு எதிரான ஓகோனி மக்களின் போராட்டம் சுபமாக முடிந்தது என்ற  ரீதியில் 'இது ஒரு நல்ல கதை' என்று நாம் முற்றுப்புள்ளி வைத்துவிட்டு நகர முடியாது.

...6

கருத்துகள் இல்லை: