ஆனால் உண்மையில் சிற்றம்பலம் உள்ளுக்குள்
தடுமாறிக்கொண்டிருந்தார். என்னதான் பேரிக்காவுக்கு விசுவாசமான அடியாளாக
இருந்தாலும் உள்ளூரில் செல்லாக்காசாகிவிட்டால் பங்குமார்க்கெட்டில் விலைபோகாத ஷேர்
போல கேவலப்படவேண்டியிருக்கும் என்பதை நன்கு அறிந்து வைத்திருந்தார்.
தேசியக்கட்சிக்கு மத்திய பஞ்சாயத்து தேர்தல் களம் இந்த
முறை கடார நாட்டில் எதிர்பாராத ஷாக்கை கொடுத்தது. இதுநாள்வரை சிமுக, அஇசிமுக தலைவர்களின்
ரகசியங்கள் அடங்கிய ஃபைல்களை எப்போதும் கக்கத்தில் வைத்துக்காட்டி மிரட்டியே
இரண்டில் ஒரு கட்சியின் தோளில் ஏறி சவாரி செய்தே கடாரநாட்டில் தேர்தலை சந்தித்துவந்த தேசியக்கட்சியை இரண்டு கட்சிகளும்
இப்போது கைவிட்டுவிட்ட கையறு
நிலை ஏற்பட்டது; தேசியக்கட்சியின் தலைவர்களின் ரகசிய ஃபைல்கள் இரண்டு
கட்சிகளுக்கும் இந்த முறை கையில் கிடைத்து விட்டதே காரணம். இதையாவது
சகித்துக்கொள்ளலாம், ஆனால் நேத்துப்பிறந்த
நெத்திலிக்குஞ்சுக்கட்சி கூட சீண்டமுன்வராத நிலையில் இத்தேர்தல் தேசியக்கட்சிக்கு
பீதியையும் பேதியையும் கிளப்பிவிட்டது. ப.சிற்றம்பலம், வெங்கபாலு, ஞானப்பழம், பேரிக்கா
நாராயணன், போங்கண்ணா போன்ற தேசியக்கட்சியின் ‘உலக’த்தலைவர்கள்
திருவிழாவில் தொலைந்துபோன சின்னப்பிள்ளை போல யாராவது தூக்க மாட்டார்களா என்று
அலைந்து திரிந்தார்கள். தேர்தலுக்கு முதல் நாள் அல்லது வாக்குஎண்ணிக்கையின்போது கூட
ஏதாவது அதிசயம் நடக்கும் என்ற அசட்டு தைரியத்தில் டிவிசானல்களில் வெத்துவீராப்பு
பேசி கடாரநாட்டு மக்களின் இரவுச்சாப்பாட்டு வேளைகளை கவலைகளை மறந்து சிரிக்கும் காமெடி
பட ஷோவாக மாற்றி பெரும் சேவை செய்து வந்தார்கள்.
வழக்கமாக தேர்தல் சீசன்களில் க்ளைவ்பேட்டையில் உள்ள தேசியக்கட்சியின்
ரத்தினமூர்த்திபவன் கலவரபூமியாக காட்சி தருவது வழக்கம்; ‘ஐய்யய்யோ காப்பாத்துங்க’ ‘ஐயோ வெட்ராங்க ஐயோ குத்ராங்க’ என்று கதறியபடி ரத்தம்வழிய குலைநடுங்க அம்மணமாக தினம்
நாலைந்து பேராவது ரத்தினமூர்த்திபவனில் இருந்து ஓடிவருவதை அப்பகுதி மக்கள்
பார்ப்பது வழக்கம்; உடனடியாக பெரும்கலவரம் ஏற்படும் என தொடக்க காலத்தில் பயந்து சிதறி
ஓடிய அப்பகுதி மக்களும் வியாபாரிகளும் பின்னர் தேர்தல்காலங்களில் இது சகஜம் என
புரிந்துகொண்ட பிறகு இக்காட்சிகளை பொழுதுபோக்காக ரசிக்க ஆரம்பித்தார்கள்;
பக்கத்தில் உள்ள தியேட்டர்களில் டிக்கெட் கிடைக்காதவர்கள் ரத்தினமூர்த்திபவன்
வாசலில் வந்து இக்காட்சிகளுக்காக காத்திருக்க ஆரம்பித்தார்கள்; வேட்டிசட்டை ஜூஸ்
இளநீர் வியாபாரிகள் பிளாட்பாரத்தில் கடைபோட்டு தற்காலிக வியாபாரத்தையும்
பார்த்துக்கொண்டார்கள். மேலும் ஒவ்வொருமுறை தேர்தல் முடிந்தபின்னும் உட்கட்சி விவாதத்தில்
உடைந்த கண்ணாடி ஜன்னல் கதவுகள் சோபா நாற்காலிகள் அனைத்தும் புதுசாக
மாற்றப்படுவதும் வழக்கம்; தலைநகர் கிளைவ்பேட்டையில் அக்கட்சிக்கு உள்ள
கோடிக்கணக்கான மதிப்பிலான சொத்துக்களை அனுபவிப்பதில் உள்ள போட்டிதான் இந்த
ரத்தக்களறிக்கு காரணம் என்றும் கிளைவ்பேட்டை மக்கள் பேசிக்கொள்கின்றார்கள். ஆனால்
இந்தத் தேர்தலில் ரத்தினமூர்த்திபவன் மயானமாக காட்சியளித்ததால் அப்பகுதி
மக்களுக்கு போர் அடித்தது.
"இன்ஸ்டால்மென்டில் சாம்பல் தயாரித்துக்கொண்டிருந்தால் டைம் வேஸ்ட் என்று ஒரே நொடியில் எல்பிஜி குடியரசை சாம்பலாக்க பேரிக்கா நாட்டுடன் கூட்டுச்சேர்ந்து வெடிகுண்டு ஒப்பந்தத்தில் பத்தாவது மூணேமுக்கால் ஆண்டுத்திட்டத்தில் கையெழுத்துப்போட்டது நீயா நாங்களா? உலக சாம்பல்திலகமான கன்ஃபைட்புஷ்ஷே எங்களைப் பார்த்து மிரண்டு போய் எங்களைக் காதலிக்கிறார்! நீ என்ன பிஷ்ஷாத்து!" என்று முன்னாள் ஐயையோயெஸ் அதிகாரியும் உலகவட்டிக்கடையில் கணக்கப்பிள்ளை வேலை செய்தவரும் தேசியக்கட்சியின் பொருளாதாரக்கரடியுமான மனோன்மணிசிங் எச்சரித்தார்.
இரண்டு கட்சிகளுக்கும் எஜமானனான கன்ஃபைட்புஷ்ஷையே நைசாக உள்ளே இழுத்து மனோன்மணிசிங் விட்ட தந்திரமான அறிக்கையால் அருக்காணி, அரளிஜோஷி, பெல்லாரிநாயுடு ஆகியோர் மண்டையை சொறிந்து சற்றே பின்வாங்கினாலும் அசந்துவிடவில்லை, நாக்பூரில் டென்ட் அடித்து கூட்டம் போட்டனர். நூற்றுக்கணக்கான பண்டாரங்கள் கோவணத்துடனும் அரிவாள்களுடனும் திரிசூலங்களுடனும் கலந்து கொண்ட இக்கூட்டத்தில், எப்போதும் பைஜாமா, குர்தா, கோட் சகிதம் காட்சியளிக்கும் ராஷ்ட்ரீயக்கட்சியின் பெரிசுகள், பழைய காலத்து போலீஸ்காரர்கள் போல் அகலமாகத்திறந்த அரைக்கால் டவுசர் போட்டுக்கொண்டு, கையில் கம்புகளோடு திரிந்தார்கள். தேசியக்கட்சியின் ஆட்டத்தை அடித்து நொறுக்க தங்களிடம் உள்ள அதிரடி அஷ்திரமான அயோத்தி சாம்பல் ஃபேக்டரியை திறப்பதே ஒரே வழி என்று தீர்மானமும் ஜர்தாபீடாவும் போட்டு சாம்பலில் குளித்தனர்.
அயோத்தி சாம்பல் ஃபேக்டரியை 1992இல் ராஷ்ட்ரீயக்கட்சி திறந்தது. திறந்த புதிதில் அள்ளவேமுடியாத அளவுக்கு லாரிலாரியாக சாம்பல் தயாரித்து கொள்ளை லாபம் அடித்தார்கள். அதன் பிறகு தேர்தல் காலங்களிலும் முக்கிய பிரச்னைகள் தலைதூக்கும்போதும் ரெண்டுமூணு மாசத்துக்கு அயோத்தி சாம்பல் ஃபேக்டரியை திறப்பதும் அதன் பின் மூடி வைப்பதும் வழக்கம்.
வீரேந்திரமூடி, அருக்காணி, அரளிஜோஷி, பெல்லாரி நாயுடு, ஜதீன்ஜட்காரி போன்ற முக்கிய தலைவர்கள் ஒரு அமாவாசை நள்ளிரவில் உடலெங்கும் சாம்பலைப்பூசிக்கொண்டு கோட்டான்கள் கூவும் சகுனம் பார்த்து அதிரடி வேட்டுக்கள் சங்குசேகண்டி குலவை முழங்க அயோத்தி சாம்பல் யாத்திரை புறப்பட்டார்கள். "சாம்பலாக்குவோம், இல்லையேல் சாம்பலாவோம்! சூரத் மாதா கீ ஜே!" என்று கூவி சபதமிட்டு அனைவரும் கடப்பாரையைத் தூக்கியபடி போஸ் கொடுக்கும் காட்சி டிவிக்களில் நேரடி ஒளிபரப்பானது. இதன்பின் ஏ.பி.சி.டி.டிவியில் இரவு ரெண்டேமுக்கால் மணிக்கு ஃப்ளாஷ்நியூசில் தோன்றிய பிரமாதராய் கையில் கால்குலேட்டரை தட்டியபடியே தேசியக்கட்சியின் செல்வாக்கு 40 சதவீதம் சரிவதாக கிராஃபிக்ஸ் போட்டு அடித்துச்சொன்னார். இதனைத் தொடர்ந்து தும்பை பங்குச்சந்தையில் புள்ளிகள் தாறுமாறாக உயர்ந்து எகிறிக்குதித்து கட்டடத்துக்கு வெளியே வந்து அரபிக்கடலில் விழுந்ததாக முதலாளிகள் சங்கத்தலைவர் பேட்டியளித்தார்.
ஆனால் அடுத்த நாள் பொழுது பிரமாதராயும் அருக்காணி கம்பெனியும் எதிர்பாராதபடி விடிந்தது.
தொடரும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக