1) முகனூல் பதிவில் நண்பர் தேவநாதன் மாட்டுக்கறி குறித்து சில விசயங்களை நினைவு படுத்தியிருந்தார். ஆட்டுக்கறியின் விலையோடு ஒப்பிட
மாட்டுக்கறியின் விலை குறைவு. ஆனால் போதிய புரோட்டின் கிடைக்கின்றது. விசயம்
என்னவெனில் முஸ்லிம் மக்களும் இந்துக்களில் தாழ்த்தப்பட்டவர்களும் மாட்டுக்கறி
உண்பார்கள் என்பதாக மாட்டுக்கறியின் மீது சாதீய அசூயை அரசியல் பூசப்பட்டு பன்னெடுங்காலம்
ஆகின்றது. அதாவது ’சுத்த’ சாதியினர் மாட்டுக்கறி சாப்பிட மாட்டார்கள்
என்பதே இதன் உள் பிரச்சாரம்! இந்தப் பிரச்சாரத்திற்கு முஸ்லிம் மக்களும்
காலப்போக்கில் பலியானார்கள் என்பதே வேதனை! ‘ஐயோ, நாங்க
மாட்டுக்கறி சாப்ட மாட்டோம் சார்!’ என்று
சொல்லும் முஸ்லிம்களை நான் பார்த்திருக்கின்றேன்! அதாவது இவர் ‘சுத்த’ சாதிக்காரராம்! இஸ்லாமில்
எங்கே ஐயா சாதி???
2) கேரள மாநிலம் ஒரு காலத்தில்
சாதீயப்பிடிமானத்தின் கோட்டையாக இருந்தது என்பது வரலாறு! விவேகானந்தரும்
அப்படித்தான் கருத்து சொன்னார். தொடர்ந்த சமூக விழிப்பு பிரச்சாரம், இடதுசாரி
இயக்கங்களின் வளர்ச்சி, செல்வாக்கு ஆகியவற்றின் காரணமாக அங்கே சாதீயக்கொடுமைகள்
(தமிழகத்தோடு ஒப்பிடும்போது) இல்லையென்றே சொல்லலாம். தந்தை பெரியார் வெறும் கடவுள்
மறுப்பு பிரச்சாரம் மட்டும் செய்யவில்லை, அவரது பணியில் கடவுள் மறுப்பு என்பது
இரண்டாம் அல்லது மூன்றாம் இடத்தில்தான் இருந்தது; முதலிடம் சாதீய மறுப்பு,
மூடப்பழக்கவழக்க மறுப்பு, சுயமரியாதை ஆகிவற்றுக்கான பிரச்சாரம், இரண்டாம் இடம்
பெண்ணுரிமை, பெண்களுக்கு சொத்துரிமை, பால்ய விவாக மறுப்பு, விதவை மறுமணம், அதன்
பின்னரே கடவுள் என்ற கருத்தாக்கத்தின் மீதான விமர்சனம், தாக்குதல் என்பது. இத்தனை
பிரச்சாரத்தின் ஊடாக அவர் மாட்டுக்கறி அரசியல் பற்றி பேசியுள்ளார்.
3) சாதீயப்பிடிமானத்தின் பைத்தியக்கார சிறைச்சாலை என விவேகானந்தரால் வர்ணிக்கப்பட்ட கேரளாவில் இன்று ஹோட்டல்களில் மாட்டுக்கறி சர்வ சாதாரணம், ஆட்டுக்கறி இரண்டாம் பட்சமே. ‘உயர்’சாதி இந்து என்பவர்கள் தவிர்த்து அனைத்து இந்து சாதியினரும் மாட்டுக்கறி சாப்பிடுகின்றார்கள். நான் கேரளாவில் பணியில் இருந்த அரசு அலுவலக கேண்ட்டீனில் மாட்டுக்கறி கிடைத்தது என்று நான் சொன்னால் பல நண்பர்கள் வியப்புறக்கூடும்; இன்னும் பல நண்பர்கள் ‘சாமிக்கு அடுக்குமா? பாரத்மாதாவுக்கு அடுக்குமா?’ எனவும் அதிர்ச்சியடையக்கூடும். மாட்டுக்கறி சாப்பிட்டுவிட்டு தமது பணிகளை அரசு ஊழியர்கள் செவ்வனே திறம்பட செய்து முடித்தார்கள் என்பதுதான் எனது பதிலாக இருக்கும்.
4) திராவிட இயக்கமும் தந்தை பெரியாரின் பல
பத்தாண்டுகள் நெடிய பிரச்சாரமும் வேரூன்றிய தமிழகத்தில் மாட்டுக்கறிக்கு ஏன் இந்த
அசூயை அரசியல் சாயம், எப்படி மாட்டுக்கறி சாதியுடன் முடிச்சுப்போடப்பட்டது என்பது
குறித்த கேள்விக்கு, திராவிடக்கட்சிகளும் தந்தை பெரியார் மரணம் வரை அவருடன் நான்
கூடவே இருந்தேன், அவர் கக்கூசுக்கு போனால் தண்ணீர் எடுத்து கொடுத்தது நான்தான்,
அவர் நடக்க தடியெடுத்துக் கொடுத்தது நான்தான் என்பதாக அளவுக்கு அதிகமாக சொந்தம்
கொண்டாடியவர்களும் கொண்டாடுபவர்களும் பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள்; குறைந்த
பட்சம் ‘நான் திராவிட இயக்கத்துக்காரன், கொட்டும் மழையில் ராபின்சன் பூங்காவில்
திமுக தொடங்கிய அன்றுமுதல் நான் திமுககாரன், கறுப்புச்சட்டைக்காரன்’ என்று சொல்லிக்கொள்பவர்கள் எத்தனை பேர் மாட்டுக்கறி சாப்பிடுகின்றார்கள்,
சாதி மறுப்புக்காரர்கள் என்பதே கேள்விக்குறிதான்; ’என்னய்யா,
நெத்தியிலே ரத்தமா?’ என தன் கட்சியின் அமைச்சர் ஒருத்தரை திமுக தலைவர்
கிண்டல் அடிக்கும் அளவுக்குத்தான் அவர்களின் பகுத்தறிவு, பெரியார் பள்ளியின் அறிவு
என்பதெல்லாம்.
5) அஇஅதிமுக-வை விடுங்கள், அவர்கள் தாய்
மூகாம்பிகையை வழிபட்ட தலைவரின் வழிவந்தவர்கள்; திமுக தலைவர்களை பாருங்கள்; ஐயப்பனுக்கு
மாலை போடுவது, தவறாமல் அந்த அம்மன் விரதம் இந்த அம்மன் விரதம் இருப்பது, செவ்வாய்
வெள்ளிகளில் மாமிசம் சாப்பிடாமல் ’கட்டுப்பாடு’ காப்பது, தமது கார்களில் மந்திரித்த துணிகளை,
முடிகளை, எலுமிச்சம் பழங்களை கட்டுவது என ‘பெரிய பகுத்தறிவு’ப்
பாரம்பரியத்துக்கு சொந்தக்காரர்களாக இருக்கின்றார்கள்; மற்றொரு புறம் சத்தமின்றி
விளம்பரம் ஏதும் இன்றி இடதுசாரிக்கட்சியினர் சாதி மறுப்பு திருமணம், விதவைகளை
மறுமணம் செய்வது, கடவுள் மறுப்பு, சாதி மறுத்த காதல்திருமணத்தை தமது
குடும்பங்களில் நடத்துவது, மாட்டுக்கறி சாப்பிடுவது என மவுனமாக ஒரு இயக்கத்தை
தொடர்ந்து செய்துகொண்டே இருக்கின்றார்கள்; தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்
தனது மாநாடுகளில் மாட்டுக்கறி உணவை பரிமாறுகின்றது, கருவாடு கூழ் பரிமாறுகின்றது.
6) மாட்டுக்கறியை அருவருப்பாக பேசுபவர்கள்
மத்தியில் எனது பிரச்சாரம் இப்படித்தான் இருக்கும்: ‘நீங்கள் உபயோகிக்கும் மின்சாரம், பல்பு, ஃபேன்,
பயணிக்கும் கார், பேருந்து, ரயில், ஆகாயவிமானம்,
எழுதும் பேனா, தொலைபேசி, நவீன உலகின் கண்டுபிடிப்பான கம்ப்யூட்டர், இண்டெர்னெட், மருந்து, மாத்திரை,
டிவி, ஏன், உங்களை
டீசண்ட்டாக காட்ட உடுத்தும் பேண்ட், சட்டை, கோட், ஏடிஎம்
எந்திரம்... என எல்லாமே மாட்டுக்கறியும் பன்றிக்கறியும் சாப்பிடுபவன்
கண்டுபிடித்தவைதான்! ஐயோ, இவற்றை
நான் தொட மாட்டேன் என்று சொல்லுங்களேன்?’
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக