சனி, ஜூலை 07, 2012

ஆனந்தவிகடனுக்கு நன்றி!

’குறைவாக எழுதினாலும் நிறைவான படைப்புக்கள் அலங்கரிக்கும் வலைதளம்...உபயோகமான வாசிப்பு அனுபவம் அளிக்கும் தளம்!’ எனப் பாராட்டி சாம்பல்தேசத்தை விகடன் வரவேற்பறையில் அறிமுகம் செய்து வைத்துள்ளது ஆனந்தவிகடன்  (11.7.12 இதழில்).  ஆனந்தவிகடனுக்கு என் நன்றிகள் பல!...


அன்புடன்
சாம்பல்தேசம்
06.07.2012

வியாழன், ஜூலை 05, 2012

உழுதுண்டு வாழ்வாரே....வாழ்வார்? - 1


தேசிய குற்றப்பதிவு அமைப்பு (National Crime Records Bureau) புள்ளிவிவரப்படி 2011ஆம் ஆண்டில் மட்டும் 14027 விவசாயிகள் இந்தியாவில் தற்கொலை செய்துள்ளார்கள். 1995ஆம் ஆண்டு தொடங்கி 2011 வரை தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 270940. இதில் உச்சத்தில் நிறபது மஹாராஷ்ட்ரா மாநிலம். இக்காலகட்ட்த்தில் இங்கு மட்டும் உயிரை மாய்த்துக்கொண்டோர் 53818.  2011இல் மஹாராஷ்ட்ராவில் தற்கொலை செய்துகொண்டவர்கள் 3337. அதிகபட்சமாக இம்மாநிலத்தில் 2006இல் 4453 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டார்கள்.  உண்மையான எண்ணிக்கை இதைவிடவும் அதிகமாகவே இருக்கும், ஏனெனில் அரசும் தனியார் பெருமுதலாளிகளின் விதைக்கம்பெனிகளும் ஒன்றுசேர்ந்து பெரும் செலவு செய்து தற்கொலை எண்ணிக்கையை ஊடகங்களில் குறைத்துக்காட்ட பெரும் பிரயத்தனம் செய்வது தொடர்கின்றது.
ஒரு புறம் விவசாயம் செய்வோரின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வர, தற்கொலை எண்ணிக்கையோ மறுபுறம் அதிகரித்துக்கொண்டே வருவது விசித்திரமாக உள்ளது.  குறிப்பாக மஹாராஷ்ட்ராவில் கிராமங்கள் அழிக்கப்பட்டு நகரமயமாதல் அசுரத்தனமான வேகத்தில் நடக்கும்போதும் தற்கொலை தொடர்ந்து அதிகரிப்பதற்கு, விவசாய சமூகத்தின் மீது அரசும் இந்த சமூகமும் தொடர்ந்து கொடுத்துவரும் அழுத்தமும் மன உளைச்சலுமே காரணமாகும்.
விவசாயிகள் தற்கொலை எண்ணிக்கையில் (1995ஆம் ஆண்டு தொடங்கி 2011 வரை) உச்சத்தில் இருக்கும் ஐந்து மாநிலங்கள் (என்ன ஒரு பெருமை!): 
மஹாராஷ்ட்ரா – 53818
ஆந்திரா – 33326
கர்நாடகா – 37153
மத்தியப்பிரதேசம்+சத்தீஷ்கர் – 42388, மொத்தம் 166685.
1995-2011 காலகட்டத்தில் இந்தியாவில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகள் 270940 எனில் ஆனால் மேற்கண்ட 5 மாநிலங்களில் மட்டும் இதில் 61.52% தற்கொலைகள் நடந்துள்ளன.  உண்மையில் இந்தப்புள்ளிவிவரங்கள் எல்லாம் குறைத்துக்காட்டப்பட்டவை; மேலும் பல விவசாயிகளின் தற்கொலைகள் வேறு காரணங்களைகாட்டி காவல்துறையாலும் அரசாலும் இந்தப்பட்டியலில் மறைக்கப்பட்டிருக்கும் (numbers massage) என்பது தெளிவு. விவசாயிகள் தற்கொலைகளில் முதலிடம் பெறும் மஹாராஷ்ட்ராவின் விதர்ப்பாவிற்கு பிரதமர் மன்மோஹன் சிங் கருணை கூர்ந்து விஜயம் செய்த பின்னர் அரசு அதிகாரிகள் ராஜாவை விஞ்சிய மந்திரிகளாய் தற்கொலைகளின் எண்ணிக்கையை தொடர்ந்து குறைத்தே காட்டி வருகின்றார்கள்.  மத்தியில் விவசாயத்துறை மந்திரியாய் இருக்கின்ற, அதே மஹாராஷ்ட்ராவை சேர்ந்தவரான சரத்பவாரோ அரசின் புள்ளி விவரங்களை (தில்லுமுல்லானவை என்றாலும்) நாடாளுமன்றத்தில் சொல்வதை தவிர்த்தே வருகின்றார். அவருக்கு இதை விட முக்கியமான வேலைகள் இருக்கின்றன – கிரிக்கெட் வாரியத்துக்கு யார் தலைவராக இருப்பது, கிரிக்கெட் வாரியத்துக்கு தான் போட்டி போடலாமா அல்லது எதிர்த்துப் போட்டியிடுபவரை எப்படி கவிழ்த்து இந்தியத்தாயை வாழ வைப்பது போன்ற தலைபோகிற விசயங்கள்.  
சரி, நீங்கள் நெடுநேரமாய் கேட்க ஆவலாய் உள்ள கேள்விக்கு பதில் இதோ: தமிழகத்தில் 2011இல் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 82. காங்கிரசின் புதிய நவதாராளவாத-உலகமயக் கொள்கைகளை அப்படியே தமிழகத்தில் அமலாக்கும், உலகப்பெருமுதலாளிகளின் உள்ளூர் ஏஜெண்டுகளான இனமானத்தளபதிக்கும் புரட்சித்தலைவிக்கும் இந்தப்புள்ளிவிவரம் சமர்ப்பணம்.
(ஹிந்து நாளிதழில் வெளிவந்த பி.சாய்நாத் அவர்களின் கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது)
தொடரும்....2

ஞாயிறு, ஜூலை 01, 2012

மேற்கத்திய உலகத்தின் வளர்ச்சி: திருட்டும் கொள்ளையும் - கென் சாரோ-விவா (பாகம் 3)


நீண்டகால பாதிப்புக்கள்:

1) மக்கள் உடல்நலம் பாதிப்பு: சுவாசக்கோளாறு, இருமலில் ரத்தம், தோல்வியாது, கட்டிகள், வயிற்றுப்பிரச்னை, புற்றுநோய்கள், சத்தற்ற உணவு...
2) உலகின் மூன்றாவது பெரிய சதுப்பு நிலக்காடு; ஆப்பிரிக்கக்கண்டத்தின் மிகப்பெரியது; இயற்கை வளங்களும், ஏராளமான வன, நீர்வாழ் உயிரினங்களும் நிரம்பி வழிந்த பூமி என்ற பெருமைக்கு உரிய நைஜர் டெல்டா. எண்ணெய்க்கம்பெனிகளின் கட்டுமானம், குழாய் பதிப்பு, தொழிற்சாலைக் கழிவுகளைக் கொட்டுவதற்கான குழி தோண்டுவது என காசு மட்டுமே குறியாக சர்வதேச முதலாளிகள் செய்த அனைத்து விதமான நாசவேலைகளால் கிடைத்தற்கு அரிய இயற்கைவளங்களை இழந்து நாசமானது நைஜர் டெல்டா.

சமூக, பொருளாதார பாதிப்புக்கள்:

எண்ணெய்க்கம்பெனிகளின் தொழில்கள் எங்கெல்லாம் நடக்கின்றதோ அப்பகுதியின் இயற்கை வளங்களை நம்பியும் சார்ந்தும்தான் அப்பகுதி மக்கள் கடந்தகாலத்தில் வாழ்ந்து வந்தார்கள். எண்ணெய்க்கம்பெனிகளின் நுழைவுக்குப்பின்...

1) நில இழப்பும் அடிப்படை ஆதாரவள இழப்பும்:

தமது கூட்டாளிகளான சர்வதேச எண்ணெய் முதலாளிகளுக்கு சாதகமான ஒரு சட்டத்தை நைஜீரிய அரசே இயற்றியது: "மக்கள் நலன் கருதி" எந்த ஒரு நிலத்தையும், கவர்னர் ஒரே ஒரு கையெழுத்தின் மூலம் கைப்பற்றி எண்ணெய் முதலாளிகளுக்கு கொடுத்து விடலாம். அப்பட்டமான அரசு பயங்கரவாதம்! இதனால் வாழ்வின் அடிப்படை ஆதாரமான நிலத்தை டெல்டா மக்கள் இழந்தார்கள். எண்ணெய்க்கழிவு, கசிவால் நீர்நிலைகள் நாசமானதால் மீன்கள் அழிப்பு, எனவே உணவுத்தட்டுப்பாடு; காடுகள் அழிப்பால் வீடு கட்டத்தேவையான மரம், விறகு ஆகியனவற்றிலும் இடி விழுந்தது.

2) பாரம்பரிய வாழ்க்கை அழிப்பும் வாங்கும் சக்தி இழப்பும்:

பாரம்பரியமாக காடு, ஆறு, கடல் என இயற்கை சார்ந்த வாழ்க்கை நடத்திக்கொண்டு, முக்கியமாக உணவுத்தேவைகளை நிறைவேற்றிக்கொண்டிருந்த மக்கள், எண்ணெய்க்கம்பெனிகளின் ஆக்கிரமிப்பால் காடுகளை இழந்ததால் 'வேலை' தேடும் நிர்ப்பந்தத்துக்கு ஆளானார்கள். மாத வருவாய், கடைக்குச்சென்று உணவு வாங்குதல் போன்ற வார்த்தைகளையே கேட்டறியாத டெல்டா மக்கள், நிலமும் காடும் பறிபோன பின் தமது நிலத்தில் அமைந்த எண்ணெய்க்கம்பெனிகளில் கூலி வேலைக்கு சென்றார்கள்! கிடைக்கின்ற கூலியால் வாழ்க்கை நடத்த முடியாது. மாத ஊதியம் பெறும் எண்ணெய்க்கம்பெனி ஊழியர்களின் வருமானத்தோடும் தரத்தோடும் ஒப்பிடும்போது பாரம்பரிய ஓகோனி மக்களால் வாழ்க்கை நடத்த முடியாது.

3) பெண்கள் மீது சுமத்தப்பட்ட வாழ்க்கைச்சுமைகள்:

முன்பே கூறியபடி, இயற்கையோடு இசைந்த பாரம்பரியத்தொழில்களைச் செய்து வாழ்க்கை நடத்திய டெல்டா மக்களில் பெண்களின் பங்கு முக்கியமானது. விவசாயம், மீன்பிடித்தல், விறகு சேகா¢த்தல், காய், கனி, கிழங்கு உள்ளிட்ட உணவு சேகா¢த்தல் ஆகிய வேலைகள் மூலம் குடும்பப்பொருளாதாரத்தின் முக்கிய பங்கை பெண்கள் நிறைவு செய்தனர்; இதன் மூலம் இயற்கையாகவே டெல்டாப்பகுதியின் காடு, நீர்நிலைகளின் பராமா¢ப்பு, பாதுகாப்பு போன்றவற்றையும் பெண்களே செய்தார்கள். ஆனால் காடு, நிலம் ஆகிய அனைத்தும் ஆக்கிரமிப்புக்கும் சீர்கேட்டுக்கும் உள்ளானதால் பெண்களின் தொழில் கேள்விக்குறியானது; இதனால் குழந்தைகளின் கல்வியும் பராமா¢ப்பும் கூடவே கேள்விக்குறியானது.

4) பாலியல் தொழிலும் அநாதைக்குழந்தைகளும்:

தமது வாழ்வாதாரம் பறிபோன நிலையில் பெண்கள் பாலியல் தொழிலுக்குத் தள்ளப்பட்டார்கள். இவர்களது வாடிக்கையாளர்கள் எண்ணெய்க்கம்பெனித் தொழிலாளர்களே என்பதைச் சொல்ல அவசியம் இல்லை. ஆக எண்ணெய்க்கம்பெனிகளால் ஓகோனிப்பெண்களின் சுயமா¢யாதையையும் பறி போனது. முறை தவறிப் பிறந்த குழந்தைகள் ஏராளமாக அநாதைகளாக தெருவில் விடப்பட்டனர்.
இதன்றி குழந்தை இறப்பு விகிதம் அதிகமானது. டெல்டாப்பெண்கள் இயற்கையாகவே ஆண்களை விடவும் கடுமையான உழைப்பாளிகள். எனவே முன்பு குழந்தை இறப்பு என்பது அநேகமாக அங்கே இருந்தது இல்லை. ஆனால் நீர்நிலைகள் மாசு அடைந்ததால் இந்நீரைக் குடிக்கின்ற கருவுற்ற பெண்களுக்கு நோயுள்ள, ஊனமுள்ள குழந்தைகள் பிறப்பதும், இறந்தே பிறப்பதும் சாதாரமானது.
மொத்தத்தில் ஓகோனி பாரம்பரிய மக்களின் மண்ணும் வாழ்க்கையும் பறி போனது; சமூகச்சீரழிவு தலைவிரித்து ஆடியது.

...4

வெள்ளி, ஜூன் 29, 2012

மேற்கத்திய உலகத்தின் வளர்ச்சி: திருட்டும் கொள்ளையும் - கென் சாரோ-விவா (பாகம் 2)

ஷெல்தான் நைஜீரிய எண்ணெயில் பாதியை உறிஞ்சி விற்கின்றது. மோபில், செவ்ரான், எல்•ப், ஆகிப், டெக்சாசோ...என மேலும் பல கம்பெனிகள் உண்டு.
ஷெல் கம்பெனி கடந்த 2008ஆம் வருடத்தில், ஒரு நொடிக்கு 700 பவுண்டு (சுமார் ஐம்பதாயிரம் ரூபாய்) சம்பாதித்ததாக அதன் கணக்கே சொல்கின்றது. அதே நேரத்தில் எழுபது விழுக்காடு நைஜீரிய மக்களின் ஒருநாள் வருமானம் வெறும் நூறு ரூபாய்க்கு சமானம்! இதையே நாம் இப்படியும் சொல்லலாம்: நைஜீரிய மக்களின் ரத்தத்தை உறிஞ்சி விற்றால் ஒரு நொடிக்கு 700 பவுண்டு சம்பாதிக்கலாம். 1997 கணக்குப்படி மட்டும் ஒருநாளைக்கு 20 லட்சம் பேரல் கச்சாஎண்ணெய் நைஜீரியாவின் மடியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டது.
ஷெல் உட்பட்ட பன்னாட்டு எண்ணெய் சுரண்டல் கம்பெனிகள், பெட்ரோலை உறிஞ்சி எடுத்து விற்று சம்பாதித்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நைஜீரிய மக்களுக்கு செய்த 'நன்மைகள்' வருமாறு: எண்ணெய்க்கசிவு, கழிவுகளால் மண்வளம், நீர்வளம் வீழ்ச்சி, மீனினம் அழிப்பு, சாயம், மீன்பிடித்தொழில் அழிப்பு, மண்ணா¢ப்பு, காடு அழிப்பு, அழியும் நிலையில் உள்ள உயிரினங்களின் வீழ்ச்சி, நச்சுப்பொருட்கள் வெளியேற்றம், சுற்றுச்சூழல் அழிப்பு, நீர், நிலம், காற்று என அனைத்து வாழ்வாதாரங்களும் அழிப்பு, எனவே மக்களின் வாழ்க்கை சீரழிவு, வேலையின்மை, வருமான இழப்பு, வறுமை, நோய், விபச்சாரம், மக்கள்தொகைப்பெருக்கம், கூடவே அநாதைக்குழந்தைகள் அதிகா¢ப்பு, அரசுநிர்வாக சீரழிவு, லஞ்சலாவண்யம்...என நீள்கின்றது.


எண்ணெய்க்கம்பெனிகளின் இந்த சூறையாடல் ஏதோ ஒருநாள் திடீர் என தொடங்கியது அல்ல; உலகப்போக்கிரியான அமெரிக்கா, அதன் ஏவல் நாயான இஸ்ரேல், ஜப்பான், ஐரோப்பியப் பொருளாதாரக் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகள் என கடல்கடந்த கொள்ளையர்களின் ஏவல் நாயாக தொடர்ந்து இருந்த நைஜீரிய அரசுகள், வெறும் பொம்மை அரசுகளாக மட்டுமே இருந்ததும், அரசும் சர்வதேச முதலாளிகளும் சர்வதேச முதலாளித்துவம் விதித்த புனிதமான கோட்பாட்டை - "கூட்டுச்சேர்; தேச எல்லை, மொழி, இனம் பாராமல் கொள்ளை அடி" - அப்படியே பின்பற்றியதும்தான் நைஜீரியா சீரழிந்துபோனதற்கு காரணம். அதே சர்வதேச விதிகளின் அடுத்த விதியான "ஈவு இரக்கம் அனைத்தையும் குழிதோண்டிப்புதை: எதிர்க்குரல்களை ஒடுக்கு, அடிப்படை மனித உரிமைகளை மீறு, அரசுபயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விடு, ராணுவத்தையும் போலிசையும் மக்களுக்கு எதிராகப் பயன்படுத்து, தேவைப்பட்டால் உயிரை எடுத்துவிடு" போன்ற அனைத்தையும் ஒன்றுவிடாமல் நைஜீரிய அரசும் சர்வதேச முதலாளிகளும் திட்டமிட்டு நடத்தினார்கள்.


ஷெல் உள்ளிட்ட அந்நிய எண்ணெய்க்கம்பெனிகளின் புண்ணியத்தில் நைஜர் டெல்டாவின் மக்களும் இயற்கை வளங்களும் நாசமாகிக்கொண்டு வந்ததை பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கங்களும் மனித உரிமை ஆர்வலர்களும் கடந்த பல பத்தாண்டுகளாக அம்பலப்படுத்தி வந்தார்கள். பல புத்தகங்களாகவும் அறிக்கைகளாகவும் இணையதளங்களில் ஏராளமான தகவல்கள் கிடைக்கின்றன, அவற்றில் ஒரு சில மட்டும் கீழே:
1) எண்ணெய் தோண்டி எடுக்கும்போது நிலத்திலிருந்து வெளிப்படும் இயற்கை எரிவாயுவை அப்படியே 24 மணிநேரமும் எரிப்பது. இதனால் 24 மணி நேரமும் அப்பகுதி தாங்கமுடியாத வெப்பத்துடன் தகித்தால் மனிதர்கள் எவ்வாறு வாழ்வது? கூடவே இந்த வாயு, சூறாவளி போன்ற பெரும்சத்தத்துடன் கெட்டநாற்றத்தையும் வெளிவிடுகின்றது. இப்போதுள்ள தொழினுட்பத்தின்படி இந்த வாயுவை வெளியேற்றாமல் வேறு வகையில் பயன்படுத்தலாம்; சேமித்து வேறு பல தொழில்களுக்கும், உள்ளூர் மக்களின் பயன்பாட்டுக்கும் பயன்படுத்தலாம்; இல்லையேல் மீண்டும் பூமிக்குள் செலுத்த வேண்டும், இந்த முறையை பல நாடுகள் பின்பற்றி வருகின்றன. ஆனால் இவ்வாறு செய்வதற்கு ஆகும் செலவை விடவும் இப்படி எரிப்பதால் அரசுக்கு தரப்படும் அபராதத்தொகை குறைவு என்பதால் கம்பெனிகள் எரிக்கின்றன. விவேக் ஒரு படத்தில் சொல்வதுபோல் "ஏண்டா, அட்வான்சா அபராதம் கட்டிட்டு ரேப் பண்றீங்களாடா?". 2008 டிசம்பர் வரை இதுபோன்ற நூற்றுக்கும் மேற்பட்ட எர்¢க்கும் இடங்கள் இருந்ததாக தகவல் உள்ளது. உள்ளூர் மக்களின் வாழ்க்கை நாசமாகி விட்டது. 24 மணிநேரமும் வெளியாகும் கார்பன்-டை-ஆக்சைடு, மீத்தேன் போன்றவற்றால் தட்பவெப்பநிலை நாசமாகி விட்டது. குறைந்த பட்சம் மனிதன் அனுபவிக்கின்ற இயற்கையான இருள் சூழ்ந்த இரவு என்ற உரிமையைக்கூட நைஜா£ய மக்கள் இழந்துவிட்டார்கள்.


2) அமிலமழைப்பொழிவால் குடிநீர் கெட்டுவிட்டது; விவசாயம் நாசமாகி விட்டது. துத்தநாகத்தால் ஆன வீட்டுக்கூரைகள் 7 முதல் 10 வருடங்கள் உழைக்கும், ஆனால் இப்போது அமிலமழையால் இரண்டுவருடங்களில் நாசமாகிவிடுகின்றன.


3) எண்ணெய்க்குழாய்க்கசிவுதான் நைஜர் டெல்டாவின் மிகப்பெரும் சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கு காரணம். மக்கள் வசிக்கும் வீடுகளின் முன்னால், தெருக்கள் நடுவே, வயல்களின் நடுவே என்று திரும்பிய திசை தோறும் எண்ணெய்க்குழாய்களே என்றால் மனிதன் எப்படி வாழ்வது? பல குழாய்கள் நாற்பது வருடங்களுக்கும் மேற்பட்டவை. இதனால் எண்ணெய்க்கசிவு மிக சாதாரணமான ஒன்று... உதாரணமாக 1998 ஜூன் மாதம் ஊட்டிகுவே1 பகுதியில் ஷெல்லின் 16 அங்குலக்குழாயில் இருந்து மாதக்கணக்கில் கசிந்த கச்சாஎண்ணெய் மட்டும் எட்டு லட்சம் பேரல்கள். அதே 1998 அக்டோபரில் ஜெஸ்சி கிராமத்தின் ஊடாக ஓடும் குழாய் வெடித்ததில் எழுநூறு பேருக்கும் அதிகமானோர், பெரும்பாலோர் பெண்கள், குழந்தைகள், செத்து மடிந்தனர். கடந்த ஐம்பது வருடங்களில் 15 லட்சம் பேரல் எண்ணெய் இதுபோல் நைஜர் டெல்டா எங்கும் கசிந்து ஓடி நாசம் செய்ததாக தகவல் கூறுகின்றது.


...3

வியாழன், ஜூன் 28, 2012

மேற்கத்திய உலகத்தின் வளர்ச்சி: திருட்டும் கொள்ளையும் - கென் சாரோ-விவா (பாகம் 1)


(2009 ஜூலை 'புதுவிசை'யில் வெளியானது, இப்போது பொதுவில்...)



ஷெல் (Shell) பெட்ரோலிய எண்ணெய்க் கம்பெனி. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இதன் தலமையகம் உள்ளது. உலகின் மிகப்பெரிய எண்ணெய்க்கம்பெனிகளில் ஒன்று. 2008ஆம் ஆண்டில் மட்டும் இதன் வருமானம் 21,475 லட்சம் அமெரிக்க டாலர் என்று இக்கம்பெனியின் கணக்கு சொல்கின்றது (சுமாராக 10,300 கோடி ரூபாய்). எண்ணெய்க்கிணறு தோண்டுவது, எண்ணெய் எடுப்பது, இயற்கை எரிவாயு தோண்டுவது, இவற்றை விற்பது, பெட்ரோலிய வேதிப்பொருட்கள் உற்பத்தி, விற்பனை என இதன் தொழில் பெட்ரோலியம் சார்ந்துள்ள பரந்த தொழில். இந்தியாவில் ஷெல், எஸ்ஓ போன்ற தனியார் கம்பெனிகள் எண்ணெய்க்கம்பெனிகள் இருந்ததும் பின் எண்ணெய்க்கம்பெனிகள் யாவும் நாட்டுடைமை ஆக்கப்பட்டதும் பழைய வரலாறு. நரசிம்மராவ், ம.சி, ப.சி, மான்டேக் சிங், காங்கிரஸ், பாரதீய ஜனதா கூட்டணி கூடிப்பேசி பொதுத்துறையாகிய மக்கள்சொத்தை மீண்டும் தனியார் முதலாளிகளுக்கு ஏலம் போட்டு விற்பது புதிய வரலாறு.

(ராயல் டச்சு) ஷெல் கம்பெனி ஆப்பிரிக்கக்கண்டத்தின் நைஜீரிய நாட்டில் நைஜர் டெல்டாப்பகுதியில் 1956ஆம் ஆண்டு எண்ணெய் தோண்டி எடுத்து, 1958இல் விற்பனையைத் தொடங்கியது. அப்போதும் அதன் பின்னும் தொடர்ந்து இருந்த அரசுகளின் துணையுடன்தான் தனது கொள்ளை லாப வேட்டையை தொடர்ந்தது. ஷெல் கம்பெனி, பெட்ரோலை விற்று சம்பாத்தித்தை விடவும் (சர்வதேச முதலாளிகளின் கல்லாப்பெட்டி பொருளாதார விதிகளின் படி) நைஜீரிய மக்களின் ரத்தத்தை விற்று சம்பாதித்ததுதான் அதிகம் என்பதை வரலாறு கூறுகின்றது.
நைஜீரியாவின் தெற்குப்பகுதியில் அமைந்துள்ள நைஜர் டெல்டாப்பகுதி ஓகோனி (Ogoni) எனப்படுகின்றது. இந்த மக்களும் ஓகோனி என்றே அழைக்கப்படுகின்றனர். ஓகோனி பிரதேசம் இயற்கையிலேயே மிக வளமான பூமியாகும். இருபதாயிரம் சதுர கிலோமீட்டர் பரப்புள்ள டெல்டாவில் ஆறாயிரம் ச.கி.மீ. பரப்புக்கு சதுப்புநிலக்காடு மட்டும் உள்ளது. உலகின் மூன்றாவது பெரிய சதுப்பு நிலக்காடு இதுதான். மேலும், நைஜீரியாவின் (எஞ்சியுள்ள) மிகப்பெரிய மழைக்காடுகளில் ஒன்றும் ஓகோனியில்தான் உள்ளது. ஓகோனி மக்கள் பாரம்பரியமாகவே இந்தக்காடுகளை நம்பித்தான் வாழ்ந்து வருகின்றார்கள். காடும் காடு சார்ந்த தொழில்களுமாக அவர்கள் வாழ்க்கை இருந்தது. சதுப்புநிலக்காடுகள் உயிரோடு இருப்பது மிக முக்கியம்- மண்வளம், தாவரவளம், மீன் பெருக்கம், காட்டு மரங்கள், வீடு கட்டுவதற்கான மரம், விறகு, மருந்துப்பொருட்கள், இயற்கைச்சாயம், பல்வேறு வனவிலங்குகள் ( யானை, வெண்மார்புக்குரங்கு, ஆற்று நீர்யானை, முதலை போன்ற அழியும் நிலையில் உள்ள உயிர்கள் உட்பட) பல்வேறு இயற்கை வளங்களின் நீடிப்புக்கும் உயிர்ப்புக்கும் நைஜர் சதுப்புநிலக்காடுகள் தொட்டிலாக இருந்தன. விஞ்ஞானிகளின் கணிப்புப்படி, "உலகின் தலையாய பத்து ஈரநிலங்களின் வரிசையிலும், கடல்சார் சுற்றுச்சூழல் மையங்களின் வரிசையிலும்" நைஜர் டெல்டா இருந்தது.

நைஜர் பகுதியின் ஓகோனி மக்களின் வாழ்க்கை மட்டும் இன்றி, (மேற்கு ஆப்பிரிக்காவின்) மோசமான ஏழைநாடுகளின் மக்களின் வாழ்க்கையும் இந்த டெல்டாவை நம்பியே இருந்தது. நைஜர் டெல்டாவிலிருந்து இனப்பெருக்கத்துக்கான இடப்பெயர்ச்சி செய்யும் மீன்கள் இம்மக்களுக்கு வாழ்க்கை தருகின்றன. சுருக்கமாக, டெல்டாவின் 2.7 கோடி மக்களில் 75 விழுக்காடு மக்களின் விவசாயம், மீன்பிடித்தொழில், அவை சார்ந்த துணைத்தொழில்களை, வாழ்க்கையை இந்த டெல்டாதான் தீர்மானிக்கின்றது. எல்லாவற்றிற்கும் மேலாக, ஆப்பிரிக்கக் கண்டத்தின் மிகப்பெரும் எண்ணெய் வள பூமி நைஜர் டெல்டாதான் என்பதை ஷெல் போன்ற சர்வதேச முதலாளிகள் தெரிந்துகொள்வதற்கு முன்னர் வரை ஓகோனி மக்களின் வாழ்க்கை ஒருகாலத்தில் பிரச்னை இல்லாமல் ஓடிக்கொண்டுதான் இருந்தது...

ஆப்பிரிக்கக் கண்டத்தின் மிகப்பெரும் எண்ணெய் வள பூமி என்ற பெருமையோடு இப்போதும் நைஜீரியா ஜொலிக்கின்றது. பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் கூட்டமைப்பின் (OPEC) ஐந்தாவது பெரிய உறுப்பு நாடாகவும் நைஜீரியா இருந்தது. எனவே நைஜீரியாவின் அரசியல்-பொருளாதாரக் கூறுகளைத் தீர்மானித்ததில் பெட்ரோல் கண்டுபிடிப்பு முக்கிய சக்தியாக விளங்கியதில் வியப்பில்லை. நாட்டின் அந்நியச்செலாவணியில் 90 விழுக்காடும், அரசு வருமானத்தில் 80 விழுக்காடும் பெட்ரோலிய ஏற்றுமதியால் கிடைத்தது. எனவே, நைஜீரியாவின் ஒவ்வொரு குடும்பமும் அடுக்கு மாளிகையில் வசிக்கின்றது, தெருக்களில் சொகுசு கார்களை நிறுத்த இடம் கிடைக்காது, கடைவீதிகள், ஓட்டல்கள் என எப்போதும் மக்கள் காசை 'பெட்ரோலாக' செலவு செய்வார்கள், ஒரே பொழுதுபோக்குகள், கச்சேரி, குடி, கூத்தியா, கும்மாளம்தான்...என்று நீங்கள் நினைத்தால், மன்னிக்கணும்...உலகின் மிக மோசமான ஏழைநாடுகளில் ஒன்றாக நைஜீரியாவும் உள்ளது என்பது கசப்பான உண்மை. கடல்கடந்து வந்து நைஜீரியாவின் பெட்ரோலியவளத்தை சுரண்டி சாப்பிடும் ஷெல் போன்ற எண்ணெய்க் கம்பெனி முதலாளிகள்தான் டாலர்களில் படுத்துப் புரண்டுகொண்டு மேற்படி குடி, கும்மாள, கூத்தியா கேளிக்கைகளில் பொழுதைப்போக்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்தக்கொள்ளையில் முதல் இடம் ஷெல்லுக்கு....

...2.



செவ்வாய், ஜூன் 26, 2012

போஸ்கோ முதல் கூடங்குளம் வரை...’பெருமுதலாளிகளின் படையெடுப்புக்கு’ (corporate invasion) எதிராக...





பெருமுதலாளிகளின் படையெடுப்புக்கு’ (corporate invasion) எதிராக...

ஒரிசாவில் கடந்த ஏழு வருடங்களாக தென் கொரிய கம்பெனியான போஸ்கோவுக்கு எதிராக நடந்து வரும் போராட்டம் ஜூன் 22 அன்று எட்டாவது வருடத்தை தொடுகின்றது. ஒரிசா அரசு இந்த தென்கொரிய கம்பெனியுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி
-          ஒரிசா மக்களுக்கு சொந்தமான 4000 ஏக்கர் நிலம் பறிக்கப்பட்டு போஸ்கோ எஃகு கம்பெனி தொடங்க கொடுக்கப்படும்; இந்த நிலம் அனைத்தும் விவசாய நிலம் ஆகும்
-          எஃகு ஆலைக்கான இரும்புத்தாது தோண்டியெடுக்க இந்திய மக்களின் சுரங்கங்கள் 30 வருசத்துக்கு குத்தகைக்கு விடப்படும், குத்தைகையை மேலும் 20 வருசத்துக்கு நீட்டிக்கலாம்
-          தலைநகர் புவனேஸ்வரில் தலைமை அலுவலகம் அமைக்க சுமார் 25 ஏக்கர் நிலம் தரப்படும் 
-          ஒரிசா மக்கள் இப்போது குடியிருக்கும்  2000 ஏக்கர் நிலம் பறிமுதல் செய்யப்படும், அங்கே போஸ்கோ குடியிருப்பு கட்டப்படும்
-          போஸ்கோ கம்பெனி வருசத்துக்கு 120 லட்சம் டன் எஃகு உற்பத்தி செய்யும்
-          தொழிற்சாலை, சுரங்கம், குடியிருப்பு ஆகியவற்றைக்கட்டவும் ஒட்டுமொத்த பயன்பாட்டுக்கும் இந்தியாவின் மஹாநதியில் இருந்து தென்கொரிய நிறுவனம் தண்ணீர் எடுத்துக்கொள்ளலாம்
-          ரயில் பாதைகள், சாலைகள், துறைமுகம் ஆகியவற்றைக் கட்டிக்கொள்ள போஸ்கோவுக்கு அனுமதி தரப்படும்
-          இப்பகுதி சிறப்பு பொருளாதார மண்டலமாக அறிவிக்கப்படும்.

இதுவரை இந்தியாவில் முதலீடு செய்யப்பட்ட அந்நிய முதலீடுகளில் இதுவே மிகப்பெரியது என்றும் சொல்லப்படுகின்றது. 90-களின் தொடக்கத்தில் மத்தியில் இருந்த நரசிம்மராவ்,மன்மோஹன், ப.சிதம்பரம்,மாண்டேக்சிங் அலுவாலியா கூட்டணி அமெரிக்க-ஐரோப்பிய பெருமுதலாளிகளின் நலன் காக்க உள்நாட்டில் திணித்த தனியார்மய-தாராளமயக்கொள்கைகள் கொண்டுவந்த ஆகப்பெரும் கேடுகளில் ஒன்றுதான் வெளிநாட்டுக்கம்பெனிகள் இந்தியாவுக்குள் தடைஏதும் இன்றி நுழைந்து இந்தியாவின் இயற்கை வளங்களை சூறையாடுவது.  காங்கிரசும் பாரதீய ஜனதாவும் தெருவில் கட்டிப்புரண்டு சண்டை போடுவது போலத்தெரிந்தாலும் கொல்லைப்புறத்தில் கமிசனில் சரிபங்கு பிரித்துக்கொள்கின்றார்கள்; இடை இடையே மத்தியில் ஆள வந்த பாஜக என்ன செய்கின்றது?  மன்மோஹன், அலுவாலியாவின் கொள்கைகளை எழுத்து மாறாமல் அப்படியே அமல்படுத்துகின்றது.

ஆனால் தம் வாழ்வின் ஆதாரமான மண் பறிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்காத பழங்குடியின மக்கள் போஸ்கோ பிரதிரோத் சங்ராம் சமிதி (PPSS) என்ற அமைப்பைத் தொடங்கினார்கள்; தம் மண்ணிலிருந்து போஸ்கோ வெளியேற வேண்டும் என்ற முழக்கத்துடன் ஏழு வருடங்களுக்கு முன் தொடங்கிய போராட்டம் இந்த வாரம் எட்டாவது ஆண்டுக்குள் அடியெடுத்து வைக்கின்றது. மண்ணை இழந்தவர்கள், தொழிலாளிகள்,மீனவர்கள், தலித் மக்கள், மனித உரிமை ஆர்வலர்கள், உள்ளூர் மண்ணின் மைந்தர்கள் என அனைவரும் ஒன்று திரண்டு போஸ்கோ கம்பெனி ஜகத்சிங்புரில் தொடங்க உத்தேசித்துள்ள இடத்தில் பெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள்.

இடதுசாரிகள் போஸ்கோ திட்ட்த்தைக் கைவிட வேண்டும் என தொடர்ந்து மாநில அரசை வற்புறுத்தி வருகின்றார்கள். ஆனால் மாநில தலைமைச்செயலாளர் பிஜய் பட்னாய்க் வேறு மாதிரி பேசுகின்றார்: “2005இல் போஸ்கோவுடன் செய்யப்பட்ட ஒப்பந்தம் காலாவதி ஆகிவிட்டதால் புதிய ஒப்பந்தம் போடப்படும்; ஏற்கனவே 2000 ஏக்கர் நிலம் கைப்பற்றப்பட்டுள்ளது, இன்னும் 600 ஏக்கர் நிலத்தை அமைதியான(?) வழியில் கைப்பற்றுவோம்.

ஏழு வருடங்களாக தொடரும் போராட்டத்தில் மோதல்களில் பலர் இறந்துள்ளார்கள்; திங்கியா,நுவாகான்,கடாக்குஜங் ஆகிய மூன்று கிராமப்பஞ்சாயத்துக்களும் போஸ்கோவுக்கும் மாநில அரசுக்கும் எதிரான போராட்ட்த்தில் மிகத்தீவிரமாக ஈடுபட்டள்ளதால் கிராமத்தின் ஒவ்வொருவர் மீதும் ஒன்றுக்கும் மேற்பட்ட பொய்வழக்குகள் உள்ளன, வழக்குகள் இல்லாத நபரே கிராமத்தில் இல்லை.

65 வயது சத்யாபதி ஸ்வைன் என்பவர் போராளி ரஞ்சன் ஸ்வைனின் தாயார். இக்காரணத்தினாலேயே சத்யாபதி ‘சட்டவிரோதமாக்க் கூடியகுற்றத்திற்காக போலீஸ் காவலில் வைக்கப்பட்டார்.  PPSS-ஐ முன்னின்று நடத்துகின்ற அபய் சாஹூ, நாராயண் ரெட்டி இருவர் மீதும் போடப்பட்டுள்ள பொய் வழக்குகளுக்கு கணக்கே இல்லை. அபய் 2008இல் கைது செய்யப்பட்டார், பெயிலில் விடுவிக்கப்பட்டார். ‘ஒரு வரதட்சணை வழக்கில் சாட்சியங்களை அழித்தார்என 2011-இல் புது வழக்கு ஜோடிகப்பட்டது.

திங்கியா கிராமத்தை சேர்ந்த மனோரமா என்ற இளம்பெண் போராட்டத்தில் குதித்தார், கடந்த ஜனவரி மாதம் முதல் டைபாய்டு நோயில் விழுந்த இவர் மீது 48 வழக்குகள் உள்ளன.

ரமேஷ் பொசாயத் என்பவர் தன் குழந்தையை மருத்துவரிடம் அழைத்து சென்றபோது வழியில் போலீஸ் அவரைக் கைது செய்தது, காரணம் தெரியாது.

விவசாயம் சார்ந்த பொருளாதார வளர்ச்சி செழித்து ஓங்கக்கூடிய ஒரு பகுதியில் எஃகுத்தொழிற்சாலை தொடங்கியே தீர்வது என மாநில அரசு ஏன் பிடிவாதமாக உள்ளது என்ற கேள்வியை 28 வயதான பிரகாஷ் ஜேனா எழுப்பியதால் 2009இல் கைது செய்யப்பட்டார், எட்டரை மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மேல் 28 வழக்குகள் உள்ளன, ஆனால் என்னென்ன பிரிவுகளின் கீழ் என்று இதுவரை அவருக்கு தெரியாது.

திங்கியா கிராமத்தின் முன்னாள் கிராமத்தலைவரின் மகன் ஜோதிரஞ்சன் மஹாபத்ரா “1400 பேருக்கு எதிராக வழக்கு உள்ளதுஎன்கின்றார்.

கைலாஷ் சந்திரா பிஸ்வாஸ் தனது மாமனாரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள கிராமத்தை விட்டுச்செல்லும்போது கைது செய்யப்பட்டார். சூறையாடல், வெடிகுண்டு வீசல், வல்லாங்கு செய்தல் ஆகிய குற்றங்களுக்காக வழக்கு ஜோடிக்கப்பட்டுள்ளது. வழக்கில் இருந்து பெயிலில் வந்த அவர் தான் பணி புரியும் பள்ளிக்கூடத்துக்கு சென்றார், ஆனால் அவரது வேலை பறி போனது.

பாபாஜி சரண் சமன்தாரா திங்கியா கிராமத்தில் போஸ்ட்மாஸ்டராக 28 ஆண்டுகள் பணியாற்றியவர். 2007இல் போலீஸ் இவரை கைது செய்தது, 21 பொய் வழக்குகளை ஜோடித்தது. எனவே அரசுப்பணியில் இருந்து தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்டார். அவர் நீதிமன்றத்தை நாடினார். பின் தேதியிட்டு அவருக்கு ஊதியம் வழங்கவும் ஓய்வூதியம் வழங்கவும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது, ஆனாலும் அவருக்கு சேர வேண்டிய நிலுவைத்தொகை இன்னும் வரவில்லை.

“இது என் நிலம். இதைப்பாதுகாக்கும் உரிமை எனக்கு உள்ளது, அதைத்தான் செய்தேன். ஆனால் என்னை ஒரு கிரிமினல் போல் நடத்துகின்றார்கள்”  எனக் குமுறுகின்றார் ஒரு பெண்மணி.

“ஒரு ஜனநாயக நாட்டில் மக்களின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும். ஆனால் அரசு துப்பாக்கி முனையில் வளர்ச்சியை காண நினைக்கின்றது;  மக்களின் அதிருப்தியை வெளிப்படுத்துவதற்கோ வளர்ச்சி என்ற சொல்லுக்கு அரசு தரும் வியாக்ஞானத்தை விமர்சிப்பதற்கோ இங்கு இடமில்லை. ஒரிசா மாநிலமானது மிகப்பல பழங்குடியினர் போராட்டத்தின் தாயகமாக விளங்கும் ஒரு மாநிலம், இப்போதோ தமது நிலங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட வெகுமக்களின் போராட்டக்களமாக மாறிவிட்ட்துஎன்கின்றார் லோக்சக்தி அபியான் அமைப்பின் தலைவர் பிரஃபுல்ல சமாந்தாரா.

அடக்குமுறையைக் கையில் எடுக்கும் அரசுகள் என்ன செய்யுமோ (கூடங்குளத்தில் என்ன நடக்கின்றதோ) அதையே ஒரிசா அரசும் செய்கின்றது.  மாநிலத்தின் சில பகுதிகளை மாவோயிஸ்ட்டுக்கள் நிறைந்த பகுதி என்று அரசு அறிவித்துள்ளது, அப்பகுதிகளில் மக்கள் போராடும்போது வெகு எளிதாக அந்த மக்கள் இயக்கங்களை  மாவோயிஸ்டு இயக்கம் என்று அரசு முத்திரை குத்துகின்றது. டாங்கிரியா தலைவர் டோதி சிகோகா ‘தம் வாழ்வுரிமைக்காகப் போராடுகின்ற பழங்குடி மக்களை மாவோயிஸ்ட்டுக்களை ஒடுக்குகின்றேன் என்ற பெயரில் அரசு அடக்கி நசுக்கி சிறையில் அடைக்கின்றதுஎன்கின்றார்.

2011 ஜனவரி முதல் தேதியன்று ஜாஜ்பூர் மாவட்டத்தில் ஐந்து மாவோயிஸ்டுக்கள் கொல்லப்பட்டதாக போலீஸ் சொன்னது.  இதில் 14 வயது இளம்பெண்ணும் அடக்கம்.  இதேபோல் காசிப்பூர் மாவட்டம் கோரப்புட்டில் ஜனவரி 9 அன்று மாவோயிஸ்ட்டுக்கள் என்ற பெயரில் சாமானிய மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.  இவர்கள் சுரங்கம் வெட்டுவதை எதிர்த்த கிராம மக்களே என்பதை மனித உரிமை ஆர்வலர் குழுக்கள் ஆய்வு செய்து அறிவித்தனர்.

உள்நாட்டு வெளிநாட்டு ஏகபோகப்பெருமுதலாளிகளுக்கு இந்தியாவின் இயற்கை வளங்களை திருடுவதற்கு மட்டும் அல்ல; அமெரிக்க-ஐரோப்பிய நாடுகளில் காலாவதியாகி உள்ளூர்களில் பயன்படுத்துவதற்கு உள்ளூர் மக்களால் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்ட (கூடங்குளம்,ஜெய்தாப்பூர் போன்ற) தொழினுட்பங்களை இந்தியாவில் இறக்குமதி செய்வதற்கும் மத்தியில் இருக்கின்ற காங்கிரஸ் அரசும் அவ்வப்போது இருக்கின்ற பாரதீய ஜனதாக் கட்சியும் இந்தியாவின் கதவுகளை அகலத்திறந்து விடுகின்றார்கள்; இவர்களது கூட்டணிக்கட்சிகளோ (திமுக, அ இ அதிமுக, பாமக போன்றவை அல்லது அவற்றின் தலைவர்கள்) மத்தியில் கிடைக்கின்ற சில மந்திரி பதவிகளுக்காக கட்டியிருக்கின்ற வேட்டி, தாம் சார்ந்திருக்கின்றா மாநிலமக்களின் நலன் உட்பட எல்லாவற்றையும் அடகு வைக்கின்றார்கள்; தம் குடும்பத்தாரின் சொத்து கோடிகோடியாக வளரவும், இது போன்று இந்தியாவில் முதல்போடும் பன்னாட்டு தொழில் நிறுவன்ங்களில் தம் குடும்பங்களை முக்கிய பங்குதாரர்களாக ஆக்கவும் மட்டுமே கட்சியை (அல்லது கம்பெனியை) நடத்துகின்றார்கள்.  இவற்றுக்கு எதிராகப் போராடுகின்ற மக்களை தேசத்துரோகிகள், மாவோயிஸ்டுக்கள் என்றும் எளிதில் முத்திரை குத்துகின்றார்கள், பொய்வழக்குகளை ஜோடிக்கின்றார்கள்.

போஸ்கோவுக்கு எதிராகவும், வேதாந்தாவுக்கு எதிராகவும், மஹாராஷ்ட்ராவில் ஜெய்தாப்பூரிலும், தமிழகத்தில் கூடங்குளத்திலும் அணு உலைகளுக்கு எதிராக மக்கள் நடத்திக் கொண்டிருப்பதும், கேரளாவின் பிளாச்சிமடாவில் பெப்சிக்கு எதிராக உள்ளுர் மக்கள் நட்த்தியதும் ஏதோ அந்தந்த உள்ளூர் பிரச்னைகள் அல்ல; ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக அமெரிக்க-ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள்  ஆப்பிரிக்க, ஆசிய, லத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகளின் மக்கள் மீது தொடர்ந்து தொடுத்து வரும் சமூக-பொருளாதார முற்றுகைக்கும், பெருமுதலாளிகளின் படையெடுப்புக்கு’ (corporate invasion) எதிராகவும் ஆன மக்கள்போராட்டங்கள் இவை என்பதைப்புரிந்துகொள்வோம்.  இந்தியாவின் ஆளும் வர்க்கங்களுக்கு  எதிரான உடனடிப்போராட்டங்களாக இவை இருப்பினும் இப்போராட்டங்களின் மைய இலக்கு அமெரிக்க-ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களும் சர்வதேச கார்ப்பொரேட்டுக்களும்தான். இவற்றை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

(தி ஹிந்து ஆங்கில நாளிதழில் வந்த ஒரு கட்டுரையையும் பிற தகவல்களையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது)







வெள்ளி, மே 11, 2012

ஆசியாவின் மிகச்சிறந்த கதை சொல்லி



இன்றைக்கு சரியாக நூறு வருடங்களுக்கு முன் ஆசியாவின் மிகச்சிறந்த கதை சொல்லியான சாதத் ஹசன் மான்டோ இந்தியாவில் பிறந்தார். 43 வருடங்கள் மட்டுமே வாழ்ந்து ஒரு நாலாயிரம் வருடங்கள் மானுட இனம் வெட்கித்தலைகுனியத்தக்க யதார்த்தங்களை நம் முன் கதைகளாக விரித்துவைத்து விட்டு பிளவுபட்ட இந்தியாவின் மேற்குப்பகுதியில் (பாகிஸ்தான் என்று சொல்கின்றார்கள்) மறைந்தான். அவன் எழுத்தில் முஸ்லிம்களின் இந்துக்களின் சீக்கியர்களின் பார்சிகளின் குருதி வழிந்து வாசிப்பவனின் மடியையும் கண்களையும் நனைக்கின்றது.  தேசப்பிரிவினையின்போது நிகழ்ந்த கொடுமைகளை நமக்கு பதிந்துகொடுத்து சென்ற மான்டோ, டெல்லி, பம்பாய்,கோவை,கோத்ரா... நிகழ்வுகளின் போது அரூபமாக எட்ட நின்று நம்மைப்பார்த்து கைகொட்டி சிரிக்கின்றான், காறி உமிழ்கின்றான், அவன் கேலிச்சிரிப்பில் நாம் தோற்றுப்போகின்றோம். அவனது சிலவரிக் கதைகளில் மூன்று இங்கே...


1.       முன்னேற்பாடாக...

முதல் சம்பவம் அங்கே சாலைத்தடுப்பு அருகே நிகழ்ந்த்து. உடனடியாக அங்கே ஒரு போலீஸ்காரன் நிறுத்தப்பட்டான்.
அடுத்த நாளே பண்டகசாலை முன் மீண்டும் ஒரு சம்பவம் நடந்தது, உடனடியாக அந்த போலீஸ்காரன் அங்கே நிறுத்தப்பட்டான்.
மூன்றாவது சம்பவம் நள்ளிரவில் துணிவெளுக்கும் கடை அருகே நடந்தது.  இன்ஸ்பெக்டர் அதே போலீஸ்காரனை அங்கே காவலுக்கு செல்லுமாறு உத்தரவிட்டான்.  அவனோ சில நிமிடங்கள் யோசித்து இப்படி வேண்டினான்: “ஐயா, அடுத்த சம்பவம் எங்கே நடக்கப்போகின்றதோ அங்கே என்னை அனுப்புங்களேன்”.

2.       சலுகை

தயவுசெய்து என் இளம் மகளை என் கண் முன் கொல்லாதீர்கள்

“சரி, அவ்வாறே செய்வோம்! அவள் துணிகளை உருவிவிட்டு அவளை அந்தப்பக்கம் தள்ளிவிடுவோம்”.

3.       பரிதாபம்

கத்தி தொப்புளுக்கு கீழே இறங்கி அப்படியே வயிற்றை கிழித்தது, பெல்ட் அறுந்தது. குத்திக்கிழித்தவன் திடீரென கவலையுடன் கத்தினான், “ஐயோ! தப்புப்பண்ணிட்டேனே”.



செவ்வாய், பிப்ரவரி 14, 2012

காதல்

காதல்




ஆதாமோ ஏவாளோ
அவாளோ இவாளோ


கத்திரி வெயில் நடுநடுக்கும்
டிசம்பர் குளிர் சூடெடுக்கும்

குளிர்பானம் கதகதக்கும்
வெந்நீரோ குளிரடிக்கும்

நேற்று ஒதுக்கிய நிறமெல்லாம்
இன்றைக்குப் பிடித்துப்போகும்

ரசம் போன கண்ணாடியும்
நம் முகத்தை அழகாய் காட்டும்

கடைசி இருக்கையும் பல்லக்கு ஆகும்
கண்டக்டர் அண்ணனாவார்
வேகமாய் போய் சேர்ந்தால்
ஓட்டுநரோ எதிரியாவார்
எதிரியெல்லாம் நண்பனாவான்
அப்பனெல்லாம் எதிரியாவான்

திரையரங்கம் கோவிலாக
செல்போன் தெய்வமாகும்

அப்பன் பாட்டன் பூட்டனும்
சாத்திர சூத்திரங்களும்
காலங்காலமாய் கட்டி வைத்த
சாதிமத பேதமெல்லாம்
ஆவியாகி கரைந்துபோகும்

இதயம் + இதயம் மட்டுமே
இணைகின்ற ரசவாதம்
பூப்பந்தை புதுசாய் செய்யும்
காதலென்ற கெமிஸ்ட்ரியில்
மட்டுமே சாத்தியமாகும்!

ஆதலால், இளைஞர்களே,
காதலிப்பீர், காதலிப்பீர்!
........................................

ஞாயிறு, ஜனவரி 15, 2012

சொல்லப்படாத ஒரு பொங்கல் வாழ்த்தும் வழி பிறக்காத ஒரு தையும்



தை பிறந்தால் வழி பிறக்குமாமே?

வழக்கம்போல இன்றும் பொங்கல் வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டோம். பொங்கல் வாழ்த்துக்கள், ஹாப்பி பொங்கல்....இப்படி. சரிதான். இன்று காலை பொங்கலில் முந்திரி உங்கள் வாயில் தட்டுப்பட்டதா? உடனடியாக கடலூரில் நிர்க்கதியாக நிற்கும் முந்திரிவிவசாயி உங்கள் நினைவுக்கு வந்தானா? ‘இல்லை’ என்று நீங்கள் சொன்னால்....சங்கடம்தான் நண்பரே! தானே புயல் கடலூர்,பண்ருட்டி மக்களை ஒரு 25 வருடம் பின்னால் தள்ளியுள்ளது. நேற்று சன் டிவியில் நேரடி ஒளிப்பதிவில் ஒரு விவசாயி சொன்னார்: ‘இது எங்களுக்கு மரணப்பொங்கல்’. உண்மைதான்.  இப்போது கடலூரில் எந்த ஒரு விவசாயியிடமும் விதை முந்திரி இல்லை, எடுத்து வைக்கவில்லை என்று சொன்னார் அவர். தானே புயலில் ஒரு முந்திரி மரம் கூடத்தப்பாது என்று எந்த விவசாயிதான் நினைத்திருப்பான்! பலா மரங்களின் கதியும் அதேதான். ஒரு பலாமரம் கூட இப்போது அங்கே உயிரோடு இல்லை. இன்று விதைத்தாலும் மீண்டும் ஒரு முந்திரியை ஒரு பலாச்சுளையைப் பார்க்க குறைந்தது 20 வருடங்கள் ஆகுமாம். ஆக முந்திரி, பலா விவசாயம் மட்டுமே தெரிந்த,இப்போது ஒண்ணும் செய்யத்தெரியாத கடலூர் பண்ருட்டி மக்கள், நாகப்பட்டினம் புதுச்சேரி மக்கள் அடுத்த வேளை சோத்துக்கு வழியில்லாமல் இதே தமிழகத்தில் இன்று காலை என்ன பொங்கல் வைத்திருப்பார்கள்? எந்த சூரியனை கும்பிட்டிருப்பார்கள்? இன்று நாம் பரிமாறிக்கொண்ட ’ஹாப்பி பொங்கல்’ யாருக்கு? விதைத்து அறுத்தவன் விதை நெல்லும் விதை முந்திரியும் கூட இல்லாமல் வீதியில்  நிற்க உண்டு கொழுத்த நமக்குத்தானே ‘ஹாப்பி பொங்கல்’? குறைந்த பட்சம் இன்று பெரியவர்களாகிய நாம் நம் பிள்ளைகளுக்கு இப்படி ஒரு நான்கு, ஐந்து மாவட்டங்களில் உள்ள தமிழர்கள் பொங்கல் கொண்டாட வக்கற்று இருப்பதையாவது சொன்னோமா?

ஏற்கனவே 3 லட்சம் விவசாயிகளுக்கும் மேல் தற்கொலை செய்துகொண்ட தேசம் இந்த தேசம். எந்த தேசம்? இந்தியா ஒரு விவசாய நாடு என்று சொல்கின்றோமே, அதே தேசத்தில்தான். விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டார்கள் என்று நாம் சொல்வதும் ஒரு கிரிமினல் தந்திரமே! அவர்களை தற்கொலைக்கு தூண்டியது இந்த தேசத்தின் ஆளவந்தார்களும் நாமும்தானே! குற்றவாளிகளாகிய நாம் சொல்கின்றோம் விவசாயிகள் தற்கொலை செய்கின்றார்களாம்! எப்படியான தேசம் இது? விளை நிலங்களை அரசே ஃப்ளாட் போட்டு விற்கும் தேசம்; வெளிநாட்டுக்கம்பெனிகள் லாபம் சம்பாதிக்க தொழிற்சாலை கட்ட இந்தியவிவசாயிகளின் விளைநிலங்களில் இருந்து அவர்களை இந்திய அரசே வெளியேற்றும் தேசம்; மீறினால் சோறுபோட்ட விவசாயிகளின்மீது துப்பாக்கி சூடு நடத்தும் தேசம். விதர்ப்பாவிலும் புனாவிலும் அதைத்தான் பார்த்தோம். விவசாயிகளைக் கொன்றுபோட்டுவிட்டு ஹாப்பி பொங்கல் சொல்லும் ஆட்சியாளர்களும் அதை மவுனமாக ஆமோதிக்கும் நாமும் இந்த தேசமும் உருப்படுவோமா? இப்படி ஒரு கொடுநிலை தமிழகத்திலும்...?

தை பிறந்தது தமிழகத்தில், கடலூர் பண்ருட்டி நாகப்பட்டினம் புதுச்சேரி நீங்கலாக...விதர்ப்பா புனா நீங்கலாக.

திரைக்கலைஞர் நாசர் ஒரு டிவி சானலுக்கு பொங்கல் பேட்டியில் பொங்கல் வாழ்த்து சொல்ல மறுத்துவிட்டார், அதன் பதிவு இணைப்பை இங்கே தருகின்றேன், பாருங்களேன். அவர் சொல்லாத வாழ்த்துத்தான் உண்மையில் இந்த பொங்கலின் உண்மையான வாழ்த்தாக எனக்குப்படுகின்றது! 
http://www.youtube.com/watch?v=W1Rp9nUB4zM

ஞாயிறு, ஜனவரி 01, 2012

விந்திய இமாசல யமுனா கங்கா...


  1)    அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள ஆம்பிட் (Ambit) என்ற கார்பொரேட் கட்டிடத்திற்குள் இன்று (31.12.2011) பிற்பகல் நுழைய வேண்டிய கட்டாயம் நேரிட்டது. அது மிகப்பெரிய கட்டடம். தரைத்தளத்தில் சரவணபவன் உள்ளிட்ட உணவகங்கள் உள்ளன, நான் சென்றது சாப்பிட மட்டுமே. உள்ளே சென்ற பிறகுதான் தெரிந்தது, அது ஒரு மால் கலாச்சார (mall culture) அல்லது கார்பொரேட் கலாச்சார  உணவக தளம் என்று. புரியவில்லையா? நீங்கள் ஒரு உணவகத்துக்கு சென்றால் அங்கே உணவோடு குடிநீரும் தரப்படும், அதாவது குடிநீரும் உணவின் ஒரு பகுதி, அதற்கும் சேர்த்துத்தான் பணம் உங்களிடம் இருந்து பெறப்படுகின்றது. சென்னையில் உள்ள மால்களில் (நான் அரும்பாக்கத்தில் உள்ள அம்பா மாலுக்கு இரண்டு முறை சென்றுள்ளேன்) உள்ள உணவகங்களில் நீங்கள் நுழைந்தால் (பாவம், ஒரு நாளைக்கு 32 ரூபாய் வருமானம் மட்டுமே உள்ள மாண்டே சிங் அலுவாலியா போன்றவர்களால் இங்கே நுழைய முடியாது) அங்கே தண்ணீர் தனியாக காசு கொடுத்து வாங்க வேண்டும், அதுவும் வெளியே ஒரு பாட்டில் 15, 16 ரூபாய்க்கு விற்பது இங்கே 20க்கு குறையாது.  இந்த ஆம்பிட் உணவக தளத்திலும் இதுதான் நடந்தது! குடிக்க 20 ரூபாய் கொடுத்து தனியே தண்ணீர் வாங்கினேன்!
 2) எந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை இது? ஒரு காலத்தில் திரும்பிய திசையில் எல்லாம் எந்திரங்களின் சத்தமும் தொழிலாளர்களின் நடமாட்டமும் 24 மணி நேரமும் கேட்டுக்கொண்டிருந்த தொழிற்பேட்டை! அதாவது மனிதனுக்கும் எந்திரங்களுக்கும் ஆன ஒரு உறவும் உற்பத்தியும் நடந்து, அதன் மூலம் பல ஆயிரம் குடும்பங்கள் வாழ்ந்த தொழிற்பேட்டை. ஆசியாவின் மிகப்பெரிய தொழிற்பேட்டையாக இருந்தது அது!  இன்று... ஒரு சில, மிக சில தொழிற்சாலைகள் தவிர அனேகமாக மற்ற அனைத்தும் மூடப்பட்டு, மூடிய தொழிற்சாலைகளில் மென்பொருள், கணிப்பொறி தொடர்பான கார்ப்பொரேட் கம்பெனிகள் ஆக்கிரமித்துள்ளன.  வெறும் கம்ப்யூட்டர் போதும், உலகம் வாழ்ந்துவிடும் என்று பிரம்மையின் பின்னே ஓடும் இளைஞர்கள் திரும்பிய திசை எங்கும்! தங்களை அமெரிக்கர்களாக, பிரிட்டிஷ்காரர்களாக நினைத்துக்கொண்டு திரியும் தமிழர்களின் பிள்ளைகள்! தமிழ் பேசிய தொழிலாளர்கள் அலைந்து திரிந்த இடங்களில் இன்று வலிந்து பேசப்படும் ஆங்கிலம்! தொழிற்சங்கங்கள், வாயிற்கூட்டங்கள், ‘தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக!என்று ஆக்ரோசமான முழக்கங்கள் கேட்ட வீதிகளில் ‘தொழிற்சங்கமா? உஷ்! அது கெட்ட வார்த்தைஎன்று போதிக்கின்ற மென்பொருள் நிறுவனங்கள்! ‘உன் சக நண்பனோடு சினிமாவுக்குப்போ, ‘பப்புக்கு போ, வீக் எண்ட் பார்ட்டிக்கு போ, ஆனால் அவன் ஊதியத்தை நீ கேட்பதே தவறு!என்று போதிக்கின்ற கார்ப்பொரேட் கலாச்சாரம்! ஒரு பைசா கூலி உயர்வும், ஒரு ரூபாய் போனசும் கூட தம் உரிமை என்று தொழிலாளர்கள் முழங்கிய, அதற்காக கூட்டங்களும் உண்ணாவிரதங்களும் இன்னபிற போராட்டங்களும் நடந்த அதே தொழிற்பேட்டையில்தான் குடிநீரும் தான் உண்கின்ற உணவின் ஒரு பகுதி, அதற்கும் சேர்த்தே நான் காசு கொடுக்கின்றேன், ஆனால் எனக்கு அது தரப்படவில்லையே! என்ற சுரணை துளியளவும் இன்றி அங்கே கூட்டம் கூட்டமாக இளைஞர்கள் உட்கார்ந்து ஆங்கிலத்தோடு உணவையும் மென்பொருளாக மென்று விழுங்கிக் கொண்டிருந்த கொடுமையை என்னென்று சொல்ல!
  
  3)    பொலிவியா. மத்திய தென் அமெரிக்கக் கண்டத்தில் உள்ள வறுமை மிகு நாடு. 1985இல் அதன் பணவீக்கம் 25,000%! கேடுகெட்ட அயோக்கிய ஆட்சியாளர்களின் கடைசிப்புகலிடமான உலகவங்கியை பொலிவிய ஆட்சியாளர்களும் நாடினார்கள். உலகவங்கி என்ற ஓநாய் ‘வந்தியா மாப்ளே!என்று போட்ட நிபந்தனைகளின் படி பொலிவியாவின் ரயில்வே, தொலைபேசி, விமானப்போக்குவரத்து, பெட்ரோலியம் என கேந்திரமான அனைத்து அரசுத்துறைகளும் தனியார் கையில் தாரைவார்க்கப்பட்டன.  இது போதாது என்று உச்சகட்டமாக ஒரு கட்டளை இட்டது உலகவங்கி. ‘லா பாஸ் (La Pas), கொச்சபம்பா (Cochabamba) ஆகிய ஊர்களின் இயற்கை நீர் வளங்களை அதாவது ஆறு, குளம் எல்லாவற்றையும் தனியார் கம்பெனிகளுக்கு கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. பெக்டெல் (Bechtel) என்ற அமெரிக்க கம்பெனியின் துணை நிறுவனமான International Water Limited (தண்ணீருக்கு லிமிட்!) என்ற கம்பெனியின் கீழ் Aguas  del Tunari என்ற உள்ளூர் கம்பெனிக்கு பொலிவியாவின் நீர்வளம் 40 வருட குத்தகைக்கு விடப்பட்டது! பெக்டெலுக்கு இந்த காண்ட்ராக்ட் உலகவங்கியின் நிர்ப்பந்தத்தால் கிடைத்தது.  கொச்சபம்பாவில் வசித்த அமெரிக்க குடிமகனான ஜிம் ஷுல்ட்ஸ் என்பவர் ஜனநாயக மையம் (Democracy Centre) என்ற அமைப்பை நடத்தினார். அவர் சொன்னது: “யேசுவை, முகம்மது நபியை, மோசசை, புத்தரை எப்படி சாமானிய மக்கள் நம்புகின்றார்களோ அதேபோல் ‘தனியார்மயம்என்பதை உலகவங்கியின் நீர் நிர்வாக அதிகாரிகள் நம்புகின்றார்கள்”. ("Bank water officials believe in privatization - the way other people believe in Jesus, Mohammed, Moses, and Buddha," says Jim Schultz).   இதற்கான ஒரு பிரத்தியேகமான சட்டத்தையே (Law 2029) அரசு இயற்றியது.  ஒரு மாதத்திற்கு சராசரி வருமானம் 70 டாலர் மட்டுமே சம்பாதித்துக் கொண்டிருந்த பொலிவிய மக்கள் அதில் இருபது டாலரை தண்ணீருக்காக செலவு செய்ய வேண்டிய கொடுமை ஏற்பட்டது. வீட்டின் கூரை மேல் விழும் மழைத்தண்ணீரை சேமிக்கவும் லைசன்ஸ் வாங்க வேண்டும் என்கின்ற அளவுக்கு கொடுமை உச்சத்தை தொட்டது. விளைவு, மக்கள் அரசுக்கும் பெக்டெலுக்கும் உலகவங்கிக்கும் எதிராக வீதிகளில் திரண்டனர். விவசாயிகள், தொழிலாளர்கள், படிப்பாளிகள், அறிவுஜீவிகள் என ஒன்றுதிரண்டு Coordinator for the Defense of Water and Life என்ற அமைப்பை நிறுவினார்கள். La Coordinadora என்ற மத்திய போராட்ட அமைப்பு ஆஸ்கார் ஆலிவேரா என்பாரின் தலைமையில் அமைக்கப்பட்டது.  பல்வேறு கட்டப்போராட்டங்களில் மக்கள் போலீசுடனும் ராணுவத்துடனும் நேரடியாக மோதினார்கள். பலர் துப்பாக்கிசூட்டில் இறந்தார்கள்.  குறிப்பாக ஏப்ரல் 2000இல் கிளர்ச்சி வலுத்தது, வேலைநிறுத்தங்கள் நடந்தன, ஐந்து லட்சம் மக்கள் கொண்ட கொச்சபம்பாவில் முழு அடைப்பு நடந்தது. பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்து போராட்ட தலைவர்களை வஞ்சகமாக சிறையில் அடைத்தது அரசு.  பலரை பிரேசில் எல்லை அருகே அமேசான் மழைக்காட்டு பிரதேசமான சான் ஜோவோக்வின் என்ற காட்டுப்பகுதியில் சிறை வைத்த்து.  மக்கள் கம்புகளையும் கற்களையும் துணிகளையும் ஏந்தி வீதிகளில் போலீசின் துப்பாக்கிசூடு, கண்ணீர்ப்புகையை சந்திக்க திரண்டார்கள்.  மறுநாள் காலையில் பல தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள். மீண்டும் அன்று மாலை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது அரசு. ஆனால் அரசுத்தரப்பில் யாரும் வராமல் காலம் கட்த்தினார்கள். பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தராக இருந்த ரோமன் கத்தோலிக்க பிஷப் திடீர் என்று  வந்து, ‘அரசு பெக்டெல் கம்பெனியுடன் ஆன ஒப்பந்த்த்தை முறித்துக் கொள்ள முடிவு செய்திருப்பதாகஅறிவித்தார்.  “ஒரு முக்கியமான பொருளாதார வெற்றியை நாம் இக்கணத்தில் ஈட்டியுள்ளோம்!என ஆஸ்கர் ஆலிவேரா மக்கள் கூட்டத்தில் பிரகடனம் செய்தார்.

4)     குடிமக்களுக்கு சுத்தமான குடிநீர், மருத்துவம், கல்வி ஆகியனவற்றை இலவசமாக தருவது அரசின் அடிப்படைக் கடமை என்ற மனிதநேயமிக்க கொள்கையை உலகவங்கி, சர்வதேச நிதிநிறுவனம் (IMF) ஆகிய அமெரிக்க நலன் காக்கும் அமைப்புக்கள் மறுக்கின்றன, எதுவும் இலவசம் இல்லை, இயற்கையில் கிடைக்கும் தண்ணீரைக் கூட அரசு தராது, நீ காசு கொடுத்து வாங்கு!என மூன்றாம் உலக நாடுகளின் மக்களுக்கு கட்டளை இடுகின்றன. இந்தியாவில் அமெரிக்க, உலகவங்கி, IMF அடிமைகளான மன்மோகன் சிங், ப.சிதம்பரம், மாண்டேக் சிங் போன்றவர்கள் இந்தக் கட்டளைகளை சிரமேல் ஏற்றுக்கொண்டு நிறைவேற்றுகின்றார்கள். LPG என்று இன்று அறியப்படும்  Liberalisation, Privatisation, Globalisation  ஆகிய பாதகங்களை நடைமுறைக்கு கொண்டுவந்தது இந்த கும்பலே. விளைவாக விவசாய நாடான இந்தியாவில் விவசாயிகள் லட்சக்கணக்கில் தற்கொலை செய்து கொள்வதை இந்த கும்பல் மனச்சாட்சி சற்றும் வலிக்காமல் வேடிக்கை பார்க்கின்றது; இக்கும்பலின் கொலைபாதக்க் கொள்கைகளின் விளைவாக சிறுதொழில்கள், விவசாயம் யாவும் அழிக்கப்படுகின்றன; வெளிநாட்டுக்கம்பெனிகள் இங்கே அனுமதிக்கப்படுகின்றன, உள்நாட்டுத்தொழில் அழிக்கப்படுகின்றது. தொடக்கத்தில் சொன்ன அம்பத்தூர் தொழிற்பேட்டையும் இந்த அழிவுக்கு நம் கண் முன்னே உள்ள ஆகப்பெரும் சாட்சி.  அந்நியக்கம்பெனிகளுடன் அந்நியக் கலாச்சாரமும் நுழைய, நம் முன்னோர்கள் ஆகப்பெரும் உயிர் தியாகங்கள் செய்து நமக்கு ஈட்டித்தந்த தொழிற்சங்க உரிமைகள் சவக்குழியில் புதைக்கப்படுகின்றன, இப்படியான உரிமைகள் இருக்கின்றன என்பதே தெரியாத, சமூக அக்கறை சிறிதும் இல்லாத, தேசப்பற்று என்றால் என்ன என்று கேட்கும் ஒரு தலைமுறை - ஒரு கார்ப்பொரேட் மென்பொருள்  தலைமுறை – வளர்ந்து கொண்டு இருக்கின்றது. ‘இப்படியான இயற்கையில் கிடைக்கும் ஒரு பொருளை-தண்ணீரை- காசு கொடுத்து வாங்க வேண்டுமா?என்ற சாதாரண அடிப்படைக்கேள்வியைக் கூட தனக்குத்தானே கேட்டுக்கொள்ளவும் தெரியாத ஒரு தலைமுறை வளர்ந்து நிற்கின்றது; இத்தலைமுறைதான் இருபது ரூபாய் கொடுத்து தண்ணீர் வாங்குவது நியாயம்தானே?என்று எண்ணவும் தலைப்பட்டுள்ளது.

5) அடிப்படைக்கல்வியை அரசாங்கமே வியாபாரமாக ஆக்கியுள்ள நிலையில், கல்வி கற்பதே சம்பாதிக்கவும் ஆடம்பர வாழ்க்கை வாழத்தேவையான பொருள் சேர்க்கவும் ‘சந்தோசமாகவாழ்க்கையை வாழவும் என்று இன்றைய தலைமுறை நினைத்தால் தவறு யார் பக்கம்? மனிதனை மனிதனாகப் பார்க்க கற்றுத்தராத, தன் போன்ற சகமனிதர்களின் கூட்டத்தால் ஆனதே இந்த சமூகம் என்ற அடிப்படைப் பார்வையை உருவாக்காத, சக மனிதனின் வலியை என்ன என்றாவது கேட்க வேண்டும் என்ற உணர்வைக் கூடத்தராத, காசு கொடுத்தால் எது வேண்டுமானாலும் கிடைக்கும், இதில் கேள்வியெல்லாம் எதற்கு என்று மனிதனின் சூடு சுரணையை மழுங்கடிக்கும்  இந்தக் கல்வியும் கல்வி கற்பிக்கும் இந்த அமைப்பும் யாருக்கு வேண்டும்? 

6)   இப்புதிய ஆண்டில் குரு ரபீந்திரநாத் தாகூர் அவர்களின் ஜன கண மன... பாடலின் தமிழாக்கத்தை இங்கே தந்து முடிக்கின்றேன் (மனக்குமுறலோடு)...


          மக்கள் பெருங்கூட்டத்தின் மனத்தில் ஆட்சி செய்பவள் நீ தான்.      
     வெற்றி உனக்கே !
இந்தியத் திருநாட்டின் பாக்கியங்களைத் தருபவள் நீ..
பஞ்சாப் மாகாணம், சிந்து நதிப்பிரதேசம், குஜராத் மாநிலம், மராட்டிய மாநிலம்,
திராவிட பீடபூமி, உத்கலமாகிய ஒரிஸ்ஸா மாநிலம், வங்காள (பங்கா) தேசம் உன்னுடையது ..
விந்திய இமாசல யமுனா கங்கா
மூன்று திசைகளிலும் உன்னைச் சூழ்ந்திருக்கும் மாக்கடல்கள் உன் புகழை தங்கள் அலைக் கரங்களால் எப்போதும் பாடிக் கொண்டிருக்கின்றன..
உனது மங்கலகரமான திருநாமத்தை எப்போதும் நாங்கள் பாடிப் போற்றிக் கொண்டிருக்கிறோம்.,
உனது மங்கலகரமான ஆசிகளை வேண்டி நிற்கின்றோம்.,
உன்னுடைய மாபெரும் வெற்றியை வேண்டியே நாங்கள் பாடிக்கொண்டிருக்கிறோம்..
இந்திய மக்களின் மங்கலங்களை அள்ளித் தருபவள் நீ.

வெற்றி உனக்கே!
இந்தியத் திருநாட்டின் பாக்கியங்களைத் தருபவள் நீ..
வெற்றி உனக்கே! வெற்றி உனக்கே! வெற்றி உனக்கே!
வெற்றி! வெற்றி!! வெற்றி!!! வெற்றி உனக்கே!