திங்கள், ஜனவரி 28, 2013

கமலஹாசன் அவர்களுக்கு...


கமலஹாசன் அவர்களுக்கு...

1) 
தீவிரவாதிகள் என்றால் துப்பாக்கி தூக்கி அடுத்தவனை சுட்டு ரத்தம் வரவைப்பவன் என்ற இந்திய/தமிழ்  சமூகத்தின் பொதுப்புத்தியையே நீங்களூம்  உன்னைப்போல் ஒருவனில் முன்வைத்தீர்கள். நன்றாக சவரம் செய்து கோட்டு சூட்டணிந்து இலக்கணம் தவறாத ஆங்கிலம் பேசி கடப்பாரை தூக்கி  வழிபாட்டுத்தலத்தை இடித்த (லாஹூர் கல்லூரியில் படித்த) எல்.கே.அத்வானிநியூக்ளியர் ஃபிசிசிஸ்ட்  டாக்டர் முரளிமனோஹர் ஜோஷி போன்றோர் தீவிரவாதிகள் இல்லையாவிடுதலை பெற்ற இந்தியாவில் முதல்முதலாக ஆர்கனைஸ் செய்யப்பட்ட கூட்டத்தை திரட்டி ஒரு வழிபாட்டுத்தலத்தை இடித்த கூட்டத்தின் தலைவர் அத்வானி தீவிரவாதி இல்லையாதேசப்பிரிவினைக்குப் பின் மிகப்பெரும் மதக்கலவரங்களுக்கு விதை போட்டது பாபர் மசூதி இடிப்பு எனில் அதற்கு காரணமான ஆர் எஸ் எஸ்பாஜக தீவிரவாத இயக்கங்கள் இல்லையாஅதன் தலைவர்கள் தீவிரவாதிகள் இல்லையாவரலாற்று அடிப்படையில் திரைப்படம் எடுப்பதாக சொல்லும் நீங்கள்  பாபர் மசூதி இடிப்பு குறித்து தனது அடுத்த படத்தை எடுக்க வேண்டும். ஒரு நாள் நள்ளிரவில் எப்படி மசூதிக்குள் ராமர் சிலை வந்தது என்பதில் இருந்து தொடங்க வேண்டும். படத்தை எடுத்துவிட்டு உத்தவ் தாக்ரேயிடம் போட்டுக்காண்பித்துவிட்டு வெளியிடக்கூடாது (பம்பாய் படத்தை சூப்பர் சென்சார் பால் தாக்ரேயிடம் காண்பித்து அப்ரூவல் வாங்கிய பின் மணிரத்னம் வெளியிட்டது போல).
 
2) 1990களில் புதிய பொருளாதாரம் என்ற பெயரில் இந்தியப் பொருளாதாரத்தை அமெரிக்க- ஐரோப்பிய நலன்களுக்கு அடகுவைத்த மன்மோஹன்சிங்-காங்கிரஸ் கூட்டணி செய்ததும் செய்வதும் தீவிரவாதம் இல்லையா? விவசாய நாடான இந்தியாவில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளை தற்கொலைக்கு தள்ளியது இதே கொள்கைகள்தான் எனில் இக்கொள்கையை வடிவமைத்துப்புகுத்திய மன்மோஹன்சிங்-காங்கிரஸ் கூட்டணி தீவிரவாதிகள் இல்லையா? ஜனவரி 1 முதல் வால்மார்ட் போன்ற ராட்ச்சர்களை இந்தியாவுக்குள் அனுமதித்து நமது தெருக்களின் சில்லறை வியாபாரிகளை அழிப்பது இக்கொள்கைதான் எனில் இக்கொள்கையை வடிவமைத்துப்புகுத்திய மன்மோஹன்சிங்-காங்கிரஸ் கூட்டணி தீவிரவாதிகள் இல்லையா?

3) 
சமுதாயத்தில் நடக்கும் நிகழ்வுகளின் அடிப்படையில்தான் தான் படங்கள் எடுப்பதாக நீங்கள் கூறுகின்றீர்களாம். உங்களது உன்னைப்போல் ஒருவனின் வரலாற்று நிகழ்வுகளை முன்பின்னாக அடுக்கியது நேர்மையான செயலா? ’ஆரிஃப் பாய்பெஸ்ட் பேக்கரியில் நம்ம ஆளுங்களை கொளுத்திட்டாங்கஅதுனாலதான் நான் தீவிரவாதி ஆனேன்’ என்று அமானுல்லா கூறுவது புரட்டு அல்லவா? 2002இல் நடந்த பெஸ்ட் பேக்கரி கொடுமைக்கு 1993இல் மும்பையில் அல்லது 1998இல் கோவையில் அமானுல்லா வெடிகுண்டு வைத்தான் என்பது நீங்கள் செய்த வரலாற்றுப்புரட்டு அன்றி வேறென்ன? ஆர் எஸ் எஸ்-ம் பாஜக-வும் இதைத்தானே செய்கின்றார்கள்? என்ன பெரிதாக நீங்கள் வரலாறு பேசுகின்றீர்கள்? அதுவும் உங்கள் படம் உள்ளிட்ட தமிழ், இந்திப்படங்களில் இந்திய முஸ்லிம்களில்  தீவிரவாதிகளாக இருப்பவர்கள் பாகிஸ்தானிய உளவாளிகளாக இருப்பதும் தேஷபக்தி கொண்ட ‘நல்ல’ முஸ்லிம்கள் போலீஸ் இன்ஸ்பெக்டர்களாக இருந்து அதே ‘முஸ்லிம்’ தீவிரவாதிகளை கண்டுபிடித்து உதைப்பதும் எப்படி சார்? விஜயகாந்தும் அர்ஜூனும் இதைத்தானே தங்கள் படங்களில் செய்தார்கள்? குருதிப்புனலிலும் (அர்ஜுனின் பெயர் அப்பாஸ்) உன்னைப்போலிலும் இப்படித்தானே? தனக்கு சாதகமான ஒத்திசைவு கொண்டவராக இருந்ததால்தானே அப்துல்கலாமை இவரு ரொம்ப நல்லவரு’ அதாவது நல்ல முஸ்லிம்’ என்று ஆர் எஸ் எஸ்-ம் பாஜகவும் ஜனாதிபதி அந்தஸ்துக்கு உயர்த்தின? தீவிரவாதிகள் என்றால் இஸ்லாமியர்கள்தான் என்ற இந்திய/தமிழ்  சமூகத்தின் பொதுப்புத்தியில் முதலீடு செய்துதான் விஜயகாந்தும் அர்ஜூனும் லாபம் சம்பாதித்தார்கள், நீங்களும் உன்னைப்போலொருவனில் லாபம் பார்த்தீர்கள், இதில் என்ன உங்களிடம் பெரிய வரலாறும் அதற்கு ஆதாரமும் வேண்டிக்கிடக்கின்றது? (ஆர்.கே.செல்வமணி என்ற மிகப்பெரும் அறிவாளி டைரக்டர் புதியதலைமுறை விவாதத்தில் ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு இப்படி சொன்னார்: ‘என் நண்பர் யார் தெரியுமா, அ.செ.இப்ராஹிம் ராவுத்தர்!’. அதாவது இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கு பெரீய்ய்ய உதாரணமாம்! இப்படிப்பட்ட அறிவாளிகள்தான் உங்களோடு இருக்கும் தமிழ்ச்சினிமா இயக்குனர்களாம்!)

4) தீவிரவாதிகளை அழித்துவிட்டால் தீவிரவாதம் ஒழிந்துவிடும்’ என்ற உங்களது உயரிய அறிவார்ந்த’ தத்துவத்தை ஏற்றுக்கொள்ளலாமாஅதுவும் அமெரிக்காவும் ஆர் எஸ் எஸ்-பாஜகவும் சொல்கின்ற இஸ்லாமிய தீவிரவாதம்’ குறித்து மட்டும்தான் நீங்கள் மீண்டும் மீண்டும் பேசுவீர்களாஅப்படியெனில் ‘இந்துதீவிரவாதிகளை ஒழித்துவிட்டால் இந்து தீவிரவாதம் ஒழிந்துவிடும்’ என்ற ஃபார்முலாவை நீங்கள் முன்வைப்பீர்களா? மெக்கா மசூதிமாலேஹாவ்ன்சம்ஜௌதா ரயில் போன்ற வெடிகுண்டு சம்பவங்களில் ஈடுபட்ட இந்துதீவிரவாத அமைப்புக்கள் குறித்து நீங்கள் பேச வேண்டும்தென்காசி ஆர் எஸ் எஸ் அலுவலகத்தில் இஸ்லாமியர்கள் அணியும் தொப்பிகள்பொய் (ஒட்டு) தாடிகள் ஆகியவை காவல்துறையால் கண்டுபிடிக்கப்பட்ட்து குறித்தும், ஆர் எஸ் எஸ் அலுவலகத்தில் இஸ்லாமியர்கள் அணியும் தொப்பிகள்பொய் (ஒட்டு) தாடிகளுக்கு என்ன வேலை என்பது குறித்தும் நீங்கள் படம் எடுக்க வேண்டும். புனாவில் உள்ள கோபால் கோட்சேவின் வீட்டில் நாதுராம் கோட்சேயின் சாம்பல் இப்போதும் கரைக்கப்படாமல் கலயத்தில் பாதுகாக்கப்பட்டு வருவது ஏன் என்பது குறித்து நீங்கள் படம் எடுக்க வேண்டும்.

5
நீங்கள் பெரிய படிப்பாளி, படைப்பாளி. காந்தஹார்மசூத் அசார்முல்லா ஒமர்பின்லேடன் குறித்தெல்லாம் படம் எடுக்கும் நீங்கள், தமிழ்நாட்டுக்குள்ளேயே தாமிரபரணி தமிழர் படுகொலைஉத்தப்புரத்தில் தீண்டாமை சுவர் கட்டியது-அதை இடித்ததுஒரு மாசத்துக்கு முன் தர்மபுரியில் இந்து மதத்தை சார்ந்த வன்னியர்கள் அதே இந்து மதத்தை சார்ந்த தலித் மக்களின் வீடுகளை தீ வைத்து கொளுத்தியதுமுப்பது மைல் தொலைவில் உள்ள இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்களை ராஜபக்சே ராணுவம் படுகொலை செய்தது போன்றவையும் வரலாற்று நிகழ்வுகள்தான், நீங்கள் இவற்றையும் திரைப்படமாக எடுக்க வேண்டும். உங்கள் சொந்த ஊரான பரமக்குடியில் தேவர் சாதி மக்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் இடையே என்ன பிரச்னை என்பது குறித்தும், தேவர் குருபூஜை என்றால் துப்பாக்கியோடு காவல்காக்கும் தமிழக அரசு இம்மானுவேல் சேகரன் குருபூஜை என்று சொன்னாலே துப்பாக்கி சூடு நடத்துவது ஏன் என்பது குறித்தும் திரைப்படமாக எடுக்க வேண்டும். தேவைப்படும் எனில் இந்த நிகழ்வுகள் குறித்து உங்களுக்கு வரலாற்று ஆதாரங்களை கொடுத்து உதவ நான் தயார்.

6
நீங்கள் பெரிய படிப்பாளி, படைப்பாளி. காந்தஹார்மசூத் அசார்முல்லா ஒமர்பின்லேடன் குறித்தெல்லாம் படம் எடுக்கும் நீங்கள், ‘ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக நாங்கள் சொன்னது பொய்’ என்று அமெரிக்கா சொன்னதையும்அப்படியானால் அமெரிக்கா அங்கே படையெடுத்து சதாம் உசேன் உட்பட பல லட்சம் மக்களை படுகொலைகள் செய்தது புல் புடுங்கவா என்பதையும் படமாக எடுக்க வேண்டும். படைப்பாளியான உங்களுக்கு நானோ பிறரோ கட்டளை போட முடியாதுஉங்களை நான் வேண்டிக் கொள்ளலாம், அவ்வளவே.

7)இறுதியாக: விஸ்வரூபம் நான் இன்னும் பார்க்கவில்லை, எனவே கருத்து சொல்லவில்லை. விஸ்வரூபம் திரைக்கு வர வேண்டும் என்பதே என் ஆசை. கமலஹாசன் யார் என்பதை இஸ்லாமிய சமூகம் மட்டுமல்ல, தமிழ்ச்சமூகம் மொத்தமும் புரிந்துகொள்ள வேண்டும் அல்லவா?

வியாழன், ஜனவரி 10, 2013

’மாவோ நூல்கள்’ மொழிபெயர்ப்புக்கு ஆனந்தவிகடன் விருது 2012

                                                                                    


அன்புத்தோழர்களே!

அலைகள்-விடியல் வெளியீட்டகங்கள் இணைந்து 2012 செப்டம்பரில் வெளியிட்ட ‘மாவோ தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புக்க’ளை (9         தொகுதிகள்) ஆனந்தவிகடன் 2012ஆம் 
ஆண்டின் 

சிறந்த மொழிபெயர்ப்பு
 நூலாக தேர்ந்தெடுத்துள்ளது. தொகுதிகள் 5, 9 ஆகியவற்றை நான் மொழிபெயர்த்துள்ளேன் என்ற மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். ஆனந்தவிகடனுக்கு நன்றி! மொழிபெயர்க்கும் வாய்ப்பை அளித்த அலைகள் சிவம் அவர்களுக்கும் நன்றி!


பிற தொகுதிகளை மொழிபெயர்த்த தோழர்கள் மயிலை பாலு, நிழல்வண்ணன், வான்முகிலன்,பாஸ்கர், பாலன், மணிவாசகம், தங்கப்பாண்டியன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்!


வாழ்த்துகின்ற தோழர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல....!

செவ்வாய், ஜனவரி 01, 2013

தானாய் எல்லாம் மாறும் என்பது...



இதோ 2012ஆம் ஆண்டு பின்னால் சென்று பழைய வருடமாகிவிட்டது!
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என வாழ்த்தவே மனம் நாடுகின்றது தோழரே!
நடப்பது கண்டால்...?
ஆதலினால் காதல் செய்வோம்...என்றொருவன் சாதியப்பெருநோய்க்கு  மருத்துவம் பார்த்த இந்த மண்ணில்தான் காதலை காமத்தோடு முடிச்சுப்போட்டு அன்பெனும் உறுப்பை மனித மனங்களில் இருந்து சாதீயக்கட்டாரி கொண்டு அறுத்துப்போடும் நவீன மருத்துவர்கள் நெஞ்சு நிமிர்த்தி ஊர்வலம் வருகின்றார்கள்.
இயற்கை மனிதருக்குள் பருவத்தே முகிழ்த்து மலர்விக்கும் ஆண்பெண் உறவுத்தோட்டத்தில் புகுந்துவிடும் காடுவெட்டிகள் சாதீயத்தீவட்டியை எரிந்து தோட்டம் சாம்பலாவதை கிட்ட நின்று பார்த்து கைகொட்டி சிரிக்கின்றார்கள்.
அண்ணாவுக்கு பொடிவாங்கிக்கொடுத்த, பெரியாருக்கு தடி எடுத்துக்கொடுத்த திராவிடத்தளபதிகள் தலித்துக்களின் வீடுகள் பற்றி எரியும்போது ஒரு மயிரைக்கூட உதிர்க்க ஆயிரம் யோசனை செய்கின்றார்கள்.
அண்ணாவுக்கும் பெரியாருக்கும் அன்றாடம் ஆயிரம் நாமம் சாத்தும் பார்ப்பனத்தலைவிகளின் காவல்துறை, தேவர் குருபூஜை எனில் கைகட்டி சேவகம் செய்கின்றது, தர்மபுரியில் தலித் வீடு பற்றிஎரியும்போதோ  கைகட்டி வேடிக்கை பார்க்கின்றது. வெண்மணியிலும் வாச்சாத்தியிலும் மாஞ்சோலையிலும் தர்மபுரியிலும் கயர்லாஞ்சியிலும், இதோ, டெல்லியிலும் காவல்துறை ஒரே மாதிரித்தான் இருக்கின்றது! செப்புமொழி பதினெட்டு, எனினும் காவல்துறைக்கு சிந்தனை ஒன்றுதான்!
தேசத்தையும் நதிகளையும் மாதா என்று கொண்டாடும் தேசத்தின் தலைநகரில் 23 வயதுப்பெண்ணொருத்தி சக நண்பனுடன் பயணித்தால் உடலோடு உள்ளமும் சிதைக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்குப் பிறகு பிணமாகின்றாள். அவள் சிதைக்கப்பட்ட அப்பேருந்து ஐந்து காவல்துறை சோதனை பாயிண்டுக்களை தாண்டி பயணித்ததாம், ஆனால் குறைந்தபட்சம் ஒரே ஒரு பாயிண்டில்கூட எந்த ஒரு போலீஸ்காரனுக்கும் அப்பேருந்து குறித்து சிறு சந்தேகமும் வரவில்லையாம், பேருந்து தடையின்றி பயணித்ததாம்! புரோகிதர்கள் மந்திரம் சொல்ல தேங்காய் உடைக்கப்பட்டு ஏவப்பட்ட பல பத்து செயற்கைக்கோள்களில் ஒன்று கூடவா இந்தப் பேருந்தைக் காட்டிக்கொடுக்கவில்லை?! பாரத் மாதா கீ ஜே! இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட உறவினர் எண்ணிக்கை நூறாம், போலீசின் எண்ணிக்கையோ ஆயிரமாம்! உடன் பயணித்த நண்பன் குறித்த தகவல் தெரிவிப்போருக்கு பாரத்ரத்னா விருது நிச்சயம், முயற்சி செய்யுங்களேன்!
மனிதன் உயிர்வாழும் பொருட்டுத்தேவையான அத்தனை உறுப்புக்களுடன் பிறந்தாலும் ரேசன்கார்டு இல்லாத மனிதன் இந்தியாவில் நாயினும் கேடானவன்! புழுவிலும் கீழானவன்! நேற்று வரை அப்படித்தான்! இதோ, வேட்டிகட்டிய தமிழர்களும் டர்பன் கட்டிய பஞ்சாபிகளும் சேர்ந்து (இன,மத,மொழி,நிற,மாநில,கட்சி வேறுபாடு எள்ளளவும் இன்றி செம்புலப்பெயல் நீர் போல நெஞ்சம்தான் கலந்து ஒற்றுமையுடன்)இந்த இழிநிலையை மாற்றிவிட்டார்கள்! கோட்டும் டையும் கட்டிய வெள்ளைக்காரனுக்கு மலம் கழுவ வரிசையில் வெள்ளிச்சொம்புடன் காத்து நிற்கின்றார்கள்! மலம் கழுவ சில நிபந்தனைகள் உண்டு: ரேசன்கார்டை ஒழித்துக்கட்டு; காஸ் சிலிண்டருக்கு மானியத்தை ஒழி; மாதம் ஒருமுறை பெட்ரோல் டீசல் விலை உயர்த்து; தெருவோரக்கடைகளில் அல்லது தெருவில் கூவி விற்கும் இந்த மண்ணின் மக்களான சில்லரை வியாபாரிகளை குரல்வளை நெரித்துக்கொல், வால்மார்ட்டை உள்ளே விடு; மக்கள்சொத்தான வங்கிகள் இன்சூரன்ஸ் நிறுவனங்களை இணைப்பு என்ற பெயரில் ஒழித்துக்கட்டு, அமெரிக்கப் பெருமுதலாளிகளுக்கு ‘அதில் பங்குஎன்ற பெயரில் விற்றுவிடு....
2012இன் இறுதிஅல்ல மேலே சொன்னவை; சாதீயம் ஈராயிரம் வருட இழிவின் எச்சமெனில் உலகமயமும் தாராளமயமும் தனியார்மயமும்  நூறு வருடங்களுக்கும் மேற்பட்ட முதலாளித்துவத்தின் உச்சம்; இதில் எதுவும் மனிதன் நிம்மதியாய் வாழ ஒரு  மயிரைக்கூட கடந்தகாலத்தில் உதிர்த்ததில்லை, உதிர்க்கப்போவதும் இல்லை!
இந்த இழிவெனும் எச்சங்களும் உச்சங்களும், அவற்றின் காரணகர்த்தாக்களும் எடுபிடிகளும் ஒழியும் நாளே நமக்கும் நம் குடும்பத்தாருக்கும் இந்த நாட்டுக்கும் மகிழ்வையும் அன்பையும் நலத்தையும் கொண்டுவந்து சேர்க்கும் திருநாளாம்! தானாய் ஒழியாது எதுவும்! இவற்றை மாற்றும் படைதனில் நாமாய் முன்வந்து இணைந்தால் அன்றி சாத்தியமில்லை எதுவும்! தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா....
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

வியாழன், நவம்பர் 22, 2012

தலைவர்களும் தலைவர்களாகிய தாதாக்களும்







1)காந்தியடிகள் கொலை வழக்கில் கோட்சேயுடன் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் விநாயக் தாமோதர் சவர்க்கார். இவர் வலதுசாரி இந்துத்வா தீவிரவாத அமைப்பான ஆர் எஸ் எஸ்-இன் தத்துவ ஆசான்களில் ஒருவர் என்றறியப்படுபவர். ஹிட்லரின் ஆரிய இனமே உயர்ந்த இனம்என்ற கோட்பாட்டை அப்படியே தனது தத்துவமாக ஏற்றுக்கொண்ட அமைப்பு ஆர் எஸ் எஸ். பிற்பாடு போதிய ஆதாரங்கள் இல்லை என்ற காரணத்தால் அக்குற்றச்சாட்டில் இருந்து நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர். காந்தியடிகளை கொன்றவன் ஒரு முஸ்லிம் என்று செய்தி பரப்பப்பட்டால்  இந்தியாவில் மிகப்பெரும் மதக்கலவரம் வரும் என்று ஆசைப்பட்ட ஆர் எஸ் எஸ், நாதுராம் கோட்சே என்ற மராட்டிய பிராமணனுக்கு முஸ்லிம் மக்கள் செய்யும் மதச்சடங்கான ‘சுன்னத்என்ற ஆண் குறித்தோலை நீக்கும் சடங்கை செய்து, அவனது கையில் இஸ்மாயில் என்ற பெயரை பச்சை குத்தியது. இந்த சதிவேலை அனைத்திலும் மேற்படி ஏழு பேரும் ஈடுபட்டார்கள். 2002ஆம் ஆண்டு பாரதீய ஜனதா கூட்டணி அரசு தனது ‘மதச்சார்பின்மையை உலகத்துக்கு முரசறிந்து அறிவிக்கும் வண்ணம் இஸ்லாமியரான அப்துல் கலாம் அவர்களை குடியரசுத்தலைவராக ஆக்கியது. அன்று பிரதமர் அடல்பிஹாரி வாஜபேயி. மேற்படி சவர்க்காரின் உருவப்படத்தை நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இஸ்லாமியர் ஆன அப்துல்கலாமை வைத்து திறந்து வைத்து சாகசம் செய்து மதச்சார்பிமைக்கோட்பாட்டை நேசிக்கும் அனைவரையும் கேலி செய்தது பாஜக அரசு. அதே நாடாளுமன்றத்தின் முன்னால் இவர்களால் கொல்லப்பட்ட காந்தியடிகளின் சிலை இப்போதும் மவுனமாக இருக்கின்றது.

2)ரெய்சினா குன்று என்றறியப்படும் குடியரசுத்தலைவர் மாளிகையில் 1997இல் குடியேறிய முதல் தலித் குடிமகன் கே ஆர் நாராயணன். அன்றும் பிரதமர் வாஜபேயி. அதே சவர்க்காருக்கு பாரத்ரத்னா விருது வழங்க சிபாரிசு செய்து அவ்வாறே முடிவு செய்யுமாறு வேண்டி குடியரசுத்தலைவரான நாராயணனுக்கு கடிதம் எழுதுகின்றார். நாராயணன் அவர்களோ தனது பதவிக்காலம் முழுவதும் இந்தக்கடிதத்தை கண்டுகொள்ளவே இல்லை. அப்போது தொலைத்தொடர்பு மந்திரியாக இருந்த பிரமோத் மஹாஜன் இப்படிக்கூறினார்: ‘பாட்டுப்படுபவர்களுக்கும் நாட்டியம் ஆடுபவர்களுக்கும் பாரத்ரத்னா வழங்கும்போது சவர்க்காருக்கு வழங்கினால் என்ன கெட்டுப்போகும்?’. அன்று 10 காங்கிரஸ் எம்.பி.க்களும் சில பாரதீய ஜனதா முதலமைச்சர்களும் மத்திய மந்திரிகள் சிலரும் ‘உழைப்பால் உயர்ந்த உத்தமர்ஆன திருபாய் அம்பானிக்கு பாரத்ரத்னா வழங்க ஒத்தைக்காலில் நின்று தவம் செய்தனர் என்பது கூடுதல் தகவல். அம்பானிகள் வீசும் சில்லறைகளைப் பொறுக்க இவர்களுக்குள் கட்சி வித்தியாசம் என்றுமே வந்ததில்லை, அத்தனை ஒற்றுமை. (சமீபத்தில் ரிலையன்சை நிம்மதியா தொழில் நடத்த வுடுங்கப்பாஎன பத்திரிக்கையாளர்கள் மீது எரிந்து விழுந்த மந்திரி வீரப்பமொய்லி உங்கள் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பா?)

3)சமீபத்தில் மரணம் அடைந்த பம்பாயின் தாதாவான பால்தாக்கரே, இவரும் ஹிட்லர்,முசோலினி கொள்கைகளை தனது தத்துவமாக வரித்துக்கொண்டவர். சிவசேனா என்ற வலதுசாரி இந்துத்துவா தீவிரவாத அமைப்பின் நிறுவனர். இந்தியாவின் இளைஞர்களுக்கு இந்த தத்துவங்களே பொருத்தம் என்று உபதேசம் செய்தவர். பம்பாயின் இடதுசாரி  தொழிற்சங்கத்தலைவர்கள், இஸ்லாமியர்கள், பிற மாநிலத்தவர்கள் போன்றோரை இவர் விரல் அசைத்தால் இவரது சீடர்கள் கொலை செய்வார்கள். உலகின் ஆகப்பெரும் ஜனநாயக தேஷம், மதச்சார்பின்மைக்கோட்பாட்டுக்கும் கருத்துரிமை பேச்சு சுதந்திரம் ஆகியவற்றுக்கும் ஒண்ணாம் நம்பர் உதாரணம் வேணுமா? இந்தியாவுக்கு வாங்க என்று பீத்திக்கொள்ளும் இத்தேசத்தில் தாக்கரே மீது இதுவரை ஒரு துரும்பைக்கூட தூக்கிப்போட்டது இல்லை இந்தியாவின், மராட்டிய அரசுகளின் போலீசும் ராணுவமும்.

4)உச்சநீதி மன்ற முன்னாள் நீதிபதியும், இந்திய பத்திரிக்கை கவுன்சிலின் தற்போதைய தலைவருமான மார்க்கண்டேய் கட்ஜு நவம்பர் 19 தி இந்து நாளிதழில் ‘Why I can’t pay tribute to Thackeray’ (நான் தாக்கரேக்கு இரங்கல் தெரிவிக்க மாட்டேன் – காரணம் என்ன?) என்ற கட்டுரையை எழுதியுள்ளார். அதன் சாரம் வருமாறு:

அரசியல் சட்ட்த்தின் 19(1)(இ) பிரிவு ‘இந்தியாவின் எந்த ஒரு இடத்திலும் குடியிருக்கவும் நிரந்தரமாக வாழவும் இந்தியக்குடிமக்கள் அனைவருக்கும் உரிமை உண்டுஎன அறிவிக்கின்றது. ஆனால் தாக்கரேயின் மண்ணின் மைந்தர் கொள்கை, மஹாராஷ்ட்ராவில் குடியேறிய குஜராத்திகள்,தென்னிந்தியர்கள்,பிஹாரிகள்,உ.பி.யினர் உள்ளிட்ட பிற மாநிலத்தவருக்கு எதிரானது. இது அரசியல் சட்டத்துக்கு எதிரானது. பால்தாக்கரேயால் நிறுவப்பட்ட சிவசேனை அமைப்பினர் 1960,70களில் பம்பாயில் குடியேறி வணிகம் செய்து கொண்டிருந்த தென்னிந்தியர்களை அடித்து நொறுக்கினார்கள், அவர்களது வீடுகளையும் ஓட்டல்களையும் அழித்தார்கள். (பால், செய்தித்தாள் விற்போராக, டாக்சி ஓட்டுனர்களாக பிழைப்பு நடத்திய) பிஹாரிகளையும் உ.பி.யினரையும் அடித்து அவர்களது சொத்துக்களையும் அழித்தார்கள். இஸ்லாமியர்களை தாக்கினார்கள்.

இந்தியா பொதுவாக ஒரு குடியேறியவர்களின் நாடுதான் (வட அமெரிக்காவைப்போல); இன்று இந்தியாவில் வாழ்கின்ற மக்களில் 92-93 விழுக்காட்டினர் இந்நாட்டின் பூர்விக குடிகள் அல்லர், அவர்கள் இந்தியாவின் வடமேற்கு வாயிலாக இந்நாட்டில் நுழைந்து  குடியேறியவர்களின் வாரிசுகள் (‘What is India?’ என்ற எனது கட்டுரையை எனது தளமான justicekatju.blogspot.in-இல் காண்க).  இந்நாட்டின் பூர்விக மக்கள் ஆதி திராவிடர்களே, இவர்களை நாம் ஆதிவாசிகள் என்று சொல்கின்றோம் (பில்,கோண்டு,சண்டாளர்,தோடர்கள் முதலியோர்), இவர்களின் ஜனத்தொகை இன்று 7-8 விழுக்காடு மட்டுமே. ஆக தாக்கரேயின் மண்ணின்மைந்தர் கொள்கை தீவிரமாக அமலாக்கப்படும் எனில் (தாக்கரேயின் குடும்பம் உட்பட) 92-93 விழுக்காடு மராட்டியர்களை அந்நியர்கள் என்றுதான் சொல்லவேண்டும், அவர்களை அந்நியர்களாகவே நட்த்த வேண்டியிருக்கும். ஏனெனில் மஹாராஷ்ட்ராவின் உண்மையான மண்ணின்மைந்தர்கள் 7-8 விழுக்காடே இருக்கின்ற பில்லுகளும் பிற பழங்குடியினரும்தான்.

இன்று இத்தேசத்தில் மிகப்பல பிரிவினைவாத சக்திகளும்  (மண்ணின்மைந்தர் கோட்பாடு போன்றவற்றை பேசுகின்ற) பிளவு சக்திகளும் இயங்கி வருகின்றன. தேசப்பற்றுள்ள யாவரும் இச்சக்திகளை எதிர்த்துப்போராட வேண்டும்.
நாம் ஏன் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்? ஒரு மிகப்பரந்த நவீன தொழில்மயத்தால் மட்டுமே இத்தேச மக்களின் நலனுக்காக ஆகப்பெரும் வளத்தை உருவாக்க முடியும், விவசாயத்தால் மட்டுமே இதை சாதிக்க முடியாது.  நவீன தொழில்மயத்துக்கு இன்று தேவைப்படுவது மிகப்பரந்த சந்தை. ஒன்றுபட்ட இந்தியாவால் மட்டுமே இத்தகைய ஒரு பரந்த சந்தையை தர முடியும், அதனால் மட்டுமே வறுமையை, வேலையின்மையை, இன்ன பிற சமூக அவலங்களை ஒழிக்க முடியும்; மிகவும் வளர்ந்த நாடுகளின் வரிசையில் இத்தேசமும் நிற்க வேண்டும் எனில் மக்களுக்கான பரந்த சுகாதார வசதிகளையும் கல்வி வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும், பரந்த நவீன தொழில்மயத்தால் மட்டுமே அது சாத்தியப்படும்.
இத்தகைய காரணங்களால் திரு.பால் தாக்கரேக்கு என்னால் இரங்கல் தெரிவிக்க முடியாது.
5) மஹாராஷ்ட்ர மாநிலத்தின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் அசோக் தாவாலே விடுத்துள்ள அறிக்கையின் சுருக்கம்: சிவசேனா, அதிலிருந்து உருவான மஹாராஸ்ட்ரா நவனிர்மாண் சேனா இரண்டுமே வன்முறைக்கலாச்சாரத்தையும் பிராந்திய வெறியையும் தூண்டுவன;  சி.பி.ஐ.எம் இவற்றை உறுதியாக எதிர்க்கின்றது...சிவசேனாவின் கொள்கையானது மதச்சார்பானது; பாபர் மசூதி இடிப்பை தாக்கரே ஆதரித்தார், அதன் பின் நடந்த மும்பை கலவரங்களிலும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளிலும் சிவசேனை, தாக்கரே ஆகியோரின் பங்கு இருந்ததை ஸ்ரீகிருஸ்ணா கமிசன் தெளிவாக எடுத்துச்சொல்லியது...சிவசேனையின் கொள்கைகள் தொழிலாளி வர்க்கத்துக்கும் கம்யூனிஸ்டுக்களுக்கும் எதிரானது. தொழிற்சங்கதலைவர்கள், அலுவலகங்கள் சிவசேனையினரால் தொடர்ந்து தாக்கப்பட்டனர்...1970இல் கம்யூனிஸ்ட் எம் எல் ஏ தோழர் க்ருஷ்ண தேசாய் சிவசேனையினரால் கொலை செய்யப்பட்டார் என்பது உச்சகட்டம்...சிவசேனையின் அரசியல் தலித்துக்களுக்கு எதிரானது...1970இல் தலித் பாந்தர் இயக்கத்தின் தலைவரான பகவத் ஜாதவை சிவசேனையினர் கொன்றனர்...சிவசேனை-பாஜக கூட்டணி அரசு ரமாபாய் அம்பேத்கர் நகரில் நடத்திய துப்பாக்கிசூட்டில் 11 தலித்துக்கள் உயிர் இழந்தனர்...சிவசேனை ஜனநாயகக் கோட்பாட்டுக்கு எதிரானது, சர்வாதிகாரத்தை ஆதரிக்கின்றது. காங்கிரஸின் எமெர்ஜன்சியை பால்தாக்ரே ஆதரித்தார் என்பது வரலாறு; ஹிட்லரின் புகழ் பாடுபவர் அவர்...சிவசேனையை விமர்சிக்கின்ற பத்திரிக்கையாளர்கள்,இலக்கிய கலாச்சாரவாதிகள் மீது அவர்கள் எப்போதும் தாக்குதல் நடத்திக்கொண்டே இருக்கின்றார்கள்...சிவசேனையின் மதவெறி,சாதீய,தொழிலாளர் வர்க்கவிரோத கலகக்கொள்கைகளை சிபிஐ எம் எப்போதும் எதிர்த்து நிற்கும்”.

6)இப்போதைய குடியரசுத்தலைவரான பிரணாப் முகர்ஜி பால் தாக்கரேயின் மறைவுக்கு இப்படி இரங்கல் தெரிவித்துள்ளார்: ‘தாக்கரேயின் மறைவு மஹாராஷ்ட்ரா மக்களுக்கும் இந்திய மக்களுக்கும் இழப்பாகும். இத்தேசத்தின் சாமானியக்குடிமகனின் நலனுக்கு உழைத்த ஒரு மூத்த தலைவரை இத்தேசம் இழந்துள்ளது.
7)பால் தாக்கரேயின் சடலம் தீயூட்டப்பட்ட இடமான சிவாஜி பூங்காவை  தாக்கரே நினைவிடமாக கட்ட வேண்டும் என இப்போது சிவசேனா குரல் எழுப்புகின்றது.  சிவாஜி பூங்கா என்பது ஒரு பொதுமக்களின் விளையாட்டுத்திடல். இத்திடலின் நலனில் அக்கறையுள்ள சுற்றுச்சூழல் நலம்விரும்பிகளின் அமைப்பு இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மாநில அமைச்சரான பாஸ்கர் ஜாதவ் என்பவர் அரசு இதற்கு அனுமதி தரும் என்றும் சொல்லியுள்ளார். ஏற்கனவே இத்திடலின் ஒரு வாசலில் தாக்கரேயின் மனைவி உருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மைய மண்டபத்தில் சவர்க்காரின் உருவப்படத்தை இத்தேசத்தின் குடியரசுத்தலைவர் திறந்து வைப்பார் எனில், சிவாஜி பூங்காவில் மட்டும் அல்ல, நாடாளுமன்றத்தின் முன்னுள்ள காந்தியடிகளின் சிலையின் இருபுறமும் கோட்சே, பால் தாக்கரே இருவர் சிலைகளும் நிறுவப்படக்கூடும். அச்சிலைகளை இத்தேசத்தின் மிக உயர்ந்த பதவிகளில் இருப்பவர்கள் திறந்து வைக்கவும் கூடும்.     

  

சனி, அக்டோபர் 13, 2012

பாகிஸ்தான் செல்லும் ரயில் (இறுதிப்பாகம்)


பாகிஸ்தானுக்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்குது? நாங்க இங்கதான் பிறந்தோம். எங்க முன்னோர்களும் இங்கதான் பிறந்தாங்க. அண்ணன் தம்பிகளா உங்களோடதான் வாழ்க்கை நடத்திக்கிட்டு இருக்கோம்.உடைந்து அழுதார். மீட்சிங் இமாமை அணைத்துக்கொண்டு அழத் தொடங்கினார். கூட்டத்தில் பெரும்பாலோர் கண்ணீர்விடத் தொடங்கினார்கள். மூக்கைச் சிந்தினார்கள்.

கிராமத்தலைவர் பேசினார். ஆமாமா, நீங்க எங்களோட சகோதரர்கள்தான். எங்களைப் பொறுத்த மட்டில், நீங்க, உங்களோட குழந்தைகள், பேரப்பிள்ளைங்க எல்லோரும் இந்தக் கிராமத்துலேயே எத்தனைகாலத்துக்கு வேண்டுமானாலும் இருங்க. உங்களையோ உங்க மனைவிமாரையோ பிள்ளைகளையோ யாராவது திட்டினாங்கன்னா, உங்க தலையிலிருந்து ஒருமுடி உதிர்றதுக்கு முன்னாலே நாங்களும் எங்க மனைவிமாரும் பிள்ளைகளும் உயிரை விடுவோம். ஆனால், மாமா... நாங்க எண்ணிக்கையிலே ரொம்பக் குறைவு. பாகிஸ்தானிலிருந்து அகதிகள் ஆயிரக்கணக்குலே வந்துக்கிட்டே இருக்கறாங்களே, அவங்களாலே ஏதாச்சும் ஆச்சுன்னா யார் பொறுப்பு?”

ஆமாமா, எங்களுக்கு ஒண்ணுமில்லே. ஆனா அகதிகளால ஏதாச்சும் ஆச்சுதுன்னா?” மற்றவர்கள்.

துப்பாக்கி ஈட்டிகளோட ஆயிரக்கணக்கான பேர் பல கிராமங்களை முற்றுகையிட்டுட்டதாக நாங்க கேள்விப்பட்டோம். எதிர்ப்புங்கற பேச்சுக்கே இடமில்லே.

கும்பலைப் பார்த்துப் பயப்படறோம் இல்லே? வரட்டும் பார்க்கலாம். நாம் குடுக்கற அடி, மறுபடி அவங்க மனோமஜ்ராவைத் திரும்பிக்கூடப் பார்க்கக்கூடாதுஎன்றது ஒரு குரல். இந்த சவாலுக்கு எந்த பிரதிபலிப்பும் இல்லை, ஒரு வெற்றுச்சவாலாக இருந்தது. இமாம் மீண்டும் மூக்கைச் சிந்தினார். சகோதரர்களே, நாங்க என்ன செய்யணும்னு சொல்லுங்கபொங்கி வரும் உணர்ச்சியோடு கேட்டார்.

கிராமத்தலைவர் கனத்த குரலில் கூறினார். மாமா, சொல்றதுக்கு கஷ்டமாகத்தான் இருக்கு. ஆனா இப்ப இருக்கற சூழ்நிலையிலே நீங்க எல்லாரும் அகதி முகாமுக்குப் போறதுதான் நல்லதுன்னு நான் சொல்வேன். உங்க சொத்துபத்தெல்லாம் வீட்டுலே வச்சுப் பூட்டிட்டுப் போங்க. உங்க ஆடுமாடுகளையெல்லாம் நீங்க திரும்பி வர்றவரைக்கும் நாங்க பார்த்துக்கிறோம்.... இதுக்குப் பிறகும் நீங்க இங்கேயே இருக்கணும்னு விரும்பினீங்கன்னா, நாங்க அதை வரவேற்கிறோம். எங்க உயிரைக்கொடுத்தாவது உங்களைக் காப்பாத்துவோம்.

இமாம் எழுந்தார். ஆகட்டும், நாங்க போய்த்தான் ஆகணும்னா, எங்க சொத்து, பாய்படுக்கையெல்லாம் கட்டி எடுத்துக்கிட்டுப் போறோம். எங்க அப்பாக்களும் தாத்தாக்களும் பல நூறு வருசங்களா உருவாக்கிய இந்த மண்ணை விட்டுட்டு நாங்க போறதுக்கு எங்களுக்கு ஒருநாள் ராத்திரியாவது வேணுமல்லவா?”

கிராமத்தலைவர் அதிகபட்சக் குற்றவுணர்வுக்கு ஆளாகி உணர்ச்சிக் கொந்தளிப்பில் தத்தளித்தார். தனது இடத்திலிருந்து எழுந்து இமாம் பக்ஷைக் கட்டித் தழுவி வாய்விட்டு அழத்தொடங்கினார். அந்தக் கிராமத்தின் சீக்கியர்களும் முஸ்லிம்களும் ஒருவர் தோளில் ஒருவர் சாய்ந்து குழந்தைகளைப் போல் அழுதார்கள். கிராமத் தலைவரின் தோளிலிருந்து தன்னை மெதுவாக விடுவித்துக் கொண்ட இமாம் பக்ஷ், “அழுவதற்கு அவசியமில்லைஎன்று விம்மியவாறே கூறினார்.


உலகம் இவ்வளவுதான்
மணம் கமழும் பந்தல் கொடியில்
புல்புல் பறவையின் பாடல் நிரந்தரமல்ல
இளவேனிற் காலமும் நின்று நிலைப்பதில்லை
பூக்களும் நிரந்தரமாய் பூத்திருப்பதில்லை
மகிழ்ச்சியும் நிலைத்து நீடிப்பதில்லை
இன்பம் பொங்கும் நாட்களிலும் கூட 
சூரியன் நிலைத்து நிற்பதில்லை, மறையவே செய்வான்
நட்பும் நிரந்தரமாய் நிலைப்பதில்லை
யார் இவற்றை அறியாதவரோ
அவர் வாழ்க்கையை அறியாதவராவார்.” 


(முற்றும்)

(புகைப்படத்தில் குஷ்வந்த் சிங். (இப்போது  பாகிஸ்தானில் உள்ள ) பஞ்சாபின் ஹதாலி மாவட்டத்தில் சர்கோதா என்னும் ஊரில் பிறந்தவர். பிறப்பு 1915, பிப்ரவரி 2.  அவரது தந்தை சர் சோபா சிங் அன்றைய காலத்தில் டெல்லியில் கட்டிடக்கலை வல்லுனராக புகழ் பெற்றவர், வெள்ளையர் காலத்திய டெல்லியில் பல அழகுமிகு கட்டிடங்களை கட்டியவர். குஷ்வந்த் சிங் லாஹூர், டெல்லி,லண்டன் நகரங்களில் படித்தவர். சட்டப்படிப்பில் பார்-அட்-லா படித்தவர். அவரது நாவல்கள்,சிறுகதை தொகுப்புக்கள் முப்பதுக்கும் மேல் இருக்கலாம். சமூகம், மதம், அரசியல், பாலியல்  சார்ந்த தனது கருத்துக்களை வெளிப்படையாக பேசுவது இவரது வழக்கம்)

திங்கள், அக்டோபர் 08, 2012

பாகிஸ்தான் செல்லும் ரயில் - 3 (குஷ்வந்த் சிங்)


அது என்ன நாற்றம் என்று யாரும் யாரையும் கேட்கவில்லை. அவர்களுக்குத் தெரியும் அது என்னவென்று. அவர்களின் கடந்த காலம் அதை அவர்களுக்குச் சொல்லியிருந்தது. அந்த ரயில் பாகிஸ்தானிலிருந்து வந்தது என்பதே அவர்களின் கேள்விகளுக்குத் தகுந்த பதிலாக இருந்தது.


மனோமஜ்ரா நினைவு தெரிந்த நாளிலிருந்து முதன்முதலாக அன்றுதான் இமாம் பக்ஷின் குரல் (மசூதியிலிருந்து) வானத்தைத் தொட்டு அல்லாவின் புகழை உரக்கக் கூவுவதற்காக மேலெழும்பவில்லை.



*******************************************



ஹெட்கான்ஸ்டபிளின் வருகை, வெண்ணெயில் கத்தி இறங்குவதைப் போல் மனோமஜ்ராவை இரண்டாகப் பிளந்துவிட்டது. முஸ்லிம்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே இருந்து துக்கத்தில் ஆழ்ந்தார்கள். பாடியாலாவிலும் அம்பாலாவிலும் கபுர்தலாவிலும் சீக்கியர்கள் முஸ்லிம்களைத் தாக்கிக் கொடுமைப்படுத்தியதாகக் கூறப்பட்ட வதந்திகள் முன்பு பரவியதும், ஆனால் தாங்கள் அதைப் பொருட்படுத்தாததும் மீண்டும் நினைவில் ஓடின. முக்காடு விலக்கப்பட்ட தங்கள் பெண்கள், நிர்வாணப்படுத்தப்பட்டு ஆள் நடமாட்டமிக்க வீதிகளில் ஊர்வலமாகத் துரத்தப்பட்டு மார்க்கெட் பகுதியில் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டதாக கேள்விப்பட்டிருந்தார்கள். தாங்கள் சூறையாடப்படுவதற்கு முன்பாகவே பலர் தங்களை மாய்த்துக் கொண்டார்களாம். பன்றிகளைக் கொண்டுவந்து வெட்டியெறிந்து மசூதிகளை அசுத்தம் செய்ததாகவும், புனித குர்-ஆனை எதிரிகள் கிழித்து எரிந்ததாகவும் கேள்விப்பட்டிருந்தார்கள். மனோமஜ்ராவின் ஒவ்வொரு சீக்கியரும் திடீரென கெட்டநோக்கத்துடன்கூடிய விரோதியாகத் தோன்றினார்கள். அவர்களது நீண்ட தலைமுடியும் தாடியும் காட்டுமிராண்டித்தனமாகத் தோன்றியது. கிர்பான்(குறுவாள்) முஸ்லிம்களுக்கெதிரான ஆயுதமாகத் தோன்றியது. பாகிஸ்தான் என்ற பெயரில் ஏதோ அர்த்தம் உள்ளதாக - சீக்கியர்களே இல்லாத ஒரு புகலிடமாக - முதன்முதலாக நினைக்கத் தொடங்கினார்கள்.



சீக்கியர்களுக்குள் கோபமும் வன்மமும் தலைதூக்கியது. ஒரு முஸ்லிமை எப்போதும் நம்பாதேஎன்றார்கள். அவர்களது கடைசி குரு கூறியிருக்கிறார், “முஸ்லிம்கள் நன்றியுணர்ச்சியற்றவர்கள்சரிதான். முஸ்லிம்களின் ஆட்சியில், தங்களது தகப்பனார்களை சகோதரர்களைக் கொன்றும், அவர்களது கண்களைக் குருடாக்கியும் இருக்கிறார்கள், அரியணையைக் கைப்பற்ற. குருத்துவாராக்களில் பசுக்களைப் பலியிட்டு அசுத்தப்படுத்தினார்கள். புனித கிரந்த்சாகிப்பை கிழித்து எறிந்தார்கள். முஸ்லிம்கள் பெண்களை மதிப்பதே கிடையாது. முஸ்லிம்கள் கையில் சீரழிவதை விட, கிணற்றில் விழுந்து செத்த பெண்களையும், தீயிட்டுக்கொண்டு செத்த பெண்களையும் பற்றி சீக்கியஅகதிகள் சொல்லியிருக்கின்றார்கள். தற்கொலை செய்துகொள்ளாதவர்கள் நிர்வாணமாக்கப்பட்டு, தெருவில் துரத்தப்பட்டு, வன்புணர்ச்சிக்குப் பிறகு கொலை செய்யப்பட்டார்கள். இப்போது ஒருரயில் நிறைய சீக்கியர்கள் கொல்லப்பட்டு மனோமஜ்ராவில் அவர்கள் எரிக்கப்பட்டுள்ளார்கள்.



*****************************************



சற்று நேரம் சென்றபின், கிராமத்தலைவர் பண்டாசிங் பேசத் தொடங்கினார்.



பக்கத்து கிராமங்களில் உள்ள முஸ்லிம்களெல்லாம் வெளியேற்றப்பட்டுவிட்டார்கள். சந்தன்நகர் அருகிலுள்ள அகதி முகாமில் இருக்கின்றார்கள். பலர் ஏற்கனவே பாகிஸ்தானுக்குச் சென்று விட்டார்கள். மற்றவர்கள் ஜலந்தரில் உள்ள பெரிய முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ளார்கள்.



மற்றொருவர் தொடர்ந்தார். ஆமாம். கப்பூராவும், குஜ்ஜூமாட்டாவும் கடந்தவாரம் காலி செய்யப்பட்டன. மனோமஜ்ராவில் மட்டும்தான் இப்போது முஸ்லிம்கள் உள்ளார்கள். தங்களது சகாக்களை வெளியேறுமாறு எப்படி அவர்கள் கூறமுடிந்தது என்பது எனக்குத் தெரியவில்லை. நமது குத்தகைக்காரர்களிடம் நாம் எப்போதுமே அவ்வாறு சொல்லப்போவதில்லை. நமது பிள்ளைகளை வீட்டைவிட்டு வெளியே போகுமாறு எப்படிக் கூறமுடியுமோ அதைவிட அதிகமாக நாம் ஒன்றும் பேசிவிட முடியாது. இங்கே யாராவது இருக்கின்றீர்களா - கிராமத்து முஸ்லிம்களை, “சகோதரர்களே, மனோமஜ்ராவை விட்டு வெளியேற வேண்டாம்என்று சொல்வதற்கு?



இதற்கு யாரும் பதில் சொல்லும்முன் யாரோ வாசலில் நுழைந்தார்கள். விளக்கின் குறைந்த வெளிச்சத்தில் அடையாளம் தெரியவில்லை. யாரது?” கேட்டது கிராமத்தலைவர். உள்ளேவாங்கஇமாம் பக்ஷ் உள்ளே வந்தார். இரண்டு பேர் கூடவே வந்தார்கள். முஸ்லிம்கள்.



சலாம், இமாம் பக்ஷ் மாமா. சலாம் கேர் தினா சலாம், சலாம்



சத் ஸ்ரீ அகால், தலைவரே, சத் ஸ்ரீ அகால்முஸ்லிம்கள் வணக்கம் சொன்னார்கள்.



அவர்களுக்கு உள்ளே இடம் கொடுத்தார்கள். இமாம் பக்ஷ் பேசக் காத்திருந்தார்கள்.



விரலால் தாடியைக் கோதியபடியே இமாம் பேசத் தொடங்கினார். சகோதரர்களே என்ன முடிவு செய்திருக்கிறீர்கள்?”



மோசமான அமைதி நிலவியது. கிராமத்தலைவரை எல்லோரும் பார்த்தார்கள்.



என்ன கேள்வி இது? எங்களுக்கானதைப் போல உங்களுக்கும் இந்தக் கிராமம் சொந்தமில்லையா?”



வெளியே என்ன மாதிரியாகப் பேசுகிறார்கள் என்பதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். பக்கத்து கிராமத்திலிருந்தெல்லாம் வெளியேற்றப்பட்டு விட்டார்கள். நாம் மட்டுமே மீதி. நாங்கள் வெளியேற வேண்டுமென்று நீங்கள் விரும்பினால் நாங்கள் போய்விடுவோம்.



ஒரு இளைஞன் பேசினான்,”இமாம் பக்ஷ் மாமா, இங்கே பாருங்க நாங்க இங்கே இருக்கிறவரைக்கும் உங்களைத் தொடறதுக்கு யாருக்கும் துணிச்சல் வராது. நாங்க முதல்லே உயிரை விடுவோம் அதுக்குப்பிறகு நீங்க உங்களைப் பார்த்துக்குங்க.



ஆமாம், நாங்க முதல்ல. அப்புறம்தான் நீங்க. உங்களுக்கு எதிரா யாராவது புருவத்தை உயர்த்துனாங்கன்னாக்கூட அவனோட அம்மாவைக் கற்பழிப்போம்என்றது ஒரு குரல்.



ஆமாமா, அம்மா, சகோதரி, மகன்பல குரல்கள். கண்ணில் வழிந்தோடிய நீரைத் துடைத்துக்கொண்டு, சட்டையின் நுனியால் மூக்கைச் சிந்தினார் இமாம்.

(தொடரும்...4)



திங்கள், அக்டோபர் 01, 2012

பாகிஸ்தான் செல்லும் ரயில் - 2 (குஷ்வந்த் சிங்)

இது மட்டுமில்லை, ஒருநாள் சீக்கிய ராணுவ வீரர்களின் அணி  இறங்கியது. ரயில் நிலையத்துக்கு அருகில் கூடாரம் போட்டார்கள். ரயில் பாலத்தின் முனையிலுள்ள சிக்னல்கம்பம் அருகே ஆறடி உயரத்துக்கு மணல் மூட்டைகளை சதுரமாக அடுக்கிஒவ்வொரு திசைக்கும் ஒரு இயந்திரத் துப்பாக்கியையும் பொருத்தினார்கள். ஆயுதமேந்திய வீரர்கள் பிளாட்பாரத்தைக் காவல் காத்தார்கள். கிராமமக்கள் ரயில் நிலையத்தை நெருங்க அனுமதிக்கப்படவில்லை. டில்லியிலிருந்து வரும் ரயில்களின் டிரைவர்களும் கார்டுகளும் பாகிஸ்தானுக்குள் நுழையும் முன்பாக அங்கே மாற்றப்பட்டார்கள். பாகிஸ்தானிலிருந்து வரும் ரயில்களின் எஞ்சின்கள் ஏதோ விடுதலைப் பெருமூச்சுடன் ஓடி வருவதைப் போல் இந்தப் பக்கம் வந்தன.


ஒருநாள் காலையில் பாகிஸ்தானிலிருந்து வந்த ரயில் ஒன்று அங்கே நின்றது. அமைதியாக இருந்த அந்த நாட்களில் ஓடிய ரயிலைப் போலத்தான் இதுவும் இருந்தது பார்த்தவுடன். கூரைகளில் யாரும் பயணிக்கவில்லை. பெட்டிகளுக்கிடையே யாரும் தொத்திக் கொண்டும் தொங்கிக் கொண்டும் இல்லை. படிக்கட்டுக்களில் ஊசலாடிக் கொண்டு யாரும் இல்லை. ஆனாலும் இந்த ரயிலில் ஏதோ ஒரு வித்தியாசம் இருப்பதாகப்பட்டது. இது ஒரு குறுகுறுப்பை மனதில் ஏற்படுத்தியது. ஒரு பேயைப் பார்ப்பதுபோல் உணர்வு வந்தது. பிளாட்பாரத்துக்குள் வந்தவுடன்கார்டு இறங்கிஸ்டேசன் மாஸ்டரின் அறைக்குள் நுழைந்தார். பின் இருவருமாக கூடாரம் அடித்துள்ள இடத்துக்குச் சென்று அங்கேயிருந்த ராணுவ அதிகாரியிடம் பேசினார்கள். பிறகு படைவீரர்கள் அழைக்கப்பட்டார்கள். அங்கேயிங்கே என அலைந்து திரிந்து கொண்டிருந்த கிராமமக்கள் அனைவரும் கிராமத்துக்குள் உடனே சென்றுவிடவேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஒரு வீரன் மோட்டார் சைக்கிளில் ஏறி சந்தன்நகர் நோக்கிப் புறப்பட்டபின் ஒருமணி நேரத்திற்குப்பின் சுமார் ஐம்பது போலீஸ்காரர்களுடன் சப்-இன்ஸ்பெக்டர் வந்து சேர்ந்தார். அதன்பின் மாவட்ட மாஜிஸ்டிரேட்டும் உதவி கமிஷனருமான ஹக்கும்சந்த் தனது அமெரிக்கக் காரில் வந்து இறங்கினார்.



பட்டப்பகலில் வந்த அந்த பேய்ரயில் மனோமஜ்ராவின் உணர்வுகளைத் தூண்டிவிட்டது. தங்களது வீட்டுக்கூரைகளின் மீது ஏறிரயில் நிலையத்தில் நடப்பதை வேடிக்கை பார்த்தார்கள். பிளாட்பாரத்தின் ஒருமுனையிலிருந்து மறுமுனை வரை நீண்டிருந்த ரயிலின் கறுப்பு வண்ணக் கூரையை மட்டும்தான் பார்க்க முடிந்தது. ரயில்நிலையக் கட்டிடமும் இரும்புக் கம்பிகளும் படிகளும் ரயிலை முழுமையாகப் பார்க்க முடியாமல் மறைத்தன. திடீர் திடீரென யாராவது ஒரு ராணுவ வீரனோ போலீஸ்காரனோ நிலையத்திலிருந்து வெளியே வருவதும் உள்ளே போவதுமாக இருந்தார்கள்.



பிற்பகலில் ஆண்கள் கும்பல் கும்பலாகக் கூடி ரயிலைப் பற்றிப் பேசத்தொடங்கினார்கள். அரசமரத்தடியில் கும்பல்கள் மொத்தமாகக் கூடியபின்அனைவரும் குருத்வாராவுக்குள் சென்றார்கள். வீடுவீடாகச் சென்று குசுகுசு’ பேசியும் சேகரித்துக் கொண்டும் இருந்த பெண்கள்இறுதியாககிராமத் தலைவர் பண்டாசிங் வீட்டில் கூடி அந்த ரயிலைப்பற்றிய தகவல்களோடு வரும் தங்களது ஆண்களுக்காகக் காத்திருந்தார்கள்.



* * *



திடீரென ஒரு போலீஸ்காரன் குருத்வாரா வாசலில் தென்பட்டான். கிராமத் தலைவரும் மற்ற சிலரும் எழுந்து நின்றார்கள். அரைகுறைத் தூக்கத்தில் இருந்தவர்கள் அவசரமாக விழித்தார்கள். என்ன என்ன ஆச்சு?” என்றபடி தங்களது தலைப்பாகையை அணிந்தவாறே அனைவரும் சுறுசுறுப்பானார்கள்.



கிராமத் தலைவர் யார்?”



பண்டாசிங் வாசலுக்கு வந்தார். அவரைத் தனியாகத் தள்ளிக்கொண்டு போன போலீஸ்காரன் அவர் காதில் ஏதோ கிசுகிசுப்பதைப் பார்க்க முடிந்தது. பண்டாசிங் திரும்பினார். ம்...ம்..நடக்கட்டும்... இன்னும் அரைமணி நேரம்தான். ஸ்டேசன் பக்கத்திலே இரண்டு மிலிட்டரி லாரி நிக்குது. நான் அங்கே போகணும்



போலீஸ்காரன் மிடுக்காகத் திரும்பிப் போனான். அனைவரும் பண்டாசிங்கைச் சுற்றி நின்றார்கள். ஒரு ரகசியத்தைத் தெரிந்து கொண்டிருப்பதால் அவர் ஒரு முக்கியமானவராகிப் போனார். அவரது குரலில் அதிகாரத் தொனி தெரிந்தது.



அவங்கவங்க வீட்டில இருக்கிற விறகுமண்ணெண்ணெய் எல்லாம் எடுத்துக்கிட்டு அந்த மிலிட்டரி லாரிக்கு வந்துடுங்க. பணம் கொடுப்பாங்க



எதற்காக என்று அவர் சொல்லவேண்டும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவரது குரல் கட்டளை இட்டது.என்ன உங்களுக்கெல்லாம் காது செவிடாஇல்லைநான் சொன்னது காதுல விழலியாபோலீஸ்காரன் வந்து கம்பால குண்டியில அடிச்சாத்தான் நகருவீங்களாவேலை நடக்கட்டும்



* * *



விறகுகள் லாரிகளில் ஏற்றப்பட்டன. காலியான பெட்ரோல் கேன்களில் மண்ணெண்ணெய் நிரப்பப்பட்டது. எல்லாம் முடிந்தபின்அதிகாரிக்கு மரியாதை தரும் விதமாக சற்றே தூரத்தில் அனைவரும் கூடி நின்றனர்... லாரிகள் ஸ்டேசனை நோக்கிச் சென்றன.



* * *



வீட்டுக் கூரைகளின்மீது நின்று பார்த்தால்ஸ்டேசன் பக்கத்தில் நிற்கும் லாரிகளைப்பார்க்க முடிந்தது... அவை மீண்டும் இடதுபுறம் திரும்பி ஸ்டேசனை நோக்கி வளைந்து ரயிலுக்குப் பின்னால் மறைந்தன. ரயில் பாலத்தின் அடியில் சூரியன் மறைந்தபோதுதங்களது அன்றாட வேலைகளை மறந்துபோய் விட்டோமே என்று ஆண்களும் பெண்களும் ஞாபகப்படுத்திக் கொண்டார்கள். விரைவில் இருட்டிவிடும்குழந்தைகள் உணவுக்காக அழத் தொடங்குவார்கள். ஆனாலும்பெண்கள் ரயில்வே ஸ்டேசன்மீது பதிந்த தங்களது கண்களை அப்படியிப்படி நகர்த்தவேயில்லை. பசுக்களும் எருமைகளும் தானியக்களஞ்சியத்துக்குத் திரும்பின. ஆனாலும் ஆண்கள் வீட்டுக்கூரைகளின் மீது நின்றுகொண்டு இப்போதும் ஸ்டேசனையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஏதோ நடக்கப் போகின்றது...



சூரியன் பாலத்துக்கு பின்னால் மூழ்கிக்கொண்டிருந்தான். வெண்மேகங்களைவெண்சிகப்பும் பழுப்பும் ஆரஞ்சுமான கலவையால் ஒளியேற்றி வண்ணமயமாக்கினான். சற்றுநேரத்தில் சாம்பல் வண்ணக் கீற்றுக்கள் இந்த வண்ணக்கலவையுடன் சேர்ந்துகொள்ள மாலைப்பொழுது மெல்ல மங்கி அந்தி சாயத்தொடங்கியது. அதுவும் மெதுவாகத் தன்னை இருட்டில் சங்கமித்துக் கொண்டது. ரயில்வே ஸ்டேசன் ஒரு இருட்டுச் சுவராக மாறிக்கொண்டது. சலித்துப்போன ஆண்களும் பெண்களும் மெதுவாகக் கீழேயிறங்கத் தொடங்கினார்கள்.



நீலமும் சாம்பல் வண்ணமும் கலந்த வடக்குத் தொடுவானம்மீண்டும் ஆரஞ்சுவண்ணத்தை வீசியது. அது பழுப்பு வண்ணமாகி ஒளிமயமான வெண்சிகப்பை வீசியது. செக்கச் சிவந்த தீயின் நாக்குகள் மேலெழுந்து கருங்கும்மென்றிருந்த இருட்டு வானத்தைத்தொட்டன. இளங்காற்று மனோமஜ்ராவை நோக்கி வீசியது. மண்ணெண்ணெயும் விறகும் எரியும் வாடை உடன் வந்தது. அதன்பின் மனிதச் சதை எரிந்து தீய்ந்து போன தெளிவற்ற குமட்டுகின்ற நாற்றம் வந்தது.



மரண அமைதியில் மனோமஜ்ரா உறைந்தது. 

(தொடரும் 2)