ஞாயிறு, ஜனவரி 15, 2012

சொல்லப்படாத ஒரு பொங்கல் வாழ்த்தும் வழி பிறக்காத ஒரு தையும்



தை பிறந்தால் வழி பிறக்குமாமே?

வழக்கம்போல இன்றும் பொங்கல் வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டோம். பொங்கல் வாழ்த்துக்கள், ஹாப்பி பொங்கல்....இப்படி. சரிதான். இன்று காலை பொங்கலில் முந்திரி உங்கள் வாயில் தட்டுப்பட்டதா? உடனடியாக கடலூரில் நிர்க்கதியாக நிற்கும் முந்திரிவிவசாயி உங்கள் நினைவுக்கு வந்தானா? ‘இல்லை’ என்று நீங்கள் சொன்னால்....சங்கடம்தான் நண்பரே! தானே புயல் கடலூர்,பண்ருட்டி மக்களை ஒரு 25 வருடம் பின்னால் தள்ளியுள்ளது. நேற்று சன் டிவியில் நேரடி ஒளிப்பதிவில் ஒரு விவசாயி சொன்னார்: ‘இது எங்களுக்கு மரணப்பொங்கல்’. உண்மைதான்.  இப்போது கடலூரில் எந்த ஒரு விவசாயியிடமும் விதை முந்திரி இல்லை, எடுத்து வைக்கவில்லை என்று சொன்னார் அவர். தானே புயலில் ஒரு முந்திரி மரம் கூடத்தப்பாது என்று எந்த விவசாயிதான் நினைத்திருப்பான்! பலா மரங்களின் கதியும் அதேதான். ஒரு பலாமரம் கூட இப்போது அங்கே உயிரோடு இல்லை. இன்று விதைத்தாலும் மீண்டும் ஒரு முந்திரியை ஒரு பலாச்சுளையைப் பார்க்க குறைந்தது 20 வருடங்கள் ஆகுமாம். ஆக முந்திரி, பலா விவசாயம் மட்டுமே தெரிந்த,இப்போது ஒண்ணும் செய்யத்தெரியாத கடலூர் பண்ருட்டி மக்கள், நாகப்பட்டினம் புதுச்சேரி மக்கள் அடுத்த வேளை சோத்துக்கு வழியில்லாமல் இதே தமிழகத்தில் இன்று காலை என்ன பொங்கல் வைத்திருப்பார்கள்? எந்த சூரியனை கும்பிட்டிருப்பார்கள்? இன்று நாம் பரிமாறிக்கொண்ட ’ஹாப்பி பொங்கல்’ யாருக்கு? விதைத்து அறுத்தவன் விதை நெல்லும் விதை முந்திரியும் கூட இல்லாமல் வீதியில்  நிற்க உண்டு கொழுத்த நமக்குத்தானே ‘ஹாப்பி பொங்கல்’? குறைந்த பட்சம் இன்று பெரியவர்களாகிய நாம் நம் பிள்ளைகளுக்கு இப்படி ஒரு நான்கு, ஐந்து மாவட்டங்களில் உள்ள தமிழர்கள் பொங்கல் கொண்டாட வக்கற்று இருப்பதையாவது சொன்னோமா?

ஏற்கனவே 3 லட்சம் விவசாயிகளுக்கும் மேல் தற்கொலை செய்துகொண்ட தேசம் இந்த தேசம். எந்த தேசம்? இந்தியா ஒரு விவசாய நாடு என்று சொல்கின்றோமே, அதே தேசத்தில்தான். விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டார்கள் என்று நாம் சொல்வதும் ஒரு கிரிமினல் தந்திரமே! அவர்களை தற்கொலைக்கு தூண்டியது இந்த தேசத்தின் ஆளவந்தார்களும் நாமும்தானே! குற்றவாளிகளாகிய நாம் சொல்கின்றோம் விவசாயிகள் தற்கொலை செய்கின்றார்களாம்! எப்படியான தேசம் இது? விளை நிலங்களை அரசே ஃப்ளாட் போட்டு விற்கும் தேசம்; வெளிநாட்டுக்கம்பெனிகள் லாபம் சம்பாதிக்க தொழிற்சாலை கட்ட இந்தியவிவசாயிகளின் விளைநிலங்களில் இருந்து அவர்களை இந்திய அரசே வெளியேற்றும் தேசம்; மீறினால் சோறுபோட்ட விவசாயிகளின்மீது துப்பாக்கி சூடு நடத்தும் தேசம். விதர்ப்பாவிலும் புனாவிலும் அதைத்தான் பார்த்தோம். விவசாயிகளைக் கொன்றுபோட்டுவிட்டு ஹாப்பி பொங்கல் சொல்லும் ஆட்சியாளர்களும் அதை மவுனமாக ஆமோதிக்கும் நாமும் இந்த தேசமும் உருப்படுவோமா? இப்படி ஒரு கொடுநிலை தமிழகத்திலும்...?

தை பிறந்தது தமிழகத்தில், கடலூர் பண்ருட்டி நாகப்பட்டினம் புதுச்சேரி நீங்கலாக...விதர்ப்பா புனா நீங்கலாக.

திரைக்கலைஞர் நாசர் ஒரு டிவி சானலுக்கு பொங்கல் பேட்டியில் பொங்கல் வாழ்த்து சொல்ல மறுத்துவிட்டார், அதன் பதிவு இணைப்பை இங்கே தருகின்றேன், பாருங்களேன். அவர் சொல்லாத வாழ்த்துத்தான் உண்மையில் இந்த பொங்கலின் உண்மையான வாழ்த்தாக எனக்குப்படுகின்றது! 
http://www.youtube.com/watch?v=W1Rp9nUB4zM

4 கருத்துகள்:

manichudar blogspot.com சொன்னது…

நிச்சியமாய் இந்த உணர்வுக்கு தலை வணங்குகிறேன். இந்த பதிவை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

தென்காசித் தமிழ்ப் பைங்கிளி சொன்னது…

உண்மைதான் வருதப்பட வேண்டிய விசயம்தான்.மன்னிக்கவும்,2004 டிசம்பரில் சுனாமி வந்தபோது ஜனவரியில் கடல் அல்லாத பகுதிகள் அனைத்து மக்களும் பொங்கல் சிறப்பாக கொண்டாடினார்கள் நண்பரே...அப்போதும் இதே போல் என்ன பொங்கல் கொண்டாட்டம் என்று பேசப்பட்டது.அப்போது ,இணையம் பயன்படுத்துபவர்கள் குறைவு.அவ்வளவு பரபரப்பாக பேச வாய்ப்புகள் இல்லை.இப்பொது இருக்கிறது பேசுகிறோம்.நாம் ஒருவர் கவலைப்பட்டு என்ன நடக்கும்?அனைத்து மக்களுமே நினைத்து உதவ முன் வரவேண்டும்.

kashyapan சொன்னது…

நண்பரே! " தானே" புயல் கடலூர் வழியாக தரை கடக்கும் என்று வானிலை அறிக்கை வந்தபிறகும் நிர்வாகம் எதைப் புடுங்கிக் கொண்டிருந்தது?---காஸ்யபன்

veligalukkuappaal சொன்னது…

1) மணிச்சுடர், பைங்கிளி, மூத்த தோழர் காஷ்யபன் அனைவருக்கும் நன்றி.இருளும் ஒளியும் மாறி மாறி வருவது போல துன்பமும் இன்பமும் இணைந்து செல்வதே வாழ்க்கை, இயற்கையின் இயக்கவியல். எனது ஆதங்கத்தின் வெளிப்பாடே இது. நிஜங்களின் வெக்கையில் இருந்து துன்புறுத்தலில் இருந்து நம்மை திசை திருப்ப எத்தனை எத்தனை ஜோடனைகள், கயவாளித்தனங்கள்! நம் வீட்டுக்குள்ளேயே வந்து நம்மை முட்டாளாக்கும் தொலைக்காட்சி நிகழ்வுகளில் இந்த மூன்று நாட்களும் தமிழர் திருநாளும் இல்லை, உழவர் திருநாளும் இல்லை! நோக்கும் திசையெல்லாம் சினிமாவும் சினிமா நடிகர்களும் அன்றி வேறில்லை! இந்த லட்சணத்தில் கடலூரையும் நாகப்பட்டினத்தையும் புதுச்சேரியையும் யார் நினைவில் கொள்ள? பத்தோடு பதினொன்று அத்தோடு இதுவும் ஒன்று! கொலவெறி பாட்டு (?) வெற்றி பெற ராசிக்கட்டம் ஜாதகம் நட்சத்திரம் எல்லாம் எப்படி உதவி செய்தன என்று ஒரு நிகழ்ச்சியாம்! அட மானங்கெட்டவர்களே! கடலூரும் நாகப்பட்டினமும் 20 வருடங்கள் பின்னால் போயின எனில் தமிழனின் அறிவும் பகுத்தறிவும் 100 வருடங்கள் அல்லவா பின்னால் போயுள்ளன!

2) தோழர் காஷ்யபன்! அரசு நிர்வாகம் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்று அனைத்து தரப்பிலும் குற்றச்சாட்டு உள்ளது. இப்போது பொங்கல் வாழ்த்துக்களை புடுங்கி நட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.