ஞாயிறு, டிசம்பர் 15, 2013

தொப்புள்கொடிகளும் மலக்குடல்களும்-10



42) இந்தக் காலகட்டத்தில்தான் உலக கோடீசுவரர்கள் வரிசையில் இந்தியர்களும் இடம் பிடித்ததாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன. இதே காலகட்டத்தில்தான் இந்தியாவில் வசதியாக வாழ்வோருக்கும் ஏழைகளுக்கும் ஆன இடைவெளி அதிகமாக விரிவடைந்து கொண்டே செல்வதாகவும் புள்ளிவிவரங்கள் உறுதியாக சொல்கின்றன; இந்தக் காலகட்டத்தில்தான் மும்பையில் அம்பானி என்ற தனிநபர் தனது 4 பேர் கொண்ட குடும்பத்துக்காக 20 மாடிகளுக்கு மேல் ஒரு வீட்டைக் கட்டிக்கொண்டிருக்கின்றார்; அவரது வீட்டில் இருந்து சில மணி நேரப்பயணத்தில் உள்ள விதர்ப்பா என்ற ஊரில்தான் இந்தியாவில் அதிகபட்சமாக விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள், பட்டினியால் செத்தவர்கள் எண்ணிக்கை மிக அதிகமானது. இதே கால கட்டத்தில்தான் இந்தியர்களில் 60 கோடிப்பேர் இரவு உணவு உண்ணாமல் பட்டினியுடன் உறங்கச் செல்கின்றார்கள்; இதே காலகட்டத்தில்தான் விவசாய நாடான இந்தியாவில் இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள். இக்காலகட்டம் முழுமையும் காங்கிரசும் பிஜேபியும் மாறி மாறி ஆட்சியில் இருந்தபோது ஒரே விதமான மக்கள் விரோத கொள்கைகளைத்தான் நடைமுறைப்படுத்தினார்கள் என்பதும், ஒருவருக்கொருவர் இதற்காக தோள் கொடுத்தார்கள் என்பதும் வரலாற்றுப்பதிவு.

43) 1996ஆம் ஆண்டு நடந்த தேர்தலுக்குப்பின் வந்த காலம் ஒரு சோதனைக்காலம்; தன்னால் ஒரு பெரும்பான்மை அரசை அமைக்க முடியும் என்று (வலை வீசி ஆள் பிடித்து விடலாம் என்ற நம்பிக்கை என்று சொல்ல வேண்டும்) பிரதமரான வாஜ்பேயி 13 நாட்களுக்குப்பின் வெளியேறினார். தொடர்ந்து காங்கிரஸ், இடதுசாரிகள் ஆதரவுடன் தேவ கவ்டா பிரதமர், அதன் பின் இந்தர் குமார் குஜ்ரால் பிரதமர் எனக் கண்டோம்; அஇஅதிமுக ஆதரவுடன் மீண்டும் பிஜேபியின் வாஜ்பேயி 1998இல் பிரதமர்.

44) 1992 டிசம்பர் ஆறு அன்று (அண்ணல் அம்பேத்கரை அவமதிக்க வேண்டுமென்றே இந்த நாளை சங் பரிவார் தேர்ந்தெடுத்தது என்பதை நெடுமாறன், வைகோ, தமிழருவி ஆகியோருக்கு மீண்டும் நினைவு படுத்துவோம்) பாபர் மசூதியை இடித்தார்கள். ராமர் இங்கேதான் பிறந்தார் என்று கூட இருந்து பிரசவம் பார்த்த மருத்துவச்சி போல சூடம் அணைத்து சத்தியம் செய்தார்கள். புத்தருக்கும் இயேசுவுக்கும் முகமதுநபிகளுக்கும் பிறந்த தேதியை வரலாறு நிர்ணயம் செய்துள்ளது; அதேபோல் ராமரின் பிறந்ததேதி என்ன என்று கேட்டால் தேசவிரோதி என்று சொல்கின்றார்கள். இரண்டு முறை ஆட்சியில் இருந்தபோதும் ராமர்கோவிலை ஏன் கட்டவில்லை என்று கேட்டாலும் தேசதுரோகி என்று சொல்கின்றார்கள். தேர்தலுக்குத்தேர்தல் மட்டுமே ராமர் பிறப்பார் என்பது இதன் மூலம் தெரிய வந்தது.

....தொடரும்

கருத்துகள் இல்லை: