வியாழன், ஏப்ரல் 10, 2014

சாம்பல்தேசம்-8 (நெடுங்கதை)




"1948 முதல் நீ சாம்பல் தயாரித்திருக்கலாம், ஆனால் நீ ஐம்பது வருசத்தில் தயாரித்த சாம்பலைவிடவும் நாங்கள் ஆட்சியில் இருந்த வெறும் நாலேகால் வருசத்தில் தயாரித்த அயோத்தி பிராண்ட் சாம்பல் அதிகம் என்பதை உலகமே அறியும், உலகறியும்! எங்கே பதுக்கி வைத்தாய்? பொக்ரானில் நாங்கள் தயாரித்த சாம்பலை என்ன செய்தாய்? நாட்டில் சாம்பல் தட்டுப்பாட்டைப் போக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகத்தானே மோர்கில் எல்லையில் திட்டமிட்டு பெரும் சாம்பல் மேட்டையே உருவாக்கினோம்? யாரிடம் சவால் விடுகிறாய்? நாங்கள் தயாரிக்காத சாம்பலா? அட, 2002இல் ரயிலை எரித்து நாங்கள் தயாரிக்காத சாம்பலையா நீ தயாரித்துவிடப் போகின்றாய்?  முடிந்தால் நீ அந்த சாம்பல் மேட்டைத் தாண்டிப்பார், பொக்ளேன் கொண்டு அள்ளிப்பார்! சவால் விடுகிறேன்! எத்தனை ஜென்மம் எடுத்தாலும் எவனாலும் முடியாது! இத்தோடு நிறுத்திக்கொள்! எங்கள் கோபத்தை தூண்டி அயோத்தி சாம்பல் ஃபேக்டரியை மீண்டும் திறக்க வைக்காதே! சூலாயுதம் தூக்க வைக்காதே! சூரத் மாதா கி ஜே!" என்று தேஜ்நாத் சிங்கும் வீரேந்திர மூடியும் எச்சரிக்கை விடுத்து பத்திரிக்கைகளுக்கும் டிவிக்களுக்கும் தீனி போட்டனர்.

ராஸ்ட்ரீயக்கட்சியின் டெக்னிக்கலான இந்த எச்சரிக்கைக்கு பதில் சொல்லும் பொறுப்பு தேசியக்கட்சியின் மூத்த தலைவரான மனோன்மணிசிங்குக்கு  தரப்பட்டது. " எல்.பி.ஜி.குடியரசில் பாரம்பரியமாக சாம்பல் தயாரிக்கும் பெருமைக்குரிய ஏகபோகக்குடும்பமான நால்மூர்த்தி பவன் இளவரசரை தரக்குறைவாகப் பேசுவதை நீ நிறுத்து! பிர்லா மாளிகை, பொக்ரான் என்று உதார் விடாதே! 1885இலேயே நாங்கள் சாம்பல் தயாரிப்பை தொடங்கி விட்டோம் என்பதை ஊர் உலகமே அறியும்! எல்பிஜிக்கு நாங்களே பெர்மனெண்ட்! நீ டெம்பரரி! பகத்சிங் கூட்டாளிகளை எரித்து நாங்கள் சாம்பல் தயாரிக்கவில்லையா? 1975 அர்ஜென்ட் நிலையைப் பிரகடனம் செய்து நாங்கள் தயாரித்த சாம்பலை யாரால் அள்ள முடியும்? சிறைச்சாலைகளில் எத்தனை ஆயிரம் அப்பாவிகள், எத்தனை பத்திரிக்கைகள், பத்திரிக்கை ஆபீசுகள், ஆசிரியர்களை சாம்பலாக்கினோம், முடியுமா உன்னால்? போபாலில் பேரிக்கா நாட்டுக்கம்பெனியோடு கூட்டுச்சேர்ந்து ஒரே ராத்திரியில் நாங்கள் தயாரித்த சாம்பலை மிஞ்ச யாரால் முடியும்? ஹர்ஷத்மேத்தாவை வைத்து நாங்கள் தயாரித்த சாம்பலோடு உன்னால் போட்டி போட முடியுமா? பர்கானாக்களில் சாம்பல் தயாரித்த வரலாற்றை மாற்றி ஸ்விட்சர்லாந்தில் பீரங்கி வாங்கி நாங்கள்தானே முதல்முதலில் டாலர் கணக்கில் சாம்பல் தயாரித்தோம்? எங்கள் மூத்த இளவரசருக்கு ‘பீரங்கி ரத்னாஎன்ற பட்டத்தை எல்பிஜி மக்கள் சூட்டி அழகுபார்த்ததை நீ தலைகீழா நின்றாலும் மறைக்க முடியாது. பருத்தி விவசாயிகளையும் சிறு தொழில் முதலாளிகள் தொழிலாளிகள் சில்லறை வர்த்தக வியாபாரிகளையும் குடும்பம் குடும்பமாக சாம்பலாக்கிய பெருமை எங்களை விட்டால் வேறு யாருக்கு? எங்களை விட்டால் நாட்டை சாம்பலாக்க யார் இருக்கின்றார்கள்? எங்கே ஒளித்துவைத்தாய் நாங்கள் மலை மலையாய் தயாரித்த சாம்பலை? ஜெய் ஹோ!" என்று மனோன்மணிசிங் கொடுத்த பரபரப்பு பதிலடி மத்தியபஞ்சாயத்து தேர்தல் கள உஷ்ணத்தை 100 டிகிரிக்கு உயர்த்தியது. 


பீரங்கியும் டாலரும் உனக்கு மட்டுமே சொந்தம் என திமிரோடு திரியாதே! டாலரை கேவலம் நீ எண்ணித்தான் வாங்கியிருப்பாய்! எடைபோட்டு பார்சலாக வாங்கி புது டெக்னிக்கில் சாம்பல் தயாரித்தது நாங்கள்தான் என்பதை நினைத்தால் எங்கள் மீதே எங்களுக்கு பொறாமை உண்டாகின்றது! கார்கிலில் செத்தவர்களுக்கு சவப்பெட்டி வாங்கியதிலும் நாங்கள் டாலர் அடித்து சாம்பல் தயாரித்ததை நீ மறைத்தாலும் உலகம் மறக்காது! எங்கே அந்த சாம்பல் மலைகள்? சூரத் மாதா கீ ஜே!என ராஷ்ட்ரீயக்கட்சியின் தருண் இட்லியும் பீரங்கி மந்திரியாக இருந்த டார்ச் பெர்னாண்டசும் சாட்டையடி கொடுத்தனர்.


சாம்பல் தயாரிப்பில் பன்னெடுங்கால அனுபவம் பெற்ற தயானந்த் சர்மா, ஜகதீஷ் பட்லர், விஜய்குருமா ஆகியோர் அருக்காணி கம்பெனியே! அடக்கிவாசி! குடியரசின் தலைநகரிலேயே சீக்கியர்களை சாம்பலாக்கி சாம்பல் மலைகளையே உருவாக்கினோமே, மறந்துவிட்டாயா? பெரிய இளவரசரின் தம்பியோடு சேர்ந்து சதிடில்லியில் துர்க்மான்கேட் குடிசைகளை எரித்து டன் கணக்கில் சாம்பல் தயாரித்ததை நாடு மறக்குமா? கெரசின்  இப்போதும் நெறைய ஸ்டாக் வச்சிருக்கோம், ஜாக்கிரதை! கெரசினுக்கு வேலை வைக்காதே! குடலை உருவி பஷ்பமாக்கிடுவேன், கபர்தார்! சூரத் மாதா கீ ஜே! என அஹிம்சையோடு எச்சரித்தனர்.


இந்த தேர்தல் கூச்சல் குழப்பத்தில் சோட்டாராஷ்ட்ராவில் பன்னெடுங்காலமாக தாங்கள் தயாரித்துக் குவித்து வரும் சாம்பல் மலைகள் யார் கண்ணிலும் படாமல் போய்விடுமோ என்று பயந்த சவசேனா, மீடியாவை கவரும் பொருட்டு 20-20 கிரிக்கெட் மாட்ச் நடந்து கொண்டிருந்த மைதானத்துக்குள் புகுந்து பிட்சின் நடுவே 6க்கு 2 சைஸ் குழியை தோண்டி, “இந்தக்குழி பாகிஸ்தானுக்காக! பாகிஸ்தான் அணி இதுவரை சேர்த்த ரன்கள் யாவும் இந்தக்குழியில் போட்டு மூடப்படும்! இது எங்க ஏரியா, உள்ளே வராதே! மீறி எவனாவது உள்ளே வந்தே, மவனே சவமாயிடுவே! சூரத் மாதா கீ ஜே!என்று மோர்தாக்கரேயும் அவர் மகன் தயிர்தாக்கரேயும் மச்சான் நெய்தாக்கரேயும் வெண்ணெயாக அறிக்கைவிட்டு தேர்தல் களத்தில் பன்பட்டர்ஜாம் தடவினார்கள். 


"நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எல்பிஜி குடியரசை பேரிக்கா நாட்டின் ஒரு மாகாணமாகவே இணைத்துவிடுவோம்! உன்னால் முடியுமா?" என்று தும்பை பங்குச்சந்தைகடை கேன்டீனில் வேட்டியை மடித்துக்கொண்டே டீ குடித்தபடி  ப.சிற்றம்பலம் ஏபிசிடி டிவியில் நேரடியாக விட்ட சவால் அருக்காணி கம்பெனியை திக்குமுக்காடச் செய்தது. 
தொடரும்...

கருத்துகள் இல்லை: