டிவிக்களில் மாமியார் மருமகள் சதிகார சீரியல்கள்
ரத்துச்செய்யப்பட்டு இளவரசரின் சிக்கன வாழ்க்கை நேரடியாக 24 மணி நேர ஒளிபரப்பானதால் டி.ஆர்.பி.ரேட்
ஏகத்துக்கும் எகிறியது. இதுதான் சாக்கு என்று உற்சாகபானம்,
ஷேவிங்பிளேடு, பூச்சிமருந்துகுளிர்பானம் பீட்சா பர்கர் அரைவேக்காடு சிக்கன்
கம்பெனிகள் “இளவரசர் சிக்கன வாழ்க்கை ஸ்பான்சர்ட் பை...” என கோடிக்கணக்கில்
செலவழித்து பலவருச லாபத்தை இரண்டொரு நாளில் சம்பாதித்தன; லாபத்தின் ஒருபகுதியை
பேசியபடியே சதிடில்லியில் நால்மூர்த்திபவனில் கொண்டுபோய் சேர்த்து நாணயமாக
நடந்துகொண்டன.
மறுநாள் காலை கண்விழித்த இளவரசர்,
இரவோடு இரவாக தனது குடிசையை சுற்றி
மின்சாரவேலியோடு 13 அடி உயரத்துக்கு கான்க்ரீட் சுவர் கட்டப்பட்டதைக்கண்டு கோபமாகி அங்கிருந்த ஐயய்யோயெஸ் அதிகாரியை
கூப்பிட்டு சத்தம்போட்டு, என்னை
சிக்கன வாழ்க்கை நடத்த விட மாட்டீர்களா, சுவரை
உடனே இடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டதை நேரடி ஒளிபரப்பில் கண்ட எல்.பி.ஜி.குடியரசு மக்கள் "ராசா வீட்டுல பொறந்த ரோசா! இந்தப்
புள்ளைக்கு என்ன எளிமை! நம்மளைக் காப்பாத்த வந்த மவராசன் நல்லா இருக்கணும்!" என்று மூக்கைச்சிந்தி
அழுதது கண்டு ராஸ்ட்ரீயக்கட்சியின்
மத்தியபஞ்சாயத்து தலைவர் வேட்பாளர் வீரேந்திரமூடியும் முக்கிய தலைவர்களான அருக்காணி,
தேஜ்நாத் சிங், தருண் இட்லி, ரேஷ்மா
மஹராஜ், ஜதீன் ஜட்காரி ஆகியோரும்
கோவணம் கட்டிய பண்டாரங்களும் அதிர்ச்சியடைந்து தமது கனவுக்கு சமாதிகட்டப்படும் நாள்
நெருங்குவதை உணர்ந்து சாம்பலை அள்ளித்தூவி சாபம் விட்டனர்.
உச்சகட்டமாக இளவரசர் செய்த காரியம் ராஸ்ட்ரீயக்கட்சியின் சமாதிக்கு முதல் செங்கல் எடுத்து வைப்பதாக இருந்தது. சமிதாப் அச்சன் ஒரு டூத் பேஸ்ட்டும் ப்ரஷ்ஷும் எடுத்து இளவரசரிடம் கொடுக்க, "கடந்த அறுபது வருடங்களில் எல்.பி.ஜி.குடியரசை சாம்பல்மேடாக்கியதில் எனது தாத்தா பாட்டி அம்மா அப்பா ஆகியோரின் அளப்பரிய பங்கை எந்தக் கொம்பனாலும் மறைக்கவோ மூடவோ முடியாது; எமது குடும்பம் தயாரித்த சாம்பல்களை உலகுக்கு மறைத்த முழுப்பொறுப்பும் ராஷ்ட்ரீயக்கட்சியையே சாரும்! அத்தனை சாம்பலும் வெளியே வரும்வரை நான் பேஸ்ட்டில் பல் தேய்க்கப்போவதில்லை! இதன் அடையாளமாக ஒரு சிட்டிகை சாம்பல் எடுத்து பல்தேய்க்கிறேன்! என் தாயின் மீது ஆணை, எடுத்த சபதம் முடிப்பேன்! சூரத்மாதா கீ ஜே! ஜெய் ஹோ! ஜெய் ஹிந்த்!" என சூளுரைத்து அச்சன் கொடுத்த பேஸ்ட் ட்யூபை கடாசி எறிந்ததும் நேரடி ஒளிபரப்பானது. உடனடியாக ஒரு லாரி நிறைய சாம்பல் கொண்டு வரப்பட்டது. அதில் அவர் ஒரு சிட்டிகை சாம்பலை அள்ளும் காட்சியை நாளேடுகள் உடனடியாக சிறப்புப்பதிப்பாக அச்சாக்கி பரபரப்பாக காசாக்கின; பக்கத்திலேயே யாரோ ஒரு கிழவர் ஒரு பிடி உப்பை அள்ளும் அறுதப்பழசான ஒரு படத்தையும் அச்சிட்டு "எதிர்கால எல்.பி.ஜி.குடியரசின் தலையெழுத்தை இந்த ஒரு சிட்டிகை சாம்பல் எழுதும்!" என்று எழுதித்தள்ளினார்கள்.
அடுத்த விநாடியே இளவரசர் ஒரு சிட்டிகை சாம்பல் அள்ளும் காட்சி 30x60 ஃப்ளெக்ஸ் கட்-அவுட்டுக்களாக எல்பிஜி தேசமெங்கும் தேசியநெடுஞ்சாலைகளில் நடப்பட்டன. தங்கள் ஆட்சிக்காலத்தில் பேரிக்கா நாட்டு சரக்குகளும் போலீசும் ராணுவமும் தங்குதடையின்றி பயணிக்க போடப்பட்ட தங்கநாற்கரச்சாலைகளில் இளவரசரின் கட் அவுட்கள் வரிசையாக நிற்பதைக்கண்ட ராஷ்ட்ரீயக்கட்சியினர் கொதிப்படைந்து சாபமிட்டனர். காசுபார்க்க இதுதான் சமயம் என தேசியக்கட்சியினர் இளவரசரின் ஃப்ளெக்ஸ்போர்ட் அச்சடிக்கும் காண்ட்ராக்டுகளை பினாமிகள் பேரில் எடுத்து கட்சியின் பாரம்பரியத்தை காப்பாற்றினர்.
"சோம்பல் நீக்க சாம்பல் தந்தவன்" "சொம்பும்
சாம்பலும் காலைக்கு அழகு" போன்ற கோசங்களால் நாடே ரெண்டு பட்டது. இடது கையில் ஒரு சொம்போடு "சொம்பு
இங்கே, சாம்பல் எங்கே?" என்று இளவரசர் இரண்டு விரல்களைக்காட்டி
கேட்கும் காட்சி தேசியக்கட்சியின் முக்கிய தேர்தல் பிரச்சார படமாக அறிவிக்கப்பட்டு மக்கள்
காலைக்கடனுக்காக ஒதுங்கும் இடங்களில் சூடாக வினியோகிக்கப்பட்டது, 365 மொழிகளில் சுவரொட்டியாகயும் அச்சடிக்கப்பட்டது. தங்களது கட்சியின் வழக்கமான தேர்தல் சின்னமான துப்பாக்கி சின்னத்தை இந்தத்தேர்தலில் கைவிட்டு கரி அடுப்பு
சின்னத்தில் போட்டியிடுவதாகவும்
பெரியன்னை அறிவித்து ராஸ்ட்ரீயக்கட்சிக்கு சவாலாகவும் எதிர்பாராத பெரும்
நெருக்கடியையும் கொடுத்தது.
"அறுபது வருசமா தேசியக்கட்சி தயாரித்த
லட்சக்கணக்கான டன் சாம்பல்களை வெறும் நாலேகால் வருசமே ஆட்சியில் இருந்த
ராஸ்ட்ரீயக்கட்சியினர் பதுக்கி விட்டனர்! ராஸ்ட்ரீயக்கட்சியினர் முக்கால்வாசிப்பேர்
கள்ளக்கடத்தல் கறுப்புப்பணப் பேர்வழிகள் ஆட்கடத்திகள் என்று நான் சொல்லவில்லை, போன வாரம் நான் சந்தித்து சாப்பிட்டு தூங்கி வந்த விவசாயிகளின்
குடும்பங்கள்சொல்கின்றன!” என அதிரடி அறிக்கை விடுத்தார் இளவரசர். தனது கட்சி
ஆட்சிக்கு வந்தால் முதல் திட்டமே தனது தாத்தா நினைவாக "அழகர்லால் தேசிய தன்னிறைவு
பல்துலக்கும் திட்டம்" என்றும் அறிவித்தார்.
"சாம்பல் மீது எங்கள் கட்சிக்குள்ள பாசத்தையும் பற்றையும் உலகமே அறியும், நாங்கள் சாம்பலில் பிறந்து சாம்பலையே தின்று சாம்பலிலேயே வளர்ந்தவர்கள், கமர்கட் பையனான உனக்கு வரலாறு தெரியுமா? எல்.பி.ஜி.குடியரசில்
முதன்முதலில் சாம்பல் தயாரித்தது நாங்கள்தான் என்பதை நீ
அறிவாயா? தெரியவில்லை என்றால் பிர்லா மாளிகைக்கு சென்று
தெரிந்து கொள்! அவ்வளவு ஏன், நாங்கள் எங்கள் தலைமையகத்தில் வைத்து கும்பிடுகின்றோமே மண்கலயம், அது என்ன வெறும் கலயமா? அதில் இருப்பது காந்தியை
சுட்டவனின் சாம்பல்தானே? வரலாறு தெரியுமா உனக்கு? சாம்பலைக்கும்பிடும் தில் இருக்கா உனக்கு? உடம்பு வீங்கிடும்
ஜாக்கிரதை! சவால் விடாதே, சாம்பலாகி விடுவாய்! சாம்பலில்தான் சாவோம், மக்களையும் சாம்பலாக்குவோம்! சூரத்
மாதா கீ ஜே!" என்று அருக்காணி முதல் எச்சரிக்கை
விடுத்தார்.
தொடரும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக