நைஜீரிய மக்களின் எதிர்ப்பும் இயக்கங்களும்:
சர்வதேச
எண்ணெய்க்கம்பெனிகள், குறிப்பாக
ஷெல், தமது
வாழ்வை முற்றிலும் நாசமாக்கிவிட்டதை உணர்ந்த ஓகோனி மக்கள் தமக்கான
உரிமைப்போராட்டத்தைத் தொடங்கினார்கள். 1990ஆம் ஆண்டு மோசோப் இயக்கத்தைத்
தொடங்கினார்கள் (Movement for the Survival of the Ogoni People - ஓகோனி மக்கள் உயிர்வாழும் உரிமைக்கான
இயக்கம்). 1993ஆம்
ஆண்டில் ஓகோனி மக்களில் பாதிப்பேருடைய ஆதரவு இந்த இயக்கத்துக்கு கிடைத்தது. இந்த
இயக்கத்தை தொடங்கியவர்களில் ஒருவர் கென் சாரோ-விவா (Kennule
Beeson Saro-Wiwa). 1941 அக்டோபர் 10ஆம்
நாள் பிறந்தவர். எழுத்தாளர், சுற்றுச்சூழல் ஆர்வலர். தொலைக்காட்சி நிகழ்ச்சி
தயாரிப்பாளர், பல
நூல்களின் ஆசிரியர், குறிப்பாக
நைஜீரிய மக்களின் வரலாறு குறித்தும், பன்னாட்டு நிறுவனங்களின் வரவால்
ஓகோனி மக்களின் வாழ்க்கை நாசமானது குறித்தும் நிறையவே நூல்கள் எழுதினார்.
1993 ஜனவரியில் மூன்று லட்சம் ஓகோனி மக்களைத்
திரட்டிய சாரோ-விவா, "எண்ணெய்க்கம்பெனிகள்
சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்; கடந்த காலத்தில் செய்த நாசங்களுக்கு
இழப்பீடு தர வேண்டும்; (நைஜர்
டெல்டாவில் சம்பாதித்த) வருமானத்தில் ஓகோனி மக்களுக்கான பங்கைத் தர வேண்டும்; மத்தியில் (உள்ள அரசுக்கு மாற்றாக)
அரசியல் சுயாட்சி வேண்டும்" ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து அமைதி வழியில் வன்முறையற்ற
ஊர்வலம் ஒன்றை நடத்தினார்.

1993இன்
தொடக்கத்தில், ஓகோனி
வழியாக, அதாவது
மக்கள் குடியிருப்பு, வயல்கள்
வழியாக, ஒரு
எண்ணெய்க்குழாயைக் கொண்டு செல்லும் வேலையை நைஜீரிய ராணுவத்தின் துணையோடு ஷெல்
செய்தது. காராலூலு கோக்பாரா என்ற பெண்மணியின் வயலில் விளைந்திருந்த தானியங்களை
புல்டோசர் கொண்டு அழித்தபோது அவர் அழுது ஆர்ப்பாட்டம் செய்து தடுத்தார். உடனடியாக
ராணுவம் சுட்டதில் அவரது ஒரு கை பலத்த சேதமானது. பலர் சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.
1994இல்
சாரோவின் சகோதரான ஓவன்ஸ் விவா மீது பொய்க்குற்றம் சுமத்தி பல முறை அவரை சிறையில்
தள்ளி, அடித்து
உதைத்தனர். மைக்கேல் வைசர் மீது அரசியல் இயக்கத்தில் ஈடுபட்டதாக 'குற்றம்'சாட்டி சிறையில் தள்ளினர்; அவரது மகளை வன்புணர்வு செய்தனர். பல
பொய்க்குற்றங்களை ஒத்துக்கொள்ளுமாறு அவரை சித்ரவதை செய்தனர். அவரது மகன் அவருக்கு
உணவு கொண்டுவந்தபோது அவரையும் அடித்து உதைத்தனர்.
1994இல்
கென் சாரோ உள்ளிட்ட தலைவர்கள் ஒரு கூட்டத்திற்கு சென்றபோது தடுத்து
நிறுத்தப்பட்டனர். ஆனால் அதே கூட்டத்தில் நான்கு ஓகோனிய தலைவர்களை
ஷெல்+ராணுவக்கூட்டணி கொன்றது. வேடிக்கையாக, இவர்கள் சாவுக்கு சாரோதான் காரணம் என
ராணுவ கவர்னர் அறிவித்து, சாரோவையும்
பிறரையும் சிறையில் தள்ளினார். இதையே சாக்காக வைதுக்கொண்டு ஓகோனியில் 60 நகரங்களில் ராணுவம் தேடுதல் வேட்டை
நடத்தி மோசோப் உடன் தொடர்புடையவர்கள் என்று குற்றம் சுமத்தி பல நூறு பேரை சித்ரவதை
செய்தது.
மூன்று
நபர் விசாரணைக்குழு ஒன்றை அரசு நியமித்தது. இந்த மூன்று பேரும் எச்சக்கலை நாய்கள்
என்பதை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தமது தரப்பு வாதங்களை முன்வைக்கக்கூட ஒன்பது
பேருக்கும் வாய்ப்பளிக்கப்படவில்லை, அத்தனை அவசரம்
ஷெல்+ராணுவக்கூட்டணிக்கு. வழக்கு விசாரணையின் தொடக்கம் முதல் இறுதி வரை ஷெல்
பின்னால் இருந்து இயக்கியது. சாரோவையும் மோசோப்பையும் ஒழித்துக்கட்டிவிடுவோம்
என்று அரசு தனது எஜமானன் ஆன ஷெல்லுக்கு உறுதி அளித்திருந்தது. வழக்கு விசாரணைக்கு
முன்பாகவே, ஷெல்
தனது தலைமை அலுவலகத்துக்கு இவ்வாறு உறுதி அளித்திருந்தது: "சாரோ
தண்டிக்கப்படுவார், உயிருடன்
திரும்பமாட்டார்". சாட்சிகளிடமே கூட நேரடியாக ஷெல் இப்படி சவால்
விடுத்திருந்ததாக சாட்சிகள் கூறினார்கள். உச்சகட்டமாக, அன்றைய நைஜீரிய ராணுவ சர்வாதிகாரி
சானி அபாகாவை ஷெல் அதிகாரிகள் நேரே சந்தித்து விசாரணை எவ்வாறு நடைபெற வேண்டும் என
கட்டளை இட்டிருந்தார்கள். வெளிநாட்டு வழக்கறிஞர் வாதாடுவதற்கான விசேச சட்டத்தின்
கீழ் ஷெல்லின் வழக்கறிஞரே கடல்கடந்து வந்து ஷெல்லுக்காக வாதாடினார் (எல்லாமே
ஏற்கனவே தயாரிக்கப்பட்டவை என்பதை சொல்ல வேண்டியதில்லை). ஷெல்லின் நைஜீரிய மானேஜிங்
டைரக்டர் பிரியன் ஆண்டர்சன், சாரோவின் சகோதரர் ஓவன்ஸ் விவாவிடம்,
"ஷெல்லுக்கு
எதிரான போராட்டத்தை உங்கள் சகோதரர் நிறுத்தினால் அவரை விடுதலை செய்ய எங்களால்
முடியும்" என்று பேரம் பேசினார். விசாரணையில் சாரோவுக்கு எதிராக சாட்சியம்
சொன்ன இரண்டு பேர், "ஷெல்
வழக்கறிஞர் முன்னால் தங்களுக்கு லஞ்சம் தரப்பட்டதாகவும், ஷெல் கம்பெனியில் வேலை தரப்படும்
என்று ஆசைவார்த்தை காட்டப்பட்டதாகவும், இதனால் சாரோவுக்கு எதிராக தாங்கள்
சாட்சியம் அளித்ததாகவும்" பின்னர் ஒப்புக்கொண்டனர்.
விசாரணையின்போது
கென் சாரோ-விவா உறுதிபடக் கூறினார்: "இறுதித்தீர்ப்பு நாள் வந்தே தீரும்; ஓகோனி மக்களுக்கு எதிராக ஷெல் செய்த
கொலைபாதகங்களுக்கு ஷெல் பதில் சொல்லும் நாள் வந்தே தீரும்; ஷெல் தண்டிக்கப்படும்." இறுதியில் 1995 நவம்பர் 10 அன்று 'ஓகோனியர் ஒன்பது' பேரும் தூக்கில் போடப்பட்டனர். பணம்
பாதாளம் மட்டும் பாயும், கார்ப்பொரேட்
பணம் தூக்குமேடை வரையும் பாயும். சாரோவின் உடலை அமிலம் ஊற்றி எரித்த ராணுவம், எஞ்சிய உடலை அடையாளம் தெரியாத
இடத்தில் வீசி எறிந்தது.
...5
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக