தும்பை கடற்கரையில்
இறங்கிய ராபர்ட் கிளைவ், பாரம்பரிய முறைப்படி ’கேட்வே
ஆஃப் எல்பிஜி’ வழியே நுழைந்து
வந்தார்; இந்த
கேட் வழியே உள்ளே நுழைபவர்கள் தொலைதூரத்தில் உள்ள தலைநகர் சதிடில்லிக்கு நொடியில்
சென்றடைந்துவிடலாம் என்பது இக்கேட்டின் சிறப்பு. கிளைவுக்கு தேசியக்கட்சியின்
மூத்ததலைவர் மனோன்மணிசிங் மாலைமரியாதையோடு பூரணகும்ப மரியாதையும் செலுத்த, ராஷ்ட்ரீயக்கட்சியின்
தலைவர் அருக்காணி ஜெனெரல் டயருக்கு மாலையிட்டு குஜராத்தில் இருந்து கொண்டுவந்த
ரத்தத்தில் குங்குமம் இட்டது ஒரே கண்கொள்ளாக் காட்சியாக இருந்ததை உலகத்தில் உள்ள
அத்தனை டிவி சானல்களும் நேரடியாக ஒளிபரப்பின.
சிமுக தலைவர் எப்போதும்போல
எட்டுத்தொகை பத்துப்பாட்டு போன்ற நூல்களில் இருந்து அடிமையாய் இருப்பதில் அளவற்ற
ஆனந்தம் இருப்பதற்கான அடுக்கடுக்கான ஆதாரங்களை அள்ளி வீசி இன்னும் பல
நூற்றாண்டுகளுக்கு இப்படியேதான் எல்பிஜி குடியரசு இருக்கும், பேரிக்காவின் நலனின்
பொருட்டே தனது குடும்பமாகிய கட்சியும் கட்சியாகிய குடும்பமும் கடந்த அறுபது
வருடங்களாகப் பாடுபட்டுக்கொண்டிருக்கின்றது, இதெல்லாம் டான்சி ராணிகளுக்கு
புரியாது என்ற உறுதிமொழியையும் கிளைவுக்கு அளித்தார். பொன்னிறத்தலைவன் காலத்தில்
இருந்தே தனது கட்சியும் இதன் பொருட்டே பாடுபட்டுக்கொண்டிருப்பதாகவும் இதெல்லாம்
சிமுக துரோகிகளுக்கு புரியாது என்றும் ஆனால் புரிய வேண்டியவர்களுக்குப்புரியும்
என்றும் அதே இடத்தில் அஇசிமுக தலைவர் சூடான பதிலடி கொடுத்தார்; இந்த இருவரையும்
கூட இருந்து பார்த்தவன் நான், இருவரும் துரோகிகள், என்னை ஏமாற்ற முடியாது;
பேரிக்கா நாட்டின் நலனுக்காக பாடுபடுவதில் வீரேந்திரமூடியை விஞ்ச எந்தக்கொம்பனாலும் முடியாது, நாடெங்கும்
வீரேந்திரமூடியின் அலை வீசுது பார்! என கருப்புத்துண்டை இடுப்பில் கட்டியபடியே ஒரு
ஆவேச நடனம் ஆடினார் புரட்சிப்புயல் புண்ணாக்கோ. இவை அனைத்தையும் நேரடி ஒளிபரப்பில்
பார்த்துக்கொண்டிருந்த பேரிக்கா ஜனாதிபதி மனோன்மணிசிங்கை தொலைபேசியில் அழைத்து
அவருக்கும் அவரது சகாக்களுக்கும் தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.
அன்றைய இரவை
மும்பானிஜியின் புதிதாகக் கட்டப்பட்ட 44 மாடிகொண்ட வீட்டில் கழித்தனர் ராபர்ட்கிளைவும்
டயரும். தேசியக்கட்சி, ராஷ்ட்ரீயக்கட்சி, அந்தர் ராஷ்ட்ரீய, உப்பர் ராஷ்ட்ரீய,
பாஹர் ராஷ்ட்ரீய, சிமுக, அஇசிமுக, ஆகிய கட்சிகளோடு தேசிய, அகில, திராவிட,
புரட்சிகர, மக்கள், ஜனநாயக, முற்போக்கு, தொழிலாளி, விவசாயி...உள்ளிட்ட சொற்களை
முன்னாலும் பின்னாலும் கொண்ட அனைத்துக்கட்சிகளின் தலைவர்களும் புரட்சிப்புயல்
புண்ணாக்கோ, தமிழ்க்கிணறு மணியன், கம்பவுண்டர் அய்யா போன்றோரும் கீழ்த்தளத்தின்
வரவேற்பறையில் ஜமக்காளம் விரித்து ஒற்றுமையாக தூங்கினார்கள்.
மறுநாள் முறைப்படி சதிடில்லியில்
எல்பிஜி குடியரசின் அனைத்துக்கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்த ராபர்ட்க்ளைவ்,
ஜெனரல் டயர் இருவரும் பேரிக்கா ஜனாதிபதியின் நிபந்தனையான ‘கடந்த அறுபது
வருடங்களில் எல்பிஜி குடியரசை அதிக அளவில் சாம்பலாக்கிய கட்சியின் தலைவரே அடுத்த
மத்திய பஞ்சாயத்துதலைவராக வர முடியும்’ என்பதை
அறிவித்து தேர்தல் இந்த திசையில்தான் செல்லும் என்று முடிவு செய்தார்கள். தவிர
ஒவ்வொரு கட்சிக்கும் ஆன தேர்தல் அறிக்கை பேரிக்காவில் ப்ரிண்ட் ஆகி வருவதாகவும்
வந்தவுடன் கையில் கொடுக்கப்படும் என்றும் அறிவித்தார்கள்.
இதனை நேரடி ஒளிபரப்பு செய்த ஒண்டூத்ரீ சானலின் பிரபல
செய்தியாளரும் தேர்தல் ஆரூட நிபுணருமான பிரமாதராய் வரும் தேர்தலில் தேசியக்கட்சிக்கும்
ராஷ்ட்ரீயக்கட்சிக்கும் சரியான போட்டியிருக்கும் என்றும் இரண்டு
கட்சிகளுக்கும் இடையே வெற்றிதோல்வி என்பது 0.0001 சதவீதத்தில் ஊசலாடுவதாகவும் எப்போதும் என்ன
வேண்டுமானாலும் நடக்கலாம் என்பது உள்ளங்கை விளக்கெண்ணெய் போல தெளிவாகி விட்டது
என்பதால் வரும் முப்பது நாட்களும் ஜேம்ஸ்பாண்ட் பட ரேஞ்சுக்கு வினாடிக்குவினாடி
சஸ்பென்ஸ்தான் என்றும் உசுப்பேத்தினார்.
ஆனால் அடுத்து அவர்
கூறியது இந்த தேர்தலின் திசையையே மாற்றிவிடக் கூடியதாய் இருந்தது; ரயில்வே ஸ்டேசன், பஸ்ஸ்டாண்ட், பொதுக்கக்கூஸ், ரேசன்கடை, டாஸ்மாக் கடை, பீடா கடை, கிரிக்கெட் மைதானம், பள்ளிக்கூட அட்மிசன் போன்ற ஜனநடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் அவர் நடத்திய கருத்துக்கணிப்பில் மத்திய பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு ரோஸ் கலரில் கன்னமும் சிரிக்கும்போது கன்னத்தில் குழியும் விழும் இளைஞர் யார் நின்றாலும் 99.99 சதவீத வாக்கு கிடைக்கும்
என்றும் கருத்துக்கணிப்பில் திட்டவட்டமாகத்
தெரிந்தது. மக்களின் எதிர்பாராத இந்த தீர்ப்பு
கட்சிகள் இடையே பெருத்த அதிர்ச்சியையும்
சங்கடத்தையும் ஏற்படுத்தி பீதி கிளப்பியது. கிளைவும் டயரும் பேரிக்கா ஜனாதிபதியும்
கூட எதிர்பாராத இந்தத் திருப்பத்தால் அதிர்ச்சியில் உறைந்தார்கள். உலகமே ஒன்று
நினைக்க எல்பிஜி மக்கள் வேறொன்றை நினைப்பார்கள் என்பது இந்த முறையும் உண்மையாகி
விட்டதே! இவங்களப் புரிஞ்சுக்கவே முடியலியே! திடீரென ரோஸ் கலர் தலைவருக்கு எங்கே போவது?
தொடரும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக