திங்கள், அக்டோபர் 24, 2011



நாற்பத்துநான்காவது இரட்சகனும்..... பாகம் 2




...நாற்பத்துநான்காவது இரட்சகனும்

ஒபாமா பதவி ஏற்கும் முன்னரே, ஈராக்கில் இருந்தும் ஆஃப்கானிஷ்தானில் இருந்தும் அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகளை விலக்கிக்கொள்வார் என்றும் அமெரிக்கபோர் விமானங்களில் இனிமேல் குண்டுகளுக்குப் பதிலாக ரோஜாப்பூக்கள் மட்டுமே ஏற்றப்படும் என்றும் பலர் கனவுகண்டு வானத்தைப் பார்த்தபடியே இருக்க, நாற்பத்துநான்காவது 'இரட்சகன்' ஆன ஒபாமா அவர்களின் கனவை டிஷ்யூ பேப்பரில் துடைத்துப்போட்டார்.

 தொடக்கத்தில் சொல்லப்பட்ட க்வான்டனமோ, அபுக்ரேய்ப் போன்ற உலகெங்கிலும் உள்ள சித்ரவதை முகாம்களை ஒபாமா மூடவும் இல்லை, முறையான விசாரணைக்கு உத்தரவு இடவும் இல்லை.  மாறாக, குடியரசுக்கட்சியின் புஷ் நிர்வாகத்தில் நடந்த அனைத்து மனித உ¡¢மைகளையும் அத்துமீறல்களையும் மூடி மறைக்கும் வேலையில் ஜனநாயகக்கட்சியின் ஒபாமா இறங்கியுள்ளார்.  பல விசாரணைகளில் ஒபாமா நிர்வாகம் தலையிட்டு தகவல்களை மறைத்து புஷ் நிர்வாகத்தைக் காப்பாற்றும் வேலையைச் செய்கின்றது.   ஏன்?  'இருட்டுச்சிறை'க் கொடுமைகள், அதற்கு புஷ் நிர்வாகத்தின் அங்கீகாரம் ஆகியன அன்றைய அமெரிக்க  நாடாளுமன்றத்தின் (காங்கிரஸ்) ஜனநாயகக்கட்சியின்  தலைமைக்கு நன்றாகவே தொ¢யும்.  மேலும் அன்றைய புஷ் நிர்வாகம் கொண்டுவந்த மிலிடரி  கமிஸன் சட்டம் 2006க்கு ஜனநாயகக்கட்சி ஆதரவு கொடுத்தது.  இந்த சட்டம் என்ன சொல்கின்றது? "அந்நிய, சட்டவிரோத எதிரிகள் இந்த சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டால், அவர்களுக்கு ஜெனீவா சட்டம் சொல்கின்ற உ¡¢மைகள் வழங்கப்படாது".  அதாவது அமெரிக்க சட்டங்களுக்கு முன் சர்வதேச சட்டம் எதுவும் செல்லாது!   தவிர, புஸ் நிர்வாகத்தில் இருந்த அதே ராணுவ, உளவு அதிகாரிகள்தான் இப்போது ஒபாமா நிர்வாகத்திலும் தொடர்கின்றார்கள்.  இவர்களை சேதப்படுத்தும் எந்த நடவடிக்கையிலும் இறங்க ஒபாமா விரும்பவில்லை. 

இதற்கு முன் இருந்த அமெரிக்க வெள்ளைமாளிகைவாசிகள்  கடைப்பிடித்த அதே நாடுபிடிக்கும் கொள்கைகள், ஆயுதக்கொள்கைகள் ஆகியவற்றுக்கு மாற்றாக ஒபாமா நிர்வாகம் எந்த விதமான கொள்கையையும் அறிவிக்கவில்லை.   அமெரிக்கப் பொருளாதாரம் சீரழிந்து சின்னாபின்னமாக சிதறிக் கிடக்கும் இன்றைய நிலையில் அமெரிக்காவின் எல்லை தாண்டிய பயங்கரவாதம், குறிப்பாக எண்ணெய் வளம் மிக்க அரபுப் பிரதேசத்தில் மேலும் தீவிரமடையும் என்பதைப் பு¡¢ந்துகொள்வோமாக.


2009 ஜனவரி மாதம் வெள்ளைமாளிகையில் குடியேறிய ஒபாமா, அமொ¢க்காவின் நானூறு வருட 'உலக ரவுடி' பாத்திரத்தை தலைகீழாக மாற்றிவிட்டாரா, கிழிந்து நார்நாராய் தொங்கும் 'உலக அமைதியை' நிலைநாட்ட அவர் என்ன செய்துள்ளார் என்ற கேள்வி பரவலாக விவாதிக்கப்படும்போது நாமும் அதைப் பேசவேண்டியுள்ளது.

*2003 ஜனவா¢ தொடங்கி 2008 டிசம்பர் வரை இராக்கில் அமெரிக்க+பிரிட்டிஷ் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட இராக் மக்களின் எண்ணிக்கை லட்சத்துக்கும் மேலே.  ஒபாமா பதவி ஏற்றபின் இராக்கில் செத்தவர்கள் 2009 ஆகஸ்ட் வரை 3,008 என்று இராக் சாவுக்கணக்கெடுப்பு இணையதளம் சொல்கின்றது.  சர்வாதிகாரி ஜார்ஜ் புஷ்ஷின் பதவிக்காலத்தில் இராக்கிலும் ஆஃப்கனிலும் இறக்கப்பட்ட படைகளைவிடவும் அதிகமான படைகளை ஒபாமா இந்த ஒன்பது மாதத்தில் அனுப்பியுள்ளார்.
*ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் 21,000 படைகளை ஆஃப்கனுக்கு அனுப்பியதோடு மேலும் 13,000 பேர் ரகசியமாக அனுப்பிவைக்கப்பட்டதாக வாஷிங்க்டன் போஸ்ட் சொல்கின்றது.

*புஷ் ஆட்சிக்காலத்தில் 2007இல் ஆஃப்கனில் 26,000 தீவிரவாதிகளும், இராக்கில் 1,60,000 தீவிரவாதிகளும் அமெரிக்கப்படைகள் என்ற போரில்  குவிக்கப்பட்டனர்.  இப்போது ஆஃப்கனில் 65,000 பேரும் இராக்கில் 1,24,000 பேரும் (மொத்தம் 1,89,000) இருப்பதாக வா.போ. கூறுகின்றது.  ஆஃப்கனில் உள்ள அமெரிக்க தீவிரவாதிகளின் தலைமைத்தளபதியான ஸ்டான்லி மக்கி¡¢ஸ்டல், ஆஃப்கனில் மேலும் 80,000 துருப்புக்கள் தேவை என்று அமெரிக்க அரசிடம் கேட்டிருப்பதாக அமெரிக்க ராணுவம் அமெரிக்க ஊடகங்களில் தொ¢வித்துள்ளது.  என்.பி.சி. எனப்படும் நேஷனல் பிராட்காஸ்டிங் கார்பொரேஷன் ஒளிபரப்பில் பேட்டியளித்த முன்னாள் அமொ¢க்க ஜெனெரல் பாரி மக்காஃப்ரே, குறைந்தது அடுத்த பத்து வருடங்களுக்கு முன்பு அமெரிக்கப்படைகள் ஆஃப்கனில் இருந்து வெளியேறாது என்று கூறியதுடன், அமெரிக்கப்படைகளுக்கான செலவு ஒரு மாதத்துக்கு ஐநூறு கோடி டாலராக (23,000 கோடி ரூபாய்க்கு சமம்) என்றும் கூறினார்.

உலகின் மிகப்பொ¢ய பெட்ரோலியவளச் சுரங்கங்களான மத்திய ஆசியாவிலும் பாரசீக வளைகுடாவிலும் இருக்கின்ற பெட்ரோலிய வளத்தை சொட்டுவிடாமல் சுரண்டிக் கொண்டு போகும்வரை, இராக்க்கிலும் ஆஃப்கனிலும் குவிக்கப்படும் அமெரிக்க தீவிரவாதிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகாரிக்கும். அல்-காய்தா, பின் லேடன் போன்ற காரணங்கள் எல்லாம் உலகமக்களையும் அமெரிக்க மக்களையும் சேர்த்து ஏமாற்றும் அமெரிக்க அதிபர்களின்  தந்திரங்களே.  பாரக் ஒபாமா இந்த வரிசையில் நாற்பத்து நான்காவது ரட்சகனாக களத்தில் குதித்துள்ளார்.

அமெரிக்க ஆதரவாளர்கள், ஊடகங்கள், கார்போரேட் கரடிகள், காளைகள் போன்றோர் ஒபாமாவுக்கு அமைதிப்பரிசு என்று ஆராவாரம் செய்வதை நம்மால் புரிந்துகொள்ள முடிகின்றது.  ஆனால் மனித உரிமை ஆர்வலர்களாலும் முற்போக்கு இயக்கங்களாலும் பெரிதும் மதிக்கப்படுகின்ற வி.ஆர்.கிருஷ்ணய்யர் போன்றவர்களும் இந்த ஆரவாரத்தில் பங்கேற்பதை நம்மால் பு¡¢ந்துகொள்ள முடியவில்லை.

வியட்நாம் மீது போர் தொடுத்து நாபாம் குண்டுகளை வீசி வியட்நாம் மக்களைப் படுகொலை செய்த அமெரிக்க  தீவிரவாதிகளில் முக்கியமான பாத்திரம் வகித்த ஹென்ரி கிஷ்ஷிங்கருக்கு 1973 நோபல் அமைதிப்பரிசு வழங்கப்பட்டது.  பாலஸ்தீன மக்களைக் கொன்றுகுவித்த இஸ்ரேலின் மெனாக்கம் பெகினுக்கு இதே பா¢சு வழங்கப்பட்டது.  லட்சக்கணக்கான ஆஃப்கன் மக்களைக் கொலைசெய்யக் காரணமாக இருந்த அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டருக்கு 2002ஆம் ஆண்டு இதே பா¢சு வழங்கப்பட்டது.

தொடர்ந்து கிறிஸ்டோபர் கொலம்பஸ், ஜெனரல் டயர், ஹிட்லர், ஹிரோஷிமா-நாகசாகியில் அணுகுண்டு வீசிய ஹாரி  ட்ருமன், ரோட்னிகிங்கை அடித்து நொறுக்கிய போலீஸ்காரர்கள், நாதுராம் கோட்சே, நரேந்திரமோடி  போன்றவர்களுக்கு அடுத்தடுத்து நோபல் அமைதிப்பரிசு  வழங்க வேண்டும் என்று அமெரிக்க ஆதரவாளர்களும், ஊடகங்களும்  மனுப்போடலாம்.

 நாற்பத்துநான்காவது ரட்சகன் கையில் ஜார்ஜ் புஷ் கொடுத்துச்சென்ற பழைய சுத்தியலுடனும் சில புதிய ஆணிகளுடனும் இருட்டுப்பிரதேசமான வெள்ளைமாளிகையில் குடியேறியுள்ளார் - ஜனநாயகத்தின் சவப்பெட்டியில் மிச்சம்மீதி இடமிருந்தால் அறைவதற்கு.   அந்த சுத்தியல் நானூறு வருடங்கள் பழமையானது, இடையறாத உபயோகத்தின் காரணமாக கைப்பிடி மிகப் பளபளப்பானது, ஆனால்  ரத்தக்கறை படிந்தது.

கருத்துகள் இல்லை: