வாஷிங்டன் மாநகர். நேரம்
நள்ளிரவு 12 மணி. வெள்ளைமாளிகையின் வாசல் திறக்கப்படுகின்றது. வந்து நிற்கும்
காரின் கதவுகளை மிகப்பணிவுடன் பணியாளர் திறந்து விடுகின்றார். உள்ளேயிருந்து
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் மதிப்பிற்குரிய செயலாளர்ஜி இறங்கி நேராக அமெரிக்க
அதிபர் ஒபாமாஜியின் அறைக்கு செல்கின்றார். அங்கே நீள்வட்ட வடிவ நீண்ட மேஜையில் இரண்டு கைகளையும்
முழங்கைகளால் ஊன்றியபடியும் இரண்டு உள்ளங்கைகளால் கன்னங்களை தாங்கியபடியும்
அடக்கமுடியாமல் குமுறி குமுறி அழுதபடி இருப்பவர் ஒபாமாஜி. இடதுபுறம் அமர்ந்திருக்கும்
வெளியுறவுத்துறை செயலாளரும் வலதுபுறம் அமர்ந்திருக்கும் உள்துறைசெயலாளரும் (நமது
பாஷையில் மந்திரிகள்) அவரை சமாதானப்படுத்த முயல்கின்றார்கள். “சரி விடுங்க, அழுது புரண்டு என்ன பிரயோசனம்? ஏதோ நம்மால் ஆன உதவிகளை அவங்களுக்கு
செய்வோம், அழாதீங்க. இதோ பாருங்க, ஐ.நா.பொதுச்செயலாளரும் வந்துட்டாரு, இனிமே நாம் கவலைப்பட வேண்டாம், சர்வதேச சமுதாயமும் நம்ம பக்கம்தான்” என்றபடியே
ஐ.நா.செயலாளர்ஜியை வரவேற்க, அவரோ தன்னையும்
மீறி ஏற்கனவே அழுதுகொண்டிருந்த ஒபாமாஜியை கட்டிப்பிடித்து பெருங்குரலெடுத்து “இப்படியும் நடக்குமா? ஐயோ!”வென கதறி அழுகின்றார். அருகில்
உட்கார்ந்திருக்கும் புஷ்ஜி, கிளிண்டன்ஜி, வால்மார்ட் முதலாளிஜி, பெட்ரோலிய கம்பெனிகளான எக்சான் மோபைல், ப்ரிட்டிஷ் பெட்ரோலியம், ஷெல், கொனொகோ ஃபிலிப்ஸ், செவ்ரோன், ஆக்சிடெண்டல், எமெர்சன் ஆகியவற்றின் முதலாளிஜிக்களும், கொகொகோலா முதலாளிஜி, பெப்சி முதலாளிஜி, யூனியன் கார்பைடு முதலாளியான வாரன்
ஆண்டர்சன்ஜி, மான்சாண்டோ
முதலாளிஜி, கார்கில்
முதலாளிஜி, என்ரான்
முதலாளிஜி, சி ஐ ஏ, எஃப் பி ஐ இயக்குனர்கள்ஜி அனைவரும் அவரை
சமாதானப்படுத்த முயல்கின்றார்கள்.
********************
அதே நேரம் பாரத்தேசத்தின்
தலைநகரம் டெல்லியில் ராணுவத்தலைமையகத்தின் முன் ஒரு கறுப்புக்கலர் கார் வந்து
நிற்கின்றது. தரைப்படைத்தளபதி,
விமானப்படைத்தளபதி, கடற்படைத்தளபதி மூவரும் சேர்ந்து காரின்
கதவைத்திறக்க அதிலிருந்து இறங்கியவருக்கு விரைப்புடன் மூவரும் சல்யூட் வைக்கின்றனர்.
கைகுலுக்கி அவரை வரவேற்று உள்ளே ஒரு அறைக்கு அழைத்து செல்கின்றனர். அங்கே ஏற்கனவே
ராஹுல்ஜி. மன்மோஹன்ஜி, சிதம்பரம்ஜி, அத்வானிஜி, ராஜ்நாத்ஜி,
மோடிஜி, மாண்டேக்சிங் அலுவாலியாஜி, அனில் அம்பானிஜி, முகேஸ் அம்பானிஜி, டூஜி, த்ரீஜி ஆகியோரோடு உளவுத்துறையான ரா இயக்குனர்ஜியும் இவரை
எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்கள். காரில் வந்தவரை மன்மோஹன்ஜி கைகுலுக்கி
வரவேற்க மறு விநாடியே வந்தவர் குமுறிக்குமுறி புரண்டு அழுகின்றார். “சரி விடுங்க, அழுது புரண்டு என்ன பிரயோசனம்? ஏதோ நம்மால் ஆன உதவிகளை அவங்களுக்கு
செய்வோம், அழாதீங்க. இதோ பாருங்க, ஒபாமாஜியும் ஐ.நா.பொதுச்செயலாளர்ஜியும்
அங்கே காத்துக்கிட்டு இருக்காங்க” என்றபடியே அவரை சமாதானப்படுத்துகின்றார்
மன்மோஹன்ஜி. அவர் இருக்கையில் அமர்ந்தவுடன் தளபதி சைகை காட்ட விளக்குகள்
அணைக்கப்பட தலைக்குமேல் ப்ரொஜெக்டரில் இருந்து படம் விழுகின்றது திரையில். அதே
படம் அதே நேரத்தில் வாஷிங்டனில் வெள்ளைமாளிகையிலும் தெரிகின்றது. திரையில்
இராக்கின் தலைநகரான பாக்தாத். வீதிகளில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என
லட்சக்கணக்கானோர் கூடி நின்று ஆக்ரோசமாக கோஷம் இடுகின்றார்கள். “சதாம் உசேன் ஒழிக! கடலை மிட்டாயை ஒழித்துவைத்த
சதாம் உசேன் ஒழிக! கடலைமிட்டாயை ஒழித்துவைத்து எங்களை பட்டினி போடும் சதாம் ஒழிக!” என்று கோஷம்
வானத்தை ரெண்டாகப் பிளக்கின்றது. பாக்தாத் மட்டும் இன்றி இராக் தேசமே இக்கோஷத்தால்
திமிலோகப்படுகின்றது. இது
பற்றியெல்லாம் ஒருதுளிகூடக் கவலைப்படாமல் அரண்மணையின் சாப்பாட்டு அறையில் “யாருக்கும் தரமாட்டேன்” என்றபடியே
தட்டுத்தட்டாக கடலைமிட்டாய்களை தின்றபடியே இருக்கின்றார் சதாம் உசேன்.
*****************************************
டெல்லியிலும்
வாஷிங்டனிலும் படம் முடிகின்றது. இப்போது டெல்லியில் காரில் வந்தவர் மீண்டும் ஓவென
அழத்தொடங்க ரா இயக்குனர் அவரை ஆசுவாசப்படுத்துகின்றார். “அழாதீங்க! இப்போதான் நீங்க தைரியமா
இருக்கணும்! இராக் குழந்தைகளுக்கு கடலைமிட்டாய் கிடைச்சே ஆகணும்கறதுல பாரத்
சர்க்காரும் ஒபாமாஜியும் புஷ்ஜியும் உறுதியா இருக்கறோம்! இதுக்கு யாரு தடையா
இருந்தாலும் அவங்களை வேரோடும் வேரடி மண்ணோடும் ஒழிச்சுக்கட்டுறதுன்னு பாரத்மாதா
மேல சத்தியம் செய்துருக்கோம்! இந்த ஆக்சனுல நீங்கதான் நேரடியா இறங்கப்போறீங்க!
இதுக்கு ஐ.நா.செயலாளர்ஜியும் அனுமதி கொடுத்துட்டாரு! இன்னிலேயிருந்து உங்க பேரு ராமசாமி
ரஹ்மத்துல்லா காஷ்மீரி! இந்தாங்க ஃப்ளைட் டிக்கட். இன்னிக்கு ராத்திரி 12 மணி
ஃப்ளைட்டுல நீங்க அமெரிக்கா போறீங்க! இதோ இந்தப் பையிலே கதக், கதகளி, கரகாட்டம், டப்பாங்குத்து
டான்ஸ் காஸ்ட்யூம், ஷாம்பூ, கத்திரி, சவரக்கத்தி,
சலங்கை, ஜதிக்கட்டை, தொப்பி, ஒட்டுத்தாடி, ஜிப்பா, 30 நாள்ல உருது, புஷ்டு, அரபி, ஹிந்தி கத்துக்கறது எப்புடி புக்ஸ் எல்லாம் இருக்கு! இது இல்லாம 20
டஜன் கைக்குட்டை தனியா இருக்கு! அழுதா துடைச்சுக்குங்க! ஆல் தி பெஸ்ட்! வாஷிங்டன்ல
பாரத் தூதர் உங்களுக்காக எல்லா அரேஞ்மெண்டும் செய்வார்! பாரத் மாதா கீ ஜே!” என்று சொல்ல, அனைவரும் வாசல் வரை வந்து வழியனுப்ப, ராமசாமி ரஹ்மத்துல்லா காஷ்மீரி காரில் ஏறி
இந்திராகாந்தி இண்டெர்னேஷனல் ஏர்போர்ட்டுக்கு விரைகின்றார்.
********************************
வாஷிங்டன் வெள்ளைமாளிகை
வாசல். ஒபாமாஜி, புஷ்ஜி உள்ளிட்ட
பல ஜிக்களும் சி ஐ ஏ, எஃப் பி ஐ
இயக்குனர்கள்ஜிக்களும் காத்திருக்க ஒபாமாஜியின் தனிச்செயலாளர் ஒபாமாஜியின் காதில்
ஏதோ சொல்ல “வாவ்!
ஒண்டர்ஃபுல்!” என்றவாறே
பக்கத்தில் நிற்கும் ஜிக்களை உள்ளே அழைத்து செல்கின்றார். அங்கே அறையில் ஏற்கனவே
ராமசாமி ரஹ்மத்துல்லா காஷ்மீரி உட்கார்ந்திருக்கின்றார். “குட் மார்னிங் ஒபாமாஜி அண்ட் அதர் ஜீஸ்!
நாம இறங்கப்போறது அதிரடி ஆக்சன்ங்கறத மறந்துடாதீங்க! யாருக்கும் துளியளவு கூட
தெரியக்கூடாது! நம் எதிரிகள் உஷார் ஆகிடுவாங்க! அதனால பின் வாசல் வழியா வந்தேன்!” என்று சொல்ல
இண்டர்னேஷனல் பயங்கரவாதத்தை அடக்கும் அதிரடி ஆக்சனுக்கு ஒட்டுமொத்த குத்தகை எடுத்து
திமிரோடு திரியும் சி ஐ ஏ, எஃப் பி ஏ
இயக்குனர்கள் கூட வெட்கத்தில் தலை குனிந்தார்கள். “வாவ்! இண்டியன்ஸ் ஆர் க்ரேட்!” என்று ஒபாமாஜி வியக்க, உடனடியாக ஒரு பாராட்டு சான்றிதழ் டைப்
செய்யப்பட்டு ரா.ர.காஷ்மீரிக்கு வழங்கப்பட்ட்து. கூட்டம் முடியும்போது பாரதப்பிரதமரிடம்
இருந்து ரா.ர.காஷ்மீரிக்கு தொலைபேசி வந்தது. ரா.ர.காஷ்மீரி இறங்கப்போகும் அதிரடி
ஆக்சனுக்கு பிரதமர் வாழ்த்து சொல்ல ரா.ர. “ஜெய் ஹிந்த்!” என்று பேச்சை முடிக்க ஒபாமாஜி முறைக்க
ரா.ர.காஷ்மீரி தன் தவற்றை உணர்ந்து “காட் சேவ் அமெரிக்கா!” என்று முடிக்கின்றார்.
************************************
திட்டமிட்டபடி ராமசாமி
ரஹ்மத்துல்லா காஷ்மீரி ஃப்ளொரிடா மாகாணத்தில் தோண்டப்பட்ட ஒரு பாதாளச்சாக்கடை
வழியாக இராக் வந்து பாக்தாத்தின் நெரிசலான ஒரு மார்க்கெட்டின் மேலே வந்து
விடுகின்றார். சதாம் உசேனுக்கு லாலிபாப் என்றால் கொள்ளை ஆசை என்று சிஐஏ
மூலம்தெரிந்துகொண்டு ஒரு பை நிறைய லாலிபாப்புடன் சதாமின் அரண்மணைக்கு முன்னால்
சலங்கை கட்டி கதக், ஒடிசி, கதகளி, டப்பாங்குத்து, கரகாட்டம் என
கலந்துகட்டி டான்ஸ் ஆடுகின்றார். ஆடிக்கொண்டிருக்கும்போதே லாலிபாப்களை அள்ளிஅள்ளி
வீச அது அப்படியே விரிந்து சதாமின் அரண்மணைக்கு முன்னால் மலைபோல்
குவிந்துவிடுகின்றது. இதைக்கேள்விப்பட்ட சதாம் ராமசாமி ரஹ்மத்துல்லா காஷ்மீரியை
அரண்மணைக்குள் வரச்சொல்கின்றார். சிஐஏ,எஃப் பி ஐ, ரா எல்லோரும்
எதிர்பார்த்ததும் இதுதான். ”யாரப்பா நீ?” என சதாம் வினவ
ரா.ர.காஷ்மீரி ”என் சொந்த ஊர் கைபர் கணவாய், ஊர் ஊராப் போயி டான்ஸ் ஆடி ஜனங்களை சந்தோசப்படுத்துறதே என் தொழில்” என சொல்கின்றார். ஏற்கனவே திட்டமிட்டபடி
இருபது லாரி நிறைய லாலிபாப் இறக்குமதி செய்வதற்கான அனுமதியை சதாமிடம் இருந்து
பெறுகின்றார். ஆனால் லாரியில் வந்து இறங்கியதோ அத்தனையும் வெடிகுண்டு, ஏவுகணைகள், துப்பாக்கிகள். லாரியை ஓட்டிவந்த டிரைவர்கள் கிளீனர்கள்
எல்லோரும் சிஐஏ, எஃப் பி ஐ, ரா அதிரடி ஆக்சன் வீர்ர்கள். திட்டமிட்டபடி
அரண்மணைக்குள் நுழைந்து சதாமைக் கைது செய்கின்றார்கள். சதாமின் படைவீர்ர்கள் சிஐஏ, எஃப் பி ஐ, ரா அதிரடி ஆக்சன் வீரர்கள் மீது தாக்குதல் நடத்த பதிலுக்கு
இவர்கள் தாக்குதல் நடத்த சதாமின் ராணுவம் மொத்தமும் க்ளோஸ்.
சதாம் ஏற்கனவே ஆயிரம்
வருடங்களாக பூமிக்கு அடியில் புதைத்து மறைத்து வைத்துள்ள கடலை மிட்டாய்களை சிஐஏ, எஃப் பி ஐ, ரா அதிரடி ஆக்சன் வீரர்கள் தோண்டியெடுத்து ஆய்வு செய்ததில் அது
இராக் மக்களுக்கு ஒத்துக்கொள்ளாது, அலர்ஜி ஆகும் என்று தெரிகின்றது. எனவே கடலைமிட்டாய்களை
ஆஃப்கானிஸ்தான் வழியாக அமெரிக்காவுக்கே கொண்டு செல்வதென்று முடிவானது. இதற்கு
தடையாக இருக்கும் அனைவரும் சர்வதேச பயங்கரவாதிகள் என்று ஐ.நா.செயலாளர்ஜி டிவியில்
அறிவிக்கின்றார். இராக் மக்களோ எங்கள் மண்ணில் விளைந்த கடலைமிட்டாய் எங்களுக்கே
சொந்தம், எடுத்துச் செல்ல
விடமாட்டோம் என சி ஐ ஏ, எஃப் பி ஐ அதிரடைப்படைகளை எதிர்த்து
வீதிகளில் போராடுகின்றார்கள். அதிரடி ஆக்சன்
வீரர்கள் இவர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றார்கள், ஆனால் சிஐஏ,
எஃப்
பி ஐ வீசும் குண்டுகளும் ஏவுகணைகளும் கூட்டமாய் கூடி நிற்கும் இராக் பெண்கள்
குழந்தைகள் மீது விழுந்தால் அவை
உடனடியாக ரோஜா, மல்லிகை என
புஷ்பங்களாக மாறிவிடும் மாயமும் நடந்தது.
அடுத்தகட்டமாக இராக்கில்
இருந்து ஆஃப்கானிஸ்தான் வழியாக அமெரிக்காவுக்கு ரோடு போடும் வேலை ஆரம்பமானது. ஒரு
காலத்தில் அமெரிக்காவின் பிசினஸ் பார்ட்னராக இருந்து பின்னர் பிசினசில் தகராறு
ஏற்பட்டு பிரிந்து சென்ற ஒசாமாஜி ஆஃப்கானிஸ்தானத்தில் இருப்பதாக சிஐஏ, எஃப் பி ஐ, ரா மூலம் அறிந்த ராமசாமி ரஹ்மத்துல்லா காபூல் மார்க்கெட்
நடுவில் நின்று கதக், கதகளி, பரதம், ஒயிலாட்டம் ஆட மறைந்து நின்று பார்த்த ஒசாமாஜியின் குடும்பம் மொத்தமும்
வாயில் நுரை தள்ளி சாகின்றார்கள். கூடவே அல்கைதா, தாலிபான் பயங்கரவாதிகள் எல்லோரும் தாமாகவே முன்வந்து தற்கொலை
செய்துகொள்கின்றார்கள். பாப்ரக் கார்மலை எந்த விளக்குக்கம்பத்தில் தூக்கில்
போட்டார்களோ அதே கம்பத்தில் சதாம் உசேனையும் தூக்கில் போடுகின்றார்கள் சிஐஏ, எஃப் பி ஐ, ரா அதிரடி ஆக்சன் வீர்ர்கள். சே குவாரா, சால்வடார் அலண்டே, பாட்ரிஸ் லுமும்பா, கென் சாரோ விவா, யாசர் அராஃபத், நஜிபுல்லா ஆகியோர் புதைக்கப்பட்ட அதே
இட்த்தில் சதாமையும் புதைத்துவிடுகின்றார்கள் சிஐஏ, எஃப் பி ஐ,
ரா
அதிரடி ஆக்சன் வீர்ர்கள்.
********************************
சென்னை. கூவம் நதியோரம்
ஒரு பங்களாவிலிருந்து கேட்கின்றது அந்த ஒலி “தாதா தைதை தாதா தைதை தகதிமி தைதை...” உள்ளே சலங்கை ஜதிக்கட்டை
சீராக ஒலிக்க ராமசாமி ரஹ்மத்துல்லா என்ற ராமத்துல்லா ரஹ்மத்சாமி என்ற
ரஹ்மத்சாமி ராமத்துல்லா ஏழெட்டுப்பெண்கள் சூழ கதக், ஒடிசி, கும்மியாட்டம்
என்று கலந்துகட்டி ஆடிக்கொண்டிருக்கின்றார். தொலைபேசி மணி ஒலிக்கின்றது. “தகதிமி தகதிமி தகதிமி தகதிமி” என அபிநயம்
பிடித்தபடியே தொலைபேசியை எடுத்து காதில் வைக்க, “மிஸ்டர் ரா.ர.! உடனடியாக டெல்லிக்கு புறப்படுங்க! இரானில் ஒரு
அதிரடி ஆக்சனில் இறங்க வேண்டியிருக்கு! உங்க வீட்டுக்கதவை திறந்து பாருங்க, ஃப்ளைட் டிக்கட் கிடக்கும்! உடனே
புறப்படுங்க! இன்னிலயிருந்து உங்க பேரு...” என எதிர்முனை
பேசுகின்றது. தாதா தைதை தாதா தைதை...
3 கருத்துகள்:
கற்பனை வளத்துடன் எழுதப்பட்ட கட்டுரை....வார்த்தைகள் நாடகப் பாத்திரங்கள் ஆகிவிடுகின்றன..
இந்த பாணியிலான எழுத்து சாம்பல்தேச காரருக்கு அற்புதமாக வருகிறது.மேலும் பல வெளிவர வாழ்த்துகள்.
1)கோபத்தின் உச்சக்கட்டம்தானய்யா எள்ளலும் நகைச்சுவையும்! உலகின் மிகச்சிறந்த நகைச்சுவையாளர்கள் மனிதாபிமானிகள், சமூக அவலங்கள் கண்டு கொதித்தவர்கள்,ஆகவே அவர்கள் மிகுந்த கோபக்காரர்கள், சமூகத்தை எள்ளி நகையாட அவர்கள் கையில் எடுத்த உத்திதான் எள்ளல்சுவை (satire). இதில் உச்சத்தில் இருந்தவன் சார்லிசாப்ளின்...
2)பாராட்டிய அன்புத்தோழர்கள் அருள், அமீபா,(எப்போதும் போலவே)இடுகை இட்ட மறுநாள் காலையிலேயே நாக்பூரில் இருந்து தொலைபேசியில் அழைத்துப் பாராட்டிய மூத்த தோழர் காஸ்யபன்...அனைவருக்கும் நன்றி! இன்னும் எழுதுவேன்!
கருத்துரையிடுக