

2)ரெய்சினா குன்று என்றறியப்படும் குடியரசுத்தலைவர் மாளிகையில் 1997இல் குடியேறிய
முதல் தலித் குடிமகன் கே ஆர் நாராயணன். அன்றும் பிரதமர் வாஜபேயி. அதே சவர்க்காருக்கு
பாரத்ரத்னா விருது வழங்க சிபாரிசு செய்து அவ்வாறே முடிவு செய்யுமாறு வேண்டி குடியரசுத்தலைவரான
நாராயணனுக்கு கடிதம் எழுதுகின்றார். நாராயணன் அவர்களோ தனது பதவிக்காலம் முழுவதும் இந்தக்கடிதத்தை
கண்டுகொள்ளவே இல்லை. அப்போது தொலைத்தொடர்பு மந்திரியாக இருந்த பிரமோத் மஹாஜன்
இப்படிக்கூறினார்: ‘பாட்டுப்படுபவர்களுக்கும் நாட்டியம் ஆடுபவர்களுக்கும்
பாரத்ரத்னா வழங்கும்போது சவர்க்காருக்கு வழங்கினால் என்ன கெட்டுப்போகும்?’. அன்று 10 காங்கிரஸ்
எம்.பி.க்களும் சில பாரதீய ஜனதா முதலமைச்சர்களும் மத்திய மந்திரிகள் சிலரும்
‘உழைப்பால் உயர்ந்த உத்தமர்’ ஆன திருபாய் அம்பானிக்கு
பாரத்ரத்னா வழங்க ஒத்தைக்காலில் நின்று தவம் செய்தனர் என்பது கூடுதல் தகவல்.
அம்பானிகள் வீசும் சில்லறைகளைப் பொறுக்க இவர்களுக்குள் கட்சி வித்தியாசம் என்றுமே
வந்ததில்லை, அத்தனை ஒற்றுமை. (சமீபத்தில் ’ரிலையன்சை நிம்மதியா தொழில் நடத்த வுடுங்கப்பா’ என பத்திரிக்கையாளர்கள் மீது
எரிந்து விழுந்த மந்திரி வீரப்பமொய்லி உங்கள் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பா?)
3)சமீபத்தில் மரணம் அடைந்த பம்பாயின் தாதாவான
பால்தாக்கரே, இவரும் ஹிட்லர்,முசோலினி கொள்கைகளை தனது தத்துவமாக
வரித்துக்கொண்டவர். சிவசேனா என்ற வலதுசாரி இந்துத்துவா தீவிரவாத அமைப்பின்
நிறுவனர். இந்தியாவின் இளைஞர்களுக்கு இந்த தத்துவங்களே பொருத்தம் என்று உபதேசம்
செய்தவர். பம்பாயின் இடதுசாரி
தொழிற்சங்கத்தலைவர்கள், இஸ்லாமியர்கள், பிற மாநிலத்தவர்கள் போன்றோரை இவர்
விரல் அசைத்தால் இவரது சீடர்கள் கொலை செய்வார்கள். ’உலகின் ஆகப்பெரும் ஜனநாயக தேஷம்,
மதச்சார்பின்மைக்கோட்பாட்டுக்கும் கருத்துரிமை பேச்சு சுதந்திரம் ஆகியவற்றுக்கும்
ஒண்ணாம் நம்பர் உதாரணம் வேணுமா? இந்தியாவுக்கு வாங்க’ என்று பீத்திக்கொள்ளும் இத்தேசத்தில் தாக்கரே மீது
இதுவரை ஒரு துரும்பைக்கூட தூக்கிப்போட்டது இல்லை இந்தியாவின், மராட்டிய அரசுகளின்
போலீசும் ராணுவமும்.
4)உச்சநீதி மன்ற முன்னாள் நீதிபதியும்,
இந்திய பத்திரிக்கை கவுன்சிலின் தற்போதைய தலைவருமான மார்க்கண்டேய் கட்ஜு நவம்பர்
19 தி இந்து நாளிதழில் ‘Why
I can’t pay tribute to Thackeray’ (நான் தாக்கரேக்கு இரங்கல்
தெரிவிக்க மாட்டேன் – காரணம் என்ன?) என்ற கட்டுரையை எழுதியுள்ளார். அதன் சாரம்
வருமாறு:
”அரசியல் சட்ட்த்தின் 19(1)(இ) பிரிவு ‘இந்தியாவின் எந்த
ஒரு இடத்திலும் குடியிருக்கவும் நிரந்தரமாக வாழவும் இந்தியக்குடிமக்கள்
அனைவருக்கும் உரிமை உண்டு’ என அறிவிக்கின்றது. ஆனால் தாக்கரேயின் மண்ணின் மைந்தர்
கொள்கை, மஹாராஷ்ட்ராவில் குடியேறிய குஜராத்திகள்,தென்னிந்தியர்கள்,பிஹாரிகள்,உ.பி.யினர்
உள்ளிட்ட பிற மாநிலத்தவருக்கு எதிரானது. இது அரசியல் சட்டத்துக்கு எதிரானது. பால்தாக்கரேயால்
நிறுவப்பட்ட சிவசேனை அமைப்பினர் 1960,70களில் பம்பாயில் குடியேறி வணிகம் செய்து
கொண்டிருந்த தென்னிந்தியர்களை அடித்து நொறுக்கினார்கள், அவர்களது வீடுகளையும்
ஓட்டல்களையும் அழித்தார்கள். (பால், செய்தித்தாள் விற்போராக, டாக்சி ஓட்டுனர்களாக
பிழைப்பு நடத்திய) பிஹாரிகளையும் உ.பி.யினரையும் அடித்து அவர்களது சொத்துக்களையும்
அழித்தார்கள். இஸ்லாமியர்களை தாக்கினார்கள்.
”இந்தியா பொதுவாக ஒரு குடியேறியவர்களின் நாடுதான் (வட
அமெரிக்காவைப்போல); இன்று இந்தியாவில் வாழ்கின்ற மக்களில் 92-93 விழுக்காட்டினர்
இந்நாட்டின் பூர்விக குடிகள் அல்லர், அவர்கள் இந்தியாவின் வடமேற்கு வாயிலாக இந்நாட்டில்
நுழைந்து குடியேறியவர்களின் வாரிசுகள் (‘What is India?’ என்ற
எனது கட்டுரையை எனது தளமான justicekatju.blogspot.in-இல் காண்க). இந்நாட்டின் பூர்விக
மக்கள் ஆதி திராவிடர்களே, இவர்களை நாம் ஆதிவாசிகள் என்று சொல்கின்றோம்
(பில்,கோண்டு,சண்டாளர்,தோடர்கள் முதலியோர்), இவர்களின் ஜனத்தொகை இன்று 7-8
விழுக்காடு மட்டுமே. ஆக தாக்கரேயின் மண்ணின்மைந்தர் கொள்கை தீவிரமாக
அமலாக்கப்படும் எனில் (தாக்கரேயின் குடும்பம் உட்பட) 92-93 விழுக்காடு
மராட்டியர்களை அந்நியர்கள் என்றுதான் சொல்லவேண்டும், அவர்களை அந்நியர்களாகவே
நட்த்த வேண்டியிருக்கும். ஏனெனில் மஹாராஷ்ட்ராவின் உண்மையான மண்ணின்மைந்தர்கள் 7-8
விழுக்காடே இருக்கின்ற பில்லுகளும் பிற பழங்குடியினரும்தான்.
”இன்று இத்தேசத்தில் மிகப்பல பிரிவினைவாத சக்திகளும் (மண்ணின்மைந்தர் கோட்பாடு போன்றவற்றை பேசுகின்ற)
பிளவு சக்திகளும் இயங்கி வருகின்றன. தேசப்பற்றுள்ள யாவரும் இச்சக்திகளை
எதிர்த்துப்போராட வேண்டும்.
”நாம் ஏன் ஒன்றுபட்டு நிற்க
வேண்டும்? ஒரு மிகப்பரந்த நவீன தொழில்மயத்தால் மட்டுமே இத்தேச மக்களின் நலனுக்காக
ஆகப்பெரும் வளத்தை உருவாக்க முடியும், விவசாயத்தால் மட்டுமே இதை சாதிக்க முடியாது. நவீன தொழில்மயத்துக்கு இன்று தேவைப்படுவது
மிகப்பரந்த சந்தை. ஒன்றுபட்ட இந்தியாவால் மட்டுமே இத்தகைய ஒரு பரந்த சந்தையை தர
முடியும், அதனால் மட்டுமே வறுமையை, வேலையின்மையை, இன்ன பிற சமூக அவலங்களை ஒழிக்க
முடியும்; மிகவும் வளர்ந்த நாடுகளின் வரிசையில் இத்தேசமும் நிற்க வேண்டும் எனில் மக்களுக்கான
பரந்த சுகாதார வசதிகளையும் கல்வி வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும், பரந்த நவீன
தொழில்மயத்தால் மட்டுமே அது சாத்தியப்படும்.
”இத்தகைய காரணங்களால் திரு.பால்
தாக்கரேக்கு என்னால் இரங்கல் தெரிவிக்க முடியாது.”
5)
மஹாராஷ்ட்ர
மாநிலத்தின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் அசோக் தாவாலே விடுத்துள்ள
அறிக்கையின் சுருக்கம்: ”சிவசேனா, அதிலிருந்து உருவான
மஹாராஸ்ட்ரா நவனிர்மாண் சேனா இரண்டுமே வன்முறைக்கலாச்சாரத்தையும் பிராந்திய
வெறியையும் தூண்டுவன; சி.பி.ஐ.எம் இவற்றை
உறுதியாக எதிர்க்கின்றது...சிவசேனாவின் கொள்கையானது மதச்சார்பானது; பாபர் மசூதி
இடிப்பை தாக்கரே ஆதரித்தார், அதன் பின் நடந்த மும்பை கலவரங்களிலும்
முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளிலும் சிவசேனை, தாக்கரே ஆகியோரின் பங்கு இருந்ததை
ஸ்ரீகிருஸ்ணா கமிசன் தெளிவாக எடுத்துச்சொல்லியது...சிவசேனையின் கொள்கைகள் தொழிலாளி
வர்க்கத்துக்கும் கம்யூனிஸ்டுக்களுக்கும் எதிரானது. தொழிற்சங்கதலைவர்கள்,
அலுவலகங்கள் சிவசேனையினரால் தொடர்ந்து தாக்கப்பட்டனர்...1970இல் கம்யூனிஸ்ட் எம்
எல் ஏ தோழர் க்ருஷ்ண தேசாய் சிவசேனையினரால் கொலை செய்யப்பட்டார் என்பது
உச்சகட்டம்...சிவசேனையின் அரசியல் தலித்துக்களுக்கு எதிரானது...1970இல் தலித்
பாந்தர் இயக்கத்தின் தலைவரான பகவத் ஜாதவை சிவசேனையினர் கொன்றனர்...சிவசேனை-பாஜக
கூட்டணி அரசு ரமாபாய் அம்பேத்கர் நகரில் நடத்திய துப்பாக்கிசூட்டில் 11 தலித்துக்கள்
உயிர் இழந்தனர்...சிவசேனை ஜனநாயகக் கோட்பாட்டுக்கு எதிரானது, சர்வாதிகாரத்தை
ஆதரிக்கின்றது. காங்கிரஸின் எமெர்ஜன்சியை பால்தாக்ரே ஆதரித்தார் என்பது வரலாறு;
ஹிட்லரின் புகழ் பாடுபவர் அவர்...சிவசேனையை விமர்சிக்கின்ற
பத்திரிக்கையாளர்கள்,இலக்கிய கலாச்சாரவாதிகள் மீது அவர்கள் எப்போதும் தாக்குதல் நடத்திக்கொண்டே
இருக்கின்றார்கள்...சிவசேனையின் மதவெறி,சாதீய,தொழிலாளர் வர்க்கவிரோத கலகக்கொள்கைகளை
சிபிஐ எம் எப்போதும் எதிர்த்து நிற்கும்”.
6)இப்போதைய குடியரசுத்தலைவரான பிரணாப் முகர்ஜி பால் தாக்கரேயின் மறைவுக்கு இப்படி இரங்கல் தெரிவித்துள்ளார்: ‘தாக்கரேயின் மறைவு மஹாராஷ்ட்ரா மக்களுக்கும் இந்திய மக்களுக்கும் இழப்பாகும். இத்தேசத்தின் சாமானியக்குடிமகனின் நலனுக்கு உழைத்த ஒரு மூத்த தலைவரை இத்தேசம் இழந்துள்ளது.’
6)இப்போதைய குடியரசுத்தலைவரான பிரணாப் முகர்ஜி பால் தாக்கரேயின் மறைவுக்கு இப்படி இரங்கல் தெரிவித்துள்ளார்: ‘தாக்கரேயின் மறைவு மஹாராஷ்ட்ரா மக்களுக்கும் இந்திய மக்களுக்கும் இழப்பாகும். இத்தேசத்தின் சாமானியக்குடிமகனின் நலனுக்கு உழைத்த ஒரு மூத்த தலைவரை இத்தேசம் இழந்துள்ளது.’
7)பால் தாக்கரேயின் சடலம் தீயூட்டப்பட்ட இடமான சிவாஜி
பூங்காவை தாக்கரே நினைவிடமாக கட்ட
வேண்டும் என இப்போது சிவசேனா குரல் எழுப்புகின்றது. சிவாஜி பூங்கா என்பது ஒரு பொதுமக்களின் விளையாட்டுத்திடல்.
இத்திடலின் நலனில் அக்கறையுள்ள சுற்றுச்சூழல் நலம்விரும்பிகளின் அமைப்பு இதற்கு
எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மாநில அமைச்சரான பாஸ்கர் ஜாதவ் என்பவர் அரசு இதற்கு
அனுமதி தரும் என்றும் சொல்லியுள்ளார். ஏற்கனவே இத்திடலின் ஒரு வாசலில் தாக்கரேயின்
மனைவி உருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மைய மண்டபத்தில் சவர்க்காரின்
உருவப்படத்தை இத்தேசத்தின் குடியரசுத்தலைவர் திறந்து வைப்பார் எனில், சிவாஜி
பூங்காவில் மட்டும் அல்ல, நாடாளுமன்றத்தின் முன்னுள்ள காந்தியடிகளின் சிலையின்
இருபுறமும் கோட்சே, பால் தாக்கரே இருவர் சிலைகளும் நிறுவப்படக்கூடும். அச்சிலைகளை
இத்தேசத்தின் மிக உயர்ந்த பதவிகளில் இருப்பவர்கள் திறந்து வைக்கவும் கூடும்.
1 கருத்து:
உண்மையைத் தோலுரிக்கும் அற்புதமான கட்டுரை. இப்படிப்பட்ட விவரங்களோடு ஒரு கட்டுரை எழுதுவது இன்றைய தேவை. இது உண்மையில் இந்திய நாட்டுக்கு சேவை, இக்பால் ஒரு மகத்தான எழுத்தாளனாக மலர்ந்து வருகிறான். எங்களுக்குக் கிடைத்த சாதத் ஹசன் மாண்டோ. தொடர்ந்து எழுதினால் இந்த நாட்டுக்குப் பிடித்த தோஷம் நீங்கும்.
கருத்துரையிடுக