சனி, மார்ச் 29, 2014

சாம்பல்தேசம்-5 (நெடுங்கதை)



இளவரசர் சிறுபிள்ளையாக இருந்தபோது மோட்சத்தீவுக்கு குடும்பத்தோடு பிக்னிக் போனதும் போன இடத்தில் பாயசம் குடித்தபோது பொறையேறியதும் தான் இளவரசர் தலையில் தட்டி பொறையை நிப்பாட்டியதும் காரியக்கமிட்டி உறுப்பினரும் பிரபல நடிகருமான சமிதாப் அச்சனுக்கு ஞாபகம் வர, தான் சொன்னால் இளவரசர் கேட்பார் என்றும், தவிர சாக்கடையில் குதிப்பதும் எல்.பி.ஜி.குடியரசின் அரசியலில் குதிப்பதும் ஒன்றுதான் என்பதை பக்குவமாக எடுத்துச்சொன்னால் இளவரசர் புரிந்துகொள்வார் என்றும் சொல்லி தானே பொறுப்பேற்றுக் கொண்டார். இளவரசர் அரசியலில் குதிக்கும்போது கைகாலில் அடிபடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அச்சனின் கடமை என்றும் தேவைப்பட்டால் ஹாலிவுட்டில் இருந்து டூப்புக்களை அழைத்துக் கொள்ளலாம்  என்றும் இரவு ரெண்டேமுக்கால் மணிக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இறுதியாக தேசியக்கட்சியின் கொள்கைப்பாடலான “ஓ சூரத்மாதா! சேவ் பேரிக்கா!என்ற பாடல் பாடப்பட்டது.
 

அதுவரை சிறுநீர் கழிக்கமுடியாமல் அடக்கி வைத்திருந்த காரியக்கமிட்டி மெம்பர்கள் முண்டியடித்து கதவைத் திறந்து வரலாற்றுப்புகழ் வாய்ந்த செங்கோட்டை ரோட்டில் நிம்மதியாக சிறுநீர் பெருநீர் போன்றவற்றைக் கழித்து வாயு பிரித்து ஏப்பம் விட்டனர்.
 
வெளியே காத்திருந்த டி.வி.செய்தியாளர்களுக்கு பெரியன்னை பேட்டியளித்தார். "நமஸ்தே! இன்னும் ரெண்டு நாளில் தேசியக்கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். அடுத்த தேர்தலிலும் நாங்களே ஆட்சியைப் பிடிப்போம்! ஜெய் ஹிந்த்! ஜெய் ஹோ!" என்று இந்தியிலும் இங்க்லீசிலுமாக கலந்துகட்டி பேட்டியளித்துவிட்டு பூனை, ஓநாய், முள்ளம்பன்றிப்படைகள் சூழ காரில் ஏறி சைரன் ஒலிக்க பறந்தார். பெரியன்னை புறப்பட்ட விநாடியில் எல்லாரும் சாப்பாட்டு அறைக்குள் ஒருத்தரை ஒருத்தர் தள்ளிக்கொண்டு நுழைந்தார்கள்.
*****************************************
ராஷ்ட்ரீயக்கட்சியில் வலைவீசித்தேடியும் "ரோஸ் கலரில் கன்னமும் சிரிக்கும்போது கன்னத்தில் குழியும் விழும் இளைஞர்" ஒருத்தரும் தட்டுப்படாததால் வெறுப்படைந்த பெரிசுகள் நீண்ட விவாதத்துக்குப்பின்னும் ஒரு முடிவுக்கு வர முடியாமல் குழம்பி காக்கிடவுசர் தலைமையகத்தை தொடர்பு கொண்டார்கள்; அவர்களின் ஆலோசனைப்படி சாம்பல் பிரசினையை மையமாக வைத்தே தேர்தலைச்சந்திப்பது என வேறு வழியின்றி முடிவுசெய்தனர்.
**************************************
 

அன்றைக்கும் வழக்கம் போலவே "பர்ர்ர்ர்தேசி பர்ர்ர்ர்தேசி ஜானா நஹீ" பாடலை முணுமுணுத்தபடியே ஹெலிகாப்டரை ஓட்டிக்கொண்டிருந்த இளவரசர்  தற்செயலாக கீழே பார்க்க ஏதோ வித்தியாசமாகத் தெரிவதை உணர்ந்தார். கூர்மையாகக் கவனித்த பின் அதிர்ச்சியடைந்தார். சக பைலட்டை தொடையில் தட்டி, "ஜி! பீச்சே தேஹ்கோ!" என்று சொல்ல, அவரும் கீழே பார்த்தார்; ஒருபக்கம் பருத்தி விவசாயிகள் கத்தரிக்காய் விவசாயிகள் நெசவுத்தொழிலாளர்கள் சிறுதொழில் செய்பவர்கள் சில்லறை வியாபாரிகள் கூட்டம் கூட்டமாக விசம் குடித்து தற்கொலை செய்துகொள்வதும் பக்கத்திலேயே கிரிக்கெட் மைதானத்தில் 20க்கு 20 கிரிக்கெட் விளையாட்டில் தொடைதெரிய ஆடும் பெண்களைப் பார்த்து லட்சக்கணக்கான எல்பிஜி தேசத்துமக்கள் கைகொட்டி ரசிப்பதும், மட்டையாளர்களை ஏலம் எடுத்த தொழிலதிபர்களும் கணிப்பாளர்களும் (கிரிக்கெட் விளையாடத் தெரியாத மக்குகள் இவர்களை சூதாடிகள் என்று சொல்கின்றார்கள்) கத்தை கத்தையாக பணத்தை ஆட்டிக்கொண்டு லட்சம், ரெண்டு லட்சம், அஞ்சு லட்சம் என கூச்சல் இடுவதும் ஆன வழக்கமான காட்சிகள் கண்ணில் படவே புதுசா என்ன இருக்கு என்ற தொனியில் "அச்சா சைட் சீயிங்" என்றார். 


எரிச்சல் அடைந்த இளவரசர் "அடச்சீ! சரியான முட்டாளாக இருக்கிறானே!" என்ற படியே தான் உணர்ந்ததைச் சொன்னார். "மற்ற தேசங்களெல்லாம் அடுத்த நூற்றாண்டை நோக்கி வேகமாக நகர்ந்து செல்ல நமது தாய்நாடான எல்.பி.ஜி.குடியரசு மட்டும் பெயிலான பையன் மாதிரி அதே இடத்தில் அசையாமல் இருப்பது உன் கண்ணுக்கு தெரியவில்லையா? என்ன பைலட் நீ?" என்று கடிந்துகொள்ள, அவரும் உடனடியாக பைனாகுலரை எடுத்து உற்றுப்பார்த்து "அட ஆமா!" என்று அதிர்ச்சி அடைந்தார். "இது நமக்கு அவமானம் இல்லையா?" என்று ஒரு நொடி யோசித்த இளவரசர் உடனடியாக எதிரே இருந்த டிஸ்யூ பேப்பரை எடுத்து வேலையை ராஜினாமா செய்வதாகவும் சக பைலட்டிடம் பொறுப்பை ஒப்படைப்பதாகவும் எழுதிக்கொடுத்துவிட்டு முதுகில் பாராசூட்டை மாட்டியபடியே "தேசம் அழைக்கின்றது, குட் பை! ஜெய் ஹிந்த்!" என்றபடியே கதவைத் திறந்து கீழே குதித்தார். நேராக தனது தாய் வீடான நால்மூர்த்தி பவன் புல்வெளியில் வந்து இறங்கினார்.  

தனது அன்னையைப் பார்த்து தான் கண்ட காட்சியை காண ஓடினார். தனது அம்மாவை நடுவீட்டில் உட்காரவைத்து சுற்றிலும் உட்கார்ந்து கொண்டு காரியக்கமிட்டி உறுப்பினர்கள் "நாட்டுக்கு அம்சம் இருபது, வீட்டுக்கு அம்சம் நீ இருப்பது" "தாயில்லாமல் நானில்லை, நீ இல்லாமல் நாடில்லை" என்று கஞ்சிரா, முரகோஸ், டோலக், ஷெனாய் முழங்க கோரசாகப் பாடிக்கொண்டிருந்த காட்சியைக் கண்ட இளவரசர் “என்ன கண்றாவி! எப்பவும் இந்த இழவுதானா?என எரிச்சலடைந்தார். இருநூறு நாள் வேலைத்திட்டத்தில் இவர்களை தள்ளிவிட வேண்டும் என கறுவினார். 
 
தொடரும்...

கருத்துகள் இல்லை: