சனி, ஏப்ரல் 12, 2014

சாம்பல்தேசம்-10 (நெடுங்கதை)



நாட்டின் தென்கோடி துணைப்பஞ்சாயத்தான கடாரநாட்டின் வட்டப்பஞ்சாயத்தான நாகர்கோவிலில் இளவரசர் ஒரு எளிய குடிசையில் தூங்கி எழுந்து திண்ணையில் சிக்கனமாக சாம்பலில் பல்தேய்த்து சிக்கனமாக வாய்கொப்பளிக்கும் படங்கள் பத்திரிக்கைகளில் பாதி இடத்தை அடைத்துக் கொண்டிருந்தன. கழுதைப்புலி, நாய், நரிப்படைகள், வல்லூறு ஹெலிகாப்டர்கள் சூழ அந்தோணிகுரூசு என்ற மீனவர் வீட்டில் இளவரசர் தங்கி அங்கேயே சிக்கனமாக கம்மங்கஞ்சியும் கருவாடும் சாப்பிட்டு சிக்கன வாழ்க்கை நடத்துவதும் மடியில் அந்தோணிகுரூசின் பேத்தியை உட்காரவைத்து "பல் இங்கே சாம்பல் எங்கே?" என்று கேட்கும் காட்சியும் பலவண்ணங்களில் அச்சாகி அருக்காணி கம்பெனிக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. 

இது போதாது என்று பக்கத்து ஊரான தூத்துக்குடியில் நாலு நாளாக பல்தேய்க்காத அதிரடிப்படைகள், ஹெலிகாப்டர்கள் சூழ மீனவர் முருகேசனின் குடும்பத்தோடு பல்தேய்த்து சிக்கன வாழ்க்கை நடத்தும் காட்சியும் ஒண்ணேமுக்கால் பக்கத்துக்கு அச்சாகி இருந்தது. கரியடுப்பின் முன்னால் கோவணம்கட்டி உட்கார்ந்திருக்கும் முருகேசனின் குடும்பத்தோடு உட்கார்ந்து கையில் கருவாட்டைப் பிடித்தபடி வெற்று அடுப்பைக்காட்டி "அடுப்பு இங்கே சாம்பல் எங்கே?" என்று கேட்கும் காட்சியை சாம்பல்ரதம் செல்லும் வழியெங்கும் 30க்கு60 கட்-அவுட்டுக்களாக தேசியக்கட்சியினர் வைத்து அருக்காணி கம்பெனியை வெறுப்பேத்தியிருந்தனர். "அழகர்லாலின் கனவு இவர் சிரிப்பில் நனவு" "ஏழையின் சிரிப்பில் சாம்பலைக் காண்போம்" "சாம்பலோ புளிச்! சிரிப்போ பளிச்!" "மக்கள் சாம்பலே மகேசன் சாம்பல்" "தாயில்லாமல் நானில்லை, அன்னை இல்லாமல் நாடில்லை" "உங்கள் ஓட்டு கரி அடுப்பு சின்னத்துக்கே" போன்ற கோசங்கள் வேறு ஃப்ளொரசன்ட் கலரில் பளிச்சிட்டுக் கொண்டிருந்தன.

நாகர்கோவிலில் இருந்து கடாரநாட்டின் தலைநகர் கிளைவ்பேட்டைக்கு நூறு
ஹெலிகாப்டர்கள் பறக்க இளவரசரின் எளிய சிக்கன ஊர்வலமும் நடந்ததை டிவிக்காரர்கள் வானத்தில் பறந்தபடியே நேரடி ஒளிபரப்பு செய்தனர். ஊர்வலத்தின் பாதையில் ஆகாயத்தில் பறந்தபடி “சூரத்மாதா சுண்டுவிரல்ல சுண்ணாம்பு பட்டாலும் சும்மா இருக்க மாட்டான் இந்த சுப்புராசு!என்றபடி கண்கள் சிவக்க வில்லனை வாயில்ரத்தம் கக்கக்கக்க பூட்ஸ் காலால் உதைத்துக்கொண்டிருந்த நடிகர் குஜிலிகாந்தைப் பார்த்து "அண்ணா, அரசியல்ல எப்போ குதிப்பீங்க?" என்று இளவரசர் கேட்க, "ஹீரோயின்களைக் கட்டிப்பிடிக்க முடியாத அளவுக்கு தொந்தி ஒண்ணும் வீங்கவில்லை, அப்படி ஒரு நிலைமை வரும்போது வேற எங்க போகப்போறேன், கண்டிப்பா அரசியல்லதான் குதிப்பேன், நான் எங்கே குதிப்பேன் எப்போ குதிப்பேன்னு யாருக்கும் தெரியாது, ஆனா குதிக்க வேண்டிய நேரத்துல கரெக்டா குதிப்பேன்! இப்போ சூட்டிங் இருக்கு, டாட்டா!" என்றபடியே குஜிலிகாந்த் காலைச்சுழற்ற ஆரம்பித்தார். எப்படி இவரை தேசியக்கட்சிக்கு இழுப்பது என இளவரசர் திட்டமிடத் தொடங்கினார்.


வழிநெடுகிலும் இளவரசரின் படத்தோடு சாம்பலும் கருவாடும் அடங்கிய
பாக்கெட்டுகள் வீசப்பட்டன. இது தேர்தல் நடத்தை விதி எண் முந்நூத்துநாலு புள்ளி எட்டை மீறிய செயல் என்று ராஷ்ட்ரீய கட்சியின் சட்டவல்லுநர் தருண் இட்லி தேர்தல் கங்காணிகளிடம் புகார் செய்தார். இது பற்றி விசாரிக்க சதிடில்லியில் கூடிய தேர்தல் கங்காணிகள் கால் மணி நேரத்தில் தீர்ப்பு சொன்னார்கள். தேசியக்கட்சி ஆட்சியைக் கைப்பற்றுவது உறுதி என்பதை தனது அனுபவத்தில் உணர்ந்திருந்த தலைமை தேர்தல் கங்காணி "வானத்திலிருந்து இந்த பாக்கெட்டுக்கள் விழுந்தது உண்மைதான், ஆனால் விதி எண் முந்நூத்துனாலு புள்ளி ஒன்பதின் கீழ் தேசியக்கட்சிதான் இதை வீசியது என்பதற்கான ஆதாரம் இல்லை" என்று தீர்ப்பு சொல்லி பான்பீடா போட்டு வாயைக் கொப்புளித்தார்.


கிளைவ்பேட்டை கடற்கரை ஊரணி அரங்கில் கூடிய தேசியக்கட்சிகூட்டணியின்
பிரமாண்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டத்துக்கு தலைமை தாங்கிய கடாரநாட்டின் தானைத்தலைவரும் விரலோவியம், முதுகுக்கு மீதி, கிளியின் மீசை, பாளையங்கோட்டையும் திஹாரும், தெற்கே ஒரு தலைவலி போன்ற காப்பியங்களைப் படைத்தவருமான சிமுகழகத்தின் தலைவர் தமிழ்ச்சித்தர் "என் உயிரினும் மேலான ரெட்டைப்பிறவியே! அழகர்லாலின் பேரப்பிள்ளையே! பெரியன்னையின் வீரப்பிள்ளையே! நீடு துயில் நீக்க வந்த நிலவே! ஆடுபுலி ஆட வந்த மகவே! இளஞ்சிவப்பு ரோஜாவே! எல்பிஜியின் ராஜாவே!, சாம்பலை அள்ளி வருக, சோம்பலைக் கிள்ளி எறிக, நிலையான ஆட்சி தருக!" என்று அடுக்குமொழியில் விளையாடிய பேச்சை பதிவு செய்ய முடியாமல் ரகசிய போலீசார் திணறினர். கச்சேரி, கஸ்மாலம், நாயே, பொறம்போக்கு, தேவிடியா முண்ட, பேமானி, டின் கட்டிடுவேன், வாய்தா, எஃப்.ஐ.ஆர்,ஜாமீன், ரெய்ட், பொடா, குண்டா, 420, கட்டிங், வாயை ஊது, லைசென்ஸ் எடு, சார்ஜ், ஃபயர், கஞ்சா, சரிங்க ஐயா, டீ சொல்லு போன்ற தமிழ் வார்த்தைகளை மட்டுமே மனப்பாடமாக அறிந்திருந்த அவர்கள் குறிப்பெடுக்க முடியாமல் மண்டையை சொறிந்தனர்.

மத்தியபஞ்சாயத்தில் எந்தக்கட்சி
ஆட்சியில் இருந்தாலும் தனது மகன், ஒன்றுவிட்ட மகன், ரெண்டுவிட்ட மகன், மகள், ஒன்றுவிட்ட மகள், மச்சான், ரெண்டுவிட்ட மச்சான், மூணுவிட்ட கொழுந்தன், நாலுவிட்ட பேரன் அனைவரையும் மத்திய பஞ்சாயத்தில் மந்திரி பதவியில் உட்காரவைத்து கட்சியில் ஜனநாயகம் செழித்தோங்க பாடுபட்டவர் தமிழ்ச்சித்தர். தமிழ்ச்சித்தரின் குடும்பமே கட்சி, கட்சியே குடும்பம் என்ற மகத்தான பொதுவுடைமை கட்சிக்குள்/குடும்பத்துக்குள் நிலவியது; ஒருமுறை இவரது பிள்ளைகளுக்குள் சாப்பாட்டுப்பிரச்னையில் சண்டைவந்தபோது அதன் அனல் தென்மண்டலத்துக்குப் பரவி ஒரு பத்திரிக்கை அலுவலகம் தீப்பிடித்ததும் அதன் அனலில் மூன்று பேர் உயிரைவிட்டதும் உலகம் அறிந்த ஒன்று; தன் குடும்பத்து சாப்பாட்டுப் பிரச்னையால் இனிமேல் யாரும் சாகக்கூடாது என்று கண்ணீர் சிந்திய தமிழ்ச்சித்தர், கடாரநாட்டை எட்டாகப்பிரித்து தனது எட்டுபிள்ளைகளுக்கும் எழுதிவைத்தார்; குடும்பத்தின் மற்றவர்கள் பிழைக்க வழி கேட்டபோது, பிறந்த ஊரில் இருந்து கொண்டுவந்த தகரப்பெட்டியில் இருந்த பல கோடி பர்கானாக்களை அள்ளிக்கொடுத்து ‘சினிமா எடுத்து பொழச்சுக்குங்கஎன வழிகாட்டியவர் தமிழ்ச்சித்தர். கடாரநாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பொழப்புத்தேடி தினந்தோறும் பல நூறு இளைஞர்கள் கையில் தகரப்பெட்டியோடு தலைநகர் க்ளைவ்பேட்டைக்கு வண்டியேறி வருவது உலகறிந்த விசயம், எனினும் தமிழ்ச்சித்தரின் தகரப்பெட்டி மட்டும் வற்றாத அமுதசுரபியாக பல கோடி பர்கானாக்களை அள்ளிஅள்ளிக் கொடுத்தவண்ணம் இருப்பதான ரகசியம் இதுவரை யாரும் கண்டிலர், கண்டவர் விண்டிலர்.
தொடரும்...

வெள்ளி, ஏப்ரல் 11, 2014

சாம்பல்தேசம்-9 (நெடுங்கதை)



ஆனால் உண்மையில் சிற்றம்பலம் உள்ளுக்குள் தடுமாறிக்கொண்டிருந்தார். என்னதான் பேரிக்காவுக்கு விசுவாசமான அடியாளாக இருந்தாலும் உள்ளூரில் செல்லாக்காசாகிவிட்டால் பங்குமார்க்கெட்டில் விலைபோகாத ஷேர் போல கேவலப்படவேண்டியிருக்கும் என்பதை நன்கு அறிந்து வைத்திருந்தார்.  


தேசியக்கட்சிக்கு மத்திய பஞ்சாயத்து தேர்தல் களம் இந்த முறை கடார நாட்டில் எதிர்பாராத ஷாக்கை கொடுத்தது. இதுநாள்வரை சிமுக, அஇசிமுக தலைவர்களின் ரகசியங்கள் அடங்கிய ஃபைல்களை எப்போதும் கக்கத்தில் வைத்துக்காட்டி மிரட்டியே இரண்டில் ஒரு கட்சியின் தோளில் ஏறி சவாரி செய்தே கடாரநாட்டில் தேர்தலை சந்தித்துவந்த தேசியக்கட்சியை இரண்டு கட்சிகளும் இப்போது கைவிட்டுவிட்ட கையறு நிலை ஏற்பட்டது; தேசியக்கட்சியின் தலைவர்களின் ரகசிய ஃபைல்கள் இரண்டு கட்சிகளுக்கும் இந்த முறை கையில் கிடைத்து விட்டதே காரணம். இதையாவது சகித்துக்கொள்ளலாம், ஆனால் நேத்துப்பிறந்த நெத்திலிக்குஞ்சுக்கட்சி கூட சீண்டமுன்வராத நிலையில் இத்தேர்தல் தேசியக்கட்சிக்கு பீதியையும் பேதியையும் கிளப்பிவிட்டது. ப.சிற்றம்பலம், வெங்கபாலு, ஞானப்பழம், பேரிக்கா நாராயணன், போங்கண்ணா போன்ற தேசியக்கட்சியின் ‘உலகத்தலைவர்கள் திருவிழாவில் தொலைந்துபோன சின்னப்பிள்ளை போல யாராவது தூக்க மாட்டார்களா என்று அலைந்து திரிந்தார்கள். தேர்தலுக்கு முதல் நாள் அல்லது வாக்குஎண்ணிக்கையின்போது கூட ஏதாவது அதிசயம் நடக்கும் என்ற அசட்டு தைரியத்தில் டிவிசானல்களில் வெத்துவீராப்பு பேசி கடாரநாட்டு மக்களின் இரவுச்சாப்பாட்டு வேளைகளை கவலைகளை மறந்து சிரிக்கும் காமெடி பட ஷோவாக மாற்றி பெரும் சேவை செய்து வந்தார்கள்.

வழக்கமாக தேர்தல் சீசன்களில் க்ளைவ்பேட்டையில் உள்ள தேசியக்கட்சியின் ரத்தினமூர்த்திபவன் கலவரபூமியாக காட்சி தருவது வழக்கம்; ‘ஐய்யய்யோ காப்பாத்துங்க’ ‘ஐயோ வெட்ராங்க ஐயோ குத்ராங்கஎன்று கதறியபடி ரத்தம்வழிய குலைநடுங்க அம்மணமாக தினம் நாலைந்து பேராவது ரத்தினமூர்த்திபவனில் இருந்து ஓடிவருவதை அப்பகுதி மக்கள் பார்ப்பது வழக்கம்; உடனடியாக பெரும்கலவரம் ஏற்படும் என தொடக்க காலத்தில் பயந்து சிதறி ஓடிய அப்பகுதி மக்களும் வியாபாரிகளும் பின்னர் தேர்தல்காலங்களில் இது சகஜம் என புரிந்துகொண்ட பிறகு இக்காட்சிகளை பொழுதுபோக்காக ரசிக்க ஆரம்பித்தார்கள்; பக்கத்தில் உள்ள தியேட்டர்களில் டிக்கெட் கிடைக்காதவர்கள் ரத்தினமூர்த்திபவன் வாசலில் வந்து இக்காட்சிகளுக்காக காத்திருக்க ஆரம்பித்தார்கள்; வேட்டிசட்டை ஜூஸ் இளநீர் வியாபாரிகள் பிளாட்பாரத்தில் கடைபோட்டு தற்காலிக வியாபாரத்தையும் பார்த்துக்கொண்டார்கள். மேலும் ஒவ்வொருமுறை தேர்தல் முடிந்தபின்னும் உட்கட்சி விவாதத்தில் உடைந்த கண்ணாடி ஜன்னல் கதவுகள் சோபா நாற்காலிகள் அனைத்தும் புதுசாக மாற்றப்படுவதும் வழக்கம்; தலைநகர் கிளைவ்பேட்டையில் அக்கட்சிக்கு உள்ள கோடிக்கணக்கான மதிப்பிலான சொத்துக்களை அனுபவிப்பதில் உள்ள போட்டிதான் இந்த ரத்தக்களறிக்கு காரணம் என்றும் கிளைவ்பேட்டை மக்கள் பேசிக்கொள்கின்றார்கள். ஆனால் இந்தத் தேர்தலில் ரத்தினமூர்த்திபவன் மயானமாக காட்சியளித்ததால் அப்பகுதி மக்களுக்கு போர் அடித்தது.


"இன்ஸ்டால்மென்டில் சாம்பல் தயாரித்துக்கொண்டிருந்தால் டைம் வேஸ்ட் என்று ஒரே நொடியில் எல்பிஜி குடியரசை சாம்பலாக்க பேரிக்கா நாட்டுடன் கூட்டுச்சேர்ந்து வெடிகுண்டு ஒப்பந்தத்தில் பத்தாவது மூணேமுக்கால் ஆண்டுத்திட்டத்தில் கையெழுத்துப்போட்டது நீயா நாங்களா? உலக சாம்பல்திலகமான கன்ஃபைட்புஷ்ஷே எங்களைப் பார்த்து மிரண்டு போய் எங்களைக் காதலிக்கிறார்! நீ என்ன பிஷ்ஷாத்து!" என்று முன்னாள் ஐயையோயெஸ் அதிகாரியும் உலகவட்டிக்கடையில் கணக்கப்பிள்ளை வேலை செய்தவரும் தேசியக்கட்சியின் பொருளாதாரக்கரடியுமான மனோன்மணிசிங் எச்சரித்தார்.



இரண்டு கட்சிகளுக்கும் எஜமானனான கன்ஃபைட்புஷ்ஷையே நைசாக உள்ளே இழுத்து மனோன்மணிசிங் விட்ட தந்திரமான அறிக்கையால் அருக்காணி, அரளிஜோஷி, பெல்லாரிநாயுடு ஆகியோர் மண்டையை சொறிந்து சற்றே பின்வாங்கினாலும் அசந்துவிடவில்லை, நாக்பூரில் டென்ட் அடித்து கூட்டம் போட்டனர். நூற்றுக்கணக்கான பண்டாரங்கள் கோவணத்துடனும் அரிவாள்களுடனும் திரிசூலங்களுடனும் கலந்து கொண்ட இக்கூட்டத்தில், எப்போதும் பைஜாமா, குர்தா, கோட் சகிதம் காட்சியளிக்கும் ராஷ்ட்ரீயக்கட்சியின் பெரிசுகள், பழைய காலத்து போலீஸ்காரர்கள் போல் அகலமாகத்திறந்த அரைக்கால் டவுசர் போட்டுக்கொண்டு, கையில் கம்புகளோடு திரிந்தார்கள். தேசியக்கட்சியின் ஆட்டத்தை அடித்து நொறுக்க தங்களிடம் உள்ள அதிரடி அஷ்திரமான அயோத்தி சாம்பல் ஃபேக்டரியை திறப்பதே ஒரே வழி என்று தீர்மானமும் ஜர்தாபீடாவும் போட்டு சாம்பலில் குளித்தனர்.


அயோத்தி சாம்பல் ஃபேக்டரியை 1992இல் ராஷ்ட்ரீயக்கட்சி திறந்தது. திறந்த புதிதில் அள்ளவேமுடியாத அளவுக்கு லாரிலாரியாக சாம்பல் தயாரித்து கொள்ளை லாபம் அடித்தார்கள். அதன் பிறகு தேர்தல் காலங்களிலும் முக்கிய பிரச்னைகள் தலைதூக்கும்போதும் ரெண்டுமூணு மாசத்துக்கு அயோத்தி சாம்பல் ஃபேக்டரியை திறப்பதும் அதன் பின் மூடி வைப்பதும் வழக்கம்.

வீரேந்திரமூடி, அருக்காணி, அரளிஜோஷி, பெல்லாரி நாயுடு, ஜதீன்ஜட்காரி போன்ற முக்கிய தலைவர்கள் ஒரு அமாவாசை நள்ளிரவில் உடலெங்கும் சாம்பலைப்பூசிக்கொண்டு கோட்டான்கள் கூவும் சகுனம் பார்த்து அதிரடி வேட்டுக்கள் சங்குசேகண்டி குலவை முழங்க அயோத்தி சாம்பல் யாத்திரை புறப்பட்டார்கள். "சாம்பலாக்குவோம், இல்லையேல் சாம்பலாவோம்! சூரத் மாதா கீ ஜே!" என்று கூவி சபதமிட்டு அனைவரும் கடப்பாரையைத் தூக்கியபடி போஸ் கொடுக்கும் காட்சி டிவிக்களில் நேரடி ஒளிபரப்பானது. இதன்பின் ஏ.பி.சி.டி.டிவியில் இரவு ரெண்டேமுக்கால் மணிக்கு ஃப்ளாஷ்நியூசில் தோன்றிய பிரமாதராய் கையில் கால்குலேட்டரை தட்டியபடியே தேசியக்கட்சியின் செல்வாக்கு 40 சதவீதம் சரிவதாக கிராஃபிக்ஸ் போட்டு  அடித்துச்சொன்னார். இதனைத் தொடர்ந்து தும்பை பங்குச்சந்தையில் புள்ளிகள் தாறுமாறாக உயர்ந்து எகிறிக்குதித்து கட்டடத்துக்கு வெளியே வந்து அரபிக்கடலில் விழுந்ததாக முதலாளிகள் சங்கத்தலைவர் பேட்டியளித்தார்.

ஆனால் அடுத்த நாள் பொழுது பிரமாதராயும் அருக்காணி கம்பெனியும் எதிர்பாராதபடி விடிந்தது.

தொடரும்...

வியாழன், ஏப்ரல் 10, 2014

சாம்பல்தேசம்-8 (நெடுங்கதை)




"1948 முதல் நீ சாம்பல் தயாரித்திருக்கலாம், ஆனால் நீ ஐம்பது வருசத்தில் தயாரித்த சாம்பலைவிடவும் நாங்கள் ஆட்சியில் இருந்த வெறும் நாலேகால் வருசத்தில் தயாரித்த அயோத்தி பிராண்ட் சாம்பல் அதிகம் என்பதை உலகமே அறியும், உலகறியும்! எங்கே பதுக்கி வைத்தாய்? பொக்ரானில் நாங்கள் தயாரித்த சாம்பலை என்ன செய்தாய்? நாட்டில் சாம்பல் தட்டுப்பாட்டைப் போக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகத்தானே மோர்கில் எல்லையில் திட்டமிட்டு பெரும் சாம்பல் மேட்டையே உருவாக்கினோம்? யாரிடம் சவால் விடுகிறாய்? நாங்கள் தயாரிக்காத சாம்பலா? அட, 2002இல் ரயிலை எரித்து நாங்கள் தயாரிக்காத சாம்பலையா நீ தயாரித்துவிடப் போகின்றாய்?  முடிந்தால் நீ அந்த சாம்பல் மேட்டைத் தாண்டிப்பார், பொக்ளேன் கொண்டு அள்ளிப்பார்! சவால் விடுகிறேன்! எத்தனை ஜென்மம் எடுத்தாலும் எவனாலும் முடியாது! இத்தோடு நிறுத்திக்கொள்! எங்கள் கோபத்தை தூண்டி அயோத்தி சாம்பல் ஃபேக்டரியை மீண்டும் திறக்க வைக்காதே! சூலாயுதம் தூக்க வைக்காதே! சூரத் மாதா கி ஜே!" என்று தேஜ்நாத் சிங்கும் வீரேந்திர மூடியும் எச்சரிக்கை விடுத்து பத்திரிக்கைகளுக்கும் டிவிக்களுக்கும் தீனி போட்டனர்.

ராஸ்ட்ரீயக்கட்சியின் டெக்னிக்கலான இந்த எச்சரிக்கைக்கு பதில் சொல்லும் பொறுப்பு தேசியக்கட்சியின் மூத்த தலைவரான மனோன்மணிசிங்குக்கு  தரப்பட்டது. " எல்.பி.ஜி.குடியரசில் பாரம்பரியமாக சாம்பல் தயாரிக்கும் பெருமைக்குரிய ஏகபோகக்குடும்பமான நால்மூர்த்தி பவன் இளவரசரை தரக்குறைவாகப் பேசுவதை நீ நிறுத்து! பிர்லா மாளிகை, பொக்ரான் என்று உதார் விடாதே! 1885இலேயே நாங்கள் சாம்பல் தயாரிப்பை தொடங்கி விட்டோம் என்பதை ஊர் உலகமே அறியும்! எல்பிஜிக்கு நாங்களே பெர்மனெண்ட்! நீ டெம்பரரி! பகத்சிங் கூட்டாளிகளை எரித்து நாங்கள் சாம்பல் தயாரிக்கவில்லையா? 1975 அர்ஜென்ட் நிலையைப் பிரகடனம் செய்து நாங்கள் தயாரித்த சாம்பலை யாரால் அள்ள முடியும்? சிறைச்சாலைகளில் எத்தனை ஆயிரம் அப்பாவிகள், எத்தனை பத்திரிக்கைகள், பத்திரிக்கை ஆபீசுகள், ஆசிரியர்களை சாம்பலாக்கினோம், முடியுமா உன்னால்? போபாலில் பேரிக்கா நாட்டுக்கம்பெனியோடு கூட்டுச்சேர்ந்து ஒரே ராத்திரியில் நாங்கள் தயாரித்த சாம்பலை மிஞ்ச யாரால் முடியும்? ஹர்ஷத்மேத்தாவை வைத்து நாங்கள் தயாரித்த சாம்பலோடு உன்னால் போட்டி போட முடியுமா? பர்கானாக்களில் சாம்பல் தயாரித்த வரலாற்றை மாற்றி ஸ்விட்சர்லாந்தில் பீரங்கி வாங்கி நாங்கள்தானே முதல்முதலில் டாலர் கணக்கில் சாம்பல் தயாரித்தோம்? எங்கள் மூத்த இளவரசருக்கு ‘பீரங்கி ரத்னாஎன்ற பட்டத்தை எல்பிஜி மக்கள் சூட்டி அழகுபார்த்ததை நீ தலைகீழா நின்றாலும் மறைக்க முடியாது. பருத்தி விவசாயிகளையும் சிறு தொழில் முதலாளிகள் தொழிலாளிகள் சில்லறை வர்த்தக வியாபாரிகளையும் குடும்பம் குடும்பமாக சாம்பலாக்கிய பெருமை எங்களை விட்டால் வேறு யாருக்கு? எங்களை விட்டால் நாட்டை சாம்பலாக்க யார் இருக்கின்றார்கள்? எங்கே ஒளித்துவைத்தாய் நாங்கள் மலை மலையாய் தயாரித்த சாம்பலை? ஜெய் ஹோ!" என்று மனோன்மணிசிங் கொடுத்த பரபரப்பு பதிலடி மத்தியபஞ்சாயத்து தேர்தல் கள உஷ்ணத்தை 100 டிகிரிக்கு உயர்த்தியது. 


பீரங்கியும் டாலரும் உனக்கு மட்டுமே சொந்தம் என திமிரோடு திரியாதே! டாலரை கேவலம் நீ எண்ணித்தான் வாங்கியிருப்பாய்! எடைபோட்டு பார்சலாக வாங்கி புது டெக்னிக்கில் சாம்பல் தயாரித்தது நாங்கள்தான் என்பதை நினைத்தால் எங்கள் மீதே எங்களுக்கு பொறாமை உண்டாகின்றது! கார்கிலில் செத்தவர்களுக்கு சவப்பெட்டி வாங்கியதிலும் நாங்கள் டாலர் அடித்து சாம்பல் தயாரித்ததை நீ மறைத்தாலும் உலகம் மறக்காது! எங்கே அந்த சாம்பல் மலைகள்? சூரத் மாதா கீ ஜே!என ராஷ்ட்ரீயக்கட்சியின் தருண் இட்லியும் பீரங்கி மந்திரியாக இருந்த டார்ச் பெர்னாண்டசும் சாட்டையடி கொடுத்தனர்.


சாம்பல் தயாரிப்பில் பன்னெடுங்கால அனுபவம் பெற்ற தயானந்த் சர்மா, ஜகதீஷ் பட்லர், விஜய்குருமா ஆகியோர் அருக்காணி கம்பெனியே! அடக்கிவாசி! குடியரசின் தலைநகரிலேயே சீக்கியர்களை சாம்பலாக்கி சாம்பல் மலைகளையே உருவாக்கினோமே, மறந்துவிட்டாயா? பெரிய இளவரசரின் தம்பியோடு சேர்ந்து சதிடில்லியில் துர்க்மான்கேட் குடிசைகளை எரித்து டன் கணக்கில் சாம்பல் தயாரித்ததை நாடு மறக்குமா? கெரசின்  இப்போதும் நெறைய ஸ்டாக் வச்சிருக்கோம், ஜாக்கிரதை! கெரசினுக்கு வேலை வைக்காதே! குடலை உருவி பஷ்பமாக்கிடுவேன், கபர்தார்! சூரத் மாதா கீ ஜே! என அஹிம்சையோடு எச்சரித்தனர்.


இந்த தேர்தல் கூச்சல் குழப்பத்தில் சோட்டாராஷ்ட்ராவில் பன்னெடுங்காலமாக தாங்கள் தயாரித்துக் குவித்து வரும் சாம்பல் மலைகள் யார் கண்ணிலும் படாமல் போய்விடுமோ என்று பயந்த சவசேனா, மீடியாவை கவரும் பொருட்டு 20-20 கிரிக்கெட் மாட்ச் நடந்து கொண்டிருந்த மைதானத்துக்குள் புகுந்து பிட்சின் நடுவே 6க்கு 2 சைஸ் குழியை தோண்டி, “இந்தக்குழி பாகிஸ்தானுக்காக! பாகிஸ்தான் அணி இதுவரை சேர்த்த ரன்கள் யாவும் இந்தக்குழியில் போட்டு மூடப்படும்! இது எங்க ஏரியா, உள்ளே வராதே! மீறி எவனாவது உள்ளே வந்தே, மவனே சவமாயிடுவே! சூரத் மாதா கீ ஜே!என்று மோர்தாக்கரேயும் அவர் மகன் தயிர்தாக்கரேயும் மச்சான் நெய்தாக்கரேயும் வெண்ணெயாக அறிக்கைவிட்டு தேர்தல் களத்தில் பன்பட்டர்ஜாம் தடவினார்கள். 


"நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எல்பிஜி குடியரசை பேரிக்கா நாட்டின் ஒரு மாகாணமாகவே இணைத்துவிடுவோம்! உன்னால் முடியுமா?" என்று தும்பை பங்குச்சந்தைகடை கேன்டீனில் வேட்டியை மடித்துக்கொண்டே டீ குடித்தபடி  ப.சிற்றம்பலம் ஏபிசிடி டிவியில் நேரடியாக விட்ட சவால் அருக்காணி கம்பெனியை திக்குமுக்காடச் செய்தது. 
தொடரும்...

சனி, ஏப்ரல் 05, 2014

சாம்பல்தேசம்-7 (நெடுங்கதை)

டிவிக்களில் மாமியார் மருமகள் சதிகார சீரியல்கள் ரத்துச்செய்யப்பட்டு இளவரசரின் சிக்கன வாழ்க்கை நேரடியாக 24 மணி நேர ஒளிபரப்பானதால் டி.ஆர்.பி.ரேட் ஏகத்துக்கும் எகிறியது. இதுதான் சாக்கு என்று உற்சாகபானம், ஷேவிங்பிளேடு, பூச்சிமருந்துகுளிர்பானம் பீட்சா பர்கர் அரைவேக்காடு சிக்கன் கம்பெனிகள் “இளவரசர் சிக்கன வாழ்க்கை ஸ்பான்சர்ட் பை...என கோடிக்கணக்கில் செலவழித்து பலவருச லாபத்தை இரண்டொரு நாளில் சம்பாதித்தன; லாபத்தின் ஒருபகுதியை பேசியபடியே சதிடில்லியில் நால்மூர்த்திபவனில் கொண்டுபோய் சேர்த்து நாணயமாக நடந்துகொண்டன.

  மறுநாள் காலை கண்விழித்த இளவரசர், இரவோடு இரவாக தனது குடிசையை சுற்றி மின்சாரவேலியோடு 13 அடி உயரத்துக்கு கான்க்ரீட் சுவர் கட்டப்பட்டதைக்கண்டு கோபமாகி அங்கிருந்த ஐயய்யோயெஸ் அதிகாரியை கூப்பிட்டு சத்தம்போட்டு, என்னை சிக்கன வாழ்க்கை நடத்த விட மாட்டீர்களா, சுவரை உடனே இடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டதை நேரடி ஒளிபரப்பில்  கண்ட எல்.பி.ஜி.குடியரசு மக்கள் "ராசா வீட்டுல பொறந்த ரோசா! இந்தப் புள்ளைக்கு என்ன எளிமை! நம்மளைக் காப்பாத்த வந்த மவராசன் நல்லா இருக்கணும்!" என்று மூக்கைச்சிந்தி அழுதது கண்டு ராஸ்ட்ரீயக்கட்சியின் மத்தியபஞ்சாயத்து தலைவர் வேட்பாளர் வீரேந்திரமூடியும் முக்கிய தலைவர்களான அருக்காணி, தேஜ்நாத் சிங், தருண் இட்லி, ரேஷ்மா மஹராஜ், ஜதீன் ஜட்காரி ஆகியோரும் கோவணம் கட்டிய பண்டாரங்களும் அதிர்ச்சியடைந்து தமது கனவுக்கு சமாதிகட்டப்படும் நாள் நெருங்குவதை உணர்ந்து சாம்பலை அள்ளித்தூவி சாபம் விட்டனர்.
 
உச்சகட்டமாக இளவரசர் செய்த காரியம் ராஸ்ட்ரீயக்கட்சியின் சமாதிக்கு முதல் செங்கல் எடுத்து வைப்பதாக இருந்தது. சமிதாப் அச்சன் ஒரு டூத் பேஸ்ட்டும் ப்ரஷ்ஷும் எடுத்து இளவரசரிடம் கொடுக்க, "கடந்த அறுபது வருடங்களில் எல்.பி.ஜி.குடியரசை சாம்பல்மேடாக்கியதில் எனது தாத்தா பாட்டி அம்மா அப்பா ஆகியோரின் அளப்பரிய பங்கை எந்தக் கொம்பனாலும் மறைக்கவோ மூடவோ முடியாது; எமது குடும்பம் தயாரித்த சாம்பல்களை உலகுக்கு மறைத்த முழுப்பொறுப்பும் ராஷ்ட்ரீயக்கட்சியையே  சாரும்! அத்தனை சாம்பலும் வெளியே வரும்வரை நான் பேஸ்ட்டில் பல் தேய்க்கப்போவதில்லை! இதன் அடையாளமாக ஒரு சிட்டிகை சாம்பல் எடுத்து பல்தேய்க்கிறேன்! என் தாயின் மீது ஆணை, எடுத்த சபதம் முடிப்பேன்! சூரத்மாதா கீ ஜே! ஜெய் ஹோ! ஜெய் ஹிந்த்!" என சூளுரைத்து அச்சன் கொடுத்த பேஸ்ட் ட்யூபை கடாசி எறிந்ததும் நேரடி ஒளிபரப்பானது. உடனடியாக ஒரு லாரி நிறைய சாம்பல் கொண்டு வரப்பட்டது. அதில் அவர் ஒரு சிட்டிகை சாம்பலை அள்ளும் காட்சியை நாளேடுகள் உடனடியாக சிறப்புப்பதிப்பாக அச்சாக்கி பரபரப்பாக காசாக்கின; பக்கத்திலேயே யாரோ ஒரு கிழவர் ஒரு பிடி உப்பை அள்ளும் அறுதப்பழசான ஒரு படத்தையும் அச்சிட்டு "எதிர்கால எல்.பி.ஜி.குடியரசின் தலையெழுத்தை இந்த ஒரு சிட்டிகை சாம்பல் எழுதும்!" என்று எழுதித்தள்ளினார்கள்.
 
அடுத்த விநாடியே இளவரசர் ஒரு சிட்டிகை சாம்பல் அள்ளும் காட்சி 30x60 ஃப்ளெக்ஸ் கட்-அவுட்டுக்களாக எல்பிஜி தேசமெங்கும் தேசியநெடுஞ்சாலைகளில் நடப்பட்டன. தங்கள் ஆட்சிக்காலத்தில் பேரிக்கா நாட்டு சரக்குகளும் போலீசும் ராணுவமும் தங்குதடையின்றி பயணிக்க போடப்பட்ட தங்கநாற்கரச்சாலைகளில் இளவரசரின் கட் அவுட்கள் வரிசையாக நிற்பதைக்கண்ட ராஷ்ட்ரீயக்கட்சியினர் கொதிப்படைந்து சாபமிட்டனர். காசுபார்க்க இதுதான் சமயம் என தேசியக்கட்சியினர் இளவரசரின் ஃப்ளெக்ஸ்போர்ட் அச்சடிக்கும் காண்ட்ராக்டுகளை பினாமிகள்  பேரில் எடுத்து கட்சியின் பாரம்பரியத்தை காப்பாற்றினர்.


"சோம்பல் நீக்க சாம்பல் தந்தவன்" "சொம்பும் சாம்பலும் காலைக்கு அழகு" போன்ற கோசங்களால் நாடே ரெண்டு பட்டது. இடது கையில் ஒரு சொம்போடு "சொம்பு இங்கே, சாம்பல் எங்கே?" என்று இளவரசர் இரண்டு விரல்களைக்காட்டி கேட்கும் காட்சி தேசியக்கட்சியின் முக்கிய தேர்தல் பிரச்சார படமாக அறிவிக்கப்பட்டு மக்கள் காலைக்கடனுக்காக ஒதுங்கும் இடங்களில் சூடாக வினியோகிக்கப்பட்டது, 365 மொழிகளில் சுவரொட்டியாகயும் அச்சடிக்கப்பட்டது. தங்களது கட்சியின் வழக்கமான தேர்தல் சின்னமான துப்பாக்கி சின்னத்தை இந்தத்தேர்தலில் கைவிட்டு கரி அடுப்பு சின்னத்தில் போட்டியிடுவதாகவும் பெரியன்னை அறிவித்து ராஸ்ட்ரீயக்கட்சிக்கு சவாலாகவும் எதிர்பாராத பெரும் நெருக்கடியையும் கொடுத்தது.


"அறுபது வருசமா தேசியக்கட்சி தயாரித்த லட்சக்கணக்கான டன் சாம்பல்களை வெறும் நாலேகால் வருசமே ஆட்சியில் இருந்த ராஸ்ட்ரீயக்கட்சியினர் பதுக்கி விட்டனர்! ராஸ்ட்ரீயக்கட்சியினர் முக்கால்வாசிப்பேர் கள்ளக்கடத்தல் கறுப்புப்பணப் பேர்வழிகள் ஆட்கடத்திகள் என்று நான் சொல்லவில்லை, போன வாரம் நான் சந்தித்து சாப்பிட்டு தூங்கி வந்த விவசாயிகளின் குடும்பங்கள்சொல்கின்றன!என அதிரடி அறிக்கை விடுத்தார் இளவரசர். தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் முதல் திட்டமே தனது தாத்தா நினைவாக "அழகர்லால் தேசிய தன்னிறைவு பல்துலக்கும் திட்டம்" என்றும் அறிவித்தார்.


"ராஸ்ட்ரீயக்கட்சியினர் சாம்பல் கடத்தல் பேர்வழிகள்! இளவரசர் திடுக்கிடும் தகவல்!" என்று டிவிக்களில் குத்தாட்டத்தொடைகளுக்கு கீழே ஃப்ளாஷ்நியூஸ் ஓடவே ராஸ்ட்ரீயக்கட்சியின் தேசியக்குழு உடனடியாக நாக்பூரில் கூடியது. "தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் எல்.பி.ஜி.தேசியக்கட்சி இளவரசரை தெருவில் இறக்கிவிட்டு வித்தை காட்டி மக்களை திசைதிருப்ப முயற்சிக்கின்றது, மக்கள் ஏமாற மாட்டார்கள், நாங்கள் ஆட்சியில் இருந்தபோதே அவர்கள் போதிய அளவுக்கு ஏமாந்துவிட்டார்கள்" என்றும்  தீர்மானம் போடப்பட்டது. 

"சாம்பல் மீது எங்கள் கட்சிக்குள்ள பாசத்தையும் பற்றையும் உலகமே அறியும், நாங்கள் சாம்பலில் பிறந்து சாம்பலையே தின்று சாம்பலிலேயே வளர்ந்தவர்கள், கமர்கட் பையனான உனக்கு வரலாறு தெரியுமா? எல்.பி.ஜி.குடியரசில் முதன்முதலில் சாம்பல் தயாரித்தது நாங்கள்தான் என்பதை நீ அறிவாயா? தெரியவில்லை என்றால் பிர்லா மாளிகைக்கு சென்று தெரிந்து கொள்! அவ்வளவு ஏன், நாங்கள் எங்கள்  தலைமையகத்தில் வைத்து கும்பிடுகின்றோமே மண்கலயம், அது என்ன வெறும் கலயமா? அதில் இருப்பது காந்தியை சுட்டவனின் சாம்பல்தானே? வரலாறு தெரியுமா உனக்கு? சாம்பலைக்கும்பிடும் தில் இருக்கா உனக்கு? உடம்பு வீங்கிடும் ஜாக்கிரதை! சவால் விடாதே, சாம்பலாகி விடுவாய்! சாம்பலில்தான் சாவோம், மக்களையும் சாம்பலாக்குவோம்! சூரத் மாதா கீ ஜே!" என்று அருக்காணி முதல் எச்சரிக்கை விடுத்தார்.

தொடரும்...