திங்கள், அக்டோபர் 01, 2012

பாகிஸ்தான் செல்லும் ரயில் - 2 (குஷ்வந்த் சிங்)

இது மட்டுமில்லை, ஒருநாள் சீக்கிய ராணுவ வீரர்களின் அணி  இறங்கியது. ரயில் நிலையத்துக்கு அருகில் கூடாரம் போட்டார்கள். ரயில் பாலத்தின் முனையிலுள்ள சிக்னல்கம்பம் அருகே ஆறடி உயரத்துக்கு மணல் மூட்டைகளை சதுரமாக அடுக்கிஒவ்வொரு திசைக்கும் ஒரு இயந்திரத் துப்பாக்கியையும் பொருத்தினார்கள். ஆயுதமேந்திய வீரர்கள் பிளாட்பாரத்தைக் காவல் காத்தார்கள். கிராமமக்கள் ரயில் நிலையத்தை நெருங்க அனுமதிக்கப்படவில்லை. டில்லியிலிருந்து வரும் ரயில்களின் டிரைவர்களும் கார்டுகளும் பாகிஸ்தானுக்குள் நுழையும் முன்பாக அங்கே மாற்றப்பட்டார்கள். பாகிஸ்தானிலிருந்து வரும் ரயில்களின் எஞ்சின்கள் ஏதோ விடுதலைப் பெருமூச்சுடன் ஓடி வருவதைப் போல் இந்தப் பக்கம் வந்தன.


ஒருநாள் காலையில் பாகிஸ்தானிலிருந்து வந்த ரயில் ஒன்று அங்கே நின்றது. அமைதியாக இருந்த அந்த நாட்களில் ஓடிய ரயிலைப் போலத்தான் இதுவும் இருந்தது பார்த்தவுடன். கூரைகளில் யாரும் பயணிக்கவில்லை. பெட்டிகளுக்கிடையே யாரும் தொத்திக் கொண்டும் தொங்கிக் கொண்டும் இல்லை. படிக்கட்டுக்களில் ஊசலாடிக் கொண்டு யாரும் இல்லை. ஆனாலும் இந்த ரயிலில் ஏதோ ஒரு வித்தியாசம் இருப்பதாகப்பட்டது. இது ஒரு குறுகுறுப்பை மனதில் ஏற்படுத்தியது. ஒரு பேயைப் பார்ப்பதுபோல் உணர்வு வந்தது. பிளாட்பாரத்துக்குள் வந்தவுடன்கார்டு இறங்கிஸ்டேசன் மாஸ்டரின் அறைக்குள் நுழைந்தார். பின் இருவருமாக கூடாரம் அடித்துள்ள இடத்துக்குச் சென்று அங்கேயிருந்த ராணுவ அதிகாரியிடம் பேசினார்கள். பிறகு படைவீரர்கள் அழைக்கப்பட்டார்கள். அங்கேயிங்கே என அலைந்து திரிந்து கொண்டிருந்த கிராமமக்கள் அனைவரும் கிராமத்துக்குள் உடனே சென்றுவிடவேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஒரு வீரன் மோட்டார் சைக்கிளில் ஏறி சந்தன்நகர் நோக்கிப் புறப்பட்டபின் ஒருமணி நேரத்திற்குப்பின் சுமார் ஐம்பது போலீஸ்காரர்களுடன் சப்-இன்ஸ்பெக்டர் வந்து சேர்ந்தார். அதன்பின் மாவட்ட மாஜிஸ்டிரேட்டும் உதவி கமிஷனருமான ஹக்கும்சந்த் தனது அமெரிக்கக் காரில் வந்து இறங்கினார்.



பட்டப்பகலில் வந்த அந்த பேய்ரயில் மனோமஜ்ராவின் உணர்வுகளைத் தூண்டிவிட்டது. தங்களது வீட்டுக்கூரைகளின் மீது ஏறிரயில் நிலையத்தில் நடப்பதை வேடிக்கை பார்த்தார்கள். பிளாட்பாரத்தின் ஒருமுனையிலிருந்து மறுமுனை வரை நீண்டிருந்த ரயிலின் கறுப்பு வண்ணக் கூரையை மட்டும்தான் பார்க்க முடிந்தது. ரயில்நிலையக் கட்டிடமும் இரும்புக் கம்பிகளும் படிகளும் ரயிலை முழுமையாகப் பார்க்க முடியாமல் மறைத்தன. திடீர் திடீரென யாராவது ஒரு ராணுவ வீரனோ போலீஸ்காரனோ நிலையத்திலிருந்து வெளியே வருவதும் உள்ளே போவதுமாக இருந்தார்கள்.



பிற்பகலில் ஆண்கள் கும்பல் கும்பலாகக் கூடி ரயிலைப் பற்றிப் பேசத்தொடங்கினார்கள். அரசமரத்தடியில் கும்பல்கள் மொத்தமாகக் கூடியபின்அனைவரும் குருத்வாராவுக்குள் சென்றார்கள். வீடுவீடாகச் சென்று குசுகுசு’ பேசியும் சேகரித்துக் கொண்டும் இருந்த பெண்கள்இறுதியாககிராமத் தலைவர் பண்டாசிங் வீட்டில் கூடி அந்த ரயிலைப்பற்றிய தகவல்களோடு வரும் தங்களது ஆண்களுக்காகக் காத்திருந்தார்கள்.



* * *



திடீரென ஒரு போலீஸ்காரன் குருத்வாரா வாசலில் தென்பட்டான். கிராமத் தலைவரும் மற்ற சிலரும் எழுந்து நின்றார்கள். அரைகுறைத் தூக்கத்தில் இருந்தவர்கள் அவசரமாக விழித்தார்கள். என்ன என்ன ஆச்சு?” என்றபடி தங்களது தலைப்பாகையை அணிந்தவாறே அனைவரும் சுறுசுறுப்பானார்கள்.



கிராமத் தலைவர் யார்?”



பண்டாசிங் வாசலுக்கு வந்தார். அவரைத் தனியாகத் தள்ளிக்கொண்டு போன போலீஸ்காரன் அவர் காதில் ஏதோ கிசுகிசுப்பதைப் பார்க்க முடிந்தது. பண்டாசிங் திரும்பினார். ம்...ம்..நடக்கட்டும்... இன்னும் அரைமணி நேரம்தான். ஸ்டேசன் பக்கத்திலே இரண்டு மிலிட்டரி லாரி நிக்குது. நான் அங்கே போகணும்



போலீஸ்காரன் மிடுக்காகத் திரும்பிப் போனான். அனைவரும் பண்டாசிங்கைச் சுற்றி நின்றார்கள். ஒரு ரகசியத்தைத் தெரிந்து கொண்டிருப்பதால் அவர் ஒரு முக்கியமானவராகிப் போனார். அவரது குரலில் அதிகாரத் தொனி தெரிந்தது.



அவங்கவங்க வீட்டில இருக்கிற விறகுமண்ணெண்ணெய் எல்லாம் எடுத்துக்கிட்டு அந்த மிலிட்டரி லாரிக்கு வந்துடுங்க. பணம் கொடுப்பாங்க



எதற்காக என்று அவர் சொல்லவேண்டும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவரது குரல் கட்டளை இட்டது.என்ன உங்களுக்கெல்லாம் காது செவிடாஇல்லைநான் சொன்னது காதுல விழலியாபோலீஸ்காரன் வந்து கம்பால குண்டியில அடிச்சாத்தான் நகருவீங்களாவேலை நடக்கட்டும்



* * *



விறகுகள் லாரிகளில் ஏற்றப்பட்டன. காலியான பெட்ரோல் கேன்களில் மண்ணெண்ணெய் நிரப்பப்பட்டது. எல்லாம் முடிந்தபின்அதிகாரிக்கு மரியாதை தரும் விதமாக சற்றே தூரத்தில் அனைவரும் கூடி நின்றனர்... லாரிகள் ஸ்டேசனை நோக்கிச் சென்றன.



* * *



வீட்டுக் கூரைகளின்மீது நின்று பார்த்தால்ஸ்டேசன் பக்கத்தில் நிற்கும் லாரிகளைப்பார்க்க முடிந்தது... அவை மீண்டும் இடதுபுறம் திரும்பி ஸ்டேசனை நோக்கி வளைந்து ரயிலுக்குப் பின்னால் மறைந்தன. ரயில் பாலத்தின் அடியில் சூரியன் மறைந்தபோதுதங்களது அன்றாட வேலைகளை மறந்துபோய் விட்டோமே என்று ஆண்களும் பெண்களும் ஞாபகப்படுத்திக் கொண்டார்கள். விரைவில் இருட்டிவிடும்குழந்தைகள் உணவுக்காக அழத் தொடங்குவார்கள். ஆனாலும்பெண்கள் ரயில்வே ஸ்டேசன்மீது பதிந்த தங்களது கண்களை அப்படியிப்படி நகர்த்தவேயில்லை. பசுக்களும் எருமைகளும் தானியக்களஞ்சியத்துக்குத் திரும்பின. ஆனாலும் ஆண்கள் வீட்டுக்கூரைகளின் மீது நின்றுகொண்டு இப்போதும் ஸ்டேசனையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஏதோ நடக்கப் போகின்றது...



சூரியன் பாலத்துக்கு பின்னால் மூழ்கிக்கொண்டிருந்தான். வெண்மேகங்களைவெண்சிகப்பும் பழுப்பும் ஆரஞ்சுமான கலவையால் ஒளியேற்றி வண்ணமயமாக்கினான். சற்றுநேரத்தில் சாம்பல் வண்ணக் கீற்றுக்கள் இந்த வண்ணக்கலவையுடன் சேர்ந்துகொள்ள மாலைப்பொழுது மெல்ல மங்கி அந்தி சாயத்தொடங்கியது. அதுவும் மெதுவாகத் தன்னை இருட்டில் சங்கமித்துக் கொண்டது. ரயில்வே ஸ்டேசன் ஒரு இருட்டுச் சுவராக மாறிக்கொண்டது. சலித்துப்போன ஆண்களும் பெண்களும் மெதுவாகக் கீழேயிறங்கத் தொடங்கினார்கள்.



நீலமும் சாம்பல் வண்ணமும் கலந்த வடக்குத் தொடுவானம்மீண்டும் ஆரஞ்சுவண்ணத்தை வீசியது. அது பழுப்பு வண்ணமாகி ஒளிமயமான வெண்சிகப்பை வீசியது. செக்கச் சிவந்த தீயின் நாக்குகள் மேலெழுந்து கருங்கும்மென்றிருந்த இருட்டு வானத்தைத்தொட்டன. இளங்காற்று மனோமஜ்ராவை நோக்கி வீசியது. மண்ணெண்ணெயும் விறகும் எரியும் வாடை உடன் வந்தது. அதன்பின் மனிதச் சதை எரிந்து தீய்ந்து போன தெளிவற்ற குமட்டுகின்ற நாற்றம் வந்தது.



மரண அமைதியில் மனோமஜ்ரா உறைந்தது. 

(தொடரும் 2)

கருத்துகள் இல்லை: