‘ஆயிரம் சூரியன்கள் ஒரு சேர உதித்தனவோ?’ – ராபர்ட் ஓப்பன்ஹீமர் (அமெரிக்க அணுசக்தி விஞ்ஞானி, ஹிரோஷிமா அணுகுண்டு
வீச்சைப்பற்றி அதிர்ச்சியடைந்து கூறியது)
“ராட்சத தீப்பந்து ஒன்று – ஒரு மைல் விட்டம் இருக்கும் –
கிளம்பி மேலே மேலே சென்றது. தனது நிறத்தை மாற்றிக்கொண்டே சென்றது. ஆழ் ஊதாவில் இருந்து ஆரஞ்சுக்கு. இன்னும்
விரிந்து...விரிந்து...உயரே உயரே...பல நூறு கோடி வருடங்கள் சங்கிலியால்
கட்டிப்போடப்பட்டிருந்த ஏதோ ஒரு சக்தி திடீரென விடுவிக்கப்பட்டதைப்போல்
ஆவேசத்துடன் மேலே மேலே... இந்த பூமிதான் இரண்டாகப் பிளந்த்தோ? அல்லது வானம்தான்
உடைந்து போனதா? இப்போது ஒரு மேகக்கத்தை புமியில் இருந்து புறப்பட்டு சூரியனை
நோக்கி சென்றது, முதலில் ஒரு ராட்சத தூண் போலத்தான் இருந்தது, ஆனால் விரைவிலேயே
இந்த உலகத்துக்கெல்லாம் கட்டுப்படாத ஒரு ராட்சதக்காளானாக (Giant Mushroom) அவதரித்தது. பல கோடி
வருடங்களானாலும் உருவாக்க முடியாத ஒரு பிரமாண்ட மலை ஒரு சில வினாடிகளில்
உண்டானாற்போலும்...மேகங்களைக் கிழித்துக்கொண்டு இன்னும் மேலே, நாற்பத்து ஓராயிரம்
அடி உயரத்தை தொட்டது – இவ்வுலகின் மிக உயர்ந்த மலைச்சிகரத்தை விடவும் கூடுதலாக பன்னிரெண்டாயிரம்
அடி அதிக உயரத்தைத் தொட்டு நின்றது. இவை யாவும் அமைதியாக மிக அமைதியாக நடந்தேறின. அதன் பின்னர்தான் அந்த
இடிச்சத்தம் எழுந்தது – ஆயிரமாயிரம் கோர வெடிகுண்டுகள் ஒருசேர எழுந்து
வெடித்தாற்போல்...” –
முதல் அணுகுண்டு வெடிப்பு சோதனை 1945 ஜூலை 16 காலை 5.30 மணிக்கு நட்த்தப்பட்டது.
இடம் அமெரிக்காவின் நியூ மெக்சிகோ பாலைவனம், அல்மோகோர்டோ விமானத்தளம். இதனை நேரில்
பார்த்து எழுதுவதற்காக பெண்டகான் நிர்வாகத்தால் வரவழைக்கப்பட்ட பத்திரிக்கையாளர் வில்லியம்
லாரென்ஸ் என்பவர்தான் மேலே கூறப்பட்டதை எழுதினார்.
இந்த அணுவெடிச்சோதனைக்காக அமைக்கப்பட்டிருந்த முப்பது
மீட்டர் எஃகு கோபுரம் காற்றில் கரைந்து போனதாம்! இத்திட்டத்துக்கு மான்ஹாட்டன்
திட்டம் என்று பெயர். இதன் முக்கிய ஆலோசகர் விஞ்ஞானி ராபர்ட் ஓப்பன்ஹீமர்
இச்சோதனையின் பேரழிவுசக்தியைக் கண்டு அதிர்ச்சியடைந்து இப்படிக்கூறினாராம்: ”நான்தான்
மரணம் – உலகங்கள் யாவற்றையும் அழிப்பவன்” (I am become Death, destroyer
of the worlds). இவ்வாசகம் பகவத்கீதையில் உள்ள வாசகம்.
இப்பேரழிவு சாதனமான அணுகுண்டை
ஆகஸ்டு 6,9 தேதிகளில் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் வீசியதன் மூலம் மனிதகுலத்தின்
ஆகப்பெரும் முதல் நாசத்தை அமெரிக்கா தொடங்கி வைத்தது.
அணுகுண்டு வீச வேண்டிய அவசியம்
நிச்சயம் இருந்ததா? அல்லது அமெரிக்காவின் அணுகுண்டு மட்டுமே நீண்ட ஐந்து
வருடங்களாக நடந்து வந்த இரண்டாம் உலகப்போரை முடிவுக்கு கொண்டுவந்ததா? இல்லையேல்
எதனால் யாரால் முடிவுக்கு வந்த்து?
ஏகாதிபத்தியங்களுக்கு இடையே ஆன
முரண்பாடுகள்,போட்டிகளின் காரணமாகப் பிறந்த இரண்டாம் உலகப்போரை முடிவுக்கு கொண்டு
வந்த பெருமை சோவியத்தின் செஞ்சேனையையே சாரும். 1945 மே 8 அன்று, நாஜி ஜெர்மனி
சரணாகதி ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டது. ஜெர்மனியின் ரீச்ஸ்டாக் மாளிகையின்
உச்சியில் பாட்டாளிவர்க்கத்தின் செங்கொடி உயரப்பறக்கவிடப்பட்டது.
இதற்கு முன்னரே 1944ஆம் ஆண்டு
ஆல்சோஸ் எனப் பெயரிடப்பட்ட திட்டமொன்று, ஜெர்மனியிடம் அணுகுண்டு உள்ளதா என்று
கண்டுபிடிக்கும் நோக்கத்துடன் அமெரிக்காவால் நிறுவப்பட்ட்து. சாமுவேல் கவுட்ஸ்மிட்
என்ற விஞ்ஞானியின் தலைமையிலான இக்குழு, ஜெர்மனியிடம் அணுகுண்டு இல்லை என்ற
முடிவுக்கு வந்த்து.
புகழ் பெற்ற விஞ்ஞானிகளான
ஐன்ஸ்டீன், லியோசிலார்ட், நீல்ஸ்போர், வானெவர் புஸ், ஜேம்ஸ் கானண்ட், பொருளாதார
நிபுணர் அலெக்சாண்டர் சாக் ஆகிய அனைவருமே அணு ஆயுத உபயோகத்துக்கு எதிராக குரல்
கொடுத்தார்கள். நீல்ஸ்போர், அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட்டையும், பிரிட்டிஷ்
பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலையும் நேரில் சந்தித்து புதிய ஆயுதத்தை மக்கள் மத்தியில்
வெட்டவெளிச்சமாக்குமாறு கேட்டுக் கொண்டதுடன் ஜெர்மனியை சரணடையுமாறும் வேண்டினார்.
பெரும்போரைத் தொடங்கிய (அணுகுண்டு
எதும் இல்லாத) ஜெர்மனி சரணாகதி அடைந்த பின் – அல்லது ஒரு வாதத்திற்காக வைத்துக்
கொண்டாலும்கூட போரைத்தொடங்கிய நாஜி ஜெர்மனி மீதுதானே குண்டு வீசியிருக்க வேண்டிய
அணுகுண்டை - ஆசியப்பகுதியில் ஜப்பான் மீது வீசி ஐந்து லட்சம் மக்களை ஏன் கொல்ல
வேண்டும்? வரலாற்றில் இக்கேள்விக்கான பதில் உள்ளது, அப்பதிலில் நீண்டகால அரசியல்
உள்நோக்கத்தை உள்ளடக்கிய காரணம் உள்ளது.
பிரிட்டிஷ் பேராசிரியர்
ப்ளேக்கெட் கூறினார்: இந்த குண்டு வீச்சுக்கள் இரண்டாம் உலகப்போரின் கடைசி ராணுவ
நடவடிக்கையாக இருக்கவில்லை; மாறாக சோவியத் ரஷ்யாவுக்கு எதிரான (அமெரிக்க)
ராஜதந்திர கெடுபிடி யுத்த்த்தின் முதல் நடவடிக்கையாகவே இருந்தன.
1945ஆம் ஆண்டு சீனாவில் அமெரிக்க
ஜெனரல் சேனல்ட், நியூயார்க் டைம்ஸ் (15.8.1945) பத்திரிக்கைக்கு அளித்த நேர்காணல்:
“ஜப்பானுக்கு எதிரான யுத்தத்தில் சோவியத் யூனியன் இறங்கியதென்பது, பசிபிக்
சமுத்திரத்தில் யுத்தம் முடிவுக்கு வருவதை துரிதமாக்கிய தீர்மானகரமான காரணியாக அமைந்தது. அணுகுண்டுகள் வீசப்படாமல் இருந்திருந்தாலும்
கூட யுத்தம் நிச்சயம் முடித்திருக்கும்.
சோவியத் செஞ்சேனை ஜப்பான் மீது தொடுத்த உறுதியான தாக்குதல்தான்
முற்றுகைக்கு முற்றுப்புள்ளி வைத்தது, ஜப்பானை மண்டியிட செய்தது.
சோவியத் ரஷ்யாவை நாஜிகள்
தாக்கியபோது அப்போது அமெரிக்க செனட்டரான இருந்த ஹாரி ட்ரூமன் கூறினார்: “ஜெர்மனி
இப்போரில் வெற்றி பெற்றால் நாம் ரஷ்யாவுக்கு உதவி செய்வோம்; ரஷ்யா வெற்றி பெற்றால்
நாம் ஜெர்மனிக்கு உதவி செய்வோம். எப்படி இருந்தாலும் அவர்கள் தங்களுக்குள்
அடித்துக்கொண்டு சாகட்டும்-எவ்வளவு முடியுமோ அவ்வளவு”. அமெரிக்க
விசுவாசிகள் ட்ரூமனின் இந்தக்கேவலமான எண்ணத்துக்கு பதில் சொல்லவேண்டும். ரூஸ்வெல்ட் 1945 ஏப்ரல் 12 அன்று இறக்கின்றார்,
தொடர்ந்து ட்ரூமன் ஜனாதிபதி ஆகின்றார். ஜூலை 16 அன்று முதல் அணுகுண்டு சோதனை நடத்தப்படுகின்றது.
1945 ஜூலை 24க்குப் பிறகு சோவியத்
தலைவர் ஸ்டாலினுக்கு ட்ரூமன் ஒரு கடிதம் எழுதுகின்றார். அமெரிக்கா ஒரு ‘புதிய ஆயுதத்தை’ கண்டுபிடித்துள்ளதெனவும்
அது அசாதாரணமான பேரழிவு சக்திகொண்டது எனவும் கூறுகின்றார். ஆனால் ஸ்டாலின் இக்கடிதம் பற்றி மேற்கொண்டு
எக்கருத்தும் கேட்டுக்கொள்ளாமல் மவுனமாக இருந்து விடுவது கண்டு ட்ரூமன் அதிர்ச்சி
அடைகின்றார். ஸ்டாலின் நடப்பது என்ன என்று
ஊகித்துக் கொண்டவராக அன்று மாலையே சோவியத் அணுசக்தி ஆராய்ச்சியை
துரிதப்படுத்துமாறு தனது அதிகாரிகளுக்கு ஆணை இடுகின்றார்.
...2
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக