ரோஸ் கலரில் கன்னம் என்ற கான்செப்ட் கடாரநாட்டில்
ஒர்க்அவுட் ஆகும் என கணக்குப்போட்டு ’ராஸ்ட்ரீயக்கட்சியின்
போக்கு பிடிக்காமல்’ நேற்று இரவு ரெண்டு மணிக்கு கூட்டணியில் இருந்து வெளியேறிய தமிழ்ச்சித்தர்
தேசியக்கட்சி கூட்டணியில் இணைந்து ராஷ்ட்ரீயக்கட்சிக்கு கடும் எச்சரிக்கையும்
விடுத்திருந்தார். "சாம்பல், ரயில்பெட்டி, ஒரிசா
என்று பேசும் முன் வரலாற்றைப் படித்துப்பார்! டெக்னாலஜி வளராத நாற்பது வருசத்துக்கு முன்னாலேயே
வெண்மணியில் சாம்பல் மலைகளையே உருவாக்கியவர்கள் நாங்கள்! அந்த சாம்பல்கள் எல்லாம்
எங்கே போயின? சோழநாடு
சாம்பலுடைத்து என்பதை மரமண்டைகளான ராஷ்ட்ரீயக்கட்சியினர் உணரவேண்டும், இல்லையேல் கழகத்தின் கண்மணிகள்
பல்லுடைத்து உணரவைப்பார்கள்! நீங்கள் தீயில் சாம்பல் தயாரிக்கலாம், நாங்கள் தண்ணீரில் சாம்பல் தயாரிக்கும்
தனிக்குடியில் பிறந்தவர்கள்! தாமிரபரணித்தண்ணீரைக் கேட்டுப்பார், கதைகதையாய் சொல்லும்! சிமுக எப்போது ஆட்சியில் இருந்தாலும் தொழிலாளர்கள் விவசாயிகள் எப்போது
போராடினாலும் அப்போதெல்லாம் உடனடியாக கண்ணில் பாசத்தோடு நெஞ்சில் நேசத்தோடு இரும்புக்கரம் கொண்டு
சாம்பல் தயாரித்ததை வரலாறு சொல்லும்!
”ஜெனரல் டயர் கொடுத்துவிட்டுப்போன துப்பாக்கியை நான் சுவரில் மாட்டவில்லை, என் இதயத்தில் ஆணி அரைந்து இறுதி மூச்சு உள்ளவரையும் நெஞ்சிலே சுமக்கும் உரம் உள்ளவன் நான்! டயரின் துப்பாக்கியை கடார நாட்டில் அதிகமுறை பயன்படுத்தி சாம்பல் தயாரித்தது சிமுக ஆட்சியே என்பதை சின்னப்பிள்ளை கேட்டாலும் சொல்லும்! என்னோடு மோதாதே! நேற்று இரவு ரெண்டு மணி வரை உன்னோடு இருந்தவன்தானே நான்! உன்னைப்பற்றித் தெரியாதா? உன் செப்படி வித்தையை நாக்பூரோடு நிறுத்திக்கொள்! சாம்பலைப் பற்றி என்னிடம் பேசாதே! எல்பிஜி குடியரசில் விஞ்ஞான ஃபார்முலா அடிப்படையில் முதல்முதலாக சாம்பல் தயாரித்தது சிமுகதான் என்று புக்காரியா கமிசனே கொடுத்த சர்டிஃபிகேட்டை பெரியண்ணா ஆலயத்தில் வரவேற்பரையில் பெருமையுடன் நாங்கள் மாட்டி வைத்திருப்பது உனக்கெங்கே தெரியும்? டங்குவார் அந்துடும் ஜாக்கிரதை! கடாரநட்டையே சாம்பலாக்கும் புனிதப்போரில் என் குடும்பமே நெற்றி வேர்வை சாம்பலில் விழ உழைப்பதை நாடறியும் ஏடறியும்! ஊடுதல் சாம்பலுக்கின்பம் அதனின் இன்பம் தேய்த்து முயங்கப்பெரின் என்று ஐயன் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொல்லியிருக்கிறான்! உங்கள் வாக்கு அரைநிலாவுக்கே! உங்கள் வாக்கு கரி அடுப்புக்கே!" என்று தமிழ்ச்சித்தர் விடுத்த எச்சரிக்கையை டாஸ்மாக் கடைகளில் சிக்கன் ரோஸ்ட்டோடு கண்மணிகள் சூடாக விவாதித்துக்கொண்டிருந்தார்கள்.
"இதுக்குத்தான்யா இந்த ஆள கூடச்சேத்துக்க கூடாதுங்குறது" என்று புலம்பிய அருக்காணி கம்பெனி நேற்று இரவு ரெண்டு மணி ஒரு நிமிசத்துக்கு கூட்டணியில் சேர்ந்திருந்த அஇசிமுக தலைவரை உடனடியாக மொபைலில் தூண்டிவிட்டு தமிழ்ச்சித்தருக்கு சூடான பதில் கொடுக்க சொன்னார். அவரும் சேவுராமசாமி, சின்னையன், பன்னீர்சொம்பு, பன்ரொட்டி போன்ற முக்கிய அறிவாளிகளை கலந்தாலோசித்து "ஏய் தமிழ்ஜித்தா! துரோகி! கபோதி! ஜெனரல் டயரின் துப்பாக்கிக்கு நீ மட்டும் சொந்தம் கொண்டாடி தமிழ்மக்களை ஏமாற்ற நினைக்காதே! வெண்மணியில் சாம்பல் தயாரிக்கும்போது நாம் ஒரே கட்சியாக ஒன்றாக இருந்துதான் தயாரித்தோம் என்பதை மறைக்காதே! எங்கே அந்த சாம்பல்? உன் வண்டவாளத்தை நாடறியும்! சாம்பலுக்கு கணக்கு கேட்ட புரட்சித்தளபதியை பொன்னிறத்தலைவனை சைக்கிள்செயினால் அடித்தவன்தானே நீ? அதன் பின்தானே நாங்கள் தனியாக சாம்பல் தயாரிக்க ஆரம்பித்தோம்?

“பரமக்குடியில் நாங்கள் தயாரித்த சாம்பலை எங்கே பதுக்கினாய்? டாஸ்மாக் திறந்து கடாரநாட்டின் குடும்பங்களை சாம்பலாக்கி வருவது எனது அரசுதான் என்பதை எந்தக் கொம்பனாலும் மறைக்க முடியாது! ஜெனரல் டயரின் துப்பாக்கி உனக்கு மட்டும் சொந்தமில்லை! கருநாகமே! சிறுநரியே! நாக்கை அடக்கிப்பேசு! இழுத்து வச்சு அறுத்துடுவேன்! மூஞ்சி பேந்து போகும் என்று நாகரிகமாக எச்சரிக்கிறேன்! உங்கள் ஓட்டு ரெட்டைத்தலைபாம்புக்கே! வாழ்க புரட்சித்தளபதி நாமம்! வளர்க பட்டை நாமம்!" என்று அறிக்கை விட மாலைப்பத்திரிக்கைகள் ரெண்டே நிமிசத்தில் விற்றுத்தீர்ந்தன. இந்த நூற்றாண்டின் இணையற்ற அரசியல் சாசனம் இதுதான் என்று டைம்ஸ் பத்திரிக்கை உடனடியாக விருது அளித்தது.
தொடரும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக