திங்கள், அக்டோபர் 08, 2012

பாகிஸ்தான் செல்லும் ரயில் - 3 (குஷ்வந்த் சிங்)


அது என்ன நாற்றம் என்று யாரும் யாரையும் கேட்கவில்லை. அவர்களுக்குத் தெரியும் அது என்னவென்று. அவர்களின் கடந்த காலம் அதை அவர்களுக்குச் சொல்லியிருந்தது. அந்த ரயில் பாகிஸ்தானிலிருந்து வந்தது என்பதே அவர்களின் கேள்விகளுக்குத் தகுந்த பதிலாக இருந்தது.


மனோமஜ்ரா நினைவு தெரிந்த நாளிலிருந்து முதன்முதலாக அன்றுதான் இமாம் பக்ஷின் குரல் (மசூதியிலிருந்து) வானத்தைத் தொட்டு அல்லாவின் புகழை உரக்கக் கூவுவதற்காக மேலெழும்பவில்லை.



*******************************************



ஹெட்கான்ஸ்டபிளின் வருகை, வெண்ணெயில் கத்தி இறங்குவதைப் போல் மனோமஜ்ராவை இரண்டாகப் பிளந்துவிட்டது. முஸ்லிம்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே இருந்து துக்கத்தில் ஆழ்ந்தார்கள். பாடியாலாவிலும் அம்பாலாவிலும் கபுர்தலாவிலும் சீக்கியர்கள் முஸ்லிம்களைத் தாக்கிக் கொடுமைப்படுத்தியதாகக் கூறப்பட்ட வதந்திகள் முன்பு பரவியதும், ஆனால் தாங்கள் அதைப் பொருட்படுத்தாததும் மீண்டும் நினைவில் ஓடின. முக்காடு விலக்கப்பட்ட தங்கள் பெண்கள், நிர்வாணப்படுத்தப்பட்டு ஆள் நடமாட்டமிக்க வீதிகளில் ஊர்வலமாகத் துரத்தப்பட்டு மார்க்கெட் பகுதியில் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டதாக கேள்விப்பட்டிருந்தார்கள். தாங்கள் சூறையாடப்படுவதற்கு முன்பாகவே பலர் தங்களை மாய்த்துக் கொண்டார்களாம். பன்றிகளைக் கொண்டுவந்து வெட்டியெறிந்து மசூதிகளை அசுத்தம் செய்ததாகவும், புனித குர்-ஆனை எதிரிகள் கிழித்து எரிந்ததாகவும் கேள்விப்பட்டிருந்தார்கள். மனோமஜ்ராவின் ஒவ்வொரு சீக்கியரும் திடீரென கெட்டநோக்கத்துடன்கூடிய விரோதியாகத் தோன்றினார்கள். அவர்களது நீண்ட தலைமுடியும் தாடியும் காட்டுமிராண்டித்தனமாகத் தோன்றியது. கிர்பான்(குறுவாள்) முஸ்லிம்களுக்கெதிரான ஆயுதமாகத் தோன்றியது. பாகிஸ்தான் என்ற பெயரில் ஏதோ அர்த்தம் உள்ளதாக - சீக்கியர்களே இல்லாத ஒரு புகலிடமாக - முதன்முதலாக நினைக்கத் தொடங்கினார்கள்.



சீக்கியர்களுக்குள் கோபமும் வன்மமும் தலைதூக்கியது. ஒரு முஸ்லிமை எப்போதும் நம்பாதேஎன்றார்கள். அவர்களது கடைசி குரு கூறியிருக்கிறார், “முஸ்லிம்கள் நன்றியுணர்ச்சியற்றவர்கள்சரிதான். முஸ்லிம்களின் ஆட்சியில், தங்களது தகப்பனார்களை சகோதரர்களைக் கொன்றும், அவர்களது கண்களைக் குருடாக்கியும் இருக்கிறார்கள், அரியணையைக் கைப்பற்ற. குருத்துவாராக்களில் பசுக்களைப் பலியிட்டு அசுத்தப்படுத்தினார்கள். புனித கிரந்த்சாகிப்பை கிழித்து எறிந்தார்கள். முஸ்லிம்கள் பெண்களை மதிப்பதே கிடையாது. முஸ்லிம்கள் கையில் சீரழிவதை விட, கிணற்றில் விழுந்து செத்த பெண்களையும், தீயிட்டுக்கொண்டு செத்த பெண்களையும் பற்றி சீக்கியஅகதிகள் சொல்லியிருக்கின்றார்கள். தற்கொலை செய்துகொள்ளாதவர்கள் நிர்வாணமாக்கப்பட்டு, தெருவில் துரத்தப்பட்டு, வன்புணர்ச்சிக்குப் பிறகு கொலை செய்யப்பட்டார்கள். இப்போது ஒருரயில் நிறைய சீக்கியர்கள் கொல்லப்பட்டு மனோமஜ்ராவில் அவர்கள் எரிக்கப்பட்டுள்ளார்கள்.



*****************************************



சற்று நேரம் சென்றபின், கிராமத்தலைவர் பண்டாசிங் பேசத் தொடங்கினார்.



பக்கத்து கிராமங்களில் உள்ள முஸ்லிம்களெல்லாம் வெளியேற்றப்பட்டுவிட்டார்கள். சந்தன்நகர் அருகிலுள்ள அகதி முகாமில் இருக்கின்றார்கள். பலர் ஏற்கனவே பாகிஸ்தானுக்குச் சென்று விட்டார்கள். மற்றவர்கள் ஜலந்தரில் உள்ள பெரிய முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ளார்கள்.



மற்றொருவர் தொடர்ந்தார். ஆமாம். கப்பூராவும், குஜ்ஜூமாட்டாவும் கடந்தவாரம் காலி செய்யப்பட்டன. மனோமஜ்ராவில் மட்டும்தான் இப்போது முஸ்லிம்கள் உள்ளார்கள். தங்களது சகாக்களை வெளியேறுமாறு எப்படி அவர்கள் கூறமுடிந்தது என்பது எனக்குத் தெரியவில்லை. நமது குத்தகைக்காரர்களிடம் நாம் எப்போதுமே அவ்வாறு சொல்லப்போவதில்லை. நமது பிள்ளைகளை வீட்டைவிட்டு வெளியே போகுமாறு எப்படிக் கூறமுடியுமோ அதைவிட அதிகமாக நாம் ஒன்றும் பேசிவிட முடியாது. இங்கே யாராவது இருக்கின்றீர்களா - கிராமத்து முஸ்லிம்களை, “சகோதரர்களே, மனோமஜ்ராவை விட்டு வெளியேற வேண்டாம்என்று சொல்வதற்கு?



இதற்கு யாரும் பதில் சொல்லும்முன் யாரோ வாசலில் நுழைந்தார்கள். விளக்கின் குறைந்த வெளிச்சத்தில் அடையாளம் தெரியவில்லை. யாரது?” கேட்டது கிராமத்தலைவர். உள்ளேவாங்கஇமாம் பக்ஷ் உள்ளே வந்தார். இரண்டு பேர் கூடவே வந்தார்கள். முஸ்லிம்கள்.



சலாம், இமாம் பக்ஷ் மாமா. சலாம் கேர் தினா சலாம், சலாம்



சத் ஸ்ரீ அகால், தலைவரே, சத் ஸ்ரீ அகால்முஸ்லிம்கள் வணக்கம் சொன்னார்கள்.



அவர்களுக்கு உள்ளே இடம் கொடுத்தார்கள். இமாம் பக்ஷ் பேசக் காத்திருந்தார்கள்.



விரலால் தாடியைக் கோதியபடியே இமாம் பேசத் தொடங்கினார். சகோதரர்களே என்ன முடிவு செய்திருக்கிறீர்கள்?”



மோசமான அமைதி நிலவியது. கிராமத்தலைவரை எல்லோரும் பார்த்தார்கள்.



என்ன கேள்வி இது? எங்களுக்கானதைப் போல உங்களுக்கும் இந்தக் கிராமம் சொந்தமில்லையா?”



வெளியே என்ன மாதிரியாகப் பேசுகிறார்கள் என்பதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். பக்கத்து கிராமத்திலிருந்தெல்லாம் வெளியேற்றப்பட்டு விட்டார்கள். நாம் மட்டுமே மீதி. நாங்கள் வெளியேற வேண்டுமென்று நீங்கள் விரும்பினால் நாங்கள் போய்விடுவோம்.



ஒரு இளைஞன் பேசினான்,”இமாம் பக்ஷ் மாமா, இங்கே பாருங்க நாங்க இங்கே இருக்கிறவரைக்கும் உங்களைத் தொடறதுக்கு யாருக்கும் துணிச்சல் வராது. நாங்க முதல்லே உயிரை விடுவோம் அதுக்குப்பிறகு நீங்க உங்களைப் பார்த்துக்குங்க.



ஆமாம், நாங்க முதல்ல. அப்புறம்தான் நீங்க. உங்களுக்கு எதிரா யாராவது புருவத்தை உயர்த்துனாங்கன்னாக்கூட அவனோட அம்மாவைக் கற்பழிப்போம்என்றது ஒரு குரல்.



ஆமாமா, அம்மா, சகோதரி, மகன்பல குரல்கள். கண்ணில் வழிந்தோடிய நீரைத் துடைத்துக்கொண்டு, சட்டையின் நுனியால் மூக்கைச் சிந்தினார் இமாம்.

(தொடரும்...4)



கருத்துகள் இல்லை: