திங்கள், டிசம்பர் 16, 2013

தொப்புள்கொடிகளும் மலக்குடல்களும்-11



45) காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோதெல்லாம் நாடாளுமன்றம் கூடிய அத்தனை கூட்டங்களும் பாரதீய ஜனதாக் கட்சியினரின் அமளி, கூச்சல் குழப்பம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு மக்கள் பணம் வீணடிக்கப்படுவதாக காங்கிரஸ் தலைவர்கள் பத்திரிக்கையாளர்களை கூட்டி அங்கலாய்ப்பது வழக்கமானது; உண்மையில் காங்கிரஸ் கொண்டுவரும் மக்கள் விரோத மசோதாக்கள் அனைத்தும் விவாதம் ஏதும் இன்றி நிறைவேறவே காங்கிரசும் பிஜேபியும் சேர்ந்து அண்டர்கிரவுண்ட் ஒப்பந்தம் செய்து கொள்கின்றன என்பதை வரலாறு மெய்ப்பிக்கின்றது. காங்கிரசால் முன்மொழியப்பட்ட புதிய பென்சன் திட்டம், இன்சூரன்ஸ், வங்கித்துறைகளில் அந்நிய நாட்டு முதலாளிகள் நுழைய வழி, சில்லரை வணிகத்தில் வால்மார்ட் போன்ற பெரும் அந்நிய நாட்டு முதலைகள் முதலீடு போன்ற மக்கள்விரோத மசோதாக்கள் யாவும் பிஜேபியின் ஆதரவுடன்தான் நிறைவேற்றப்பட்டன என்பது மோசடி வரலாறு. அதேபோல் போபால் விசவாயு வழக்கில் தொடர்புடைய அமெரிக்க யூனியன் கார்பைடு முதலாளியான வாரன் ஆண்டர்சனை இரண்டு கட்சிகளுமே பாதுகாத்து தங்கள் அமெரிக்க விசுவாசத்தை போட்டிபோட்டு காப்பாற்றிக் கொண்டார்கள். இது ஒரு சிறிய உதாரணம் மட்டுமே. மஹாராஷ்ட்ராவில் பிஜேபி சிவசேனா கூட்டணி ஆட்சி இருந்தபோதுதான் டாபோல் மின்சாரத்திட்டத்தை என்ரான் என்ற அமெரிக்க கம்பெனியிடம் கொடுத்தார்கள் என்பதும் அந்த அமெரிக்க முதலாளி ஒருநாள் லாபம் அனைத்தையும் சுருட்டிக்கொண்டு ஓடிவிட்டான் என்பது மற்றொரு உதாரணம் அல்லவா! அமெரிக்க அரசின், அமெரிக்க கார்ப்பொரேட்டுக்களின் நலன் காப்பதில் இரண்டு கட்சிகளுக்கும் போட்டி வைத்தால் கட்டியிருக்கும் துணியையும் கழட்டிவைத்துவிட்டு ஓடுவார்கள் என்பதை நீண்ட கட்டுரையாகவே எழுதலாம்.

46) இன்றைய நிலையில் 1947க்குப் பின் மிக மிகச்சீரழிந்த ஒரு பொருளாதார நிலையில் நாட்டைக் கொண்டு வந்து நிறுத்தியதில் காங்கிரஸ், பாரதீய ஜனதா இரண்டு கட்சிகளுக்கும் ஆகப்பெரும் பொறுப்பு உள்ளது.  ஆனால் இந்த இரண்டு கட்சிகளும் இரண்டு மல்யுத்த வீரர்களை தெருவில் இறக்கி வித்தை காட்டுவதைப்போல் நரமாமிசமோடியையும் ராஹுல் காந்தியையும் களத்தில் இறக்கி தெருக்களில் அடித்துக்கொள்ளச்செய்து மக்களை ஏமாற்றுகின்றார்கள், ஊடகங்களும் காங்கிரஸை விட்டால் பிஜேபி, பிஜேபியை விட்டால் காங்கிரஸ் என்பதுபோன்ற தோற்றத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்த இந்த இரண்டு தனிநபர்களையும் தலைப்புச்செய்திகளாக சித்தரிக்க அரும்பாடு படுகின்றன. ஏற்கனவே குறிப்பிட்டபடி பெரும்பான்மையான ஊடகங்கள் இந்த இரண்டு கட்சிகளால் பலன் அடைந்த கார்ப்பொரேட்டுக்களின் கையில் உள்ளவை என்பதால் ஊடகங்களின் அவசரத்தையும் உள்நோக்கத்தையும் நம்மால் புரிந்துகொள்ள முடிகின்றது. ஆனால் கடந்த இருபது வருடங்களாக, குறிப்பாக கடந்த ஐந்து வருடங்களில்தான் இந்த தேசம் அதிகபட்ச சீரழிவை சந்தித்தது என்பதையும் இதன் மொத்த சுமையும் சாமானிய இந்தியர்களின் தலையில்தான் விடிந்தது என்பதையும் முற்போக்கு ஜனநாயக சக்திகள் மறக்கமாட்டார்கள்; இந்த இரண்டு கட்சிகளையும், இந்த சீரழிவிற்கு துணைபோன, போகின்ற சக்திகள் எந்த வடிவில் வந்தாலும், இந்த இரண்டு பிரதான கட்சிகளுக்கு சாதகமாக உழைக்கும் மக்களின் உணர்ச்சிகளை எளிதில் திசைதிருப்பிவிட்டு அவர்களை சாதி மத அடிப்படையில் பிரிக்கத்தக்க  எத்தகைய தந்திரமான பிரச்சாரத்தை  செய்தாலும் அவர்களையும் அம்பலப்படுத்த முற்போக்கு ஜனநாயக சக்திகள் தம்மால் இயன்றவரை உழைப்பார்கள்; நடக்கவுள்ள தேர்தல் இந்தியாவின், இந்திய மக்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கின்ற தேர்தலே என்பதை மீண்டும் மீண்டும் மக்களிடையே பிரச்சாரம் செய்வார்கள்; சாதி மத அடிப்படையில் சாமானிய மக்களைக் கூறுபோட முயலும் எந்த சக்தியையும் கூட்டணியையும் எந்த வடிவில் வந்தாலும் அம்பலப்படுத்துவார்கள்; தமிழகத்திலும் இப்பணியை செவ்வனே செய்வார்கள்.

முற்றும்.

கருத்துகள் இல்லை: