சனி, நவம்பர் 19, 2011

கலயத்தில் உறங்கும் சாம்பலும் ஒரு ஜோடி காலணிகளும்-1


(2008 நவம்பர் மாதம் பாகிஷ்தானில் இருந்து கடல் வழியாக மும்பையில் நுழைந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியது குறித்து புதுவிசை ஜனவரி-மார்ச் 2009 இதழில் எழுதிய கட்டுரை)



(நமது மக்கள் அப்பாவிகள். தீவிரவாதிகள் என்றால் கறுப்பு நிறத்துடன், சவரம் செய்யப்படாத முகத்துடன், முக்கியமாக தாடியுடன், அழுக்கு உடையுடன், கையில் ஏ.கே.47 துப்பாக்கி, மார்பில் சுற்றப்பட்ட தோட்டா மேகசைன், கழுத்தில் சயனைடு குப்பியுடன், உருது பேசுபவனாக இருப்பதாகவே நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். தீவிரவாதிகள் வெள்ளை நிறத்துடன், சுத்தமாக சவரம் செய்யப்பட்டு அழகாக, (முந்தைய ஒன்றுபட்ட இந்தியாவின்) லாஹூர் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றவனாக, இலக்கணம் தப்பாமல் ஆங்கிலம் பேசுபவனாக, முன்னாள் துணைப்பிரதமர்களாக, நாடாளுமன்ற எதிர்க்கட்சித்தலைவராக, எதிர்கால பிரதமர் கனவுகளுடன் அதிக பட்ச இசட் பிரிவு போலீஸ் பாதுகாப்புடன் வலம்வருபவர்களாகவும் இருக்கின்றார்கள் என்பதை நம் மக்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டியிருக்கின்றது)
மீண்டும் ஒரு முறை உலகளாவிய பயங்கரவாதம் பற்றி வாய் ஓயாது பேசிச்சலித்தாகி விட்டது. கூடவே யாரும் சந்தேகப்பட்டுவிடாமல் இருக்க மறக்காமல் தேஷ்பக்தியைப் பற்றியும் உணர்ச்சிவசப்பட்டு முழங்கி, "அரசியல்வாதிகளையெல்லாம் சுட்டுக் கொல்லணும்பா, பாரு, வரிக்கட்டுறோம், ஆனா உசிருக்கு பாதிகாப்பு இல்லே, இனிமே எதுக்கு வரிக்கட்டணும்?" போன்ற தேஷ்பக்த வாதங்களை முன்வைத்த திருவாளர் மிடில்கிளாஷ், வழக்கம் போல் டி.வி. பார்த்து, "சூப்பரா பாலைத் தூக்குனாம் பாரு, நான் நினச்சமாறியே சிக்சர்...ஆனா அநியாயமா அவுட்டானாம்பா.." என்று சாராயவியாபாரி விஜய்மல்லையாவின் குதிரை லாயத்தில் புதிதாகக் கட்டப்பட்ட கிரிக்கெட் குதிரைகளின் இரண்டுகால் பாய்ச்சல் பற்றி சிலாகித்து புழகாங்கிதம் அடைந்து மல்லாக்கப்படுத்து தூங்கப் போய்விட்டார்.
நான் சொல்ல வருவது 'இந்தியத்தொலைக்காட்சிகளில் முதல்முறையாக நேரடியாக ஒளிபரப்பப்பட்ட 66 மணிநேர பயங்கரவாதம்' பற்றித்தான் என்று நீங்கள் ஊகித்திருந்தால் அடுத்த மாத கேபிள் டி.வி.சந்தாவை உங்களுக்காக நான் கட்டுவேன். அது பயங்கரவாதமா கிரிக்கெட்டா என்று குழப்பம் வருகிற அளவுக்கு சி.என்.என். நேரடி ஒளிபரப்பில் கீழ்மூலையில் ஸ்கோர் போடப்பட்டது. இறுதியாக 10 பயங்கரவாதிகள் சேர்ந்து 183 கொலைகள் செய்ததாக இறுதி ஸ்கோர் காட்டியது. இப்படி நான் சொல்வதால் பயங்கரவாதமும் கிரிக்கெட்டும் ஒன்றா என்று நீங்கள் கேள்வி கேட்டால், என் உறுதிமொழி வாபஸ், நான் கிரிக்கெட்டின் தாய்வீடான இங்கிலாந்தின் பிரதமரைக் கேட்டுத்தான் பதில் சொல்ல முடியும், அது வரை நீங்கள் காத்திருக்கலாம்.
நவம்பர் 26ஆம் தேதி இரவு 1030 மணிக்கு மும்பை சத்ரபதி சிவாஜி ரயில்வே ஸ்டேஷனில் நுழைந்த இரண்டு தீவிரவாதிகள் சரமாரியாகச் சுட்டதாகவும் ஒரு ரவுண்ட் சுட்டபின் மேகசனை மாற்றி மீண்டும் புது மேகசைன் மாற்றும் அளவுக்கு கால அவகாசம் இருந்ததாக அனைத்தையும் நேரில் பார்த்துக் கொண்டிருந்த நேர அறிவிப்பாளரான விஷ்ணு தத்தாராம் ஜெண்டே கூறுகின்றார். அதன்பின் சாவகாசமாக டாக்சியைக் கைப்பற்றி தாஜ் ஓட்டலுக்கு சென்றதாகவும்...மீண்டும் மறுஒளிபரப்பு அவசியமில்லை என்பதால் விசயத்துக்கு வருகின்றேன். இந்த பயங்கரவாதத் தாக்குதலால் பயனடைந்தவர்கள் என்று இரண்டு பேரைக் கூற முடியும்- மீண்டும் ஒருமுறை தங்கள் தேஷ்பக்தியை நாடெங்கும் ஓடவிட்டு சிறுபான்மை மக்களுக்கு எதிரான உள்நோக்க அரசியலைக் கட்டவிழ்த்து விட்ட ஆர்.எஸ்.எஸ்., அதன் அரசியல் முகமூடியான பி.ஜே.பி.; உலகளாவிய பயங்கரவாதத்தை வேரொடு அறுக்க அவதாரம் எடுத்த உலகரட்சகன் அமொ¢க்காவும் அதன் ஆயுத உற்பத்தியாளர்களும். டி.வி, செய்தித்தாள், இணையதளம் போன்ற ஊடகங்கள் 'இழவு வீட்டில் காசு வைத்து சூதாடி' நேரடி ஒளிபரப்பு செய்து தங்கள் பாக்கெட்டை நிரப்பிக்கொண்டதுடன், மேற்படி ஆர்.எஸ்.எஸ். + அமெரிக்க கூட்டணிக்கு பிரச்சாரம் செய்து எஜமான விசுவாசத்தையும் காட்டிக் கொண்டன, ஒரே கல்லில் ரெண்டு மாங்காய். அதற்கு அடுத்து வந்த நாட்களில் இங்கிலீஷ், டமில் என எல்லா சானல்களிலும் வெள்ளையும் சொள்ளையுமான நபர்கள் உட்கார்ந்துகொண்டு பயங்கரவாதம் பற்றி உணர்ச்சிவசப்பட்டு பேசிப்பேசி மாய்ந்து போனார்கள். மூக்கைச் சிந்தி அழவில்லை என்பதுதான் பாக்கி. இதை ஊடக பயங்கரவாதம் என்று ஏன் சொல்லக்கூடாது?
மும்பை பயங்கரங்கள் குறித்து விலாவரியாகப் பேசுவதானால், அதற்கு முன் இரண்டு கேள்விகளைப் பற்றிப் பேச வேண்டும். விடுதலை பெற்ற இந்தியாவின் பயங்கரவாதத்தை எங்கே இருந்து தொடங்குவது? உலகளாவிய பயங்கரவாத்தை எங்கே இருந்து தொடங்குவது? இந்த இரண்டு கேள்விகளையும் பேசாமல் பயங்கரவாதம் பற்றியும் தேஷ்பக்தி பற்றியும் உணர்ச்சிவசப்பட்டு பேசினால் இரத்த அழுத்தம் ஏறுவதைத் தவிர வேறு ஒரு பிரயோசனமும் இல்லை.
1947க்குப் பின்னான இந்தியாவின் பயங்கரவாதம் என்பது ஆகஸ்ட் 15க்கு முன்னதாகவே தொடங்கி விட்டது. அதன் உச்சகட்டம்தான் பிரிவினையின் போது வடக்கு, வட மேற்குப்பகுதிகளிலும் அதிகபட்சமாக பஞ்சாபிலும் நடந்த கொடூரங்கள். இதைப்பற்றி தனியேதான் எழுத வேண்டும். இந்தப் படுகொலைகளில் ஈடுபட்டவர்கள் இந்து, முஸ்லிம், சீக்கியர் என்று அனைத்துத்தரப்பாரும் இருந்தார்கள். அநேகமாக இந்தப்படுகொலைகள் அனைத்தும் எந்த விதமான திட்டமிடலும் இல்லாமல், அன்றைக்கு நிலவிய சூழ்நிலையில் உணர்ச்சிவசப்பட்ட நிலையிலும் ஒரு மதத்தவர் மேல் மற்றவர் கொண்ட எதிர்ப்பு உணர்வாலும் நிகழ்ந்தவை, தனிநபர்களாலும் கூட்டமாகவும் நடத்தப்பட்டவை என்று கூறலாம்.
ஆனால் முதல்முதலாக, சுதந்திர இந்தியாவின் நன்கு திட்டமிடப்பட்ட, தனிநபர் மீதான ஒரு படுகொலை என்பது ஆர்.எஸ்.எஸ்.ஆல் நடத்தப்பட்டது. அதன் இலக்கு மஹாத்மா காந்தியடிகள். படுகொலைக்கு ஒரே ஒரு காரணம் மட்டுமே இருந்தது: அவர் இந்து-முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தினார். எனவே 1948 ஜனவரி 20இலிருந்து பேசத்தொடங்குவதுதான் சரியாக இருக்கும். அன்றைக்கு பிர்லா மாளிகையில் காந்தியார் கூட்டத்தில் பேசும்போது, அதற்கு பத்தடிகள் பின்னால் உள்ள அறையிலிருந்து நாதுராம் கோட்சே வெடிகுண்டை வீச வேண்டும், கூட்டத்தில் கலந்துவிட்ட மதன்லால் பாவா காந்தியாரை துப்பாக்கியால் சுட வேண்டும் என்பதே திட்டம். ஆனால் அவர்களே எதிர்பாராத விதமாக, அந்த அறையின் ஜன்னல், தரையிலிருந்து எட்டு அடி உயரத்தில் இருந்ததால் அன்றைய முயற்சி வெறும் வெடி குண்டு வீச்சோடு முடிந்தது, காந்தியார் இன்னும் ஒரு பத்து நாள் உயிரோடு இருந்தார். ஜனவரி 30 அன்று நாதுராம் கோட்சே அடுத்த முயற்சியில் காரியத்தை நிறைவேற்றினான். இந்து வைஸ்யரான மோஹன்தாஸ் கரம்சந்த் காந்தியை இந்து சித்பவன் பிராமணனான கோட்சே சுட்டுக் கொன்றான் (இந்துக்களே, ஒன்று படுவீர்! இந்துக் கடைகளிலேயே சாமான் வாங்குவீர், துப்பாக்கி வாங்குவீர்!) இப்படுகொலையைத் திட்டமிட்ட அனைவரும் இந்துக்களே - கோபால் கோட்சே, அவன் தம்பி நாதுராம், மதன்லால் பாவா, கார்காரே, திகம்பர் பாட்கே,நாரயண் ஆப்தே, வீர சாவர்க்கார். (மாலேகாவ் குண்டுவெடிப்பில் ஈடுபட்ட இந்துதுவா தீவிரவாதிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த போலீஸ் அதிகாரியின் பெயரும் ஹேமந்த் 'கார்காரே' என்பது வேடிக்கை!). இந்தியாவில், ஒரு அரசியல் தலைவர் மீதான முதல் படுகொலையை நடத்தியது இந்துத்வா பயங்கரவாதம்தான் என்பதையும், "இந்து முஸ்லிம் ஒற்றுமையை" வலியுறுத்தியதற்கு எதிராகத்தான் அது நடத்தப்பட்டது என்பதையும் நாம் அழுத்தமாகப் பதிவு செய்ய வேண்டும்.
அன்றைக்கு கோட்சே செய்திருந்த ஆண்குறித்தோல் நீக்கமும் (இஸ்லாமிய மதச்சடங்கு), கையில் குத்தியிருந்த இஸ்மாயில் என்ற முஸ்லிம் பெயரும் எதிர்கால இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். என்ன செய்யப் போகின்றது என்பதை அறுதியிட்டுச் சொல்வனவாகவும் இரண்டு செய்திகளை விட்டுச் செல்வனவாகவும் இருந்தன. ஒன்று, அவர்களது நோக்கம்: சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்ற, காலமெல்லாம் இந்து-முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்திய தேசப்பிதா என்று அழைக்கப் பட்டவரை ஒரு முஸ்லிம் கொன்று விட்டான் என்ற செய்தியைப் பரப்புவதன் மூலம், இந்தியாவில் உள்ள முஸ்லிம் மக்களுக்கு எதிராக மட்டுமல்ல, சர்வதேச அளவில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான வெறுப்புணர்வைத் தூண்டி விடுவது, அனைத்து மத மக்களையும் 'முஸ்லிம் பயங்கரவாதத்துக்கு' எதிராகத் தூண்டி விடுவது. இரண்டு: அவர்களது இந்துத்வா, அகண்ட பாரதம் குறித்த மதிப்பீடுகளுக்கு நம்மால் வர முடிந்தது: இந்துத்வாதத்துவம் என்பது சூப்பர் டூப், புரட்டு; அது உள்ளீடற்ற ஒரு வறட்டுத் தத்துவம், நியாயமான தர்க்கவாதம் செய்யத்தக்க அளவுக்கு அடிப்படை நியாயம் ஏதும் அற்றது. ஹிட்லா¢ன் நாஜியிசத்துக்கு நூறு சதவீதம் ஈடானது. எனவேதான் ஒரு பரந்த வெகுஜன வெளியில் திறந்த விவாதத்தில், தர்க்க விவாதத்தில் தம்மால் ஜெயிக்க இயலாது என்று தொ¢ந்து கொண்ட ஆர்.எஸ்.எஸ். கும்பல், ஹிட்லர் கையில் எடுத்த "வன்முறை, அடாவடித்தனம், எதிர்ப்பவர்களைக் கொன்று விடுவது" என்ற அதே வழிமுறையைக் கையில் எடுத்தது.
இன்றைய நிலையில் பயங்கரவாதத்தை அல்லது இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டிவிட்டுத்தான் மறுவேலை என்று கங்கணம் கட்டிக்கொண்டு முதுகு வரை வாயைக் கிழித்துக்கொண்டு பேசும் ஊடகங்களும் ஆட்சியாளர்களும் கூட 1948 ஜனவரி 20, 30 பற்றியோ கோட்சேவின் முஸ்லிம் வேசம் பற்றியோ பேசாமல் மிக ஜாக்கிரதையாக இருக்கின்றார்கள். அநேகமாக இனிமேல் பேச மாட்டார்களோ என்ற சந்தேகம் வருவதற்கு காரணம் உண்டு. காரணம், நமது பள்ளி, கல்லூரி பாடப்புத்தகங்களில் கூட "காந்தியாரை ஒருவன் சுட்டான்" என்ற ஒற்றை வர்யோடு காந்தியாரின் வரலாறு அல்லது கதை முடிந்து போகின்றது என்பது தற்செயலான ஒன்றல்ல. மத்திய, மாநில கல்வித்திட்டங்களை இயற்றுகின்ற பொறுப்பில் உள்ளவர்களும், இந்திய வரலாற்றை எழுதுகின்ற அதிகாரிகளும், பல்கலைக்கழக மானியக் குழுவில் இருக்கின்ற கனவான்களும் கோட்சேவின் தம்பிகளாகத்தான் இருக்கின்றார்கள் என்பதைச் சொல்ல யாரும் தயங்க வேண்டாம். காந்தியாருக்கு நமது அரசு அதிகாரிகள் பரிவோடு செய்கின்ற அதிக பட்ச மரியாதை என்பது, அக்டோபர் 2 பொது விடுமுறை (அன்று டி.வி.யில் இந்தியத்தொலைக்காட்சியில் முதல் முறையாக சில தொடைகளைப் பார்க்கலாம்), ஜனவரி 30 அன்று 11 மணிக்கு ஒரு 'சங்கு'. அநேகமாக அடுத்த சம்பளக்கமிஷன் தலைவர், "எதுக்கு இதெல்லாம்" என்ற கேள்வி கேட்டு இதற்கும் சங்கு ஊதி விடுவார் என்ற சந்தேகம் உள்ளது.

...தொடரும்

வியாழன், நவம்பர் 17, 2011

அம்மான்னா சும்மாவா?


                                                                  அம்மான்னா சும்மாவா?
அம்மான்னா சும்மாதான்!
ஆனா இது சாதா அம்மாவா?
இட்லியில் ஸ்பெசல் இட்லி
தோசையில் ஸ்பெசல் தோசை
வார்டிலும் ஸ்பெசல் வார்டு
அட! கக்கூசிலும் ஸ்பெசல் கக்கூஸ் இருக்க
அம்மா மட்டும் சும்மாவா?
இது ஸ்பெசல் அம்மா!
மனுநீதி காத்த அம்மா!
சூத்திரர்கள் முதுகேறிப் பயணம் செய்து
ஆரிய அரியாசனம் ஏறிய ஸ்பெசல் அம்மா!
ஸ்வாஹா!


பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரம்!
சூத்திரனின் கல்வியும் அறிவும்
ஸ்பெசல் அம்மாவுக்கு மூத்திரம்!
ஸ்வாஹா!


அரசு ஊழியர்கள்
சாலைப்பணியாளர்கள்
மக்கள் நலப்பணியாளர்கள்...
அடச்சீ! சூத்திரர்கள் என்று சொல்லடா!


சமச்சீர்
சமநீதி
புத்தகம்
நூலகம்...
அட! மநுவின் காதில் விழக்கூடுமோ, தீட்டு!


மனிதருசி கண்ட புலியும்
சூத்திர ருசி கண்ட வாளும் சும்மா கிடப்பதில்லை!


அது சம்புகனின் தலைசீவிய வாள்
ஏகலைவனின் விரல் சீவிய வாள்
நந்தனின் உயிரை நறுவிசாய் பறித்த வாள்!


உரையில் உறங்குவதாக பொய் சொல்லப்பட்ட
மநுவின் வாள் மீண்டும் ஒரு முறை வெળியே வந்தது
படிந்திருந்த குருதியின் கனம் தாஙகாமல்
ஒரு கணம் தடுமாறினாலும்
மீண்டும் ஒரு முறை உயர்ந்து அடங்கியது
காரியம் கச்சிதமாக முடிந்தது
ஸ்வாஹா!


யாரங்கே?
வேதகாலப்பழமையான அண்டாக்களை
மீண்டும் அடுப்பில் ஏற்றுங்கள்
ஈயத்தை காய்ச்சுங்கள்
சூத்திரர்கળின் காதுகளை
அகலத்திறந்து வையுங்கள்


யாரங்கே?
அண்டாக்கળின் கீழே அடுப்பெரிக்க
சூத்திர நூலகத்தின் தூண்களையும்
சூத்திர நுலகத்தின் நூல்களையும்
பெயர்த்தெடுத்துப் போடுங்கள்
ஆரிய நெருப்பு
ஆகாயம் முட்டும் எரியட்டும்!
ஸ்வாஹா!

ஞாயிறு, நவம்பர் 13, 2011

புள்ளியில் இணையா நெடும்பயணம்

தினமும் நடந்து செல்லும் கால்கள் பழகிய அதே பாதைதான்
இன்று ஒரு கிளை முறிந்து தலையில் விழுந்தது 

எப்போதும் என்னை மறந்து நீந்தும் நீச்சல் குளம்தான்
இன்று கீழிருந்து கொடிகள் எழும்பி 
கால்களை சுற்றி இறுக்கிப் பிடித்து உள்ளே உள்ளே இழுத்தன 
நுரையீரல் வெடிக்க வெடிக்க   

எப்போதும் கையில் தூக்கி எடுத்து கொஞ்சும் குழந்தைதான் 
இன்று கன்னத்தில் ரத்தம் வரக் கீறியது
நகம் என்று நினைத்தேன்
ஆனால் உள்ளங்கையில் சிறு கத்தி இருந்தது 

ரோஜாசெடி என்றெண்ணி நீருற்றி வளர்த்தேன்
துளிர்க்கும் கணத்தை நொடி தோறும் எதிர்பார்த்தேன் 
ஒருநாள் சிறு இலை துளிர் விட்டது கண்டு துள்ளி குதித்தேன்
உற்றுப்பார்த்தேன் அது கருவேல முள்ளாக இருந்தது  

கண்மூடிக்கிடந்த தினத்தில் இருந்தே எடுத்து வளர்த்தேன்  
எப்போதும் என் உள்ளங்கையிலும் மடியிலும் சுருண்டு சுகமாய் தூங்கும்
புட்டிப்பாலை சப்பிசப்பிக் குடிக்கும் 
ஒருநாள் தோலில் வரிகள் தோன்றின...
அவை புலியின் வரிகளாய் இருந்தன 

நட்பும் துரோகமும் ஒன்றுக்கொன்று இணையாகவே பயணிக்கின்றன 
தண்டவாளங்களைப்போல்
ஆயினும் ஒரு புள்ளியில் ஒன்றாக ஒரு நாளும் இணைவதில்லை 
ஆயினும் ஒன்றுக்கொன்று இணையாகவே பயணிக்கின்றன.

திங்கள், நவம்பர் 07, 2011

நல்ல காலம் பொறக்குது...நல்ல காலம் பொறக்குது....புதிய கோடாங்கி அப்துகலாம்...

 1) ’10000 வேலை வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும்; நான்கு தடச்சாலை, 500 படுக்கை கொண்ட ‘உலகத்தரம்’ வாய்ந்த மருத்துவமனை, நடமாடும் ம்ருத்துவ வசதி,இளைஞர்களுக்கு 25% தள்ளுபடியுடன் கூடிய வங்கிக்கடன், மீனவர்களுக்கு மோட்டார் படகுகள், சிறு படகுத்துறைகள், குளிர்பதன மீன் பாதுகாப்பு வசதி, க்ரீன் ஹௌஸ், பல்லடுக்கு கட்டிடங்கள், விளையாட்டு மைதானங்கள், பத்து லட்சம் லிட்டர் குடிநீர் வசதி, ஐந்து செண்ட்ரல் சிலபஸ் பள்ளிகள், கூடவே மாநில அரசுப்பள்ளிகள், எல்லா கிராமங்களையும் இணைக்கும் ப்ராட்பேண்ட் இணைப்பு....’ பயப்படாதீங்க சார், தேர்தல்லாம் ஒண்ணும் வரல, இவை யாவும் கூடங்கூளத்தை பார்வை இட்ட பின் அணுசக்தியின் காதலரும் வலதுசாரி இந்துதுவா அமைப்புக்களின் அபிமானத்துக்குரியவரும் ஆன அப்துல்கலாம் அரசுகு பரிந்துரைத்தவை. கூடங்குளத்தில் அணுமின் நிலையம் தேவை இல்லை என்று போராடிக் கொண்டிருப்பவர்களின் தர்க்கவாதங்களுக்கும் தேர்தல் கால அரசியல்வாதி போன்று இங்கே கலாம் அடுக்கிகொண்டே போகும் பல்வேறு ‘கனவு’களுக்கும் என்னய்யா தொடர்பு? கலாம் இங்கே அடுக்குகின்ற யாவும் ஒரு மக்கள் நல அரசால் எப்போதுமே எங்கேயும் செய்யப்பட வேண்டிய நலத்திட்டங்கள்தானே? கூடங்குள பிரச்னைக்கும் இந்த ‘கனவு’களுக்கும் பிரத்யேகமான தொடர்புதான் என்ன? சின்னப்புள்ளத்தனமா இருக்கு! 2) பல நீண்ட வருடங்களாக தொடரும் லட்சக்கணக்கான விவசாயிகளின் தற்கொலை, சிறு தொழில்கள் அழிப்பு, சிறிய நடுத்தர தொழிற்சாலைகளில் வேலை செய்த பல கோடிப்பேர் வேலை இழப்பு (கலாம் சொல்கின்ற தங்க நாற்கர சாலைகள் எல்லாம் பன்னாட்டு முதலாளிகளின் இந்திய தொழிற்சாலைகள் தங்கள் சரக்குகளை எடுத்து செல்வதற்காக மட்டுமே இந்திய அரசால் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டவை),பன்னாட்டு முதலாளிகளால் சிறப்பு பொருளாதார மண்டலங்களில் மறுக்கப்படும் இந்தியாவின் தொழிற்சாலை சட்டம் 1948, தொழிற்தகராறு சட்டம் 1947, தொழிற்சங்க சட்டம் 1926... இவை குறித்தெல்லாம் இது வரை ஒரு சொல் கூட உதிர்க்காமல் (கவனிக்க: இந்தியக்குடியரசுத்தலைவர் என்பவர் இந்திய அரசியல் அமைப்பு சட்டம், இந்தியாவின் மக்கள் நல சட்டங்களின் பாதுகாவலர் (Custodian of the Constitution), இவர்தான் அத்தகைய பதவியை அலங்கரித்தவர்) மிக கவனமாக இருக்கின்ற உலக முதலாளிகளின் சேவகன் இப்போது ஃப்ரான்ஸ், அமெரிக்க, ஐரோப்பிய முதலாளிகளின் அணு உலைகளை இந்தியாவில் விற்கும் சேல்ஸ் ரெப்ரெசெண்டிவ்-ஆக புதிய அவதாரம் எடுத்துள்ளார். 3) /அணுசக்தி என்பது மனித இனத்துக்கு கடவுள் கொடுத்த வரம், அதை ஆக்கத்துக்கு பயன்படுத்துவதும் அழிவுக்கு பயன்படுத்துவதும் நம் கையில்தான் உள்ளது/ சொன்னவர் கலாம்.... அது சரி, கலாம் சொல்கின்ற கடவுள் யார்? கையில் வீணையுடன் இருக்கின்ற சரஸ்வதியம்மாவா, அல்லது கிறித்துவர்களின் கடவுளா, முஸ்லிம்களின் அல்லாவா? 1998 போக்ரானில் சிரித்தவர் இந்த மூன்று பேரும் அல்லாத புத்தர் அல்லவா?! அது சரி, இந்திய அரசு மக்கள்பணத்தில் அணுகுண்டு வெடித்தால் அது சரஸ்வதியம்மாவின் அரசாங்கம் ஆக்க வேலைகளுக்காகவும் உலக அமைதி சமாதானம் அன்பு கருணை காதல் கருமாதி போன்ற மேலான சமாச்சாரஙளை பாதுகாப்பதற்காக வெடிப்பது, அதையே பாகிஸ்தான் அரசு பாகிஸ்தான் மக்கள் பணத்தில் வெடித்தால் அது தீவிரவாதிகள் அழிவுவேலைகளுக்காக வெடிப்பது, உடனடியாக தெற்காசிய பிராந்தியத்தில் அமைதியும் சமாதானமும் கெட்டு சீரழிந்து சின்னாபின்னமாகி விடும்! ... பிருத்விராஜன் சாரின் காமெடி வடிவேலையும் மிஞ்சுகின்றது! (1998 போக்ரான் குண்டுவெடிப்பு திட்டம் முடியும் வரை கலாம் தனக்கு சூட்டிக்கொண்ட ரகசிய சங்கேத பெயர்).
(மேலே உள்ள படம் செர்னோபில் அழிவு)

செவ்வாய், நவம்பர் 01, 2011

ஏழாம் அறிவு...ஹாலிவுட்டுக்கு நம்மளால முடிஞ்ச சின்ன உதவி...ஹிஹிஹி...!



1) சோவியத் யூனியன் இருந்தவரை இயான் ஃப்ளேமிங் (ஜேம்ஸ்பாண்ட் கதைகளின் ஆசிரியர்), சோவியத் ரஸ்யா என்ற தேசம் உலகத்தை எந்த நொடியிலும் அழித்துவிடக்கூடும் என்றும், உலகத்தை காப்பாற்றும் வல்லமை தெம்பு திராணி அல்லது சூடு சொரணை அரிப்பு சொறி (எப்போதும் போல) அமெரிக்காவைத்தவிர வேறு எந்த கேடுகெட்டவனுக்கும் இல்லை, அதிலும் ஜேம்ஸ்பாண்டைத் தவிர வேறு எவனும் ஆம்பளையே இல்லை என்ற ரீதியில் சரடு விட்டுக்கொண்டிருக்க, அந்த காமெடியையே வருசத்துக்கு ஒண்ணு என்ற கணக்கில் ஜேம்ஸ்பாண்ட் படமாக எடுத்து ஊரை ஏமாத்தி காசு புடுங்கிகிட்டு இருந்தாய்ங்க. சோவியத்த அழிச்ச பிறகு உலகத்துக்கு அல்லது அமெரிக்காவுக்கு ‘எதிரி' அதாவது வில்லன் இல்லாம போகவே 1989.90க்கு பிறகு வந்த படங்களில் வேறு மாதிரி வில்லன்களை சித்தரித்தார்கள்... இப்போ இருக்குற நிலைமையில் கம்யூனிச சீன தேசம்தான் அமெரிக்காவுக்கு பெரும் அளவில் நிதி அல்லது கடன் கொடுத்துள்ள மிகப்பெரிய நாடு என்பது வெளிப்படையான உண்மை. எனவே இன்றைய நிலையில் சீனாவை ஒரு 'உலக எதிரியாக' சித்தரித்து ஜேம்ஸ்பாண்ட் படம் எடுக்க அமெரிக்க அரசு ஒத்துக்கொள்ளாது, ஹாலிவுட் வியாபாரிகளுக்கும் இது தெரியும், எனவே ஜேம்ஸ்பாண்ட் இப்போது எங்கோ ஒரு ஓட்டலில் யாரோ ஒரு ஆப்பிரிக்க அல்லது ஆசிய அல்லது கீழ்த்திசை நாட்டு பெண்ணோடு கட்டிலில் கம்பளிப்போர்வையை போர்த்தியபடி உறங்கி கொண்டிருக்கின்றார். அமெரிக்காவுக்கு சீனா என்றைக்கு பிடிக்காமல் போகின்றதோ அன்றைக்கு அலறியடித்து எழுந்து ஜட்டியை மாட்டியபடியே அரைகுறை தூக்கத்தில் இருக்கின்ற மலங்க மலங்க விழிக்கின்ற அந்தப் பெண்ணுக்கு ‘பை' சொல்லியபடியே, கோட்டின் உள்பையில் கையடக்கமான பிஸ்டலை சொருகியபடியே வெளியே வருவார்.

2) அதுவரைக்கும் நம்ம முருகதாசுக்கு பொறுக்கலைய்யா பொறுக்கல... ஹாலிவுட் தாதாக்களுக்கே பாடம் கத்து தர்றாரு நம்ம முருகதாசு...'சோவியத்த அழிச்சுப்போட்டு ஜேம்ஸ்பாண்ட் படம் எடுக்க முடியாம திருதிருன்னு முழிக்கிற ஹாலிவுட் அண்ணாச்சிகளே, இதோ புதிய உலக எதிரி, அமெரிக்க வில்லன் சீனா! புடிச்சுக்கோங்க!'. ஹாலிவுட் படங்களையே எத்தன நாளைக்கி டப்பா காப்பி அடிக்கிறது, மனசாட்சி உலுக்குதுங்க சார், அதான் போனாப்போவுதுன்னு ஹாலிவுட்டுக்கு நம்மளால முடிஞ்ச சின்ன உதவி...ஹிஹிஹி...!

திங்கள், அக்டோபர் 24, 2011



நாற்பத்துநான்காவது இரட்சகனும்..... பாகம் 2




...நாற்பத்துநான்காவது இரட்சகனும்

ஒபாமா பதவி ஏற்கும் முன்னரே, ஈராக்கில் இருந்தும் ஆஃப்கானிஷ்தானில் இருந்தும் அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகளை விலக்கிக்கொள்வார் என்றும் அமெரிக்கபோர் விமானங்களில் இனிமேல் குண்டுகளுக்குப் பதிலாக ரோஜாப்பூக்கள் மட்டுமே ஏற்றப்படும் என்றும் பலர் கனவுகண்டு வானத்தைப் பார்த்தபடியே இருக்க, நாற்பத்துநான்காவது 'இரட்சகன்' ஆன ஒபாமா அவர்களின் கனவை டிஷ்யூ பேப்பரில் துடைத்துப்போட்டார்.

 தொடக்கத்தில் சொல்லப்பட்ட க்வான்டனமோ, அபுக்ரேய்ப் போன்ற உலகெங்கிலும் உள்ள சித்ரவதை முகாம்களை ஒபாமா மூடவும் இல்லை, முறையான விசாரணைக்கு உத்தரவு இடவும் இல்லை.  மாறாக, குடியரசுக்கட்சியின் புஷ் நிர்வாகத்தில் நடந்த அனைத்து மனித உ¡¢மைகளையும் அத்துமீறல்களையும் மூடி மறைக்கும் வேலையில் ஜனநாயகக்கட்சியின் ஒபாமா இறங்கியுள்ளார்.  பல விசாரணைகளில் ஒபாமா நிர்வாகம் தலையிட்டு தகவல்களை மறைத்து புஷ் நிர்வாகத்தைக் காப்பாற்றும் வேலையைச் செய்கின்றது.   ஏன்?  'இருட்டுச்சிறை'க் கொடுமைகள், அதற்கு புஷ் நிர்வாகத்தின் அங்கீகாரம் ஆகியன அன்றைய அமெரிக்க  நாடாளுமன்றத்தின் (காங்கிரஸ்) ஜனநாயகக்கட்சியின்  தலைமைக்கு நன்றாகவே தொ¢யும்.  மேலும் அன்றைய புஷ் நிர்வாகம் கொண்டுவந்த மிலிடரி  கமிஸன் சட்டம் 2006க்கு ஜனநாயகக்கட்சி ஆதரவு கொடுத்தது.  இந்த சட்டம் என்ன சொல்கின்றது? "அந்நிய, சட்டவிரோத எதிரிகள் இந்த சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டால், அவர்களுக்கு ஜெனீவா சட்டம் சொல்கின்ற உ¡¢மைகள் வழங்கப்படாது".  அதாவது அமெரிக்க சட்டங்களுக்கு முன் சர்வதேச சட்டம் எதுவும் செல்லாது!   தவிர, புஸ் நிர்வாகத்தில் இருந்த அதே ராணுவ, உளவு அதிகாரிகள்தான் இப்போது ஒபாமா நிர்வாகத்திலும் தொடர்கின்றார்கள்.  இவர்களை சேதப்படுத்தும் எந்த நடவடிக்கையிலும் இறங்க ஒபாமா விரும்பவில்லை. 

இதற்கு முன் இருந்த அமெரிக்க வெள்ளைமாளிகைவாசிகள்  கடைப்பிடித்த அதே நாடுபிடிக்கும் கொள்கைகள், ஆயுதக்கொள்கைகள் ஆகியவற்றுக்கு மாற்றாக ஒபாமா நிர்வாகம் எந்த விதமான கொள்கையையும் அறிவிக்கவில்லை.   அமெரிக்கப் பொருளாதாரம் சீரழிந்து சின்னாபின்னமாக சிதறிக் கிடக்கும் இன்றைய நிலையில் அமெரிக்காவின் எல்லை தாண்டிய பயங்கரவாதம், குறிப்பாக எண்ணெய் வளம் மிக்க அரபுப் பிரதேசத்தில் மேலும் தீவிரமடையும் என்பதைப் பு¡¢ந்துகொள்வோமாக.


2009 ஜனவரி மாதம் வெள்ளைமாளிகையில் குடியேறிய ஒபாமா, அமொ¢க்காவின் நானூறு வருட 'உலக ரவுடி' பாத்திரத்தை தலைகீழாக மாற்றிவிட்டாரா, கிழிந்து நார்நாராய் தொங்கும் 'உலக அமைதியை' நிலைநாட்ட அவர் என்ன செய்துள்ளார் என்ற கேள்வி பரவலாக விவாதிக்கப்படும்போது நாமும் அதைப் பேசவேண்டியுள்ளது.

*2003 ஜனவா¢ தொடங்கி 2008 டிசம்பர் வரை இராக்கில் அமெரிக்க+பிரிட்டிஷ் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட இராக் மக்களின் எண்ணிக்கை லட்சத்துக்கும் மேலே.  ஒபாமா பதவி ஏற்றபின் இராக்கில் செத்தவர்கள் 2009 ஆகஸ்ட் வரை 3,008 என்று இராக் சாவுக்கணக்கெடுப்பு இணையதளம் சொல்கின்றது.  சர்வாதிகாரி ஜார்ஜ் புஷ்ஷின் பதவிக்காலத்தில் இராக்கிலும் ஆஃப்கனிலும் இறக்கப்பட்ட படைகளைவிடவும் அதிகமான படைகளை ஒபாமா இந்த ஒன்பது மாதத்தில் அனுப்பியுள்ளார்.
*ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் 21,000 படைகளை ஆஃப்கனுக்கு அனுப்பியதோடு மேலும் 13,000 பேர் ரகசியமாக அனுப்பிவைக்கப்பட்டதாக வாஷிங்க்டன் போஸ்ட் சொல்கின்றது.

*புஷ் ஆட்சிக்காலத்தில் 2007இல் ஆஃப்கனில் 26,000 தீவிரவாதிகளும், இராக்கில் 1,60,000 தீவிரவாதிகளும் அமெரிக்கப்படைகள் என்ற போரில்  குவிக்கப்பட்டனர்.  இப்போது ஆஃப்கனில் 65,000 பேரும் இராக்கில் 1,24,000 பேரும் (மொத்தம் 1,89,000) இருப்பதாக வா.போ. கூறுகின்றது.  ஆஃப்கனில் உள்ள அமெரிக்க தீவிரவாதிகளின் தலைமைத்தளபதியான ஸ்டான்லி மக்கி¡¢ஸ்டல், ஆஃப்கனில் மேலும் 80,000 துருப்புக்கள் தேவை என்று அமெரிக்க அரசிடம் கேட்டிருப்பதாக அமெரிக்க ராணுவம் அமெரிக்க ஊடகங்களில் தொ¢வித்துள்ளது.  என்.பி.சி. எனப்படும் நேஷனல் பிராட்காஸ்டிங் கார்பொரேஷன் ஒளிபரப்பில் பேட்டியளித்த முன்னாள் அமொ¢க்க ஜெனெரல் பாரி மக்காஃப்ரே, குறைந்தது அடுத்த பத்து வருடங்களுக்கு முன்பு அமெரிக்கப்படைகள் ஆஃப்கனில் இருந்து வெளியேறாது என்று கூறியதுடன், அமெரிக்கப்படைகளுக்கான செலவு ஒரு மாதத்துக்கு ஐநூறு கோடி டாலராக (23,000 கோடி ரூபாய்க்கு சமம்) என்றும் கூறினார்.

உலகின் மிகப்பொ¢ய பெட்ரோலியவளச் சுரங்கங்களான மத்திய ஆசியாவிலும் பாரசீக வளைகுடாவிலும் இருக்கின்ற பெட்ரோலிய வளத்தை சொட்டுவிடாமல் சுரண்டிக் கொண்டு போகும்வரை, இராக்க்கிலும் ஆஃப்கனிலும் குவிக்கப்படும் அமெரிக்க தீவிரவாதிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகாரிக்கும். அல்-காய்தா, பின் லேடன் போன்ற காரணங்கள் எல்லாம் உலகமக்களையும் அமெரிக்க மக்களையும் சேர்த்து ஏமாற்றும் அமெரிக்க அதிபர்களின்  தந்திரங்களே.  பாரக் ஒபாமா இந்த வரிசையில் நாற்பத்து நான்காவது ரட்சகனாக களத்தில் குதித்துள்ளார்.

அமெரிக்க ஆதரவாளர்கள், ஊடகங்கள், கார்போரேட் கரடிகள், காளைகள் போன்றோர் ஒபாமாவுக்கு அமைதிப்பரிசு என்று ஆராவாரம் செய்வதை நம்மால் புரிந்துகொள்ள முடிகின்றது.  ஆனால் மனித உரிமை ஆர்வலர்களாலும் முற்போக்கு இயக்கங்களாலும் பெரிதும் மதிக்கப்படுகின்ற வி.ஆர்.கிருஷ்ணய்யர் போன்றவர்களும் இந்த ஆரவாரத்தில் பங்கேற்பதை நம்மால் பு¡¢ந்துகொள்ள முடியவில்லை.

வியட்நாம் மீது போர் தொடுத்து நாபாம் குண்டுகளை வீசி வியட்நாம் மக்களைப் படுகொலை செய்த அமெரிக்க  தீவிரவாதிகளில் முக்கியமான பாத்திரம் வகித்த ஹென்ரி கிஷ்ஷிங்கருக்கு 1973 நோபல் அமைதிப்பரிசு வழங்கப்பட்டது.  பாலஸ்தீன மக்களைக் கொன்றுகுவித்த இஸ்ரேலின் மெனாக்கம் பெகினுக்கு இதே பா¢சு வழங்கப்பட்டது.  லட்சக்கணக்கான ஆஃப்கன் மக்களைக் கொலைசெய்யக் காரணமாக இருந்த அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டருக்கு 2002ஆம் ஆண்டு இதே பா¢சு வழங்கப்பட்டது.

தொடர்ந்து கிறிஸ்டோபர் கொலம்பஸ், ஜெனரல் டயர், ஹிட்லர், ஹிரோஷிமா-நாகசாகியில் அணுகுண்டு வீசிய ஹாரி  ட்ருமன், ரோட்னிகிங்கை அடித்து நொறுக்கிய போலீஸ்காரர்கள், நாதுராம் கோட்சே, நரேந்திரமோடி  போன்றவர்களுக்கு அடுத்தடுத்து நோபல் அமைதிப்பரிசு  வழங்க வேண்டும் என்று அமெரிக்க ஆதரவாளர்களும், ஊடகங்களும்  மனுப்போடலாம்.

 நாற்பத்துநான்காவது ரட்சகன் கையில் ஜார்ஜ் புஷ் கொடுத்துச்சென்ற பழைய சுத்தியலுடனும் சில புதிய ஆணிகளுடனும் இருட்டுப்பிரதேசமான வெள்ளைமாளிகையில் குடியேறியுள்ளார் - ஜனநாயகத்தின் சவப்பெட்டியில் மிச்சம்மீதி இடமிருந்தால் அறைவதற்கு.   அந்த சுத்தியல் நானூறு வருடங்கள் பழமையானது, இடையறாத உபயோகத்தின் காரணமாக கைப்பிடி மிகப் பளபளப்பானது, ஆனால்  ரத்தக்கறை படிந்தது.


நாற்பத்துநான்காவது ரட்சகனும் நோபல் அமைதிப்பரிசும்- 


பாகம் 1

(உலக முதலாளி ஒபாமா நோபல் பரிசை ‘வாங்கிய’போது எழுதியது)




   (1)  இரவும் பனிமூட்டமும்

அலேய்ன் ரெஸ்னேய் (Alain Resnais) இயக்கிய "இரவும் பனிமூட்டமும்" (Night and Fog) (1955) என்ற  திரைப்படம் சர்வாதிகாரி ஹிட்லரின் சித்ரவதை முகாம்களில் என்ன நடந்தது என்பதை சொல்கின்றது.  இரண்டாம் உலகப்போர் முடிந்து பத்து வருடங்களுக்குப் பின் வெளியானது.   35 நிமிடமே ஓடும் இப்படம் 55 வருடங்களுக்குப் பிறகும் காண்போரை அதிர்ச்சியில் உறையச் செய்கின்றது.  ழான் கேரோல் (Jean Cayrol - 1911-2005) என்ற ஃப்ரென்ச் கவிஞர், 1941இல் ஃப்ரான்சை ஜெர்மனி ஆக்கிரமித்தபோது பிடிக்கப்பட்டு நாஜி ஹிட்லரின் சித்ரவதை முகாமில் அடைக்கப்பட்டார்.  அங்கே அடைக்கப்பட்ட அனைவருக்கும் மரணம் உறுதியானது.  டாக்டர் ஜோஹான் க்ருபர் (Johaan Gruber) என்ற கிறித்துவ பாதிரியாரின் கருணையினால் கேரோல் உயிருடன் தப்பினார்.  சித்ரவதை முகாமில் தனது அனுபவங்களை அவர் பின்னர் எழுதினார்.  அதுவே திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது.  "இரவும் பனிமூட்டமும்" என்பது 1941 டிசம்பர் 7 அன்று ஹிட்லர் வெளியிட்ட ரகசிய ஆணை ஆகும்.  தனது எதிரிகளை இருந்த சுவடு தெரியாமல் ஒழித்துக்கட்ட ஹிட்லர் இட்ட ஆணைதான் இது.

வெறும் சித்ரவதைகள் அல்ல இவை.  மனிதர்களை சோதனை எலிகளாகப் பயன்படுத்தி ஹிட்லரின் சித்ரவதை முகாம்களில் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு கொடூரங்கள் நடந்ததாக இப்போதும் செய்திகளைப் படிக்கின்றோம்.  மனிதனின் மூச்சை நிறுத்தி விடுவது, விசவாயு செலுத்துவது, நோயுற்றவர்கள், உடல் ஊனமுற்றவர்களை கொன்று விடுவது,  உயிரோடு மனிதனை அறுத்தும் உடல்பாகங்களையும் தலையையும் வெட்டி இதயத்துடிப்பையும் பிற உடல் இயக்கங்களையும் பார்ப்பது, விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் உடலுறவு, விலங்குகளின் ரத்தத்தை மனிதர்களுக்கு செலுத்துவது... என ஹிட்லரின் சித்ரவதைகள் பக்கம்பக்கமாக எழுதப்படுகின்றன.  மனிதசமூகம் கற்பனையும் செய்ய முடியாத பல கொடுமைகள் நடந்தன என்பதை 'நியூரெம்பெர்க் விசாரணைகள்' (Nuremberg Trials) வெளிச்சமாக்கின.

                                 (2)    இருட்டுச்சிறைகள் - அமெரிக்க ஸ்டைல்

"பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்"தில்  கைது செய்யப்பட்ட பதினான்கு "அதிமுக்கிய" கைதிகளை க்யூபாவின் எல்லைக்குள் அமைந்துள்ள க்வான்டனாமோ வளைகுடாவில் அமெரிக்கா அடைத்துவைத்து, அவர்கள் மீது "திட்டமிட்ட" வகையிலான கொடூர சித்ரவதைகளை ஏவியதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், தொடர்பான கைதிகளிடம் நடத்திய நேர்காணல் மூலம் அம்பலப்படுத்தியுள்ளது.  ஜார்ஜ் புஷ் நிர்வாகத்தின் நேரடி உத்தரவின் அடிப்படையிலேயே, அமெரிக்க  ராணுவமும் உளவு நிறுவனங்களும் இந்த சித்ரவதைகளை நடத்தியுள்ளன.  இந்த நேர்காணல் விவரங்களை "அதிமுக்கிய"அரசு அதிகாரிகளுக்கு  மட்டுமே தெரிவிப்போம் என்றும் செஞ்சிலுவைச்சங்கம் ஒத்துக்கொண்டதாம் (தகவல்:www.wsws.org, 17.3.2009).

"ஜனநாயகத்தின் காவலன்" ஆன அமெரிக்க அரசின் ராணுவமும், அதன் பயங்கரவாத அமைப்பான சி.ஐ.ஏ.வும் இதுபோன்ற "இருட்டுச்சிறை" என்ற பல ரகசிய சித்ரவதை முகாம்களை உலகம் முழுவதும் (க்வான்டனாமோ, போலந்து, ருமேனியா, தாய்லாந்து, மொராக்கோ, ஆஃப்கானிஷ்தானிலுள்ள பாக்ராம் விமானதளம், இந்தியப்பெருங்கடலில் உள்ள டீகோகார்சியா தீவு போன்ற பல நாடுகள்) கட்டி மனிதர்களை உயிரோடு கொல்லும் வேலையை செய்துகொண்டிருக்கின்றன.  2004ஆம் ஆண்டு கணக்குப்படி இராக்கில் உள்ள அமெரிக்க 'இருட்டுச்சிறை'களில் மட்டும் 18,000 கைதிகளும், உலகம் மொத்தமும் 25,000 கைதிகளும் இருந்தார்களாம்.  வாழ்க அமெரிக்க  ஜனநாயகம்! வளர்க பயங்கரவாத்த்துக்கு எதிரான போர்!.

பத்திரிக்கையாளரான மார்க் டானெர் (Mark Danner), செஞ்சிலுவைச்சங்கத்தின் நேர்காணல் விவரங்களை, "அமெரிக்க சித்ரவதை: இருட்டுச்சிறைகளிலிருந்து எழும்பும் குரல்கள்" (US Torture: Voices from the Black Sites) என்ற தனது நூலில் எழுதியுள்ளார்.  தனக்கு இந்த விவரங்கள் எங்கிருந்து கிடைத்தன என்பது பற்றி அவர் எதுவும் சொல்லவில்லை.

ஜெனீவா உடன்பாட்டின் மூன்றாவது பிரிவு போர்க்கைதிகளை எவ்வாறு நடத்த வேண்டும் என்று பேசுகின்றது.  ஜெனீவா உடன்பாட்டில் வரையறுக்கப்பட்டுள்ள 'போர்க்கைதிகளை நடத்த வேண்டிய முறைகளை உலகநாடுகள் பின்பற்றுகின்றனவா என்பதை சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் கண்காணிக்கின்றது.  இந்த வரையறைகளுக்குப் பொருந்தாத வகையில், க்வான்டனாமோ வளைகுடாவில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள், 'சித்ரவதை, மனிதாபிமானம் இன்மை, இழிவான நடத்தை' போன்ற கொடுமைகளுக்கு உட்படுத்தப்படுவதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் குறிப்பிடுகின்றது.    ஐ.நா.சபையே அமெரிக்க அதிபர்களின் 'நட்சத்திர அந்தஸ்து பெற்ற கக்கூஸ்' ஆகி ஆண்டுகள் பலவாகிவிட்ட நிலையில் செஞ்சிலுவைச்சங்கம் மட்டும் என்ன செய்துவிட முடியும் என்பது புரியவில்லை.

அமெரிக்கா பிரச்சாரம் செய்கின்ற 'பயங்கவாதத்துக்கு எதிரான யுத்தம்' என்பது உண்மையில் யாருக்கு எதிரானது என்பதை செஞ்சிலுவைச்சங்கத்தின் அறிக்கை வெளிச்சமாக்குகின்றது.  தனியே அடைப்பது, அடிப்பது, நிர்வாணமாக்குவது, பல்வேறு பாலியல் தொந்தரவுகள், உடலை முறுக்கியும் வளைத்தும் பலமணி நேரம் வைப்பது, அதிகபட்ச வெப்பநிலையில் அடைப்பது, தண்ணீருக்குள் மூழ்க வைப்பது, தூங்கினால் அடிப்பது என்பவை மனிதகுலத்துக்கு அமெரிக்கா அன்போடு வழங்கியுள்ள கண்டுபிடிப்புக்களில் சில. 

"க்வான்டனாமோ வளைகுடாவுக்கு கொண்டுவரப்படும் முன்னும் பின்னும் கூட இந்த பதினான்கு கைதிகளும் தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்ததால், அவர்களது வாக்குமூலத்தை நம்பவேண்டியுள்ளது, ஏனெனில் இவர்கள் ஒருவருக்கொருவர் பேசி பொய் சொல்லியிருக்க முடியாது என்பதை நாங்கள் குறிப்பிட விரும்புகின்றோம்" என்று செ.சங்கம் குறிப்பிடுகின்றது.

14 பேர்களில் 9 பேர் பாகிஸ்தானில் பிடிக்கப்பட்டவர்கள். அமொ¢க்க ராணுவமும் உளவுத்துறை கொடூரர்களும் இவர்களை எவ்வாறு வைத்திருந்தார்கள்?  உடல் முழுக்கப்போர்த்திவிடுவது, கறுப்புகண்ணாடியைப் போட்டுவிடுவது, தலையை சாக்கு கொண்டு மூடுவது, காதுகளை அடைத்து விடுவது, கையையும் காலையும் சேர்த்து சங்கிலியால் கட்டி விடுவது - இப்படி, அவர்களை அசைய விடாமல் செய்வது, தாங்கள் எங்கி இருக்கின்றோம், எங்கு போகின்றோம் என்பதை உணர விடாத அளவுக்கு அவர்களது புலன் உணர்வுகளை மழுங்கடிப்பது - இந்தக் கைதிகளை பல இடங்களுக்கும் கொண்டு சென்றபோது இப்படித்தான் அவர்களை நடத்தினார்களாம்.  செல் என்ற எலிப்பொறி போன்ற குறுகிய "அறை"களில் கைதிகளை அடைப்பார்கள்.

ஏமன் நாட்டு கைதியான வாலித் பின் அட்டாஸ் தான் அடைக்கப்பட்டிருந்த  செல்லின் அளவு, ஆறரை அடி நீளமும், மூன்றரை அடி அகலமும்தான் என்று சொல்கின்றார்.  உயிரோடு மனிதர்களைக் கொல்லும் சவக்குழி!  "விசாரணை என்ற பெயா¢ல், முதல் இரண்டு வாரங்களில் தினமும் என்னை முகத்தில் அடித்தார்கள், உடலெங்கும் குத்தினார்கள்.  கழுத்தில் ஒரு வளையத்தை மாட்டுவார்கள், அதைப் பிடித்துக்கொண்டு சுவா¢ல் ஓங்கி மோதுவார்கள்.  தரையில் ஒரு ப்ளாஸ்டிக் விரிப்பில் படுக்கவைத்து அதை ஓரங்களில் மேல்நோக்கி தூக்குவார்கள், பின்னர் வாளிகளில் குளிர்ந்த நீர் எடுத்து என் மேல் ஊற்றுவார்கள்... இதெல்லாம் தினமும் நடக்கும்".  இவரை நிர்வாணப்படுத்தி, கைகளில் விலங்கிட்டு தலைக்கு மேல் தூக்கி செல்லின் கூரையோடு சேர்த்துக் கட்டினார்கள்.  இரண்டு வாரங்கள் இவர் இந்த நிலையில் நின்றபடியே இருந்தார். 

தொடர்ந்து பல வாரங்களுக்கு திடவுணவு தரப்படமாட்டாது.    என்ஸ்யூர் (Ensure) என்று சொல்லப்படும் திரவ வைட்டமின் மட்டும் கொடுப்பார்கள். "முதல் இரண்டு வாரங்களுக்கு எனக்கு உணவு எதுவும் தரவில்லை.  என்ஸ்யூரும், தண்ணீரும் மட்டுமே கொடுத்தார்கள்". 

நிர்வாணப்படுத்தி, கைகளில் விலங்கிட்டு தலைக்கு மேல் தூக்கி செல்லின் கூரையோடு சேர்த்துக் கட்டுவது, குளிர் வாட்டும் இரவு பகல் எந்நேரமும் இப்படியே நிற்க வேண்டும் - அனேகமாக எல்லாக் கைதிகளுக்கும் இந்த விதமான தண்டனை உண்டு.

காலித் ஷேக் முகம்மது என்ற கைதி, "விசாரணை என்ற பெயா¢ல் குளிர்ந்த நீரை நாற்பது நிமிடங்கள் தொடர்ந்து என் மேல் வாரி  இறைப்பார்கள்" என்று சொல்கின்றார்.

கைதிகளை "ஒலி"ச்சித்ரவதைக்கும் உட்படுத்தினார்கள்.  பாலஷ்தீனிய பின்னணியுடைய அபு சுபயதா என்ற கைதியின் வாக்குமூலம்: "என்னை நாற்காலியோடு விலங்கிட்டு கட்டி அனேகமாக மூன்று வாரங்கள் உட்கார வைத்திருந்தார்கள்.  தொடர்ந்து இப்படியே இருந்ததால் காலின் கீழ்ப்புறம் கொப்புளங்கள் தோன்றின.  கழிப்பறைக்கு செல்ல மட்டுமே நான் அனுமதிக்கப் பட்டேன்.  மிக பயங்கர சத்தத்துடன் பாட்டை ஒலிக்கச் செய்வார்கள்.  ஒரு நாள் முழுக்கவும் இப்படி செய்வது வழக்கம்.  அதிக ஒளியும் வெப்பமும் வீசும் மின்விளக்குகளைப் பொருத்துவார்கள்.  இல்லையேல் இருட்டில் அடைப்பார்கள்.  தொடர்ந்து பல நாட்களுக்கு தூங்க விட மாட்டார்கள்.  அனேகமாக முதல் மூன்று வாரங்களுக்கு என்னை தூங்க அனுமதிக்கவில்லை.  நான் தூங்கி விழுந்தால் முகத்தில் தண்ணீர் அடிப்பார்கள்" என்கின்றார் சுபயதா. 

"அமெரிக்க ஸ்டைல் சித்ரவதை"களில் மிகக் கொடூரமானது கைதிகளின் உணர்வுகளைப் புண்படுத்தி அவமானப்படுத்துவது.  சிறை வாழ்வின் பெரும்பகுதி கைதிகள் நிர்வாணமாகத்தான் இருக்கின்றார்கள்.  சி.ஐ.ஏ. கொடூரர்களுடன் "ஒத்துழைத்தால்" உடை அணியலாம், கழிப்பறைக் காகிதம் கூடக் கிடைக்கும்.  "ஒத்துழைப்பு" சா¢யில்லை என்றால் இந்த சலுகைகள் பறிக்கப்படும். 

(3)    "தண்ணீர் சிகிச்சை"

"தண்ணீர் சிகிச்சை" என்பது மிக முக்கியமான சித்ரவதை.  அனேகமாக எல்லாக்கைதிகளும் இதை அனுபவித்துள்ளார்கள்.

சவூதி அரேபியாவைச் சேர்ந்த அப்துல் ரஹீம் ஹுசேன் அப்துல் நஷீ¡¢ என்ற கைதி தனது "தண்ணீர் சிகிச்சை" அனுபவத்தைக் கூறுகின்றார்: "இதற்காகவே ஒரு படுக்கை வடிவமைக்கப் பட்டிருந்தது.  அத்தோடு சேர்த்து என்னைக் கட்டுவார்கள்.  பின்பு அதை நட்டமாக நிறுத்துவார்கள்.  முகத்தில் துணியால் மூடி குளிர்நீரை முகத்தில் அடிப்பார்கள்.  தொடர்ந்து ஒரு மணி நேரம் 'சிகிச்சை' தொடரும்.  என்னால் சுவாசிக்க முடியாது என்பதால் நான் பயந்து துடிப்பேன், அலறுவேன்... அப்போது  எனது கை கால்களில் காயங்கள் ஏற்படும்.  அப்போது அங்கே ஒரு டாக்டர் இருப்பார்.  எனது இதயத்துடிப்பு, ஆக்சிஜன் போன்றவற்றை அளவிடவே அங்கே அவர் இருந்ததாக நான் நினைக்கின்றேன்.  எந்த அளவுக்கு நான் தாக்குப்பிடிக்க முடியும் என்று சோதனை செய்தார்கள்".  

"தண்ணீர் சிகிச்சை" முறை 2003ஆம் ஆண்டோடு முடிவுக்கு வந்ததாக ஜார்ஜ் புஷ் நிர்வாகம் ஒப்புக்கொண்டது.   

இதுபோன்ற சித்ரவதை திட்டங்கள் ஜார்ஜ் புஷ் நிர்வாகத்தின் உயர் மட்டத்தில் தீட்டப்பட்டதாகவும், அந்த உயர்மட்டத்தில் சி.ஐ.ஏ.பயங்கரவாதிகள், ராணுவம், மருத்துவர்கள், மனநலமருத்துவர்கள் போன்றோர் இருந்ததாகவும் செ.சங்க அறிகையிலிருந்து தொ¢கின்றது. 

ஒவ்வொரு சித்ரவதை முறையும் 'எங்கோ' இருந்த அதிகாரிகளுக்குத் தொ¢விக்கப்பட்ட பின்னர்தான் கடைப்பிடிக்கப் பட்டதாக டானெர் கூறுகின்றார்.  அதாவது ஜார்ஜ் புஷ்ஷுக்கு தொ¢ந்தேதான் இந்த சித்ரவதைகள் நடத்தப்பட்டன.  பயங்கரவாத அமைப்பான சி.ஐ.ஏ.வின் விசாரணை அதிகாரி ஜான் கிரியாகூ (John Kiriakou), அமெரிக்க ஒலிபரப்பு நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலில் கூறினார்: "கைதிகளை விசாரணை நடத்துபவர் தனது இஷ்டத்துக்கு சித்ரவதைகளை செய்ய முடியாது.  ஒவ்வொரு சித்ரவதையை செய்யும் முன்னாலும் செயல்வடிவத்துக்கான டெபுடி டைரக்டா¢டம் அனுமதி பெற வேண்டும்.  'ஒத்துழைக்க மறுக்கின்றான், நான் அவனை '.........' செய்யப்போகின்றேன், அனுமதி வேண்டும்' என்று கேட்க வேண்டும், அனுமதி வரும்."

சுபயதாவின் சித்ரவதைகளுக்கு அனுமதி கொடுத்தது, அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் முதன்மைக்கமிட்டி.  இந்தக் கமிட்டியில் இருந்த பயங்கரவாதிகள் யார்? அன்றைய துணை ஜனாதிபதி டிக் செனே, அன்றைய பாதுகாப்பு ஆலோசகர் காண்டொலிசா ரைஸ், அட்டர்னி ஜெனெரல் ஜான் ஆஷ்க்ராஃப்ட்.  அதன் பின் சி.ஐ.ஏ.வின் இயக்குநர் ஜார்ஜ் டெனெட் நேரடியாகவே 'மிக உயர்ந்தவர்களின்' அனுமதியைப் பெற்று குறிப்பிட்ட சில கைதிகளுக்கு தரப்பட வேண்டிய சித்ரவதைகளுக்கு அனுமதி வாங்கினார்.

ஐக்கிய நாடுகள் சபையின் துணை அமைப்பான செஞ்சிலுவைச்சங்கமே இந்த அறிக்கையை அளித்துள்ளதால் இது உண்மையாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.  அதாவது ஜெனீவா உடன்படிக்கையில் எழுதப்பட்டுள்ள 'போர்க்கைதிகளை நடத்த வேண்டிய முறை, அவர்களுக்கான உ¡¢மைகள்' போன்றவற்றை ஜார்ஜ் புஷ் நிர்வாகம் தொ¢ந்தே மீறியுள்ளது என்பது தெளிவு.

மேலும் இது 14 கைதிகள் மட்டுமே தொடர்பான பிரச்னையும் அல்ல.  உலகம் முழுக்க வெளியே தொ¢ந்தும் தொ¢யாமலும் 'இருட்டுச்சிறைகளை' வைத்திருக்கின்ற அமொ¢க்க பயங்கரவாதிகளிடம் எத்தனை ஆயிரம் அப்பாவிகள் சிக்கி சீரழிகின்றார்கள் என்பது யாருக்கும் தொ¢யாது.

                                                 -2-

             ஹிட்லரும் அமெரிக்க ஜனநாயகமும்....

இவை அல்லாமல், 2001 செப்.11 தாக்குதலுக்குப் பின், அமொ¢க்கா பல நாடுகளில் இருந்து தான் சந்தேகப்படுகின்ற இளைஞர்கள் பலரை இரவோடு இரவாகக் கடத்தியுள்ளது, பலரைக் கொலை செய்துள்ளது.  குறிப்பாக ஆப்பிரிக்கா,  மத்திய ஆசியா, பால்கன், இந்தோனேசியா, பாகிஸ்தான், யூகோஸ்லேவியா, எகிப்து, போஸ்னியாஅஜர்பைஜான், அல்பேனியா, நைஜீ¡¢யா, ஃபிலிப்பைன்ஸ், கென்யா போன்ற நாடுகளில் இருந்து கடத்தப்பட்ட பல இளைஞர்கள் அமொ¢க்காவுக்கோ அல்லது அதன் சார்பு நாடுகளுக்கோ ரகசியமாக கடத்தப்பட்டார்கள், பலர் கொலை செய்யப்பட்டார்கள்.  ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்கு செல்ல கடைப்பிடிக்கப்படும் பாஸ்போர்ட், விசா போன்ற எந்த நடைமுறையும் இந்தக் கடத்தல் விசயத்தில் கடைப்பிடிக்கப்பட்டதில்லை ((தகவல்:www.wsws.org, 20.3.2002). 

தொடக்கத்தில் குறிப்பிட்ட "இரவும் பனிமூட்டமும்" என்ற ஹிட்லா¢ன் ஆணைக்கும் ஜார்ஜ் புஷ் என்ற பயங்கரவாதி செய்ததற்கும் என்ன வித்தியாசம்?

இவை அல்லாமல், இராக் நாட்டின் அபு-க்ரேய்ப் சிறையில் இராக் மக்கள் மீது, குறிப்பாக சிறு பையன்கள், இளைஞர்கள், பெண்கள் மீது அமொ¢க்க பயங்கரவாதிகள் நடத்திய கொடுமைகள், 2004ஆம் ஆண்டு புகைப்படமாக, வீடியோவாக வெளிவந்தபோது அமொ¢க்க ஜனநாயகத்தின் லட்சணம் மேலும் அம்பலமானது.  பாலியல் சித்ரவதைகள், அடிப்பது, நாயை ஏவிக் கடிக்க வைப்பது, அடித்தே கொல்வது... என அமொ¢க்க ஜனநாயக  சித்ரவதைகளை உலகம் கண்டு வியந்தது.

இப்படிப்பட்ட அமெரிக்க பயங்கரவாதியான  ஜார்ஜ் புஷ்ஷை தான் காதலித்தது போதாது என்று இந்திய மக்கள் அனைவருமே காதலிப்பதாக பொய் சொல்லி இந்தியாவில் வாழ்கின்ற அமைதி விரும்பிகள், போர் எதிர்ப்பாளர்களையும் அவமானப்படுத்தினார் அமொ¢க்க அடிமை மன்மோஹன் சிங்!

"இரவும் பனிமூட்டமும்" என்ற ப்ரொஜெக்ட் (திட்டம்) பற்றிய திரைப்படத்தைப் பற்றி முதலில் குறிப்பிட்டேன்.   இத்திரைப்படத்தில் இரவோடு இரவாகப் பயணிக்கும் ஒரு புகைவண்டி வருகின்றது.  சில வருடங்களுக்கு முன் 'ரெசிடென்ட் ஈவில்' (Resident Evil) என்றொரு ஹாலிவுட் திரைப்படம் வந்தது.  இப்படத்திலும் ஒரு ரயில் வருகின்றது, போகின்றது.  இப்படத்திலும் ஒரு ப்ராஜெக்ட்டுக்காக உழைக்கின்றார்கள்.  அதன் பெயர் அம்ப்ரெல்லா (குடை) (Umbrella).   கற்பனையான ப்ராஜெக்ட்தான்.  ஆனால்   "இரவும் பனிமூட்டமும்"  என்ற ப்ராஜெக்டைப் பார்த்தபின் "குடை"யும் ஏன் உண்மையாக இருக்கக்கூடாது என்று என் மனதில் தோன்றியது.  அது என்ன ப்ராஜெக்ட் என்று நீங்கள் தொ¢ந்துகொள்ள படத்தைப் பார்க்க வேண்டும்.  பார்த்தால் நீங்கள் பு¡¢ந்து கொள்வீர்கள் - ஜெர்மனி ஹிட்லா¢ன் நாஜி சர்வாதிகாரமும் அமெரிக்காவின் 'ஜனநாயக'மும் சந்தித்து சியர்ஸ் சொல்லிக்கொள்ளும்  இடம் எது என்பதை!

-3-

......நோபல் பரிசும்

பாரக் ஒபாமா ஹுசேன் ஆட்சிக்கு வரும் முன்னரே அவர் கறுப்பினத்தவர் என்ற ஒரே காரணத்தை மட்டும் வைத்து,  அவரை தேவதூதன் என்றும், கையில் தீப்பந்தம் ஏந்தாத  சுதந்திரதேவன் என்றும் பக்கம்பக்கமாக எழுதித்தள்ளினார்கள்.  இப்போது அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.  அவரே எதிர்பாராத (?) ஒன்று என்பதால் இந்த அறிவிப்பால் அவர் பதட்டமடைந்தார் என்றும், "நான் பெரிசா என்ன செஞ்சிட்டேன்?" என்று தன்னடக்கத்துடன் பேசியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்வளவும் செய்திட்டு எத்தனை அடக்கம்! பெரிய மனுசன்னா சும்மாவா! அடக்கம் அமர்ருல் உய்க்கும்கோ!

"சர்வதேச மக்களிடையே சமாதானத்தையும் நல்லுறவையும் வலுப்படுத்த அவர் எடுத்த முயற்சிகளுக்காகவும், அணுஆயுதங்களற்ற ஒரு உலகை நிறுவுவதற்கான அவரது ஆர்வத்தையும் அதை நோக்கிய பணிகளைப் பாராட்டியும் அமைதிக்கான நோபல் பா¢சை வழங்குகின்றோம்.  உலக அரசியலில் ஒரு புதிய தட்பவெப்ப நிலையை அவர் ஏற்படுத்தியுள்ளார்" என்பதாக நோபல் அமைதிப்பா¢சுக்கான நார்வே நாட்டின் குழுத்தலைவர் தோர்யோர்ன் ஜாக்லாண்ட் அறிவித்துள்ளார்.  மேலும் மேற்கத்திய நாடுகளுக்கும் உலக முஸ்லிம்களுக்கும் இடையே நிலவும் பகையுணர்வைத் தணிக்கவும், ஐரோப்பாவில் ஏவுகணை எதிர்ப்புக் கேடயத்திட்டத்தை உருவாக்குவதற்கான ஜார்ஜ் புஷ்ஷின் திட்டத்தின் தீவிரத்தை மட்டுப்படுத்தவும் (கைவிட அல்ல) ஒபாமா முயற்சி எடுத்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.  இப்படி நீண்ட அறிக்கையைப் பார்த்துத்தான் ஒபாமாவே மிரண்டு போயிருக்கக்கூடும்.


நோபல் அமைதிப்பரிசுக்கான குழுத்தலைவர் தோர்யோர்ன் ஜாக்லாண்ட் சொன்னதை மீண்டும் வாசியுங்கள். "ஒபாமா முயற்சிக்கின்றார், ஒபாமா கனவு காண்கின்றார், ஒபாமா ஆர்வமாய் இருக்கின்றார்".  ஆக இனிமேல் ஏதாவது செய்வார் என்ற நம்பிக்கையில் ஒருவருக்கு நோபல்பரிசு தரப்பட்டுள்ளது.  கனவு காண்பவர்களுக்கெல்லாம் நோபல் பரிசு என்றால் இந்தியாவிலும் ஒரு சிலருக்கு கிடைக்கக்கூடும்.  "உலக அமைதி, போர் இல்லாத உலகம், சமாதானம்" போன்ற மேன்மையான சொற்களை வாயிலிருந்து உதிர்த்ததற்காகவே ஒரு அமொ¢க்க ஜனாதிபதிக்கு நோபல் பா¢சு என்றால், கடந்த கால அமெரிக்க ஜனாதிபதிகளின் லட்சணம் எப்படி இருந்துள்ளது என்பது கேவலமாக வெளிப்படுகின்றது. 

புனிதமான நோபல் பரிசைசவப்பெட்டி வியாபாரிகளுக்கு தரலாமா என்பது போன்ற பிரமைகளோ புலம்பல்களோ நமக்கு இல்லை.  அமெரிக்க  அடிவருடிகளாலும் ஏகாதிபத்திய ஏஜெண்டுகளாலும் அளிக்கப்படும் நோபல் 'பரிசின்' மீது பெரிய மதிப்பு மரியாதை ஏதும் நமக்கு இல்லை.  அதே நேரம் இதுவரை இப்பரிசு பெற்றவர்கள் எல்லோருமே அமெரிக்க ஆதரவாளர்கள் என்றும் நாம் மட்டையாக குற்றம்சாட்டவும் இல்லை,  ஆனால் நோபல்பரிசு  அரசியல் சார்பற்றது என்று சொன்னால் நம்ப நாம் அப்பாவியும் இல்லை.

இணையதளங்களில் தேடியபோது கிடைத்த தகவல்கள் இவை:  1901ஆம் ஆண்டு தொடங்கி 2008ஆம் ஆண்டு வரை மொத்தமாக ஏறத்தாழ 800 நோபல்பரிசுகள் தரப்பட்டுள்ளன. அவற்றில் 759 பின் வரும் நாடுகளுக்கு சென்றுள்ளன: அமெரிக்கா-318, பிரிட்டன்-115, ஜெர்மனி-103, ஃப்ரான்ஸ்-57, ஸ்வீடன்-28, ஸ்விட்சர்லாந்து-25, ரஷ்யா-23, ஆஸ்த்ரியா-20, இத்தாலி-18, கனடா-18, நெதர்லாந்து-18, ஜப்பான்-16.  இவற்றில் ஜப்பான் மட்டுமே ஆசிய நாடு, மீதி அனைத்து நாடுகளும் அமொ¢க்கா, பி¡¢ட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகள்.  இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் இதுவரை பெற்ற மொத்த நோபல்கள் 27 மட்டுமே.  ஆப்பிரிக்கக்கண்டத்தின் கதை இன்னும் மோசம். ஒட்டுமொத்த ஆப்பிரிக்கக்கண்டத்துக்கும் 108 வருடங்களில் கிடைத்த பரிசுகள் 18 மட்டுமே.இதில் பாதிப்பேர் தென் ஆப்பிரிக்கர்கள், அல்லது ஆப்பிரிக்காவில் பிறந்து அமெரிக்காவிலோ அதன் கூட்டாளி நாடுகளிலோ இடம்பெயர்ந்து வாழ்பவர்கள். (இந்தியாவுக்கு இதுவரை கிடைத்துள்ள பத்து பரிசுகளில் பெரும்பாலானவை 'இந்திய' இந்தியர்களுக்கு கிடைத்தவை அல்ல, மேற்கு ஐரோப்பாவிலும் வட அமொ¢க்காவிலும் வாழ்கின்ற 'இந்தியா'வில் பிறந்தவர்கள்).

1901க்குப் பின் முதன்முதலாக பூமியின் தெற்குப்பகுதியில் ஒரு நாட்டுக்கு (அர்ஜென்டைனா) நோபல் பரிசு கிடைக்க முப்பத்தைந்து வருடங்கள் ஆனது.

நோபல் அமைதிப்பரிசை மட்டும் பேசுவோம்.  இதுவரை தரப்பட்டுள்ள 119 அமைதிப்பரிசுகள் பூகோளாரீதியாக இப்படித்தான் சென்றுள்ளன: ஐரோப்பிய நாடுகள்-16, ஆசிய நாடுகள்-11, ஆப்பிரிக்க நாடுகள்-4, வடக்கு-தெற்கு அமொ¢க்க நாடுகள்-5.  இதையே குடிமகன்கள் என்ற அடிப்படையில் பார்த்தால்: அமெரிக்கா-24, பிரிட்டன்-15,  ஃப்ரான்ஸ்-9,  ஸ்விட்சர்லாந்து-11, பெல்ஜியம், ஸ்வீடன், தென் ஆப்பி¡¢க்கா-தலா 4, ஆஸ்த்ரியா, இஸ்ரேல்-தலா 3, மீதியுள்ளவை மற்ற நாடுகளுக்கு, ஒன்று, இரண்டு என.  பா¢சு பெற்ற 97 தனிநபர்களில் 76 பேர் வெள்ளையர்கள் என்பது மிக முக்கியமானது, தற்செயலானது அல்ல.  இவர்களில் நிறவெறி தென்னாப்பி¡¢க்காவின் ஜனாதிபதியாக இருந்த வில்லியம் டி க்ளார்க்கும் அடங்குவார்.  10 பேர் ஆசியர்கள், 10 பேர் ஆப்பிரிக்க  வம்சாவழியினர் (கென்யாவின் வாங்காரி மாத்தாய், ஒபாமா உட்பட. இதிலும் கூட ஒபாமா ஆப்பிரிக்க-அமெரிக்கர்). ஒருவர் அமெரிக்க பூர்வகுடி வம்சாவழியர்.

97 தனிநபர் பரிசுகள் வெள்ளையர்களுக்கே போக, ஆப்பிக்கர்களுக்கும் ஆசியர்களுக்கும் வழங்கப்பட்ட அமைதிக்கான பரிசுகள் பெரும்பாலானவை வெள்ளையர்களுடன் அல்லது சில அமைப்புக்களுடன் இணைந்து அதாவது பங்கு வைக்கப்பட்டவை.  உதாரணமாக அன்வர் சதாத்+ மெனகம் பெகின், நெல்சன் மண்டேலா+டி க்ளார்க், யாசர் அராஃபத்+இட்சாக் ராபிப்+சிமோன் பெரேஸ்.  இரண்டாம் உலகப்போருக்கு முந்தைய பரிசுகள் அனைத்தும் ஐரோப்பிய நாடுகளின் கட்டுப்பாட்டில் இருந்த பல அமைப்புக்களுக்கு வழங்கப்பட்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதாவது உலக அமைதிக்கு எப்போதுமே கேடு தவிர எதையும் செய்யாத அமெரிக்கா, அதன் சகாக்கள் அமைதிப்பரிசில் ஒட்டிக்கொள்வது என்பது குற்ற உணர்ச்சி அன்றி வேறென்ன?
அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளான பிரிட்டன், ஃப்ரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளும் ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் படையெடுத்து எங்கெல்லாம் தமது காலனிய ஆதிக்கத்தை நிறுவ முயன்றார்களோ அந்தந்த நாடுகளின் பூர்வகுடி மக்களின் எதிர்ப்பை அவர்கள் கடுமையாக எதிர்கொள்ள வேண்டியிருந்தது, அவர்களை தயவுதாட்சண்யம் இன்றி ரத்தவெள்ளத்தில் மூழ்கடிக்க வேண்டியிருந்தது.  எங்கெல்லாம் தமது காலனிய ஆதிக்கத்தை நிறுவ முயன்றார்களோ அந்தந்த நாடுகளின் விடுதலைக்காகப் போராடிய மக்கள் தலைவர்களுக்கு அமைதிக்கான நோபல் பா¢சை வழங்கி, அமிலத்தாலும் கழுவ முடியாத தமது ரத்தக்கறை படிந்த வரலாற்றை மறைக்க முயன்றுள்ளதை நோபல் வரலாற்றைப் பார்த்தால் பு¡¢கின்றது.   குறிப்பாக ஒடுக்கப்பட்ட ஆப்பிரிக்க, ஆப்பிரிக்க-அமெரிக்க  வம்சாவழி மக்களுக்கு வழங்கப்பட்ட பா¢சுகளைப் பார்த்தால் இது புரியும். 

அமொ¢க்காவின் ரோட்னி கிங்கும், லண்டன் சுரங்கப்பாதையில் ஒரு தெரு நாயைப்போல் போலீசால் சுட்டுக்கொல்லப்பட்ட அப்பாவி பிரேசில் நாட்டு இளைஞன் ஜீன் சார்லஸ் டி மெனிசெசும், 2005ஆம் ஆண்டு அமொ¢க்காவின் நியூ ஆர்லியன்ஸ், லூசியானாவில் வீசிய கத்¡£னா சூறாவளியில் சிக்கி மடிந்த 2000 ஆப்பிரிக்க-அமெரிக்க  மக்களும் கறுப்பாய் பிறந்த ஒரே காரணத்துக்கான சுமையை எப்போதும் சுமக்கும் சின்னங்களாக என்றும் நினைவில் நிற்கின்றார்கள்.  ஆப்பிரிக்க, ஆப்பிரிக்க-அமெரிக்க வம்சாவழி மக்களுக்கு வழங்கப்பட்ட அமைதிக்கான நோபல்களின் அர்த்தங்களை ஒபாமா இவர்களிடம் கேட்டால் ஒருவேளை பு¡¢யக்கூடும். 


தொடரும்....2.

சனி, அக்டோபர் 22, 2011

அடுத்தது இரானும் சிரியாவும்

1) ஆம், லிபியாவின் அதிபர் கடாஃபி அமெரிக்க-NATO கூட்டு கொலைகாரப் படைகளால் கொல்லப்பட்டுவிட்டார். இதற்கு முன் இராக் அதிபர் சதாம்ஹுசேன். பெட்ரோலிய எண்ணெய் வளம் நிறைந்த அரபு மண்ணில் தனது ஆக்கிரமிப்பை வலுப்படுத்த அங்குள்ள நாடுகளில் ஜனநாயகம் இல்லை என்று கூக்குரல் எழுப்புவதும், தனது கைக்கூலிகளை வளர்த்து உள்ளுரில் ’மக்கள் கிளர்ச்சி’யை கிளப்புவதும் அமெரிக்க ‘ஜனநாயகம்’. அரபு பிராந்தியத்தில் உள்ள எண்ணெய் வளத்தை தன் கூட்டாளி நாடுகளில் ஸ்டாக் செய்யும் பொருட்டு பைப் லைன் போடும் திட்டத்தை அமல் படுத்த இராக்கில் நுழைந்து சதாமைக் கொன்றார்கள், ஆஃப்கானிஸ்தானில் நுழைந்து ‘வழியை’ க்ளீயர் செய்தார்கள். இப்போது லிபியா. அடுத்தது இரானும் சிரியாவும். கடாஃபியின் சொந்த ஊரான சிர்தேயில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாகவே ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் இறங்கிய அமெரிக்க-NATO கூட்டு கொலைகாரப் படைகள், அனேகமாக அந்த நகரத்தின் ஒவ்வொரு கட்டிடத்தையும் தரைமட்டமாக்கி விட்டது, குண்டுவீச்சில் செத்த சாமானிய லிபிய மக்களின் எண்ணிக்கைக்கு கணக்கே இல்லை, விளைவு மரணம், தொற்று நோய், உணவு, தண்ணீர், மருந்து தட்டுப்பாடு...
2) சரித்திரத்தில் சர்வாதிகாரிகளின் சாவு இப்படித்தான் எனில், உலகமக்களின் விரோதிகளான அமெரிக்க அதிபர்களின் முடிவும் அமெரிக ஏகாதிபத்தியத்தின் மரணமும் இப்படித்தான் இருக்கும். ஆனால் ஒரு வித்தியாசம் - கடல் கடந்து ஏதோ ஒரு நாட்டின் அல்லது நாடுகளின் கூட்டுப்படைகளால் அந்த மரணங்கள் நிகழ்த்தப்படாது, மாறாக சாமானிய அமெரிக்க உழைக்கும் மக்கள் - வெள்ளையினர், கறுப்பினர், கலப்பினர் என்ற வேறுபாடின்றி - ஒன்று திரண்டு, உலகமக்களுக்கு எதிராக உலக முதலாளிகளும் ஏகாதிபத்திய ஏவல் நாய்களும் கூடிக்குலாவுகின்ற தலைமையிடமான வெள்ளைமாளிகையிலேயே அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு சமாதி கட்டுவார்கள். அதற்கு கட்டியம் கூறுபவைதான் Wall street-ல் இன்று பறக்கின்ற பதாகைகளும் அதன் தொடர்ச்சியாக 82 நாடுகளில் இன்று பல்வேறு மொழிகளில் வீதிகளில் ஒலிக்கின்ற சாமானிய உழைக்கும் மக்கள் முழங்குகின்ற ‘வால்வீதியை ஆக்கிரமிப்போம்! உண்மையான ஜனநாயகம் வேண்டும்!’ கோசங்கள்!
3)அரபு நாடுகளான துனீசியாவில், எகிப்தில், லிபியாவில், பஹ்ரீய்னில் மக்கள் வீதிகளில் திரண்டபோது கிரிக்கெட்டுக்கு சமமாக live relay ஒளிபரப்பிய ‘நடுனிலை’ பத்திரிகை, டிவி ஊடகங்கள், Wall Street விசயத்தில் எருமை மாட்டின் மேல் மழை பேய்ஞ்ச கணக்கில் சுரணை அற்று இருப்பதன் மர்மம்தான் என்ன?