சனி, ஏப்ரல் 12, 2014

சாம்பல்தேசம்-10 (நெடுங்கதை)



நாட்டின் தென்கோடி துணைப்பஞ்சாயத்தான கடாரநாட்டின் வட்டப்பஞ்சாயத்தான நாகர்கோவிலில் இளவரசர் ஒரு எளிய குடிசையில் தூங்கி எழுந்து திண்ணையில் சிக்கனமாக சாம்பலில் பல்தேய்த்து சிக்கனமாக வாய்கொப்பளிக்கும் படங்கள் பத்திரிக்கைகளில் பாதி இடத்தை அடைத்துக் கொண்டிருந்தன. கழுதைப்புலி, நாய், நரிப்படைகள், வல்லூறு ஹெலிகாப்டர்கள் சூழ அந்தோணிகுரூசு என்ற மீனவர் வீட்டில் இளவரசர் தங்கி அங்கேயே சிக்கனமாக கம்மங்கஞ்சியும் கருவாடும் சாப்பிட்டு சிக்கன வாழ்க்கை நடத்துவதும் மடியில் அந்தோணிகுரூசின் பேத்தியை உட்காரவைத்து "பல் இங்கே சாம்பல் எங்கே?" என்று கேட்கும் காட்சியும் பலவண்ணங்களில் அச்சாகி அருக்காணி கம்பெனிக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. 

இது போதாது என்று பக்கத்து ஊரான தூத்துக்குடியில் நாலு நாளாக பல்தேய்க்காத அதிரடிப்படைகள், ஹெலிகாப்டர்கள் சூழ மீனவர் முருகேசனின் குடும்பத்தோடு பல்தேய்த்து சிக்கன வாழ்க்கை நடத்தும் காட்சியும் ஒண்ணேமுக்கால் பக்கத்துக்கு அச்சாகி இருந்தது. கரியடுப்பின் முன்னால் கோவணம்கட்டி உட்கார்ந்திருக்கும் முருகேசனின் குடும்பத்தோடு உட்கார்ந்து கையில் கருவாட்டைப் பிடித்தபடி வெற்று அடுப்பைக்காட்டி "அடுப்பு இங்கே சாம்பல் எங்கே?" என்று கேட்கும் காட்சியை சாம்பல்ரதம் செல்லும் வழியெங்கும் 30க்கு60 கட்-அவுட்டுக்களாக தேசியக்கட்சியினர் வைத்து அருக்காணி கம்பெனியை வெறுப்பேத்தியிருந்தனர். "அழகர்லாலின் கனவு இவர் சிரிப்பில் நனவு" "ஏழையின் சிரிப்பில் சாம்பலைக் காண்போம்" "சாம்பலோ புளிச்! சிரிப்போ பளிச்!" "மக்கள் சாம்பலே மகேசன் சாம்பல்" "தாயில்லாமல் நானில்லை, அன்னை இல்லாமல் நாடில்லை" "உங்கள் ஓட்டு கரி அடுப்பு சின்னத்துக்கே" போன்ற கோசங்கள் வேறு ஃப்ளொரசன்ட் கலரில் பளிச்சிட்டுக் கொண்டிருந்தன.

நாகர்கோவிலில் இருந்து கடாரநாட்டின் தலைநகர் கிளைவ்பேட்டைக்கு நூறு
ஹெலிகாப்டர்கள் பறக்க இளவரசரின் எளிய சிக்கன ஊர்வலமும் நடந்ததை டிவிக்காரர்கள் வானத்தில் பறந்தபடியே நேரடி ஒளிபரப்பு செய்தனர். ஊர்வலத்தின் பாதையில் ஆகாயத்தில் பறந்தபடி “சூரத்மாதா சுண்டுவிரல்ல சுண்ணாம்பு பட்டாலும் சும்மா இருக்க மாட்டான் இந்த சுப்புராசு!என்றபடி கண்கள் சிவக்க வில்லனை வாயில்ரத்தம் கக்கக்கக்க பூட்ஸ் காலால் உதைத்துக்கொண்டிருந்த நடிகர் குஜிலிகாந்தைப் பார்த்து "அண்ணா, அரசியல்ல எப்போ குதிப்பீங்க?" என்று இளவரசர் கேட்க, "ஹீரோயின்களைக் கட்டிப்பிடிக்க முடியாத அளவுக்கு தொந்தி ஒண்ணும் வீங்கவில்லை, அப்படி ஒரு நிலைமை வரும்போது வேற எங்க போகப்போறேன், கண்டிப்பா அரசியல்லதான் குதிப்பேன், நான் எங்கே குதிப்பேன் எப்போ குதிப்பேன்னு யாருக்கும் தெரியாது, ஆனா குதிக்க வேண்டிய நேரத்துல கரெக்டா குதிப்பேன்! இப்போ சூட்டிங் இருக்கு, டாட்டா!" என்றபடியே குஜிலிகாந்த் காலைச்சுழற்ற ஆரம்பித்தார். எப்படி இவரை தேசியக்கட்சிக்கு இழுப்பது என இளவரசர் திட்டமிடத் தொடங்கினார்.


வழிநெடுகிலும் இளவரசரின் படத்தோடு சாம்பலும் கருவாடும் அடங்கிய
பாக்கெட்டுகள் வீசப்பட்டன. இது தேர்தல் நடத்தை விதி எண் முந்நூத்துநாலு புள்ளி எட்டை மீறிய செயல் என்று ராஷ்ட்ரீய கட்சியின் சட்டவல்லுநர் தருண் இட்லி தேர்தல் கங்காணிகளிடம் புகார் செய்தார். இது பற்றி விசாரிக்க சதிடில்லியில் கூடிய தேர்தல் கங்காணிகள் கால் மணி நேரத்தில் தீர்ப்பு சொன்னார்கள். தேசியக்கட்சி ஆட்சியைக் கைப்பற்றுவது உறுதி என்பதை தனது அனுபவத்தில் உணர்ந்திருந்த தலைமை தேர்தல் கங்காணி "வானத்திலிருந்து இந்த பாக்கெட்டுக்கள் விழுந்தது உண்மைதான், ஆனால் விதி எண் முந்நூத்துனாலு புள்ளி ஒன்பதின் கீழ் தேசியக்கட்சிதான் இதை வீசியது என்பதற்கான ஆதாரம் இல்லை" என்று தீர்ப்பு சொல்லி பான்பீடா போட்டு வாயைக் கொப்புளித்தார்.


கிளைவ்பேட்டை கடற்கரை ஊரணி அரங்கில் கூடிய தேசியக்கட்சிகூட்டணியின்
பிரமாண்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டத்துக்கு தலைமை தாங்கிய கடாரநாட்டின் தானைத்தலைவரும் விரலோவியம், முதுகுக்கு மீதி, கிளியின் மீசை, பாளையங்கோட்டையும் திஹாரும், தெற்கே ஒரு தலைவலி போன்ற காப்பியங்களைப் படைத்தவருமான சிமுகழகத்தின் தலைவர் தமிழ்ச்சித்தர் "என் உயிரினும் மேலான ரெட்டைப்பிறவியே! அழகர்லாலின் பேரப்பிள்ளையே! பெரியன்னையின் வீரப்பிள்ளையே! நீடு துயில் நீக்க வந்த நிலவே! ஆடுபுலி ஆட வந்த மகவே! இளஞ்சிவப்பு ரோஜாவே! எல்பிஜியின் ராஜாவே!, சாம்பலை அள்ளி வருக, சோம்பலைக் கிள்ளி எறிக, நிலையான ஆட்சி தருக!" என்று அடுக்குமொழியில் விளையாடிய பேச்சை பதிவு செய்ய முடியாமல் ரகசிய போலீசார் திணறினர். கச்சேரி, கஸ்மாலம், நாயே, பொறம்போக்கு, தேவிடியா முண்ட, பேமானி, டின் கட்டிடுவேன், வாய்தா, எஃப்.ஐ.ஆர்,ஜாமீன், ரெய்ட், பொடா, குண்டா, 420, கட்டிங், வாயை ஊது, லைசென்ஸ் எடு, சார்ஜ், ஃபயர், கஞ்சா, சரிங்க ஐயா, டீ சொல்லு போன்ற தமிழ் வார்த்தைகளை மட்டுமே மனப்பாடமாக அறிந்திருந்த அவர்கள் குறிப்பெடுக்க முடியாமல் மண்டையை சொறிந்தனர்.

மத்தியபஞ்சாயத்தில் எந்தக்கட்சி
ஆட்சியில் இருந்தாலும் தனது மகன், ஒன்றுவிட்ட மகன், ரெண்டுவிட்ட மகன், மகள், ஒன்றுவிட்ட மகள், மச்சான், ரெண்டுவிட்ட மச்சான், மூணுவிட்ட கொழுந்தன், நாலுவிட்ட பேரன் அனைவரையும் மத்திய பஞ்சாயத்தில் மந்திரி பதவியில் உட்காரவைத்து கட்சியில் ஜனநாயகம் செழித்தோங்க பாடுபட்டவர் தமிழ்ச்சித்தர். தமிழ்ச்சித்தரின் குடும்பமே கட்சி, கட்சியே குடும்பம் என்ற மகத்தான பொதுவுடைமை கட்சிக்குள்/குடும்பத்துக்குள் நிலவியது; ஒருமுறை இவரது பிள்ளைகளுக்குள் சாப்பாட்டுப்பிரச்னையில் சண்டைவந்தபோது அதன் அனல் தென்மண்டலத்துக்குப் பரவி ஒரு பத்திரிக்கை அலுவலகம் தீப்பிடித்ததும் அதன் அனலில் மூன்று பேர் உயிரைவிட்டதும் உலகம் அறிந்த ஒன்று; தன் குடும்பத்து சாப்பாட்டுப் பிரச்னையால் இனிமேல் யாரும் சாகக்கூடாது என்று கண்ணீர் சிந்திய தமிழ்ச்சித்தர், கடாரநாட்டை எட்டாகப்பிரித்து தனது எட்டுபிள்ளைகளுக்கும் எழுதிவைத்தார்; குடும்பத்தின் மற்றவர்கள் பிழைக்க வழி கேட்டபோது, பிறந்த ஊரில் இருந்து கொண்டுவந்த தகரப்பெட்டியில் இருந்த பல கோடி பர்கானாக்களை அள்ளிக்கொடுத்து ‘சினிமா எடுத்து பொழச்சுக்குங்கஎன வழிகாட்டியவர் தமிழ்ச்சித்தர். கடாரநாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பொழப்புத்தேடி தினந்தோறும் பல நூறு இளைஞர்கள் கையில் தகரப்பெட்டியோடு தலைநகர் க்ளைவ்பேட்டைக்கு வண்டியேறி வருவது உலகறிந்த விசயம், எனினும் தமிழ்ச்சித்தரின் தகரப்பெட்டி மட்டும் வற்றாத அமுதசுரபியாக பல கோடி பர்கானாக்களை அள்ளிஅள்ளிக் கொடுத்தவண்ணம் இருப்பதான ரகசியம் இதுவரை யாரும் கண்டிலர், கண்டவர் விண்டிலர்.
தொடரும்...

கருத்துகள் இல்லை: