செவ்வாய், பிப்ரவரி 19, 2013

இது விஸ்வரூபம் விமர்சனம் அல்ல...




வாஷிங்டன் மாநகர். நேரம் நள்ளிரவு 12 மணி. வெள்ளைமாளிகையின் வாசல் திறக்கப்படுகின்றது. வந்து நிற்கும் காரின் கதவுகளை மிகப்பணிவுடன் பணியாளர் திறந்து விடுகின்றார். உள்ளேயிருந்து ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் மதிப்பிற்குரிய செயலாளர்ஜி இறங்கி நேராக அமெரிக்க அதிபர் ஒபாமாஜியின் அறைக்கு செல்கின்றார்.  அங்கே நீள்வட்ட வடிவ நீண்ட மேஜையில் இரண்டு கைகளையும் முழங்கைகளால் ஊன்றியபடியும் இரண்டு உள்ளங்கைகளால் கன்னங்களை தாங்கியபடியும் அடக்கமுடியாமல் குமுறி குமுறி அழுதபடி இருப்பவர்   ஒபாமாஜி. இடதுபுறம் அமர்ந்திருக்கும் வெளியுறவுத்துறை செயலாளரும் வலதுபுறம் அமர்ந்திருக்கும் உள்துறைசெயலாளரும் (நமது பாஷையில் மந்திரிகள்) அவரை சமாதானப்படுத்த முயல்கின்றார்கள். “சரி விடுங்க, அழுது புரண்டு என்ன பிரயோசனம்? ஏதோ நம்மால் ஆன உதவிகளை அவங்களுக்கு செய்வோம், அழாதீங்க. இதோ பாருங்க, ஐ.நா.பொதுச்செயலாளரும் வந்துட்டாரு, இனிமே நாம் கவலைப்பட வேண்டாம், சர்வதேச சமுதாயமும் நம்ம பக்கம்தான் என்றபடியே ஐ.நா.செயலாளர்ஜியை வரவேற்க, அவரோ தன்னையும் மீறி ஏற்கனவே அழுதுகொண்டிருந்த ஒபாமாஜியை கட்டிப்பிடித்து பெருங்குரலெடுத்து இப்படியும் நடக்குமா? ஐயோ!வென கதறி அழுகின்றார். அருகில் உட்கார்ந்திருக்கும் புஷ்ஜி, கிளிண்டன்ஜி, வால்மார்ட் முதலாளிஜி, பெட்ரோலிய கம்பெனிகளான எக்சான் மோபைல், ப்ரிட்டிஷ் பெட்ரோலியம், ஷெல், கொனொகோ ஃபிலிப்ஸ், செவ்ரோன், ஆக்சிடெண்டல், எமெர்சன் ஆகியவற்றின் முதலாளிஜிக்களும், கொகொகோலா முதலாளிஜி, பெப்சி முதலாளிஜி, யூனியன் கார்பைடு முதலாளியான வாரன் ஆண்டர்சன்ஜி, மான்சாண்டோ முதலாளிஜி, கார்கில் முதலாளிஜி, என்ரான் முதலாளிஜி, சி ஐ ஏ, எஃப் பி ஐ இயக்குனர்கள்ஜி அனைவரும் அவரை சமாதானப்படுத்த முயல்கின்றார்கள்.

********************
அதே நேரம் பாரத்தேசத்தின் தலைநகரம் டெல்லியில் ராணுவத்தலைமையகத்தின் முன் ஒரு கறுப்புக்கலர் கார் வந்து நிற்கின்றது. தரைப்படைத்தளபதி, விமானப்படைத்தளபதி, கடற்படைத்தளபதி மூவரும் சேர்ந்து காரின் கதவைத்திறக்க அதிலிருந்து இறங்கியவருக்கு விரைப்புடன் மூவரும் சல்யூட் வைக்கின்றனர். கைகுலுக்கி அவரை வரவேற்று உள்ளே ஒரு அறைக்கு அழைத்து செல்கின்றனர். அங்கே ஏற்கனவே ராஹுல்ஜி. மன்மோஹன்ஜி, சிதம்பரம்ஜி, அத்வானிஜி, ராஜ்நாத்ஜி, மோடிஜி, மாண்டேக்சிங் அலுவாலியாஜி, அனில் அம்பானிஜி, முகேஸ் அம்பானிஜி, டூஜி, த்ரீஜி ஆகியோரோடு உளவுத்துறையான ரா இயக்குனர்ஜியும் இவரை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்கள். காரில் வந்தவரை மன்மோஹன்ஜி கைகுலுக்கி வரவேற்க மறு விநாடியே வந்தவர் குமுறிக்குமுறி புரண்டு அழுகின்றார். “சரி விடுங்க, அழுது புரண்டு என்ன பிரயோசனம்? ஏதோ நம்மால் ஆன உதவிகளை அவங்களுக்கு செய்வோம், அழாதீங்க. இதோ பாருங்க, ஒபாமாஜியும் ஐ.நா.பொதுச்செயலாளர்ஜியும் அங்கே காத்துக்கிட்டு இருக்காங்க என்றபடியே அவரை சமாதானப்படுத்துகின்றார் மன்மோஹன்ஜி. அவர் இருக்கையில் அமர்ந்தவுடன் தளபதி சைகை காட்ட விளக்குகள் அணைக்கப்பட தலைக்குமேல் ப்ரொஜெக்டரில் இருந்து படம் விழுகின்றது திரையில். அதே படம் அதே நேரத்தில் வாஷிங்டனில் வெள்ளைமாளிகையிலும் தெரிகின்றது. திரையில் இராக்கின் தலைநகரான பாக்தாத். வீதிகளில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என லட்சக்கணக்கானோர் கூடி நின்று ஆக்ரோசமாக கோஷம் இடுகின்றார்கள். சதாம் உசேன் ஒழிக! கடலை மிட்டாயை ஒழித்துவைத்த சதாம் உசேன் ஒழிக! கடலைமிட்டாயை ஒழித்துவைத்து எங்களை பட்டினி போடும் சதாம் ஒழிக! என்று கோஷம் வானத்தை ரெண்டாகப் பிளக்கின்றது. பாக்தாத் மட்டும் இன்றி இராக் தேசமே இக்கோஷத்தால் திமிலோகப்படுகின்றது.  இது பற்றியெல்லாம் ஒருதுளிகூடக் கவலைப்படாமல் அரண்மணையின் சாப்பாட்டு அறையில் யாருக்கும் தரமாட்டேன் என்றபடியே தட்டுத்தட்டாக கடலைமிட்டாய்களை தின்றபடியே இருக்கின்றார் சதாம் உசேன்.

*****************************************
டெல்லியிலும் வாஷிங்டனிலும் படம் முடிகின்றது. இப்போது டெல்லியில் காரில் வந்தவர் மீண்டும் ஓவென அழத்தொடங்க ரா இயக்குனர் அவரை ஆசுவாசப்படுத்துகின்றார். அழாதீங்க! இப்போதான் நீங்க தைரியமா இருக்கணும்! இராக் குழந்தைகளுக்கு கடலைமிட்டாய் கிடைச்சே ஆகணும்கறதுல பாரத் சர்க்காரும் ஒபாமாஜியும் புஷ்ஜியும் உறுதியா இருக்கறோம்! இதுக்கு யாரு தடையா இருந்தாலும் அவங்களை வேரோடும் வேரடி மண்ணோடும் ஒழிச்சுக்கட்டுறதுன்னு பாரத்மாதா மேல சத்தியம் செய்துருக்கோம்! இந்த ஆக்சனுல நீங்கதான் நேரடியா இறங்கப்போறீங்க! இதுக்கு ஐ.நா.செயலாளர்ஜியும்  அனுமதி கொடுத்துட்டாரு! இன்னிலேயிருந்து உங்க பேரு ராமசாமி ரஹ்மத்துல்லா காஷ்மீரி! இந்தாங்க ஃப்ளைட் டிக்கட். இன்னிக்கு ராத்திரி 12 மணி ஃப்ளைட்டுல நீங்க அமெரிக்கா போறீங்க! இதோ இந்தப் பையிலே கதக், கதகளி, கரகாட்டம், டப்பாங்குத்து டான்ஸ் காஸ்ட்யூம், ஷாம்பூ, கத்திரி, சவரக்கத்தி, சலங்கை, ஜதிக்கட்டை, தொப்பி, ஒட்டுத்தாடி, ஜிப்பா, 30 நாள்ல உருது, புஷ்டு, அரபி, ஹிந்தி கத்துக்கறது எப்புடி புக்ஸ் எல்லாம் இருக்கு! இது இல்லாம 20 டஜன் கைக்குட்டை தனியா இருக்கு! அழுதா துடைச்சுக்குங்க! ஆல் தி பெஸ்ட்! வாஷிங்டன்ல பாரத் தூதர் உங்களுக்காக எல்லா அரேஞ்மெண்டும் செய்வார்! பாரத் மாதா கீ ஜே! என்று சொல்ல, அனைவரும் வாசல் வரை வந்து வழியனுப்ப, ராமசாமி ரஹ்மத்துல்லா காஷ்மீரி காரில் ஏறி இந்திராகாந்தி இண்டெர்னேஷனல் ஏர்போர்ட்டுக்கு விரைகின்றார்.

********************************
வாஷிங்டன் வெள்ளைமாளிகை வாசல். ஒபாமாஜி, புஷ்ஜி உள்ளிட்ட பல ஜிக்களும் சி ஐ ஏ, எஃப் பி ஐ இயக்குனர்கள்ஜிக்களும் காத்திருக்க ஒபாமாஜியின் தனிச்செயலாளர் ஒபாமாஜியின் காதில் ஏதோ சொல்ல வாவ்! ஒண்டர்ஃபுல்! என்றவாறே பக்கத்தில் நிற்கும் ஜிக்களை உள்ளே அழைத்து செல்கின்றார். அங்கே அறையில் ஏற்கனவே ராமசாமி ரஹ்மத்துல்லா காஷ்மீரி உட்கார்ந்திருக்கின்றார். குட் மார்னிங் ஒபாமாஜி அண்ட் அதர் ஜீஸ்! நாம இறங்கப்போறது அதிரடி ஆக்சன்ங்கறத மறந்துடாதீங்க! யாருக்கும் துளியளவு கூட தெரியக்கூடாது! நம் எதிரிகள் உஷார் ஆகிடுவாங்க! அதனால பின் வாசல் வழியா வந்தேன்! என்று சொல்ல இண்டர்னேஷனல் பயங்கரவாதத்தை அடக்கும் அதிரடி ஆக்சனுக்கு ஒட்டுமொத்த குத்தகை எடுத்து திமிரோடு திரியும் சி ஐ ஏ, எஃப் பி ஏ இயக்குனர்கள் கூட வெட்கத்தில் தலை குனிந்தார்கள். வாவ்! இண்டியன்ஸ் ஆர் க்ரேட்! என்று ஒபாமாஜி வியக்க, உடனடியாக ஒரு பாராட்டு சான்றிதழ் டைப் செய்யப்பட்டு ரா.ர.காஷ்மீரிக்கு வழங்கப்பட்ட்து. கூட்டம் முடியும்போது பாரதப்பிரதமரிடம் இருந்து ரா.ர.காஷ்மீரிக்கு தொலைபேசி வந்தது. ரா.ர.காஷ்மீரி இறங்கப்போகும் அதிரடி ஆக்சனுக்கு பிரதமர் வாழ்த்து சொல்ல ரா.ர. ஜெய் ஹிந்த்! என்று பேச்சை முடிக்க ஒபாமாஜி முறைக்க ரா.ர.காஷ்மீரி தன் தவற்றை உணர்ந்து காட் சேவ் அமெரிக்கா! என்று முடிக்கின்றார்.

************************************
திட்டமிட்டபடி ராமசாமி ரஹ்மத்துல்லா காஷ்மீரி ஃப்ளொரிடா மாகாணத்தில் தோண்டப்பட்ட ஒரு பாதாளச்சாக்கடை வழியாக இராக் வந்து பாக்தாத்தின் நெரிசலான ஒரு மார்க்கெட்டின் மேலே வந்து விடுகின்றார். சதாம் உசேனுக்கு லாலிபாப் என்றால் கொள்ளை ஆசை என்று சிஐஏ மூலம்தெரிந்துகொண்டு ஒரு பை நிறைய லாலிபாப்புடன் சதாமின் அரண்மணைக்கு முன்னால் சலங்கை கட்டி கதக், ஒடிசி, கதகளி, டப்பாங்குத்து, கரகாட்டம் என கலந்துகட்டி டான்ஸ் ஆடுகின்றார். ஆடிக்கொண்டிருக்கும்போதே லாலிபாப்களை அள்ளிஅள்ளி வீச அது அப்படியே விரிந்து சதாமின் அரண்மணைக்கு முன்னால் மலைபோல் குவிந்துவிடுகின்றது. இதைக்கேள்விப்பட்ட சதாம் ராமசாமி ரஹ்மத்துல்லா காஷ்மீரியை அரண்மணைக்குள் வரச்சொல்கின்றார். சிஐஏ,எஃப் பி ஐ, ரா எல்லோரும் எதிர்பார்த்ததும் இதுதான். யாரப்பா நீ? என சதாம் வினவ ரா.ர.காஷ்மீரி என் சொந்த ஊர் கைபர் கணவாய், ஊர் ஊராப் போயி டான்ஸ் ஆடி ஜனங்களை சந்தோசப்படுத்துறதே என் தொழில் என சொல்கின்றார்.  ஏற்கனவே திட்டமிட்டபடி இருபது லாரி நிறைய லாலிபாப் இறக்குமதி செய்வதற்கான அனுமதியை சதாமிடம் இருந்து பெறுகின்றார். ஆனால் லாரியில் வந்து இறங்கியதோ அத்தனையும் வெடிகுண்டு, ஏவுகணைகள், துப்பாக்கிகள். லாரியை ஓட்டிவந்த டிரைவர்கள் கிளீனர்கள் எல்லோரும் சிஐஏ, எஃப் பி ஐ, ரா அதிரடி ஆக்சன் வீர்ர்கள். திட்டமிட்டபடி அரண்மணைக்குள் நுழைந்து சதாமைக் கைது செய்கின்றார்கள். சதாமின் படைவீர்ர்கள் சிஐஏ, எஃப் பி ஐ, ரா அதிரடி ஆக்சன் வீரர்கள் மீது தாக்குதல் நடத்த பதிலுக்கு இவர்கள் தாக்குதல் நடத்த சதாமின் ராணுவம் மொத்தமும் க்ளோஸ். 

சதாம் ஏற்கனவே ஆயிரம் வருடங்களாக பூமிக்கு அடியில் புதைத்து மறைத்து வைத்துள்ள கடலை மிட்டாய்களை சிஐஏ, எஃப் பி ஐ, ரா அதிரடி ஆக்சன் வீரர்கள் தோண்டியெடுத்து ஆய்வு செய்ததில் அது இராக் மக்களுக்கு ஒத்துக்கொள்ளாது, அலர்ஜி ஆகும் என்று தெரிகின்றது. எனவே கடலைமிட்டாய்களை ஆஃப்கானிஸ்தான் வழியாக அமெரிக்காவுக்கே கொண்டு செல்வதென்று முடிவானது. இதற்கு தடையாக இருக்கும் அனைவரும் சர்வதேச பயங்கரவாதிகள் என்று ஐ.நா.செயலாளர்ஜி டிவியில் அறிவிக்கின்றார். இராக் மக்களோ எங்கள் மண்ணில் விளைந்த கடலைமிட்டாய் எங்களுக்கே சொந்தம், எடுத்துச் செல்ல விடமாட்டோம் என  சி ஐ ஏ, எஃப் பி ஐ அதிரடைப்படைகளை எதிர்த்து வீதிகளில் போராடுகின்றார்கள். அதிரடி ஆக்சன் வீரர்கள் இவர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றார்கள், ஆனால் சிஐஏ, எஃப் பி ஐ வீசும் குண்டுகளும் ஏவுகணைகளும் கூட்டமாய் கூடி நிற்கும் இராக் பெண்கள் குழந்தைகள் மீது  விழுந்தால் அவை உடனடியாக ரோஜா, மல்லிகை என புஷ்பங்களாக மாறிவிடும் மாயமும் நடந்தது.

அடுத்தகட்டமாக இராக்கில் இருந்து ஆஃப்கானிஸ்தான் வழியாக அமெரிக்காவுக்கு ரோடு போடும் வேலை ஆரம்பமானது. ஒரு காலத்தில் அமெரிக்காவின் பிசினஸ் பார்ட்னராக இருந்து பின்னர் பிசினசில் தகராறு ஏற்பட்டு பிரிந்து சென்ற ஒசாமாஜி ஆஃப்கானிஸ்தானத்தில் இருப்பதாக சிஐஏ, எஃப் பி ஐ, ரா மூலம் அறிந்த ராமசாமி ரஹ்மத்துல்லா காபூல் மார்க்கெட் நடுவில் நின்று கதக், கதகளி, பரதம், ஒயிலாட்டம் ஆட மறைந்து நின்று பார்த்த ஒசாமாஜியின் குடும்பம் மொத்தமும் வாயில் நுரை தள்ளி சாகின்றார்கள். கூடவே அல்கைதா, தாலிபான் பயங்கரவாதிகள் எல்லோரும் தாமாகவே முன்வந்து தற்கொலை செய்துகொள்கின்றார்கள். பாப்ரக் கார்மலை எந்த விளக்குக்கம்பத்தில் தூக்கில் போட்டார்களோ அதே கம்பத்தில் சதாம் உசேனையும் தூக்கில் போடுகின்றார்கள் சிஐஏ, எஃப் பி ஐ, ரா அதிரடி ஆக்சன் வீர்ர்கள். சே குவாரா, சால்வடார் அலண்டே, பாட்ரிஸ் லுமும்பா, கென் சாரோ விவா, யாசர் அராஃபத், நஜிபுல்லா ஆகியோர் புதைக்கப்பட்ட அதே இட்த்தில் சதாமையும் புதைத்துவிடுகின்றார்கள் சிஐஏ, எஃப் பி ஐ, ரா அதிரடி ஆக்சன் வீர்ர்கள்.
********************************
சென்னை. கூவம் நதியோரம் ஒரு பங்களாவிலிருந்து கேட்கின்றது அந்த ஒலி தாதா தைதை தாதா தைதை தகதிமி தைதை... உள்ளே சலங்கை ஜதிக்கட்டை சீராக ஒலிக்க ராமசாமி ரஹ்மத்துல்லா என்ற ராமத்துல்லா  ரஹ்மத்சாமி என்ற ரஹ்மத்சாமி ராமத்துல்லா ஏழெட்டுப்பெண்கள் சூழ கதக், ஒடிசி, கும்மியாட்டம் என்று கலந்துகட்டி ஆடிக்கொண்டிருக்கின்றார். தொலைபேசி மணி ஒலிக்கின்றது. தகதிமி தகதிமி தகதிமி தகதிமி என அபிநயம் பிடித்தபடியே தொலைபேசியை எடுத்து காதில் வைக்க,  “மிஸ்டர் ரா.ர.! உடனடியாக டெல்லிக்கு புறப்படுங்க! இரானில் ஒரு அதிரடி ஆக்சனில் இறங்க வேண்டியிருக்கு! உங்க வீட்டுக்கதவை திறந்து பாருங்க, ஃப்ளைட் டிக்கட் கிடக்கும்! உடனே புறப்படுங்க! இன்னிலயிருந்து உங்க பேரு... என எதிர்முனை பேசுகின்றது. தாதா தைதை தாதா தைதை...


ஞாயிறு, பிப்ரவரி 03, 2013

கமலஹாசன் அவர்களுக்கு (2)

அன்பிற்குரிய கமல்ஹாசன் அவர்களுக்கு,

கருத்து சுதந்திரம் பற்றி விரிவாக பேசப்படுகின்றது. உண்மைதான். விஸ்வரூபம் வெளிவரட்டும். ஆனால் படைப்பாளிக்கு சுதந்திரமும் வேண்டும், சமூகப்பொறுப்பும் வேண்டும் என்பது கமலஹாசன் விசயத்தில் மட்டும் மறந்து விடுமோ?


1) ‘ஹுசேன் கடல்கடந்தால் ஹாசன் கடக்க கூடாதா?’ – கமலஹாசன். ஹுசேன் ஒருபோதும் ஒரு குறிப்பிட்ட மதத்து மக்களை தீவிரவாதிகளாக சித்தரித்து ஓவியம் தீட்டியது இல்லை. உன்னைப்போல் ஒருவனில் வரலாறு பேசுகின்றேன் என்ற பெயரில் கமல்ஹாசன் வரலாற்றை புரட்டவில்லையா? ஹுசேனுடன் தன்னை ஒப்பிட்டுபேசுவது துணைக்கு ஆள் சேர்க்கும் முயற்சி. 




2) ‘என் சொத்துக்கள் அத்தனையும் விற்றுவிட்டேன், இனி என்னிடம் எதுவும் இல்லை’-கமலஹாசன். இந்திய இஸ்லாமியர்களின் பொருளாதார நிலையை சொல்லும் ராஜீந்தர் சச்சார் குழுவின் அறிக்கையை அவர் வாசிக்க வேண்டும்.
3) தலித்கள், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற சிறுபான்மை மக்களைவிடவும் முஸ்லிம்கள் மிக மோசமாகத் தாழ்ந்து கிடக்கிறார்கள்
• நாடு முழுதும் மிகக் குறைந்த வருமானம் முஸ்லிம்களுக்கு
• நகர்ப்புற ஏழை இந்தியர் சராசரி விகிதம் 22.8% ; ஆனால் முஸ்லிம்கள் 28%
• நீதித்துறையில் மிகப் பிற்படுத்தப் பட்டோர்/ தாழ்த்தபட்டோர் 23% மற்றும் 20%; ஆனால் முஸ்லிம்கள் வெறும் 7.8% மட்டுமே!
• 14 லட்சம் பப்ளிக் சர்வீஸ் பணிகளில் முஸ்லிம்கள் வெறும் 7.2%; அதுவும்கூட மிகக் கீழ்மட்டப் பணிகளில்தான்.
• நாட்டின் உயர் அரசுப் பணிகளில் வெறும் 3% (ஐ.ஏ.எஸ்: 3%; ஐ.எ•ப்.எஸ்: 1.8%; ஐ.பி.எஸ்: 4%)
• மாநில வாரியாக முஸ்லிம் மக்கள் தொகைக்கும் அவர்களது வேலைவாய்ப்பு நிலைக்கும் சம்பந்தமே இல்லாத நிலைமை நிலவுகிறது:

உதாரணம்:

அஸ்ஸாம்: முஸ்லிம்கள் 30.9% ; ஆனால் பணியில் 11.2% மட்டுமே
மேற்குவங்கம்: முஸ்லிம்கள் 25.2% ; ஆனால் பணியில் 4.2% மட்டுமே
உத்தரப்பிரதேசம்: 18.5%; 5.1%
பீஹார் : 16.5% ; 7.6%
தமிழ்நாடு : 5.6%; 3.2%
கேரளா : 24.7% ; 10.4%
ஆந்திரா : 9.2%; 8.8%
கேரளா மற்றும் ஆந்திராவில் மட்டுமே சற்றே அதிக விகிதாச்சாரம்.


3)’இந்திய முஸ்லிம்களில் 94.8 சதவிகிதத்தினர் வறுமைக்கோட்டுக் கீழ் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.’ இதுதான் இந்திய இஸ்லாமியர்களின் நிலைமை. பொருளாதாரத்தில் நலிந்து கிடக்கும் இஸ்லாமிய மக்களை, உங்கள் சொத்துக்களை அடகு வைத்து 100 கோடி செலவில் மோசமாக சித்தரிக்க வேண்டிய அவசியம் என்ன சார்? (படம் பார்த்தவர்கள் அப்படித்தான் சொல்கின்றார்கள், சொல்வதை தள்ள முடியுமா?).


4) உங்கள் சக நண்பர்களான விஜயகாந்த், அர்ஜுன் (ஐயோ, இந்த ரெண்டு பேர் மட்டும் இல்லைன்னா இந்தியாவை பாகிஸ்தான்காரன் எப்போவோ திருடிட்டு போயிருப்பான்!) படங்கள் சித்தரித்தது என்ன? இந்திய இஸ்லாமிய மக்களுக்கு 24 மணி நேரமும் பாகிஸ்தானுக்கு உளவு சொல்வதைத்தவிர வேறு வேலையே இல்லை என்பதைத்தானே! கோடம்பாக்கத்தில் ஒட்டுத்தாடியும் குல்லாவும் அஞ்சு ரூபாவுக்கும் பத்து ரூபாவுக்கும் சல்லிசாக விற்கின்றது என்பதற்காக வில்லன்கள் எல்லாருக்கும் முஸ்லிம் பெயரை வைத்து முஸ்லிம்கள் அனைவரையும் தேசத்துரோகியாக்கியது என்ன நியாயம்? ஒரு படமா இரண்டு படமா, எத்தனை படங்கள் வரிசையாக? இவர்களோடு சேர்ந்து நீங்களும் இஸ்லாமியர்களை உன்னைப்போல் ஒருவனில் தீவிரவாதிகளாகத்தானே காட்டினீர்கள்?


5) திரை உலகமும் கலை உலகமும் கமலஹாசனுக்கு பின்னால் திரண்டு நிற்கின்றதாம். கருத்து சுதந்திரமாம். கருணாநிதி ஆதரவு தருவதுபோல் ஜெயலலிதாவுக்கு எதிராக கேவல அரசியல் நடத்த முயல்கின்றார்; ரஜினி கடிதம் எழுதுகின்றார். விஜயகாந்தும் அர்ஜூனும் தொடர்ந்து இஸ்லாமிய மக்களை தீவிரவாதிகளாக பாகிஸ்தானிய உளவாளிகளாக சித்தரித்த போது இந்த கோடம்பாக்கத்து கலையுலகமும் கருணாநிதியும் ரஜினியும் இன்னபிற கருத்துசுதந்திர வக்கீல்களும் எங்கே போனார்கள்? விஜயகாந்தையோ அர்ஜூனையோ படம் எடுத்த இயக்குனர்களையோ ஒற்றை வார்த்தை சொல்லி கண்டித்ததாக ஏதாவது சான்று உண்டா? நீங்கள் மட்டுமல்ல, அரசியல் கட்சிகளும் இதை மௌனமாக வேடிக்கைதான் பார்த்தார்கள்; ஒருவேளை விஜயகாந்த் கட்சி ஆரம்பிக்க கூடும், அந்த நேரத்தில் அவரோடு கூட்டணி வைக்கவும் கூடும் என்ற எச்சரிக்கை உணர்வாக இருக்கலாம்.

6) ’வெளிநாட்டில் குடியேறுவேன்’-கமலஹாசன். கடல்கடந்து குடியேறும் அளவுக்காவது அவரிடம் பொருளாதார வசதி உள்ளது. ஆனால் பாபர் மசூதிக்குப்பின் நடந்த பல குண்டுவெடிப்புக்களுக்கு பின் தமிழகத்தின் பல பகுதிகளில் வாடகைக்கு குடியிருந்த முஸ்லிம் மக்களை வீட்டை காலி செய்யுமாறு வீட்டு உரிமையாளர்கள் வற்புறுத்தி வெளியேற்றியதை நீங்கள் அறிவீர்களா? குறிப்பாக கோவை குண்டுவெடிப்புக்களுக்குப் பின் கோவையில் வசித்த இஸ்லாமிய மக்கள் கூட்டம் கூட்டமாக கோவையை விட்டு வெளியேறும் அளவுக்குத்தான் நிலைமை இருந்தது. நீங்களோ வெளிநாட்டில் குடியேறுவேன் என சொல்ல, தமிழக இஸ்லாமியர்களோ சொந்த நாட்டில் வீடில்லாமல் அலைந்தார்கள். 2002க்கு பிறகு குஜராத்தில் இஸ்லாமியர்களின் நிலை இப்போதும் இப்படித்தானாம்.

7) நீங்கள் எடுக்கும் காட்சிகளுக்கும் வசனங்களுக்கும் வரலாற்று ஆதாரங்கள் இருப்பதாக கூறுகின்றீர்களாம். உங்கள் விஸ்வரூபம் திரைப்படத்தில் இப்படி ஒரு வசனம் இருக்கிறதாமே: “அமெரிக்கர்கள் குழந்தைகளையும் பெண்களையும் கொல்ல மாட்டார்கள். எனவே அவர்கள் வீட்டிலேயே இருக்கட்டும்””””. ’’இதுக்கு ஆதாரம் உண்டோ உங்களிடம்? அரவாக் இனமக்களின் படுகொலை தொடங்கி அமெரிக்கா கட்டிய கட்டுகின்ற சமாதிகளின் எண்ணிக்கை பல கோடிகளைத் தாண்டும் என்பது உங்களுக்கு தெரியாது என்று நாங்கள் நம்ப வேண்டுமா?

திங்கள், ஜனவரி 28, 2013

கமலஹாசன் அவர்களுக்கு...


கமலஹாசன் அவர்களுக்கு...

1) 
தீவிரவாதிகள் என்றால் துப்பாக்கி தூக்கி அடுத்தவனை சுட்டு ரத்தம் வரவைப்பவன் என்ற இந்திய/தமிழ்  சமூகத்தின் பொதுப்புத்தியையே நீங்களூம்  உன்னைப்போல் ஒருவனில் முன்வைத்தீர்கள். நன்றாக சவரம் செய்து கோட்டு சூட்டணிந்து இலக்கணம் தவறாத ஆங்கிலம் பேசி கடப்பாரை தூக்கி  வழிபாட்டுத்தலத்தை இடித்த (லாஹூர் கல்லூரியில் படித்த) எல்.கே.அத்வானிநியூக்ளியர் ஃபிசிசிஸ்ட்  டாக்டர் முரளிமனோஹர் ஜோஷி போன்றோர் தீவிரவாதிகள் இல்லையாவிடுதலை பெற்ற இந்தியாவில் முதல்முதலாக ஆர்கனைஸ் செய்யப்பட்ட கூட்டத்தை திரட்டி ஒரு வழிபாட்டுத்தலத்தை இடித்த கூட்டத்தின் தலைவர் அத்வானி தீவிரவாதி இல்லையாதேசப்பிரிவினைக்குப் பின் மிகப்பெரும் மதக்கலவரங்களுக்கு விதை போட்டது பாபர் மசூதி இடிப்பு எனில் அதற்கு காரணமான ஆர் எஸ் எஸ்பாஜக தீவிரவாத இயக்கங்கள் இல்லையாஅதன் தலைவர்கள் தீவிரவாதிகள் இல்லையாவரலாற்று அடிப்படையில் திரைப்படம் எடுப்பதாக சொல்லும் நீங்கள்  பாபர் மசூதி இடிப்பு குறித்து தனது அடுத்த படத்தை எடுக்க வேண்டும். ஒரு நாள் நள்ளிரவில் எப்படி மசூதிக்குள் ராமர் சிலை வந்தது என்பதில் இருந்து தொடங்க வேண்டும். படத்தை எடுத்துவிட்டு உத்தவ் தாக்ரேயிடம் போட்டுக்காண்பித்துவிட்டு வெளியிடக்கூடாது (பம்பாய் படத்தை சூப்பர் சென்சார் பால் தாக்ரேயிடம் காண்பித்து அப்ரூவல் வாங்கிய பின் மணிரத்னம் வெளியிட்டது போல).
 
2) 1990களில் புதிய பொருளாதாரம் என்ற பெயரில் இந்தியப் பொருளாதாரத்தை அமெரிக்க- ஐரோப்பிய நலன்களுக்கு அடகுவைத்த மன்மோஹன்சிங்-காங்கிரஸ் கூட்டணி செய்ததும் செய்வதும் தீவிரவாதம் இல்லையா? விவசாய நாடான இந்தியாவில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளை தற்கொலைக்கு தள்ளியது இதே கொள்கைகள்தான் எனில் இக்கொள்கையை வடிவமைத்துப்புகுத்திய மன்மோஹன்சிங்-காங்கிரஸ் கூட்டணி தீவிரவாதிகள் இல்லையா? ஜனவரி 1 முதல் வால்மார்ட் போன்ற ராட்ச்சர்களை இந்தியாவுக்குள் அனுமதித்து நமது தெருக்களின் சில்லறை வியாபாரிகளை அழிப்பது இக்கொள்கைதான் எனில் இக்கொள்கையை வடிவமைத்துப்புகுத்திய மன்மோஹன்சிங்-காங்கிரஸ் கூட்டணி தீவிரவாதிகள் இல்லையா?

3) 
சமுதாயத்தில் நடக்கும் நிகழ்வுகளின் அடிப்படையில்தான் தான் படங்கள் எடுப்பதாக நீங்கள் கூறுகின்றீர்களாம். உங்களது உன்னைப்போல் ஒருவனின் வரலாற்று நிகழ்வுகளை முன்பின்னாக அடுக்கியது நேர்மையான செயலா? ’ஆரிஃப் பாய்பெஸ்ட் பேக்கரியில் நம்ம ஆளுங்களை கொளுத்திட்டாங்கஅதுனாலதான் நான் தீவிரவாதி ஆனேன்’ என்று அமானுல்லா கூறுவது புரட்டு அல்லவா? 2002இல் நடந்த பெஸ்ட் பேக்கரி கொடுமைக்கு 1993இல் மும்பையில் அல்லது 1998இல் கோவையில் அமானுல்லா வெடிகுண்டு வைத்தான் என்பது நீங்கள் செய்த வரலாற்றுப்புரட்டு அன்றி வேறென்ன? ஆர் எஸ் எஸ்-ம் பாஜக-வும் இதைத்தானே செய்கின்றார்கள்? என்ன பெரிதாக நீங்கள் வரலாறு பேசுகின்றீர்கள்? அதுவும் உங்கள் படம் உள்ளிட்ட தமிழ், இந்திப்படங்களில் இந்திய முஸ்லிம்களில்  தீவிரவாதிகளாக இருப்பவர்கள் பாகிஸ்தானிய உளவாளிகளாக இருப்பதும் தேஷபக்தி கொண்ட ‘நல்ல’ முஸ்லிம்கள் போலீஸ் இன்ஸ்பெக்டர்களாக இருந்து அதே ‘முஸ்லிம்’ தீவிரவாதிகளை கண்டுபிடித்து உதைப்பதும் எப்படி சார்? விஜயகாந்தும் அர்ஜூனும் இதைத்தானே தங்கள் படங்களில் செய்தார்கள்? குருதிப்புனலிலும் (அர்ஜுனின் பெயர் அப்பாஸ்) உன்னைப்போலிலும் இப்படித்தானே? தனக்கு சாதகமான ஒத்திசைவு கொண்டவராக இருந்ததால்தானே அப்துல்கலாமை இவரு ரொம்ப நல்லவரு’ அதாவது நல்ல முஸ்லிம்’ என்று ஆர் எஸ் எஸ்-ம் பாஜகவும் ஜனாதிபதி அந்தஸ்துக்கு உயர்த்தின? தீவிரவாதிகள் என்றால் இஸ்லாமியர்கள்தான் என்ற இந்திய/தமிழ்  சமூகத்தின் பொதுப்புத்தியில் முதலீடு செய்துதான் விஜயகாந்தும் அர்ஜூனும் லாபம் சம்பாதித்தார்கள், நீங்களும் உன்னைப்போலொருவனில் லாபம் பார்த்தீர்கள், இதில் என்ன உங்களிடம் பெரிய வரலாறும் அதற்கு ஆதாரமும் வேண்டிக்கிடக்கின்றது? (ஆர்.கே.செல்வமணி என்ற மிகப்பெரும் அறிவாளி டைரக்டர் புதியதலைமுறை விவாதத்தில் ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு இப்படி சொன்னார்: ‘என் நண்பர் யார் தெரியுமா, அ.செ.இப்ராஹிம் ராவுத்தர்!’. அதாவது இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கு பெரீய்ய்ய உதாரணமாம்! இப்படிப்பட்ட அறிவாளிகள்தான் உங்களோடு இருக்கும் தமிழ்ச்சினிமா இயக்குனர்களாம்!)

4) தீவிரவாதிகளை அழித்துவிட்டால் தீவிரவாதம் ஒழிந்துவிடும்’ என்ற உங்களது உயரிய அறிவார்ந்த’ தத்துவத்தை ஏற்றுக்கொள்ளலாமாஅதுவும் அமெரிக்காவும் ஆர் எஸ் எஸ்-பாஜகவும் சொல்கின்ற இஸ்லாமிய தீவிரவாதம்’ குறித்து மட்டும்தான் நீங்கள் மீண்டும் மீண்டும் பேசுவீர்களாஅப்படியெனில் ‘இந்துதீவிரவாதிகளை ஒழித்துவிட்டால் இந்து தீவிரவாதம் ஒழிந்துவிடும்’ என்ற ஃபார்முலாவை நீங்கள் முன்வைப்பீர்களா? மெக்கா மசூதிமாலேஹாவ்ன்சம்ஜௌதா ரயில் போன்ற வெடிகுண்டு சம்பவங்களில் ஈடுபட்ட இந்துதீவிரவாத அமைப்புக்கள் குறித்து நீங்கள் பேச வேண்டும்தென்காசி ஆர் எஸ் எஸ் அலுவலகத்தில் இஸ்லாமியர்கள் அணியும் தொப்பிகள்பொய் (ஒட்டு) தாடிகள் ஆகியவை காவல்துறையால் கண்டுபிடிக்கப்பட்ட்து குறித்தும், ஆர் எஸ் எஸ் அலுவலகத்தில் இஸ்லாமியர்கள் அணியும் தொப்பிகள்பொய் (ஒட்டு) தாடிகளுக்கு என்ன வேலை என்பது குறித்தும் நீங்கள் படம் எடுக்க வேண்டும். புனாவில் உள்ள கோபால் கோட்சேவின் வீட்டில் நாதுராம் கோட்சேயின் சாம்பல் இப்போதும் கரைக்கப்படாமல் கலயத்தில் பாதுகாக்கப்பட்டு வருவது ஏன் என்பது குறித்து நீங்கள் படம் எடுக்க வேண்டும்.

5
நீங்கள் பெரிய படிப்பாளி, படைப்பாளி. காந்தஹார்மசூத் அசார்முல்லா ஒமர்பின்லேடன் குறித்தெல்லாம் படம் எடுக்கும் நீங்கள், தமிழ்நாட்டுக்குள்ளேயே தாமிரபரணி தமிழர் படுகொலைஉத்தப்புரத்தில் தீண்டாமை சுவர் கட்டியது-அதை இடித்ததுஒரு மாசத்துக்கு முன் தர்மபுரியில் இந்து மதத்தை சார்ந்த வன்னியர்கள் அதே இந்து மதத்தை சார்ந்த தலித் மக்களின் வீடுகளை தீ வைத்து கொளுத்தியதுமுப்பது மைல் தொலைவில் உள்ள இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்களை ராஜபக்சே ராணுவம் படுகொலை செய்தது போன்றவையும் வரலாற்று நிகழ்வுகள்தான், நீங்கள் இவற்றையும் திரைப்படமாக எடுக்க வேண்டும். உங்கள் சொந்த ஊரான பரமக்குடியில் தேவர் சாதி மக்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் இடையே என்ன பிரச்னை என்பது குறித்தும், தேவர் குருபூஜை என்றால் துப்பாக்கியோடு காவல்காக்கும் தமிழக அரசு இம்மானுவேல் சேகரன் குருபூஜை என்று சொன்னாலே துப்பாக்கி சூடு நடத்துவது ஏன் என்பது குறித்தும் திரைப்படமாக எடுக்க வேண்டும். தேவைப்படும் எனில் இந்த நிகழ்வுகள் குறித்து உங்களுக்கு வரலாற்று ஆதாரங்களை கொடுத்து உதவ நான் தயார்.

6
நீங்கள் பெரிய படிப்பாளி, படைப்பாளி. காந்தஹார்மசூத் அசார்முல்லா ஒமர்பின்லேடன் குறித்தெல்லாம் படம் எடுக்கும் நீங்கள், ‘ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக நாங்கள் சொன்னது பொய்’ என்று அமெரிக்கா சொன்னதையும்அப்படியானால் அமெரிக்கா அங்கே படையெடுத்து சதாம் உசேன் உட்பட பல லட்சம் மக்களை படுகொலைகள் செய்தது புல் புடுங்கவா என்பதையும் படமாக எடுக்க வேண்டும். படைப்பாளியான உங்களுக்கு நானோ பிறரோ கட்டளை போட முடியாதுஉங்களை நான் வேண்டிக் கொள்ளலாம், அவ்வளவே.

7)இறுதியாக: விஸ்வரூபம் நான் இன்னும் பார்க்கவில்லை, எனவே கருத்து சொல்லவில்லை. விஸ்வரூபம் திரைக்கு வர வேண்டும் என்பதே என் ஆசை. கமலஹாசன் யார் என்பதை இஸ்லாமிய சமூகம் மட்டுமல்ல, தமிழ்ச்சமூகம் மொத்தமும் புரிந்துகொள்ள வேண்டும் அல்லவா?

வியாழன், ஜனவரி 10, 2013

’மாவோ நூல்கள்’ மொழிபெயர்ப்புக்கு ஆனந்தவிகடன் விருது 2012

                                                                                    


அன்புத்தோழர்களே!

அலைகள்-விடியல் வெளியீட்டகங்கள் இணைந்து 2012 செப்டம்பரில் வெளியிட்ட ‘மாவோ தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புக்க’ளை (9         தொகுதிகள்) ஆனந்தவிகடன் 2012ஆம் 
ஆண்டின் 

சிறந்த மொழிபெயர்ப்பு
 நூலாக தேர்ந்தெடுத்துள்ளது. தொகுதிகள் 5, 9 ஆகியவற்றை நான் மொழிபெயர்த்துள்ளேன் என்ற மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். ஆனந்தவிகடனுக்கு நன்றி! மொழிபெயர்க்கும் வாய்ப்பை அளித்த அலைகள் சிவம் அவர்களுக்கும் நன்றி!


பிற தொகுதிகளை மொழிபெயர்த்த தோழர்கள் மயிலை பாலு, நிழல்வண்ணன், வான்முகிலன்,பாஸ்கர், பாலன், மணிவாசகம், தங்கப்பாண்டியன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்!


வாழ்த்துகின்ற தோழர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல....!

செவ்வாய், ஜனவரி 01, 2013

தானாய் எல்லாம் மாறும் என்பது...



இதோ 2012ஆம் ஆண்டு பின்னால் சென்று பழைய வருடமாகிவிட்டது!
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என வாழ்த்தவே மனம் நாடுகின்றது தோழரே!
நடப்பது கண்டால்...?
ஆதலினால் காதல் செய்வோம்...என்றொருவன் சாதியப்பெருநோய்க்கு  மருத்துவம் பார்த்த இந்த மண்ணில்தான் காதலை காமத்தோடு முடிச்சுப்போட்டு அன்பெனும் உறுப்பை மனித மனங்களில் இருந்து சாதீயக்கட்டாரி கொண்டு அறுத்துப்போடும் நவீன மருத்துவர்கள் நெஞ்சு நிமிர்த்தி ஊர்வலம் வருகின்றார்கள்.
இயற்கை மனிதருக்குள் பருவத்தே முகிழ்த்து மலர்விக்கும் ஆண்பெண் உறவுத்தோட்டத்தில் புகுந்துவிடும் காடுவெட்டிகள் சாதீயத்தீவட்டியை எரிந்து தோட்டம் சாம்பலாவதை கிட்ட நின்று பார்த்து கைகொட்டி சிரிக்கின்றார்கள்.
அண்ணாவுக்கு பொடிவாங்கிக்கொடுத்த, பெரியாருக்கு தடி எடுத்துக்கொடுத்த திராவிடத்தளபதிகள் தலித்துக்களின் வீடுகள் பற்றி எரியும்போது ஒரு மயிரைக்கூட உதிர்க்க ஆயிரம் யோசனை செய்கின்றார்கள்.
அண்ணாவுக்கும் பெரியாருக்கும் அன்றாடம் ஆயிரம் நாமம் சாத்தும் பார்ப்பனத்தலைவிகளின் காவல்துறை, தேவர் குருபூஜை எனில் கைகட்டி சேவகம் செய்கின்றது, தர்மபுரியில் தலித் வீடு பற்றிஎரியும்போதோ  கைகட்டி வேடிக்கை பார்க்கின்றது. வெண்மணியிலும் வாச்சாத்தியிலும் மாஞ்சோலையிலும் தர்மபுரியிலும் கயர்லாஞ்சியிலும், இதோ, டெல்லியிலும் காவல்துறை ஒரே மாதிரித்தான் இருக்கின்றது! செப்புமொழி பதினெட்டு, எனினும் காவல்துறைக்கு சிந்தனை ஒன்றுதான்!
தேசத்தையும் நதிகளையும் மாதா என்று கொண்டாடும் தேசத்தின் தலைநகரில் 23 வயதுப்பெண்ணொருத்தி சக நண்பனுடன் பயணித்தால் உடலோடு உள்ளமும் சிதைக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்குப் பிறகு பிணமாகின்றாள். அவள் சிதைக்கப்பட்ட அப்பேருந்து ஐந்து காவல்துறை சோதனை பாயிண்டுக்களை தாண்டி பயணித்ததாம், ஆனால் குறைந்தபட்சம் ஒரே ஒரு பாயிண்டில்கூட எந்த ஒரு போலீஸ்காரனுக்கும் அப்பேருந்து குறித்து சிறு சந்தேகமும் வரவில்லையாம், பேருந்து தடையின்றி பயணித்ததாம்! புரோகிதர்கள் மந்திரம் சொல்ல தேங்காய் உடைக்கப்பட்டு ஏவப்பட்ட பல பத்து செயற்கைக்கோள்களில் ஒன்று கூடவா இந்தப் பேருந்தைக் காட்டிக்கொடுக்கவில்லை?! பாரத் மாதா கீ ஜே! இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட உறவினர் எண்ணிக்கை நூறாம், போலீசின் எண்ணிக்கையோ ஆயிரமாம்! உடன் பயணித்த நண்பன் குறித்த தகவல் தெரிவிப்போருக்கு பாரத்ரத்னா விருது நிச்சயம், முயற்சி செய்யுங்களேன்!
மனிதன் உயிர்வாழும் பொருட்டுத்தேவையான அத்தனை உறுப்புக்களுடன் பிறந்தாலும் ரேசன்கார்டு இல்லாத மனிதன் இந்தியாவில் நாயினும் கேடானவன்! புழுவிலும் கீழானவன்! நேற்று வரை அப்படித்தான்! இதோ, வேட்டிகட்டிய தமிழர்களும் டர்பன் கட்டிய பஞ்சாபிகளும் சேர்ந்து (இன,மத,மொழி,நிற,மாநில,கட்சி வேறுபாடு எள்ளளவும் இன்றி செம்புலப்பெயல் நீர் போல நெஞ்சம்தான் கலந்து ஒற்றுமையுடன்)இந்த இழிநிலையை மாற்றிவிட்டார்கள்! கோட்டும் டையும் கட்டிய வெள்ளைக்காரனுக்கு மலம் கழுவ வரிசையில் வெள்ளிச்சொம்புடன் காத்து நிற்கின்றார்கள்! மலம் கழுவ சில நிபந்தனைகள் உண்டு: ரேசன்கார்டை ஒழித்துக்கட்டு; காஸ் சிலிண்டருக்கு மானியத்தை ஒழி; மாதம் ஒருமுறை பெட்ரோல் டீசல் விலை உயர்த்து; தெருவோரக்கடைகளில் அல்லது தெருவில் கூவி விற்கும் இந்த மண்ணின் மக்களான சில்லரை வியாபாரிகளை குரல்வளை நெரித்துக்கொல், வால்மார்ட்டை உள்ளே விடு; மக்கள்சொத்தான வங்கிகள் இன்சூரன்ஸ் நிறுவனங்களை இணைப்பு என்ற பெயரில் ஒழித்துக்கட்டு, அமெரிக்கப் பெருமுதலாளிகளுக்கு ‘அதில் பங்குஎன்ற பெயரில் விற்றுவிடு....
2012இன் இறுதிஅல்ல மேலே சொன்னவை; சாதீயம் ஈராயிரம் வருட இழிவின் எச்சமெனில் உலகமயமும் தாராளமயமும் தனியார்மயமும்  நூறு வருடங்களுக்கும் மேற்பட்ட முதலாளித்துவத்தின் உச்சம்; இதில் எதுவும் மனிதன் நிம்மதியாய் வாழ ஒரு  மயிரைக்கூட கடந்தகாலத்தில் உதிர்த்ததில்லை, உதிர்க்கப்போவதும் இல்லை!
இந்த இழிவெனும் எச்சங்களும் உச்சங்களும், அவற்றின் காரணகர்த்தாக்களும் எடுபிடிகளும் ஒழியும் நாளே நமக்கும் நம் குடும்பத்தாருக்கும் இந்த நாட்டுக்கும் மகிழ்வையும் அன்பையும் நலத்தையும் கொண்டுவந்து சேர்க்கும் திருநாளாம்! தானாய் ஒழியாது எதுவும்! இவற்றை மாற்றும் படைதனில் நாமாய் முன்வந்து இணைந்தால் அன்றி சாத்தியமில்லை எதுவும்! தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா....
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

வியாழன், நவம்பர் 22, 2012

தலைவர்களும் தலைவர்களாகிய தாதாக்களும்







1)காந்தியடிகள் கொலை வழக்கில் கோட்சேயுடன் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் விநாயக் தாமோதர் சவர்க்கார். இவர் வலதுசாரி இந்துத்வா தீவிரவாத அமைப்பான ஆர் எஸ் எஸ்-இன் தத்துவ ஆசான்களில் ஒருவர் என்றறியப்படுபவர். ஹிட்லரின் ஆரிய இனமே உயர்ந்த இனம்என்ற கோட்பாட்டை அப்படியே தனது தத்துவமாக ஏற்றுக்கொண்ட அமைப்பு ஆர் எஸ் எஸ். பிற்பாடு போதிய ஆதாரங்கள் இல்லை என்ற காரணத்தால் அக்குற்றச்சாட்டில் இருந்து நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர். காந்தியடிகளை கொன்றவன் ஒரு முஸ்லிம் என்று செய்தி பரப்பப்பட்டால்  இந்தியாவில் மிகப்பெரும் மதக்கலவரம் வரும் என்று ஆசைப்பட்ட ஆர் எஸ் எஸ், நாதுராம் கோட்சே என்ற மராட்டிய பிராமணனுக்கு முஸ்லிம் மக்கள் செய்யும் மதச்சடங்கான ‘சுன்னத்என்ற ஆண் குறித்தோலை நீக்கும் சடங்கை செய்து, அவனது கையில் இஸ்மாயில் என்ற பெயரை பச்சை குத்தியது. இந்த சதிவேலை அனைத்திலும் மேற்படி ஏழு பேரும் ஈடுபட்டார்கள். 2002ஆம் ஆண்டு பாரதீய ஜனதா கூட்டணி அரசு தனது ‘மதச்சார்பின்மையை உலகத்துக்கு முரசறிந்து அறிவிக்கும் வண்ணம் இஸ்லாமியரான அப்துல் கலாம் அவர்களை குடியரசுத்தலைவராக ஆக்கியது. அன்று பிரதமர் அடல்பிஹாரி வாஜபேயி. மேற்படி சவர்க்காரின் உருவப்படத்தை நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இஸ்லாமியர் ஆன அப்துல்கலாமை வைத்து திறந்து வைத்து சாகசம் செய்து மதச்சார்பிமைக்கோட்பாட்டை நேசிக்கும் அனைவரையும் கேலி செய்தது பாஜக அரசு. அதே நாடாளுமன்றத்தின் முன்னால் இவர்களால் கொல்லப்பட்ட காந்தியடிகளின் சிலை இப்போதும் மவுனமாக இருக்கின்றது.

2)ரெய்சினா குன்று என்றறியப்படும் குடியரசுத்தலைவர் மாளிகையில் 1997இல் குடியேறிய முதல் தலித் குடிமகன் கே ஆர் நாராயணன். அன்றும் பிரதமர் வாஜபேயி. அதே சவர்க்காருக்கு பாரத்ரத்னா விருது வழங்க சிபாரிசு செய்து அவ்வாறே முடிவு செய்யுமாறு வேண்டி குடியரசுத்தலைவரான நாராயணனுக்கு கடிதம் எழுதுகின்றார். நாராயணன் அவர்களோ தனது பதவிக்காலம் முழுவதும் இந்தக்கடிதத்தை கண்டுகொள்ளவே இல்லை. அப்போது தொலைத்தொடர்பு மந்திரியாக இருந்த பிரமோத் மஹாஜன் இப்படிக்கூறினார்: ‘பாட்டுப்படுபவர்களுக்கும் நாட்டியம் ஆடுபவர்களுக்கும் பாரத்ரத்னா வழங்கும்போது சவர்க்காருக்கு வழங்கினால் என்ன கெட்டுப்போகும்?’. அன்று 10 காங்கிரஸ் எம்.பி.க்களும் சில பாரதீய ஜனதா முதலமைச்சர்களும் மத்திய மந்திரிகள் சிலரும் ‘உழைப்பால் உயர்ந்த உத்தமர்ஆன திருபாய் அம்பானிக்கு பாரத்ரத்னா வழங்க ஒத்தைக்காலில் நின்று தவம் செய்தனர் என்பது கூடுதல் தகவல். அம்பானிகள் வீசும் சில்லறைகளைப் பொறுக்க இவர்களுக்குள் கட்சி வித்தியாசம் என்றுமே வந்ததில்லை, அத்தனை ஒற்றுமை. (சமீபத்தில் ரிலையன்சை நிம்மதியா தொழில் நடத்த வுடுங்கப்பாஎன பத்திரிக்கையாளர்கள் மீது எரிந்து விழுந்த மந்திரி வீரப்பமொய்லி உங்கள் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பா?)

3)சமீபத்தில் மரணம் அடைந்த பம்பாயின் தாதாவான பால்தாக்கரே, இவரும் ஹிட்லர்,முசோலினி கொள்கைகளை தனது தத்துவமாக வரித்துக்கொண்டவர். சிவசேனா என்ற வலதுசாரி இந்துத்துவா தீவிரவாத அமைப்பின் நிறுவனர். இந்தியாவின் இளைஞர்களுக்கு இந்த தத்துவங்களே பொருத்தம் என்று உபதேசம் செய்தவர். பம்பாயின் இடதுசாரி  தொழிற்சங்கத்தலைவர்கள், இஸ்லாமியர்கள், பிற மாநிலத்தவர்கள் போன்றோரை இவர் விரல் அசைத்தால் இவரது சீடர்கள் கொலை செய்வார்கள். உலகின் ஆகப்பெரும் ஜனநாயக தேஷம், மதச்சார்பின்மைக்கோட்பாட்டுக்கும் கருத்துரிமை பேச்சு சுதந்திரம் ஆகியவற்றுக்கும் ஒண்ணாம் நம்பர் உதாரணம் வேணுமா? இந்தியாவுக்கு வாங்க என்று பீத்திக்கொள்ளும் இத்தேசத்தில் தாக்கரே மீது இதுவரை ஒரு துரும்பைக்கூட தூக்கிப்போட்டது இல்லை இந்தியாவின், மராட்டிய அரசுகளின் போலீசும் ராணுவமும்.

4)உச்சநீதி மன்ற முன்னாள் நீதிபதியும், இந்திய பத்திரிக்கை கவுன்சிலின் தற்போதைய தலைவருமான மார்க்கண்டேய் கட்ஜு நவம்பர் 19 தி இந்து நாளிதழில் ‘Why I can’t pay tribute to Thackeray’ (நான் தாக்கரேக்கு இரங்கல் தெரிவிக்க மாட்டேன் – காரணம் என்ன?) என்ற கட்டுரையை எழுதியுள்ளார். அதன் சாரம் வருமாறு:

அரசியல் சட்ட்த்தின் 19(1)(இ) பிரிவு ‘இந்தியாவின் எந்த ஒரு இடத்திலும் குடியிருக்கவும் நிரந்தரமாக வாழவும் இந்தியக்குடிமக்கள் அனைவருக்கும் உரிமை உண்டுஎன அறிவிக்கின்றது. ஆனால் தாக்கரேயின் மண்ணின் மைந்தர் கொள்கை, மஹாராஷ்ட்ராவில் குடியேறிய குஜராத்திகள்,தென்னிந்தியர்கள்,பிஹாரிகள்,உ.பி.யினர் உள்ளிட்ட பிற மாநிலத்தவருக்கு எதிரானது. இது அரசியல் சட்டத்துக்கு எதிரானது. பால்தாக்கரேயால் நிறுவப்பட்ட சிவசேனை அமைப்பினர் 1960,70களில் பம்பாயில் குடியேறி வணிகம் செய்து கொண்டிருந்த தென்னிந்தியர்களை அடித்து நொறுக்கினார்கள், அவர்களது வீடுகளையும் ஓட்டல்களையும் அழித்தார்கள். (பால், செய்தித்தாள் விற்போராக, டாக்சி ஓட்டுனர்களாக பிழைப்பு நடத்திய) பிஹாரிகளையும் உ.பி.யினரையும் அடித்து அவர்களது சொத்துக்களையும் அழித்தார்கள். இஸ்லாமியர்களை தாக்கினார்கள்.

இந்தியா பொதுவாக ஒரு குடியேறியவர்களின் நாடுதான் (வட அமெரிக்காவைப்போல); இன்று இந்தியாவில் வாழ்கின்ற மக்களில் 92-93 விழுக்காட்டினர் இந்நாட்டின் பூர்விக குடிகள் அல்லர், அவர்கள் இந்தியாவின் வடமேற்கு வாயிலாக இந்நாட்டில் நுழைந்து  குடியேறியவர்களின் வாரிசுகள் (‘What is India?’ என்ற எனது கட்டுரையை எனது தளமான justicekatju.blogspot.in-இல் காண்க).  இந்நாட்டின் பூர்விக மக்கள் ஆதி திராவிடர்களே, இவர்களை நாம் ஆதிவாசிகள் என்று சொல்கின்றோம் (பில்,கோண்டு,சண்டாளர்,தோடர்கள் முதலியோர்), இவர்களின் ஜனத்தொகை இன்று 7-8 விழுக்காடு மட்டுமே. ஆக தாக்கரேயின் மண்ணின்மைந்தர் கொள்கை தீவிரமாக அமலாக்கப்படும் எனில் (தாக்கரேயின் குடும்பம் உட்பட) 92-93 விழுக்காடு மராட்டியர்களை அந்நியர்கள் என்றுதான் சொல்லவேண்டும், அவர்களை அந்நியர்களாகவே நட்த்த வேண்டியிருக்கும். ஏனெனில் மஹாராஷ்ட்ராவின் உண்மையான மண்ணின்மைந்தர்கள் 7-8 விழுக்காடே இருக்கின்ற பில்லுகளும் பிற பழங்குடியினரும்தான்.

இன்று இத்தேசத்தில் மிகப்பல பிரிவினைவாத சக்திகளும்  (மண்ணின்மைந்தர் கோட்பாடு போன்றவற்றை பேசுகின்ற) பிளவு சக்திகளும் இயங்கி வருகின்றன. தேசப்பற்றுள்ள யாவரும் இச்சக்திகளை எதிர்த்துப்போராட வேண்டும்.
நாம் ஏன் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்? ஒரு மிகப்பரந்த நவீன தொழில்மயத்தால் மட்டுமே இத்தேச மக்களின் நலனுக்காக ஆகப்பெரும் வளத்தை உருவாக்க முடியும், விவசாயத்தால் மட்டுமே இதை சாதிக்க முடியாது.  நவீன தொழில்மயத்துக்கு இன்று தேவைப்படுவது மிகப்பரந்த சந்தை. ஒன்றுபட்ட இந்தியாவால் மட்டுமே இத்தகைய ஒரு பரந்த சந்தையை தர முடியும், அதனால் மட்டுமே வறுமையை, வேலையின்மையை, இன்ன பிற சமூக அவலங்களை ஒழிக்க முடியும்; மிகவும் வளர்ந்த நாடுகளின் வரிசையில் இத்தேசமும் நிற்க வேண்டும் எனில் மக்களுக்கான பரந்த சுகாதார வசதிகளையும் கல்வி வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும், பரந்த நவீன தொழில்மயத்தால் மட்டுமே அது சாத்தியப்படும்.
இத்தகைய காரணங்களால் திரு.பால் தாக்கரேக்கு என்னால் இரங்கல் தெரிவிக்க முடியாது.
5) மஹாராஷ்ட்ர மாநிலத்தின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் அசோக் தாவாலே விடுத்துள்ள அறிக்கையின் சுருக்கம்: சிவசேனா, அதிலிருந்து உருவான மஹாராஸ்ட்ரா நவனிர்மாண் சேனா இரண்டுமே வன்முறைக்கலாச்சாரத்தையும் பிராந்திய வெறியையும் தூண்டுவன;  சி.பி.ஐ.எம் இவற்றை உறுதியாக எதிர்க்கின்றது...சிவசேனாவின் கொள்கையானது மதச்சார்பானது; பாபர் மசூதி இடிப்பை தாக்கரே ஆதரித்தார், அதன் பின் நடந்த மும்பை கலவரங்களிலும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளிலும் சிவசேனை, தாக்கரே ஆகியோரின் பங்கு இருந்ததை ஸ்ரீகிருஸ்ணா கமிசன் தெளிவாக எடுத்துச்சொல்லியது...சிவசேனையின் கொள்கைகள் தொழிலாளி வர்க்கத்துக்கும் கம்யூனிஸ்டுக்களுக்கும் எதிரானது. தொழிற்சங்கதலைவர்கள், அலுவலகங்கள் சிவசேனையினரால் தொடர்ந்து தாக்கப்பட்டனர்...1970இல் கம்யூனிஸ்ட் எம் எல் ஏ தோழர் க்ருஷ்ண தேசாய் சிவசேனையினரால் கொலை செய்யப்பட்டார் என்பது உச்சகட்டம்...சிவசேனையின் அரசியல் தலித்துக்களுக்கு எதிரானது...1970இல் தலித் பாந்தர் இயக்கத்தின் தலைவரான பகவத் ஜாதவை சிவசேனையினர் கொன்றனர்...சிவசேனை-பாஜக கூட்டணி அரசு ரமாபாய் அம்பேத்கர் நகரில் நடத்திய துப்பாக்கிசூட்டில் 11 தலித்துக்கள் உயிர் இழந்தனர்...சிவசேனை ஜனநாயகக் கோட்பாட்டுக்கு எதிரானது, சர்வாதிகாரத்தை ஆதரிக்கின்றது. காங்கிரஸின் எமெர்ஜன்சியை பால்தாக்ரே ஆதரித்தார் என்பது வரலாறு; ஹிட்லரின் புகழ் பாடுபவர் அவர்...சிவசேனையை விமர்சிக்கின்ற பத்திரிக்கையாளர்கள்,இலக்கிய கலாச்சாரவாதிகள் மீது அவர்கள் எப்போதும் தாக்குதல் நடத்திக்கொண்டே இருக்கின்றார்கள்...சிவசேனையின் மதவெறி,சாதீய,தொழிலாளர் வர்க்கவிரோத கலகக்கொள்கைகளை சிபிஐ எம் எப்போதும் எதிர்த்து நிற்கும்”.

6)இப்போதைய குடியரசுத்தலைவரான பிரணாப் முகர்ஜி பால் தாக்கரேயின் மறைவுக்கு இப்படி இரங்கல் தெரிவித்துள்ளார்: ‘தாக்கரேயின் மறைவு மஹாராஷ்ட்ரா மக்களுக்கும் இந்திய மக்களுக்கும் இழப்பாகும். இத்தேசத்தின் சாமானியக்குடிமகனின் நலனுக்கு உழைத்த ஒரு மூத்த தலைவரை இத்தேசம் இழந்துள்ளது.
7)பால் தாக்கரேயின் சடலம் தீயூட்டப்பட்ட இடமான சிவாஜி பூங்காவை  தாக்கரே நினைவிடமாக கட்ட வேண்டும் என இப்போது சிவசேனா குரல் எழுப்புகின்றது.  சிவாஜி பூங்கா என்பது ஒரு பொதுமக்களின் விளையாட்டுத்திடல். இத்திடலின் நலனில் அக்கறையுள்ள சுற்றுச்சூழல் நலம்விரும்பிகளின் அமைப்பு இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மாநில அமைச்சரான பாஸ்கர் ஜாதவ் என்பவர் அரசு இதற்கு அனுமதி தரும் என்றும் சொல்லியுள்ளார். ஏற்கனவே இத்திடலின் ஒரு வாசலில் தாக்கரேயின் மனைவி உருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மைய மண்டபத்தில் சவர்க்காரின் உருவப்படத்தை இத்தேசத்தின் குடியரசுத்தலைவர் திறந்து வைப்பார் எனில், சிவாஜி பூங்காவில் மட்டும் அல்ல, நாடாளுமன்றத்தின் முன்னுள்ள காந்தியடிகளின் சிலையின் இருபுறமும் கோட்சே, பால் தாக்கரே இருவர் சிலைகளும் நிறுவப்படக்கூடும். அச்சிலைகளை இத்தேசத்தின் மிக உயர்ந்த பதவிகளில் இருப்பவர்கள் திறந்து வைக்கவும் கூடும்.