
*****************************************************************
அந்த 1947-ன் கோடைகாலம், இந்தியாவின் வழக்கமானதொரு கோடைகாலமாக இல்லை. பருவநிலை கூட அப்போது வழக்கத்தைவிட உஷ்ணமாகவும், காய்ந்து போயும், புழுதி கிளப்பியபடியுமாக இருந்தது. கோடைகாலம் நீண்டதாகயிருந்தது. மேகங்கள் தென்பட்டன. ஆனால் மழையில்லை. தங்களது பாவங்களுக்காக ஆண்டவன் தண்டித்துக் கொண்டிருப்பதாக ஜனங்கள் பேசத் தொடங்கினார்கள்.
தாங்கள் பாவம் செய்துவிட்டதாகப் புலம்புவதற்கு அவர்களிடம் போதிய காரணங்கள் இருந்தன. இந்தக் கோடைக்கு முன்புதான், தேசம் இரண்டு கூறுகளாக இந்து இந்தியா, முஸ்லிம் பாகிஸ்தான் என பிரிக்கப்பட இருப்பதாகச் செய்திகள் கசிந்தன. விளைவு, கல்கத்தாவில் மதக்கலவரம் வெடித்தது. ஒருசில மாதங்களிலேயே சாவு எண்ணிக்கை பல ஆயிரங்களைத் தொட்டது. இந்துக்கள் திட்டமிட்டுத் தங்களைக் கொன்றதாக முஸ்லிம்கள் கூறினார்கள். முஸ்லிம்கள் திட்டமிட்டுத் தங்களைக் கொன்றதாக இந்துக்கள் கூறினார்கள். இரண்டு தரப்புமே ஒருவரை ஒருவர் சுட்டுக் கொன்றார்கள், கத்தியால் குத்தினார்கள், வெட்டினார்கள், மோதினார்கள். இரண்டு தரப்புமே சித்திரவதையில் இறங்கினார்கள். இரண்டு தரப்புமே பெண்களைச் சூறையாடினார்கள். கல்கத்தாவிலிருந்து, கலவரம் வடக்கு, கிழக்கு, மேற்காகப் பரவியது. கிழக்கு வங்காளத்தின் நவகாளியில் இந்துக்களை முஸ்லிம்கள் படுகொலை செய்தார்கள். பிஹாரில் முஸ்லிம்களை இந்துக்கள் படுகொலை செய்தார்கள்.
பஞ்சாபிலும் எல்லை மாகாணத்திலும், பெட்டிகளில் மண்டையோடுகளை வைத்துக்கொண்டு அவை இந்துக்களால் கொல்லப்பட்ட பிஹார் முஸ்லிம்கள் என்று கூறித் திரிந்தார்கள். பல நூறு வருடங்களாக வடமேற்கு எல்லையில் வசித்து வந்த இந்துக்களும் சீக்கியர்களும் தங்கள் சொத்துக்களைத் துறந்து, கிழக்கே தங்களது சமூக மக்களைத் தேடி அலைஅலையாய்ப் புறப்பட்டார்கள். கால்நடையாக, மாட்டு வண்டிகளில், லாரிகளில், ரயில்களின் கூரைகளில், ஓரங்களில், அங்கே இங்கே என்று பயணித்தார்கள். தங்களது பயணவழிகளில், தண்ணீர்த் துறைகளில், ரயில் நிலையங்களில், சாலைச் சந்திப்புகளில், அவர்களைப் போலவே கிழக்கு நோக்கிப் பாதுகாப்புத் தேடி சாரைசாரையாகப் பயணிக்கின்ற முஸ்லிம்களை எதிர்கொண்டார்கள். கலவரம் காற்றைப் போல இரைந்து கர்ஜித்தது.
பாகிஸ்தான் என்ற புதியதேசம் முறைப்படி அறிவிக்கப்பட்ட அந்த 1947-ன் கோடையில், முஸ்லிம்களும் இந்துக்களும் சீக்கியர்களுமாக ஒருகோடி பேர் எதிரெதிர்த் திசைகளில் பயணித்துக் கொண்டிருந்தார்கள். பருவமழை தொடங்கியபோது, அநேகமாக அவர்களில் பத்துலட்சம் பேர் உயிரிழந்திருந்தார்கள். வட இந்தியா கலவரத்திலும் வன்முறையிலும் அச்சத்திலும் மூழ்கியிருந்தது. பாலைவனச்சோலை போல, எல்லையின் மிக நீண்டதூரத்தில் சிதறிக் கிடக்கின்ற ஓரிரண்டு கிராமங்களில் மட்டுமே அமைதி நிலவியது. மனோமஜ்ராவும் அத்தகைய கிராமங்களில் ஒன்று.
மனோமஜ்ரா சிறிய கிராமம். செங்கல் வீடுகள் மொத்தமே மூன்றுதான். அதில் ஒன்று வட்டிக்குப் பணம்தரும் லாலாராம் லாலின் வீடு. மற்ற இரண்டு, சீக்கிய குருத்வாராவும் முஸ்லிம்களின் மசூதியும்தான். அந்த மூன்று கட்டிடங்களுமே ஒரு முக்கோணத்தை உருவாக்கியிருந்தன. நடுவில் ஒரு அரசமரம். மொத்தம் எழுபது குடும்பங்கள். லாலாராம்லாலின் குடும்பம் மட்டுமே இந்துக்கள். மற்றவர்கள் சீக்கியர்களும் இஸ்லாமியர்களும் சம அளவில். கிராமத்தின் நிலம் அனைத்தும் சீக்கியர்களிடம் இருந்தன. இஸ்லாமியர்கள் குத்தகைதாரர்களாக இருந்தார்கள். நகர சுத்தித் தொழிலாளர்களாக இருந்த சிலரின் மதமோ என்னவென்றே தெரியவில்லை.
***
மனோமஜ்ராவின் ரயில் நிலையத்தில் எல்லா ரயில்களும் நிற்பதில்லை. வேகம் குறைந்த பாசஞ்சர் ரயில்கள் இரண்டு மட்டுமே அங்கே நிற்பவை. காலையில் டெல்லியிலிருந்து லாகூருக்குச் செல்லும் ரயிலும், மாலையில் லாகூரிலிருந்து டெல்லிக்குச் செல்லும் ரயிலும், மனோமஜ்ராவில் ஓரிரண்டு நிமிடங்கள் நின்று செல்பவை. எப்போதுமே அங்கே வரும் ‘வாடிக்கையாளர்’ என்றால் அவை சரக்கு ரயில்கள் மட்டுமே. மனோமஜ்ராவிற்கு சரக்குகள் வருவதுமில்லை, அங்கிருந்து செல்வதுமில்லை. என்றாலும், ரயில் நிலையத்தில் எப்போதும் சரக்கு வண்டிகளின் அணிவகுப்பு இருந்துகொண்டே இருக்கும். வருகின்ற சரக்கு ரயில்கள் சரக்கு வண்டிகளைக் கழற்றி விடுவதும், இருக்கின்ற வண்டிகளை இணைத்துக் கொண்டு செல்வதுமாக மணிக்கணக்கில் அந்த வேலை நடக்கும். கிராமம் ஆழ்தூக்கத்தில் உறைந்திருக்கும்போது, அந்த மையிருட்டில், எஞ்சின்களின் விசில் சத்தமும், மூச்சிரைக்கும் வேகமும், சரக்குகளின் சத்தமும், வண்டிகளை இணைக்கும் ‘கப்ளிங்’குகளின் சத்தமும் காலை வரை தொடரும்.
* * *
அந்த செப்டம்பர் தொடக்கம் முதலே, மனோமஜ்ராவிற்கு ரயில்கள் வரும்நேரம் தாறுமாறாக இருந்தது. ரயில்கள் சரியான நேரத்துக்கு வருவதில்லை, வழக்கத்துக்கு மாறாக இரவு நேரங்களிலும் ரயில்கள் ஓடுவதைக் கேட்க முடிந்தது. சரக்கு ரயில்கள் ஓடுவது சுத்தமாக நின்றுவிட்டது. ஆனால் அடையாளமற்ற ரயில்கள் அர்த்த ராத்திரி முதல் விடிகாலை வரை ஓடத் துவங்கின. மனோமஜ்ராவின் கனவுகள் கலையத் தொடங்கின....
(தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக