செவ்வாய், ஜனவரி 01, 2013

தானாய் எல்லாம் மாறும் என்பது...



இதோ 2012ஆம் ஆண்டு பின்னால் சென்று பழைய வருடமாகிவிட்டது!
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என வாழ்த்தவே மனம் நாடுகின்றது தோழரே!
நடப்பது கண்டால்...?
ஆதலினால் காதல் செய்வோம்...என்றொருவன் சாதியப்பெருநோய்க்கு  மருத்துவம் பார்த்த இந்த மண்ணில்தான் காதலை காமத்தோடு முடிச்சுப்போட்டு அன்பெனும் உறுப்பை மனித மனங்களில் இருந்து சாதீயக்கட்டாரி கொண்டு அறுத்துப்போடும் நவீன மருத்துவர்கள் நெஞ்சு நிமிர்த்தி ஊர்வலம் வருகின்றார்கள்.
இயற்கை மனிதருக்குள் பருவத்தே முகிழ்த்து மலர்விக்கும் ஆண்பெண் உறவுத்தோட்டத்தில் புகுந்துவிடும் காடுவெட்டிகள் சாதீயத்தீவட்டியை எரிந்து தோட்டம் சாம்பலாவதை கிட்ட நின்று பார்த்து கைகொட்டி சிரிக்கின்றார்கள்.
அண்ணாவுக்கு பொடிவாங்கிக்கொடுத்த, பெரியாருக்கு தடி எடுத்துக்கொடுத்த திராவிடத்தளபதிகள் தலித்துக்களின் வீடுகள் பற்றி எரியும்போது ஒரு மயிரைக்கூட உதிர்க்க ஆயிரம் யோசனை செய்கின்றார்கள்.
அண்ணாவுக்கும் பெரியாருக்கும் அன்றாடம் ஆயிரம் நாமம் சாத்தும் பார்ப்பனத்தலைவிகளின் காவல்துறை, தேவர் குருபூஜை எனில் கைகட்டி சேவகம் செய்கின்றது, தர்மபுரியில் தலித் வீடு பற்றிஎரியும்போதோ  கைகட்டி வேடிக்கை பார்க்கின்றது. வெண்மணியிலும் வாச்சாத்தியிலும் மாஞ்சோலையிலும் தர்மபுரியிலும் கயர்லாஞ்சியிலும், இதோ, டெல்லியிலும் காவல்துறை ஒரே மாதிரித்தான் இருக்கின்றது! செப்புமொழி பதினெட்டு, எனினும் காவல்துறைக்கு சிந்தனை ஒன்றுதான்!
தேசத்தையும் நதிகளையும் மாதா என்று கொண்டாடும் தேசத்தின் தலைநகரில் 23 வயதுப்பெண்ணொருத்தி சக நண்பனுடன் பயணித்தால் உடலோடு உள்ளமும் சிதைக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்குப் பிறகு பிணமாகின்றாள். அவள் சிதைக்கப்பட்ட அப்பேருந்து ஐந்து காவல்துறை சோதனை பாயிண்டுக்களை தாண்டி பயணித்ததாம், ஆனால் குறைந்தபட்சம் ஒரே ஒரு பாயிண்டில்கூட எந்த ஒரு போலீஸ்காரனுக்கும் அப்பேருந்து குறித்து சிறு சந்தேகமும் வரவில்லையாம், பேருந்து தடையின்றி பயணித்ததாம்! புரோகிதர்கள் மந்திரம் சொல்ல தேங்காய் உடைக்கப்பட்டு ஏவப்பட்ட பல பத்து செயற்கைக்கோள்களில் ஒன்று கூடவா இந்தப் பேருந்தைக் காட்டிக்கொடுக்கவில்லை?! பாரத் மாதா கீ ஜே! இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட உறவினர் எண்ணிக்கை நூறாம், போலீசின் எண்ணிக்கையோ ஆயிரமாம்! உடன் பயணித்த நண்பன் குறித்த தகவல் தெரிவிப்போருக்கு பாரத்ரத்னா விருது நிச்சயம், முயற்சி செய்யுங்களேன்!
மனிதன் உயிர்வாழும் பொருட்டுத்தேவையான அத்தனை உறுப்புக்களுடன் பிறந்தாலும் ரேசன்கார்டு இல்லாத மனிதன் இந்தியாவில் நாயினும் கேடானவன்! புழுவிலும் கீழானவன்! நேற்று வரை அப்படித்தான்! இதோ, வேட்டிகட்டிய தமிழர்களும் டர்பன் கட்டிய பஞ்சாபிகளும் சேர்ந்து (இன,மத,மொழி,நிற,மாநில,கட்சி வேறுபாடு எள்ளளவும் இன்றி செம்புலப்பெயல் நீர் போல நெஞ்சம்தான் கலந்து ஒற்றுமையுடன்)இந்த இழிநிலையை மாற்றிவிட்டார்கள்! கோட்டும் டையும் கட்டிய வெள்ளைக்காரனுக்கு மலம் கழுவ வரிசையில் வெள்ளிச்சொம்புடன் காத்து நிற்கின்றார்கள்! மலம் கழுவ சில நிபந்தனைகள் உண்டு: ரேசன்கார்டை ஒழித்துக்கட்டு; காஸ் சிலிண்டருக்கு மானியத்தை ஒழி; மாதம் ஒருமுறை பெட்ரோல் டீசல் விலை உயர்த்து; தெருவோரக்கடைகளில் அல்லது தெருவில் கூவி விற்கும் இந்த மண்ணின் மக்களான சில்லரை வியாபாரிகளை குரல்வளை நெரித்துக்கொல், வால்மார்ட்டை உள்ளே விடு; மக்கள்சொத்தான வங்கிகள் இன்சூரன்ஸ் நிறுவனங்களை இணைப்பு என்ற பெயரில் ஒழித்துக்கட்டு, அமெரிக்கப் பெருமுதலாளிகளுக்கு ‘அதில் பங்குஎன்ற பெயரில் விற்றுவிடு....
2012இன் இறுதிஅல்ல மேலே சொன்னவை; சாதீயம் ஈராயிரம் வருட இழிவின் எச்சமெனில் உலகமயமும் தாராளமயமும் தனியார்மயமும்  நூறு வருடங்களுக்கும் மேற்பட்ட முதலாளித்துவத்தின் உச்சம்; இதில் எதுவும் மனிதன் நிம்மதியாய் வாழ ஒரு  மயிரைக்கூட கடந்தகாலத்தில் உதிர்த்ததில்லை, உதிர்க்கப்போவதும் இல்லை!
இந்த இழிவெனும் எச்சங்களும் உச்சங்களும், அவற்றின் காரணகர்த்தாக்களும் எடுபிடிகளும் ஒழியும் நாளே நமக்கும் நம் குடும்பத்தாருக்கும் இந்த நாட்டுக்கும் மகிழ்வையும் அன்பையும் நலத்தையும் கொண்டுவந்து சேர்க்கும் திருநாளாம்! தானாய் ஒழியாது எதுவும்! இவற்றை மாற்றும் படைதனில் நாமாய் முன்வந்து இணைந்தால் அன்றி சாத்தியமில்லை எதுவும்! தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா....
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

கருத்துகள் இல்லை: