செவ்வாய், மார்ச் 25, 2014

சாம்பல்தேசம்-2 (நெடுங்கதை)



பேரிக்கா நாட்டின் தலைநகரில் கொள்ளைமாளிகை ரகசிய ஆலோசனை அரங்கம். நேரம் நள்ளிரவு 12 மணி.  இண்டர்நேஷனல் தண்டல்காரரும் கொலம்பசின் பத்தாவது தலைமுறைப் பேரனும் பேரிக்காவின் இன்றைய ஜனாதிபதியும் ஆன மாண்புமிகு ஜார்ஜ்ரீகன்புஷ்ஒபாமா நடுநாயகமாக உட்கார்ந்திருக்கின்றார். பேரிக்கா நாட்டின் சிறப்பம்சமே குடியரசுக்கட்சி ஜனநாயகக்கட்சி இப்படி எந்தக்கட்சியின் ஜனாதிபதி ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் கொலம்பசின் கொள்ளுப்பேரன்களாகவே இருப்பதை கடந்த ஐநூறு வருச கால வரலாறு தொடர்ந்து நிரூபித்து வந்துள்ளதாக மரபணுவியல், வரலாற்று, மானுடவியல், மருத்துவ, வேதியியல், கணிதவியல்.... ஆய்வாளர்கள் இன்றைய தினம் வரையில் சொல்லிச்சொல்லி மாய்ந்து போகின்றார்கள்; இதன் ரகசியம் டாவின்சி கோடை விடவும் சுவாரசியமானது என்றும் அடித்துச் சொல்கின்றார்கள்.


இடதுபுறம் ராபர்ட்க்ளைவும் வலதுபுறம் ஜெனரல் டயரும், தொடர்ந்து  வெளியுறவுத்துறை செயலாளரும்  உள்துறைசெயலாளரும் (எல்பிஜி தேச அகராதிப்படி மந்திரிகள்) உட்கார்ந்திருக்கின்றார்கள்.  அருகில் உட்கார்ந்திருக்கும் கிளிண்டன்ஜி, வால்மார்ட்ஜி, பெட்ரோலிய கம்பெனிகளான எக்சான் மோபைல், ப்ரிட்டிஷ் பெட்ரோலியம், ஷெல், கொனொகோ ஃபிலிப்ஸ், செவ்ரோன், ஆக்சிடெண்டல், எமெர்சன் ஆகியவற்றின் முதலாளிஜிக்களும்கொகொகோலா முதலாளிஜி, பெப்சி முதலாளிஜி, யூனியன் கார்பைடு முதலாளியான வாரன் ஆண்டர்சன்ஜி, மான்சாண்டோ முதலாளிஜி, கார்கில் முதலாளிஜி, என்ரான் முதலாளிஜி, எல்பிஜி தேசத்து ஒண்ணாம்நம்பர் முதலாளிகளான அனில் தும்பானிஜி, முகேஷ் தும்பானிஜி, மோட்டாஜி, விட்டல்ஜி, வேதாந்தாஜி, டூஜி, திரீஜி, சி ஐ ஏ, எஃப் பி ஐ இயக்குனர்கள்ஜி அனைவரும் ஜனாதிபதியின் சொல்லுக்காக காத்திருக்கின்றார்கள்.



இது பேரிக்கா நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கின்ற விசயம் என்பதால் பொறுப்பை நம்பகமான ஒருவரிடம் மட்டுமே ஒப்படைக்க முடியும். நீண்ட விவாதத்துக்குப் பிறகு கடந்த பல நூறு ஆண்டுகால வரலாற்றையும் தெளிவாக ஆய்ந்த பின்னர் எப்போதும்போல் இப்போதும் ராபர்ட் கிளைவ்விடமே பொறுப்பை ஒப்படைப்பது என தீர்மானிக்கப்பட்டது. துணைக்கு வேண்டுமெனில் கிளைவ்வோடு ஜெனரல் டயரையும் அனுப்பலாம் எனவும் தீர்மானிக்கப்பட்டது. காட்! சேவ் பேரிக்கா!என்ற தேசியகீதம் பாடப்பட்டதுடன் கூட்டம் முடிந்தது.



கூட்டம் வெற்றிகரமாக முடிந்ததைக் கொண்டாடும் விதத்தில் மதுப்பீப்பாய்கள் திறக்கப்பட்டன; இராக், ஆஃப்கானிஸ்தான், லெபனான், பாலஸ்தீனம் ஆகிய நாடுகளில் இருந்து அன்போடு அழைத்துவரப்பட்ட பெண்களின் நடனம் விடியவிடிய நடந்தது.



அதிகாலையில் பேரிக்கா தலைநகர் கடற்கரையில் இருந்து கப்பல்கள் ராபர்ட் கிளைவ் தலைமையில் எல்பிஜி தேசம் நோக்கி புறப்பட்டன; கிளைவுக்கு மிகவும் பிடித்தமான ‘பர்ர்ர்ர்தேசி பர்ர்ர்ர்ர்தேசி ஜானா நஹிஎன்ற பாட்டு பயணமெங்கும் கர்ணகடூரமாக ஒலித்ததில் திமிங்கலங்களும் முதலைகளும் இன்னபிற கடல்வாழ் பயங்கர உயிரினங்களும் கப்பலின் பாதையிலிருந்து விலகி பல நூறு நாட்டிகல் மைல்கள் தப்பித்து ஓடியதாக செயற்கைக்கோள் புகைப்படங்கள் துல்லியமாக காட்டின.



எல்பிஜி குடியரசின் அரபிக்கடலோரம் அமைந்த வரலாற்றுப்புகழ் பெற்ற நகரமும் குடியரசின் வணிகத்தலைநகரம், எல்பிஜியின்வால்ஸ்ட்ரீட், தலைஸ்ட்ரீட், கார்பொரேட் கொள்ளையர்களின் தலைநகர் போன்ற பெரும்புகழுக்கு உரியதும் ஆன தும்பை நகரின் துறைமுகத்தில் இந்த கப்பல்கள் தேர்தலுக்கு ஒரு மாதம் முன்பு கரை சேருமாறு பயணத்திட்டம் இருந்தது.




அந்த நாளும் வந்தது. இரண்டு நாளுக்கு முன்பாகவே கரையில் டெண்ட் அடித்துக்காத்திருந்த தேசியக்கட்சி, ராஷ்ட்ரீயக்கட்சி, அந்தர் ராஷ்ட்ரீய, உப்பர் ராஷ்ட்ரீய, பாஹர் ராஷ்ட்ரீய, சிமுக, அஇசிமுக, கம்பவுண்டர் கட்சி ஆகிய கட்சிகளோடு தேசிய, அகில, திராவிட, புரட்சிகர, மக்கள், ஜனநாயக, முற்போக்கு, தொழிலாளி, விவசாயி...உள்ளிட்ட சொற்களை முன்னாலும் பின்னாலும் கொண்ட அனைத்துக்கட்சிகளின் தலைவர்களும் புரட்சிப்புயல் புண்ணாக்கோ, தமிழ்க்கிணறு மணியன் போன்றோரும் தொலைதூரத்தில் கப்பலின் உச்சியில் பறக்கும் பேரிக்கா கொடி கண்ணில் பட்டதும் ‘அண்ணன் ராபர்ட் கிளைவ் வாழ்க! தளபதி ஜெனரல் டயர் வாழ்க! இந்தப்படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?போன்ற நரம்புகளை சுண்டிவிடுகின்ற ரத்தத்தை கொதிக்கவைக்கின்ற கோசங்களைப் போட்டனர்; 1947இல் ஜெனரல் டயர் கொடுத்துவிட்டுப்போன துப்பாக்கியை ஒருவர் பின் ஒருவராக வாங்கி வானத்தை நோக்கி சுட்டார்கள்; தான் கொடுத்துவைத்துவிட்டுப்போன துப்பாக்கியை இக்கட்சிகளின் தலைவர்கள் கட்சிவேறுபாடுகளை மறந்து கண்ணின்மணிபோல் பாதுகாத்து பத்திரமாக வைத்திருப்பதை அறிந்து டயர் மகிழ்ச்சியடைந்து தன் ரிவால்வரை எடுத்து பதில் மரியாதைக்காக வானத்தை நோக்கி சுட்டார். பட்டாசுகளும் வாணவேடிக்கைகளும் அரபிக்கடல் வானத்தை கிடுகிடுக்க வைத்தன.
தொடரும்...

கருத்துகள் இல்லை: