சனி, அக்டோபர் 13, 2012

பாகிஸ்தான் செல்லும் ரயில் (இறுதிப்பாகம்)


பாகிஸ்தானுக்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்குது? நாங்க இங்கதான் பிறந்தோம். எங்க முன்னோர்களும் இங்கதான் பிறந்தாங்க. அண்ணன் தம்பிகளா உங்களோடதான் வாழ்க்கை நடத்திக்கிட்டு இருக்கோம்.உடைந்து அழுதார். மீட்சிங் இமாமை அணைத்துக்கொண்டு அழத் தொடங்கினார். கூட்டத்தில் பெரும்பாலோர் கண்ணீர்விடத் தொடங்கினார்கள். மூக்கைச் சிந்தினார்கள்.

கிராமத்தலைவர் பேசினார். ஆமாமா, நீங்க எங்களோட சகோதரர்கள்தான். எங்களைப் பொறுத்த மட்டில், நீங்க, உங்களோட குழந்தைகள், பேரப்பிள்ளைங்க எல்லோரும் இந்தக் கிராமத்துலேயே எத்தனைகாலத்துக்கு வேண்டுமானாலும் இருங்க. உங்களையோ உங்க மனைவிமாரையோ பிள்ளைகளையோ யாராவது திட்டினாங்கன்னா, உங்க தலையிலிருந்து ஒருமுடி உதிர்றதுக்கு முன்னாலே நாங்களும் எங்க மனைவிமாரும் பிள்ளைகளும் உயிரை விடுவோம். ஆனால், மாமா... நாங்க எண்ணிக்கையிலே ரொம்பக் குறைவு. பாகிஸ்தானிலிருந்து அகதிகள் ஆயிரக்கணக்குலே வந்துக்கிட்டே இருக்கறாங்களே, அவங்களாலே ஏதாச்சும் ஆச்சுன்னா யார் பொறுப்பு?”

ஆமாமா, எங்களுக்கு ஒண்ணுமில்லே. ஆனா அகதிகளால ஏதாச்சும் ஆச்சுதுன்னா?” மற்றவர்கள்.

துப்பாக்கி ஈட்டிகளோட ஆயிரக்கணக்கான பேர் பல கிராமங்களை முற்றுகையிட்டுட்டதாக நாங்க கேள்விப்பட்டோம். எதிர்ப்புங்கற பேச்சுக்கே இடமில்லே.

கும்பலைப் பார்த்துப் பயப்படறோம் இல்லே? வரட்டும் பார்க்கலாம். நாம் குடுக்கற அடி, மறுபடி அவங்க மனோமஜ்ராவைத் திரும்பிக்கூடப் பார்க்கக்கூடாதுஎன்றது ஒரு குரல். இந்த சவாலுக்கு எந்த பிரதிபலிப்பும் இல்லை, ஒரு வெற்றுச்சவாலாக இருந்தது. இமாம் மீண்டும் மூக்கைச் சிந்தினார். சகோதரர்களே, நாங்க என்ன செய்யணும்னு சொல்லுங்கபொங்கி வரும் உணர்ச்சியோடு கேட்டார்.

கிராமத்தலைவர் கனத்த குரலில் கூறினார். மாமா, சொல்றதுக்கு கஷ்டமாகத்தான் இருக்கு. ஆனா இப்ப இருக்கற சூழ்நிலையிலே நீங்க எல்லாரும் அகதி முகாமுக்குப் போறதுதான் நல்லதுன்னு நான் சொல்வேன். உங்க சொத்துபத்தெல்லாம் வீட்டுலே வச்சுப் பூட்டிட்டுப் போங்க. உங்க ஆடுமாடுகளையெல்லாம் நீங்க திரும்பி வர்றவரைக்கும் நாங்க பார்த்துக்கிறோம்.... இதுக்குப் பிறகும் நீங்க இங்கேயே இருக்கணும்னு விரும்பினீங்கன்னா, நாங்க அதை வரவேற்கிறோம். எங்க உயிரைக்கொடுத்தாவது உங்களைக் காப்பாத்துவோம்.

இமாம் எழுந்தார். ஆகட்டும், நாங்க போய்த்தான் ஆகணும்னா, எங்க சொத்து, பாய்படுக்கையெல்லாம் கட்டி எடுத்துக்கிட்டுப் போறோம். எங்க அப்பாக்களும் தாத்தாக்களும் பல நூறு வருசங்களா உருவாக்கிய இந்த மண்ணை விட்டுட்டு நாங்க போறதுக்கு எங்களுக்கு ஒருநாள் ராத்திரியாவது வேணுமல்லவா?”

கிராமத்தலைவர் அதிகபட்சக் குற்றவுணர்வுக்கு ஆளாகி உணர்ச்சிக் கொந்தளிப்பில் தத்தளித்தார். தனது இடத்திலிருந்து எழுந்து இமாம் பக்ஷைக் கட்டித் தழுவி வாய்விட்டு அழத்தொடங்கினார். அந்தக் கிராமத்தின் சீக்கியர்களும் முஸ்லிம்களும் ஒருவர் தோளில் ஒருவர் சாய்ந்து குழந்தைகளைப் போல் அழுதார்கள். கிராமத் தலைவரின் தோளிலிருந்து தன்னை மெதுவாக விடுவித்துக் கொண்ட இமாம் பக்ஷ், “அழுவதற்கு அவசியமில்லைஎன்று விம்மியவாறே கூறினார்.


உலகம் இவ்வளவுதான்
மணம் கமழும் பந்தல் கொடியில்
புல்புல் பறவையின் பாடல் நிரந்தரமல்ல
இளவேனிற் காலமும் நின்று நிலைப்பதில்லை
பூக்களும் நிரந்தரமாய் பூத்திருப்பதில்லை
மகிழ்ச்சியும் நிலைத்து நீடிப்பதில்லை
இன்பம் பொங்கும் நாட்களிலும் கூட 
சூரியன் நிலைத்து நிற்பதில்லை, மறையவே செய்வான்
நட்பும் நிரந்தரமாய் நிலைப்பதில்லை
யார் இவற்றை அறியாதவரோ
அவர் வாழ்க்கையை அறியாதவராவார்.” 


(முற்றும்)

(புகைப்படத்தில் குஷ்வந்த் சிங். (இப்போது  பாகிஸ்தானில் உள்ள ) பஞ்சாபின் ஹதாலி மாவட்டத்தில் சர்கோதா என்னும் ஊரில் பிறந்தவர். பிறப்பு 1915, பிப்ரவரி 2.  அவரது தந்தை சர் சோபா சிங் அன்றைய காலத்தில் டெல்லியில் கட்டிடக்கலை வல்லுனராக புகழ் பெற்றவர், வெள்ளையர் காலத்திய டெல்லியில் பல அழகுமிகு கட்டிடங்களை கட்டியவர். குஷ்வந்த் சிங் லாஹூர், டெல்லி,லண்டன் நகரங்களில் படித்தவர். சட்டப்படிப்பில் பார்-அட்-லா படித்தவர். அவரது நாவல்கள்,சிறுகதை தொகுப்புக்கள் முப்பதுக்கும் மேல் இருக்கலாம். சமூகம், மதம், அரசியல், பாலியல்  சார்ந்த தனது கருத்துக்களை வெளிப்படையாக பேசுவது இவரது வழக்கம்)

திங்கள், அக்டோபர் 08, 2012

பாகிஸ்தான் செல்லும் ரயில் - 3 (குஷ்வந்த் சிங்)


அது என்ன நாற்றம் என்று யாரும் யாரையும் கேட்கவில்லை. அவர்களுக்குத் தெரியும் அது என்னவென்று. அவர்களின் கடந்த காலம் அதை அவர்களுக்குச் சொல்லியிருந்தது. அந்த ரயில் பாகிஸ்தானிலிருந்து வந்தது என்பதே அவர்களின் கேள்விகளுக்குத் தகுந்த பதிலாக இருந்தது.


மனோமஜ்ரா நினைவு தெரிந்த நாளிலிருந்து முதன்முதலாக அன்றுதான் இமாம் பக்ஷின் குரல் (மசூதியிலிருந்து) வானத்தைத் தொட்டு அல்லாவின் புகழை உரக்கக் கூவுவதற்காக மேலெழும்பவில்லை.



*******************************************



ஹெட்கான்ஸ்டபிளின் வருகை, வெண்ணெயில் கத்தி இறங்குவதைப் போல் மனோமஜ்ராவை இரண்டாகப் பிளந்துவிட்டது. முஸ்லிம்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே இருந்து துக்கத்தில் ஆழ்ந்தார்கள். பாடியாலாவிலும் அம்பாலாவிலும் கபுர்தலாவிலும் சீக்கியர்கள் முஸ்லிம்களைத் தாக்கிக் கொடுமைப்படுத்தியதாகக் கூறப்பட்ட வதந்திகள் முன்பு பரவியதும், ஆனால் தாங்கள் அதைப் பொருட்படுத்தாததும் மீண்டும் நினைவில் ஓடின. முக்காடு விலக்கப்பட்ட தங்கள் பெண்கள், நிர்வாணப்படுத்தப்பட்டு ஆள் நடமாட்டமிக்க வீதிகளில் ஊர்வலமாகத் துரத்தப்பட்டு மார்க்கெட் பகுதியில் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டதாக கேள்விப்பட்டிருந்தார்கள். தாங்கள் சூறையாடப்படுவதற்கு முன்பாகவே பலர் தங்களை மாய்த்துக் கொண்டார்களாம். பன்றிகளைக் கொண்டுவந்து வெட்டியெறிந்து மசூதிகளை அசுத்தம் செய்ததாகவும், புனித குர்-ஆனை எதிரிகள் கிழித்து எரிந்ததாகவும் கேள்விப்பட்டிருந்தார்கள். மனோமஜ்ராவின் ஒவ்வொரு சீக்கியரும் திடீரென கெட்டநோக்கத்துடன்கூடிய விரோதியாகத் தோன்றினார்கள். அவர்களது நீண்ட தலைமுடியும் தாடியும் காட்டுமிராண்டித்தனமாகத் தோன்றியது. கிர்பான்(குறுவாள்) முஸ்லிம்களுக்கெதிரான ஆயுதமாகத் தோன்றியது. பாகிஸ்தான் என்ற பெயரில் ஏதோ அர்த்தம் உள்ளதாக - சீக்கியர்களே இல்லாத ஒரு புகலிடமாக - முதன்முதலாக நினைக்கத் தொடங்கினார்கள்.



சீக்கியர்களுக்குள் கோபமும் வன்மமும் தலைதூக்கியது. ஒரு முஸ்லிமை எப்போதும் நம்பாதேஎன்றார்கள். அவர்களது கடைசி குரு கூறியிருக்கிறார், “முஸ்லிம்கள் நன்றியுணர்ச்சியற்றவர்கள்சரிதான். முஸ்லிம்களின் ஆட்சியில், தங்களது தகப்பனார்களை சகோதரர்களைக் கொன்றும், அவர்களது கண்களைக் குருடாக்கியும் இருக்கிறார்கள், அரியணையைக் கைப்பற்ற. குருத்துவாராக்களில் பசுக்களைப் பலியிட்டு அசுத்தப்படுத்தினார்கள். புனித கிரந்த்சாகிப்பை கிழித்து எறிந்தார்கள். முஸ்லிம்கள் பெண்களை மதிப்பதே கிடையாது. முஸ்லிம்கள் கையில் சீரழிவதை விட, கிணற்றில் விழுந்து செத்த பெண்களையும், தீயிட்டுக்கொண்டு செத்த பெண்களையும் பற்றி சீக்கியஅகதிகள் சொல்லியிருக்கின்றார்கள். தற்கொலை செய்துகொள்ளாதவர்கள் நிர்வாணமாக்கப்பட்டு, தெருவில் துரத்தப்பட்டு, வன்புணர்ச்சிக்குப் பிறகு கொலை செய்யப்பட்டார்கள். இப்போது ஒருரயில் நிறைய சீக்கியர்கள் கொல்லப்பட்டு மனோமஜ்ராவில் அவர்கள் எரிக்கப்பட்டுள்ளார்கள்.



*****************************************



சற்று நேரம் சென்றபின், கிராமத்தலைவர் பண்டாசிங் பேசத் தொடங்கினார்.



பக்கத்து கிராமங்களில் உள்ள முஸ்லிம்களெல்லாம் வெளியேற்றப்பட்டுவிட்டார்கள். சந்தன்நகர் அருகிலுள்ள அகதி முகாமில் இருக்கின்றார்கள். பலர் ஏற்கனவே பாகிஸ்தானுக்குச் சென்று விட்டார்கள். மற்றவர்கள் ஜலந்தரில் உள்ள பெரிய முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ளார்கள்.



மற்றொருவர் தொடர்ந்தார். ஆமாம். கப்பூராவும், குஜ்ஜூமாட்டாவும் கடந்தவாரம் காலி செய்யப்பட்டன. மனோமஜ்ராவில் மட்டும்தான் இப்போது முஸ்லிம்கள் உள்ளார்கள். தங்களது சகாக்களை வெளியேறுமாறு எப்படி அவர்கள் கூறமுடிந்தது என்பது எனக்குத் தெரியவில்லை. நமது குத்தகைக்காரர்களிடம் நாம் எப்போதுமே அவ்வாறு சொல்லப்போவதில்லை. நமது பிள்ளைகளை வீட்டைவிட்டு வெளியே போகுமாறு எப்படிக் கூறமுடியுமோ அதைவிட அதிகமாக நாம் ஒன்றும் பேசிவிட முடியாது. இங்கே யாராவது இருக்கின்றீர்களா - கிராமத்து முஸ்லிம்களை, “சகோதரர்களே, மனோமஜ்ராவை விட்டு வெளியேற வேண்டாம்என்று சொல்வதற்கு?



இதற்கு யாரும் பதில் சொல்லும்முன் யாரோ வாசலில் நுழைந்தார்கள். விளக்கின் குறைந்த வெளிச்சத்தில் அடையாளம் தெரியவில்லை. யாரது?” கேட்டது கிராமத்தலைவர். உள்ளேவாங்கஇமாம் பக்ஷ் உள்ளே வந்தார். இரண்டு பேர் கூடவே வந்தார்கள். முஸ்லிம்கள்.



சலாம், இமாம் பக்ஷ் மாமா. சலாம் கேர் தினா சலாம், சலாம்



சத் ஸ்ரீ அகால், தலைவரே, சத் ஸ்ரீ அகால்முஸ்லிம்கள் வணக்கம் சொன்னார்கள்.



அவர்களுக்கு உள்ளே இடம் கொடுத்தார்கள். இமாம் பக்ஷ் பேசக் காத்திருந்தார்கள்.



விரலால் தாடியைக் கோதியபடியே இமாம் பேசத் தொடங்கினார். சகோதரர்களே என்ன முடிவு செய்திருக்கிறீர்கள்?”



மோசமான அமைதி நிலவியது. கிராமத்தலைவரை எல்லோரும் பார்த்தார்கள்.



என்ன கேள்வி இது? எங்களுக்கானதைப் போல உங்களுக்கும் இந்தக் கிராமம் சொந்தமில்லையா?”



வெளியே என்ன மாதிரியாகப் பேசுகிறார்கள் என்பதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். பக்கத்து கிராமத்திலிருந்தெல்லாம் வெளியேற்றப்பட்டு விட்டார்கள். நாம் மட்டுமே மீதி. நாங்கள் வெளியேற வேண்டுமென்று நீங்கள் விரும்பினால் நாங்கள் போய்விடுவோம்.



ஒரு இளைஞன் பேசினான்,”இமாம் பக்ஷ் மாமா, இங்கே பாருங்க நாங்க இங்கே இருக்கிறவரைக்கும் உங்களைத் தொடறதுக்கு யாருக்கும் துணிச்சல் வராது. நாங்க முதல்லே உயிரை விடுவோம் அதுக்குப்பிறகு நீங்க உங்களைப் பார்த்துக்குங்க.



ஆமாம், நாங்க முதல்ல. அப்புறம்தான் நீங்க. உங்களுக்கு எதிரா யாராவது புருவத்தை உயர்த்துனாங்கன்னாக்கூட அவனோட அம்மாவைக் கற்பழிப்போம்என்றது ஒரு குரல்.



ஆமாமா, அம்மா, சகோதரி, மகன்பல குரல்கள். கண்ணில் வழிந்தோடிய நீரைத் துடைத்துக்கொண்டு, சட்டையின் நுனியால் மூக்கைச் சிந்தினார் இமாம்.

(தொடரும்...4)



திங்கள், அக்டோபர் 01, 2012

பாகிஸ்தான் செல்லும் ரயில் - 2 (குஷ்வந்த் சிங்)

இது மட்டுமில்லை, ஒருநாள் சீக்கிய ராணுவ வீரர்களின் அணி  இறங்கியது. ரயில் நிலையத்துக்கு அருகில் கூடாரம் போட்டார்கள். ரயில் பாலத்தின் முனையிலுள்ள சிக்னல்கம்பம் அருகே ஆறடி உயரத்துக்கு மணல் மூட்டைகளை சதுரமாக அடுக்கிஒவ்வொரு திசைக்கும் ஒரு இயந்திரத் துப்பாக்கியையும் பொருத்தினார்கள். ஆயுதமேந்திய வீரர்கள் பிளாட்பாரத்தைக் காவல் காத்தார்கள். கிராமமக்கள் ரயில் நிலையத்தை நெருங்க அனுமதிக்கப்படவில்லை. டில்லியிலிருந்து வரும் ரயில்களின் டிரைவர்களும் கார்டுகளும் பாகிஸ்தானுக்குள் நுழையும் முன்பாக அங்கே மாற்றப்பட்டார்கள். பாகிஸ்தானிலிருந்து வரும் ரயில்களின் எஞ்சின்கள் ஏதோ விடுதலைப் பெருமூச்சுடன் ஓடி வருவதைப் போல் இந்தப் பக்கம் வந்தன.


ஒருநாள் காலையில் பாகிஸ்தானிலிருந்து வந்த ரயில் ஒன்று அங்கே நின்றது. அமைதியாக இருந்த அந்த நாட்களில் ஓடிய ரயிலைப் போலத்தான் இதுவும் இருந்தது பார்த்தவுடன். கூரைகளில் யாரும் பயணிக்கவில்லை. பெட்டிகளுக்கிடையே யாரும் தொத்திக் கொண்டும் தொங்கிக் கொண்டும் இல்லை. படிக்கட்டுக்களில் ஊசலாடிக் கொண்டு யாரும் இல்லை. ஆனாலும் இந்த ரயிலில் ஏதோ ஒரு வித்தியாசம் இருப்பதாகப்பட்டது. இது ஒரு குறுகுறுப்பை மனதில் ஏற்படுத்தியது. ஒரு பேயைப் பார்ப்பதுபோல் உணர்வு வந்தது. பிளாட்பாரத்துக்குள் வந்தவுடன்கார்டு இறங்கிஸ்டேசன் மாஸ்டரின் அறைக்குள் நுழைந்தார். பின் இருவருமாக கூடாரம் அடித்துள்ள இடத்துக்குச் சென்று அங்கேயிருந்த ராணுவ அதிகாரியிடம் பேசினார்கள். பிறகு படைவீரர்கள் அழைக்கப்பட்டார்கள். அங்கேயிங்கே என அலைந்து திரிந்து கொண்டிருந்த கிராமமக்கள் அனைவரும் கிராமத்துக்குள் உடனே சென்றுவிடவேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஒரு வீரன் மோட்டார் சைக்கிளில் ஏறி சந்தன்நகர் நோக்கிப் புறப்பட்டபின் ஒருமணி நேரத்திற்குப்பின் சுமார் ஐம்பது போலீஸ்காரர்களுடன் சப்-இன்ஸ்பெக்டர் வந்து சேர்ந்தார். அதன்பின் மாவட்ட மாஜிஸ்டிரேட்டும் உதவி கமிஷனருமான ஹக்கும்சந்த் தனது அமெரிக்கக் காரில் வந்து இறங்கினார்.



பட்டப்பகலில் வந்த அந்த பேய்ரயில் மனோமஜ்ராவின் உணர்வுகளைத் தூண்டிவிட்டது. தங்களது வீட்டுக்கூரைகளின் மீது ஏறிரயில் நிலையத்தில் நடப்பதை வேடிக்கை பார்த்தார்கள். பிளாட்பாரத்தின் ஒருமுனையிலிருந்து மறுமுனை வரை நீண்டிருந்த ரயிலின் கறுப்பு வண்ணக் கூரையை மட்டும்தான் பார்க்க முடிந்தது. ரயில்நிலையக் கட்டிடமும் இரும்புக் கம்பிகளும் படிகளும் ரயிலை முழுமையாகப் பார்க்க முடியாமல் மறைத்தன. திடீர் திடீரென யாராவது ஒரு ராணுவ வீரனோ போலீஸ்காரனோ நிலையத்திலிருந்து வெளியே வருவதும் உள்ளே போவதுமாக இருந்தார்கள்.



பிற்பகலில் ஆண்கள் கும்பல் கும்பலாகக் கூடி ரயிலைப் பற்றிப் பேசத்தொடங்கினார்கள். அரசமரத்தடியில் கும்பல்கள் மொத்தமாகக் கூடியபின்அனைவரும் குருத்வாராவுக்குள் சென்றார்கள். வீடுவீடாகச் சென்று குசுகுசு’ பேசியும் சேகரித்துக் கொண்டும் இருந்த பெண்கள்இறுதியாககிராமத் தலைவர் பண்டாசிங் வீட்டில் கூடி அந்த ரயிலைப்பற்றிய தகவல்களோடு வரும் தங்களது ஆண்களுக்காகக் காத்திருந்தார்கள்.



* * *



திடீரென ஒரு போலீஸ்காரன் குருத்வாரா வாசலில் தென்பட்டான். கிராமத் தலைவரும் மற்ற சிலரும் எழுந்து நின்றார்கள். அரைகுறைத் தூக்கத்தில் இருந்தவர்கள் அவசரமாக விழித்தார்கள். என்ன என்ன ஆச்சு?” என்றபடி தங்களது தலைப்பாகையை அணிந்தவாறே அனைவரும் சுறுசுறுப்பானார்கள்.



கிராமத் தலைவர் யார்?”



பண்டாசிங் வாசலுக்கு வந்தார். அவரைத் தனியாகத் தள்ளிக்கொண்டு போன போலீஸ்காரன் அவர் காதில் ஏதோ கிசுகிசுப்பதைப் பார்க்க முடிந்தது. பண்டாசிங் திரும்பினார். ம்...ம்..நடக்கட்டும்... இன்னும் அரைமணி நேரம்தான். ஸ்டேசன் பக்கத்திலே இரண்டு மிலிட்டரி லாரி நிக்குது. நான் அங்கே போகணும்



போலீஸ்காரன் மிடுக்காகத் திரும்பிப் போனான். அனைவரும் பண்டாசிங்கைச் சுற்றி நின்றார்கள். ஒரு ரகசியத்தைத் தெரிந்து கொண்டிருப்பதால் அவர் ஒரு முக்கியமானவராகிப் போனார். அவரது குரலில் அதிகாரத் தொனி தெரிந்தது.



அவங்கவங்க வீட்டில இருக்கிற விறகுமண்ணெண்ணெய் எல்லாம் எடுத்துக்கிட்டு அந்த மிலிட்டரி லாரிக்கு வந்துடுங்க. பணம் கொடுப்பாங்க



எதற்காக என்று அவர் சொல்லவேண்டும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவரது குரல் கட்டளை இட்டது.என்ன உங்களுக்கெல்லாம் காது செவிடாஇல்லைநான் சொன்னது காதுல விழலியாபோலீஸ்காரன் வந்து கம்பால குண்டியில அடிச்சாத்தான் நகருவீங்களாவேலை நடக்கட்டும்



* * *



விறகுகள் லாரிகளில் ஏற்றப்பட்டன. காலியான பெட்ரோல் கேன்களில் மண்ணெண்ணெய் நிரப்பப்பட்டது. எல்லாம் முடிந்தபின்அதிகாரிக்கு மரியாதை தரும் விதமாக சற்றே தூரத்தில் அனைவரும் கூடி நின்றனர்... லாரிகள் ஸ்டேசனை நோக்கிச் சென்றன.



* * *



வீட்டுக் கூரைகளின்மீது நின்று பார்த்தால்ஸ்டேசன் பக்கத்தில் நிற்கும் லாரிகளைப்பார்க்க முடிந்தது... அவை மீண்டும் இடதுபுறம் திரும்பி ஸ்டேசனை நோக்கி வளைந்து ரயிலுக்குப் பின்னால் மறைந்தன. ரயில் பாலத்தின் அடியில் சூரியன் மறைந்தபோதுதங்களது அன்றாட வேலைகளை மறந்துபோய் விட்டோமே என்று ஆண்களும் பெண்களும் ஞாபகப்படுத்திக் கொண்டார்கள். விரைவில் இருட்டிவிடும்குழந்தைகள் உணவுக்காக அழத் தொடங்குவார்கள். ஆனாலும்பெண்கள் ரயில்வே ஸ்டேசன்மீது பதிந்த தங்களது கண்களை அப்படியிப்படி நகர்த்தவேயில்லை. பசுக்களும் எருமைகளும் தானியக்களஞ்சியத்துக்குத் திரும்பின. ஆனாலும் ஆண்கள் வீட்டுக்கூரைகளின் மீது நின்றுகொண்டு இப்போதும் ஸ்டேசனையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஏதோ நடக்கப் போகின்றது...



சூரியன் பாலத்துக்கு பின்னால் மூழ்கிக்கொண்டிருந்தான். வெண்மேகங்களைவெண்சிகப்பும் பழுப்பும் ஆரஞ்சுமான கலவையால் ஒளியேற்றி வண்ணமயமாக்கினான். சற்றுநேரத்தில் சாம்பல் வண்ணக் கீற்றுக்கள் இந்த வண்ணக்கலவையுடன் சேர்ந்துகொள்ள மாலைப்பொழுது மெல்ல மங்கி அந்தி சாயத்தொடங்கியது. அதுவும் மெதுவாகத் தன்னை இருட்டில் சங்கமித்துக் கொண்டது. ரயில்வே ஸ்டேசன் ஒரு இருட்டுச் சுவராக மாறிக்கொண்டது. சலித்துப்போன ஆண்களும் பெண்களும் மெதுவாகக் கீழேயிறங்கத் தொடங்கினார்கள்.



நீலமும் சாம்பல் வண்ணமும் கலந்த வடக்குத் தொடுவானம்மீண்டும் ஆரஞ்சுவண்ணத்தை வீசியது. அது பழுப்பு வண்ணமாகி ஒளிமயமான வெண்சிகப்பை வீசியது. செக்கச் சிவந்த தீயின் நாக்குகள் மேலெழுந்து கருங்கும்மென்றிருந்த இருட்டு வானத்தைத்தொட்டன. இளங்காற்று மனோமஜ்ராவை நோக்கி வீசியது. மண்ணெண்ணெயும் விறகும் எரியும் வாடை உடன் வந்தது. அதன்பின் மனிதச் சதை எரிந்து தீய்ந்து போன தெளிவற்ற குமட்டுகின்ற நாற்றம் வந்தது.



மரண அமைதியில் மனோமஜ்ரா உறைந்தது. 

(தொடரும் 2)

சனி, செப்டம்பர் 29, 2012

பாகிஸ்தான் செல்லும் ரயில் - 1 (குஷ்வந்த் சிங்)





(டிரெய்ன் டு பாகிஸ்தான் என்னும் ஆங்கிலப் புதினத்தின் ஆசிரியர் குஷ்வந்த் சிங். 1956 ல் வெளியிடப்பட்டது. 1947 ல் தேசப்பிரிவினையின் போது, வடக்கிலும் வடமேற்கு எல்லையிலும் சிந்திய குருதியும் பறிக்கப்பட்ட உயிர்களும் பல லட்சம் அவற்றில் இந்து, முஸ்லிம், சீக்கியர் என்ற பாகுபாடு ஏதுமில்லை. எல்லைப்புறத்தின் ஒரு கிராமத்தில் தேசப்பிரிவினையின் பின்புலத்தில் நிகழும் கண்ணீர் கசியும் சம்பவங்களே இப்புதினத்தின் மையமாக நிற்பவை. இனி, புதினத்தின் சில பக்கங்களிலிருந்து..)
*****************************************************************
அந்த 1947-ன் கோடைகாலம், இந்தியாவின் வழக்கமானதொரு கோடைகாலமாக இல்லை. பருவநிலை கூட அப்போது வழக்கத்தைவிட உஷ்ணமாகவும், காய்ந்து போயும், புழுதி கிளப்பியபடியுமாக இருந்தது. கோடைகாலம் நீண்டதாகயிருந்தது. மேகங்கள் தென்பட்டன. ஆனால் மழையில்லை. தங்களது பாவங்களுக்காக ஆண்டவன் தண்டித்துக் கொண்டிருப்பதாக ஜனங்கள் பேசத் தொடங்கினார்கள்.

தாங்கள் பாவம் செய்துவிட்டதாகப் புலம்புவதற்கு அவர்களிடம் போதிய காரணங்கள் இருந்தன. இந்தக் கோடைக்கு முன்புதான், தேசம் இரண்டு கூறுகளாக இந்து இந்தியா, முஸ்லிம் பாகிஸ்தான் என பிரிக்கப்பட இருப்பதாகச் செய்திகள் கசிந்தன. விளைவு, கல்கத்தாவில் மதக்கலவரம் வெடித்தது. ஒருசில மாதங்களிலேயே சாவு எண்ணிக்கை பல ஆயிரங்களைத் தொட்டது. இந்துக்கள் திட்டமிட்டுத் தங்களைக் கொன்றதாக முஸ்லிம்கள் கூறினார்கள். முஸ்லிம்கள் திட்டமிட்டுத் தங்களைக் கொன்றதாக இந்துக்கள் கூறினார்கள். இரண்டு தரப்புமே ஒருவரை ஒருவர் சுட்டுக் கொன்றார்கள், கத்தியால் குத்தினார்கள், வெட்டினார்கள், மோதினார்கள். இரண்டு தரப்புமே சித்திரவதையில் இறங்கினார்கள். இரண்டு தரப்புமே பெண்களைச் சூறையாடினார்கள். கல்கத்தாவிலிருந்து, கலவரம் வடக்கு, கிழக்கு, மேற்காகப் பரவியது. கிழக்கு வங்காளத்தின் நவகாளியில் இந்துக்களை முஸ்லிம்கள் படுகொலை செய்தார்கள். பிஹாரில் முஸ்லிம்களை இந்துக்கள் படுகொலை செய்தார்கள்.

பஞ்சாபிலும் எல்லை மாகாணத்திலும், பெட்டிகளில் மண்டையோடுகளை வைத்துக்கொண்டு அவை இந்துக்களால் கொல்லப்பட்ட பிஹார் முஸ்லிம்கள் என்று கூறித் திரிந்தார்கள். பல நூறு வருடங்களாக வடமேற்கு எல்லையில் வசித்து வந்த இந்துக்களும் சீக்கியர்களும் தங்கள் சொத்துக்களைத் துறந்து, கிழக்கே தங்களது சமூக மக்களைத் தேடி அலைஅலையாய்ப் புறப்பட்டார்கள். கால்நடையாக, மாட்டு வண்டிகளில், லாரிகளில், ரயில்களின் கூரைகளில், ஓரங்களில், அங்கே இங்கே என்று பயணித்தார்கள். தங்களது பயணவழிகளில், தண்ணீர்த் துறைகளில், ரயில் நிலையங்களில், சாலைச் சந்திப்புகளில், அவர்களைப் போலவே கிழக்கு நோக்கிப் பாதுகாப்புத் தேடி சாரைசாரையாகப் பயணிக்கின்ற முஸ்லிம்களை எதிர்கொண்டார்கள். கலவரம் காற்றைப் போல இரைந்து கர்ஜித்தது.

பாகிஸ்தான் என்ற புதியதேசம் முறைப்படி அறிவிக்கப்பட்ட அந்த 1947-ன் கோடையில், முஸ்லிம்களும் இந்துக்களும் சீக்கியர்களுமாக ஒருகோடி பேர் எதிரெதிர்த் திசைகளில் பயணித்துக் கொண்டிருந்தார்கள். பருவமழை தொடங்கியபோது, அநேகமாக அவர்களில் பத்துலட்சம் பேர் உயிரிழந்திருந்தார்கள். வட இந்தியா கலவரத்திலும் வன்முறையிலும் அச்சத்திலும் மூழ்கியிருந்தது. பாலைவனச்சோலை போல, எல்லையின் மிக நீண்டதூரத்தில் சிதறிக் கிடக்கின்ற ஓரிரண்டு கிராமங்களில் மட்டுமே அமைதி நிலவியது. மனோமஜ்ராவும் அத்தகைய கிராமங்களில் ஒன்று.

மனோமஜ்ரா சிறிய கிராமம். செங்கல் வீடுகள் மொத்தமே மூன்றுதான். அதில் ஒன்று வட்டிக்குப் பணம்தரும் லாலாராம் லாலின் வீடு. மற்ற இரண்டு, சீக்கிய குருத்வாராவும் முஸ்லிம்களின் மசூதியும்தான். அந்த மூன்று கட்டிடங்களுமே ஒரு முக்கோணத்தை உருவாக்கியிருந்தன. நடுவில் ஒரு அரசமரம். மொத்தம் எழுபது குடும்பங்கள். லாலாராம்லாலின் குடும்பம் மட்டுமே இந்துக்கள். மற்றவர்கள் சீக்கியர்களும் இஸ்லாமியர்களும் சம அளவில். கிராமத்தின் நிலம் அனைத்தும் சீக்கியர்களிடம் இருந்தன. இஸ்லாமியர்கள் குத்தகைதாரர்களாக இருந்தார்கள். நகர சுத்தித் தொழிலாளர்களாக இருந்த சிலரின் மதமோ என்னவென்றே தெரியவில்லை.

***

மனோமஜ்ராவின் ரயில் நிலையத்தில் எல்லா ரயில்களும் நிற்பதில்லை. வேகம் குறைந்த பாசஞ்சர் ரயில்கள் இரண்டு மட்டுமே அங்கே நிற்பவை. காலையில் டெல்லியிலிருந்து லாகூருக்குச் செல்லும் ரயிலும், மாலையில் லாகூரிலிருந்து டெல்லிக்குச் செல்லும் ரயிலும், மனோமஜ்ராவில் ஓரிரண்டு நிமிடங்கள் நின்று செல்பவை. எப்போதுமே அங்கே வரும் வாடிக்கையாளர்என்றால் அவை சரக்கு ரயில்கள் மட்டுமே. மனோமஜ்ராவிற்கு சரக்குகள் வருவதுமில்லை, அங்கிருந்து செல்வதுமில்லை. என்றாலும், ரயில் நிலையத்தில் எப்போதும் சரக்கு வண்டிகளின் அணிவகுப்பு இருந்துகொண்டே இருக்கும். வருகின்ற சரக்கு ரயில்கள் சரக்கு வண்டிகளைக் கழற்றி விடுவதும், இருக்கின்ற வண்டிகளை இணைத்துக் கொண்டு செல்வதுமாக மணிக்கணக்கில் அந்த வேலை நடக்கும். கிராமம் ஆழ்தூக்கத்தில் உறைந்திருக்கும்போது, அந்த மையிருட்டில், எஞ்சின்களின் விசில் சத்தமும், மூச்சிரைக்கும் வேகமும், சரக்குகளின் சத்தமும், வண்டிகளை இணைக்கும் கப்ளிங்குகளின் சத்தமும் காலை வரை தொடரும்.

* * *

அந்த செப்டம்பர் தொடக்கம் முதலே, மனோமஜ்ராவிற்கு ரயில்கள் வரும்நேரம் தாறுமாறாக இருந்தது. ரயில்கள் சரியான நேரத்துக்கு வருவதில்லை, வழக்கத்துக்கு மாறாக இரவு நேரங்களிலும் ரயில்கள் ஓடுவதைக் கேட்க முடிந்தது. சரக்கு ரயில்கள் ஓடுவது சுத்தமாக நின்றுவிட்டது. ஆனால் அடையாளமற்ற ரயில்கள் அர்த்த ராத்திரி முதல் விடிகாலை வரை ஓடத் துவங்கின. மனோமஜ்ராவின் கனவுகள் கலையத் தொடங்கின....


(தொடரும்)

சனி, ஆகஸ்ட் 11, 2012

அந்த ராட்சசக் காளானின் வேர் எங்கே? (2)


ஜப்பானியப் படைக்குவிப்பில் மிகப்பெரியதும் மிகப்பலம் வாய்ந்ததுமான இராணுவப்பிரிவு மஞ்சூரியாவில் குவிக்கப்பட்டிருந்த குவாண்டுங் இராணுவம்தான்.  படைவீரர்கள் மட்டுமே பத்து லட்சத்துக்கும் மேல். இது தவிர ஆயிரக்கணக்கான பீரங்கிகள், டாங்குகள், விமானங்கள்... ஆசியாவில் தங்களது ஆக்கிரமிப்பை விரிவுபடுத்த ஜப்பானிய ஏகாதிபத்தியம் இப்படையின் மீதுதான் பெரும் நம்பிக்கை வைத்திருந்தது.

1945 ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 2 வரை நடைபெற்ற போட்ஸ்டாம் மாநாட்டுக்குப் பிறகு, ஆகஸ்ட் 9 முதல் சோவியத் யூனியன் ஜப்பானுக்கு எதிராக யுத்தத்தில் இறங்கும் என்று பிரகடனம் (ஆகஸ்ட் 8) செய்தது.  “...ஜெர்மனி அனுபவித்ததைப் போன்ற அபாயங்கள், பேரழிவுகளில் இருந்து தப்பிக்கவும் ஆன வாய்ப்பை ஜப்பானிய மக்களுக்கு அளிக்கவும் வல்ல ஒரே வழி இதுதான் என்று கருதுவதாகஅப்பிரகடனம் கூறியது.

ஆகஸ்ட் 9 அன்று உயர்மட்ட இராணுவ கவுன்சில் கூட்ட்த்தில் ஜப்பானியப்பிரதமர் கண்டாரோ கட்சுகி கூறியது: “இன்று காலையில் சோவியத் யூனியன் போரில் இறங்கியதானது, இனி மேற்கொண்டு நாங்கள் யுத்த்த்தை தொடர முடியாத நம்பிக்கையற்ற சூழலில் எங்களை தள்ளியுள்ளது”.
ஆகஸ்ட் 6 அன்று வீசப்பட்ட அணுகுண்டு பேரழிவுக்குப்பிறகும் ஜப்பான் போரைத் தொடரத்தான் உறுதியாக இருந்தது; நேசநாடுகளுக்கு எதிராக தனது இராணுவத்தை உபயோகப்படுத்துவதில் நம்பிக்கையும் உறுதியும் பூண்டு இருந்தது.  ஆனால் சோவியத்தின் போர்ப்பிரகடனம்தான் ஜப்பானைப் பின்வாங்கி சரணடைய செய்தது.  அவ்வாறானால் அமெரிக்கா அணுகுண்டு வீசவேண்டிய அவசியம் என்ன? அமெரிக்க அணுகுண்டுதான் நீண்ட போரை முடிவுக்கு கொண்டு வந்ததா?
ட்ரூமனும் அவரது இராணுவமும் வகுத்த திட்டம் இதுதான்: போட்ஸ்டாம் மாநாடு நடந்து முடிந்தவுடன் ஜப்பான் மீது ஒரு அணுகுண்டை வெடிப்பது; உலகப்போரை முடிவுக்கு கொண்டு வந்ததில் சோவியத் யூனியனின் மகத்தான பங்கையும், தூரக்கிழக்கு நாடுகளில் சோவியத்தின் பங்கையும் இருட்டடிப்பு செய்வது, சிறுமைப் படுத்துவது; ஆனால் தட்பவெப்ப நிலை அல்லது தொழினுட்பக் காரணங்களால் இது தடைப்படும் எனில் ஜப்பானின் க்வாண்டுங் படைகள்  மீது சோவியத் தாக்குதலைத் தொடங்கும் முன்பாகவே முந்திக்கொண்டு ஜப்பான் மீது அணுகுண்டை வெடிப்பது.

இதற்கு மேலும் சந்தேகம் எழுப்புவோர்க்கு ட்ரூமன் தனது நாட்குறிப்பில் (டைரி) எழுதியதே சரியான சான்று. பெர்லினில் இருந்து (போட்ஸ்டாம் மாநாட்டில் இருந்து) புறப்பட்ட பின்னர் ட்ரூமன் தன் நாட்குறிப்பில் எழுதியது: “போட்ஸ்டாம் மாநாட்டில் நான் கற்றுக்கொண்ட்து என்னவெனில் ஜப்பானியருக்கு எதிரான போரில் அவர்களது (ரஷ்யாவின்) கை ஓங்கிவிட அனுமதிக்கக் கூடாது என்பதுதான். அடி கொடுத்தால் மட்டுமே அவர்கள் (ரஷ்யர்கள்) உணர்வார்கள்.

பிரிட்டனின் சர்ச்சில், அமெரிக்காவின் ஐசன்ஹோவர், மேற்கத்திய நாடுகளின் பிரபலப்புள்ளிகள் அனைவருமே ஒரு விசயத்தை ஒத்துக்கொள்கின்றார்கள் – அமெரிக்க மக்களைக் காப்பதற்காகவோ நீண்டகாலப் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காகவோ ஜப்பான் மீது அணுகுண்டு வீசப்படவில்லை. ட்ரூமன் கூறிய பேரழிவு விளைவிக்கும் அந்தப் ‘புதிய ஆயுதத்தை’ (At Potsdam Conference, however, President Truman chose to tell Stalin only that the U.S. possessed "a new weapon of unusual destructive force - http://www.dannen.com/decision/potsdam.htmlகையில் ஏந்திக்கொண்டு முக்கியமாக சோசலிச சோவியத்தையும் உலக நாடுகள் அனைத்தையும் மிரட்டவும், தனது ஏகாதிபத்திய எல்லைகளை விரிவுபடுத்தவுமே ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவி ஜப்பானிய மக்களின்  விலைமதிப்பற்ற உயிர்கள் அமெரிக்காவுக்கு தேவைப்பட்டது.

18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ப்ரெஞ்சு அறிஞன் மாண்டெஸ்க்யூ, ஒரு ராணுவ சர்வாதிகாரி பற்றி இப்படிக் கூறினான்: அவன் நினைத்துக் கொள்கின்றான், வரலாற்றில் இருந்து அவன் பிரிக்கப்பட முடியாதவன் என்றுஎனவேதான் அவன் எங்கே நின்று விடுகின்றானோ அங்கேயே வரலாறும் முற்றுப்பெற்று விடுவதாக கற்பனையில் மிதக்கின்றான்”.

இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹிட்லரும் இப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தான். ஆனால் அவனது முடிவை இறுதியில் அவனேதான் தேடிக்கொண்டான். அமெரிக்காவின் அதிபர்களும் இப்படித்தான் நினைத்துக்கொண்டிருக்கின்றார்கள், தாங்கள் இயங்கும் போது இந்த உலகம் இயங்குவதாகவும், தாங்கள் நின்றுவிடும்போது இந்த உலகமும் நின்றுவிடுவதாகவும். ஹிட்லரின் வரலாற்றை அவர்கள் வாசிக்க வேண்டும்.

(புகைப்படத்தில் சர்ச்சில்,ரூஸ்வெல்ட்,ஜோசப் ஸ்டாலின்) 
(முற்றும்)

வியாழன், ஆகஸ்ட் 09, 2012

அந்த ராட்சசக் காளானின் வேர் எங்கே? (1)



ஆயிரம் சூரியன்கள் ஒரு சேர உதித்தனவோ? – ராபர்ட் ஓப்பன்ஹீமர் (அமெரிக்க அணுசக்தி விஞ்ஞானி, ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சைப்பற்றி அதிர்ச்சியடைந்து கூறியது)

“ராட்சத தீப்பந்து ஒன்று – ஒரு மைல் விட்டம் இருக்கும் – கிளம்பி மேலே மேலே சென்றது. தனது நிறத்தை மாற்றிக்கொண்டே சென்றது.  ஆழ் ஊதாவில் இருந்து ஆரஞ்சுக்கு. இன்னும் விரிந்து...விரிந்து...உயரே உயரே...பல நூறு கோடி வருடங்கள் சங்கிலியால் கட்டிப்போடப்பட்டிருந்த ஏதோ ஒரு சக்தி திடீரென விடுவிக்கப்பட்டதைப்போல் ஆவேசத்துடன் மேலே மேலே... இந்த பூமிதான் இரண்டாகப் பிளந்த்தோ? அல்லது வானம்தான் உடைந்து போனதா? இப்போது ஒரு மேகக்கத்தை புமியில் இருந்து புறப்பட்டு சூரியனை நோக்கி சென்றது, முதலில் ஒரு ராட்சத தூண் போலத்தான் இருந்தது, ஆனால் விரைவிலேயே இந்த உலகத்துக்கெல்லாம் கட்டுப்படாத ஒரு ராட்சதக்காளானாக  (Giant Mushroom) அவதரித்தது. பல கோடி வருடங்களானாலும் உருவாக்க முடியாத ஒரு பிரமாண்ட மலை ஒரு சில வினாடிகளில் உண்டானாற்போலும்...மேகங்களைக் கிழித்துக்கொண்டு இன்னும் மேலே, நாற்பத்து ஓராயிரம் அடி உயரத்தை தொட்டது – இவ்வுலகின் மிக உயர்ந்த மலைச்சிகரத்தை விடவும் கூடுதலாக பன்னிரெண்டாயிரம் அடி அதிக உயரத்தைத் தொட்டு நின்றது. இவை யாவும் அமைதியாக மிக அமைதியாக நடந்தேறின. அதன் பின்னர்தான் அந்த இடிச்சத்தம் எழுந்தது – ஆயிரமாயிரம் கோர வெடிகுண்டுகள் ஒருசேர எழுந்து வெடித்தாற்போல்... – முதல் அணுகுண்டு வெடிப்பு சோதனை 1945 ஜூலை 16 காலை 5.30 மணிக்கு நட்த்தப்பட்டது. இடம் அமெரிக்காவின் நியூ மெக்சிகோ பாலைவனம், அல்மோகோர்டோ விமானத்தளம். இதனை நேரில் பார்த்து எழுதுவதற்காக பெண்டகான் நிர்வாகத்தால் வரவழைக்கப்பட்ட பத்திரிக்கையாளர் வில்லியம் லாரென்ஸ் என்பவர்தான் மேலே கூறப்பட்டதை எழுதினார்.

இந்த அணுவெடிச்சோதனைக்காக அமைக்கப்பட்டிருந்த முப்பது மீட்டர் எஃகு கோபுரம் காற்றில் கரைந்து போனதாம்! இத்திட்டத்துக்கு மான்ஹாட்டன் திட்டம் என்று பெயர். இதன் முக்கிய ஆலோசகர் விஞ்ஞானி ராபர்ட் ஓப்பன்ஹீமர் இச்சோதனையின் பேரழிவுசக்தியைக் கண்டு அதிர்ச்சியடைந்து இப்படிக்கூறினாராம்: நான்தான் மரணம் – உலகங்கள் யாவற்றையும் அழிப்பவன்” (I am become Death, destroyer of the worlds). இவ்வாசகம் பகவத்கீதையில் உள்ள வாசகம்.

இப்பேரழிவு சாதனமான அணுகுண்டை ஆகஸ்டு 6,9 தேதிகளில் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் வீசியதன் மூலம் மனிதகுலத்தின் ஆகப்பெரும் முதல் நாசத்தை அமெரிக்கா தொடங்கி வைத்தது.
அணுகுண்டு வீச வேண்டிய அவசியம் நிச்சயம் இருந்ததா? அல்லது அமெரிக்காவின் அணுகுண்டு மட்டுமே நீண்ட ஐந்து வருடங்களாக நடந்து வந்த இரண்டாம் உலகப்போரை முடிவுக்கு கொண்டுவந்ததா? இல்லையேல் எதனால் யாரால் முடிவுக்கு வந்த்து?

ஏகாதிபத்தியங்களுக்கு இடையே ஆன முரண்பாடுகள்,போட்டிகளின் காரணமாகப் பிறந்த இரண்டாம் உலகப்போரை முடிவுக்கு கொண்டு வந்த பெருமை சோவியத்தின் செஞ்சேனையையே சாரும். 1945 மே 8 அன்று, நாஜி ஜெர்மனி சரணாகதி ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டது. ஜெர்மனியின் ரீச்ஸ்டாக் மாளிகையின் உச்சியில் பாட்டாளிவர்க்கத்தின் செங்கொடி உயரப்பறக்கவிடப்பட்டது.

இதற்கு முன்னரே 1944ஆம் ஆண்டு ஆல்சோஸ் எனப் பெயரிடப்பட்ட திட்டமொன்று, ஜெர்மனியிடம் அணுகுண்டு உள்ளதா என்று கண்டுபிடிக்கும் நோக்கத்துடன் அமெரிக்காவால் நிறுவப்பட்ட்து. சாமுவேல் கவுட்ஸ்மிட் என்ற விஞ்ஞானியின் தலைமையிலான இக்குழு, ஜெர்மனியிடம் அணுகுண்டு இல்லை என்ற முடிவுக்கு வந்த்து.
புகழ் பெற்ற விஞ்ஞானிகளான ஐன்ஸ்டீன், லியோசிலார்ட், நீல்ஸ்போர், வானெவர் புஸ், ஜேம்ஸ் கானண்ட், பொருளாதார நிபுணர் அலெக்சாண்டர் சாக் ஆகிய அனைவருமே அணு ஆயுத உபயோகத்துக்கு எதிராக குரல் கொடுத்தார்கள். நீல்ஸ்போர், அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட்டையும், பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலையும் நேரில் சந்தித்து புதிய ஆயுதத்தை மக்கள் மத்தியில் வெட்டவெளிச்சமாக்குமாறு கேட்டுக் கொண்டதுடன் ஜெர்மனியை சரணடையுமாறும் வேண்டினார்.

பெரும்போரைத் தொடங்கிய (அணுகுண்டு எதும் இல்லாத) ஜெர்மனி சரணாகதி அடைந்த பின் – அல்லது ஒரு வாதத்திற்காக வைத்துக் கொண்டாலும்கூட போரைத்தொடங்கிய நாஜி ஜெர்மனி மீதுதானே குண்டு வீசியிருக்க வேண்டிய அணுகுண்டை - ஆசியப்பகுதியில் ஜப்பான் மீது வீசி ஐந்து லட்சம் மக்களை ஏன் கொல்ல வேண்டும்? வரலாற்றில் இக்கேள்விக்கான பதில் உள்ளது, அப்பதிலில் நீண்டகால அரசியல் உள்நோக்கத்தை உள்ளடக்கிய காரணம்  உள்ளது.

பிரிட்டிஷ் பேராசிரியர் ப்ளேக்கெட் கூறினார்: இந்த குண்டு வீச்சுக்கள் இரண்டாம் உலகப்போரின் கடைசி ராணுவ நடவடிக்கையாக இருக்கவில்லை; மாறாக சோவியத் ரஷ்யாவுக்கு எதிரான (அமெரிக்க) ராஜதந்திர கெடுபிடி யுத்த்த்தின் முதல் நடவடிக்கையாகவே இருந்தன.

1945ஆம் ஆண்டு சீனாவில் அமெரிக்க ஜெனரல் சேனல்ட், நியூயார்க் டைம்ஸ் (15.8.1945) பத்திரிக்கைக்கு அளித்த நேர்காணல்: “ஜப்பானுக்கு எதிரான யுத்தத்தில் சோவியத் யூனியன் இறங்கியதென்பது, பசிபிக் சமுத்திரத்தில் யுத்தம் முடிவுக்கு வருவதை துரிதமாக்கிய  தீர்மானகரமான காரணியாக அமைந்தது.  அணுகுண்டுகள் வீசப்படாமல் இருந்திருந்தாலும் கூட யுத்தம் நிச்சயம் முடித்திருக்கும்.  சோவியத் செஞ்சேனை ஜப்பான் மீது தொடுத்த உறுதியான தாக்குதல்தான் முற்றுகைக்கு முற்றுப்புள்ளி வைத்தது, ஜப்பானை மண்டியிட செய்தது.

சோவியத் ரஷ்யாவை நாஜிகள் தாக்கியபோது அப்போது அமெரிக்க செனட்டரான இருந்த ஹாரி ட்ரூமன் கூறினார்: “ஜெர்மனி இப்போரில் வெற்றி பெற்றால் நாம் ரஷ்யாவுக்கு உதவி செய்வோம்; ரஷ்யா வெற்றி பெற்றால் நாம் ஜெர்மனிக்கு உதவி செய்வோம். எப்படி இருந்தாலும் அவர்கள் தங்களுக்குள் அடித்துக்கொண்டு சாகட்டும்-எவ்வளவு முடியுமோ அவ்வளவு”. அமெரிக்க விசுவாசிகள் ட்ரூமனின் இந்தக்கேவலமான எண்ணத்துக்கு பதில் சொல்லவேண்டும்.  ரூஸ்வெல்ட் 1945 ஏப்ரல் 12 அன்று இறக்கின்றார், தொடர்ந்து ட்ரூமன் ஜனாதிபதி ஆகின்றார். ஜூலை 16 அன்று முதல் அணுகுண்டு சோதனை நடத்தப்படுகின்றது.

1945 ஜூலை 24க்குப் பிறகு சோவியத் தலைவர் ஸ்டாலினுக்கு ட்ரூமன் ஒரு கடிதம் எழுதுகின்றார். அமெரிக்கா ஒரு ‘புதிய ஆயுதத்தைகண்டுபிடித்துள்ளதெனவும் அது அசாதாரணமான பேரழிவு சக்திகொண்டது எனவும் கூறுகின்றார்.  ஆனால் ஸ்டாலின் இக்கடிதம் பற்றி மேற்கொண்டு எக்கருத்தும் கேட்டுக்கொள்ளாமல் மவுனமாக இருந்து விடுவது கண்டு ட்ரூமன் அதிர்ச்சி அடைகின்றார்.  ஸ்டாலின் நடப்பது என்ன என்று ஊகித்துக் கொண்டவராக அன்று மாலையே சோவியத் அணுசக்தி ஆராய்ச்சியை துரிதப்படுத்துமாறு தனது அதிகாரிகளுக்கு ஆணை இடுகின்றார்.

...2

வெள்ளி, ஜூலை 27, 2012

மேற்கத்திய உலகத்தின் வளர்ச்சி: திருட்டும் கொள்ளையும் - கென் சாரோ-விவா (பாகம் 6)



உலகமயம், தனியார்மயம், தாராளமயம் போன்ற சர்வதேசப் பெருநோய்களின் பிறப்பிடமாக அமெரிக்கா, உலகவங்கி, சர்வதேசநிதி நிறுவனம், ஜி-7, ஜி-20, ஐரோப்பிய பொருளாதாரக்கூட்டணி போன்ற ஏகாதிபத்திய சாக்கடைகள் உள்ளன. உண்மையில், பிரிட்டிஷ், அமெரிக்க ஏகாதிபத்தியங்கள் எங்கெல்லாம் தமது காலனிககளை ஏற்படுத்தி இருந்தனவோ அந்த நாடுகளில் ஆட்சி மாற்றங்கள் ஓகோவென நிகழ்ந்து 'அந்த மக்கள் தங்களைத் தாங்களே ஆள்கின்றார்கள்! சூப்பர் ஜனநாயகம் பாரீர்!' என்பதெல்லாம் கடைந்தெடுத்த டூப் என்பதை வரலாறு தொடர்ந்து மெய்ப்பித்து வருகின்றது. தொடர்ந்து இந்த நாடுகளில் ஆட்சி செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகள், ஏகாதிபத்திய, சர்வதேச முதலாளிகளின் ஏவல் நாய்களாக இருப்பதை வரலாறு மெய்ப்பித்து வருகின்றது. நைஜீரியா போன்ற ஆப்பிரிக்க, மூன்றாம் உலக நாடுகள் மட்டும் அல்ல, நரசிம்மராவ் தொடங்கி மன்மோஹன், சிதம்பரம், மான்டேக்சிங் அலுவாலியா, கடப்பாரை அத்வானிஜி, சாஃப்ட்மேன் வாஜபேயிஜி, காங்கிரஸ், பாரதீய ஜனதா, இவர்களது தொங்குசதைகளும் உள்ளூர் ஏஜெண்டுகளும் ஆன உதிரிக்கட்சிகள் எல்லோரும் சர்வதேச முதலாளிகளின் ஏவலாளிகளே. இவர்களின் கைவிரல் அசைவுக்கு காத்திருந்து சேவகம் செய்யவே போலீஸ், ராணுவம், நீதிமன்றங்கள் போன்ற அமைப்புக்கள்.

ஹோண்டா முதலாளி விட்டெறிந்த காசைப் பொறுக்கிக் கொண்டு, ஹோண்டா தொழிலாளிகள் மீது கற்பனை செய்ய இயலாத காட்டேறித்தாக்குதலை நடத்திய ஹா¢யானா மாநில அரசையும் அதன் போலீசையும் எப்படி அழைப்பது? சென்னைப்புறநகா¢ல் பெரும் பரப்பளவில் அமைந்துள்ள ஹ¥ண்டாய் தொழிற்சாலையில் நிரந்தரத்தொழிலாளர்கள் எண்ணிக்கை மிகக்குறைவு, பெரும் பகுதி கான்ட்ராக்ட் தொழிலாளர்களே. இவர்கள் இந்தியாவின் புனிதமான சட்டங்களுக்கு உட்பட்டு தொழிற்சங்கம் தொடங்குவது கூட நிர்வாகத்துக்கு கசக்கின்றது; அவர்களை டிஸ்மிஸ் செய்கின்றது. போலீசை ஏவி அடிக்கின்றது, சிறையில் அடைக்கின்றது.

தமிழ் மக்களின் தானைத்தளபதி, உண்மையில் கொரிய நாட்டு முதலாளியின் படைகளுக்கு லோக்கல் தளபதியாக இருக்கின்றார் என்பது தொடர்ந்து மெய்ப்பிக்கப்படுகின்றது. இவையன்றி, பெப்சி, கோககோலா போன்ற ஏகாதிபத்திய பானங்களில் விசமருந்துகள் இருப்பதாக மெய்ப்பிக்கப்பட்ட பின்னரும் கூட மைய அரசு இந்தியாவில் அவற்றை அனுமதித்திருக்கின்றது எனில், மைய அரசு யாருடைய ஏவலாளாக இருக்கின்றது?

25 வருடங்களுக்கு முன்பு போபாலில் நடந்த மீதைல் ஐசோ சயனைட் என்ற விசவாயுக்கசிவு விபத்தால் (?) ஆயிரக்கணக்கான மக்கள் செத்து விழுந்தனர். குற்றவாளியானஅமெரிக்க கம்பெனியான யூனியன் கார்பைட் கம்பெனி மீது பெரிய வழக்கெல்லாம் போட முடியவில்லை. நைஜீரிய மக்களுக்கு இருக்கின்ற மான உணர்ச்சி, சூடு, சொரணை, கோபம் மிகப்பெரிய இந்திய அரசுக்கு இல்லை.
கடந்த ஐந்து வருடங்களாக "இடதுசாரிகள் ஆதரவிலான ஒரு அரசு" என்பதை சகித்துக்கொள்ள முடியாமல், தொண்டையிலேயே இருந்த கசப்பு மருந்து போல, ஆனால் துப்பவும் முடியாமல் எரிச்சலுடன் காலத்தை தள்ளியது காங்கிரஸ். நினைத்தபடியெல்லாம் பொதுத்துறையை விற்பது, அமெரிக்கா இருக்கும் திசையைப் பார்த்து தூங்கும்போதும் கும்பிட்டபடியே இருப்பது போன்ற நடவடிக்கைகளுக்கு இடதுசாரிகள் 'சொட்டை, சொள்ளை' என்று 'குறை' சொல்லிக்கொண்டே இருந்தார்கள். மன்மோஹன், சிதம்பரம், மான்டேக்சிங் அலுவாலியா, அத்வானி, வாஜபேயி, காங்கிரஸ், பாரதீய ஜனதா கும்பலுக்கும், இவர்களுக்குள் உறவுப்பாலமாக விளங்கும் அம்பானி போன்ற பெருமுதலாளிகளுக்கும், அவர்களது எஜமானன் ஆன அமெரிக்கா, உலகவங்கி, சர்வதேசநிதி நிறுவனம், ஜி-7, ஜி-20, ஐரோப்பிய பொருளாதாரக்கூட்டணி ஆகிய சர்வதேச கொள்ளையர்களுக்கும் இது மிகப்பெரும் எரிச்சலாகவே இருந்தது. இடதுசாரிகளை ஒழித்துக்கட்டவும், குறைந்த பட்சம் அவர்களது செல்வாக்கையாவது குறைக்கவும், லஞ்சலாவண்யத்தில் சிக்காதவர்கள் என்ற நல்ல பெயரைக் களங்கப்படுத்தவும் என்ன செய்ய வேண்டுமோ அவை அனைத்தையும் இந்த கும்பல் கூட்டுச் சேர்ந்து செய்து வருகின்றது. கேரளாவில் ஊழல் புகார், மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்டுக்கள்+மம்தா பானர்ஜி+காங்கிரஸ்+பா.ஜ.க. கூட்டணி போன்றவை எல்லாம் தற்செயலாக திடீர் என நடப்பவை அல்ல என்று உறுதியாகக் கூற முடியும். 

இப்போது தனிப்பலத்துடன் ஆட்சியில் ஏறியுள்ள காங்கிரஸ், தனது எஜமானுக்கு விசுவாசமாக இட்ட கட்டளைகள் அனைத்தையும் செவ்வனே நிறைவேற்றும் என்பதில் இரண்டு கருத்துக்கு இடமில்லை. ஜூலை மாதம் வரும் பட்ஜெட் இதை உறுதிப்படுத்தும். எதிர்காலத்தில் பொதுத்துறை நிறுவனங்கள் வீதியில் வைத்து ஏலம் விடப்படும்; ஷெல் போன்ற கம்பெனிகளை நிறையப் பார்க்க முடியும்; அடிப்படை ஜனநாயக, தொழிற்சங்க உரிமைகள் மேலும் நசுக்கப்படும். ஹோண்டா, ஹூண்டாய் போல் பல சம்பவங்கள் நிகழலாம்; பல்வேறு கென் சாரோக்களை நாம் இங்கே பலிகொடுக்க நேரலாம். ஷெல் போன்ற கம்பெனிகளிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விசயங்கள் நமது ஆட்சியாளர்களுக்கு ஏராளமாக இருப்பதை அவர்கள் அறிவார்கள்; நமக்கோ நைஜீரிய டெல்டா ஓகோனி மக்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விசயங்கள் ஏராளமாக உள்ளன.







(முற்றும்)