புதன், ஏப்ரல் 02, 2014

சாம்பல்தேசம்-6 (நெடுங்கதை)


உடனடியாக சதிடில்லி
 அஞ்ஞானபவனில் ஒரு
 பத்திரிக்கையாளர் சந்திப்பைக் கூட்டிய இளவரசர், தான் ஹெலிகாப்டரில் பறந்தபோது கண்ட காட்சியைக்  கூறி தான் மிகுந்த அதிர்ச்சி அடைந்ததாகவும், எனவேதான் பாராசூட் மாட்டி அரசியலில் குதிக்க முடிவெடுத்ததாகவும், எல்.பி.ஜி.குடியரசை அடுத்த நூற்றாண்டுக்கு அழைத்துச்செல்ல முடிவெடுத்து விட்டதாகவும், குறைந்த பட்சம் அடுத்த நூற்றாண்டின் தெருமுக்கு வரையாவது தான் விட்டுவிட்டு வர முடிவெடுத்து விட்டதாகவும்,  எனவே தான் நால்மூர்த்தி பவனின் பாரம்பரியத்தை காக்க சபதம் பூண்டுள்ள அதே சமயம் நால்மூர்த்தி பவன் ஆடம்பர வாழ்க்கையை தான் வெறுப்பதாகவும் தான் இனிமேல் எளிய சிக்கன வாழ்க்கை நடத்தப்போவதன் பொருட்டு ஒரு நாளைக்கு மூன்று வேளை மட்டுமே சாப்பிட இருப்பதாகவும் தேசியக்கட்சியை சீரமைக்கும் பெரும் சுமையையும் தானே சுமக்க இருப்பதாகவும் திட்டவட்டமாக அறிவித்தார்.

தரையில் குந்தியபடி ஒரு பழைய கால சர்க்காவில் நூல் நூற்றுக்கொண்டே பக்கத்தில் ஒரு மண்கலயத்தில் ஆட்டுப்பாலையும் வைத்துக்கொண்டு இளவரசர் கொடுத்த இந்த பேட்டி 350 டிவிக்களிலும் நேரடியாக நாடெங்கும் ஒளிபரப்பான அந்த வினாடியில் தேசமெங்கும் மின்னல்வெட்டி பேரிடி  இடித்து 60 வினாடிகளுக்கு பேய்மழையும் பெய்தது. எல்.பி.ஜி.குடியரசு மக்கள் எதிர்பாராத மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினர். நள்ளிரவுமசாலா அரைகுறை அம்மண மான்மயில்  குத்தாட்டங்களை விடவும் இந்த சீன் சூப்பராக இருப்பதையும்,  ரோஸ் கலரிலும் சிரிக்கும் போது கன்னத்தில் குழி விழும் இளவரசரையும் பார்த்து "இதோ நம்மைக் கரையேற்றும் நாயகன் வந்துவிட்டான்!" என்று கண்ணீர் விட்டனர். நாடெங்கும் ஜெய் ஹோ கோசம் கரைபுரண்டும் தரை உருண்டும் திரண்டும் கட்டுக்கடங்காமல் ஓடியது. டிவி சானல்களில் இதை பார்த்துக்கொண்டிருந்த ஃப்ளெக்ஸ் அச்சு உரிமையாளர்கள் இன்னும் இரண்டு மாதங்களுக்கு தமது வியாபாரம் பிசியாக இருக்கும் என்பதை அறிந்து மகிழ்ச்சியில் கூத்தாடினார்கள்.

அன்றிரவே நால்மூர்த்தி பவனிலிருந்து வெளியேறிய இளவரசர் சதிடில்லி பிளாட்பாரத்தில் ஒரு எளிய குடிசை போட்டு, ஏ.கே.முப்பத்தேழேகால், தாடிவைத்தவர்கள் வந்தால் தானாகவே சுடும் 9/11 ரக துப்பாக்கிகள் ஏந்திய ஓநாய், முள்ளம்பன்றி, செந்நாய்ப்படைகளும் வானத்தில் வௌவால் ரக ஹெலிகாப்டர்களும் காவல்காக்க எளிய சிக்கன வாழ்க்கை நடத்த தொடங்கினார். இதையும் டி.வி.க்கள் உலகமெங்கும் நேரடியாக ஒளிபரப்ப எல்பிஜி மக்கள் பெரும் சந்தோச அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். முக்கியமாக அடுத்த தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றிவிடலாம் என்று மிதப்பில் இருந்த ராஷ்ட்ரீயக்கட்சிக்கு இது எதிர்பாராத பெரும் இடியாக தலையில் இறங்கியது. நடப்பதை நம்ப முடியாமல் திகிலடைந்து சூரத் மாதா நாமத்தை ஜெபிக்கத் தொடங்கினர். தமது அரைக்கால் டவுசர் தலைமையகத்தை தொடர்பு கொண்டு நடப்பது என்ன என்பதை தெளிவுபடுத்துமாறும் வழிகாட்டுமாறும் அழுதனர்.

பெரியன்னை, தம்பி, மதினி, மச்சினிச்சி, கொழுந்தன், இத்தாலி நாட்டில் துப்பாக்கிக்கடை நடத்தும் சின்னதாத்தா, ஸ்விட்சர்லாந்தில் பீரங்கி கடை நடத்தும் பெரிய தாத்தா போன்றோர் எவ்வளவோ கெஞ்சிக்கேட்டும் தனது இந்த முடிவில் மாற்றம் இல்லை என்றும் எல்.பி.ஜி.குடியரசை அடுத்த நூற்றாண்டுக்கு அழைத்துச் செல்லும் அடுத்த கட்ட நடவடிக்கையை திட்டமிட வேண்டியிருப்பதால் தன்னை தனியே விடுமாறும் தனது சிக்கன வாழ்க்கையை தடை செய்ய வேண்டாம் என்றும் இளவரசர் சத்தம் போட்டது உலகமெங்கும் நேரடி ஒளிபரப்பானது. இளவரசர் அன்றிரவு சிக்கன உணவாக வெறும் ஆட்டுப்பாலும் எளிய கடலைமிட்டாயும் சாப்பிட்டதும் தங்கத்தட்டை அவரே கழுவி வைத்ததும் நேரடி ஒளிபரப்பானது. இதற்கான செலவு ஒரு டாலர் மட்டுமே என்றும் இதை நேரடியாக வர்ணனை செய்துகொண்டிருந்த பிரபல கிரிக்கெட் வீரர்  நூருதீன், இளவரசர் ஆறு மிடறு பால் குடித்தவுடன் பழக்கதோசத்தில் உணர்ச்சிவசப்பட்டு ஒரு ஓவர் பிரச்னையில்லாமல் முடிந்துவிட்டதாகவும் யாரும் அவுட் இல்லை என்றும் அறிவித்து இளவரசரிடம் திட்டு வாங்கி “சே! தேர்ட் அம்பயர் இல்லாமப் போயிட்டாரே!என்று புலம்பியவாறே இடத்தைக் காலி செய்தார்;

"நால்மூர்த்தி பவன் இளவரசர் அரசியலில் குதிப்பு! சிறு சிராய்ப்புக்கூட இல்லாமல் குதித்த அதிசயம்!" "ஆட்டுப்பால் குடித்த இளவரசர்! எல்பிஜி அரசியலில் திடீர் திருப்பம்!" "மத்திய பஞ்சாயத்து நாற்காலிக்கு குறி வைப்பா?" "கடலைமிட்டாய் சாப்பிட்ட நால்மூர்த்தி பவன் இளவரசர்! எதிர்க்கட்சிகள் கலக்கம்!" “ராஷ்ட்ரீயக்கட்சியின் எதிர்காலம் கோவிந்தா!” ”நாளை முதல் இளவரசரின் வாழ்க்கை வரலாறு தொடங்குகின்றது! வாங்கிப் படியுங்கள்!”... பெட்டிக்கடைகளில் இது போன்ற போஸ்டர்களைப் படிக்க மக்கள் முண்டியடித்தனர். வெறும் மாமியார் மருமகள் கிரிமினல் சீரியல்களை பார்த்து நொம்பலப்பட்டுப் போயிருந்த எல்பிஜிதேச மக்களுக்கு  இது சுவாரசியமாக இருந்ததால் காயல்கல்பம் சாப்பிட்ட ரேஞ்சுக்கு முறுக்கிக்கொண்டு எழுந்தார்கள்.

தேசியக்கட்சிக்காரர்கள் நாடு முழுவதும் தெருமுனைகளில் டிவி.பெட்டிகள் வைத்து இளவரசரின் சிக்கனவாழ்க்கையை மக்களுக்கு இலவசமாக காட்டிக்கொண்டிருந்தார்கள். தெருக்களில் தற்காலிகமாக பொரி, ஐஸ்க்ரீம், பஞ்சுமிட்டாய், சவ்வுமிட்டாய், மோர், சர்பத், பாக்கெட் சாதம் கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் கொடிகட்டிப் பறந்தது. கடலைமிட்டாய்க்கு தனி கவுன்டர் திறக்கப்பட்டது. பேருந்து ரயில்களில் கூட்டம் இல்லாமல் காற்றாடியது, கிரிக்கெட் மைதானத்திலும் டாஸ்மாக் கடைகளிலும் மட்டும் கூட்டம் அலை மோதியது. சந்தடிசாக்கில் யாரோ ஒருவர் இளவரசரின் சிறுவயது படங்கள் என்று சொல்லி 3x6 சைஸ் படங்களை விற்க ஆரம்பித்தார். படத்தில் இருந்த பையனுக்கு கன்னங்கள் ரோஸ் கலரில் இருந்ததால் மக்களும் போட்டிபோட்டுக் கொண்டு வாங்கினர்.

  
தொடரும்...


கருத்துகள் இல்லை: